- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
13
மறுநாள் காலையிலேயே வந்தவன் வீட்டிற்குக் கிளம்புவதாகச் சொல்ல, காலை உணவளித்து அவர்களுக்கான உடைகள் கொடுத்து சில பலகாரங்களும் கொடுத்து வழியனுப்ப வாசல் வருகையில், “அரவிந்த் எப்ப வேலையில் ஜாய்ன் பண்ணுற? ஹெச்.சி.எல்ல தான வேலை கிடைச்சிருக்கு?” என கேட்டான்.
“ஆமா மச்சான்.”
“அப்ப இன்னும் இரண்டு வாரம் இருக்கு. உனக்குப் பிடிச்சிருந்தா அங்கே பாரு. இல்லைன்னா நம்ம கம்பெனியில் வந்து ஜாய்ன் பண்ணிரு.”
“இல்ல மச்சான் இதுவே ஓகேதான். கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சதும் வேணும்னா வர்றேன்.”
“குட். அம்மாவைப் பார்த்துக்கோ. நமக்கு அவங்கதான் எல்லாமே. நைட் ஷிப்ட் இருந்தா அங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து விட்டுரு.”
“ம்... சரிங்க மச்சான்” என்று தலையாட்டினான்.
“சரி பார்த்துக்கோங்க அத்தை. எது வேணும்னாலும் அர்விந்த் மாதிரி, அறிவுகிட்டேயும் கேட்கலாம். உங்க பொண்ணைப் பற்றிய பயம் எப்பவும் வேண்டாம். அவள் எங்க வீட்டு இளவரசி. நாங்க வர்றோம்” என்று காரில் ஏறி முன்பக்கக் கதவைத் திறந்து வைக்க, தாய் தம்பியை விட்டுச் செல்வதில் கண்கள் கலங்கி விடைபெற்று அவள் காரில் ஏற, வாகனம் மிதமான வேகத்திலே சென்றது.
“அப்புறம் மிஸஸ்.அறிவழகன்” என்று நிறுத்த, அவளோ என்னவெனப் பார்க்க, “இந்தக் காதலைப்பற்றி என்ன நினைக்குறீங்க?” என்றான்.
“வேஸ்டட் டாபிக்” என்றாள் பட்டென்று.
“அட என்ன இப்படிப் பட்டுன்னு சொல்லிட்டீங்க? எதை வைத்து வேஸ்ட்னு சொல்றீங்க?” என்றான்.
“இதைப்பற்றி விலாவரியா பேசுற அளவுக்கு நமக்குள்ள ஒண்ணுமில்லை. சரியா” என்று முகத்திலடித்தாற்போல் சொல்ல,
“நமக்குள்ள ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்ன்ற பந்தம் இருக்கே. அதனால் சொல்லலாம்” என்றான் விடாது.
“நீங்க சொல்லிதான் தெரியுது” என்றாள் உதடு சுளித்து.
“என்னை யாருன்னே தெரியலைன்னு சொல்லாம விட்டீங்களே. சொல்லுங்க மிஸஸ்.அறிவழகன் காதல்னா என்ன?”
“வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். ஏன் சார் நீங்க வேற. காதல்னு ஒண்ணு கிடையவே கிடையாது. ஆண் பெண் உடல் தேவையான காமத்துக்குப் பிள்ளையார் சுழி போட இந்த வார்த்தையைக் கண்டுபிடிச்சிருக்காங்க. காமம் கசந்தா அந்தக் காதலும் அடியாகும். அதுக்குப் போய் கதையிலிருந்து காவியங்கள் வரை பில்டப் கொடுத்துட்டு. உருப்படுற வழியைப் பாருங்க” என்றாள் சாலையைப் பார்த்தவாறு.
“அந்தக் காதல் உங்களுக்கும் வரலாமே” என்று ஆர்வமாக அவள் முகம் காண,
எதையோ எண்ணி மனம் கலங்கியவள், “ஆறு மாசத்துக்கு முன்ன வரை காதல், கல்யாணம், சந்தோஷமான வாழ்க்கைன்னு கற்பனையில் இருக்கிறதுதான் நிஜத்திலும் நடக்கும்னு நினைத்தேன். ஏன் எதிர்பார்த்தேன்னு சொல்லலாம். ஆனா, நிஜம் வேறங்க. அடிச்சி துவைத்துக் கற்றுக்கொடுத்தது காலம். அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கும்னு தெரியாமல் போயிருச்சி” என்று கண்ணீரை மறைக்க ஜன்னல் புறம் திரும்பினாள்.
“அது நியாயமான எதிர்பார்ப்புதானே. இதுல ஆண் பெண் பேதம் கூட கிடையாது.”
சட்டென திரும்பியவள், “ஓ... அப்ப உங்க எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யணும். எப்படின்னு சொல்லுங்க? ஐ லவ் யூன்னு கட்டிப்பிடிக்கணுமா? இல்லை முத்தம் கொடுக்கணுமா? அதுவும் பத்தலைன்னா மொத்தமா...”
“ஹோ... ஹேய்! ஹலோ! மிஸஸ்.அறிவழகன்! ஸ்டாப் ஸ்டாப். என்ன நீங்க? எமோஷனலைக் குறைங்க. அதெல்லாம் இயற்கையா வரும்” என்றான்.
“என்னது?” என்று அவளின் குரல் எகிற,
“அ...அது நீங்க இந்த டாபிக்கை விடுங்க. வேறெதாவது பேசலாம்” என்று இறங்கி வந்தான்.
“உங்களால பதில் சொல்ல முடியலைன்னுதான விடச் சொல்றீங்க. இதைத்தான்... இதனால்தான் ஆரம்பத்துலயே சொன்னேன். காதல் கண்றாவின்னு...” எதையோ யோசித்தவள், “ஆமா உங்களுக்கென்ன சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர்னு நினைப்பா? என் தம்பிக்கு வேலை போட்டுத் தர்றேன்னு சொல்றீங்க? அதுவும் எப்ப வேணுமானாலும் வரலாமா?”
“அந்தக் கம்பெனி ஓனரே நான்தான்மா” எனறு கிண்டலாக உண்மையைச் சொன்னான்.
“ஆமாமா. நம்பிட்டோம் நம்பிட்டோம்” என்றாள் அவன் சொன்னது உண்மை என்றறியாது.
“ஐயாவோட பவர் தெரியாமல் பேசுற. அதையும் ஒருநாள் தெரிஞ்சிப்ப” என்றான் சட்டைக் காலர் தூக்கி.
சட்டென்று அவள் படித்த எய்ட்டீன் ப்ளஸ் கதைகளில் வருவதைப் போல் அவ்வார்த்தை உருவம் கொடுக்க, “என்ன டபுள் மீனிங்கா? அதுக்கெல்லாம் வேற இடம் பாருங்க” என்றாள்.
“என்னது டபுள் மீனிங்கா? மேடம் நான் சிங்கிள் மீனிங்லதான் சொன்னேன். இப்படி ஒவ்வொண்ணுக்கும் நீங்க அர்த்தம் தேடுனா வாழ்க்கையே போர்க்களமாகிரும். இறங்குங்க வீடு வந்திருச்சி” என்று காரை நுழைவாயில் தாண்டி நிறுத்தினான். அங்கிருந்து தலைவாயில் நோக்கி நடந்தவளுக்கு வித்தியாசமான கீச்கீச் சந்தங்கள்.
சட்டென்று பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவள் அப்படியே அதிசயித்து நின்றாள்.
“வாவ்! லவ் பேர்ட்ஸ், கிளி. ப்பா... என்னவொரு இனிமையான சத்தம். வந்த அன்னைக்கு இருந்த மாதிரி தெரியலையே. இருந்திருக்குமோ, நான்தான் கவனிக்கலையோ” என்று சுற்றிலும் பார்த்த பொழுதுதான் வீட்டின் அமைப்பே தெரிந்தது. மூன்று கிரௌண்ட் இடத்தில், ஒரு கிரௌண்டில் நல்ல அமைப்போடு அழகான வீடு. மூன்றாவது தளத்தில் ஒரு அறை மட்டுமே இருக்க, தண்ணீர்த் தொட்டியும் இருந்தது. பழ மரங்கள் ஒரு புறமென்றால், மறுபக்கத்தில் பாதையோரம் வரிசையாக அழகுச் செடிகள் வளர்க்கப்பட்டு, அதன்பின் பூக்கள், காய்கறிகள் தனித்தனிப் பகுதியாக கண்ணுக்குக் குளிர்ச்சியாய் நிற்க, இவையே அனுரதியை மயக்கப் போதுமானதாக இருந்தது.
“என்ன மருமகளே! உள்ள வராம அப்படியே லயிச்சிப்போயி நிற்கிற?” என்றபடி வந்தார் அபிராமி.
“அத்தை அன்னைக்கும் இந்த பறவைகள் எல்லாம் இருந்ததா? நான் பார்க்கவேயில்லை” என்றவளுக்குத் தெரியும் செடிகள் ஒரே நாளில் இவ்வளவு பராமரிப்புடன் அழகாக வளர்க்க முடியாதென்று.
“இன்னைக்குக் காலையில்தான் வந்தாங்க. இந்த செட் நேற்று ரெடி செய்தோம்” என்றார்.
“எனக்குப் பிடிக்கும்னா?”
“ஆமாம்” என்றார் புன்னகையுடன்.
“எனக்குப் பிடிக்கும்னு யார் சொன்னது?”
“வேற யாராயிருக்கும் உன் தம்பிதான். உனக்கு ஒண்ணு பிடிக்கும்னு சொல்லியிருக்க, அப்படியே விடமுடியுமா சொல்லு? அதான் உடனே வரவழைச்சாச்சி.”
“ஓ... ஆனா, ஏன்?” எனக்கென்ன இவ்வளவு மதிப்பென்ற அர்த்தத்தில் கேட்டாள்.
அதைப் புரிந்தவரோ, “எங்க வீட்டு இளவரசிக்காக மட்டும்” என்றார் புன்னகை மாறாது. ‘அவள் எங்க வீட்டு இளவரசி!’ கணவனின் வார்த்தைகள் திடீரெனத் தோன்ற அதை உதறி, “அப்படி என்ன செய்துட்டேனாம்” என்றவளுக்கு சந்தோஷத்தில் கண்கலங்க, மாமியார் அறியுமுன் மறைத்துவிட்டாள்.
“எதுவும் செய்தால்தானா? அப்படிப் பார்த்தா, ஒவ்வொரு தாயும் பிள்ளை வளர்க்கிறாங்க. உனக்குப் பிடிச்சிருக்குல்ல. இங்க அதுதான் முக்கியம்” என்றார்.
“தேங்க்ஸ்” என்றாள் மனதார. அபிராமியின் இந்த முரட்டுப் பாசம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் திருமணத்திற்கு முன் தன்னிடம் பேசியதென்ன, தாலி ஏறிய பின் அவர் தன்னிடம் காட்டும் அக்கறையும், அன்பும் அனுபவிக்கவே மெய்சிலிர்த்தது. ஏதோவொரு பந்தம் அவருடன் அவளை வாயாடவும் வைத்தது.
“தேங்க்ஸோட அத்தையைச் சேர்த்துக்கிட்டா இன்னும் நல்லாயிருக்கும்” என்றார்.
“தேங்க்ஸ் அத்தை” என்றதும் அவளைத் தோளோடு அணைத்து, “அடுத்த விருந்தாளியைப் பார்க்க வேண்டாமா?”
“இன்னுமா? யாரது?” அவளறியா ஆர்வம் அவளிடம்.
தலைவாயிலின் ஒருபக்கம் பத்தடி நீளத்தில் மூன்றடி அகலத்தில் உள்ள கண்ணாடித் தொட்டி இருக்க, அதற்குள் மலையிலிருந்து அருவிபோல் நீர் கொட்ட, அருகில் சிறியதாய் அழகான வீடும், குட்டிக் குட்டி மரங்களும், புல் தரைகளும் அவர்களுடன் அழகாக ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர் மீனினங்கள்! மீன்களில் இத்தனை வகைகளா என்று அதிசயிக்கும் வண்ணம் இருந்தது, விதவிதமான வித்தியாசமான மீன்கள்.
இத்தனை மீன்களையும் ஒருமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்த்தது. பார்த்த நிமிடம் அத்தனையும் அள்ளிக்கொள்ளத் தோன்ற, அப்பொழுது வந்த ஆசைதான் மீன்கள் மீது. வீட்டில் வளர்க்க சாரதா விடவில்லை. ஒன்று இறந்தாலும் மனதிற்கு வருத்தமாக இருக்குமென்று மறுத்துவிட்டார். இன்றோ... ஏனோ தனக்காகப் பார்த்துப்பார்த்துச் செய்யும் மாமியாரை மிகவும் பிடித்தது.