• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
20


இரவு எட்டு மணிபோல் நடுக்கூடத்தில் அலாரம் அடிக்க அடுப்படியில் இருந்த சாரதா, மகனிடம் யாரென பார்க்கச் சொல்லி வேலையைத் தொடர்ந்தார்.

வாசற்கதவைத் திறந்த அரவிந்த், “மச்சான்” என்று சத்தமாக அழைக்க வர, அதற்குள் உதட்டில் கைவைத்து, “உஸ்ஸ் சத்தம் போடாத” என்றவன் மனைவியின் அறைக்குச் செல்லப்போகும் முன், “அத்தைகிட்ட எனக்கும் சேர்த்து டின்னர் ரெடி பண்ணச்சொல்லு” என்று அறைக்குள் நுழைந்தவனுக்கு மனைவியின் முதுகுப்புறம் தெரிய, வேகமாக கைபேசியை எடுத்து வாட்சப் சென்றவன், ‘நான் ரெடிதான் வரவா? அறிவழகன் நான் அருகில் வரவா?’ என்றனுப்பினான்.

அதுவரை குழந்தை வளர்ச்சி பற்றிக் கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் மேலேறி, வந்த செய்தியைக் காண, படித்ததும் இதழ்களில் சிறு புன்னகை. “என்னடா இவ்வளவு நேரம் ஏரியா அமைதியா இருக்கே பார்த்தேன். வந்தாச்சா?” என்று முனகி, ‘அருகில் வந்தால் மிஸஸ்.அறிவழகன் கொல்லும் தயாரா?’ என்று பதில் அனுப்பினாள்.

அதில் புன்னகை எழ,

‘கொலைகாரி உன்னப் பார்த்து


உசுர் போச்சு.

நின்னு போச்சி என் மூச்சு.

அடி கொலைகாரி,

உன் மடியில் சீராட்டு

என் மனச தாலாட்டு

அந்த அலைமேல் பாய் போட்டு

அழகே நீராட்டு’ என்று அனுப்பினான்.

‘என்னது? மனச தாலாட்டி, அலைமேல பாயப் போட்டு நீராட்டணுமா? பண்ணலாமே. நீராட்டுறதுக்குப் பதிலா அந்த நீருக்குள்ளயே மூழ்கடிக்கலாம்’ என்றனுப்ப,

‘உன்னுள் மூழ்கி மூச்சடைக்க ஆசைதான்’ என்ற பதிலைக் கண்டு பல்லைக் கடித்தவள், ‘இது சரியில்லை மேனேஜர் சார். இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிப்பதென்பது இதுதானா?’ கணவனுக்குக் கேள்வியனுப்பினாள்.

‘முன்ன இடம். இப்ப மடமா?’ என்று திருமணத்தன்று நடந்ததை நினைத்துப் புன்னகைத்தவன், ‘எனக்கு மடமெல்லாம் வேண்டாம். உங்க மனசுல கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுங்க மிஸஸ்.அறிவழகன்’ என்று அனுப்பினான்.

‘மனசா? வேண்டாம் மேனேஜர் சார். நீங்க போற லைன் ராங். இப்படியே போனால் உங்க நம்பர் ப்ளாக் லிஸ்ட்ல போட்டுருவேன். இதை விளையாட்டா எடுத்துக்காதீங்க’ என்றனுப்பி கைபேசியை ஓரம் வைத்தாள்.

அதைப் படித்தவனோ மானசீகமாகத் தலையில் தட்டி, ‘மிஸஸ்.அறிவழகன்’ என்றனுப்ப, அதை முறைத்தபடி, “கொஞ்சம் ஃப்ரீயா பேசினா மனசு, மண்ணாங்கட்டி, காதல்னு... ப்ச்...” என எரிச்சலை சத்தமாகவே கொட்டினாள்.

‘மிஸஸ்.அன்பழகன்’ என்று திரும்பவும் அவன் மொட்டையாக அனுப்ப, சற்று சலிப்புடனே எடுத்து, ‘என்ன?’ என்ற கேள்வி அனுப்பினாள்.

‘தனியாகத் தவிக்கின்றேன். துணை வேண்டும் அன்பே வா’ என்று வந்தது.

‘ஏன் உன் அம்மா, அண்ணன், அண்ணி, மாமா எல்லாம் என்ன பண்றாங்க? வந்து துணைக்கு இருக்கச்சொல்லு’ என்றனுப்ப,

‘யார் இருந்தாலும், மனைவி என்ற ஒருத்தியைச் சுற்றிதான் உலகமே சுழலும்.’

‘சுழலும் சுழலும். ஓவரா வாயாடாம சாப்பிட்டுத் தூங்கு’ என்றனுப்பினாள்.

‘நீயில்லாமல் சாப்பாடு தொண்டையில் இறங்க மாட்டேன்னுது மிஸஸ்.அறிவழகன். மனசெல்லாம் ஒரு மாதிரியிருக்கு. பிரிவுத்துயர் இப்படி இருக்கும்னு நினைச்சதே இல்லை’ என்றனுப்பினான்.

அதைப் படித்திருந்தவளுக்கு இதயப்பகுதியின் துடிப்பு அதிகரிக்க, என்ன பதில் அனுப்பவதென்று குழம்பிப் போனாலும், மனதில் ஏதோவொரு இதம். ஏதோவொரு பயம்.

அவளின் குழப்பம் உணர்ந்தானோ, ‘டென்சன் ஆகாதீங்க மிஸஸ்.அறிவழகன். யார் என்ன சொன்னாலும், நினைத்தாலும் கடைசிவரை நான் உங்களோடதான் இருப்பேன். நீங்களே விரட்டினாலும்.’

லேசாகக் கண்கள் கலங்க, நெற்றியில் கைபேசியை வைத்துத் தட்டியவள், “வேண்டாம் அனு. இவன் பேச்சிலேயே ஏதோ செய்றான். மாட்டிராத அனு. போனைத் தூக்கித் தூரப்போடு” என்று தனக்குத்தானே பேசி, அதை ஓரங்கட்டி நெஞ்சை லேசாக தடவிக்கொடுத்தாள்.

அழகான புன்னகையுடன் பார்த்திருந்தவன், ‘நான் ஏதோ பண்றேனா மிஸஸ்.அறிவழகன்? அப்ப நான் உங்க அகத்துள் வர ஆரம்பிச்சிட்டேன். சீக்கிரமே மனதில் நங்கூரம் மாதிரி ஸ்ட்ராங்கா உட்காருவேன்’ என்று மனதில் பேசி, ‘மாட்டிக்கிட்டா மயங்கிருவோம்னு பயமா? அந்தளவு பயப்பட வேண்டாம். நான் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்’ என்றனுப்பி கைபேசியை சட்டைப்பையில் வைத்து சில நொடிகள் கழித்து, “ஹாய் மிஸஸ்.அறிவழகன்” என்றான்.

தன் பின்னால் இருந்து திடீரெனக் கேட்ட குரலில், முகம் வெளிற திரும்பியவள், “வா...வாங்க” என்றழைக்க, ‘போனை இப்பதான சைலண்ட்ல போட்டு வைத்தோம். அதுக்குள்ள எப்படி? இங்கதான் இருந்தாங்களா?’ குழப்பம் வந்ததே தவிர அவன் தன் அறைக்குள் இருந்திருப்பான் என்று தோன்றவில்லை.

“இங்க என்ன திடீர்னு?” அவனிடமே கேட்டாள்.

“வீட்டுல தனியா இருக்க பயமாயிருக்கு. இங்க மனைவி கூட இருந்தா, பயம்னு ஒண்ணு இருக்கவே இருக்காதுன்னு, பஞ்சாங்கம் பார்த்ததுல சொன்னாங்க.” மனைவியின் முறைப்பில், “அதோட இன்னொண்ணும் சொன்னாங்க” என்றதில் என்னவென்பதாய் முறைப்பை அதிகப்படுத்த, “அது பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். யாதுமாகியவள் அவள். அவளை விட்டு விலகி இருக்காதே. அப்படி விலகினா நீ உயிரற்ற உடல்னு சொல்லி, அதோட மறுத்தாலும் நீ இல்லாமல் அவளும் இருந்துக்கமாட்டா. போடா டேய்னு சொன்னாங்க. அதான் வந்துட்டேன்” என்றான் நல்ல பிள்ளையாய்.

“ஓ... பஞ்சாங்கம் பார்த்த இடத்துல அப்படிச் சொன்னாங்களா?”

“ம்... நிஜமா” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்து.

“ஆனா, நான் பார்த்த இடத்துல அப்படிச் சொல்லலையே” என்றாள் எதையோ யோசித்தபடி.

‘ஆஹா! குறுக்க கட்டையைப் போட ஐடியா பண்ணிட்டா’ என்றெண்ணி வேறு வழியில்லாது, “என்ன சொன்னாங்க?” என கேட்டான்.

“வீட்டை விட்டு விரட்டின புருஷன்காரனை, தூக்கிப்போட்டு மிதிச்சி விரட்டி அடின்னு சொன்னாங்க” என்றதும் அவனின் பார்வையில் உள்ள வித்தியாசத்தையும், கள்ளச் சிரிப்பையும் கண்டவள், ‘நாம எதுவும் தப்பா சொல்லலையே’ என்று விழித்தாள்.

மனைவியின் ‘புருஷன்காரன்’ என்ற வார்த்தை அகமெல்லாம் மலர்ந்து, அது புறத்தில் பிரதிபலிக்க, புன்னகை முகமாக, “தூக்கு” என்று இரு கைகளையும் நீட்டினான்.

“என்னாது?” என பதறி விலகியவள், “லூசா நீ” என்றாள்.

“தூக்கினால்தான என்னைப் போட்டு மிதிச்சி விரட்ட முடியும்” என்று அவன் கூறியதில் வாயில் கைவைத்து, ‘அடப்பாவி! அவனுக்கேற்ற மாதிரி எப்படி மாத்திக்கிட்டான். இவன் சரியான சைலண்ட் கில்லர்தான்’ என்றாள் மனதினுள்.

“ம்... தூக்கு ரதிமா. எவ்வளவு நேரம் கையை நீட்டுறது?”

“ப்ச்... ரதிமா சொல்லாதீங்க சொல்லியிருக்கேன்.”

“நானும் ஆயிரம் முறை ரதிமா சொல்லிட்டேன். நீ பேச்சை மாத்தாம தூக்கு” என்று அதிலேயே நின்றான்.

என்ன செய்வதென்று திணறிப்போய் நிற்கையில், கடவுள்போல் அரவிந்த் சாப்பிட அழைக்க, “வாங்க சாப்பிடப் போகலாம். அதான் தம்பி கூப்பிடுறானுல்ல” என்று புருவம் உயர்த்திச் சிரித்தாள்.

உள்ளுக்குள் அவளின் கிண்டல் சிரிப்பு அளவில்லா சந்தோசத்தைக் கொடுத்தாலும், முகத்தை உர்ரென வைத்து, “எஸ்கேப்பு. இரு உன்னைக் கவனிச்சுக்குறேன்” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறிச் சென்றுவிட்டான்.

“ஆமா இவரு பெரிய அப்பாடக்கரு. போங்க சார்” என்று அவன் பின்னே சென்றாள்.

இரவு உணவை முடித்ததும் அறிவழகன், அரவிந்துடன் மொட்டை மாடியில் நிலா காய செல்ல, சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தப்படுத்தி மகளின் அருகில் வந்து அமர்ந்த சாரதா, “அனுமா மருமகனை உன் ரூம்ல படுக்கச்சொல்லு” என்றார்.

“ம்மா... உங்க மருமகனுக்கு அந்த ரூம் கொடுங்க” என்றதும் மகளை முறைத்து, “எதை மாற்ற நினைக்குற அனுமா? அவர் உன் புருஷன். யாரோ கிடையாது. இத்தனை மாதம் கழித்தும் ஏனிந்தப் பிடிவாதம்?”

“உங்க ஜெனரேஷன் ஆள்களுக்கு சிலது புரியாதும்மா” என்றாள்.

“எந்த ஜெனரேஷன்லயும், உணர்வு என்பது ஒண்ணுதான் அனுமா. உன்னுடைய வலி, இன்பம், துன்பம் உணர மறுக்குறவங்களுக்கு தான் புரியாது. அதை உணர்றவங்க விடவும் மாட்டாங்க. விட்டுக்கொடுக்கவும் மாட்டாங்க.”

“அதான் விட்டுக்கொடுத்து வீட்டுக்குப் போ சொல்லிட்டாங்கள்ல. அப்புறம் எதுக்கு வந்துருக்காங்க? போகச் சொல்லுங்க” என்று கத்தினாள்.

“ஏய்! ஸ்ஸ்... அவருக்குக் கேட்கப்போகுது. மதியம் அவங்க அனுப்ப வேண்டிய சூழ்நிலை. அதனால அனுப்பிட்டதா நீதான என்கிட்ட சொன்ன” என்றார்.

“ஹலோ நான் அப்படிச் சொல்லலை. நீங்களா போட்டு வாங்காதீங்க. இப்ப எதுக்கு இத்தனை கதை?”

‘இதையெல்லாம் சரியா புரிஞ்சிக்க’ என்று மகளை மனதினுள் திட்டி, “பழசை நினைச்சி மருமகனை அலட்சியப்படுத்துறது அப்பட்டமா தெரியுது. அ...”

“அதெல்லாம் இல்லம்மா. இதான் வாழ்க்கைன்றப்ப ஓடி ஒழிய முடியாதுல்ல. இருந்தாலும் முழு மனசா முடியலைம்மா. அவங்க எனக்காக மெனக்கெடுறதைப் பார்க்கிறப்ப கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும்...” என்று தயங்க,

மகளின் இந்தப் புரிதலே, அதாவது கணவனைப் புரிந்துகொண்டு அவனுக்காக யோசிப்பதே போதுமென்றாக, மனம் சற்றே ஆசுவாசமடைந்தது சாரதாவிற்கு. ஒருவரை மனம் ஏற்றுக் கொண்டால்தானே அவர்களைப் பற்றி யோசிக்கவோ, கவலைப்படவோ தோன்றும்.

சிறு புன்னகையுடன், “நீயே சொல்லுற ஓடி ஒழிய முடியாதுன்னு? அப்புறம் ரூம்குள்ள ஏன் சேர்க்கக்கூடாது? அவரும் நீ என்ன சொன்னாலும், சொல்லாமல் விட்டதையும் புரிஞ்சிக்கும் நல்லவர். அதைவிட ரொம்பப் பொறுமைசாலி” எனவும் சட்டென்று சிரித்தவள், “ம்மா... நீங்க என்ன வேணும்னா சொல்லுங்க. ஆனா, உங்க மருமகனை பொறுமைசாலின்னு மட்டும் சொல்லாதீங்க. அதைக் கேட்டா ஹார்ட் பீட் எகுறுது” என்றாள்.

“ஏன்மா? அவர் அம்மா சொன்னதுக்காக சொல்லலை. பொண்டாட்டிதானன்னு தப்பா ஒரு பார்வை பார்க்கவோ, உரிமை எடுக்கவோ நினைக்கலை. உன் மனம் புரிஞ்சி உனக்காக வீடு கூட மாத்திட்டார். நீ நில்லுன்னா நிற்கிறார். உட்காருன்னா உட்காருறார். இதைவிடப் பொறுமையா எந்த ஆணால் இருக்க முடியும்?” என்றார் நீண்ட விளக்கமாக.

“அம்மா... அம்மா! அவங்க சரியான சிடுமூஞ்சி கோவக்கார மேனேஜர். அன்னைக்கு ஆஃபீஸ் போனப்ப...” என அன்று நடந்ததை அப்படியே விவரித்தாள்.

“ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடக்கிறப்ப பொறுமையா வேடிக்கை பார்க்கிறவன் மனிதனே கிடையாது அனுமா. மருமகன் அந்த இடத்தில் சரியாதான் நடந்திருக்காங்க. பொறுமைசாலின்னு குட்டக்குட்ட குனிஞ்சிட்டே இருக்கணுமா? மண்புழு கூட...”

“அம்மா போதும் முடியலை. உங்க மருமகன் புராணம் பாட ஆரம்பிச்சா, நிப்பாட்டவே மாட்டீங்க. இப்ப என்ன அவங்க பொறுமைசாலின்னு ஒத்துக்கணும் அவ்வளவுதான? சரி ரொம்பவே பொறுமைசாலிதான்” என்றாள்.

“அது மரு...”

“என்னைப் பெத்த தெய்வமே உங்க மருமகரை என் ரூம்லயே படுக்க வச்சிக்குறேன். இப்ப சந்தோஷமா?”

“எனக்கு சந்தோஷம்தான். அதேநேரம்...” என இழுக்க,

“என்ன இழுவை?” என்று தாயை முறைத்தாள்.

“மருமகனையும் சந்தோஷமா பார்த்துக்க. தப்பான அர்த்தத்துல சொல்லலை அனுமா. அவரைத் திட்டி நோகடிக்காம பக்கவமா நடந்துக்கச் சொல்றேன்” என்றார்.

கையை தலைக்குமேல் கொண்டு வந்து கும்பிட்டு தன் அறைக்குச் செல்ல, சாரதாவோ புன்னகை முகமாகவே மகளைப் பார்த்திருந்தார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
“மிஸஸ்.அறிவழகன் இங்க தேவையானதைப் பாருங்க. பிடிச்சிருந்தா யோசிக்காம வாங்குங்க. எனக்கும் ஜென்ட்ஸ் ஏரியாவுல பார்க்கணும். மாலினி கீழ பார்க்கிங் வந்துட்டாங்க. இன்னும் சில நிமிடங்களில் இங்க இருப்பாங்க. நான் இதோ வர்றேன்” என்று அந்த ஜவுளிக்கடையின் ஆண்கள் பிரிவுக்குச் செல்ல, செல்பவனையே பார்த்திருந்தவளுக்கு முன்தின இரவு அவன் அடித்த லூட்டி நினைவு வந்தது.

அனுரதி தாயைச் சமாளித்து அறைக்குள் வர, அதற்குள் வானத்து நிலவை ஓய்வெடுக்கச் சொல்லி கீழே வந்திருந்தான் அறிவழகன். ‘இங்க என்ன பண்ணுறீங்க?’ கேட்க நினைத்த கேள்வியை தாய் சொன்னதை மனதில் கொண்டு அவனைக் கண்டுகொள்ளாது படுக்க யத்தனித்தாள்.

“மிஸஸ்.அறிவழகன்! நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்தாம படுக்குறது தப்பில்லையா?” என்றான்.

“நானா? நான் என்ன வார்த்தை? புரியலை?” என கேட்டு அப்படியே நிற்க,

“தூக்கு ரதிமா” என்று இருகைகளையும் அவளை நோக்கி நீட்ட, அதன்பிறகே அனைத்தும் விளங்க கணவனை முறைத்தாள்.

“ஹோய் ரதிமா! என்ன முறைப்பு? ம்... தூக்கு” என்றான்.

“ஒரே நேரத்துல இரண்டு பேரைத் தூக்க முடியாது மேனேஜர் சார்” என்றாள் கிண்டலாக.

“ஓய் என்ன? நான் மட்டும்தான் இங்க இருக்கேன். யார் அந்த இரண்டாவது ஆள்? அடி பிய்க்குறேனா இல்லையா பார்” என்று சட்டைக் காலரை ஏற்றிவிட்டு குரல் கொடுத்தான்.

“ஓ... அப்ப வயித்துல இருக்கிற உங்க பிள்ளையை யார் சார் தூக்கி வச்சிட்டிருக்காங்க? அதோட சேர்த்து இரண்டாவதா உங்களை எப்படித் தூக்க முடியும்? ஒரு பேச்சிக்கு சொன்னா அதையே பிடிச்சி தொங்குறீங்க. ம்...” என்று அவனை மிரட்ட,

“அட நம்ம குட்டியை மறந்துட்டேனே. குட்டியை ஏற்கனவே தூக்கிதான் வச்சிருக்க. அப்ப சரி. குட்டி வெளியில் வந்ததும் மறக்காம என்னைத் தூக்கணும். மறந்திராத ரதிமா” என்றான் முன்னறிவிப்பாய்.

“ரொம்பப் பண்ணினா எனக்குக் கோவம் வரும் சொல்லிட்டேன்” என்றவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு.

“ஓஹ்ஹோ கோவம் வருமா என் செல்லத்துக்கு” என்று அவளை நெருங்க,

“ஏன் என்னையெல்லாம் பார்த்தா மனுசப்பிறவியா தெரியலையா?”

“ம்கூம். தெய்வப்பிறவி! எனக்கே எனக்காக மட்டும், கடவுள் பார்த்துப் பார்த்து வடிவமைத்து அனுப்பிய தேவதைப்பிறவி! கோவம் வரும்னு சொல்றதைக் கூட மென்மையா சொல்லும் என் அழகுப்பிறவி! என்னை உள்ளும் புறமும் இடைவிடாது இம்சிக்கும் இம்சைப்பிறவி” என்கையில் அவனை முறைக்க, அசடு வழிய சிரித்து, “என் வாழ்க்கையை வண்ணமயமாக்கி வர்ணங்கள் சூட்டிய அதிசயப் பிறவி!”

“ஹ்ம் அப்புறம்” என கட்டிலில் அமர்ந்து அவனிடம் கதை கேட்க, பேச்சுவாக்கில் அவளருகே அவனும் அமர்ந்து, “என் மனதைச் சிறிது சிறிதாக ஆட்கொள்ளும் ஆக்டோபஸ் பிறவி!”

“ஆக்டோபஸ்?”

“யாயா”

“நானு?”

“எஸ்.”

‘மேலே சொல்’ என்பதாய் அவள் கையசைக்க, “என் சிந்தையைச் சிதறடிக்கும்... சிதறடிக்கும்... ஸ்ஸ்...” என தொடர வார்த்தை கிடைக்காது விழித்தான்.

“என்ன மேனேஜர் சார் இழுவை?” என்றாள் கிண்டலாக.

“அ...அது மேட்சிங்கான வார்த்தை கிடைக்கலை” என்று அசடு வழிந்தான்.

“நான் வேணும்னா சொல்லட்டுங்களா?” என்றவள் குரலில் நக்கல் அளவுக்கதிகமாக இருந்தது.

“யா ஸ்யூர் ஸ்யூர்” என்றான் ஆர்வமாய்.

“சிந்தையைச் சிதறடிக்கும் சில்வண்டு பிறவி! ஓகேவா?”

“ஆ...ஆம்... இ... இல்லையில்லை. ஹா...ஹான் சிந்தையைச் சிதறடிக்கும் சிட்டுக்குருவி பிறவி! இது வச்சிக்கலாம் ஓகே?”

“ம்... சில்வண்டை விட சிட்டுக்குருவி ஓகேதான். வச்சுக்கலாம் வச்சுக்கலாம். நீங்க மேல சொல்லுங்க” என்றாள் நக்கல் மாறாது.

“ம்...” என அடுத்துச் சொல்ல வார்த்தைகளை அவன் தேட, அவளோ, “ம்னு ஒரு பிறவியா மேனேஜர் சார்?” என்றாள் ஆச்சர்யமாக.

“அட இருமா. நானே வார்த்தை கிடைக்காம திணறிட்டிருக்கேன். நீ வேற குறுக்கால கட்டையைப் போட்டுட்டே இருக்க” என்றதும் சத்தமாக சிரித்துவிட்டாள் அனுரதி.

சிரிப்பென்றால் அப்படியொரு சிரிப்பு. கடந்த சில மாதங்களாக அவள் மறந்து, மறைந்துவிட்டதாக, இனி வரவே வராதென நினைத்திருந்த சிரிப்பு. தன்னை மறந்து மனைவியை மட்டுமே பார்த்திருந்தான் அறிவழகன்.

மகளின் சிரிப்புச் சத்தம் அறை தாண்டி வெளியே கேட்க, எதற்கோ வெளியே வந்த சாரதாவிற்கு மகளின் சிரிப்பில் சந்தோஷக்கண்ணீர். பிடிவாதமாகவேணும் மகளுக்குக் இக்கல்யாணத்தை முடித்த திருப்தி அவருக்கு.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top