- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
3
ஒரு பக்கம் காவல்துறையில் அனுரதி வழக்கு போய்க்கொண்டிருந்தது. மறுபக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனை வாசத்தில், மூன்று நாள்களாகியும் அனுரதி கண் விழிக்காதிருக்க, பெற்ற மகளின் நிலை கண்டு தவித்துதான் போனார் சாரதா. தம்பியவனோ வயதையும் மீறி அங்கும் இங்கும் அலைந்து அச்சூழ்நிலையைச் சமாளித்துக் கொண்டிருந்தான்.
சாரதாவின் கணவர் மத்திய அரசு ஊழியராக இருந்ததால், வருமானத்திற்கும், சேமிப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது அக்குடும்பத்திற்கு. ஐந்து வருடங்கள் முன் மாரடைப்பு வரும்வரை திடகாத்திரமாக அலைந்த மனிதர்தான். வேலை நேரத்தில் மாரடைப்பு வந்ததால், மருத்துவமனை செலவை அலுவலகம் பார்த்தாலும், தங்களின் கையிருப்பும் கரைந்தும் அவர் பிழைக்கவில்லை.
சில சொத்துகளும், சேமிப்புகளும் இருப்பதால், மகள், மகனின் படிப்பிற்கோ, இதோ பெண்ணின் திருமணம் வரை எந்தவித பணத்தேவையும் இருந்ததில்லை அவர்களுக்கு. அமைதியான அக்குடும்பத்தில் ஆந்தையாய் புகுந்துவிட்டான் ரவிசங்கர்.
அனுரதியை மீட்டெடுத்த அன்றே ரவிசங்கரையும் கைது செய்துவிட்டனர். அவனை என்ன அடித்தும், “அவள் நல்லாதான் இருக்கா போலீஸ். நான் எதுவும் செய்யலை. என்னை எதுக்கு அடிக்குறீங்க? அவளைக் கூப்பிட்டுக் கேளுங்க. நான் அவளை எவ்வளவு நல்லா பார்த்துக்குறேன்னு தெரியும்” என்றவன் குரலிலும், முகபாவத்திலும் சிறிதும் பயமோ, குற்றவுணர்ச்சியோ கிடையாது.
“ஓ... அதனாலதான் மூணு நாளா அந்தப்பொண்ணு கண்ணு முழிக்காம இருக்காங்களா?” என நக்கலாகக் கேட்டவர், “அடிச்சே சாகடிச்சிருவேன். ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுடா?” என்று கோவத்தில் காவல்துறை ஆய்வாளர் அவனை உதைத்தார்.
“என்ன நடந்ததுன்னு கேட்டா என்ன சொல்லுறது போலீஸ்? கல்யாணம் முடிந்ததும் புருஷன் பொண்டாட்டி என்ன செய்வாங்களோ, அதைத்தான் செய்தோம். அதுக்குப் போயி... ஏன் போலீஸ்?” என்றான் அடி வாங்கிய வலி தாளாது.
“ஓ... செய்தோம். ம்ம்... ஒரு பெண்ணை ரேப் அன்ட் அட்டெம்ட் மர்டர் பண்ணப் பார்த்துட்டு, எதுவும் தெரியாத பச்சைப்புள்ள மாதிரி, குமுதா ஹேப்பி அண்ணாச்சின்னு கதை விட்டு, எங்களையே கலாய்ச்சிட்டிருக்கியா? இதென்ன சினிமான்னு நினைச்சியாடா நாயே” என்று அடித்துத் துவைத்தார்.
“போலீஸ் பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க. நான் நல்லவன்” என்றான் மீண்டும்.
“ஓ... சரிங்க நல்லவன் சார். அப்ப எதுக்கு அனுரதியோட அம்மா போன் பண்ணினப்ப, ஹனிமூன் போயிருக்கோம்னு பொய் சொல்லி இங்கேயே இருந்தீங்க? என்னடா அப்பாவி மாதிரிப் பார்த்து குழைந்து பேசினா நாங்க ஏமாந்துருவோம்னு நினைச்சியா? உன்னை மாதிரி எத்தனை சைக்கோக்களைப் பார்த்திருப்போம். சொல்லுடான்றேன்” என்று அடிக்கக் கை ஓங்க,
“போலீஸ் போலீஸ் ஹனிமூன்னு சொன்னா, யாரும் எங்களை டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்கன்னுதான் சொன்னேன். எங்க சந்தோஷத்துக்கு நடுவில் யாரும் வரக்கூடாதுன்னு நினைச்சேன். வேற எதுவுமில்லை.” அடித்த அடி தாங்காது வேகமாகச் சொன்னான்.
“ஓஹ்... அப்ப உன் பேரண்ட்ஸ் எங்கே?”
“அவங்களையும் டிஸ்டர்பா இருக்கும்னு ஊருக்கு அனுப்பிட்டேன்” என்றான்.
“இவ்வளவு கேட்கிறேன், திரும்பத் திரும்ப பொய்யா சொல்ற. ஏன்டா! ஒண்ணுமே தெரியாமலா உன்னை விசாரிப்போம் நினைச்ச? போலீசை அவ்வளவு மட்டமா நினைச்சியா? அவங்களையும் கஸ்டடி எடுத்து விசாரிச்சாச்சிடா” என்று அடி வெளுத்தெடுக்க, மூர்ச்சையாகிப் போனவனின் மேல் தண்ணீரை ஊற்றி எழுப்பிக் கேட்டும் பதிலில்லாது போக, “கான்ஸ்டபிள்! டாக்டர்.சாமிப்பிள்ளையை வரச்சொல்லுங்க. இவனுக்கெல்லாம் ஃப்ரீ கட்டிங் ஆபரேஷன் பண்ணிரணும். இல்லன்னா, அனுரதி மாதிரி எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையைக் கெடுப்பானோ. ராஸ்கல்” என்றவருக்குத் தெரியும் அரசு அதிகாரியாய் அப்படியெல்லாம் தன்னிஷ்டத்திற்குப் பண்ண முடியாதென்று.
“டாக்டர் என் பொண்ணு எப்ப கண் திறப்பா?” தவிப்புடன் மருத்துவர்.வர்ஷாவிடம் கேட்டார் சாரதா.
“எப்ப வேணும்னா முழிக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க. இன்னும் ஒண்ணு இல்ல இரண்டு மாசத்துல முழுசா குணமாகிருவாங்க.”
“அவ்வளவு நாள் ஆகுமா டாக்டர்?”
பெண்ணின் தாயாய் கலங்கி அமர்ந்திருந்தவரைக் கண்டு பாவமாக இருந்தாலும் சிறு கோவம் எழ, “தெரியாத இடத்தில் பொண்ணைக் கொடுக்கும்போது நல்லா விசாரிச்சிருக்கணும் சாரதா. உங்க அலட்சியத்தால அந்தப் பொண்ணு இந்த நிலையில் இருக்கா...” எனும்போது அழத்தயாராக இருந்தவரைக் கண்டு கோவத்தைக் கட்டுப்படுத்தி, “சரி விடுங்க. தப்பா எடுத்துக்கலைன்னா சொல்றேன். நாலைந்து பேர் சேர்ந்து ரேப் பண்ணியிருந்தால் கூட உடம்பில் இந்தளவு காயம் இருந்திருக்காது. ஆனா, இங்க...” எனும்போது சாரதா அழ ஆரம்பித்துவிட்டார்.
“சாரதா அழாதீங்க. இந்த மாதிரி ஆண்களும் இருக்கதான் செய்யுறாங்க. வெளியிலுள்ள காயங்கள்தான் அதிகம். உள் உறுப்புகளுக்கு அந்தளவு பாதிப்பில்லை. அது இல்லைன்னா அவன் தேவை பாதிக்கப்படும்னு நினைச்சிருக்கலாம். பெண்ணுக்கு வலி. அவனுக்கு *** இது அவனோட கான்செப்ட். டி.என்.சி பண்ணிட்டதால அவன் மூலமா குழந்தை வந்திருமோன்னு நீங்க பயப்படத் தேவையில்லை. கொஞ்ச காலம் கடந்து அவங்க மனதளவில் திடமானதும், நல்லவனா பார்த்து விசாரித்துக் கல்யாணம் பண்ணிக்கொடுங்க. கல்யாணமே வேண்டாம்னு சொல்லி பிடிவாதமா இருந்தா, அவங்க விருப்பத்துக்கு விட்டுருங்க. இவனால பட்டதே அவங்க ஆயுளுக்கும் மறக்காது. நடந்ததை மறக்க வச்சிக் கொண்டாடுற ஆண் கிடைச்சா, கண்டிப்பா உங்க பொண்ணு மாறுவாங்க” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தார்.
“கண் முழிக்காம இருக்குறதைப் பார்க்கப் பார்க்கப் பதறுதே டாக்டர். மனசெல்லாம் அடிச்சிக்குது” என்றார் சாரதா.
“கல்யாணக் கனவோட அங்க போயிருப்பாங்க. ஆனா, நினைத்ததுக்கு எதிரா நடந்த வன்புணர்வை, அவங்க மூளை ஏத்துக்க முடியாம தவிக்குது. சீக்கிரமே எழுந்து வருவாங்க. நல்லதையே நினைப்போம் சாரதா” என்று தைரியமளித்தார் மருத்துவர்.
“உங்ககிட்ட பேசியதும் கொஞ்சம் தைரியம் வந்திருக்கு டாக்டர். ரொம்ப நன்றி” என்றார் மனதார.
அடுத்த இரண்டு நாள்கள் சென்று, “ஹாய் அனுரதி! சின்னதா ஒரு விசாரணை. உங்களால பதில் பேச முடியுமா?” என கேட்டார் காவல்துறை ஆய்வாளர் இஸ்மாயில்.
“எ...எஸ் சார்” என்றவள் எழுந்து அமர முயற்சித்தாள்.
“ஹேய்! வெய்ட்மா” என்று கான்ஸ்டபிளிடம் கண்காட்ட, அவளின் படுக்கையை சாய்ந்தவாக்கில் ஏற்றி பேச ஏதுவாக வழி செய்து கொடுத்தார் அவர்.
“ரொம்ப அந்தரங்கமா கேட்க விரும்பலைமா. உங்க ஹெல்த் கண்டிசனே அதைச் சொல்லுது. டாக்டரும் உங்களால சத்தமா பேச முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. சோ, ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க. இப்ப முடியாதுன்னா இன்னொரு நாள் கூட வர்றேன்” என்றார்.
“இல்ல சார். நீங்க கேளுங்க. எனக்குத் தெரிந்ததைச் சொல்றேன்” என்றாள். அவளுக்குத் தெரியும் எப்பொழுது என்றாலும் எதிர்கொள்ள வேண்டிய இடம்தானே என்று.
“எனக்குத் தெரிய வேண்டியது அவன் நடவடிக்கை, உங்களுக்கு அவனிடம் வித்தியாசமாகப்பட்டது, இப்படி எதாவது நீங்க உணர்ந்ததைச் சொல்லுங்க” என்று அவள் பேசுவது கேட்கும் தொலைவில் வந்தமர்ந்தார்.
“அவன் ஆசிரமத்துல வளர்ந்தவன் சார். உறவுகள்ல நம்பிக்கை கிடையாது. பணம் கொடுத்தால் பிணமும் வாயைத் திறக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். அவன் உடல் தேவைக்குத் தப்பான பொண்ணுங்ககிட்டப் போனவன், அவங்ககிட்டயும் வன்முறையா நடந்திருக்கான். அவங்க கேஸ் போட, பணம் கொடுத்து கேஸ் இல்லாமல் செய்து, இதுக்கு நெக்ஸ்ட் ஆப்சன் மனைவின்னு எவனோ சொன்னதும் பொண்ணு தேடியிருக்கான். பேரண்ட்ஸ் இல்லாதவனை எல்லாரும் மறுக்க, பேரண்ட்ஸ் ரிலேடிவ்ஸ்னு இருபது பேருக்கு மேல பணம் கொடுத்து செட் பண்ணியிருக்கான்.”
“ஓ... அந்தளவு தெளிவா திட்டம் போட்டுருக்கானா?”
“ஆமா சார். என்னோட ஜாதகம் எப்படியோ அவன் கையில் கிடைக்க, அப்பா இல்லை. அம்மாவும் தம்பியும் மட்டும்தான்றதால எந்தவித தொந்தரவும் இருக்காதுன்னு நினைச்சிருக்கான். தரகர் மூலமா அவனை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து வரதட்சணை வேண்டாம்னு சொல்லி, நல்லவனா நடிச்சிதான் இந்தக் கல்யாணத்தை நடத்திக்கிட்டான். கல்யாணத்துக்கு முன்ன என்னைப் பார்க்கவோ, என்கிட்ட பேசவோ முயற்சிக்கலை.”
“கல்யாணத்துக்கு முந்தின இரவு தூங்கிட்டிருந்த என்கிட்ட, சுற்றிலும் ஆள்கள் இருக்கிறப்பவே தப்பா நடந்துக்கப் பார்த்தான். என்ன நினைத்தானோ ஓடிட்டான். யார்கிட்டேயும் சொல்ல முடியாத அவஸ்தை சார் அது. சுற்றிலும் சொந்தக்காரங்க தூங்கிட்டிருக்காங்க. கல்யாணத்தன்னைக்குக் நீதானே அதுன்னு கண்டுபிடிச்சிக் கேட்டா ஃப்ரண்ட் சொன்னான்னு வந்தேன்னு கதை விடுறான். என்னோட மறுப்பு, எதிர்ப்பு, வெறுப்பு எதுவும் அவன்கிட்ட வேலைக்காகலை. எங்க வெளியில் போயிருவேனோன்னு கதவைப் பூட்டிட்டுதான் வெளியில் போவான். அவன் நார்மலான ஆள் கிடையாது சார்” என்றாள் கண்ணீர் வழிய.