• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
24


“எஸ் மேம். நீங்க இங்கதான வேலை பார்த்ததா சொன்னீங்க? அப்புறம் இப்படிக் கேட்குறீங்க?” என்று சந்தேகமாகக் கேட்டாள் அப்பெண்.

“ரதிமா! இங்க என்ன பண்ற? சிசிடிவில பார்த்துட்டு வர்றேன். எதுக்கு இந்த டைம்ல இவ்வளவு தூரம் வந்த?” என கேட்டு கைபிடிக்க, அதை நாசூக்காக தட்டி விடுகையில், “சார் உங்களுக்குத் தெரிந்தவங்களா? மேனேஜரைப் பார்க்கணும் கேட்டாங்க” என்றதும் ஏனென்று புரியாமல் மனைவியைப் பார்க்க, அவளின் கோவ முகமும், அதை மீறிய குன்றலும், வியர்வை வழிய நின்றவளைப் பார்த்தவனுக்கு ஏதோ புரிய, “அம்மா!” என பல்லைக்கடித்து மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.

“ஹலோ மேம்! ஹவ் ஆர் யூ?” மேனேஜர் எனப்பட்டவன் அனுரதியிடம் நலம் விசாரித்தான்.

“அவங்க நல்லாயிருக்காங்க மேனேஜர். நீங்க இன்னைக்கு லீவ் எடுத்துக்கோங்க. ஜெகதீஷ் சாரை பார்க்கச் சொல்றேன்” என்றனுப்பி, மனைவியின் நெற்றி வியர்வையைத் தன் கைக்குட்டை கொண்டு துடைக்க, வரவேற்புப் பெண் ஆவென பார்த்து, ‘இவங்க சாரோட ஒய்ஃபா? என்ன இவ்வளவு சிம்பிளா இருக்காங்க’ என்றாள் மனதினுள்.

வீட்டிற்கு அழைத்த கணவனின் கையைத் தட்டிவிட்டு விலகி நடக்க, “ஓ.. கோவமாம்” என புன்னகைத்து வீட்டிற்கு அழைத்து வந்தவன், இருக்கையில் அமரவைத்து, இரத்தக் கொதிப்பிற்கு பார்த்தான்.

“ரதிமா! டென்சனாகாத சொன்னா கேட்குறியா? இப்பப்பாரு லோ பிரசர் காட்டுது. என்ன நீ நானும் பேசிட்டேயிருக்கேன் பதில் பேசவே மாட்டேன்ற?” என்று கேட்டும் பதில் வராது போக, “ரதிமா! என்மேல் என்ன கோவம்? என்னோட கெஸ்ஸிங் என்னன்னா, நான் மேனேஜர் இல்லைன்றது உனக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு ரைட்?” என்றான்.

அவள் முகம் இன்னும் கடுகடுக்க, “இதுவரை கம்பெனி பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பம் வரலை ரதிமா. மேனேஜரா நடிச்சது கூட உன் அருகில் இருந்து பழக ஒரு சான்ஸ்னுதான். எப்படியும் உன்னைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க வந்தப்ப, அம்மா உண்மையைச் சொல்லியிருப்பாங்க நினைச்சேன். நிஜமா மறைக்கணும்னு நினைக்கலைடா” என்றான்.

“ஓ... அப்ப அடிக்கடி மேனேஜர் சார்னு சொல்றப்ப, அப்படி இல்லைன்னு திருத்தியிருக்கலாமே. ஏன் செய்யலை? என்னை ஏன் ஏமாத்தணும்?” என்று கோவத்தைக் கூட சத்தமில்லாமல் கேட்டாள்.

“ஹையோ! நிஜமா நீ பழசை வச்சிக் கிண்டலடிக்குற நினைச்சேன்மா. சத்தியமா உனக்குத் தெரியாதுன்றது எனக்குத் தெரியாது. முதல் தடவை நீ மேனேஜர்னு சொன்னப்பவே அம்மாகிட்ட கேட்டேன். அவங்க சொல்ல மறந்ததைச் சொன்னதும், சொல்லிரச் சொல்லி கிளம்பிட்டேன். அப்புறம் அதை நானே மறந்துட்டேன். திரும்ப நீ கூப்பிடுறப்ப கொஞ்சம் கேலியா கூப்பிடுவியா, அதான் விளையாட்டுக்குச் சொல்லுற நினைச்சிட்டேன். தப்பா எதுவுமில்லைமா. காட் ப்ராமிஸ்.” என்றவன், “சரி ஏன் கம்பெனிக்கு வந்த?” என்கேட்டான்.

அவன் கேட்டதும்தான் நடந்தது நினைவு வர கண்கலங்க ஆரம்பித்தது. “மதியம் லஞ்ச்ல மானி போன் பண்ணியிருந்தா. அப்ப திடீர்னு உங்க பெயர் சொல்லி கத்திக்கிட்டே ஓடினது புரிஞ்சது. அடி, இரத்தம்னு ஏதேதோ சொன்னாளா, உங்ககிட்ட அவள் கேட்டப்பவும் ஆமான்ற மாதிரிதான் பேசுனீங்க. அதான் இருக்க முடியாமல் வந்துட்டேன். வந்து மேனேஜர் எங்கன்னு கேட்டா, யாரோ வர்றாங்க. எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? ஏதோவொரு காரணம் முன்ன பொய் சொல்லிட்டீங்க. நம்ம கல்யாணத்துக்குப் பிறகு இதுதான் காரணம்னு சொல்லியிருக்கலாமே? நீங்கன்னு நினைச்சி அவரை...” பட்டென்று வார்த்தைகள் தடைபட அழுகை கூடிப்போனது.

“ஹேய் ரதிமா. ப்ளீஸ் சாரி. நான்...”

“ஏன் சொல்லலை? மேனேஜர் உங்களுக்கு என்ன வேணும்னு அந்தப் பொண்ணு கேட்டப்ப, ஹஸ்பண்ட்னு சொல்லியிருந்தா, என் நிலையை யோசிச்சிப் பாருங்க? ஐ ஹேட் யூ மிஸ்டர்.அறிவழகன்” என்று அழுதாள்.

மனைவியின் நிலை புரிந்ததோ! என்ன விளக்கமளித்து, எப்படித் தேற்றுவதென்று புரியாது இருந்தவன், “ரதிமா அழாத. சொல்றதைக் கேளு. நான்தான் தப்பு. உன் விஷயத்தில் எல்லா இடத்திலும் தப்பாவே போயிருறேன். உன்னை அழ வைக்கக்கூடாதுன்னு, அதை மட்டுமே செய்யுறேன். நடந்த தப்புக்கு என்ன தண்டனைன்னாலும் எனக்குக் கொடு. ஆனா, நீ அழாத ப்ளீஸ்” என்றான் கெஞ்சுதலாக.

“அழ வச்சிட்டு அழாதன்னு சொன்னா” என்று மூக்கை உறிஞ்சினாள்.

“அச்சோ! என் ரதிப்பொண்ணு அழக்கூடாதே. தப்புப் பண்ணினவங்கதான அழணும். எனக்கு நானே வேணும்னா தண்டனை கொடுத்துக்கவா” என கேட்டு அதை அவள் உணருமுன் சுவற்றில் தன் வலக்கையை ஓங்கிக் குத்தினான்.

“ஏங்க என்ன பண்றீங்க?” என்று நெருங்கும் முன் அடுத்தடுத்த குத்துவிட, வேகமாக வந்து கையைப் பிடித்தவள், “லூசா நீங்க. பண்றதையும் பண்ணிட்டு இப்ப, ப்ச்...” என சலித்து கைக்காயத்தைப் பார்க்க இரத்தம் மட்டும் வரவில்லை. மத்தபடி ஆங்காங்கே இரத்தம் கட்டியிருந்தது.

“அப்படி என்ன கோவம் உங்களுக்கு? இதுல என் பிள்ளை பொறுமைசாலி சொல்லி கல்யாணத்துக்குக் கேட்டாங்க உங்கம்மா. உங்க பொறுமையோட அளவை எங்கம்மாகிட்டக் காட்டலாம் வாங்க” என்றழைத்தாள்.

முகத்தை உம்மென்று வைத்து, “நான் ஒண்ணும் கோவப்படலை. நீ எனக்குத் தண்டனை கொடுக்கமாட்ட. அதான் நானே ட்ரை பண்ணினேன்” என்றான்.

“ட்ரை பண்ணினேன், ஃப்ரை பண்ணினேன்னு. இப்ப வலியும், வேதனையும் யாருக்கு? பெரிய கம்பெனி வச்சி நடத்துற உங்களுக்கு இது தப்புன்னு தெரியலையா?” என காட்டமாகக் கேட்டாள்.

“உன் முன்னாடி எதுவும் தப்பில்லை ரதிமா. உனக்கு அப்புறம்தான் எல்லாம். உனக்கு வேணும்னா நான் யாரோவா இருக்கலாம். நீயும் குழந்தையும்தான் என் வாழ்க்கை.”

கணவன் வார்த்தைதனில் மனம் கிறங்கினாலும், நீயும், குழந்தையும் என்றதில் மற்றதெல்லாம் மறக்க, “குழந்தை நம்மகிட்ட இருக்காதுல்லங்க. அப்புறம் எப்படி நாம மூணுபேரும்?” என்றாள்.

தன் கைபிடித்திருந்த கைமேல் மறுகையை வைத்து, “எங்க வளர்ந்தாலும் அது நம்ம குழந்தைதான் ரதிமா. அதை மனசுல வச்சிக்க. இப்ப இந்த நிமிடம் நீ, நான், நம்ம குழந்தை சரியா?”

“ம்... ஆனாலும், மனசு உறுத்திட்டே இருக்கு.”

“ஏன்மா?”

“ஏன்னா, ஏற்கனவே சொன்னதுதான். உங்க அண்ணன் குழந்தையைச் சுமக்குறேன் என்பதே குழந்தைகிட்ட ஒரு ஒட்டுதல் இல்லாமல் செய்யுது. அதையும் மீறி குழந்தை அசையுறப்ப எல்லாம், இது என் குழந்தை. எனக்கு மட்டும்னு கத்தணும் போலிருக்கு. குழந்தை மேல அன்பு வைக்க இன்னுமே பயமா இருக்கு. டிவியில் அழகழகான குழந்தைகள் பார்க்கிறப்ப, நம்ம குழந்தையைப் பற்றிய கனவு விரியுது. எனக்கு நானே குழப்பவாதியா இருக்கேன்ங்க” என்றாள் தவிப்புடன்.

“எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சிக்கோ ரதிமா. சீக்கிரம் உன் மனபாரம் குறையும். சாப்பிட்டியா?”

“இல்ல. சாப்பிடுற நேரம்தான் மானி கூப்பிட்டா. நான் அங்க வந்ததுன்னு, ப்ச்... மறந்துட்டேன்” என்றாள்.

“இரு எடுத்துட்டு வர்றேன்” என்று எழப்போனவனின் கை மனைவியின் கைகளில் பொதிந்திருக்க, அதில் அவனுக்குக் குறும்பு எட்டிப் பார்க்க, “மிஸஸ்.அறிவழகன் கையை விட்டால்தான் சாப்பாடு எடுத்துட்டு வரமுடியும்” என்றதும் பட்டென்று கையை விட்டாள்.

“விடச்சொன்னா விட்டுடுறதா? ஏன் விடணும்? விட முடியாதுன்னு சொல்றதில்லையா?” என்ற உள்மன ஆதங்கத்தைப் பொய்க் கோபமாகக் காட்ட, அவளோ ‘பே’ என விழித்து, “நானும் வர்றேன்” என்று உண்ணச் சென்றனர்.

உணவு மேஜையில் அருகருகே அமர்ந்து உண்ணத் தொடங்க, வேகமாக இரண்டு வாய் வைத்தவள் கணவனைக் காண, அவனோ உண்ணாதிருந்தான்.

“என்ன சாப்பிடலையா?” என கேட்டதும், அவன் தன் கையை மனைவியிடம் காண்பித்த பின்னே அவள் அதை உணர, “சாரிங்க மறந்துட்டேன். சாப்பிட ஸ்பூன் தரவா?” என்றாள்.

“ம்கூம்...” என்று உணவை எடுத்திருந்த அவள் கையைப் பிடித்துத் தன் வாயில் வைக்க, திகைப்பில் கண்கள் விரிய, அவன் உதட்டு ஈரம் பட்டதில் இனம்புரியா சலன அலைகள் அவளுள். இருவர் கண்களும் ஒருவரையொருவர் காண, கணவனில் இருந்து தன் கையை மெல்ல விடுவிக்க, புரியப்படா ஓர் உணர்வு. புரிய வைக்கா ஓர் உணர்வு புரிவதுபோல்!

“ம்...” என்று அவன் புருவம் தூக்க, “ம்கூம்...” என்று அவள் தலையசைக்க, பளிச்சென்ற புன்னகையில் பாவையவள் மயங்கிதான் போனாளோ!

அவ்வுணர்வுக்குப் பெயர் தெரியவில்லை. அவனுடனான இந்த இனிமை பிடித்திருந்தது. அவன் ‘ஆ’வென வாய்திறந்து உணவூட்டக் கேட்டான். தலையசைத்து மறுத்தாலும், அவளின் கை தன்னியல்பாய் உணவெடுத்துப் பிசைந்து, அவளின் அழகனுக்கு ஊட்டக் கொண்டு செல்ல, கண்கள் சுருங்க சிரித்தவன் வாயில் வாங்கி கண்களாலேயே, ‘அருமை’ என்றான்.

வில்லேந்தும் விழிகொண்டு, தன்னைச் சாய்ப்பவனை தடுத்திட முடியவில்லை அவளால். தனக்கு உணவூட்டும் போதே அவளுக்கும் அவள் கையாலே ஊட்டிவிட்டு விழிகளால் ‘போதுமா?’ என கேட்க, “ம்...” என்ற உச்சரிப்புடனான தலையசைப்பு மட்டுமே அவளிடம்.

எழுந்து கைகழுவி தன் கைக்குட்டை கொண்டு துடைத்து, அறைக்குள் அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்துத் தன் தோள் சாய்த்துக்கொள்ள அவன் விரும்ப, கணவன் தோள்சாய அவளும் நினைக்க, இருவருள்ளும் பெரியதொரு தயக்கம். தயக்கம் உடைத்துத் தாவி அணைக்க இருவரும் முயலவில்லை.

அவளின் தோளில் கைபோட எண்ணி கையை உயர்த்தியவன், திடீரென்று கையை வேகமாக நகர்த்த, அவ்வேகம்தனில் கட்டில் பட்டு கைவலிக்க, “ஆ” என்று கத்தினான்.

அதுவரை இருந்த மயக்கம் போய் கணவன் கையைப் பிடித்து, “இதை மறந்துட்டேன்ங்க. ஒரு நிமிடம்” என வெளியே சென்று வந்தவள், அவன் கைபிடித்து காட்டன் துணியில் சுற்றியிருந்த ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள்.

அறிவழகனோ வலக்கையை மனைவியிடமும், இடக்கையைத் தன் கன்னத்திற்கும் கொடுத்து, விழியகற்றா ரசனையானப் பார்வையோ பாவையின்மேல் மையலாய்ப் பதிய, ‘இதே சுகம் இதே சுகம் என்னாளுமே கண்டால் என்ன?’ பாடலின் வரிகள் கேள்வியாய் அவன் மனதில்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
இப்பொழுது என்னவென்று அவள் புருவம் உயர்த்திக் கேட்க, ‘ம்கூம்’ என்றான் மலர்ந்த முகத்துடன். அதில் அவளுள் வெட்கப்பூக்கள் பூத்திட, நாணம் அழையா விருந்தாளியாய் முகம்தனில் ஒட்டிக்கொண்டது. அதில் ரசனையை மீறிய கிறக்கம் எழ, அவன் பார்வையிலும் வித்தியாசம்.

“மிஸஸ்.அறிவழகன் வெட்கப்பட்டா அழகாயிருக்கீங்க” என கிசுகிசு குரலில் கொஞ்சினான்.

“அப்படியா? எனக்குத் தெரியலையே” என்று பெண் பூவையவள் மிழற்ற, “என் கண்ணில் உற்றுப்பார். உன் அழகு தெரியும்” என்றதில் அவளும் பார்க்க, அப்பார்வை வீச்சினில் சில நிமிடங்கள் மேல் தாங்க இயலாது பார்வையைத் திருப்பயவளின் முகச்சிவப்பை ரசித்தவனாய், “மிஸஸ்.அறிவழகன் ஐஸ் கரைஞ்சிருச்சா?” திரும்பவும் அதே குரல்.

“இல்லையே” என்றவள் குனிந்து பார்க்க கையில் துணி மட்டுமே இருந்தது. சட்டென்று நாக்கைக் கடித்து, “நா...நான் வேற...” என்றதற்கு அவன் வேண்டாமென்றான். அதைக் கேட்காது எழுந்து சென்று, சுளுக்கு பேண்டேஜ் எடுத்து வந்து சற்று அழுத்தமாகவே சுற்ற, “ஆ வலிக்குது ரதிமா. உன் அழகன் பாவம்ல” என்றான்.

“இப்பப் பாவம் இல்லை. என்னை... என்னையே மறக்க வச்சி மயக்கப் பார்க்குறீங்க” என்று அவனிடமே புகாரளித்தாள்.

“அப்ப மயங்குறியா?”

“யார் சொன்னது அப்படில்லாம் எதுவும் இல்லை. ஆனா, கண்ணால ஏதோ ஹிப்னாடிசம் மாதிரி பண்றீங்க” என்று கட்டி முடித்ததும் அவன் கையை அவன்புறம் வைக்க,

“ரதிமா! என் கண் உடல்மொழி பார்த்தே என்ன நினைக்குறேன்ற புரிதல் உனக்கு இருக்கு. எனக்கு ஒண்ணுன்னதும் நீ துடிச்சிப்போற. அதே மாதிரிதான் நானும். நீ சின்னதா முகம் சுளிச்சாலே அதுக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சிருவேன். அதுதான் புரிதல்! அந்தப் புரிதல்தான் அன்பு! அந்த அன்புதான் காதல்!” என்றான். உள்ளுக்குள் ‘காதல் என்றால் கத்துவாளே’ என்ற பயமும் இருந்தது.

அவன் எண்ணத்திற்கு மாறாக, “புரிதல் அன்புன்னு சொன்னீங்க தெரியுமா, அதுவரை ஓகேதான். ஆனா, இந்தக் காதல், ப்ச்... அப்படி ஒண்ணு கிடையாது. என்னோட புரிதல் எப்பவும், காதல் காமத்திற்கான அடிப்படை மட்டுமே” என்றாள் அழுத்தமாக.

“ஹ்ம்... உன்னோட எண்ணத்தை மாற்ற விரும்பலை. காதல் வேற காமம் வேறன்னு நீ உணர்வ. அந்தக் காதலுக்கு முழு சொந்தக்காரன், நான் மட்டுமாதான் இருப்பேன். உன் புரிதல், அன்பு, காதல்... சொன்னா கோவிச்சிக்கக்கூடாது...” என வாசலருகில் சென்று, “காமமும் எனக்கு மட்டுமே மிஸஸ்.அறிவழகன்” என்று கண்ணடித்தான்.

“உன்ன என்ன செய்யுறேன் பாருடா” என்று அருகில் இருந்த செம்பை எடுத்து அவன் மீது எறிய, “எஸ்கேப்” என்று வெளியே ஓடிவிட்டான்.

“இடியட்! என்னை டென்சன் படுத்தனே அந்த வார்த்தையைச் சொல்றான். காதலாம்! காமமாம்! அபத்தமாயில்ல. இதே அன்புன்னு சொன்னா எவ்வளவு உயிர்ப்பா இருக்கு.”

அந்த அன்பின் அதீத வெளிப்பாடுதான் காதல் என்பதை, அவளுக்கு யார் உரைப்பாரோ!

வெளியே வந்த அறிவழகன் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து, தாயைப் பார்த்துவிட்டு இரண்டு மணிநேரத்தில் வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்து, அண்ணன் தொழில் செய்யும் இடம் சென்று சந்தித்துப் பேசி வந்தான்.

அடுத்த நாளே பிரசவ வலி வர, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அனுரதி.

“அப்பா எங்க குழந்தை எப்ப வரும்?” என்ற மகளைக் கனிவாகப் பார்த்திருந்தார் ஆனந்தன். மகளின் திருமணத்தைப் பார்த்த திருப்தியில் அடுத்த இரண்டு மாதத்திற்கெல்லாம் மனைவி காலமாகி விட, தங்கையின் வேண்டுகோள்படி, தங்கை வீட்டிற்கே வந்துவிட்டார் ஆனந்தன்.

அதில் ஒரே மகளான ஷண்மதிக்கு அவ்வளவு சந்தோசம். குழந்தையின்மையை முதலில் பெரிதாக எடுக்காதவளுக்கு, ஆண்டுகள் செல்லச்செல்ல அது ஏக்கமாக மாறியது. பின், அவள் உடல்தான் கருத்தரிப்பைத் தாங்காது, அவள் வாடகைத்தாய் மூலம்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கொழுந்தனின் அறிவுறுத்தலில், முதலில் தயங்கி பின் சம்மதித்திருந்தாள்.

குழந்தைக்காகக் காத்திருக்கையில் கணவனின் தற்கொலை முயற்சியில் சித்தம் கலங்கிப்போனது. எவ்வளவு முயன்றும் அவளை வீட்டில் வைக்க முடியாமல் போக, மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கணவன் நலத்துடன் இருப்பதாக நம்பவைத்த பின், அடுத்து ‘குழந்தை இருக்கிறதா? இல்லையா?’ ஷண்மதியின் மனப் போராட்டம் ஆரம்பித்தது.

மகளைக் குணப்படுத்த ‘குழந்தை’ என்ற ஆயுதம் போதுமென்று ஆனந்தன் எண்ணினாரோ! அது மகளின் குழந்தை இல்லையென்று தெரிந்தும், குழந்தை வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்வதாகச் சொல்லிச் சொல்லியே, மருத்துவரின் துணை கொண்டு மகளின் மனதில் பதியவைத்தார். அதில் ஓரளவு அவள் குணம் பெற, ஆள் அடையாளம் கண்டு நிதானமாகப் பேசும் வகையில் மாறினாள் ஷண்மதி.

‘குழந்தை’ என்ற ஒற்றைச்சொல் தொடர் சிகிச்சையாக அளிக்கப்பட தொண்ணூறு சதவிகிதம் குணமாகினாள். மகளின் தெளிவைக் கண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கேட்க, சில நேரம் முரணாக இருக்கும் அவள் குணங்களைச் சொல்லி, கவனமாகப் பார்த்துக்கொள்ள வலியுறுத்தியே அனுப்பிவைத்தார் அந்த மனநல மருத்துவர்.

இதோ மறுபடியும் அறிவழகன் அறிவுறுத்தலில், மனநல சிகிச்சைக்குச் சென்று வந்ததும் தெளிவாக இருக்கிறாள் ஷண்மதி.

மகள்! கணவன், குழந்தை என்று நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்படும், ஒரு சராசரி தகப்பனார் ஆனந்தன். என்னதான் குழந்தை வருகிறதென்றாலும், வாடகைத்தாய் என்பவள் அதைக் கடமையாகச் செய்து சென்றுவிடுவாள். ஆனால், தவறான சிகிச்சையால் அனுரதி போன்ற நல்ல பெண்ணின் வயிற்றில் பத்துமாதங்கள் சுமக்கையில், தன் அணுவில் பிறக்கப்போகும் குழந்தை என்ற பிடிப்பு வருவது இயற்கை. அது அன்பாக உருவெடுத்தால்? தாயிடம் இருந்து குழந்தையைப் பிரிப்பது பாவமல்லவா!

ஷண்மதி, அனுரதி என இருபக்கமும் ஊசலாடியவர், என்ன இருந்தாலும் குழந்தை மதியழகனின் வாரிசு. அது அவர்களுக்கும் உறுத்தலாக இருக்கும் என நினைத்தவர் குழந்தை பிறந்ததும் வாங்கிக்கொண்டு, மகள், மருமகன், குழந்தையுடன் தங்கள் வீட்டிற்குச் செல்லும் முடிவை எடுத்து, அதைத் தங்கையிடம் பக்குவமாகச் சொல்ல தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தன்.

“அப்பா சொல்லுங்க?” ஷண்மதியின் கேள்வியில்,

“இதுதான்மா மாதம். எப்ப வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம். குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கட்டும். அதுதான் குழந்தை ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்புறம் குழந்தையை வாங்கிட்டு நம்ம வீட்டுக்குப் போயிரலாம்” என்றார் மகளிடம். சில நொடிகள் முன்தான் பிறந்ததும் வாங்கிச் சென்றுவிட வேண்டுமென்றார். இதோ அவரறியாமல் ஐந்து மாதங்கள் தாயுடன் இருக்கச் சொல்லிவிட்டார்.

“இதுவும் நம்ம வீடுதான்ப்பா.”

“அனுவும் இங்க இருக்கிறதால சில சங்கடங்கள்தான்மா மிஞ்சும். என்னதான் விட்டுக்கொடுத்தாலும், ஏதோவொரு வகையில் பாசப்போராட்டம் நடக்கும். நடக்காமலும் இருக்கலாம். ஏன் நீயே கூட அவள் சாதாரணமா குழந்தையைப் பார்த்தாலும், எங்க உன் குழந்தைன்னு வாங்கிப்பாளோன்ற பயத்துல எதாவது பேசலாம். அப்படி நீயா? நானான்னு ஈகோ பிரச்சனையாகி பிரியுறதுக்கு, உறவின் உரிமையோட பிரிஞ்சிரலாம்” என்றார்.

“நான் அப்படிச் செய்யமாட்டேன்ப்பா” என்றாள் வலுவிழந்த குரலில்.

“பார்த்தியா? நீ சொல்றதுலயே ஒரு அழுத்தம் இல்லை.”

“அத்தை ரொம்ப கஷ்டப்படுவாங்கப்பா.”

“வேற வழியில்லை மதிமா. தற்காலிக சந்தோசத்தைப் பார்த்தா, நிரந்தரப் பிரிவாகிரும். அது கூடாதுன்னுதான் சொல்றேன்.” நிதர்சனம் சொன்னார் ஆனந்தன்.

“ம்... சரிப்பா” என்றாள் முடிவாக.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top