• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
தாமரை வீடு!

"சிக்கு புள்ளிகளை வைத்து கோலம் போட்டவள்,அதன் நடுவில் சாணி உருண்டையையும் வீட்டின் மேல் படர்திருக்கும் பரங்கிப்பூவையும் கிள்ளி சாணியின் நடுவில் சொருகி விட்டு, தோட்டத்து பக்கம் செல்ல,அவளோடு வந்த அல்லியும் அங்கிருந்த சாணி அள்ளும் கூடையை எடுத்துக்கொண்டு மாட்டு கொட்டகைக்குள் சென்ற அக்கா தங்கை இருவரும் சேர்ந்தே சுத்தம் செய்து முடித்தனர்.

பின்னர் இருவரும் கிணற்றிலிருந்து நீரை இறைத்து கை கால்களை கழுவி வர,மகள்கள் இருவருக்கும் சூடான டீயை கொடுத்தவர்,தனது பெரிய மகளிடம் இந்த வேலையெல்லாம் நான் செய்வேன் இல்லையா எதுக்கு உனக்கு இந்த வேலையென்று கவிதா கேட்க, எம்மா நானும் நீ பெத்த மவள் தானென்று அல்லி முறைத்தாள்.

அது தான் எனக்கு பல நாட்களாக சந்தேகமா இருக்குடி.உன் கூட பொறந்தவளுக்கு இருக்கும் பொறுப்பில் கொஞ்சமாவது உனக்கு இருக்காடி?என்றபடி சின்ன மகளை பார்த்தார்

இப்படி அசிங்கப்படுத்துறியேம்மா, இப்போ உனக்கு என்ன வேலை செய்யனும்,சரி சொல்லு,நீ,ம் என்பதுக்குள் எப்படி செஞ்சி முடிக்கிறேனு பாரென்க,போய் பசு மாட்டிலிருந்து பால் கறந்துட்டு வா.

அதைக்கேட்டவள்,அது உதைச்சி தள்ளி எனக்கு கை கால் உடையனும் இதானே உன் எண்ணம்,வேற சொல்லு மா.சரி போய் சாணியை மிதிச்சி வறட்டி தட்டி போடு என்க,அது ரொம்ப நாத்தம் அடிக்கும்,வேற வேற,அப்போ மாட்டுக்கு போய் பருத்தி கொட்டையை ஆட்டுக்கல்லில் அறைச்சி எடுத்துவா என்கவும் ஏம்மா ஏன் இப்படியென்றாள்.

தாமரை உனக்கு பக்கத்தில் கிடக்குற அந்த வெளக்கமாற்றை கொஞ்சம் எடுனு கவிதா சொல்ல,அல்லிஈஈஈஈ எஸ்கேப் என்று உள்ளே ஓடினாள்.

" அம்மா... விடுமா,சின்னவள் தானே. போகப்போக வேலை எல்லாம் கத்துப்பாள் என்று தங்கைக்கு சப்போர்டாக தாமரை சொல்ல,அட நீ வேற தாமரை.லீவு விட்டா போதும் அந்த மூன்றாவது தெருவுல இருக்கிறாளே இவ சினேகிதி,அவகூட காடு கழனினு சுத்தவே இவளுக்கு நேரம் சரியா இருக்கு.இவள வச்சிக்கிட்டு என்னத்தை மாறடிக்க போறேன்னு தெரியலை.

"சரிம்மா....நான் சாமிக்கு பிரசாதம் பண்ணட்டுமா?,தாராளமா பண்ணு.பொங்கல் செய்வதற்கு தேவையானது எல்லாம் நைட்டே எடுத்து வச்சுட்டேன்.

சரிமா என்று சமையலறைக்கு உள்ளே போன தாமரையோ சக்கரை பொங்கல் செய்ய தயாரானாள்.

நெய் மணக்க மணக்க சாமிக்கு பிரசாதத்தை தயார் செய்தவள்,தனது அம்மாவோடு பேசியபடி காலை சமையல் செய்யும் போது வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆளாக தூங்கி எழுந்து வந்தனர்.

அவர்களுக்கு டீ யை கொடுத்தவர், னஏய் அல்லி போய் குளிச்சிட்டு வா கோயிலுக்கு போகணும் என்க, பாட்டியின் அருகில் படுத்திருந்த அல்லி எழுந்து குளிக்கப்போனாள்.

"தனதறைக்கு வந்த தாமரை,பெட்டியில் இருந்த டிரஸ்களை பார்க்க அதில் கடல் நீலத்தில்,கரு நீலக்கலர் பார்டர் வைத்த புடவையை எடுத்தவள் ரொம்ப வருஷம் கழித்து குல தெய்வ கோயிலுக்கு போகிறோம்.இந்த புடவையே கட்டிப்போம் என தானே பேசிக்கொண்டவள்,அந்த புடவையை கட்டிக்கொண்டு,தனது நீண்ட கூந்தலை சீவி அழகாக பின்னி முடித்து சற்று நேரத்துக்கு முன்பு கவிதா கொடுத்த மல்லிகை பூச்சரத்தை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு,புடவை கலரில் நெற்றியில் பொட்டை வைத்து கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவள் அழகாக தெரிந்தாள்.

"பின்னர்,உடைக்கு மேட்சாக வளையலையும் அதே கலரில், தொங்கட்டானையும் போட்டவளுக்கு கழுத்து மட்டும் வெறுமையாக இருப்பதை பார்த்து,தனது செயினின் நினைவு வந்தது.

"சரி போனது போய்விட்டது என்ன செய்யனு சமாதான படுத்திக் கொண்டவள்,கழுத்தில் போடுவதற்காக மேக்கப் பாக்ஸில் தேட,அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது.

தேடிய வேலையை விட்டு கதவை திறக்க அங்கே கலா பாட்டி நின்றிருந்தார்.சொல்லு அப்பாயி என்க, பேத்தியை புடவையில் பார்த்து மலைத்து நின்றவர்,எம்புட்டு அழகா இருக்க ஆத்தானு அவளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவர் இந்தாம்மாயென்று அவளிடம் ஒரு சுருக்கு பையை நீட்டினார்.

அதை யோசனையோடே வாங்கியவள், என்ன அப்பாயி?என்க,உனக்காக இந்த அப்பாயி சேர்த்து வச்சது கண்ணு.ஓ என்று சுறுக்கு பையை திறந்து பார்க்க, அதில் இரட்டை வட செயின் அந்த காலத்து கல் வைத்த தோடு ஜிமிக்கி, மற்றும்,இரண்டு வகையான மோதிரங்கள்,கழுத்தில் போடும் அட்டிகை,கையில் போடும் கெட்டி காப்புகள் இரண்டு இருந்தது.

ஏது அப்பாயி இதெல்லாம்?

எங்க அம்மாச்சி எங்க அம்மாக்கு கொடுத்தது,அவங்க எனக்கு கொடுத்தாங்க,அதை இப்போ உனக்கு தரேன் ஆத்தா என்றவரை கட்டிக்கொண்டவள்,இப்போலாம் இதைப்போல பொருட்கள் தான் ஃபேமஸா இருக்கு அப்பாயி.

அப்பொழுது அங்கு வந்த அல்லி,அக்கா என் டிரஸ் எப்படி இருக்கென்று கேட்க, கிளி பச்சை கலர் பாவாடை சட்டையும், அதற்கு ரோஜா கலர் தாவணியும் அணிந்திருந்த அல்லியை பார்த்தவள் அழகா இருக்கடி.

அட போக்கா...நீ தான் செம்மையா இருக்க என்றவள்,என்ன இரண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க என்கவும், அப்பாயி இதெல்லாம் குடுத்தாங்கடி. இந்தா உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கோ என்றாள்.

ஏன்கா..ஏன்...இப்படி....இது,இந்த மேடத்தோட பாரம்பர்ய நகையாம்.இது மூத்த பெண் வாரிசுக்கு மட்டும் தான் சொந்தமாம்,அதனால் எனக்கு இல்லை என்க,அடியேய் கத்தாழ கள்ளி என்றவர், அவ கிடக்குறா ஆத்தா,நீ வச்சிக்கோ.

சரி அப்பாயி.உங்க கிட்டவே இருக்கட்டும் நான் கோயிலுக்கு போய்ட்டு வந்து வாங்கிக்குறேன் என்கவும்,சரித்தா என்றார்.

கவிதாவும் தயாராகி வர,மூவரும் தங்கள் தோட்டத்து கதவு வழியாகவே நடந்து ஏரிகரை கிட்ட வந்தவர்கள், அங்கிருந்து இடது பக்கம் திரும்பி கோயில் இருக்கும் திசையை நோக்கி சென்றனர்.

சிறிது நிமிடத்தில் கோயிலுக்கு வந்த மூவரும் ஆளுக்கொரு வேலை என்று கோயிலை சுத்தம் பண்ணி முடிக்கவும், பூசாரியும் அங்கு வந்தார்.

எடுத்து வந்த பொருட்களை அவரிடம் கொடுத்த கவிதாவோ மகளின் வேலையை பற்றி சொல்லியவர், அம்மனிடம் பூஜை பண்ண சொல்ல சரிம்மா என்ற பூசாரி,கருவறைக்கு சென்று தாமரை எடுத்து வந்த குடத்து நீரால் அம்மனை குளிப்பாட்டி, பச்சைக்கலர் பட்டு புடவையை அம்மனுக்கு கட்டி,அலங்கரிக்க மேலும் அரை மணி நேரமானது.

பின்னர் அலங்காரத்தை முடித்தவர் மணியடித்து தீபாரதனை காட்டி விட்டு இவர்களிடம் வந்து காட்ட,மூவரும் ஆரத்தியை எடுத்துக்கொள்ள, அவர்களுக்கு விபூதி குங்குமம் கொடுத்தார்.

சரி தாமரை நல்ல நேரம் போவதற்குள் நீ வரைய ஆரம்பிடா என்கவும் சரிம்மா என்றவள்,அங்கு இருக்கும் சூழலை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு அம்மனிடம் இந்த வேலையை நல்ல படியாக முடிக்க அருள் குடுங்கம்மா என்று மனதுருக வேண்டியவளோ தான் எடுத்து வந்த நோட்டில் வரைய தொடங்கினாள். இங்க பாரு அல்லி,அக்கா கூடவே இருக்கனும் என்றவர்,தாமரை நான் வீட்டிற்கு கிளம்புறேன்.இங்க ஒன்னும் பயம் இல்லை,இருந்தாலும் பத்திரமா இருங்களென்றபடி கவிதாவும் வீட்டிற்கு போக,தாமரையும் வரைவதில் கவனமாக இருக்க,அல்லிக்கோ ஒரே இடத்தில் இருப்பது கடுப்பாக வந்தது.

என்ன பண்ணலாமென்று யோசித்தவள்,கோவிலை சுற்றி அடைத்திருக்கும் வேலி வழியாக தூரத்தில் பார்க்க அங்கே ஏரிக்கரை ரோட்டின் மேல் அவளது தாத்தாவும் அப்பாயியும் வயலுக்கு போவது தெரிந்தது.

தேனூர்:

தனது வண்டியில் சென்று கொண்டிருந்தவனின் சிந்தனைகளெல்லாம் அத்தை வீட்டு வாசலில் கோலமிட்டவளின் மேலேயிருந்தது.

ம்ம்....பரவாயில்லையே காலையிலே எழும் பழக்கம் இருக்கு,சரி நமக்கு வசதி தானென்று சொல்ல,என்ன வசதி?என்றது கதிரின் மனசாட்சி.

அதானே?,எதுக்கு வசதி என்றவன்,ஆள் ரொம்ப உயரமும் இல்லை,அப்படி ஒன்னும் குட்டச்சியாவும் இல்லை, அளவான உயரத்தில்தான் இருப்பாள் போல.ஆனால் அவ முகம் எப்படி இருக்கும்னு தெரியலையே டா கதிரு?.

"கொஞ்சம் முன்னவே வந்திருந்தால் பார்த்திருக்கலாம் போலயேனு புலம்பிக்கொண்டே வண்டி ஓட்டியவன், கவிதா,அன்பழகன் இருவர் முக ஜாடையில் இவ யாரப்போல இருப்பாள்?என வாய் விட்டு சொல்லிக்கொண்டே கண்ணாடியை பார்த்தவன்,அடேய் கதிரு,அந்த சண்டாளி உன்னை இப்படி புலம்ப விட்டுட்டாளேடா.

அவளுக்கு எங்கே என் ஞாபகம் இருக்க போகுது?,காலேஜ்லாம் படிச்சிருக்கா, எப்படியும் அங்க யாரையாவது விரும்பாமலா இருந்திருப்பாலென்று அவன் மனசாட்சி கேட்க, ச்சே ச்சே... அவ அப்படிலாம் பண்ணிருக்க மாட்டாள்.

கீழே விழுந்தவளை விடாமல் புடிச்சி வச்சிருந்தால் இவ்வளவு அக்கப்போறு இல்லாமல் இருந்திருக்கும்.கரண்ட் வந்ததில் அவள் முகமும் நமக்கு தெரிந்திருக்கும் என தன் மனசாட்சியோடு பேசிக்கொண்டே தேனூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து சேர்ந்தான்.

கிழக்கே சூரியன் உதயமாகி கொஞ்சம் கொஞ்சமாக விடியல் வர தொடங்கியது. பேருந்து நிலையத்திலிருக்கும் சிறு சிறு கடைகள் ஊது பத்தி மணத்தோடு வரவேற்றது.கையில் கட்டியிருந்த வாட்சை பார்க்க,மணி ஆறு ஆவதற்கு இன்னும் கால் மணி நேரம் இருப்பதாக காட்டியது.

மார்கழி மாத குளிர் உடலை வாட்டாமல் இருக்க,காதை சுற்றி மப்ளர் கட்டியிருந்தவன்,வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு தெரிந்தவரின் டீக்கடைக்கு செல்ல,வாப்பா கதிரு.

"வரேண்ணா என்றவனிடம்,எங்கே இவ்வளவு காலையிலே இந்த பக்கம்? என்று மாஸ்டர் கேட்க,சின்ன தம்பி விளையாட்டு போட்டிக்கு போயிட்டு இன்றைக்கு தான் வரான் ணா.நம்ப மதுரை வண்டி வந்துட்டா?

இன்னும் இல்ல கதிரு வரும் நேரம் தான் என்றவர்,டீயை அவனிடம் நீட்ட வாங்கி குடித்தவன்,அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினான்.

கதிர் பேப்பரை படித்து முடிக்கவும், மதுரையிலிருந்து வருகின்ற வண்டி வரவும் சரியாக இருந்தது.தம்பி பஸ் வந்துடிச்சிப்பா என மாஸ்டர் சொல்ல, டீக்கு ஆன காசை கதிர் கொடுக்க,அட... போப்பா போ என்றார்.

இருக்கட்டும் என்றவன் காசை டேபிள் மேல் வைத்து விட்டு,பஸ்ஸை நோக்கி செல்ல,பஸ்ஸிலிருந்தவர்கள் கீழே இறங்கிககொண்டிருந்தனர்.

எங்கே இவனை காணுமென்று பின் பக்க கதவை பார்க்க நிலவன் கூட சென்ற மாணவர்கள் இறங்கினர், கடைசியாக நிலவனும்,பீ. இ. டி. சாரும் இறங்குவதை பார்த்தவன் வணக்கம் சார் என்க,குட்மார்னிங் கதிர்.

சின்ன சின்ன காயம் இருக்குப்பா பார்த்துக்கோ என்றவர் விளையாட்டை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு மற்ற மாணவர்களோடு அங்கிருந்து சென்றார்.

எப்படி இருக்கடா?

நல்லா இருக்கேண்ணா என்றவனிடம் டீ குடிக்கிறியா என்க,வேண்டாம்ணா வீட்டுக்கு போகலாம்.தம்பியின் முகம் சோடையாக இருப்பதை கண்டு, காய்ச்சல் எதாவது இருக்கானு நிலவனின் நெற்றியில் தொட்டு பார்த்தவன் சரி வா என்று வண்டி நிறுத்திய இடத்திற்குப் போனான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
"ஹை ஹை... இன்னைக்கு களத்து மேட்டுல கடலை காய வைக்குறாங்க தானே என்றவள்,அக்கா...அக்காஆஆஆ என்று கூப்பிட,வரைவதில் லயித்து இருந்தவளுக்கு அல்லி கூப்பிடுவது காதில் விழவில்லை.

அக்கா செவுடா ஆகிட்டாளானு சொல்லிக்கொண்டே வந்தவளுக்கு, தாமரை வரைவதில் கவனமாக இருப்பது தெரிய,சுத்தம் என்று தலையில் தட்டிக்கொண்டவள், அவளருகில் சென்று,அக்கா என்று தோளை தொட தாமரையோ பதறி எழுந்தாள்.

அய்யோஓஓஓ...அக்கா...நான் தான்.

ஏண்டி இப்படி என்க,எனக்கு சும்மாவே இருக்க எரிச்சலா வருதுக்கா,நம்ப களத்து மேட்டுல கடலை காயவைக்க தாத்தாவும்,அப்பாயியும் போறாங்க, நானும் அங்கே போகட்டுமா?

சரி போடி என்றாள்.

என் செல்ல அக்கா இல்லையா,அம்மாகிட்ட சொல்லிடாதக்கா என்றவாறு கன்னத்தை கிள்ளி முத்த மிட்டவள், அங்கிருந்து புள்ளி மானாய் துள்ளி ஓடினாள்.

தங்கையின் செய்கையில் இதழ் பிரிய சிரித்தவளுக்கு இப்பொழுது தான் கழுத்து வலிப்பது போல இருந்தது.இவ்வளவு நேரமாக சாமி சிலையை தனது செல் போனில் போட்டோ எடுத்து வைத்ததை,கீழே குனிந்து உன்னிப்பாக பார்த்து வரைந்ததால் வந்த வலி என்று புரிய, வரைந்த நோட்டை மூடி கீழே வைத்தவள்,எழுந்து நின்று இருபுறமும் கழுத்தை திருப்பி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாமென்று நினைத்தவள், தனது போனை எடுத்துக்கொண்டு சன்னதி மண்டபத்திலிருந்து வெளியே வந்து கோயிலை சுற்றிப் பார்க்க,அங்கே ஓர் பக்கம் அரச மரத்தில் குழந்தைக்காக வேண்டி கட்டிய தொட்டில்கள், வேண்டுதலைக்காக கட்டிய தாலிக்கயறு வளையல்களென்று தொங்குவதை பார்த்து,கோயிலை சுற்றி நடந்து செல்ல,கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பசுமையான வயல்வெளிகளே தெரிந்தது.

அப்பொழுது அவளின் செல்லிற்கு கால் வரவும் அட்டென் பண்ணியவள் சொல்லுடா என்க,'மிஸ்யூ டி' என்றான்.

என்ன காலையிலே என்றவளுக்கு,என் பீலிங்க்ஸ் எங்கேடி உனக்கு புரியப்போகுது?வாழ்த்துக்கள்டி.

ஓஓஓ...எப்போ அனுப்பிய மெசேஜிற்கு இப்போ பதிலா?.

நேற்று இரவு,நானும் அப்பா கூட வேட்டைக்கு போயிருந்தேன் டி.வீட்டிலே போனை வச்சிட்டு போய்விட்டேன்.பாதி தூரம் போன பிறகு தான் ஞாபகம் வந்துச்சினு மருது சொல்ல,ம்ம் என்றாள்.

"தாமரை என்க,அடுத்து அவன் என்ன சொல்ல வரப்போகிறானென்பதை புரிந்தவள்,எப்பொழுதும் உன்கிட்ட சொல்லும் அதே பதில் தான். இருந்தாலும் சொல்கிறேன்.உன் மேல் இதுவரை எனக்கு காதல் வரலைடா, அது வருமா?,இல்லை வராதா?எனக்கு தெரியாது.

"ஒரு வேளை,அப்படி எனக்கு காதல் வந்தால் உன்னிடம் சொல்ல ஒரு போதும் நான் தயங்க மாட்டேன் இதை நல்லா புரிஞ்சிக்கோ.என்னை பொறுத்த வரை இந்த நிமிடம் வரை நீயும் பவி போல நல்ல நட்பு மட்டும் தான்.

எத்தனையோ முறை இந்த பதிலை அவளிடமிருந்து கேட்டாளும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது மருதுக்கு. அதற்கு காரணமோ நேற்று அவனின் அம்மா மயிலா சொல்லிய விஷயங்களை கேட்ட பிறகு தான்.

"நீ சொல்றது என் அறிவுக்கு புரியுதுடி, ஆனால் உன்னை விரும்புற மனசுக்கு புரியலையே நான் என்ன செய்வேன்?

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியுமென திருப்பி அவனிடமே கேள்வி கேட்டவள் போதும் இந்த பேச்சை விடு என்றவளிடம் ம்ம் என்றவன்,இப்போ என்ன பண்ணிட்டிருக்க?

கோயில்ல இருக்கேன் டா.ஓஓஓ சரி செல்பி ஒன்னு அனுப்பு,நேர்ல தான் பாக்க முடியலை,போட்டோவிலாவது உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அழைப்பை கட் பண்ணினான்.

பின்னனியில் வயல்வெளிகள் தெரியுமாறும் கோயிலிலிருக்கும் பூஞ்செடிகளோடும் வித விதமான போட்டோக்களை எடுத்தவள்,ஒன்றை மட்டும் மருதுவுக்கும், மற்றவைகளையெல்லாம் வேதாவிற்கு அனுப்பி வைத்தவள்,மீண்டும் கோயில் மண்டபத்துக்குள் வந்து, விட்டதிலிருந்து வரைய தொடங்கினாள்.

கதிர் வீடு....

வண்டியின் பின்புறம் உட்கார்ந்த நிலவன் போகலாம் ணா என்றவன் மதுரைக்கு சென்றதிலிருந்து 'கபடி' போட்டியில் வெற்றி பெற்றவரை சொல்ல,இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வண்டியிலிருந்து இறங்கிய நிலவன் நடக்க சிறிது தடுமாற என்னடா ரொம்ப காயமா??என்று வண்டியை நிறுத்தி விட்டு தம்பியிடம் கேட்க,ஆமாணா,ஒரு முட்டியில் ரொம்ப காயம்ணா, எதிரணியில் ஒரு பையன் ரைடுல இழுத்து விடும் போது அடி பட்டுருச்சு.

எங்கே காட்டு என பதறியவனுக்கு, விடுணா என நிலவன் சமாளிக்க, தம்பியை ஒரு முறை முறைத்தான்.

அந்த பார்வையிலே தனது டிராக் பேண்டை கழட்டி காட்ட,இடது கால் முட்டியில் அவ்வளவு பெரிய காயம் இருந்தது.

என்னடா இது?

இவ்வளவு பெருசா!!என்று அதிர்ந்தவன், தனது போனை எடுத்து நிலவனின் சாரை அழைக்க போக,அய்யோ அண்ணா...வேண்டாம் விடு.சார் அங்க ரொம்ப சண்டை போட்டுட்டார்.நீ நம்ப மாட்டேனு தான் வீடியோ எடுத்தான் இன்னொரு பையன் என்றவன், தனது போனிலிருக்கும் வீடியோவை காட்ட, அதில் நிலவனின் சார் கடுமையாக சண்டை போட்டு கொண்டிருந்தார்.

எந்த ஊர் பசங்கடா?

அந்த ஊர்காரவங்க தான் ணா,ஓஓஓ ஊர் சவடாலை காட்டிருக்கானுங்க போல என்றவன்,சரி பார்த்து வா என தம்பியோடு வீட்டின் உள்ளே சென்றான்.

கதிரோடு வந்த சின்ன பேரனை பார்த்த வள்ளி அப்பாயி,கண்ணு வந்துட்டியா என்றவர்,எழுந்து போய் பேரனை கட்டிக்கொண்டு,செயிச்சி கப்பு வாங்கிட்டியாமே அண்ணன் சொன்னானே என்றார்.

ஆமாம் அப்பாயி என்றவனிடம்,சரியா சாப்ட்டியா கண்ணு என்றவர்,உள்ள வா கண்ணு,உன் ஆத்தாளும்,அப்பனும் விளையாட போய்டனு கரிச்சி கொட்டிக்கிட்டு இருக்காங்க என்றவரிடம் அதான் ஜான்சிராணி நீ இருக்கியே எனக்கு என்ன கவலை.

அப்பொழுது தோட்டத்திலிருந்து உள்ளே வந்த சீதா அங்கிருந்த சின்ன மகனை பார்த்தவர்,நிலவாஆஆ,எப்போ வந்தப்பா என்றபடி அருகில் வந்தவர், எப்படி இருக்கிறாடா?

நல்லா இருக்கேன்மா.நீ எப்படி இருக்க?

நாங்க எல்லாம் நல்லா இருக்கிறோம்டா.

என்னடா,காயம் அதிகமானு சின்ன மகனின் தலைமுடியை கோதிவிட்டே கேட்க,அப்படிலாம் ஒன்னும் இல்லையே,பஸ்ல தூங்காம வந்தது உனக்கு இப்படி தெரியுது என்றான்.

அதில் நிலவனை பார்த்தவர்,கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலை போல...இதான் என் அம்மா என்றவன்,கொஞ்சம் பெருசு தானென்று சீதாவின் தோள் பட்டையின் மேலே சாய,ஏத்தா சீதா,போய் ரெண்டு கொத்து வேப்பிலையோட கொஞ்சம் மஞ்சளை அரைச்சி எடுத்து வந்து உன் மவன் கால்ல போடும்மா.

"இல்லை,இவன் காயத்தை பார்த்து, அதுங்க ரெண்டும் பம்பரம் ஆடுங்க என்றார் வள்ளி அப்பாயி.

சரிங்கத்தை என்றவர் மீண்டும் தோட்டத்திற்கு சென்று,மாமியார் சொன்ன போல அரைத்து எடுத்து வந்தவர்,அங்கிருந்த மாமியாரிடம் எங்கேத்தை சின்னவன் என்க, குளிச்சிட்டு வரேனு போயிருக்கான் மா.

"தனது அறையில் குளித்து முடித்து கீழே வந்த நிலவனின் காயத்தை பார்த்த பாட்டியும்,பெரியன்னையும் பதற,ஒன்னும் இல்லை சீக்கிரம் போடுங்க,இல்லைனா உன் சின்ன மருமவ விஜயசாந்தி வந்துரும்.

அவன் சொன்னதை கேட்டு சீதாவும், வள்ளி அப்பாயியும் சிரிக்க,கதிர் மட்டும் அடேய் என்று அதட்டினான்.சும்மா ணா என்றவன் சீக்கிரம் போடுமா,போய் பேன்ட் மாத்திட்டு வரேன்.

ம்ம் என்றவர்,வேப்பிலை சாந்தை காயத்தில் வைத்து,அதன் மேலே வெள்ளை துணியால் கட்டி விட்டதும் டிராக் பேண்ட்டை போட்டு வர ராதாவும் செல்வியும் வீட்டுக்குள் வந்தனர்.

டேய் நிலவா....என்று கூவிக்கொண்டே வந்த செல்வியோ பூஜை கூடையில் இருக்கும் விபூதி குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்தவள்,எப்படிடா இருக்க?என்க..

என்ன ஆளு சோகமா இருக்க?அடி எதாவது பட்டுருச்சா? என ஆராய்சி பார்வையோடு ராதா கேட்க,ஒருத்தன் பத்து நாள் கழிச்சி வந்துருக்கானே சாப்டியா,இல்லையானு கேட்காம, எப்போ பாரு அடி பட்டுச்சா இடி பட்டுச்சானு போ மா என்றவன்,ஏம்மா நீயாவது எதாவது சாப்ட தருவியானு சீதாவை பார்க்க,இதோப்பா என்றவர், சமையல் அறைக்குள் செல்ல,ராதாவோ மீண்டும் மகனை ஒரு பார்வை பார்க்க, என்ன லுக்?,போய் கடப்பான் சட்னிய மனுஷன் சாப்டுற போல அறைச்சி குடு .

ம்ம் என்றபடி ராதாவும் சமயலறைக்குள் சென்றார்.

அவர் போகும் வரை அமைதியாக இருந்தவன்,பின்னர் நெஞ்சில் கை வைத்து ச்சூஊஊஊஊஊ....ஏன் அப்பாயி உன் சின்ன மருமவள் போன ஜென்மத்தில் சி. ஐ. டி. சங்கரா பொறந்துருக்குமோ என்கவும்,அதைக்கேட்ட வள்ளி, செல்வியோடு கதிரும் சேர்ந்து சிரித்தான்.

என்ன அண்ணா காயமா?என்று செல்வி கேட்க,சண்டைனா சட்டை கிழிய தான செய்யும்.என்ன காலையிலே கோயிலுக்கு விஜயம் அம்மா,பொண்ணு இருவருக்கும் என நிலவன் கேட்க?,நீ ஜெயிச்சதற்கு நம்ப அம்மனுக்கு லஞ்சம் கொடுக்கதான் போனோம்.

நீலகிரி!

தனது அம்மா என்ன முடிவோடு வருவாளோ என தரையில் குதிக்கும் மீனாய் மருதுவும் தவித்து கொண்டிருந்தான்.


தைரியமாக போய் பேசிட்டு வா என்று சொல்லி அனுப்பினாலும்,வேதா என்ன நினைப்பாரோ?தன்னை தவறாக நினைத்து விடுவாரோ??என்ற கவலையே அவனுக்கு அதிகமாக இருந்தது.

மேலும் அவனை தவிக்க விடாமல் அங்கு வந்து சேர்ந்தவர் மகனின் முகத்தில் இருக்கும் தவிப்பை பார்க்க, என்னாச்சிமானு தயக்கமாக கேட்டான்.

அது வந்துப்பானு மயிலா தயங்க,
மேடம் திட்டி அனுப்பிட்டாங்களாம்மா?, என்னால் தானே உனக்கு சங்கடம், மன்னிச்சிடுமா என தன் போக்கில் சொல்லி கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவன் பேச்சை பொறுக்க முடியாதவர், தம்பி...தம்பி...அடேய் பெரியவனேஏஏஏஏஏ செத்த வாயை மூடுறியா என்றவர்,நர்சம்மாக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் என்கவும் ஆணி அடித்த போல அதிர்ச்சியில் நின்றான்.

"மகனின் அதிர்வை கண்டு சுத்தம் என்று சிரித்தவர்,அங்கு வேதாவிடம் பேசியதையும்,அதற்கு அவர் சொன்னதையும்
சொல்ல,அதைக் கேட்டவனுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

அம்மாவ்...நீ நெசமாக தான் சொல்லுறியா?அட...ஆமாப்பா.பாப்பா வெளிநாட்டுக்கு போற அன்றைக்கு அவங்க அண்ணன் வீட்ல பேசுறேன்னு நர்சம்மா சொல்லிருக்காங்க தம்பி. ஆனால் என்று அவர் இழுக்க...

என்னம்மா தயங்குற?

அது வந்துபா, பாப்பாவோட வூட்டுல இருக்கவங்களுக்கு சம்மதம் இல்லைனா என்னால் ஒன்னும் பண்ண முடியாதுனு நர்சம்மா சொல்லிட்டாங்கப்பா.

கண்மணி தொடர்வாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top