• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
110
கனவு - 5

சுதர்சனம் அவளை பெண் பார்க்க வருவது பற்றி கூறியதும் அதிர்ச்சி அடைந்த நதியா, அதில் இருந்து வெளிவந்து வேகமாக, "என்னப்பா திடீர்னு??!!.." என்று கேட்கவும், அவளை ஊடுருவும் பார்வை பார்த்த சுதர்சனம்,

"முதல்ல இருந்தே உனக்கு அலையன்ஸ் பாத்துட்டு இருந்தது தான்!.. இப்பதான் ஒரு வரன் அமைஞ்சிருக்கு!.. பையன் வேலை விசயமாக வெளியூர்ல இருக்கறதால இவ்ளோ நாள் தள்ளி போய் இருந்துச்சு.."

"இப்ப அவங்க பையன் அடுத்த மாசம் லீவுக்காக ஊருக்கு வர்றதால நெக்ஸ்ட் மன்த் பொண்ணு பார்க்க வர்றதா சொல்லி இருக்காங்க!.." என்றார்..

தனக்கு தெரியாமல் இத்தனை நாளும் இந்த விஷயம் நடந்திருப்பதை அறிந்து திகைத்தவள், "எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணனும் னு என்னப்பா அவசரம்!!?.. நான் இன்னும் படிப்பையே முடிக்கலையே!.." என்று தன் நிலையை உரைத்தாள் நதியா..

"இப்போ பொண்ணு பார்க்க தானே வர்றாங்க!.. உடனே வா கல்யாணம் வைக்கப்போகுது?!.. எப்படியும் பேசி கல்யாணம் வைக்கிறதுக்குள்ள உன்னோட காலேஜ் படிப்பு முடிஞ்சிடும்!.." என வெகுவான திட்டமிடலோடு அவர் சொல்லவும்,

"டிகிரி மட்டும் முடிச்சா போதுமா ப்பா?!.. எனக்கு இப்ப கல்யாணத்துல விருப்பம் இல்ல!.." என அவள் தன் மறுப்பைத் தெரிவிக்க, அவளை ஆழ்ந்து பார்த்தவர்,

"இப்ப கல்யாணம் பண்ண விருப்பம் இல்லையா?!.. இல்ல இந்த பையனை கல்யாணம் பண்ண விருப்பம் இல்லயா?!.." எனக் கேட்க, அவரை கூர்ந்து பார்த்தவள், "இல்ல..புரியல.. இப்படி கேட்டா என்ன அர்த்தம் ப்பா?!.." என்றாள்..

"உனக்கு தான் அது தெரியும்!.." என அவர் பாலை அவளது கோர்ட்டில் தள்ள, "புரியாம தானே கேட்குறேன்!.. நீங்க தான் சொல்லனும்!.. எதை வைச்சு இப்படி கேட்டீங்க னு?!.." அவளும் சளைக்காமல் அவருக்கே அதை திரும்பி விட்டாள்..

"ஓகே ஃபைன்!.. நான் நேரடியாவே கேட்குறேன்!.. நீ யாரையாவது லவ் பண்றியா?!..அதனால தான் கல்யாணம் வேணாம் னு சொல்றியா?!.." என உடைத்துக் கேட்டார் சுதர்சனம்..

"அது என்ன கல்யாணம் வேணாம்னு சொன்னாலே உடனே காதலா தான் இருக்கணுமா?!.. எங்களுக்கு னு கனவு எல்லாம் இருக்கக்கூடாதா?!.. ஏன் எல்லா அப்பாவும் இப்படியே கேக்குறீங்க?!.."என அவளும் வேகமாக கேட்டாள்..

"எது உன் கனவு?!.. அவனையே கல்யாணம் பண்றதா?!.. இல்ல சொல்லாம கொள்ளாம அவனோடவே ஓடி போறதா?!.. நான் முடிவு பண்ணுனா பண்ணுனது தான்!.. அடுத்த மாசம் அவங்க வர தான் போறாங்க!.." என்று அவரும் காட்டமாக சொல்லவும்,

அவரது பேச்சில் மிகுந்த எரிச்சலுற்றவள் கடுப்பில் ஏதோ சொல்ல வருவதற்குள் சரஸ்வதி, "பாப்பு!.." என அழைத்ததும் தந்தையை முறைத்துக் கொண்டே தாயருகே செல்ல, சுதர்சனம் தனது கைபேசியில் மூழ்கினார்..

தாயுடன் சமையலறைக்குள் சென்றவள், எண்ணெயில் போட்ட கடுகென பொறிந்து, தாம்தூம் என்று குதிக்க, அவளை சிறிது நேரம் பேச விட்டவர், "நீ கத்தி முடிச்சிட்ட னா சொல்லு டா!.. நான் ஒன்னு சொல்றேன்!.." என்றார் நிதானமாக..

புஸுபுஸுவென மூச்சை இழுத்து விட்டவள், தனது பேச்சை நிறுத்திவிட்டு, "சரி.. சொல்லுங்க!.. நீங்க என்ன சொல்ல போறீங்க?!.." என்றாள் அதே வேகத்தோடு..

"உனக்கு தான் உங்கப்பா பற்றி தெரியுமே டா?!.." என அவர் ஆரம்பித்ததும்,"அதுக்காக அவர் எப்படி நான் எவன் கூடவோ ஓடி போவேன் னு சொல்லலாம்?!.." என மீண்டும் அவள் எகிறவும்,

"நான் சொல்ல வர்றதை தான் கொஞ்சம் கேளேன் மா!.." என்று அவளை சற்று சமாதானம் செய்யும் விதமாக சரஸ்வதி கேட்கவும், நதியா அமைதியானாள்..

"அவர் முடிவு பண்ணிட்டா மாத்தறது கஷ்டம் தான்!.. எங்கிட்ட ரெண்டு ஐடியா இருக்கு!.." என சரஸ்வதி சொன்னதும், நதியாவிற்கு இந்த சூழலில் கூட சிரிப்பு வந்து விட்டது..

"என்ன ம்மீ நீங்க?!.. சிவாஜி படத்துல சாலமன் பாப்பையா சார் சொல்ற மாதிரி சொல்றீங்க!.." எனக் கூறிவிட்டு சிரிக்கவும், அவளை முறைத்தவர் பின்பு சிரித்து விட்டு..

"வாயாடி கழுத!.. நீ என்னை டைவர்ட் பண்ணுனா அப்றம் சொல்ல வந்ததை மறந்துடுவேன் பார்த்துக்க!.." என அவளை இடித்தவர் எச்சரிக்க, தனது வாயை ஜிப் போடுவது போல செய்து, வாய் மேல் விரல் வைத்து நின்றாள் மகள்..

"உங்கப்பா கிட்ட பேசறதுக்கு அவரை மாதிரியே ஒரு ஆளை தான் விடனும்.. இது முதல் ஐடியா.. அதனால ஒரு முயற்சியா நம்ம அரவிந்தனை அவர்கிட்ட பேச சொல்லலாமா?!.." என்று அவர் சொன்னதும்,

"இந்த மொக்க ஐடியாவை தான் அவ்ளோஓஓ ஹைப் கொடுத்து சொன்னீங்களா சச்சும்மா?!.." முறைப்புடன் கேட்டவள்,

"அவனே சரியான உம்மானமூஞ்சி!.. நாலு வார்த்தை சேர்ந்தாப்ல பேசுனா என்னமோ உலகமே அழிஞ்சு போற மாதிரி ஸீன் போடுவான்!.. அவன் போய் பேசி இவரை சமாளிக்க போறானாக்கும்!.." என்று சலித்தவள்,

"நான் கூட மாஸா எதாவது ஐடியா கொடுப்பீங்க னு பார்த்தா உங்க மொக்க பையனை வைச்சு ஐடியா சொல்றீங்க!.." என அவள் சொல்லவும், சரஸ்வதி அவளை முறைத்தார்..

"சரி விடுங்க!.. அப்படியே உங்க ரெண்டாஆவது ஐடியாவும் சொல்லுங்க கேட்போம்!.." என இழுத்தவளை, பார்த்தவர் முகத்தை திருப்பிக் கொண்டார்..

"சரிங்க செல்லாக்குட்டி!.. என்ன தான் உங்க ஐடியா சொல்லுங்க அதையும் கேட்போம்!.." அவரது முகத்தை தன்புறம் திருப்பி அவள் செல்லம் கொஞ்சவும், அவரும் சமாதானமாகி சொன்னார்..

"அவர் சொல்ற பையனோட வீட்ல எல்லாரும் நல்லா படிச்சு பெரிய வேலைல இருக்காங்க!.." என்றதும், அவரை சந்தேகமாக பார்த்த நதியா,"அதெப்படி உங்களுக்கு தெரியும்?!.." எனக் கேட்டாள்..

"அது.. அது.." என இழுத்தவர், இந்த வரன் பற்றி முன்னரே அவர் சொல்லி இருப்பதாக சரஸ்வதி சொன்னதும், நதியா அவரை எரித்து விடுவது போல் முறைத்தாள்..

"அப்ப இது ரொம்..ப நாளா நடக்குது!..அப்படி தானே!!?.." நதியா கோபமாக கேட்கவும், "அதான் நான் சொன்னேனே!.. அவர் உனக்கு ரொம்ப நாளா வரன் தேடிட்டு இருக்கார்னு.."

"நான் தான் உன்னோட டிகிரியாவது முடியட்டும் னு தள்ளிப் போட்டு இருந்தேன்!.. இப்ப நீயே அதையும் கெடுத்துட்ட!.." என அவளை குற்றஞ்சாட்டினார்..

"என்னைய வீட்டை விட்டு தொரத்துறதுலேயே குறியா இருங்க புருசனும் பொண்டாட்டியும்!.. ம்ஹும்!!.." என நதியா கோபமாக முகத்தை திரும்பினாள்..

பிறகு சிறிது நேரம் அவளை சமாதானம் செய்த பின், தனது இரண்டாவது ஐடியாவை சொன்னதும், 'என்னமோ பண்ணுங்க!..' என விட்டேற்றியாக கூறிவிட்டு சென்றாள் அவள்..

தாயும் மகளும் திட்டமிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது, சுதர்சனம் அதற்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியே கிளம்பி இருந்தார்..

இரவு அரவிந்தும் வந்த பிறகு உணவை முடித்தபின், சுதர்சனம் அறைக்கு சென்றிட மகனது அறைக்குள் சரஸ்வதி நுழைய, அவரை கேள்வியாக பார்த்தான் அவன்..

'ஷப்பா!!!.. இவனை வச்சுக்கிட்டு!.. 'என்னம்மா எதாவது முக்கியமான விசயமா?' னு வாயை தொறந்து கேட்டா தான் என்ன!!..' என மனதிற்குள் அவனை நினைத்து நொந்தவர்,

"ஒன்னுமில்ல பா!.. இன்னிக்கு.... " என மாலை நடந்த விசயத்தை விவரித்தவர், "அவ இன்னும் படிச்சே முடிக்கலைடா!..பொண்ணுங்களுக்கு படிப்பு எவ்ளோ முக்கியம் னு உனக்கு தெரியும் தானே!.." என்றவர்

அவன் முகத்தையே பார்க்க,' மேலே சொல்லுங்க!' என்னும் விதமாக பார்த்திருந்தவனை கண்டு கடுப்பானாலும், அதனை அடக்கிக் கொண்டு பேசினார்..

"அவ படிப்பு முடியற வரையாவது இந்த கல்யாணம் எல்லாம் வேணாம் னு நீ கொஞ்சம் சொல்லேன் டா தம்பி!.. ஒரு டிகிரி கூட முடிக்கலைனா அவ வாழப் போற வீட்ல எப்படி அவளை மதிப்பாங்க!.. "

"அவளுக்கும் எதாவது வேலைக்கு போகனும் னா கண்டிப்பா டிகிரி தேவை தானே!.. கொஞ்சம் பேசி அவருக்கு புரிய வை கண்ணா!.." என நீளமாக பேசி முடிக்கவும்,

அவன்,"ம்!.." என்ற ஒற்றை எழுத்தோடு சரியென தலையாட்டிட அவனது அன்னைக்கு ஆத்திரங்கள் கிளம்பியது..

"ஏன்டா ஒரு மனுஷி இவ்ளோஓஓ நீளமாக மூச்சுப்பிடிக்க பேசுனா, 'சரிம்மா' னு ஒரு முழு வார்த்த கூட சொல்ல மாட்டியா?!.." என கோபத்தில் பேசிட, அவன் முறைத்தான்..

பேசியபின் தான் சரஸ்வதிக்கு உறைத்தது, 'வீரியத்தை விட காரியம் தான் பெரியது!.. இப்ப இவன் மட்டும் 'அதெல்லாம் பேச முடியாது! ' னு சொல்லிட்டானா அவளை எப்படி சமாளிப்பேன்!?' என யோசித்தவர்

பின்பு, 'இவனெல்லாம் அவ்ளோஓஓ நீளமாவா பேசப் போறான் சரசு!..' என தனக்குள் சிரிக்க, அவரை திரும்பிப் பார்த்த அரவிந்த் தானாக சிரிக்கும் தாயை விசித்திரமாய் பார்த்தான்..

உடனே தனது முகபாவனை மாற்றிய சரஸ்வதி, "சரிப்பா!.. உனக்கு நல்லது கெட்டது தெரியும்!.. நீ அவர்கிட்ட பேசு கண்ணா!.." என அன்பொழுக கூறியவர்,

"பாவம்!.. இவனை கட்டிக்க போறவ!.." என வராத மருமகளுக்காக இப்போதே பரிதாபப்பட்டு முணுமுணுத்தவர் அறியவில்லை, அவளிடம் அவன் படப் போகும் பாடு!..

தாய் சொன்னதை யோசித்த அரவிந்த், தந்தையின் அறைக்குள் நுழைய, அதை ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்தனர் தாயும் மகளும்..

என்ன தான் தாயின் திட்டம் மொக்கையாக இருப்பதாக கூறினாலும் நதியாவிற்கும் 'தனது சகோதரன் தனக்காக பேசி இதை நிறுத்துவான்' என்ற சிறு நப்பாசை துளிர் விட்டது..

உள்ளே சென்றவன் வெகுநேரமாகியும் வராததால் தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்புடன் வெற்றிக்குறி காட்டிக் கொண்டனர்..

சிறிது நேரத்திற்கு பிறகு அவரது அறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் தனது தாயைத் தேடி சமையலறைக்கு வர,

சரஸ்வதி அடுப்படியை சுத்தம் செய்து கொண்டிருக்க, பொறுப்பான பெண்ணாக நதியா பாத்திரம் துலக்கிக் கொண்டு இருந்தாள்.. தாய்க்கு உதவி செய்கிறாளாம்!..

நதியாவை கண்டு புருவங்கள் உயர்த்தி ஆச்சரியம் காட்டியவன், "அவர் கிட்ட பேசிட்டேன்!.." என்றதும் தாயும் மகளும் குதியாட்டம் போடாத குறை தான்..

"கல்யாணத்தை நதியாவோட படிப்பு முடிஞ்ச அப்றம் தான் வைப்பாங்களாம்!.. அதனால அவ படிப்பு எதுவும் கெட்டுப் போகாது னு சொல்லிட்டாரு!.." எனக் கூறிவிட்டு சென்றுவிட்டான்..

அதுவரை 'எகிறி குதித்தேன்!..வானம் இடித்தது!!!..' என மனதில் பாடி பறந்து கொண்டு இருந்தவர்கள், தொப்பென்று தரையில் விழுந்த மொமன்ட்!..

நதியா கடுப்பில் 'ஆ'வென்று பல்லைக் கடித்துக் கொண்டு மெதுவாக கத்த,, சரஸ்வதியோ, 'ஈஈஈ' என்று சிரித்துக் கொண்டே பெருமையுடன் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார்..

தாயின் ரியாக்ஷன் பார்த்த நதியா குழம்பிப் போய் அவரது தோளில் தட்ட, சுயநினைவிற்கு வந்தவரிடம், "இப்ப நீங்க இவ்ளோஓஓ சந்தோசமாகற அளவுக்கு அவன் என்ன சொல்லிட்டான்னு இப்படி ஈஈஈ னு சிரிச்சிட்டு இருக்கீங்க!?.." என்று கடுப்போடு கேட்டாள்..

"அதில்லடி!.. என் மகன் இன்னிக்கு எவ்ளோஓஓஓ நீளமா பேசிட்டான் பார்த்தியா!!!?" என அரவிந்த் பேசியதை எண்ணி பெருமைப்பட, வெறியானவள், "சச்சு மாதாஆஆ!!!.." என அலறினாள்.

ப்ளான் ஏ ஊற்றிக் கொண்டதை அடுத்து ப்ளான் பி இருக்கிறதே என சரஸ்வதி சொல்லவும், அது என்னவென்று கேட்டவளுக்கு சரியென்று தான் பட்டது.


ஆனால் அதையும் அவளே ஊற்றி மூடப் போவது அறியாமல் சிறு நிம்மதியோடு உறங்கச் சென்றாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top