• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சீமக்கரை-கதிர் வீடு

வெற்றிவேல், திலகா, சிந்து, மற்றும் நவீன் நால்வரும்,கதிர்- தாமரை கல்யாணத்திற்கு வந்து விடுவதாக சொல்லிக்கொண்டு, அசாமை நோக்கிச்சென்றனர்.


இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. ராதாவும்,சீதாவும் வேதாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர்.

தாமரை தனது வீட்டிற்கு வந்தாலும், முன்பு போல யாரிடமும் இயல்பாக பேசவில்லை.

பூனாவில் அவள் விட்டு வந்த பொருட்களையெல்லாம், மாறனும் அனுப்பி வைத்தான்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூரணி மற்றும் விஸ்வத்தோடு ஃபோனில் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டாள்.

இதோடு வேதா,வள்ளி அப்பாயி வீட்டிற்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.

வேதாவிடமும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தனது வேலையை தானே செய்து கொள்ளும் அளவிற்கு தேறியிருந்தார்.

அம்மாடி சீதா கதிரோட ஜாதக நோட்டை எடுத்துட்டு வாம்மா என்றார் பிரகாசம் தாத்தா.

சரிங்க மாமா என்றபடியே பீரோவிலிருந்த நோட்டை எடுத்து வந்து மாமனாரிடம் கொடுக்க, நானும் வள்ளியும், மச்சானையும் தங்கச்சியையும் கூப்பிட்டு கிட்டு நம்ப பழனி ஜோசியரை போய் பார்த்திட்டு வரோமென்றவர்,வளவா காரை எடு என்றவாறே வெளியே சென்றார்.

வேதாவும் வீட்டிற்கு வந்த பின்னர், அவசரத்திற்கு தங்களுக்கு கார் தேவை என்பது புரிந்து,டிராவல்ஸ் ஓனர் மூலயமாய், ஒன்பது பேர் பயணம் செய்யும் கியா கார்னிவல் காரை வாங்கினர்.

இந்த சோப்புட்டி காருக்கு இவ்வளவு பணமாயென்று,வள்ளி அப்பாயி தான் அடித்துக்கொண்டார் .

தாமரை வீட்டிற்கு வந்தவர்கள் விஷயத்தை சொல்ல,அன்பு, கவிதா இருவரும் அவர்களோடு கிளம்பினர்.

பின்னர் ஐவரும் தேனூரிலிருக்கும் பழனி ஜோதிடரிடம் செல்ல, இவர்களுக்கு முன்னதாக இரண்டு பேர் காத்திருந்தனர்.

ஒரு மணி நேரம் சென்ற பின்னர் இவர்கள் உள்ளே செல்ல, வாங்கோ வாங்கோ வணக்கமென்றார்.

பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு,ஜாதகத்தை கொடுக்க,இருவரின் ஜாதகத்தையும் கட்டம் போட்டு கணித்து முடிக்கவும்,மேலும் அரைமணி நேரம் சென்று,இருவருக்கும் இப்போ இரண்டாவது முறையா தான் கல்யாணம் நடக்கும் சரியா என்றார்.

இல்லைங்களேனு வளவன் சொல்ல, வாய்பில்லை தம்பி, ரெண்டு பேருக்கும் ஏற்கெனவே கல்யாணம் முடிஞ்சிருக்குனு கட்டம் சொல்லுதுப்பா.

சிலருக்கு மட்டும் தான் இன்னாருக்கு இன்னார்னு மேலோகத்திலே எழுதி, பூலோகத்திற்கு இறைவன் அனுப்பி வைப்பான்.

இந்த பொண்ணுக்கு எத்தனை இடத்தில் பேசி முடித்திருந்தாலும், கடைசி நேரத்தில் இந்த பையனுக்கு தான் பொண்டாட்டியா ஆகும்னு பாக்கியம் இருக்கு.

பத்தில் ஒன்பது பொருத்தம் நல்லா பொருந்தியிருக்கு. எலியும் பூனையுமாக இருந்தாலும், ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிந்து போக வாய்ப்பில்லை.

தாராளமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றவரிடம், கையோடு முகூர்த்த தேதியும் பார்த்து சொல்லிடுங்க என்றார் வள்ளி அப்பாயி.

அதற்கென்னங்கம்மா பார்த்துட்டால் போகுது என்றவர்,பஞ்சாங்கத்தில் சுபமுகூர்த்தத்தை பார்த்துக்கொண்டே வந்தவர், அடுத்த மாதத்தில் முதல் வாரத்திலே ரெண்டு முகூர்த்தம் வருது.

இவங்களுக்கு முதல் முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வைத்தால், ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா இருப்பாங்க.நம்பி தாராளமா காரியத்தில் இறங்குங்கயென்றார் பழனி ஜோதிடர்.

பின்னர் ஜாதகம் பார்த்தற்கான பணத்தை அன்புவே கொடுத்தார்.

சரிங்க, நாங்க போய்ட்டு வரோமென்று அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவர்கள், காரில் ஏறி வீட்டிற்கு வந்தனர்.கவிதாவும், அன்புவும் தங்கள் வீடு இருக்கும் தெரு முனையிலே இறங்கிக்கொண்டனர்.

அவரவர் வீட்டிற்கு சென்று ஜோதிடர் சொன்னதை சொல்ல, கேட்டவர்களுக்கு திருப்தியாக இருந்தது.

அவ்வளவா நாள் நமக்கு இல்லை, அதனால் ஆளுக்கொரு வேலையாக பிரித்துக்கொள்ளலாமென்று செல்வம் சொல்ல, மச்சான் சொல்றது சரியென்றார் பெருமாள்.

மருமகளுங்களை பார்த்த பிரகாசம் தாத்தா,அம்மாடி நல்லநாளை பார்த்து திருபுவனத்தில் போய் முகூர்த்த புடவைய எடுத்துட்டு வந்துருங்க.

வேலுவும், வளவனும் பத்திரிக்கை வேலைய பாருங்க, பெருமாளு நீயும் செல்வமும் பந்தல், சமையல்காரர் ஏற்பாடு பண்ணிடுங்க, முத்துவும், கதிரும் சொந்த பந்தங்களுக்கு ஜவுளி எடுக்குற வேலையை பாருங்களென்று பிரித்து விட்டார் பிரகாசம் தாத்தா.

தாமரை வீட்டிலும் கல்யாணத்திற்கு தேவையானதை பட்டியல் போட்டனர்.

கவிதா, இப்போதைக்கு தாமரைக்கு எத்தனை பவுன் இருக்கென்று அன்பு கேட்க,அவரும் சொன்னார்.

சரி என்றவர், முதல்ல மாப்பிள்ளைக்கு போடுவதற்கான நகையையும், மரப்பொருளையும் வாங்கிடலாமென்க,அப்பா நானும் தாத்தாவும் ஆசாரி கிட்ட போறோம், நீயும் அம்மாவும், நகை வாங்குறதை பாருங்களென்று சிவா சொல்ல, அதுவும் சரிப்பா என்றார்.

அதைப்போல இரண்டு வீட்டிலும் கல்யாணவேலை ஜோராக நடந்து கொண்டிருந்தது.

அசாமிற்கு ஃபோன் பண்ணிய கதிர் வீட்டினர் கல்யாண தேதியை முன்னதாகவே சொல்லி விட்டனர்.

மாமா இன்றைக்கு கல்யாண புடவை வாங்க போகிறோமென்று பிரகாசம் தாத்தாவிடம் சீதா சொல்ல, சரிம்மா என்றார்.

புடவை எடுக்கப்போக வேண்டியதை பற்றி, முதல் நாளே ராதா-முத்து தம்பதியினர், நேரில் போய் தாமரை வீட்டினரிடம் சொல்லிட்டு வந்தனர்.

காலையிலே கதிர் வீட்டின் முன்னால் வந்து வேன் நின்று விட, பங்காளி வீட்டில் சிலரையும், தாமரை பெற்றோர்கள் மற்றும், வேதா, வள்ளி அப்பாயி, பிரகாசம் தவிர மற்றவர்களெல்லாரும் அதில் ஏறி திருபுவனத்திற்கு சென்றனர்.

கடைக்கு முன்பு போய் இறக்கி விட்ட வேன் டிரைவர், முடிந்ததும் கால் பண்ணுங்களென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.

திருபுவனத்திலே நான்கு தலைமுறைக்கு மேலாக கடை வைத்திருக்கும் மங்கை சில்க்ஸ் கடைக்குள் நுழைய,அங்கிருந்தவர்கள் அவர்களை வாங்க வாங்களென்று வரவேற்று, என்ன பார்க்கனும் என்று கேட்க, கல்யாணப்புடவை என்றனர்.

முதல் தளத்தில் இருக்கு, லிப்டில் போங்களென்று சொல்ல, இருக்கட்டுமென்று படியில் ஏறி வர, அங்கிருந்தவர்கள் வாங்கம்மா, வாங்க சார் என்றனர்.

சொல்லுங்க என்ன விலையில் பாக்குறீங்க என்று சேல்ஸ்மேன் கேட்க,விலை பிரச்சினை இல்லை நீங்க எடுத்து போடுங்க என்றார் செல்வம்.

சொன்னதே போதுமென்று சேல்ஸ்மேனும் அடுக்கில் இருந்த விலை உயர்ந்த புடவைகளையெல்லாம் எடுத்து போட்டார்.

எம்மா பார்த்து நல்லதா என் தம்பி பொண்டாட்டிக்கு எடுங்க என்று பூசாரி சொல்ல,அதுக்கு என்ன மாப்பிள்ளை அரைணான் கயிறு வரை உருவி வித்துட்டே வாங்கிடுறோமென்று செல்வம் சொல்ல,மாமா தெரியாம சொல்லிட்டேனென்று சொல்லி பூசாரி சிரித்தார்.

பெண்கள் கூட்டத்தினரோ,இருக்கும் புடவைகளை புரட்டி தேர்ந்தெடுத்து முடிக்கவே மற்றவர்கள் நொந்து போகினர்.

ஒரு வழியாக சிகப்பு கலர் புடவையில் தங்க கலர் ஜரிகையும், அதே கலரில் சிறு சிறு ரோஜாக்கள் போட்ட பட்டுப்புடவையை கல்யாண புடவையாகவும், வைலட்டும், நீலமும் கலந்த பட்டுப்புடவை பொண்ணழைக்கவும், மயில் கலரில் பரிசம் போடுவதற்காகவும், என்று கணக்கு பண்ணி,மூன்று பட்டுப்புடவையை தாமரைக்காக தனியாக எடுத்து வைத்தனர்.

மற்றவர்களுக்கான ஜவுளியை மதிய உணவை முடித்து வந்து எடுத்து, பில் போட்டு வாங்கிக்கொண்டு வெளியே வரும் போது இரவானது.

இரவு உணவையும் வரும் வழியில் உள்ள ஹோட்டலிலே சாப்பிட்டு கிளம்பியவர்கள், நள்ளிரவில் ஊருக்குள் வந்து சேர்ந்தனர்.

கல்யாண பிளவுசை நானே தைத்துக்கொள்கிறேனென்று தாமரை சொல்லி விட,மறுநாள் மூன்று புடவைக்கான பிளவுஸ் துணிகளை எடுத்து வந்து சீதாவும் கொடுத்துச்சென்றார்.

கதிரும் எப்படியாவது தாமரையை பார்த்து விட முயற்சி செய்ய,பாவம் அதுக்கு வழியில்லாமல் போனது.

எனக்குனு ஒரு உருப்படாத மச்சான் கிடைச்சிருக்கான்.அவன் தங்கச்சி ஃபோன் நம்பரையாவது எனக்கு கொடுத்தானா பாரென்று வேலுவையும் திட்ட மறக்கவில்லை.

நாட்களும் ரொம்ப நெருங்கி வந்து விட்டது. தூரத்து சொந்தங்களுக்கு இரண்டு வீட்டினரும் பத்திரிக்கை வைத்து முடித்தனர்.

இடைப்பட்ட நாளில் இரண்டு முறை வேதாவே, இங்கு வந்து தனது வீட்டினரை பார்த்துச்சென்றார்.

ஏழாம் நாள் பந்தகால் ஊன்ற போவதாக ஊரில் உள்ளவர்களிடம் காலையிலே பெருமாள் தம்பதியினர் போய் சொல்லி விட்டு வந்தனர்.

பந்தகால் நடவும், முதலாம் நாள் கதிருக்கு நலுங்கு வைக்க தேவையானதை எடுத்து வைக்கும் போதே,அசாமிலிருந்து வந்து சேர்ந்தனர்.

ஊர்காரர்களும் வந்து சேரும் போது, கதிருக்கு தாய்மாமனின் இடத்திலிருந்து சீர்வகைகளோடு அன்புவும் கவிதாவும் அங்கு வந்து சேர, அவர்களை பார்த்து சீதாவிற்கு அழுகை வந்தது.

என்றைக்கு இருந்தாலும் உம் புள்ளைங்களுக்கு நான் தான் தாய்மாமனென்றார் அன்பு.

பின்னர் நல்லபடியாக பந்த கால் ஊன்றியதும் மணையில் கதிரை உட்கார வைத்து, அன்புவும், கவிதாவும் சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, தலையில் மூன்று முறை எண்ணெய், ஷாம்பு தொட்டு வைத்து, அங்கிருந்த மஞ்சள் கலந்த அரிசியால் ஆசீர்வாதம் செய்தவர்கள், கொண்டு வந்த சீர் தட்டை அவனிடம் கொடுத்தனர்.

மற்றவர்களும் நலுங்கு வைத்து முடித்ததும், குளித்து முடித்தவன், அன்பு எடுத்து வந்த டிரஸை போட்டு வர, சாமியிடம் வேண்டி விட்டு அவன் கழுத்தில் மாலை போட்டவர், இது தாய்மாமன் சீரென்று அவன் கையில் தங்க காப்பை போட்டு விட, சாமிக்கு ஆரத்தி காட்டி முடித்ததும், வந்திருந்தவர்களுக்கு வயிறார உணவை பரிமாறினர்.

தங்கள் வீட்டில் ஐந்தாம் நாள் பந்தல் கால் ஊன்றுவதாகவும், எல்லாரும் வரனுமென்று சொல்லிக்கொண்டு அன்புவும், கவிதாவும் வீட்டிற்கு சென்றனர்.

சொன்னப்போலவே ஐந்தாம் நாள் பந்தல்கால் நடுவதற்கு தாய்மாமனுங்கள் சீரென்று வெற்றிவேல், லாரன்ஸ், பெருமாள், முத்து நால்வரும் பெரும் சீர்வரிசையோடு, மேளதாளம் வாசிப்போடு தங்கை வீட்டிற்கு வர,அன்பு- கவிதா, மற்றும் செல்வம்- பார்வதி தம்பதியினர் வந்தவர்களை வரவேற்தனர்.

ஊர்மக்களோ அங்கிருந்த சீரை பார்த்து வாயை பிளந்தனர்.

நல்ல நேரத்தில் அவரவர் மனைவியின் சகிதமாய்,தாமரைக்கு நலுங்கை வைத்து முடிக்க, நால்வரும் சேர்ந்து வாங்கிய புடவை, நகையில் தங்க தேர் போல் ஜொலித்தவளுக்கு மாமனுங்கள் நால்வரும் சேர்ந்து மாலை போட்டு ஆசீர்வதித்தனர்.

இரண்டு வீட்டிலும் நல்ல முறையில் நலுங்கு முடிந்தது.

பொண்ணழைக்க, லாரன்ஸ் தம்பதியினர் ஊர்காரர்களோடு வந்தனர்.

பிறகு பெரியோர்கள் முன்னிலையில் பரிசம் போட்டு, ஆசீர்வாதம் பண்ணி மகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர் அன்பு தம்பதியினர்.

மேளதாளம், பேண்டு வாத்தியம், பட்டாசு சத்தத்தோடு கதிர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

ராதா, சீதா, வேதா மூவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து போய், பூஜையறையில் விளக்கேற்றச்சொல்லி, பாலும் பழமும் குடிக்க கொடுத்தனர்.

காலையிலே முகூர்த்தம் என்பதால், வேதாவின் அறைக்கு தாமரையை அனுப்பி வைத்தனர்.

காலை கதிரவன் உதயமாகுவதற்கு முன்பே,வீடு பரபரப்பானது.

அம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கும் பொதுவான இடத்தில்,கல்யாண பந்தல் போட்டிருந்தனர்.

திறந்த வெளியாய் இருந்த இடம், இப்பொழுது வண்ண மலர்கள் தோரணத்தில், அவ்வளவு அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

போதாததற்கு அமைச்சர் வந்திருப்பதால், எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாதென்று, போலீஸ் பாதுகாப்பும் போட்டிருந்தனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
தாமரையை எழுப்பி குளிக்க வைத்து, அவள் தலைமுடியின் ஈரம் போக நன்கு துவட்டி விட்டு,அல்லியும் குளித்து வர, பார்லரிலிருந்து பியூட்டிஷியனும் வந்து விட்டார்.

தாமரைக்கு நீட்டு முடி என்பதால், அதையே அழகாய் பின்னி முடித்து, புடவையை கட்டி விட்டு, மேக்கப்பை முடிக்கவும், ரெடியாகியாச்சா என்றபடியே அங்கு வந்த திலகா,தாமரையை பார்த்து அழகா இருக்கடானு நெட்டி முறித்தவர், போகலாம்மா என்றார்.

கல்யாணத்திற்கு வருபவர்களை வரவேற்பதற்காக,ராதா,வேதா, மற்றும் முத்து மூவரும் வாசலில் நிற்கும் போது, அங்கு வந்து நின்ற காரிலிருந்து, இறங்கி வந்த வினிதாவை பார்த்து வேதா அதிர்ந்து போனார்.

வேதா என்றபடியே அவர் அருகில் வந்த வினிதா, வேதாவை தோளோடு அணைக்க, அந்த ஸ்பரிசத்தில் நிகழ்வுக்கு வந்தவர் வினி என்று, தனது தோழியை வேதாவும் கட்டிக் கொண்டார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்ததால்,இருவர் கண்ணிலும் நீர் கசிந்தது.உள்ள வாயென்று அழைத்துப் போய் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

தாமரையை பற்றி சொல்லி விட்டு ,வேதாவிடம் மன்னிப்பு கேட்டார்.
எனக்கு தெரியும் வினி. எனக்கு அடுத்ததாக உதவியை உன்கிட்ட தான் கேட்பாளென்ற நம்பிக்கையோடு தான் இருந்தேன்.நான் அதை பற்றி எதுவும் நினைக்க வில்லை. இனி நடக்கிறது பற்றி பார்க்கலாம்.

தாமரை இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாள், வா மேடை கிட்ட போகலாமென்று வேதா கூப்பிட, ஏஞ்சலுக்கு இது சர்ப்ரைஸா இருக்கட்டும்.

நீ போய் மற்றவர்களை கவனி என்க,சரி நீ இங்கையே இருனு சொல்லிவிட்டு, வேதாவும் அங்கிருந்து வாசலுக்கு சென்றார்.

திலாகாவும், வெற்றிவேலும் தம்பதியினராய் சேர்ந்து, தாமரையை அழைத்துக்கொண்டு கல்யாண பந்தலுக்கு வந்து சேர்ந்தனர்.

மேடையில் பட்டு வேட்டி சட்டையில்,முறுக்கு மீசையும், கையில் தங்க காப்பும், நெற்றியில் விபூதி குங்குமத்தோடு,ஆண்மை ததும்ப,கட்டிளங்காளையாய் அய்யர் சொல்லுவதை கர்மசிரத்தையாக செய்து கொண்டிருந்தான் கதிர்.

பின்னர் இருவரின் பெற்றோருக்கு பாத பூஜையை செய்ய வைத்து விட்டு, இருவரையும் மேடையில் உட்காரச்சொல்லிய அய்யர், தாலி இருக்கும் தாம்பாளத்தை எடுத்து ராதாவிடம் கொடுத்து, ஆசீர்வாதம் வாங்கி வரச்சொன்னார்.

சிறிது நிமிடத்தில் எல்லாரிடமும் காட்டி விட்டு அய்யரிடம் கொண்டு வந்து கொடுக்க, பெரியவாள் தாலி எடுத்து கொடுங்க என்க, அனைவரும் சாமியை வேண்டிக்கொண்டு தாலியை எடுத்து கதிரிடம் கொடுக்க,அதை வாங்கியவன், தாமரையின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டான்.

மெட்டிய போட்டு விடுங்கோனு அய்யர் சொல்ல,அம்மியின் மேலே கால் வைக்கப்போனவளின் பாதத்தை தன் கையில் கதிர் தாங்க,பேலன்ஸ் பண்ண முடியாமல் தடுமாறி, கீழே குனிந்திருப்பவனின் தோள் பட்டையில் இறுக்கி பிடித்தாள்.

மனைவியின் தீண்டலில் நிமிர்ந்து பார்த்தவன், தனது இடது பக்க மீசையை நீவி விட்டு, தாய் கொடுத்த மெட்டியை அவளின் இரண்டு கால்களில் போட்டு விட்டதும், அவன் கையிலிருந்து கால் எடுக்க போக,தாமரையால் முடியவில்லை.

இடது கையின் பாதத்தில் இறுக்கமாய் அவள் கால் பற்றிக்கொண்டே, தனது சட்டை பாக்கெட்டில் இருந்த, வெள்ளி கொலுசை எடுத்து, அவள் காலில் இருந்ததை கழட்டி விட்டு, தான் வாங்கியதை போட்டு விட, அடேய் மாப்பு நடத்துடா நடத்தென்றான் வேலு.

பின்னர் வழக்கமான சடங்குகள் முடித்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்க சொல்ல, இருவரும் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தனர்.

அய்யா மாப்பிள்ளை வீட்டாளுங்களே, நீங்கள் ஒரு ஊரே இருக்கீங்க, ஒவ்வொருத்தர் காலில் தனித்தனியா விழுந்தால், என் தங்கச்சிக்கு இடுப்பு எலும்பு இருக்காது.

அதனால் எல்லாரும் ஒன்றாக நில்லுங்க,என் மச்சானும் தங்கச்சியும் காலில் விழ,மொத்தமாக ஆசீர்வாதம் பண்ணுங்களென்றான் வேலு.

வேலு சொல்லியது சரியென்று பட எல்லாரும் யு வடிவத்தில் நிற்க, காலில் விழ வரும் போது,அங்கிருந்தவர்களை பார்த்து கண்கள் விரிய, தாமரை அதிர்ந்து நின்றாள்.

அதிர்ந்தவளின் எதிரில் சில அடிகள் தொலைவில்,முதலாவது வி. வி என்ற வினிதா வில்லியம்ஸ்( விஸ்வம்), அடுத்தது மருதுவின் அப்பா, அம்மா, அடுத்தது மாறன், விஸ்வம், மற்றும் பூரணி இருந்தனர்.

எப்படி என்னோட சர்ப்ரைஸென்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கதிர் கேட்க, அவன் பக்கம் திரும்பியவள், தேங்க்ஸ் என்றாள்.

பின்னர் இருவரும் கீழே மண்டியிட்டு வணங்க, அனைவரும் சேர்ந்தே ஆசீர்வதித்தனர்.

யாரிடம் முதலில் நலம் விசாரிக்க செல்வதென்று, தாமரைக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளின் குழப்பமான முகத்தை பார்த்த மூக்கையன், அம்மாடி தாமரை வினிதாவை பாரு போ என்றார்.

மாறனும் தனது தாய் தந்தையரோடு தாமரையின் கல்யாணத்திற்கு வந்திருந்தான். தாமரை மேலே சின்ன சாப்ட்கார்னர் இருந்தது தான்.

ஆனால் எப்பொழுது அவள் வேறொருத்தனுக்கு சொந்தமானவளென்று தெரிந்ததோ, தனது எண்ணவோட்டம் அவள் மேல் அலை பாய்வதை நிறுத்திக்கொண்டான்.

வினிதாவிடம் சென்ற தாமரை ஆன்ட்டி என்று அவரை கட்டிக்கொண்டவளுக்கு கண்கள் கலங்கியது.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு பார்க்கும் தனது ஏஞ்சலை உச்சியில் முத்தமிட்டவர், அழும் தன் செல்ல பிள்ளையின் முதுகில் தட்டிக்கொடுத்தவர், என்னை கட்டி பிடிச்சிருக்கியே ,கதிருக்கு பொறாமையாக போகுதுடினு சிரித்தார்.

பின்னர் தன்னிடமிருந்து விலக்கியவர், இன்று என் ஏஞ்சல் சந்தோஷமா இருக்க வேண்டிய நாள் என்றபடியே அவள் கண்களை துடைத்தவர், என்னடி அசடு, மாமி சொல்றோனோல்லியோ என்க, அதைக்கேட்டு சிரித்து விட்டாள்.

ம்ம் இது தான் அழகு என்றவர், போய் மற்றவர்களை பாருடா என்க, ம்ம் என்றவாறு மூக்கையன் தம்பதியிடம் வந்தவள், எப்படி இருக்கீங்க?.

மிலன், மருது வரலையா?.

தங்கள் மலையம்மனிடம் வேண்டி எடுத்து வந்த குங்குமத்தை பூசி விட்டு, சுருக்கமாக நடந்த விஷயத்தையும், மருது சவுதிக்கு போய் விட்டதையும் சொல்லி கண் கலங்கினர்.

கேட்டவளுக்கு பவியின் குணம் தெரிந்து பேரதிர்சியாக இருந்தது. பவியா இப்படி? என்க, ம்ம் என்றவர்கள் அதை விடுமா,நீ தம்பி கிட்ட போ என்று அனுப்பி வைத்தனர்.

பின்னர் விஸ்வம் தம்பதியரிடம் வந்தவள், பூரணியை கட்டிக்கொண்டாள்.

தீர்க்க சுமங்கலியா இருமா என்ற இருவரும், அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணினர்.

சார் என்று மாறனை பார்க்க, கங்கிராட்ஸ் மிசஸ் கதிர் என்றான். தேங்க்யூ சார் என்றவள், வீட்டில் உள்ளவர்களுக்கு சதாராவில் இருக்கும் போது,மூவரும் தன்னை எப்படியெல்லாம் கேர் பண்ணினார்களென்று பெருமையாக சொன்னாள்.

பின்னர் சொந்த பந்தங்கள் மணமக்களுக்கு சீர் செய்ய வேண்டும் என்பற்காக,தம்பதிகள் இருவரையும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

நெற்றி முழுவதும் நாத்தனார், மாமியார் முறை உள்ளவர்கள் கட்டிய காசி, மாங்காய், வாழைசீப்பு, குண்டு, நாணல் போன்ற தாலி உருக்கள் கொத்தாய் தொங்கி கொண்டிருக்க,அழகு தேவதையாய் ஜொலிப்பவளை, ஓரக்கண்ணால் கதிர் ரசித்து பார்த்தான்.

அப்பொழுது மச்சான் முறை செய்வதற்காக, நவீன், வேலு, சிவா மூவரும் மேலே வந்தனர்.

தம்பி கதிரு, மலைக்கு போனாலும் மச்சான் உதவி வேணும்டா, அதனால் சூதானம் சூதானமென்றார் பூசாரி.

சரிணானு கதிர் சிரித்தான்.

சில பல கலாட்டாக்களோடு மூவரும் கழுத்து, கை, விரல்கள் மூன்றிலும் கதிருக்கு தங்க நகைகளை போட்டு விட, பங்காளி பளபளனு இருக்கடா என்றான் ஜான்.

உள்ளே வரும் போது வினிதாவை பார்த்து அதிர்ந்த விஸ்வம், அதன் பிறகு அவர் பார்வை,அவரை தவிர எங்கும் போகவில்லை.

மண்டப ஹாலிற்கு வரும் போதே வினிதாவும் பார்த்து விட்டார். உள்ளுக்குள் ஒரு சிறு வலி வந்ததை இல்லை என்று அவரால் மறுக்க முடியாது.

ஆனால் தனக்குள் வந்த வலியை வழக்கம் போல மறைத்தவர், விஸ்வமென்ற ஒருவரை தெரியாதது போலவேயிருந்தார்.

விஸ்வத்தின் பார்வை தன் மேல் இருப்பது தெரிந்தும், வினிதா அதை கண்டு கொள்ளவில்லை.

கணவரோடு உட்கார்ந்திருந்த பூரணி, எழுந்து போய் வினிதாவின் அருகில் உட்கார்ந்து, அவரின் கையை பிடிக்க, அந்த பிடி வினிதாவிற்கும் அந்த நேரத்தில் தேவைப்பட்டது.

இருவரும் விஸ்வத்தை பற்றி பேசிக்கொள்ளவில்லை. ஆனால் தங்களை பற்றி பொதுவாய் பேசிக்கொண்டனர்.

லீனா எப்படி இருக்காள்?, அவளுக்கு நீங்க தானென்று தெரியுமா?,ம்கூம்..வி. வி. என்பது மட்டும் தெரியும்.

எந்த ஒளிவும், தோரணையுமில்லாமல் பேசிக்கொண்ட இருவருக்குள்ளும் புதிதாய் ஒரு உறவு அங்கே உருவாகியது.

அபொழுது கணவர் பக்கம் திரும்பியவர்,மாறா என்று கூப்பிட,இதோமானு அங்கே வந்தவனிடம், அம்மா என்று அறிமுகப்படுத்தினார்.

நமஸ்காரம்மா என்றவன் வினிதாவின் கால் தொட, நல்லா இருப்பா என்றார்.

பின்னர் அவன் தொழிலை பற்றி கேட்டவருக்கு, மாறனும் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அவனுக்கு ஃபோன் கால் வர, அவரிடம் சொல்லிக்கொண்டு சென்றான்.

தேங்க்ஸ் பூரணினு அவர் கையை பிடிக்க, நிச்சயமா நீங்க வி. வி. என்பதையும், அவருக்கும் உங்களுக்கான உறவை பற்றி நான் சொல்ல மாட்டேனென்றார்.

ஒரு பக்கம் ,நிகிலேஷோ வேதாவையும், லாரன்ஸ் ஹெல்த் பற்றி செக் பண்ணிக்கொண்டிருக்க,அதை பார்த்து,இந்த வெள்ளை பன்னி இம்சை தாங்க முடியலைடா என்றான் வர்ஷன்.

அடேய் ஏண்டா இப்படினு மித்ரன் சிரித்தான்.

லாரன்ஸிற்கும் மூன்று வாரங்களுக்கு முன்பு, நிகிலேஷ் தான் பை-பாஸ் சர்ஜரி பண்ணினான்.இருவரிடமும் மேலும் சில விஷயங்களை டாக்டராக சொல்லியவன், மற்றவர்களோடு வந்து இணைந்து கொண்டான்.

வீட்ல மிது, மீர், பாட்டி எப்படி இருக்காங்கனு வர்ஷனும், மித்ரனும் நிகிலேஷிடம் கேட்க, பொண்ணாடா பெத்து வச்சிருக்கீங்க?.சர்ஜரி பண்ணும் போது கூட என் கை நடுங்கவில்லைடா.ஆனால் வீட்டுக்குள் போகனும் என்றாலே உசுரு பயம் தான்.

உண்மையிலே உன் தங்கச்சி டாக்டருக்கு தான் படித்தாளானு மித்ரனிடம் நிகிலேஷ் கேட்க, அதைக்கேட்ட வர்ஷன் ஹாஹாஹா என சத்தமிட்டு சிரித்தான்.

சிரிப்பவனை இருவரும் முறைத்து பார்க்க,அடேய் சகலை, நீ தானடா மணந்தால் மித்ராளி, இல்லையேல் மரணதேவினு பஞ்ச் பேசுன.அப்போ நல்லா அனுபவினு வர்ஷன் சிரித்தான்.
மேலும் சில பல கலாய்தல் அவர்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

தன் அருகில் உட்கார்ந்திருக்கும் மனைவி ஜூலியிடம், அல்லிய ஜானுக்கு கேட்கலாம்னு தோனுதென்று லாரன்ஸ் சொல்ல, அட எனக்கும் வந்ததிலிருந்து அதே எண்ணம் தான்.

எவ்வளவு துரு துருனு அங்கும் இங்கும் ஓடுறாள். படிக்கிற புள்ளையா இருக்காளேனு தான் கவலையா இருக்குங்க?.

எங்கே இதை நான் சொன்னால் திட்டுவீங்கனு இருந்தேங்கனு ஜூலி சொல்ல, ஏண்டி உன்ன திட்டுறது மட்டும் தான் எனக்கு வேலையா?.

அதில் என்ன சந்தேகமென்று ஜூலி சொல்ல, பின்னர் இருவருக்கும் சிறு வாக்குவாதம் வந்தது.

கண்மணி....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top