- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
17
அன்றிரவு, “அத்தை நான் அனு கூட படுக்குறேன்” என்று வந்த ஷண்மதியிடம், “நீங்க உங்க ரூம்ல படுங்க அண்ணி. நான் என் ஒய்ஃப் கூட இருக்கேன்” என்றபடி வந்தான் அறிவழகன்.
அனுரதி அதிர்வாய் பார்க்க, அபிராமி மகனை யோசனையாய்ப் பார்த்தார்.
“இல்ல அறிவு. நீங்க எப்பவும் போல தனியாவே இருங்க. நான் அனுகூட படுத்துக்குறேன்” என்றாள் திரும்பவும்.
அனுரதிக்கோ, ‘அச்சோ இவளா? இவளுக்கு அவனே மேல்’ என நினைத்தாலும், ‘அவனா இருந்தாலும் எப்படி?’ என்றது மனம்.
“நான் ஏன் அண்ணி தனியா இருக்கணும்? எனக்குன்னு பொண்டாட்டி, பிள்ளை இல்லையா என்ன?”
“பிள்ளையா? என்ன இப்படிப் பேசுறீங்க? அது என் பிள்ளை” என்றாள் வேகமாக.
“அது வெளிய வரவும்தான் அண்ணி. அதுவரை எங்கள் பிள்ளைதான். நீங்க போய்த் தூங்குங்க” என்று மனைவியைத் தோளோடு அணைக்க, அதிர்வில் மயக்கம் வராத குறையாக நின்றிருந்தாள் அனுரதி.
என்ன பேசுவதென்று தெரியாது ஷண்மதி குழப்பத்தோடு செல்ல, “க...க...கை எடுங்க” என்றாள் திணறியபடி உடல் நடுங்க.
“ஓ... சாரி. என் மனைவின்ற உரிமையில் போட்டுட்டேன். நீ என்ன பண்ற, என்னோட வாக்கிங் வா. அப்புறம் நீயும் அம்மாவும் கட்டில்ல படுத்துக்கோங்க. நான் இப்படி ஓரமா படுத்துக்குறேன். சாப்பிட்டதானே?” என்று கேட்க, அவளோ பதிலளிக்காது முறைத்தபடி இருக்க, “என்னம்மா சாப்பிட்டுட்ட தானே?” மனைவியிடம் பதிலில்லை என்றதும் தாயிடம் கேட்டான்.
“ஆமாடா.”
“அப்ப வா போகலாம்” என்றான்.
“நான் சாப்பிட்டது இவனுக்குத் தொயாதுன்றதை நான் நம்பணும்” என முனக,
“நடந்துக்கிட்டே திட்டலாம் வா” என்று நடக்க ஆரம்பித்தான்.
முதலில் தயங்கியவள், பின் நடந்தால் நல்லது என்பதால் கணவனுடன் நடந்தாள். நடந்ததில் கால்மணி நேரம் ஓடிப்போக, “இன்னைக்கு இதுபோதும். நாளைக்கு டைம் எக்ஸ்டென்ட் பண்ணிக்கலாம்” என்றான்.
“உங்க ரூம்லயே படுத்துக்கலாமே” என தயங்கியபடி சொன்னாள்.
“ஓ... நீ அங்க வந்திடுறியா? இதுவும் நல்லதுதான். ஏன் கண்டவங்க பேச்சுக்கும் ஆளாகிட்டு. என்ன அங்க அம்மா இருக்கமாட்டாங்க. உனக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே” என்றான் சிரிப்பை வெளிக்காட்டாது.
“என்னது? தனியாவா?” என அதிர,
“ப்ச்... உணர்ச்சிவசப்படக்கூடாது சொல்லியிருக்கேன்ல. என் ரூம்ல என் மனைவி இருக்கணும். ஹ்ம்... சூழ்நிலை சரியில்லாததால மனைவி இருக்கிற இடத்துக்கு நான் வர்றேன்.”
“ஏன் திடீர்னு? ஷண்மதி அக்கா டாக்டர்கிட்ட அப்படிச் சொன்னதாலயா?” அதுவாகத்தான் இருக்கும் என்று கேட்டாள்.
“அது மட்டுமில்லை. நானே லோன்லியா ஃபீல் பண்றேன். அவனவன் பொண்டாட்டி கூட, ஜாலியா பேசிச் சிரிச்சிட்டுப் போறதைப் பார்க்கிறப்ப பொறாமையா இருக்கு. ஏதோ ஒரு ஏக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. எங்க எனக்கு சைக்காலஜி ப்ராப்ளம் வந்திருமோன்னு பயமாயிருக்கு. அந்தளவு டிஸ்டர்பாகுறேன். நீ இருக்கும் இடத்தில் இருந்தால் மனசுக்கு நிம்மதி வரும்னு தோணுது. ஏன் என்னை ஏத்துக்கமாட்டியா? சாரி சேர்த்துக்கமாட்டியா?” என்றான் சோகம் நிரம்பிய குரலில்.
அவனுக்கு டாக்டர் சொன்ன அனைத்தும் காதினுள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தனியாகப் படுத்தால் அண்ணன் போல் தானும் தவறான முடிவெடுத்து விடுவோமோ என்ற பயம், அவனுள் அவனறியாது எழுந்தது. அதே நேரம் மனைவியையும் தனியே விட பயம். ‘அவளுக்கு விருப்பமில்லை எனினும் திட்டிக்கொண்டாவது அருகில் இருக்கட்டும்’ என்ற எண்ணமே அவனை செயல்பட வைத்தது.
“எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. ஏக்கம், சைக்காலஜின்னு என்னென்னவோ பேசுறீங்க. அதுவே என்னை பயமுறுத்துது” என்றாள்.
“என்னைக் கண்டு எப்பவும் பயப்படாத ரதி. ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்குள்ள பாசம் நேசம் இருக்கலாம். பயம் இருக்கக்கூடாது. அது எப்பவும் நம்மளை சேரவிடாது” என்றான்.
‘உங்களோட மிஸஸ்.அறிவழகன் என்னாச்சி?’ என கேட்க நினைத்தவள், அவனின் வாங்க போங்க போய்விட்டதை உணர்ந்த நிமிடம், கண்முன் இருந்த மீன் தொட்டியைக் கூட ரசிக்கும் நிலையில் இல்லை.
தாயும், மனைவியும் கட்டிலில் படுக்க, தரையில் மெத்தை ஒன்றைப் போட்டு படுத்துவிட்டான் அறிவழகன்.
ஒருமணி நேரம் கழிந்திருந்த வேளையில், கைபேசி சத்தம் அபிராமியையும், அறிவழகனையும் எழுப்பியது. யாரென்று பார்த்தவன் வேகமாக அழைப்பை ஏற்று, “சரி. இதோ வர்றேன்” என்று தான் போட்டிருந்த இரவு உடையுடன் வெளியேறப்போக, “இந்த நேரத்தில் எங்க கிளம்பிட்ட? யார் போன்ல?” என கேட்டார் அபிராமி.
“சுரேஷ்கிட்ட இருந்துதான் போன். இப்பவே வரச்சொல்றார்.”
“சுரேஷ்கிட்ட இருந்தா? அப்ப நானும் வரவா? கொஞ்சம் பதட்டமாகுது அறிவா” என்றார்.
“அம்மா... பதட்டப்படாதீங்க. அந்தளவு எந்த பிரச்சனையும் கிடையாது. நீங்க உங்க மருமகளைக் கூடவே இருந்து பார்த்துக்கோங்க. நீங்க இருக்கிறவரை அண்ணியை அவள்கிட்ட விடாதீங்க. கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கோங்கம்மா” என்றான்.
“ஷண்மதியா? அவள் என்ன செய்யுறா?” என்றார் புரியாது.
“சொன்னதை மட்டும் செய்யுங்கம்மா. வளைகாப்பு முடிஞ்சதும் என்ன ஏதுன்னு பேசிக்கலாம். நான் சீக்கிரமே வந்திருறேன்” என்று செல்ல, தூங்கும் மருமகளைக் கண்டவர் சிறு ஏக்கப் பெருமூச்சுடன் படுத்துவிட்டார்.
நள்ளிரவு இரண்டு மணிபோல் வந்த அறிவழகன், கட்டிலில் அமர்ந்து தான் படுத்திருந்த படுக்கையை வெறித்துப் பார்த்திருந்த மனைவியைக் கண்டு, பதற்றமாக அவளருகில் வந்து, “என்ன ரதிமா? என்ன செய்யுது? வயிறு வலிக்குதா? ஹாஸ்பிடல் போகலாமா?” என படபடத்தான்.
“எங்க போயிட்டீங்க? அப்ப வேற ஏதேதோ பேசுனீங்களா? இப்ப நீங்க இல்லைன்னதும் பயந்தே போயிட்டேன்” என்றவள் கண்களில் மிரட்சி.
“உன்னை விட்டு எங்க போகப்போறேன். அவசரமா ப்ளட் தேவைன்னு போன் வந்தது. ப்ளட் டொனேட் பண்ணிட்டு வர லேட்டாகிருச்சி. போன் சத்தத்துல அம்மா முழிச்சிட்டாங்க. அவங்ககிட்ட சொல்லிட்டுதான் போனேன். நீ ஏன்மா தூங்காம உட்கார்ந்திருக்க? தூங்காம இருந்தா உடம்பு என்னத்துக்காகும்?” என்று கரிசனத்துடன் கேட்டான்.
“எ...எனக்கு அந்த நாலுநாள் கனவா வருது. ப...பயத்துல எழுந்தா நீங்க இல்லை. நீங்க பேசினதெல்லாம் ஞாபகம் வரவும், இன்னும்...”
“ஹேய் சாரிமா. சாரி. நான் யோசிக்கலை” என்று நின்றிருந்தபடியே தன் வயிற்றில் அவள் முகத்தை வைத்து கட்டிக்கொள்ள, ஏனோ விட்டு விலகவில்லை அவள். தலையை வருடிவிட்டவன், “ஒண்ணுமில்லைடா. நான் இருக்கேன்ல. உன் கவலை, பயம், சோகம் எல்லாத்தையும் இல்லாமல் செய்திடுறேன்” என்றான் மென்குரலில்.
“எப்படி?” என்றாள் கேள்வியாய்.
“அதுக்கு நீ என்னை முழுசா நம்பினாலே போதும்” என்றான்.
“ம்...” என்றவள் பேசவேயில்லை.
சில நிமிடங்கள் கழித்தே அதை உணர, “என்ன மிஸஸ்.அறிவழகன் சத்தத்தையே காணோம்” என்று மனைவியின் முகம் நிமிர்த்திப் பார்க்க அவளோ உறங்கியிருந்தாள். சட்டென்று புன்னகை உதிக்க, அவளை சரியாக ஒருபக்கமாக சாய்த்து படுக்க வைத்தவனுக்குக் குழந்தையைத் தொட்டுப்பார்க்க ஆசை எழுந்தது. சில நொடி தடுமாற்றத்திற்கு பின், இரவு உடைக்கு மேல் கைவைத்துப் பார்க்க, கைக்குள் இருந்து எதோ ஒன்று நழுவி ஓடியது.
“ஹோய்!” என சந்தோஷக் கூச்சலிட்டவன், சட்டென வாய்மூடி திரும்பவும் அவள் வயிற்றில் கைவைத்துப் பார்க்க, அங்கேயும் இங்கேயுமாக நழுவி ஓடி விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தது குழந்தை. கண்களின் ஓரம் சிறுதுளி ஆனந்தக்கண்ணீர். மனைவியின் அசைவு தெரிய, அவளைத் தட்டிக்கொடுத்து மனதே இல்லாமல் வந்து படுத்தவன் கண்கள், கைகளில் உணர்ந்த அந்த உணர்வை ரசித்திருந்தது.
காலையில் எழுந்ததும் தாய் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தவன், “சுரேஷைப் பார்த்துட்டு அப்படியே ஆஃபீஸ் போயிட்டு இரண்டு மணிநேரத்தில் வந்திருவேன்மா. நீங்க நான் வந்ததும் கிளம்புங்க” என்றான்.
“எனக்கு வேலையிருக்குடா.”
“என்ன வேலையா இருந்தாலும், நான் வந்த பிறகு கிளம்புங்க. அவசரம்னா போன்லயே மேனேஜ் பண்ணுங்கம்மா. அவளை விட்டு எங்கேயும் போயிராதீங்க” என்று முன்னெச்சரிக்கை விட்டே சென்றான்.
கணவன் மாமியாரிடம் பேசிச் செல்வதைக் கண்டவள், அவரருகில் வந்து, “ஏன் அத்தை உங்க பையன் பொறுமைசாலிதான?” என கேட்க,
“ஆ... அவனா? ஆமா... ஆமா... ஆமா அனுமா. அவனை மாதிரி பொறுமைசாலி யாருமே கிடையாது. நான் செய்த புண்ணியத்துல வந்த பொறுமைசாலி அவன்” என்றார் சிரிக்காமல்.
“ஆமாமா. கண்டிப்பா கிடையவே கிடையாது. ஐயா எவ்வளவு பெரிய பொறுமைசாலி” என்றாள் கேலிக்குரலில்.
“தெரிஞ்சிருச்சா” என்றார் அபிராமி அசடு வழிய.
“ம்... உங்க பையனோட பொறுமையின் அளவை லைவா பார்த்தேன். ம்... ஆனாலும், நல்ல பையனாதான் வளர்த்துருக்கீங்க” என்றாள் பாராட்டும் விதமாய்.
“தேங்க்ஸு தேங்க்ஸு” என்றவர், “அனுமா ஷண்மதி எதாவது பிரச்சனை பண்றாளா? அவளை உன்கிட்ட விடாதீங்கன்னு சொல்றான். ஏன்டான்னு கேட்டா, வளைகாப்பு முடிஞ்சதும் சொல்றேன் சொல்றான்.”
கணவனின் மனம் புரிந்தவள், மாமியாரைக் கஷ்டப்படுத்த விரும்பாது, “தெரியாம ஏதாவது பேசிருப்பாங்க அத்தை. நீங்க சாப்பிட்டீங்கன்னா ஆஃபீஸ் கிளம்புங்க. நான் பார்த்துக்குறேன்” என்றாள்.
“இல்ல அனுமா. திரும்பத் திரும்பச் சொல்றான்னா, எதாவது காரணம் இருக்கும். அவன் வந்ததுமே கிளம்புறேன்.”
“ப்ச்... அத்தை உங்க பையன் எதுக்கு சொன்னாங்கன்னு தெரியும். நான் பார்த்துக்குறேன். அவசர வேலைன்னு இங்கேயே இருந்தா எப்படி? முதல்ல வேலையைப் பாருங்க” என்றாள்.
“அப்ப பிரச்சனை ஒண்ணும் இல்லையே அனுமா. எதாவதுன்னா போன் பண்ணிருவியா?” என்றவருக்கு இன்னுமே யோசனை. இருந்தாலும் வேறு வழியில்லாது கிளம்பிவிட்டார்.