• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
25


மாலை வேளையில் வீட்டின் முன் ஓரத்தில் நின்றிருந்த மாமர நிழலில் நாற்காலி போட்டு, தன்னைப் பார்க்க வந்திருந்த மாமியாரிடம் கதையளந்து கொண்டிருந்தாள் அனுரதி.

“அனுமா, உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். இதை ஆரம்பத்துலயே சொல்லியிருக்கணும். சந்தர்ப்பம் வாய்க்கலை” என்றதில் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை உணர்ந்தவளோ, எழுந்த புன்னகையை அடக்க, “நீ நினைக்குறது போல அறிவா மேனேஜர் கிடையாது” என்றார் தயங்கி.

“என்னது மேனேஜர் கிடையாதா? அப்ப என்னை ஏமாத்திட்டீங்களா?” என்று வராத கண்ணீரைத் துடைக்க, மருமகளை முறைத்து, “அப்ப உனக்குத் தெரிஞ்சிருச்சிதான?” என்றார்.

“ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க அத்தை. எனக்குப் போன வாரம்தான் தெரியும்.”

“அச்சோ! எம்புள்ளைய என்ன பண்ணின?” என்றார் பதற்றமாக.

அவரை முறைத்து, “ம்... என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்” என்றாள் உதட்டைச் சுளித்து.

“அச்சோ! அப்பாவிக் குழந்தைமா அவன். பெருசா எதுவும் பண்ணிராத” என்று வேண்டுகோள் வைக்க,

“அப்பாவி! பொறுமைசாலி! ம்... இன்னும் என்னென்ன இருக்கோ அத்தனையையும் அளந்து விடுங்க” என்று முறைத்தாள்.

“ஹிஹி அதுவும் தெரிஞ்சிருச்சா?” அபிராமி அசடுவழிய புன்னகைத்தார்.

“இன்னும் எதையாவது மறைச்சிருந்தா இப்பவே சொல்லிருங்க அத்தை.”

“நான் எதுவும் மறைக்கலை அனுமா. அறிவா அப்பா பற்றி மட்டும்தான் உன்கிட்ட சொல்லலை. அதையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்ட. சீக்ரெட்னு வேற எதுவும் என்கிட்ட இல்லை.”

“அந்தக் கதையை எனக்கு எப்பவாவது போரடிச்சா கேட்டுக்குறேன் அத்தை.”

“கேட்டுருவதான அனுமா?” என்றார் தவிப்புடன்.

“அட கேட்கலைன்னா விடமாட்டீங்க போல அத்தை” என்றாள் அவர் தவிப்பை உணராது விளையாட்டாக.

“மனசுல உள்ள பாரத்தை யாராவது ஒருத்தர்கிட்ட கொட்டிட்டா, சுமை குறைந்து மனசு லேசாகிரும்ன்ற எண்ணம்தான் அனுமா” என்றார் ஏதோவொரு நினைவில்.

அப்பொழுதுதான் அவரின் குரலையும், முக மாற்றத்தையும் உணர்ந்தவள், “அப்ப இதுவரை யாருக்கும் தெரியாதா அத்தை? ஏன் யார்கிட்டேயும் சொல்லலை?” என்றாள் புரியாது.

“முழுக்காரணமும் தெரியாது. மேலோட்டமா சந்தேகப்பட்டார்னு சொல்லி வச்சிருக்கேன்.”

“ஓ...” என்றவள் இருக்கும் இடம் உணர்ந்து, “இங்க பேசவேண்டாம். உள்ள போயிரலாம் அத்தை” என்று கிசுகிசுப்பாகப் பேச,

“ஏன்?” அவரும் அதேபோல் கேட்க,

“சீக்ரெட்... சீக்ரெட் ஒன்லி” என்று அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் அமரவைத்து, அடுப்படி சென்று தண்ணீர் எடுத்துக் கதவைச் சாத்தி வந்தவள் அவருக்குக் குடிக்கக் கொடுத்து, குடித்து முடித்ததும் ஓரம் வைத்து வந்து, அவர் எதிரில் அமர்ந்தவள், “சொல்லுங்க அத்தை? யார்கிட்டேயும் சொல்லாத இரகசியத்தை எனக்குச் சொல்லக் காரணம் என்ன?” என்றாள் அவர் கண்பார்த்து.

“தெரியலை. என் அப்பா, அம்மா, அண்ணன், ஏன் என் பிள்ளைங்க வரை யாருக்கும் தெரியாது. ஒருவேளை என்னோட கதை உன்னோட ஒத்துப்போச்சோ என்னவோ!” என்றார்.

“அத்தை!” அனுரதி அதிர,

“ப்ச்... ப்ச்... உன்னுடையது வேற அனுமா. ஆனால், என்னோடது, ஆயிரம் பேர்கிட்ட விசாரிச்சி, எல்லோரும் நல்லவன் வல்லவன்னு புகழ்ந்த ஒருத்தனைதான் எனக்குப் பார்த்தாங்க. பார்க்க, பழக, பேச எல்லா வகையிலும் பெர்பெக்ட்னு பெயரெடுத்த ஒருத்தன். அவனைப்பற்றி கேள்விப்பட்ட எல்லாமே ஒருவித ஈர்ப்பைக் கொடுத்திச்சி. ஒரு பழமொழி சொல்லுவாங்க தெரியுமா? பன்னிக்குட்டி கூட குட்டியில் அழகாதான் இருக்கும். அது மாதிரி இருபது வயசுல பார்க்கிற எல்லாமே பரவசமா, இரட்டை அழகோட தெரியுமாம். யாருக்கும் கிடைக்காத நல்லவன் நமக்குக் கிடைச்சிருக்கானேன்ற கர்வம் எனக்குள் இருந்திருக்குமோ என்னவோ! கடவுள் கிரேட்தான்.”

“கல்யாணம் முடிந்ததும் அவன்மேல ஒரு பிடிப்பு வந்தது நிஜம். மறுவீடு அது இதுன்னு போயிட்டு வர்றதுவரை எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. ஒரு நல்ல கணவனா கைக்குள்ள வச்சித் தாங்கினான். ஒரு பத்து நாள் கழித்து இயல்பான வாழ்க்கைக்குள்ள வந்ததும், தினமும் அண்ணன் என்னைப் பார்க்க வந்திருவாங்க. அங்க ஆரம்பிச்சது பிரச்சனை?”

“அண்ணன் பார்க்க வந்ததுக்கும், உங்க பிரச்சனைக்கும்...” ஏதேதோ கணக்கிட்டவள், “அத்தை!” என்றாள் அதிர்ந்து.

“உன்னோட கணிப்பு ஓரளவு சரிதான். உன் அண்ணன் எந்தளவு பழக்கம்? அடிக்கடி ஏன் வர்றான்? இங்கே தனியாதான் இருக்கானா? இப்படி ஏகப்பட்ட கேள்வி. அதை அண்ணன் மேல உள்ள அக்கறையில் கேட்கிறதா நினைச்சிட்டேன். தினமும் இரவு அந்தக் கேள்வி வரும். அதுவும் பெட் டைம்ல. பகல்ல அவனைவிட நல்லவன், திறமைசாலி கிடையாதுன்னு யாரோ ஒருத்தர் சொல்லிக் கேட்கலாம். அப்படிப் புகழ்ற அளவுதான் அவன் நடவடிக்கையும் இருக்கும்.”

“அடுத்த இரண்டாவது மாதம் கர்ப்பமானேன். அதீத சோர்வால அதிக நேரம் படுக்கை, வாந்தின்னு இருக்கவும், அவங்க வீட்டுல அனுமதி வாங்கி அம்மா கூட்டிட்டுப் போயிட்டாங்க. வளைகாப்புக்கு மட்டும்தான் கணவன் வீடு வந்தது. கர்ப்பமான நேரத்தில் கணவனை அதிகம் தேடும் சொல்வாங்க. எனக்கோ, அவனுக்கோ அப்படியில்லை. இல்லைன்னா வளைகாப்பு வரை அம்மா வீட்டுலயே இருந்து, வளைகாப்பு முடிஞ்சதும் அம்மா வீட்டுலயே இருப்பேனா சொல்லு? ஈர்ப்பு பிடித்தமாகி, பிடித்தம் அடுத்த கட்டத்துக்குப் போகலை போல. ஒருவேளை எங்களுக்குள்ள காதல் இருந்திருந்தா தேடியிருப்போமோ என்னவோ? மதி பிறந்த ஐந்தாவது மாதம்தான் புகுந்த வீடு போனேன். அந்த காலகட்டத்தில்தான் அவன்மேல சந்தேகம் வந்தது?”

“அவரே வெளிப்படையா சொன்னாரா?” என கேட்டாள் அனுரதி.

“இல்ல அனுமா. அதெப்படி தன் நல்லவன் இமேஜை விட்டுக்கொடுப்பாங்க. ஆனால், ஒரு மனுசன் ஒருத்தரைப் பற்றி ஒருநாள் பேசலாம். இல்ல இரண்டு நாள் பேசலாம். வேற எதையும்... அதாவது எங்க சம்பந்தப்பட்ட எதையும் பேசாம, தொடர்ந்து ஒண்ணையே பேசினா எப்படி இருக்கும். சொல்லு? நான் எந்தளவு முட்டாளா இருந்திருக்கேன்னா, அவன் என்னை சந்தேகப்பட்டுட்டே, என்னைத் தப்பா உபயோகப்படுத்தியிருக்கான் என்பது தெரியலை பாரு. படித்த முட்டாள்னு சொன்னா சரியா இருக்கும்.”

“அத்தை” என்று ஆறுதலாய் தொட,

“என்னையும், என் அண்ணனையும் வெளில சொன்னா எவ்வளவு அசிங்கம். மூளைக்குப் புரிந்த உடனே அவன்கிட்ட நேரடியா கேட்டுட்டேன். சின்னதா கூட குற்றவுணர்ச்சி இல்லாம ஆமாம்னு சொல்லுறான். திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தது சில நிமிடம்தான், அவன் சட்டையைப் பிடித்தே கேள்வி கேட்டேன்.”

“என்ன இருந்தாலும் நீங்க கூடப்பிறந்தவங்க இல்லையே? எத்தனையோ இடங்கள்ல இது மாதிரித் தப்புகள் நடக்கத்...” பளாரென விழுந்த அடியில் கன்னம் தொட, தொடர்ந்து நான்கைந்து அடிகள் வைத்து, தன் ஆத்திரத்தை அடக்க வழியில்லாத அபிராமி, “என்னை சந்தேகப்பட்டியா நீ? அதுவும் என் அண்ணனோட? ச்சீய்... அசிங்கம் பிடிச்சவனே உன்னைவிட அருவருப்பான ஜென்மம் எவனும் கிடையாதுடா. அப்படி சந்தேகப்படுறவன் ஏன்டா கல்யாணம்ன்ற பெயர்ல என் வாழ்க்கையைக் கெடுத்த? உனக்கு யாருடா அந்த உரிமையைக் கொடுத்தது? ஐயோ! உன்னோட வாழ்ந்தேன்னு நினைக்கும்போதே, உடம்பெல்லாம் ஆசிட் ஊத்தின மாதிரி பத்திக்கிட்டு எரியுது. என்னைப் பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரித் தெரியுதா? என் ஆசை, கனவு, எங்க அப்பாம்மா நிம்மதி எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா. ஐயோ! அவங்க முகத்துல எப்படி முழிப்பேன்?” என்று கதறினார் அபிராமி.

“அவ்வளவு பேசுறேன் அனுமா. கல்லு மாதிரி நிற்கிறான். அவனை ஊரறிய நாறடிக்கணும்னு வெறியே வந்தது. ஆனா, என் அண்ணனுக்கும், அப்பா, அம்மாவுக்கும் இது தெரிஞ்சா செத்துருவாங்க. கண்டிப்பா அது நடந்திருக்கும். கோர்ட் கேஸ்னு போறதைவிட, ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டி என்னை சந்தேகப்படுறவன் கூட வாழ முடியாதுன்னு சொல்லிட்டேன். அதற்கு அவனும் சம்மதிச்சதால தாலியைக் கழட்டிக் கொடுத்து எழுதி வாங்கிட்டு வந்துட்டேன்.”

“அவர் எப்படி ஒத்துக்கிட்டார்?” நீங்க சொல்றதை வச்சிப் பார்த்தா ஓவரா கௌரவம் பார்ப்பாருல்ல அத்தை?”

“அதெப்படி உடனே ஒத்துக்குவான்? அப்பதான் ஒரு பெரிய கம்பெனி ஆரம்பிக்க இருந்தான். பேங்க் லோன் கிடைச்சதாகவும், அது சீக்கிரமே கைக்கு வந்ததும் டாக்குமெண்ட் சைன் பண்ணப்போறதாகவும் கேள்விப்பட்டேன். அதோட சேர்த்து அவனோட மொத்த சொத்தையும், அதுக்காக அடகு வச்சிருந்தான். நியாயமா விட்டு விலகச்சொல்லிக் கேட்டா, என்னோட நேம் பாதிக்கப்படும். இதுவரை என்மேல் யாரும் தப்பு சொன்னதில்லை. அதைக் கெடுத்துக்க நான் தயாராயில்லை, அப்படி இப்படின்னு ஒண்ணும் இல்லாததைப் பேசினான்.”

“இது சரிவராதுன்னு நான்தான் பேப்பர், டிவின்னு உன் முகத்திரையைக் கிழிப்பேன். செய்யமாட்டேன்னு நினைக்காத, என்னோட பிடிவாதத்தைப் பற்றி என் வீட்டுல கேட்டுப்பாரு. இன்னும் சிலது கேள்விப்பட்டேன். நீ என்னை விடலைனா அதுவும் வெளில வரும்னு சொன்னேன். உடனே சரின்னுட்டான்.”

“அந்த சிலது என்ன அத்தை?”

“யாருக்குத் தெரியும்” என்றதில் மருமகள் முழியைக் கண்டவர், “சும்மா அடிச்சிவிட்டேன் அனுமா. அவன் வேறெதோ பண்றான் போல. பயந்து கையெழுத்துப் போட்டுட்டுப் போயிட்டான். என்ன இதுல அதிகம் பாதிக்கப்பட்டது என் அப்பா, அம்மாதான். அவங்களுக்குக்காகவாவது நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கலாம். விட்டுக்கொடுக்கலாம்னா, சந்தேகம் எவ்வளவு பெரிய நோய்னு தெரியும்தான. என்னோட போனா பரவாயில்லை. ஏதோ ஒரு இடத்தில் அண்ணனுக்குத் தெரிஞ்சா, அவன் உயிரையே விட்டுருவான்மா” என்று சத்தமில்லாமல் அழுதார்.

மாமியாரின் இத்தனை வருட பாரத்தைக் கண்ணீரால் கரைத்து விடட்டும் என்று அவரை நெருங்கி முதுகை வருடிக்கொடுத்தபடி இருந்தாள் அனுரதி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
ஐந்து நிமிடங்களில் அத்தனையையும் கரைத்து நிமிர்ந்து கண்ணீர் துடைத்த, அபிராமியின் முன் தண்ணீர் நீட்டப்பட்டது. வாங்கிக் குடித்து புன்னகைத்தவர், “எத்தனை வருட பாரம் இன்னைக்கு உன் மூலமா விலகணும்னு இருந்திருக்கு” என்றார்.

“ம்க்கும் வலுக்கட்டாயமா ஒரு சின்னப்பிள்ளையை கதை கேட்க வச்சிட்டு, பேச்சைப் பாருங்க” என நொடிக்க,

“நீ சின்னப்பிள்ளைதான் நம்பிட்டேன்” என்றார் புன்னகையுடன்.

“அப்புறம் என்னாச்சி? இதுல உங்க சின்னப் பையர் இல்லையே? ஒருவேளை தத்தெடுத்தீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“உனக்குக் கற்பனை ஜாஸ்தி அனுமா. அவன்தான் இருந்தானே நீதான் பார்க்கலை.” சிரிப்புடன் சொன்னார்.

“எனக்குத் தெரியாமல் எப்படி?” என்ற கேள்வி எழுப்பினாள்.

“திரும்பப் போன போது ஒரு மூணுநாள் உறவுல, எதுவும் ஆகாதுன்னோ, இல்லை அப்ப இருந்த நிலையில் யோசிக்க மனமில்லாமலோ இருந்துட்டேன். மதி இருந்ததால அவனை மையமா வச்சி என் உலகம் சுழல ஆரம்பிச்சது. அப்பதான் உங்க உலகத்துல நானும் இருக்கேன்னு, மூணு மாசம் கழிச்சி சின்னவர் என்ட்ரி கொடுத்ததே தெரிஞ்சது.”

“ஓ... அவர் வீட்டுல எதுவும் கேட்காம அப்படியே விட்டுட்டாங்களா?”

“அதெப்படி அனுமா விடுவாங்க. அவங்களுக்கும் இது கௌரவப் பிரச்சனைதான. ஊரையே நம்ப கைவக்கத் தெரிந்த அவனுக்கு, அவனைப் பெத்தவங்களை நம்ப வைக்குறதா கஷ்டம். அவங்க வீட்டில் என்னை என்ன மாதிரி சொல்லி வச்சானோ, அதுக்கப்புறம் அவங்க பேச்சுக்குக் கூட வரலை. எனக்குமே அதுதான் நல்லது தோணிச்சி.”

“அடுத்து வீட்ல மறுகல்யாணத்துக்குப் பார்க்கலாம்னு பேச்செடுத்தாங்க. இரண்டு பிள்ளைகளையும் நல்லவனா மட்டும் வளர்த்தா போதும்னு மறுத்துட்டேன். மகள் தனியா இருக்கிறதைப் பார்த்தா எந்தத் தாய், தகப்பன் தாங்குவாங்க? அடுத்த நாலைந்து ஆண்டுகள்ல போய்ச் சேர்ந்துட்டாங்க. எங்கண்ணன்தான் இப்பவரை என்னை கண்ணுக்குக் கண்ணா பார்த்துக்குறான். அவன் மனைவியும் அவனை மாதிரியே அன்பானவங்க. இப்ப அவங்களும் இல்லை” என்றார் வருத்தமாக.

“அதெல்லாம் சரி அத்தை. அதென்ன காதல் இருந்திருந்தா தேடி இருப்போமோ சொன்னீங்க? எப்படி? காதல் காமத்திற்கான அடித்தளம்தானே. கதைகள்லயும் படங்கள்லயும் காண்பிக்குற, காதல்னு ஒண்ணு கிடையவே கிடையாது. அப்படி இருக்கிறப்ப, கல்யாண வாழ்க்கையில் காயம்பட்ட நீங்க, எப்படி அத்தை, காதல் இருந்திருந்தால்னு சொல்றீங்க?” என்றாள் புரியாது.

“சரியாதான சொல்லியிருக்கேன். இருந்திருந்தால்! அங்கதான் இல்லையே?”

“குழப்புறீங்க என்னை” என்பதையே குழப்பமாகக் கேட்டாள்.

“காதல் உணர்வு சம்பந்தப்பட்டது அனுமா. உடல் சம்பந்தப்பட்டதல்ல. இருவரின் உடல் எப்ப சம்பந்தப்படுதுன்னா, இருவரின் புரிதலோடான காதல் கொடுத்த நம்பிக்கையில்.”

“அப்ப நான் சொன்னது சரிதான?” என்றாள் தான் சொல்வதுதான் சரி என்பதாய்.

“காமம்னு ஒண்ணு இல்லைன்னா, அடுத்த தலைமுறைன்னு ஒண்ணு இல்லவே இல்லாமல், உலகம் இந்நேரம் அழிஞ்சிருக்காதா அனுமா?”

“அதுக்கு?”

“காதலோட சேர்ந்த காமம், ஐ மீன் தாம்பத்தியம் தப்பில்லை. ஆனா, காம வெறிதான் இருக்கக்கூடாது. நாய் மாதிரி, பார்க்கிற பொண்ணுங்களை எல்லாம் படுக்கைக்கு அழைக்குறது தப்பு. தப்புன்றதை விடக் குற்றம்னு சொல்லலாம். வெறி பிடித்த மிருகத்துக்கிட்ட போய் அன்பு, பாசம், காதல்னு பேச முடியுமா சொல்லு? அப்படியொரு மிருகத்துகிட்டதான் நீ மாட்டி இருந்த. நாலு நாள்ல உன்னை மீட்டெடுத்துட்டாங்க. ஆனா, எத்தனை பொண்ணுங்க இந்தக் கொடுமையை கல்யாணம்ன்ற பெயர்ல அனுபவிச்சிட்டிருக்காங்க தெரியுமா?”

“வெறி பிடித்த சில ஆண்கள், தனக்கு மனைவியா வர்றவங்களை, அவங்க உணர்வுகளைக் கொத்திக் கொன்று தின்று கொண்டிருக்காங்கன்னு தெரியுமா? ஒரு சர்வே எடுத்துப்பாரு, நம்ம கையாலயே எல்லாரையும் கொல்லணும்ன்ற அளவு வெறி வரும். இந்தக் காலகட்டங்கள்ல கொடுமை செய்தா உடனே போலீஸ், கோர்ட்னு போயிருறாங்க தான். அதையும் மீறி சில அடிமைப்பெண்கள் இருக்காங்க அனுமா.”

“ம்... புரியுது அத்தை. இருந்தாலும் நான் கேட்ட கேள்விக்கும், நீங்க சொல்ற கதைக்கும் என்ன சம்பந்தம்?”

“ஓ... நீ காதல் பற்றிக் கேட்டல்ல? அன்பு, புரிதல், நம்பிக்கை இதான் அதன் அடிப்படை. இதைத் தொடர்ந்து ஒருத்தர் மேல் வர்ற பிரியம் விருப்பமாகி, காதலாகும்.”

“ஹ்ம்... பெரிய கண்டுபிடிப்புதான்” என்று உதடு சுளிக்க,

“இது கண்டுபிடிப்பு இல்லை அனுமா காவியம். காதல்ன்ற உணர்வு ஒருத்தருக்குள்ள வந்துட்டா அவங்களுக்காக உலகையே எதிர்க்கத் தோன்றுமாம். அவனை விட அழகானவங்க இருந்தாலும், அவன்தான் அழகன். அவன்தான் ஹீரோ!”

“சினிமா டைலாக் மாதிரியே இருக்கு. மானி கூட ஒருமுறை சொல்லியிருக்கா.”

“கேட்கிறதுக்கு அப்படிதான் இருக்கும் அனுமா. ரியல் எப்படின்னா, நாம பிரியம் வச்சவங்களோட சின்னச்சின்ன செய்கைகளையும் ரசிக்கத் தோன்றும்” எனும்போது கணவன் முகம் கண்முன் வர, ‘ரசிக்கலாம் தப்பில்லை’ என நினைத்தது அனுரதி மனம்.

“அதிலும் நம்ம வலி, வேதனை புரிஞ்சிக்குற ஆளா இருந்தா இன்னும் பிடிக்கும்.”

தனக்காகத் துடிக்கும், கண்கலங்கும் அவளின் அழகன்தான் அகத்தில் நிறைந்தான்.

“நம்ம கண்ணைப் பார்த்தே, நாம நினைக்குறதைப் புரிஞ்சிக்கிறவங்க கிடைத்தால், அவங்களை விட சிறந்த துணை இல்லவே இல்லைன்னு சொல்வேன். அப்படிப்பட்ட ஒருத்தன் கிடைத்தால் உடல், பொருள், ஆவி அனைத்தும் அவனுக்கே அர்ப்பணிக்கத் தோன்றும். நமக்கான அன்பை அவங்க கொஞ்சமா கொடுத்தா, அதைப் பல மடங்கா திருப்பிக் கொடுக்கிறதுக்கு, பெண்களைத் தவிர எவராலும் முடியாது. அதுதான் காதல்” என்றார்.

“ரொம்ப அனுபவம் போல” என்று புருவம் உயர்த்த,

“அது இருந்திருந்தா என் வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும் அனுமா. இது நான் பார்த்த சிலரோட வாழ்வியல் உண்மை. இப்பவும் அவங்க லவ், லைஃப் இரண்டும் அப்படியே இருக்கு.”

“கல்யாணத்துக்கு முன்ன உள்ள காதல் வேணும்னா, ஆங்! நீங்க சொன்ன மாதிரி இருவது வயசுல ரெட்டிப்பு அழகா தெரியுமே. அப்படி வச்சிக்கலாமா?” என்றாள் அவளின் வாதம் சரி என்பதை நிரூபிக்கும் விதமாய்.

“தப்பா புரிஞ்சிக்கிட்ட அனுமா? நான் சொன்னவங்கள்ல ஒருத்தர் லவ் மேரேஜ். நாலைந்து வருடம் போராடி, வீட்டு சம்மதத்தோட கல்யாணம் செய்துகிட்டாங்க. மத்ததெல்லாம் அரேஞ்ச் மேரேஜ். அதிலும் ஒருத்திக்கு அவள் கணவர் பொருத்தமே கிடையாது. அவள் அழகு. ஆனா, அவர்? அவர் கொடுத்த அன்பு, அந்தக் காதல் அவளை மாத்திச்சி. இப்பவும் அவங்க ஜோடியைப் பார்த்தா, கரடி கையில் முயல்குட்டியைக் கொடுத்துட்டாங்கன்னு கேலி பேசுறவங்க நிறைய. என் தோழி அதையெல்லாம் கண்டுக்கவேமாட்டா. கேட்டா கிண்டலா அவளோட காதலைச் சொல்லுவா. அந்த கரடிகிட்டதான் இந்த முயல்குட்டி பாதுகாப்பை உணருது. காதலையும் உணருதுன்னு. இதோ பாரு” என்று தன் கைபேசியில் தேடி எடுத்து தோழியின் குடும்பத்தைக் காண்பிக்க, அபிராமி சொன்னது போல்தான் இருந்தார்கள் அந்த ஜோடி.

கொஞ்சம் அதிர்ச்சிதான் அனுரதிக்கு. மாமியாரின் தோழி அழகாய் கொஞ்சம் இளமையாய் இருக்க, அவர் கணவரோ, கருமையான நிறத்தில், கையெல்லாம் ரோமங்கள் அடர்ந்திருக்க, உடலில் அதிகம் ரோமங்கள் இருக்கும் என்பது பார்ப்பவர்களின் கணிப்பு. உயரமும் மனைவியை விட ஒன்றிரெண்டு அங்குலமே அதிகம் இருக்க, பார்ப்பவர்களுக்கு, ‘இவங்க நிஜ ஜோடியா? எப்படி?’ என்றுதான் கேட்கத் தோன்றும். அவர்களுடன் தாயின் சாயலில் ஒரு பையனும், மாநிறத்தில் ஒரு பெண்ணுமாக குடும்பமாக நின்றிருந்தார்கள்.

“வித்தியாசமான ஜோடி அத்தை” என்றாள்.

“ம்... அதுல அவள் சிரிப்பைப் பார்த்தியா? அதுதான் அவர் அவளுக்குக் கொடுத்த காதல்” என்றார்.

“ம்...” என்றாள் முனகலாக.

“மத்ததெல்லாம் விடு. என் சின்னப்பையன் காதல் கதை தெரியுமா?” வெடி ஒன்றை அசால்டாக தூக்கிப்போட்டார் அபிராமி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top