- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
24
“எஸ் மேம். நீங்க இங்கதான வேலை பார்த்ததா சொன்னீங்க? அப்புறம் இப்படிக் கேட்குறீங்க?” என்று சந்தேகமாகக் கேட்டாள் அப்பெண்.
“ரதிமா! இங்க என்ன பண்ற? சிசிடிவில பார்த்துட்டு வர்றேன். எதுக்கு இந்த டைம்ல இவ்வளவு தூரம் வந்த?” என கேட்டு கைபிடிக்க, அதை நாசூக்காக தட்டி விடுகையில், “சார் உங்களுக்குத் தெரிந்தவங்களா? மேனேஜரைப் பார்க்கணும் கேட்டாங்க” என்றதும் ஏனென்று புரியாமல் மனைவியைப் பார்க்க, அவளின் கோவ முகமும், அதை மீறிய குன்றலும், வியர்வை வழிய நின்றவளைப் பார்த்தவனுக்கு ஏதோ புரிய, “அம்மா!” என பல்லைக்கடித்து மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.
“ஹலோ மேம்! ஹவ் ஆர் யூ?” மேனேஜர் எனப்பட்டவன் அனுரதியிடம் நலம் விசாரித்தான்.
“அவங்க நல்லாயிருக்காங்க மேனேஜர். நீங்க இன்னைக்கு லீவ் எடுத்துக்கோங்க. ஜெகதீஷ் சாரை பார்க்கச் சொல்றேன்” என்றனுப்பி, மனைவியின் நெற்றி வியர்வையைத் தன் கைக்குட்டை கொண்டு துடைக்க, வரவேற்புப் பெண் ஆவென பார்த்து, ‘இவங்க சாரோட ஒய்ஃபா? என்ன இவ்வளவு சிம்பிளா இருக்காங்க’ என்றாள் மனதினுள்.
வீட்டிற்கு அழைத்த கணவனின் கையைத் தட்டிவிட்டு விலகி நடக்க, “ஓ.. கோவமாம்” என புன்னகைத்து வீட்டிற்கு அழைத்து வந்தவன், இருக்கையில் அமரவைத்து, இரத்தக் கொதிப்பிற்கு பார்த்தான்.
“ரதிமா! டென்சனாகாத சொன்னா கேட்குறியா? இப்பப்பாரு லோ பிரசர் காட்டுது. என்ன நீ நானும் பேசிட்டேயிருக்கேன் பதில் பேசவே மாட்டேன்ற?” என்று கேட்டும் பதில் வராது போக, “ரதிமா! என்மேல் என்ன கோவம்? என்னோட கெஸ்ஸிங் என்னன்னா, நான் மேனேஜர் இல்லைன்றது உனக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு ரைட்?” என்றான்.
அவள் முகம் இன்னும் கடுகடுக்க, “இதுவரை கம்பெனி பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பம் வரலை ரதிமா. மேனேஜரா நடிச்சது கூட உன் அருகில் இருந்து பழக ஒரு சான்ஸ்னுதான். எப்படியும் உன்னைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க வந்தப்ப, அம்மா உண்மையைச் சொல்லியிருப்பாங்க நினைச்சேன். நிஜமா மறைக்கணும்னு நினைக்கலைடா” என்றான்.
“ஓ... அப்ப அடிக்கடி மேனேஜர் சார்னு சொல்றப்ப, அப்படி இல்லைன்னு திருத்தியிருக்கலாமே. ஏன் செய்யலை? என்னை ஏன் ஏமாத்தணும்?” என்று கோவத்தைக் கூட சத்தமில்லாமல் கேட்டாள்.
“ஹையோ! நிஜமா நீ பழசை வச்சிக் கிண்டலடிக்குற நினைச்சேன்மா. சத்தியமா உனக்குத் தெரியாதுன்றது எனக்குத் தெரியாது. முதல் தடவை நீ மேனேஜர்னு சொன்னப்பவே அம்மாகிட்ட கேட்டேன். அவங்க சொல்ல மறந்ததைச் சொன்னதும், சொல்லிரச் சொல்லி கிளம்பிட்டேன். அப்புறம் அதை நானே மறந்துட்டேன். திரும்ப நீ கூப்பிடுறப்ப கொஞ்சம் கேலியா கூப்பிடுவியா, அதான் விளையாட்டுக்குச் சொல்லுற நினைச்சிட்டேன். தப்பா எதுவுமில்லைமா. காட் ப்ராமிஸ்.” என்றவன், “சரி ஏன் கம்பெனிக்கு வந்த?” என்கேட்டான்.
அவன் கேட்டதும்தான் நடந்தது நினைவு வர கண்கலங்க ஆரம்பித்தது. “மதியம் லஞ்ச்ல மானி போன் பண்ணியிருந்தா. அப்ப திடீர்னு உங்க பெயர் சொல்லி கத்திக்கிட்டே ஓடினது புரிஞ்சது. அடி, இரத்தம்னு ஏதேதோ சொன்னாளா, உங்ககிட்ட அவள் கேட்டப்பவும் ஆமான்ற மாதிரிதான் பேசுனீங்க. அதான் இருக்க முடியாமல் வந்துட்டேன். வந்து மேனேஜர் எங்கன்னு கேட்டா, யாரோ வர்றாங்க. எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? ஏதோவொரு காரணம் முன்ன பொய் சொல்லிட்டீங்க. நம்ம கல்யாணத்துக்குப் பிறகு இதுதான் காரணம்னு சொல்லியிருக்கலாமே? நீங்கன்னு நினைச்சி அவரை...” பட்டென்று வார்த்தைகள் தடைபட அழுகை கூடிப்போனது.
“ஹேய் ரதிமா. ப்ளீஸ் சாரி. நான்...”
“ஏன் சொல்லலை? மேனேஜர் உங்களுக்கு என்ன வேணும்னு அந்தப் பொண்ணு கேட்டப்ப, ஹஸ்பண்ட்னு சொல்லியிருந்தா, என் நிலையை யோசிச்சிப் பாருங்க? ஐ ஹேட் யூ மிஸ்டர்.அறிவழகன்” என்று அழுதாள்.
மனைவியின் நிலை புரிந்ததோ! என்ன விளக்கமளித்து, எப்படித் தேற்றுவதென்று புரியாது இருந்தவன், “ரதிமா அழாத. சொல்றதைக் கேளு. நான்தான் தப்பு. உன் விஷயத்தில் எல்லா இடத்திலும் தப்பாவே போயிருறேன். உன்னை அழ வைக்கக்கூடாதுன்னு, அதை மட்டுமே செய்யுறேன். நடந்த தப்புக்கு என்ன தண்டனைன்னாலும் எனக்குக் கொடு. ஆனா, நீ அழாத ப்ளீஸ்” என்றான் கெஞ்சுதலாக.
“அழ வச்சிட்டு அழாதன்னு சொன்னா” என்று மூக்கை உறிஞ்சினாள்.
“அச்சோ! என் ரதிப்பொண்ணு அழக்கூடாதே. தப்புப் பண்ணினவங்கதான அழணும். எனக்கு நானே வேணும்னா தண்டனை கொடுத்துக்கவா” என கேட்டு அதை அவள் உணருமுன் சுவற்றில் தன் வலக்கையை ஓங்கிக் குத்தினான்.
“ஏங்க என்ன பண்றீங்க?” என்று நெருங்கும் முன் அடுத்தடுத்த குத்துவிட, வேகமாக வந்து கையைப் பிடித்தவள், “லூசா நீங்க. பண்றதையும் பண்ணிட்டு இப்ப, ப்ச்...” என சலித்து கைக்காயத்தைப் பார்க்க இரத்தம் மட்டும் வரவில்லை. மத்தபடி ஆங்காங்கே இரத்தம் கட்டியிருந்தது.
“அப்படி என்ன கோவம் உங்களுக்கு? இதுல என் பிள்ளை பொறுமைசாலி சொல்லி கல்யாணத்துக்குக் கேட்டாங்க உங்கம்மா. உங்க பொறுமையோட அளவை எங்கம்மாகிட்டக் காட்டலாம் வாங்க” என்றழைத்தாள்.
முகத்தை உம்மென்று வைத்து, “நான் ஒண்ணும் கோவப்படலை. நீ எனக்குத் தண்டனை கொடுக்கமாட்ட. அதான் நானே ட்ரை பண்ணினேன்” என்றான்.
“ட்ரை பண்ணினேன், ஃப்ரை பண்ணினேன்னு. இப்ப வலியும், வேதனையும் யாருக்கு? பெரிய கம்பெனி வச்சி நடத்துற உங்களுக்கு இது தப்புன்னு தெரியலையா?” என காட்டமாகக் கேட்டாள்.
“உன் முன்னாடி எதுவும் தப்பில்லை ரதிமா. உனக்கு அப்புறம்தான் எல்லாம். உனக்கு வேணும்னா நான் யாரோவா இருக்கலாம். நீயும் குழந்தையும்தான் என் வாழ்க்கை.”
கணவன் வார்த்தைதனில் மனம் கிறங்கினாலும், நீயும், குழந்தையும் என்றதில் மற்றதெல்லாம் மறக்க, “குழந்தை நம்மகிட்ட இருக்காதுல்லங்க. அப்புறம் எப்படி நாம மூணுபேரும்?” என்றாள்.
தன் கைபிடித்திருந்த கைமேல் மறுகையை வைத்து, “எங்க வளர்ந்தாலும் அது நம்ம குழந்தைதான் ரதிமா. அதை மனசுல வச்சிக்க. இப்ப இந்த நிமிடம் நீ, நான், நம்ம குழந்தை சரியா?”
“ம்... ஆனாலும், மனசு உறுத்திட்டே இருக்கு.”
“ஏன்மா?”
“ஏன்னா, ஏற்கனவே சொன்னதுதான். உங்க அண்ணன் குழந்தையைச் சுமக்குறேன் என்பதே குழந்தைகிட்ட ஒரு ஒட்டுதல் இல்லாமல் செய்யுது. அதையும் மீறி குழந்தை அசையுறப்ப எல்லாம், இது என் குழந்தை. எனக்கு மட்டும்னு கத்தணும் போலிருக்கு. குழந்தை மேல அன்பு வைக்க இன்னுமே பயமா இருக்கு. டிவியில் அழகழகான குழந்தைகள் பார்க்கிறப்ப, நம்ம குழந்தையைப் பற்றிய கனவு விரியுது. எனக்கு நானே குழப்பவாதியா இருக்கேன்ங்க” என்றாள் தவிப்புடன்.
“எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சிக்கோ ரதிமா. சீக்கிரம் உன் மனபாரம் குறையும். சாப்பிட்டியா?”
“இல்ல. சாப்பிடுற நேரம்தான் மானி கூப்பிட்டா. நான் அங்க வந்ததுன்னு, ப்ச்... மறந்துட்டேன்” என்றாள்.
“இரு எடுத்துட்டு வர்றேன்” என்று எழப்போனவனின் கை மனைவியின் கைகளில் பொதிந்திருக்க, அதில் அவனுக்குக் குறும்பு எட்டிப் பார்க்க, “மிஸஸ்.அறிவழகன் கையை விட்டால்தான் சாப்பாடு எடுத்துட்டு வரமுடியும்” என்றதும் பட்டென்று கையை விட்டாள்.
“விடச்சொன்னா விட்டுடுறதா? ஏன் விடணும்? விட முடியாதுன்னு சொல்றதில்லையா?” என்ற உள்மன ஆதங்கத்தைப் பொய்க் கோபமாகக் காட்ட, அவளோ ‘பே’ என விழித்து, “நானும் வர்றேன்” என்று உண்ணச் சென்றனர்.
உணவு மேஜையில் அருகருகே அமர்ந்து உண்ணத் தொடங்க, வேகமாக இரண்டு வாய் வைத்தவள் கணவனைக் காண, அவனோ உண்ணாதிருந்தான்.
“என்ன சாப்பிடலையா?” என கேட்டதும், அவன் தன் கையை மனைவியிடம் காண்பித்த பின்னே அவள் அதை உணர, “சாரிங்க மறந்துட்டேன். சாப்பிட ஸ்பூன் தரவா?” என்றாள்.
“ம்கூம்...” என்று உணவை எடுத்திருந்த அவள் கையைப் பிடித்துத் தன் வாயில் வைக்க, திகைப்பில் கண்கள் விரிய, அவன் உதட்டு ஈரம் பட்டதில் இனம்புரியா சலன அலைகள் அவளுள். இருவர் கண்களும் ஒருவரையொருவர் காண, கணவனில் இருந்து தன் கையை மெல்ல விடுவிக்க, புரியப்படா ஓர் உணர்வு. புரிய வைக்கா ஓர் உணர்வு புரிவதுபோல்!
“ம்...” என்று அவன் புருவம் தூக்க, “ம்கூம்...” என்று அவள் தலையசைக்க, பளிச்சென்ற புன்னகையில் பாவையவள் மயங்கிதான் போனாளோ!
அவ்வுணர்வுக்குப் பெயர் தெரியவில்லை. அவனுடனான இந்த இனிமை பிடித்திருந்தது. அவன் ‘ஆ’வென வாய்திறந்து உணவூட்டக் கேட்டான். தலையசைத்து மறுத்தாலும், அவளின் கை தன்னியல்பாய் உணவெடுத்துப் பிசைந்து, அவளின் அழகனுக்கு ஊட்டக் கொண்டு செல்ல, கண்கள் சுருங்க சிரித்தவன் வாயில் வாங்கி கண்களாலேயே, ‘அருமை’ என்றான்.
வில்லேந்தும் விழிகொண்டு, தன்னைச் சாய்ப்பவனை தடுத்திட முடியவில்லை அவளால். தனக்கு உணவூட்டும் போதே அவளுக்கும் அவள் கையாலே ஊட்டிவிட்டு விழிகளால் ‘போதுமா?’ என கேட்க, “ம்...” என்ற உச்சரிப்புடனான தலையசைப்பு மட்டுமே அவளிடம்.
எழுந்து கைகழுவி தன் கைக்குட்டை கொண்டு துடைத்து, அறைக்குள் அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்துத் தன் தோள் சாய்த்துக்கொள்ள அவன் விரும்ப, கணவன் தோள்சாய அவளும் நினைக்க, இருவருள்ளும் பெரியதொரு தயக்கம். தயக்கம் உடைத்துத் தாவி அணைக்க இருவரும் முயலவில்லை.
அவளின் தோளில் கைபோட எண்ணி கையை உயர்த்தியவன், திடீரென்று கையை வேகமாக நகர்த்த, அவ்வேகம்தனில் கட்டில் பட்டு கைவலிக்க, “ஆ” என்று கத்தினான்.
அதுவரை இருந்த மயக்கம் போய் கணவன் கையைப் பிடித்து, “இதை மறந்துட்டேன்ங்க. ஒரு நிமிடம்” என வெளியே சென்று வந்தவள், அவன் கைபிடித்து காட்டன் துணியில் சுற்றியிருந்த ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள்.
அறிவழகனோ வலக்கையை மனைவியிடமும், இடக்கையைத் தன் கன்னத்திற்கும் கொடுத்து, விழியகற்றா ரசனையானப் பார்வையோ பாவையின்மேல் மையலாய்ப் பதிய, ‘இதே சுகம் இதே சுகம் என்னாளுமே கண்டால் என்ன?’ பாடலின் வரிகள் கேள்வியாய் அவன் மனதில்.