• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
23

“நன்றியெல்லாம் இருக்கட்டும். எப்படிப் போகுது உங்க கதை?” என்றார் அபிராமி இலகுவான குரலில்.

“அது கதை இல்லை மீ காவியம். நேத்து இங்க வராததில் இருந்து தெரியலையா?” என்று மீசையை நீவ,

“எது, உன் மச்சினனோட வராண்டாவில் படுத்து எழுந்ததையா சொல்ற” என்றார் கேலியாக.

“அச்சோ மீ! கற்பனை ஓவரா இருக்கு. நானும் அவளும் ஒரே அறையில். என்ன நான் கட்டிலுக்குக் கீழ, அவள் மேல படுத்திருந்தா” என்றான்.

“நிஜமாவா?”

“ஆமாம்மா. ஐயாவைப் பார்த்து மேடம் மயங்கிட்டாங்க” என்று சட்டையைத் தூக்கிவிட,

“புளுகுனிப் பயலே” என்று மகனின் முதுகில் தட்டினார்.

“ஹலோ! உண்மையைச் சொன்னேன்.”

“அவள் மனசு மாறினா சந்தோஷம் அறிவா. உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் கவனமா பார்த்துக்க.”

“கண்டிப்பா பார்த்துக்குறேன்மா. சரி நான் கிளம்புறேன்” என்றான்.

“சாப்பிட்டுப் போடா.”

“சாப்பிட்டுட்டுதான் வந்தேன்ம்மா. அண்ணன்கிட்ட பேசிட்டுக் கிளம்புறேன்” என்று அண்ணனைத் தேடிச் சென்றவன், அவன் முகம் கலையிழந்து கிடப்பதைப் பார்த்து, “என்னண்ணா ரதி வீட்டுல நடந்ததை நினைச்சி வருத்தப்படுறியா? விடு பார்த்துக்கலாம்” என்றான் மற்றதை மறந்து.

“உனக்கு வருத்தமில்லையா?”

“ஏன் இல்ல? கூடப்பிறந்தவன் வீடு தேடி வந்திருக்கான். விருந்து உபச்சாரம் செய்யாம, கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையா விரட்டியிருக்கேன். என் மனசு எந்தளவு வேதனையடைந்தது தெரியுமா? அண்ணி...” என நிறுத்தி அண்ணன் முகம் பார்த்தவன், பின் தலைகுனிந்து, “சொன்னா தப்பா எடுத்துக்காத” என்று நிமிர்ந்து அண்ணனின் முகம் பார்க்க, அவனோ இல்லையென்பதாய் தலையசைத்து சம்மதம் கொடுத்தான்.

“அண்ணிக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்ணா. சில நேரங்கள்ல அவங்க மைண்ட் அப்நார்மலா இருக்கு. கொஞ்சம் நடைமுறை யதார்த்தம் புரிஞ்சா போதும்” என்றான்.

சரியென்று தலையசைத்த மதியழகன், தாய்க்கும், தம்பிக்கும் நடந்த பேச்சு வார்த்தையை நேரடியாகக் கேட்க இயலாது, “ஷண்மதி ஏன் எங்கள் குழந்தைன்னு சொல்றா?” என கேட்டான்.

“அ...அது அண்ணியோட கற்பனையா இருக்கும். இரண்டு கவுன்சிலிங் போனா சரியாகிரும்” என்றான்.

“இல்லை. மத்ததுல சரியா இருக்கிறவள் இந்த விஷயத்துல மட்டும் ஏன்? வாடகைத்தாய்னா கூட அது உன் ஒய்ஃபா இருக்க சான்ஸ் கிடையாது? ஏன்னா உன்னோடது லவ் மேரேஜ். அப்புறம் ஏன் அப்படிச் சொல்றா?” தம்பியின் மூலம் அனைத்தையும் அறிந்துகொள்ளப் பார்க்க, அவனோ விடாக்கண்டனாய், “அதை விடுண்ணா பார்த்துக்கலாம். இன்னும் கொஞ்ச நாள் போனா நானே சொல்றேன்” என்றான் அறிவழகன்.

தம்பியவனை ஆழ்ந்து பார்த்தவன், தன் கேள்விக்கான பதிலை தானே தேடிக்கொள்ளலாம் என்று அவனை அனுப்பினான்.

கொயட் சாஃப்ட்வேர் கம்பெனி சென்று, இரவு எட்டு மணிபோல் அறிவழகன் மாமியார் வீடு வர, வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனுரதி கணவனைக் கண்டதும் எழுந்து அறைக்குள் சென்றாள். தன்னைக் கண்டதும் சென்றதால், என்னவென்பதாய் மச்சினனைக் காண, அவனோ தெரியவில்லை என்பதாய் உதடு பிதுக்கினான்.

சாரதா மருமகனை சாப்பிடச் சொல்ல, மனைவியுடன் சாப்பிடுவதாக அவன் சொல்லவும், “என்னன்னு தெரியலை. நாலு மணியில் இருந்து வாசலுக்கும் வீட்டுக்குமா நடக்குறா. உட்காருன்னு சொன்னா, குழந்தை ஆராக்கியமா பிறக்க நடக்கணும்னு, நீங்கதானே சொன்னீங்க அப்படின்னு நடையா நடக்குறா. தண்ணீர் கூட குடிக்கலை. அவளா சோர்ந்து போய் உட்கார்ந்தா. அப்பவும் கண்பார்வை வாசலை விட்டு அசையலை. இப்ப உங்களைப் பார்த்ததும்தான் உள்ள போறா. உங்க பொண்டாட்டியை சமாதானப்படுத்தி சாப்பிட கூட்டிட்டு வாங்க” என்று அனுப்பியவருக்கு அத்தனை நிம்மதி.

கணவன் வருகை உணர்ந்து ஜன்னலோரம் நின்ற அனுரதி, இல்லாத நிலவைத் தேடுகையில், அங்கே நட்சத்திரப் பெண்கள் சிண்சிமிட்டிக் கொண்டிருக்க, சட்டென்ற அதிர்வுடன் கூடிய சிலிர்ப்பு அவளிடத்தில்.

அனுரதியின் சிலிர்ப்புக்குக் காரணம் என்னவென்று அறிய, நட்சத்திரப் பெண்ணொருத்தி கண்சிமிட்டிப் பார்க்க, ரதிதேவியை மன்மதனவன் பின்னிருந்து பட்டும்படாமல் அணைத்து, ஜன்னல்வழி தன்னைப் பார்ப்பதைக் கண்டதும், வெட்கம் கொண்ட நட்சத்திரப் பெண்ணவளோ உருகி வேறிடம் ஓடிவிட்டாள்.

“என்ன மிஸஸ்.அறிவழகன், உன் அழகனைக் காணோம்னு தேடுனியா?” என கிசுகிசுப்பாகக் கேட்க, சட்டென்று அவனை உதறிடச் சொல்லி மூளை அறிவுறுத்தியது. மனமோ அவன்மேல் துளிர்த்திருக்கும் நேசத்தைத் தூண்டிவிட, ‘இது தான்தானா? கணவனை இந்தளவு தேடுகிறேனா? இத்தனை மணிநேரத் தேடுதல் ஏன் எனக்குள்? ஆசை கொள்கிறேனா அவன்மேல்?’ என நினைக்கையில், வயிற்றிலிருக்கும் குழந்தை உள்ளே துள்ள, அவனும் உணர்ந்தானோ! பிடியை சற்று அழுத்த, அவளோ வேகமாகத் துடித்த இதயத்தை, ஜன்னலைப் பிடித்திருந்த வலக்கரத்தை எடுத்துத் தடவிவிட்டுக் கொண்டாள்.

“என்ன மிஸஸ்.அறிவழகன் பதிலையே காணோம்” என்றதில் தெளிவாகியவள், கணவன்புறம் திரும்பி அவனைத் தள்ளிவிட, “ஏ...ஏய்” என கீழே விழப்போனவன் கைகள் அவளை இறுக்கி அணைத்திருந்ததால், அவனுடன் சேர்த்து அவளும் கீழே விழப்போக, சட்டென்று சூழ்நிலை உணர்ந்து சுதாரித்தவன், தான் தரையில் விழுந்த நொடி, “அரவிந்த்” என்று கத்தி மனைவியைப் பிடித்திருந்த கையை விலக்கி, அவள் தோள்களைப் பற்றி பாதியில் நிறுத்திவிட்டான்.

அறிவழகன் கத்தி அழைக்கும் சத்தம் கேட்டு என்னவோ என்று தாயும், மகனும் பதறியபடி உள்ளே வர, அவர்களின் நிலை பார்த்த நொடி, அரவிந்த் வேகமாகச் சென்று அக்காவை சரியாகப் பிடித்து நிறுத்தினான்.

அதன்பின்னே சீரான மூச்சுவிட்ட அறிவழகன், அப்படியே தலையில் கைவைத்துப் படுத்துக்கொண்டான்.

“என்னாச்சி அனுமா? பார்த்து இருக்கக்கூடாதா? வந்து உட்காரு” என்று கட்டிலில் அமர வைத்து தண்ணீர் எடுத்துக் கொடுக்க, குடித்தபடி ஓரவிழியால் கணவனைப் பார்த்த கண்கள், அவனின் செயலில் சிரித்தது.

மகளிடம் ஏதோ சொல்ல வந்த சாரதாவிற்கு, அவளின் சிரிப்பு ஆயிரம் கதைகள் சொல்ல, மனதினுள் சிரித்து, மச்சானிற்கு உதவச் சென்ற மகனை அங்கிருந்து இழுத்துச் சென்றார்.

கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டு, மனைவியைப் பார்க்கத் திரும்பியவன், புருவம் தூக்கிப் புன்னகைக்க, தன்னை முறைத்தவளைக் கண்டு பல் தெரிய சிரித்து, ‘தூக்கு’ என்பதாய்க் கைநீட்ட, என்ன முயன்றும் முறைக்க முடியாமல் ரசிக்கத் தோன்ற, பிறரறியா புன்னகை அவளிதழில்.

மனைவியின் கண்கள் கண்டே அவளின் புன்னகையை அறிந்தவன், “தூக்கு ரதிமா” என்றான் மயக்கும் மாயவனாய்.

“நான்தான் ஒரே நேரத்துல இரண்டுபேரைத் தூக்க முடியாது சொன்னேன்ல” என்று கடிய, “அதுவும் சரிதான்” என்றவன் நேராகப் படுத்துத் தரையில் கை ஊன்றாது ஒரு துள்ளு துள்ளி எழ, ‘ஆ’வெனப் பார்த்திருந்தாள் அவனின் ரதி.

“சின்னப்பையன்ற நினைப்பா மேனேஜர் சார்? கைகால் பிடிச்சிக்கிட்டா என்ன செய்வீங்களாம்?” என்று அக்கறையைக் கேலியாக்கிக் கேட்க,

“ஆமா. எங்கம்மாவுக்கு நான் சின்னப்பையன்தான். கைகால் பிடிச்சிக்கிட்டா சுளுக்கு எடுத்து விடுங்க அனுரதி மேடம்” என்றான்.

“ஆசைதான். போயி வேலையைப் பாருங்க. வந்துட்டாங்க பிடிச்சிக்கிச்சி, இடிச்சிக்குச்சின்னு” என்று முனகினாள்.

“வேறு வேலை எனக்கு இல்லையே,

என்னைக் கொஞ்சம் தூக்கு நீ”

என்று பாட, சட்டென சத்தமாகச் சிரித்தவள், “அப்பக்கூட தூக்கதான் செய்யணும்ல.”

“போ. நான் போறேன்” என்று அவன் எட்டெடுத்து வைக்க, சட்டென்று அவன் கை அவள் கைக்குச் செல்லவும் அதிசயமாய் அவன் மனைவியைப் பார்க்க, “போ... போறேன்... இந்த வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீங்க. அது விளையாட்டா இருந்தாலும் கூட” என்றவள் அதன் பின்னே கணவன் கையை தான் பிடித்திருப்பதை உணர்ந்து பட்டென விடுத்து, “சாப்பிடப் போகலாம்” என்று எழ,

“ம்... அப்படியே ஒரு வாக்” என்று உடன் நடந்தான்.

இரவு உணவு முடித்து சொன்னதுபோல் அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்து முடித்து, வீட்டினுள் வந்து முகம் கழுவி, அனுரதி கட்டிலில் படுக்க, அறிவழகன் கீழே அமர்ந்து, “மிஸஸ்.அறிவழகன்! ஒரு ரெக்வஸ்ட்?” என்றான்.

அவன்புறம் திரும்பிப் பார்த்தவாறு படுத்தவள், “ரெக்வஸ்ட்? என்கிட்டயா? சரி கேளுங்க” என்றாள்.

“அ...அது...” சற்று முன் உணர்ந்த குழந்தையின் ஸ்பரிசம் கேட்க நினைத்தவன் பின் மறுத்து, “ஒண்ணுமில்லை” என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.

புரியாது அவன் முதுகைப் பார்த்திருந்தவள், “என்ன ஒண்ணுமில்லை? ஏதோ கேட்க வந்து படுத்துட்டீங்க?” என்று இயல்பாய் அவள் பேச, அவனுக்குதான் இயல்பு மாறிப்போனது. தன் கைகள் உணர்ந்த அந்த மெல்லிய அசைவு இன்னும் வேண்டுமென்ற ஆசை இருந்தாலும், அவளிடம் உரிமையாகக் கேட்க தயக்கம். சற்று முன் ஏதோ ஒரு தூண்டுதலில் கட்டிப்பிடித்து விட்டான். எல்லா நேரமும் அப்படி இருக்காதே. கேட்க வந்ததை மறைத்து, “என்ன சொல்ல வந்தேன்னு மறந்திருச்சி. நீ தூங்கு ரதிமா” என்றான்.

அதற்கு மேல் கேட்காது அவளும் உறங்கிவிட, உறங்கும் அவளைப் பார்த்திருந்தவனுக்கு திருட்டுத்தனமாகக் குழந்தையைக் கொஞ்ச மனமில்லை. ஏதோ யோசனையில் படுத்திருந்தவனும் தூங்கிவிட்டான்.

அதோ இதோ என்று அனுரதிக்கு ஒன்பதாம் மாதம் முடியப்போகிறது. பிரசவம் எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம் என்ற சூழல். நிறைய முறை கணவன் எதோ கேட்க வருவதும், பின் தயங்கி மருகிச் செல்வதுமாய் இருக்க, முதல் சிலமுறை கவனிக்காது இருந்தவள் அதன்பின் கவனிக்க, முதலில் எதுவும் புரியவில்லை அவளுக்கு.

சமீபமாக நடைபயிற்சியின் போது, அவன் பார்வை வயிற்றை மையம் கொள்வதை உணர்கிறாள். ஆனால், அவனை நெருங்கவிடத் தயக்கம். கைபிடித்து நடப்பது, தடுக்கினால் தாங்குவது என்பது அவர்களுக்குள் இயல்பான விஷயம்தான். இருந்தும் கணவன் ஆசை புரிந்தும், சம்மதிக்க மனம் வரவில்லை. இவ்வளவிற்கும் அவள் ரசிக்கும் முதல் ஆண்மகன். அவனின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மிகவும் பிடிக்கிறது. அதைக் காதல் என்றால் ஒத்துக்கொள்ளமாட்டாள். காதல் இன்னமுமே காமத்திற்கான அடித்தளம் என்றிருக்கிறாள் பெண்.


அவ்வப்பொழுது மாமியாரின் வருகை. அடிக்கடி மாலினியின் வருகை என்று முடிந்தளவு தனியாக விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
இரவில் கால் வீக்கத்தினால் கஷ்டப்படும் மனைவியைக் கண்டால் ஒத்தடம் கொடுக்கவோ, அழுத்தி விடவோ மனம் துடித்தாலும், பெண்ணவளின் மனம் புரிந்து, மாமியாரைப் பார்க்கச் சொல்லி விலகி நின்றுவிடுவான். மற்றபடி உணவு விஷயங்களில் பிடிவாதமாக அவளை உண்ண வைப்பது, நடக்க வைப்பது, தூங்க வைப்பது என்பது அவனின் தினசரி வாடிக்கை.

அறிவழகன் அன்று ஏதோ வேலையென்று கொயட் சாஃப்ட்வேர் சென்றிருந்தான். சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அனுரதிக்கு, கைபேசியில் அழைப்பு வர, எடுத்துப் பார்த்தவள் புன்னகையுடன், “சொல்லுடா மானி. லஞ்ச் டைமா? அண்ணா இப்ப நல்லா நடக்குறாங்களா?” என கேட்க,

“அதெல்லாம் ஓட்டப்பந்தயத்துல சேருற அளவு நடக்கிறார். போன் பண்ணினா, மானி செல்லம் நீ எப்படி இருக்கன்னு கேட்காம, எங்க அண்ணா எப்படி? ஆட்டுக்குட்டி எப்படின்னுட்டு” என்று கோவப்பட்டாள் மாலினி.

“ஏய்! மானி செல்லம் கூல். அண்ணா நல்லா இருந்தா, என் மானியும் நல்லாயிருக்காள்னு தெரிஞ்சிரும்ல. அதான் அவரை விசாரித்தேன்” என்றாள்.

“ம்க்கும் ரொம்பதான். சரி பெய்ன் எதுவும் வந்ததா? சூட்டுவலி மாதிரி எதாவது?”

“சில நேரம் சுருக்குன்னு இருக்கு மானி. அதுதான் சூட்டுவலியா?”

“இருக்கலாம் நேரத்துக்கு சாப்பிடுறியா? வாமிட் எதுவும் இல்லையே?”

தினசரி கேட்கும் கேள்வி என்பதால் தோழியின் கேள்வியை சிறு புன்னகையுடன் கேட்டபடி இருக்க, “என்ன அனுமா ரிபீட்டட் கொஸ்டின் போரடிச்சிருச்சா?” என்றாள் மாலினி.

“ம்கூம். இந்த மானி முன்னவிட இன்னும் பொறுப்பாகிட்டா” என்றாள் தோழியின் அன்பை எண்ணி.

“ஹலோ! கல்யாணமான பொண்ணு பொறுப்பா இல்லைன்னாதான் தப்பு.”

“நீ வேலை செய்யுற இடம் சரியில்லை மானி. அதான் வாய் ஓவரா பேசுற.”

“இதுவே ஓவரா. விளங்கும். சரி உன் ஆளைப்பற்றிய நியூஸ் எதுவும் அப்டேட் பண்ணணுமா?”

“அது அவங்களைச் சந்தேகப்படுற மாதிரி மானி. சோ, வேண்டாம்.” என்றவளுக்குக் கணவன் மீது சிறிதும் சந்தேகம் இல்லை.

“தெரிஞ்சிக்குறது வேற, சந்தேகம் வேற அனுமா.”

“அப்படின்ற. சரி தெரிஞ்சிக்க வேண்டியதை மட்டும் சொல்லு” என்றாள்.

“அதுவா, உனக்குப் பதிலா லாவண்யாவைப் போட்டு, அவளுக்குப் பதிலா ஒரு பொண்ணு வந்தாள். உன்னளவு இல்லைனாலும் அழகுதான்.” என்று புதிர்போட,

“அதுக்கென்னடா” என்றாள் சாதாரணமாக.

“அதுக்கென்னவா? அடேய்! அனு பொண்ணு. அவள் உன் ஆளை கவர் பண்ண மெனக்கெடுறா. இவ்வளவுக்கும் அவள் பார்வை புரிந்து கல்யாணம் ஆகிருச்சின்னும் சொல்லிட்டோம். பயபுள்ள நிறைய டிவி சீரியல் பார்க்கும்போல, அதனால என்னன்னு கேட்குது. கேட்டா அழகை ரசிக்குறாளாம். ஹ்ம்... நீ ரசிக்க வேண்டியவரை ஊர்ல உள்ளவள் எல்லாம் ரசிக்குறா. ஆனா நீ?”

“நான் ரசிக்கலைன்னு பார்த்தியா?” என்றாள் பட்டென்று.

“ம்க்கும் பார்த்துட்... ஏ... ஏய்... அனுமா என்ன சொன்ன? ஓ மை குட்னஸ் அப்ப நீ ரசிக்குற?” என்றாள் நம்ப முடியா பாவனையில்.

“அப்படித்தான் எல்லா சிம்டம்சும் சொல்லுது” என்று மென்குரலில் கூற,

“அப்ப நீ அறிவழகன் சாரை லவ் பண்றன்னு சொல்லு?”

“ரசனைக்கும், லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாத லூசா நீ.” என்று திட்ட,

“அதான. எங்க திருந்திட்டியோன்னு பார்த்தேன். அவர் பாவம். சரி விடு ரசிக்கவாவது மனசு வந்ததே. அம்மா எங்க?” என்றாள்.

“டிவி ஒருபக்கம், லஞ்ச் ஒருபக்கம்னு பிசியா இருக்காங்க.”

“ஆமா. எங்க உங்க மேனேஜர் சார்?” என கேட்க,

‘மேனேஜரை இவள் ஏன் விசாரிக்கிறாள்?’ என குழம்பி பின் தெளிந்து, “அவரா? அதோ வர்றாரே. கொடுக்கவா மிஸஸ்.அறிவழகன்?” என்று கிண்டலடித்தாள்.

“அச்சோ! வேண்டாம் மானி. சும்மாதான் கேட்டேன்” என்றாள் இவள்.

“போதும் அனுமா. லிட்டர் லிட்டரா ஜொள்ளு வடியுது” என்ற மாலினி தற்செயலாகத் திரும்ப, அங்கு கண்ட காட்சியில், “ஏ...ஏய்... அச்சோ... அறிவழகன் சார்” என அவள் கத்திய கத்தில், இங்கு அனுரதிக்கு பகீரென்றாக, “மானி என்னாச்சி?” என்றாள் சத்தமாக.

“சார், இரத்தம் வருது பாருங்க. வாங்க சார் கம்பெனி மெடிக்கல் ரூம் போகலாம். காயம் பெருசுன்னா ஹாஸ்பிடல் போகணும்” என்று மாலினி பேச,

“பெரிய அடில்லாம் கிடையாது. சின்னதுதான் இங்கேயே சரி பண்ணிக்கலாம்” என்றான் அறிவழகன் பதிலுக்கு.

“என்ன சார்? இவ்வளவு ப்ளட் போகுது” என்று மாலினி வருத்தப்பட்டாள்.

“மாலினி என்னாச்சி?” உடன் வேலை செய்பவர்கள் சிலர் வந்து கேட்டனர்.

“மேனேஜர் கால் ஸ்லிப்பாகி விழுறப்போ, கதவின் ஷார்ப்பான பகுதியில் பட்டுருச்சி. எப்படியும் தையல் போட வேண்டியிருக்கும்” என்று சொல்லிக்க கொண்டிருக்க, ப்ளூடூத்தின் வழியாகக் கேட்டிருந்த அனுரதிக்குத் தன்னை மீறி கண்ணீர் வர, மனதெங்கும் இனம்புரியா வலி.

“இரத்தம், தையல்னு பேசுறாங்க. என்னாகியிருக்கும், நான் இப்பவே என் அழகனைப் பார்க்கணும். இல்ல அதுக்கும் முன்ன போன்ல கேட்டுக்கலாம்” என்று கணவனை அழைக்க, அது எடுக்கப்படாமல் போகவும் பயம் பிடித்தது. அடுத்த நிமிடம் தன் ஸ்கூட்டி சாவியை எடுத்து, தாய் அழைக்க அழைக்கக் கண்டுகொள்ளாது ஒரு வேகத்தில் கிளம்பியவள், அடுத்த பத்தாவது நிமிடம் கொயட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் வரவேற்பறையில் நின்று, மேனேஜரைப் பார்க்க வேண்டுமென்று கேட்டிருந்தாள்.

“ஒர்க்கிங் டைம் மேம். எமர்ஜென்சினா சொல்லுங்க. நீங்க யாரு?” என்றாள் அங்கிருந்த புது வரவேற்புப் பெண்.

“நீங்க புது ஜாய்னின்னு நினைக்குறேன். அதான் என்னைத் தெரியலை. நான் ஓல்ட் ஸ்டாஃப். அடிபட்டதா சொன்னாங்களே” என்றாள் தவிப்பாக.

“ஆமா மேம். மேனேஜரே வர்றார் பாருங்க” என்று அப்பெண் கைகாட்டிய திசையில் வேகமாத் திரும்பிப் பார்க்க, அன்று மின்தூக்கியில் ‘ஸ்டாஃப் செல்லக்கூடாது’ என்று கூறிய நபர் வந்து கொண்டிருக்கவும் சந்தேகத்தில், “இவரா மேனேஜர்?” என கேட்டாள்.

“எஸ் மேம்” என்றாளவள்.

“ஓ... அப்ப அறிவழகன்?” என கேட்டதுதான் தாமதம், எங்கிருந்தோ வேகமாக வந்தவனைக் கண்டு, “அதோ எம்.டி அறிவழகன் சார்” என்று கை நீட்டினாள்.

“எம்.டியா?” என்றாள் அதிர்ந்து போய்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top