- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
32
“என்ன மிஸ்டர்.ஆனந்தன் அப்படியே மனசுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமே. அதான் உங்களுக்கொரு துணை கொடுத்தாச்சில்ல மாமா. அவங்களைப் போய் சுத்துங்க” என்றான் தன்னைத் தொந்தரவு செய்யும் மாமனிடம்.
“ஹாஹா... நான் தாராளமா சுத்திக்குறேன்” என்றபடி அவனருகே வந்து, “அதென்னவோ மருமகனே நீ புலம்பினா எனக்கு ஜாலியாயிருக்கு. என் பொண்ணு உன்னை சுத்தல்ல விடுறா பாரு. அது இன்னுமே...”
“மாம்...மா தாய்மாமன்னா தாய்க்குச் சமம். புள்ள தவிக்குறானே எதாவது பண்ணி சந்தோசமா வாழவைப்போம்னு தோணுதா” என்றதில் ஆனந்தன் கண்கலங்க, அதைக் கண்டவனுக்கு என்னவோ போலாக, “அச்சோ! சாரி மாமா. நான் எதோ விளையாட்டுக்கு...” என நிறுத்தினான்.
“நீ விளையாட்டுக்குப் பேசு. இல்ல வினயமா பேசு. எனக்கொண்ணும் பிரச்சனையில்லை. கண்ணுல தூசு விழுந்தா கண்கலங்கதான் செய்யும். நீ அடிச்ச பஞ்ச் டயலாக்குக்கு ஃபீல் பண்ணுறேன்னு நினைச்சிட்டியா? சோ சேட்” என்றார் புன்னகையுடன்.
“மாமா” என பல்லைக்கடிக்க, விளையாட்டைக் கைவிட்டவர், “சீக்கிரம் நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ்வீங்க மருமகனே” என்றார்.
“என்ன விஷயம் மாமா? இவ்வளவு தூரம்?”
“ஹால்ல இருந்து உன் அறைக்கு வர, ஆயிரம் கிலோமீட்டர் ஆகிட்டு மருமகனே” என்று அவனை கலாய்த்து சிரித்தவர், “ரொம்ப ரொம்ப நன்றி அறிவா. அதுக்கு மேல வார்த்தையில்லை என்னிடம்” என்றார்.
அவர் எதையோ நினைத்து உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிய, “நன்றி சொல்றதே தப்பு. இதுல ரொம்ப ரொம்ப நன்றி ஏன்?” என்றான்.
“ஏன்னா, உங்க குழந்தையை, உன் அண்ணனுக்காகக் கொடுத்ததுக்கு” என்றார்.
“மாமா! யா...யார் சொன்னது?” என்றான் திடுக்கிட்டு.
“பெரிய மருமகன்தான்” என்று சற்று முன் வரவேற்பறையில் தனியாக அமர்ந்திருந்த பொழுது, அவரருகில் வந்தமர்ந்த மதியழகன் குற்றக் குறுகுறுப்பில் யாருக்கும் சொல்லக்கூடாதென்று சத்தியம் வாங்கி, உண்மையைச் சொல்லிவிட்டான். அவரும் யோசிக்காமல் சின்ன மருமகனைத் தேடி வந்துவிட்டார். நல்லவேளை அவர் வருவதற்கு சிலநொடி முன்தான் அனுரதி வெளியே சென்றிருக்க, மருமகனின் புலம்பல் கேட்டு மொத்தமாய் கிண்டல் பாவனைக்கு மாறியிருந்தார்.
“ஓ... என்ன குற்றவுணர்ச்சியாம் உங்க மருமகனுக்கு? இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயா சொல்லிட்டிருந்தா, அது எப்படி இரகசியமாயிருக்கும்” என்றான் கோவத்தில்.
“என்னோட மொத்தமா வரச்சொல்லி, குழந்தையை வச்சிப் பேசினேன்ல மருமகனே. அதுக்காகதான்னு நினைக்குறேன். ஆனா, இப்பதான் அந்த விஷயத்தில் ஸ்ட்ராங்கா இருக்கேன்” என்றார். அறிவழகன் அவரைப் புரியாது பார்க்க, “பெரிய மருமகனுக்கும் தனக்கே தனக்குன்னு குழந்தை இல்லாதது, பெரிய குறையா இருந்திருக்கும். இல்லைனா சாவு வரை போயிருக்க வாய்ப்பேயில்லை. அதுவும் ஒரு குறைன்னு ஏத்துக்க மனமில்லாதவங்கதான், அந்த மாதிரி தப்பான முடிவெடுப்பாங்க. இப்ப குழந்தை வந்ததும் கொஞ்சம்.. இல்லையில்ல நிறைய தெளிவு உன் அண்ணனுக்கு.”
“அதுவும் பெண் குழந்தை வேறயா. நம்ம குழந்தைக்காக சம்பாதிக்கணும்ன்ற வேகம் சுறுசுறுப்பைக் கொடுக்க, உழைப்பும் இருமடங்காகுது. குழந்தை பெயர்ல இப்பவே ஃபிக்சட் டெபாசிட் போட ஆரம்பிச்சாச்சி. கம்பெனி பெயரை மதிமலர்னு மாற்ற வேலை நடக்குது. ரெண்டு பேரோட முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. அடுத்தடுத்து என்னன்றதை குழந்தையை வச்சே முடிவெடுக்குறாங்க. அவளையே அவங்க உலகமாக்கிக்கிட்டாங்க. அவங்க உலகத்தை அழகாக்கின உனக்கும், அனுவுக்கும் என்ன செய்தாலும் தகும்டா மருமகனே. அந்த உலகம் அவங்களுக்கானதா இருக்கட்டும்னுதான், தனியா போற முடிவுல இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கிறதா சொன்னேன். தப்புன்னா...”
“மாமா!” என்று அவர் சொல்ல வருவதைப் புரிந்து தடுத்தவன், “இனி இந்த பேச்சு வரக்கூடாது. அது அவங்க குழந்தை மட்டும்தான். பெர்த் சர்டிபிகேட் கூட அவங்க பெயர்ல வாங்கியாச்சி. இதோ வர்றேன்” என்று அந்த பேப்பரை எடுத்து வந்து கொடுக்க, கண்கலங்க அவனை அணைத்து, “நன்றியைத் தவிர சொல்ல வார்த்தையில்லடா. அதான் இந்த அணைப்பு” என்று கலங்கிய கண்களைத் துடைத்தபடி அறையிலிருந்து வெளியேறினார்.
அவர் சென்றதும் அனுரதி உள்ளே வர, “ரதிமா” என்றான் தவிப்பாய்.
அதை உணர்ந்தாளோ! மென்மையாகக் கட்டியணைத்து, “அவங்களுக்கொரு மதிமலர்னா, நமக்கொரு ரதிமலர் வராமலா போகப்போறா. அதெல்லாம் வருவா” என்று அவளறியாது சொல்ல, அவளின் மென்மை அணைப்பை அவன் சற்றே வன்மையாக்கிக் கொண்டான்.
குழந்தை பிறந்து பத்து மாதங்கள் முடிந்திருக்க, மசித்த உணவு, இட்லி போன்ற திட உணவுகள் உண்ண ஆரம்பித்திருந்தாள் மதிமலர். பத்தாவது மாதம் ஆரம்பிக்கையிலேயே சிறிது சிறிதாக பால்குடியை நிறுத்தியிருக்க, அனுரதியுமே பால்கட்டாது நிற்கவென்று இயற்கை வைத்தியம் செய்திருந்தாள்.
சாரதா சொன்னதுதான். குழந்தை பால் குடிப்பதை நிறுத்தியதும், மல்லிகைப் பூ மொட்டுகளை வாங்கி, இருபக்க மார்பிலும் வைத்து இறுக்கமாக ஆடை அணிய வேண்டும். தொடர்ந்து நான்கு நாள்கள் இதேபோல் செய்தால் பால்கட்டி வலி இருந்தாலும், பால் கட்டுவது குறைந்து முழுதாக நின்றுவிடும். திரும்ப குழந்தைக்கு பால் கொடுக்காத பட்சத்தில் பால் வர வாய்ப்பில்லை என்றிருந்தார்.
இதோ ஆனந்தன் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துவிட்டார்கள்.
“அங்க நாங்க மூணு பேர்தான்றப்ப ரொம்ப போரடிக்கும்ணே. இத்தனை மாசம் இருந்த மாதிரி இனிமேலும் இருக்கலாமே” என்றார் அபிராமி.
மதியழகன் அலுவல் வேலையைப் பார்க்க ஆரம்பித்ததும், தேவையென்றால் மட்டும் மதியழகன் அலுவலகத்திற்குச் சென்று வருவார் அபிராமி. மற்ற நேரங்கள் முழுக்க மதிமலர் மட்டுமே!
“கொஞ்ச நாள் நீயும் இங்க இரேன் அபிமா” என்றார் ஆனந்தன்.
“ஆமா அண்ணி. நீங்க கூடயிருந்தா எனக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும்” என்ற சாரதாவின் கலக்கம் உணர்ந்தாரோ!
இதுவரை கூட்டுக்குடும்பம் என்பதால், அபிராமி அறையில் தங்கி ஆனந்தனை முற்றலும் தவிர்த்திருந்தார் சாரதா. இனிமேல் அவரைத் தவிர்க்க முடியாதே. எதோவொரு வகையில் இருவருக்கிடையில் பேச்சுவார்த்தை வரத்தான் செய்யும் எனும்போது, அதை எப்படி சந்திப்பது என்ற கலக்கமே சாரதாவிடம்.
“அம்மா நானே சொல்லணும்னு இருந்தேன். எல்லாரும் ஒரே நேரத்துல கிளம்பினா குழந்தையும் ஏங்கிருவா. ஒரு வாரம் இங்கேயே இருங்க. அத்தைக்கும் புது இடம். நீங்க இருந்தா கொஞ்சம் ஆதரவா இருக்கும்” என்ற சின்ன மகனைத் தொடர்ந்து, பெரியவனும் தாயின் கைபிடித்து இருக்கச்சொல்ல, பிள்ளைகளின் வேண்டுகோளில் சம்மதமாகத் தலையசைத்தார் அபிராமி.
“அறிவா! நீங்க எப்படித் தனியா இருப்பீங்க?”
“சமையலுக்கு சாந்தியக்கா இருக்காங்களேம்மா. வீட்டுல போரடிச்சா ஆஃபீஸ் கூட்டிட்டு போகப்போறேன். இல்லையா, ஜெகதீஷ் சாரை பார்க்கச் சொல்லிட்டு, நான் ஒர்க் ஃப்ரம் ஹோம்ல இருந்துக்குறேன். என்ன மிஸஸ்.அறிவழகன்? அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? பேசுங்க. ஏன் என்னோட தனியா இருக்க பயமாயிருக்கா என்ன?” என்றான் கிண்டலாய்.
“அச்சோ! அதெல்லாம் இல்ல. அத்தை நான் நம்ம வீட்டுலயே இருக்கேன். ஒரு வாரம்தான் உங்களுக்கு டைம். அடுத்த நாள் காலையில் அங்கே இருக்கணும். இல்லைனா இவங்க உங்களைக் கடத்திட்டு வந்ததா சொல்லி, போலீஸ்ல கம்ப்ளைய்ண்ட் பண்ணிருவேன்” என்று வேகமாக ஆரம்பித்தவள் மதியழகன், ஆனந்தனைக் கைகாட்டினாள்.
“உனக்கு அவ்வளவு சிரமம் தரமாட்டேன் மருமகளே. என்ன, நான் வரும்போது உங்களுக்குத் தொந்தரவா நினைக்காமல் இருந்தா சரி” என்றார் மறைமுக வாழ்த்தோடு. மகன் தனிமையை வேண்டும்போதே அவருக்குப் புரிந்துவிட்டது. அவருக்கு மட்டுமா மற்றவர்களுக்குமே!
அது புரியாத அனுரதி, “யாரு? நானா?” என்று மாமியாரிடம் எகிற,
“மிஸஸ்.அறிவழகன் போதும். உங்க நடிப்பை நிறைய பார்த்தாச்சி. இப்ப எனக்கு வேலை இருக்கு. நைட் வந்து உன்னைக் கூப்பிட்டுக்குறேன்” என்று அறிவழகன் கிளம்ப, அவன் பின்னாடியே சென்ற ஆனந்தன், “என்ன மருமகனே எதோ ப்ளான்ல என் தங்கச்சியை விட்டுட்டு போற மாதிரியிருக்கு?” என்றார்.
“ஆமா. ப்ளான்தான். நீங்க ஹெல்ப் பண்ணலைல. அப்புறமென்ன?” என்றான் வீம்புக்காய்.
“அப்ப என் ஹெல்ப் வேண்டாம்.”
“வேண்டவே வேண்டாம் சாமி” என்று கையெடுத்துக் கும்பிட,
“அப்ப சரி. அபியை நைட் உங்களோடவே அனுப்புறேன். என் தங்கச்சியைப் பத்திரமா பார்த்துக்கோ” என்றார் சிரிப்பை அடக்கியபடி.
“மாமா! நீங்க என் தாய்மாமா! தாய்க்குச் சமமமானவர்! உங்க உதவி வாழ்க்கை முழுக்க வேணும். தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க” என்று காலில் விழுந்துவிட்டான்.
“சரி சரி மன்னித்தேன். பிரம்மச்சரியத்தில் இருந்து சம்சாரியாக என் ஆசீர்வாதங்கள்” என்று அறிவழகன் தலையில் கைவைக்க, அவன் எழுந்ததும் தன்னோடு சேர்த்தணைத்து, “சந்தோசமா இருடா மருமகனே” என்றார் மனதார.