• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
16


அன்று மாலையே ஆனந்தன் தன் மகள் ஷண்மதியை வீட்டுக்கு அழைத்து வர, அபிராமி இல்லாததால், அனுரதி கர்ப்பிணி என்பதாலும், சாந்தி ஆரத்தி எடுத்தார்.

வீட்டினுள் வந்த ஷண்மதி அங்கு அமர்ந்திருந்தவளைக் கண்டு, “அனு” என்றாள்.

“நீங்க?” என பதிலுக்குக் கேட்டவளுக்கு அங்கிருந்த புகைப்படத்தில் ஷண்மதி இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்குமான வித்தியாசம் நிறைய இருந்தது. அதனாலே யோசிக்காமல் கேட்டுவிட்டாள்.

“நான் ஷண்மதி. மதியழகன் ஒய்ஃப். அறிவழகன் அண்ணி. இந்த வீட்டு மூத்த மருமகள். என்னைத் தெரியலையா? உன்னை நான் சரியா சொல்லிட்டேன்.” என்று சொல்லி பின்னால் திரும்பி, “அப்பா அனுகிட்ட என்னைப்பற்றிச் சொல்லலையா?” என கேட்டாள்.

“அ...அது இல்லம்மா. நீ வந்ததும் சொல்லிக்கலாம்னு...” என்று ஆனந்தன் இழுக்க, “அப்ப நான் வரவே மாட்டேன்னு நினைச்சிட்டீங்கதான?” என்றவள் குரல் அழுகைக்கு மாறியது.

“அச்சோ! அப்படில்லாம் இல்லைங்க. என்கிட்ட அடிக்கடி எதோ சொல்ல வருவாங்க. நான்தான் என்ன சொல்ல வர்றாங்கன்னு கவனிக்காமல் போயிருவேன்.”

“பொய்தான?”

“ம்கூம். நிஜம். நிஜம்தான்.” ஒருசில முறை ஆனந்தன் எதோ சொல்ல வந்து, பின் எதையோ யோசித்து சென்று விடுவதைப் பார்த்திருக்கிறாள். ஏனென்று கேட்கத் தோன்றியதில்லை. ‘கேட்டிருக்க வேண்டுமோ?’ மனம் கேள்வி கேட்டது.

“என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்? உட்காருங்க” என்றவள் ஆரத்தி கொட்டி உள்ளே வந்த சாந்தியிடம், “சாந்திக்கா ஒரு ஆப்பிள் ஜுஸ்” என்றுவிட்டு, “ஆப்பிள் ஜுஸ் ஓகேதானே?” என்று ஷண்மதியிடம் கேட்டு ஆனந்தனைப் பார்க்க, அவர் வேண்டாமென்று உள்ளே சென்றுவிட்டார்.

“நீ கொடுத்தால் நான் குடிக்குறேன்” என்றாள் ஷண்மதி.

“ஏன் அப்படி?” என கேட்க,

“இதோ!” என்று அனுரதியின் வயிற்றைக் காண்பித்தவள் முகத்தில் அத்தனை பிரகாசம்.

உண்மை முகத்தில் அடிக்கவும், அதுவரை இருந்த மனநிலை அப்படியே மாறிவிட்டது அனுரதிக்கு. கணவனின் அண்ணன் குழந்தை தன் வயிற்றில். இதுவரையிலும் இல்லாத ஏதோ ஒன்று அவளை அழுத்த, ஷண்மதிக்குத் தன் முகமாறுதலைக் காண்பிக்காதிருக்க மிகுந்த பிரயத்தனப்பட்டாள்.

குழந்தையின் அசைவில், ‘என் குழந்தை’ என்று எண்ணியிருந்தவள் யாரோ ஒருவனின் கரு தன் வயிற்றில் என்பதை ஏற்க மனம் மறுத்தது. என்னதான் தெரியாது நடந்த தவறென்றாலும் கணவன் இல்லாத இன்னொருவனின் குழந்தை, குமட்டிக்கொண்டு வந்தது. வேகமாக அறைக்குள் சென்று வாந்தியெடுக்க, என்னவோவென்று அவள் பின்னால் வந்த ஷண்மதி, தண்ணீர் கொடுத்து அவளைத் தாங்கி கட்டிலில் அமர வைக்க, சாந்தி கொண்டு வந்த பழச்சாறை அனுரதி கையில் கொடுத்தாள்.

வேண்டாமென்று மறுத்து, “தப்பா நினைச்சுக்காதீங்க. டயர்டாயிருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்றதும், அவளின் சோர்வு கண்டு வெளியே சென்றாள் ஷண்மதி.

வயிற்றை இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு, “இன்னைக்குதான் உன்னையும்... தாய்மைன்னா என்ன என்பதையும் உணர ஆரம்பிச்சேன். ஆனா, இப்ப? நீ... நீ எனக்கு இல்லையா குட்டி? உனக்கு நான் வெறும் வாடகைத்தாய் மட்டும்தானா? வாடகைத் தாய்னா அக்ரீமெண்ட் போட்டுருப்பாங்களே. இங்க அதைச் செய்யலைதான? அப்ப நீ எனக்குத்தான சொந்தம். உன்னை எப்படி அவங்க உரிமை கொண்டாடலாம்? தப்புதான குட்டி? நீ பிறந்ததும் அவங்க உன்னைக் கொண்டு போயிருவாங்கன்னா, உனக்காகத்தானே இந்தக் கல்யாணம். நீயே இல்லைன்னா?” மனமென்னும் பூதம் அவளைப் பயமுறுத்தி அவளை பயப்பட வைத்தது.

அனுரதிக்கு ஏழாம் மாதம் நடக்க, அதுவரை மனைவியிடம் வருவதும் பின் எதுவும் பேசாமல் செல்வதுமாய் அவனிருக்க, அவள் கவனித்தாலும் அலட்சியமாய் இருந்து கொண்டாள்.

அன்று மருத்துவமனை செல்ல தாயிடம் பேசி தானே அவளுடன் செல்வதாய் ஏற்பாடு செய்திருந்தான் அறிவழகன். ஷண்மதியும் அவர்களுடன் வருவேனென்று அடம் பிடிக்க, வேறு வழியின்றி அவளையும் தங்களுடன் அழைத்துச் சென்றான்.

“ஸ்கேன்கு கொஞ்சம் பேண்ட் லுஸ் பண்ணி விடு அனு. நான் வர்றேன்” என்ற மருத்துவர் வர்ஷா, அங்கிருந்த ஷண்மதியை வெளியே இருக்கச் சொல்ல, “மாட்டேன் நானும் என் குழந்தையைப் பார்க்கணும்” என்று அவள் அடம் பிடித்ததில் அதிர்ந்த மருத்துவர், அறிவழகனைக் காண, அவனின் அமைதியே அவரைக் கலவரப்படுத்தியது.

“பார்க்கலாம் ஷண்மதி. நான் இப்ப இவர் ஒய்ஃப் ஹெல்த் பற்றிச் சொல்லணும். ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப் பெர்சனலுக்குள்ள நீங்க எதுக்கு? நான் இவர்கிட்டயே சொல்லிருறேன்” என்றார்.

“அதை நீங்க அத்தையிடமும் என்னிடமும் தான சொல்லணும்? அத்தை கூடதான் அனு ஸ்டே பண்ணுறா. அவளைப் பற்றி அறிவுக்கு என்ன தெரியும்னு சொல்றீங்க? அவங்களுக்குள்ள பேசி கூட நான் பார்த்ததில்லை” என்றாள் பட்டென்று.

‘இதுதான் அனுவைப் பார்த்திருக்கும் லட்சணமா?’ மருத்துவர் அறிவழகனைப் பார்வையால் எரித்து, “ஷண்மதி! அவர் மனைவி கம்பர்டபுளா இருக்கணும்னு ஒதுங்கியிருப்பார். அதுக்காக விட்டுட்டு இருப்பார்னு நீங்க எப்படி நினைக்குறீங்க? அவர் அம்மா மூலமா எல்லாம் செய்திருக்கலாமே? ஏன் இன்னைக்கு அப்பாய்ட்மெண்ட்னு இவர் சொல்லிதான அவர் மனைவிக்கே தெரிஞ்சிருக்கும். ஒரே ரூம்ல இருந்தால்தான் அன்புன்னு இல்லையே ஷண்மதி. அனு எங்க இருந்தாலும் இவர் கண் அங்கதான் இருக்கும்” என்றவருக்குத் தெரியுமே அவனின் குணநலன்கள். அதுவும் மனைவியை அலட்சியப்படுத்துபவன் இல்லையென்பதை முழுதும் அறிவாரே! இருப்பினும் அவன்மேல் இந்நிமிடம் கோவம்தான்.

‘அப்படியா?’ என்பதாய் ஷண்மதி கொழுந்தனைப் பார்க்க, அவனின் விழிகள் சென்ற வழியே, ‘ஆம்’ என்றது.

அறைக்குள் படுத்திருந்த அனுரதிக்குமே கேட்கத்தான் செய்தது. தான் வேறு அறையில் தங்குவதால் கணவனுக்கான மரியாதை அங்கு குறைவதை உணர்ந்தாலும், என்ன செய்துவிட முடியும் தன்னால்? ஒரு ஆணின் அறையில் தனியே தங்கும் தைரியம் தனக்கு வருமென்றே தெரியவில்லை. இதில் ஷண்மதி வேறு குழந்தை பற்றிப் பேசிப்பேசியே அவளை ஒருவழி செய்திருக்க, மனம் உழன்று போயிருந்தாள்.

“சரிங்க ஷண்மதி. ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளில நில்லுங்க கூப்பிடறேன்” என்றனுப்பி, “என்ன அறிவழகன் இதெல்லாம்? உங்க அண்ணி இப்படிப் பேசுறாங்க. அமைதியா இருக்கீங்க? அனுவுக்காகத்தான் நீங்க தனியா இருக்கீங்கன்னு தெரியும். இல்லைன்னு சொல்லலை. அதை சுற்றி இருக்கிறவங்களுக்குப் புரிய வைக்குறது உங்க கடமையில்லையா? அட உங்க இரண்டு பேரோட உறவைக்கூட விடுங்க, என் குழந்தைன்னு இவ்வளவு உரிமையா சொல்றாங்க. குழந்தை சுமக்குறது யாருன்னு ஏன் அவங்ககிட்டச் சொன்னீங்க? அது எவ்வளவு பெரிய குற்றம்” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.

“நாங்க சொல்லலை டாக்டர். மகள் சீக்கிரம் குணமாகி வரணும்னு அவங்களைப் பார்க்கப் போகும் போதெல்லாம் மாமா சொல்லியிருப்பார் போல. நா...”

அவன் பேசுவதை கைநீட்டித் தடுத்தவர், “அப்புறமா பேசலாம். உள்ள அனு இருக்குறதை மறந்துட்டேன்” என்றார் மெதுவாக.

மனைவி எல்லாவற்றையும் கேட்டிருப்பாளே என்ற கலக்கம் அவனுள்.

ஊடுகதிர்(ஸ்கேன்) செய்யும் அறையில் அனுரதி அனுமதிக்கப்பட்டிருக்க, யாருக்கும் தெரியாது மறைவாக அறிவழகன் நின்றிருந்தான்.

குழந்தையின் அசைவைக் காண்பித்து விவரித்தவர், எல்லா சோதனையும் முடிந்ததும், “டிஷ்யூ பேப்பர் வச்சி துடைச்சி, ட்ரஸ் சேஞ்ச் பண்ணினதும் ரிசப்ஷன்ல வெய்ட் பண்ணுங்க. ரிப்போர்ட் வந்ததும் நர்ஸ் கூப்பிட வருவாங்க” என்று அனுரதி, ஷண்மதியை வெளியே அனுப்பி, அறிவழகன் இருக்குமிடம் திரும்பி இருக்கையில் அமரச்சொல்லி, “இப்பச் சொல்லுங்க அறிவழகன்?” என்றார்.

“மாமா சொன்னதிலிருந்து அனுரதி வயித்துல வளர்ற குழந்தையைத் தன் குழந்தையாகவே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல. அவள் பக்கத்துல அண்ணி இருந்தா தள்ளி வந்திருவேன். இப்ப அவங்க பேசுறதை வச்சிதான் மாமா என்ன சொல்லி சரிபண்ணியிருப்பார் தோணுது” என்றான்.

“நீங்க தப்புப் பண்ணிட்டீங்க அறிவழகன்” என்று குற்றம் சாட்ட,

“டாக்டர்!” என அதிர்ந்தான்.

“ஆமாம். அதிலும் பெரிய தப்பு. உங்க அண்ணன் மனைவி மனநிலையை நினைத்து, உங்க மனைவியை விட்டுட்டீங்க?” என்று குற்றக்கணக்கை ஏற்ற,

“பு...புரியலை டாக்டர்?” என்றவனுக்கு மனதைப் பிசைய, ஏதோ பெரிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
“அவங்க குணமாகுறதுக்காகச் சொன்னதெல்லாம் ஒருவகையில் உங்க இரத்த சொந்தம்னு விட்டுரலாம். ஆனா, குணமான வேகத்துல வீட்டுக்குக் கூட்டிட்டு வராம தனியா வச்சிருக்கணும். இல்லையா, அனுவை தனியா வச்சிருக்கணும். அட்லீஸ்ட் உங்க ரூம்லயாவது தங்க வச்சிருக்கணும். இப்ப அனுவோட பிபி லெவல் முன்னை விட லோவா இருக்கு. இதுதான் நீங்க கவனிக்குற லட்சணமா?” என்றார் காட்டமாக.

அவர் பார்த்துப் பார்த்து அனுரதியை உடலளவிலும், மனதளவிலும் வெளியே கொண்டு வந்திருக்க, இவர்கள் கிட்டத்தட்ட பழைய நிலைக்கே கொண்டு வந்திருப்பது அவருக்கு அதிர்ச்சியே! அவளைப் பார்த்ததும் அந்த கலையிழந்த முகமும், அலைபாயும் கண்களுமே அவள் நிலை புரிய வைத்திருக்க, அவளின் பொறுப்பாளன் இவனெப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்கலாம் என்ற அளவில்லா கோவம் அவன் மீது.

“நா... நான் பக்கத்துல போனா அவளுக்குப் பிடிக்கலை டாக்டர். திரும்பத்திரும்ப போயி இருக்கிற வலியை அதிகப்படுத்த வேண்டாம்னு விலகியிருந்தேன். முடிந்தளவு என் கண்பார்வையில்தான் இருப்பா. அண்ணி வந்ததும் முழுக்க அவளோட இருந்ததால, இன்னும் விலக வேண்டிய சூழல். இப்படி ஆகும்னு யோசிக்கக் கூட இல்லை டாக்டர். உங்ககிட்டயாவது கேட்டிருக்கணும். அவள் பக்கத்துல இருந்திருந்தா மாற்றம் தெரிந்திருக்குமோ என்னவோ? என்னால...” என்று கலங்கிய கண்களை இரு கைகொண்டு துடைத்து மூச்சை இழுத்துவிட்டான்.

துக்கம் தொண்டையை அடைக்கும் என்பதை முதன்முறையாக உணர்ந்தானோ!

“உங்க நிலை புரியுது அறிவழகன். அனுவுக்குப் பிடிக்காவிட்டாலும் அடிக்கடி பக்கத்துல போயிருந்தா, உங்க மேல உள்ள கோவத்திலாவது ஷண்மதி பற்றிச் சொல்லி கத்தியிருப்பா. அது கொஞ்சம் மனச்சுமையைக் குறைச்சிருக்கும். இப்ப பாருங்க அதை யார்கிட்டேயும் சொல்ல முடியாம, மனசுலயே வச்சி அழுத்தம் தாளாம அமைதியாகிட்டா. ப்ரஷர் எக்குத்தப்பா இருக்கு. அனாதரவா இருக்கிற குழந்தை மாதிரி இருக்கிறவளைப் பார்க்கிறப்,ப என்னால ஜீரணிக்கவே முடியலை. உங்கமேல அவ்வளவு கோவம் வருது அறிவழகன்” என்றார் கோவமாகவே.

“என் தப்புதான் டாக்டர். என் தப்பு மட்டும்தான். அவளை என் வாழ்க்கையில் கொண்டு வர செய்த மெனக்கெடலை, தக்க வச்சிக்க முயற்சிக்கலை. அவளுக்காகவே என்றாலும் நான் விலகி இருந்திருக்கக்கூடாது. இனி அவளை நானே பார்த்துக்குறேன் டாக்டர்.”

“எனக்குத் தெரிந்து கவுன்சிலிங் போறது பெட்டர் அறிவழகன்.”

“டாக்டர்?”

“எந்த முறையில் வந்தாலும் அது உங்க அண்ணன் குழந்தைதான். சூழ்நிலை காரணமா, அவர் தம்பியைக் கல்யாணம் முடிக்கிற பொண்ணோட நிலை எப்படி இருக்கும்னு நினைக்குறீங்க? தன் கணவன்! தன் குழந்தை! இதுதான் தன் குடும்பம்! என்பதை மனசுல பதிய வச்சிட்டு இருக்கிற ஒருத்திகிட்ட வந்து, இது என் குழந்தைன்னு சொல்றதோட இல்லாம, கண்முன்னே நடமாடிட்டு இருந்தா அது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கும்?”

“அண்ணன் குழந்தை வயித்துல, தாலி கட்டின தம்பி பக்கத்துல, இப்ப அனு நிலையை யோசிச்சிப் பாருங்க அறிவழகன். நிம்மதி எப்படி வரும்? ஏற்கனவே மனமும் உடலும் புண்பட்ட பொண்ணு. நீங்க நல்லா பார்த்துக்குவீங்கன்னுதான் குழந்தையைக் கலைக்காம, நீங்க சொன்னதுக்கெல்லாம் சம்மதிச்சேன். உங்க அண்ணி நிலை அனுவுக்கு வராம பார்த்துக்கோங்க” என்றார் கடுமையாகவே.

“போதும் டாக்டர். என்னால முடியலை. இருக்க இருக்க குற்றவுணர்ச்சி அதிகமாகுது. கத்தி அழணும் போல இருக்கு. அண்ணி நிலை என் ரதிக்கு... நோ டாக்டர். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். சரி பண்றேன்” என்றவன் குரல் நடுங்கியது.

“அனு, ஷண்மதி ஒரே வீட்டுல இருக்கிறது ரொம்ப கஷ்டம் அறிவழகன். ஏன்னா, ஷண்மதியைக் கண்ட்ரோல் பண்றது முடியவே முடியாத ஒண்ணு. குழந்தை பிறக்குறதுக்கு முன்ன நிலை இது. குழந்தை பிறந்த பின் எல்லாமே மாறலாம்.”

“என்ன டாக்டர்? புரியலை?”

“குழந்தை பிறந்ததும் குணமாகவும் வாய்ப்பிருக்கு. குழந்தையை யார்கிட்டேயும் தராம, என் குழந்தையை நானே வளர்க்குறேன்னு, அடமண்டா பிஹேவ் பண்ணவும் வாய்ப்பிருக்கு. முன்னது நல்லது. பின்னது உயிர் பலியில் கூட விடலாம்.”

“டாக்டர்” என பயத்தில் எழுந்துவிட்டான்.

“உட்காருங்க அறிவழகன். உங்களை பயமுறுத்த நான் சொல்லலை. இது ஒரு முன்னெச்சரிக்கைதான். அனுவுக்கு இதை பக்குவமா சொல்லி புரியவைங்க. அதுக்கு முன்ன அனுவுக்கு கவுன்சிலிங் கொடுங்க. இதுதான் யதார்த்தம்னு அவளுக்குப் புரியணும். அப்பதான் உங்க அண்ணியால் வரப்போற பிரச்சனையை சமாளிக்க முடியும்.”

“தேங்க்யூ டாக்டர்” என்றான் மனதார.

“அனு உங்களோட அன்னியோன்யமா வாழ்றதை நான் பார்க்கணும் அறிவழகன். சாதாரணமா ஒரு பொண்ணு வாழ்ற வாழ்க்கை அவள் வாழ்ந்தா, அதைப் பார்த்து சந்தோஷப்படுற முதல் ஆள் நான்தான்” என்றார் நெகிழ்வாக.

“கண்டிப்பா நடக்கும் டாக்டர்” என்று வாக்கு கொடுத்து விடைபெற்றான்.

இரவு வீடு வந்த அறிவழகன் நேரே தாயிடம் சென்று, “புதன்கிழமை அனுரதிக்கு வளைகாப்புன்னு அத்தைகிட்ட கன்பார்மா சொல்லிருங்க” என்றான்.

“என்ன பேசுற அறிவா? ஒன்பதாம் மாதம்னு முடிவு பண்ணின பிறகு, திரும்பவும் என்ன?”

“அம்மா அது நமக்குள்ள பேசினதுதான. சோ, ப்ரோக்ராமை மாத்துங்க. அப்புறம் இன்னும் ஒருவாரம் வரை நான் கம்பெனிக்குப் போகமாட்டேன். வளைகாப்பு வரை உங்க மருமகள் கூடதான் இருக்கப்போறேன்” என்றான்.

“எதுக்கு இந்த திடீர் முடிவு அறிவா?” அவருக்கு மகனின் இந்த செயலில் எதுவோ இருப்பதாகத் தோன்ற கேட்டுவிட்டார்.

“என்னை எதுவும் கேட்காதீங்கம்மா. வளைகாப்பு வச்சி அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பப் பாருங்க” எனும்போது தற்செயலாக அங்கு வந்த அனுரதி கணவனின் வார்த்தையைக் கேட்டு திகைத்து நின்றாள்.

‘ஏன்? என்னை அனுப்புவதில் எதற்கு இந்த வேகம்? நான் இவனுக்குத் தொந்தரவாக இருக்கேனா? சரிதான். இப்படி ஒரு மனைவியைப் பிடித்திருந்தால்தான் அதிசயம்’ என்றெண்ணியவள் இதழில் விரக்திப்புன்னகை.

“அனுமா!” என்ற அபிராமியின் விழிப்பில் அதிர்ந்து திரும்பிய அறிவழகன், தான் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டாளோ என்ற பதைபதைப்பில் நோக்க, அவளின் கண்கள் சொன்னது அதுதான் உண்மையென்று.

மூச்சை இழுத்துவிட்டு இரு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்து, “நான் சொன்னதைச் செய்திருங்கம்மா” என்று மனைவியைப் பார்த்தபடி படியேறி அவன் அறைக்குச் செல்ல, அவன் பார்வை மட்டும் அவளுக்குப் புதிதாய்! புதிராய்!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top