• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
119
கனவு - 14

சுதர்சனம் வந்த பின்பு காவேரியின் ஜாடை பேச்சுகள் வெகுவாக குறைந்து போயின.. இருப்பினும் எப்போதாவது சில சமயம் பேச்சுவாக்கில் அந்த பொறுமல் வெளிப்பட்டு விட, அதை சுதர்சனமும் கவனித்தார்..

ஒருநாள் சமையலறையில் சரஸ்வதியுடன் வேலை பார்த்துக் கொண்டு இருந்த காவேரியின் முகம், ஏதோ சிந்தனையில் இருப்பதைக் கண்டு, "ஏன் அண்ணி ஒரு மாதிரி இருக்கீங்க?!.." என அக்கறையாக கேட்டார்..

"ஒன்னுமில்ல விடு!.. உன்ற கிட்ட சொல்லி என்னாக போகுது?!.." என காவேரி சலித்துக் கொள்ள, என்னவென்று சொல்லுமாறு சரஸ்வதி வற்புறுத்தி கேட்கவும்,

"என்னத்த சொல்ல?!..என்ற பொறந்த வீட்ல இன்னிக்கி விசேஷம்!.. வருசா வருசம் போயிடுவேன்..ஆனா இப்ப.. என்னால தான் போக முடியாது!.." என சலித்துக் கொண்ட காவேரி,

"கல்யாணம் கட்டுனாலும் பொறந்த வீட்லயே காலம் தள்ற யோகமும், ஆண்வாரிசா உன்ற புள்ள மட்டும் அமையற அதிர்ஷ்டமெல்லாம் உன்ன போல அல்லாருக்கும் அமையுமா சரசு?!.. " என்று பொறாமையுடன் சொல்லும்போது..

" சரோ!.. ஒரு டீ போட்டு கொடுக்க முடியுமா " என்று அழுத்தமான பார்வையோடு, சரஸ்வதியிடம் கேட்ட சுதர்சனத்தின் குரலில் காவேரி சற்று திடுக்கிட, சரஸ்வதியோ பதறினார்..

"இதோ கொண்டு வர்றேங்க!.." எனக் கூறிவிட்டு, வேகமாக தேநீரை தயாரித்த சரஸ்வதி, காவேரியின் பேச்சிற்கு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினார்..

அதன்பின்னர் தான் சுதர்சனம் காவேரியின் சூட்சும பேச்சுக்களை கவனித்தவர், ஊருக்கு திரும்ப இரு தினங்களே இருந்த நிலையில் தனது மனைவியிடம் தனிமையில் அக்கேள்வியையும் கேட்டார்..

அவரது கேள்வியில் சில நொடிகள் மௌனித்த சரஸ்வதி, "அதெல்லாம் ஒன்னும் இல்லங்க!.. ஏன் திடீர்னு இப்படி கேட்கறீங்க?!.." என எதிர்க்கேள்வி கேட்க, "ஒன்னுமில்ல!" என்று பேச்சை கத்தரித்தார் அவர்..

சில நிமிடங்கள் அந்த அறையில் அமைதியே ஆட்சி செய்ய, "அண்ணி பேசறத வைச்சு கேட்கறீங்களா?!.." அந்த மௌனத்தை கலைத்து சரஸ்வதி கேட்டதும், இல்லையென மறுக்காமல் சரஸ்வதியை திரும்பிப் பார்த்தார்..

"அவங்க ஏதோ நெனப்புல அப்படி பேசி இருப்பாங்க!.. எனக்கு இங்க எந்த பிரச்சினையும் இல்லைங்க!.." என்று வேகமாக மனைவி பேசியதிலேயே, ஒரு முடிவை எடுத்து இருந்தார் அவர்..

மறுநாள் இரவு அனைவரும் ஒன்றாக உணவு உண்டபின் பிள்ளைகள் மூவரும் டிவியில் மூழ்கிட, பெரியவர் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, அப்போது சுதர்சனம்,

"நான் என்னோட சொந்த ஊர்லேயே ஒரு வீடெடுத்து சரஸ்வதியையும் பிள்ளைகளையும் தங்க வைக்கலாம் னு முடிவு பண்ணி இருக்கேன்!.." என எடுத்ததும் விசயத்திற்கு வந்தார்..

அதைக் கேட்ட சண்முகமும் கோதாவரியும் அதிர, டிவி ரிமோட்டிற்காக சண்டை போட்டுக் கொண்டிருந்த சிந்துவும், நதியாவும் ஒருவரை ஒருவர் அதிர்வுடன் பார்க்க,

அரவிந்தன் மட்டும் யோசனையுடன் பார்த்திருந்தான்.. ஆனால் காவேரியின் முகத்தில் மட்டும் பிரகாசம் கூடியது..அது நெடுநேரம் கூட நீடிக்கவில்லை..

"ஏனுங் மாப்ள இப்படி ஒரு முடிவு?!!!.. அங்க யாரு இருக்கா அவங்கள பார்த்துக்க?!.. அதோட அவங்களுக்கு இங்கே இருக்கறதுல என்ன பிரச்சினை?!.." என கேட்ட கோதாவரி பாட்டியின் பார்வை காவேரியை தழுவிட..

"அதானே!.. ஏம்மா சரசு ஒனக்கு இங்க இருக்கறதுல என்ன கண்ணு பிரச்சனை?!.. திடீர்னு தனியா போகனும் ங்கறாரு மாப்ள!.. புள்ளைங்க இல்லாம வூடே வெறிச்சோடி போயிடுமே கண்ணு!.. "

"எதனா பிரச்சனை னா அண்ணன் கிட்ட சொல்ல வேண்டியது தானே மா?!..அத வுட்டு போட்டு பொசுக்குனு போறேன் னு சொல்றீங்க?!.." என ஆதங்கமாக தன் தங்கையிடம் சண்முகம் கேள்வி எழுப்ப..

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல மச்சான்!.. முதல்ல தான் குழந்தைக சின்ன புள்ளைங்க!.. அதனால தனியா ஒரு வீட்ல தங்க வைக்க முடியல.."

" இப்ப தான் அரவிந்தன் வளந்துட்டானே!.. பொறுப்பான ஆம்பளையா அவன் இருக்கானே!.. அவனே பாதுகாப்பா அவங்கள பார்த்துக்குவான்!.." என்றதும் சண்முகத்திற்கு மனம் ஆறவே இல்லை..

"அப்ப இத்தன வருசமா அவிங்களுக்கு பாதுகாப்புக்காக தான் இங்க தங்க வச்சு இருந்தீங்களா மாப்ள?!.." என சற்று ஏமாற்றத்துடன் கேட்டார் அவர்..

அதற்கு பதிலளிக்காமல் இருந்த சுதர்சனத்தின் அமைதியை, ஆமோதிப்பாக எடுத்துக் கொண்ட கோதாவரி, இது காவேரியின் வேலையாக தான் இருக்கும் என்று யூகித்தார்..

அதனால்," இத பாருங் மாப்ள!.. குடும்பம் னு இருந்தா முன்ன பின்ன தான் இருக்கும்!.. அதுக்காக ஒடனே பிச்சிக்கிட்டு போக முடியாது இல்லைங்!.." என கூறியவர்,

"புள்ளைங்க ஒன்னுமண்ணா வளர்ந்துடுச்சுங்க!.. அவிங்கள பிரிக்காதீங்!.. நீங்க இல்லாம அப்டி எல்லா தனியா புள்ளைய விட முடியாதுங் மாப்ள!.." என பாட்டி திட்டவட்டமாக கூறவும், காவேரி முகம் விழுந்து விட்டது..

பேத்திகள் இருவரும் பாட்டியின் பேச்சைக் கேட்டு மகிழ்வுடன் அவரது அருகே ஒட்டிக் கொண்டு வந்து அமர, அவர்களை பார்த்து புன்னகைத்தவர், பாசமாக தலை கோதினார்..

இதற்கு என்ன பதில் சொல்வது என யோசித்த சுதர்சனத்திற்கு இவர்கள் வருத்தத்துடன் பேசியதில் தெளிவாக புரிந்தது ஒன்று தான்..

'தனது குடும்பம் இங்கு இருப்பது காவேரிக்கு மட்டும் தான் பிடிக்கவில்லை போல என்பதே!..' என்று உணர்ந்து தனக்குள் ஒரு முடிவெடுத்து விட்டு அமைதியானார்..
ஆனால் காவேரிக்கு தான் சப்பென்று ஆகியது..

சுதர்சனம் மறுநாள் ஊருக்கு கிளம்பியதும், நதியாவிற்கு 'அப்பாடா!' என்று இருந்தது.. அவர் இருந்த வரை எதை செய்தாலும் கண்டிப்பதுடன் வெளியேயும் போய் விளையாட முடியவில்லை..

விளையாட செல்வதற்கெல்லாம் அவர் தடை சொல்லப் போவதில்லை ஆனால் வெளியே சென்றால் சும்மா இருக்க முடியாதே!..

இவளால் எதாவது பஞ்சாயத்து வந்தால் மிலிட்டரி கொடுக்கும் அறிவுரையும் தண்டனையும் யார் வாங்குவது என்ற முன்னெச்சரிக்கை தான்..

சுதர்சனம் ஊருக்கு சென்ற பின், மறுநாள் மாலை சீக்கிரமே வீடு திரும்பிய சண்முகம், தங்கையிடம் பேசுவதற்காக அவரது அறை நோக்கி செல்ல, அவர்களது அறையில் துணிகளை மடித்துக் கொண்டு இருந்தார் சரஸ்வதி..

வாயிலில் அரவம் கேட்டு திரும்பிய சரஸ்வதி, "என்ன அண்ணே இந்நேரத்துல!?.. எதாவது முக்கியமான விசயமா?!.." எனக் கேட்க, "ஒன்னுமில்ல கண்ணு!.." என்றவர் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து பேச தயங்க,

"சொல்லுங்க ண்ணே!.. எங்கிட்ட பேச என்ன தயக்கம்!?.." என சரஸ்வதி ஊக்கவும், "ஏங்கண்ணு!.. உனக்கு இங்க இருக்க எதாவது கஷ்டமா இருக்கா?!..மாப்ள ஏன் பொசுக்குனு அப்டி சொன்னாரு!.."

"எதுவா இருந்தாலும் இந்த அண்ணன் கிட்ட சொல்ல வேண்டியது தானே மா!.." என பாசமிகு அண்ணனாக சண்முகம் கேட்க,தன் சகோதரனின் அன்பில் சரஸ்வதியின் மனம் நெகிழ்ந்தது..

இருப்பினும், 'உன் மனைவியின் பேச்சை என் கணவர் கேட்டு விட்டார்.. அதனால் தான் அப்படி சொன்னார்!..' என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை..

காவேரியின் குத்தூசி பேச்சுகளை தன் சகோதரனிடம் சொன்னால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் வரும்..மனஸ்தாபம் உண்டாகும் என்றெண்ணிய சரஸ்வதி,

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு "அப்படி எல்லாம் ஒன்னுமில்ல ண்ணே!.. ஏனோ திடீர்னு அவரா கேட்டு இருக்கார் போல.." என சமாளித்தார்..

அவரது அந்த அமைதி சண்முகத்தை சிந்திக்கச் செய்ய, "சரி மா!.. எதுவானாலும் இனிமே எங்கிட்ட சொல்லு.. என்ன!.." என்று விட்டு யோசனையுடன் சென்றவர், நின்றது தன் தாயிடம்..

கோதாவரியிடம் கேட்ட போதும் அவரும் சரஸ்வதி எண்ணிய அதே காரணத்திற்காக உடனே எதுவும் சொல்லாமல் மழுப்ப,

சண்முகம் வற்புறுத்தி கேட்டதால், வேறு வழியில்லாமல் சில வருடங்களாக தொடர்ந்து வரும் காவேரியின் குத்தல் பேச்சுகளை சொல்லி விட்டார்..

கோதாவரி பாட்டி எதையும் விலாவாரியாக சொல்லாமல், மேலோட்டமாக சொன்னதற்கே சண்முகத்திற்கு மனைவியின் மீது அவ்வளவு கோபம் வந்தது..

இரவு வழக்கம் போல் தங்களது அறைக்கு சென்றவர், மனைவியின் வருகைக்காக காத்திருக்க, இயல்பாக வந்த காவேரி கணவனது முகம் காணாமல் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தாள்..

பின்பு சண்முகம் வெகு நேரம் அமைதியாக இருந்தவர், "உனக்கு இங்க எங்களோட வாழ பிடிக்கல னா உன்னோட அம்மா வீட்டுக்கே போயிடு காவேரி!.." என நிதானமாக சொன்னதும் அதிர்ந்தாள் காவேரி..

"ஏனுங்!??.. என்னாச்சுங்க.. சட்டுனு இப்படி சொல்லிட்டீங்!.." என காவேரி கண் கலங்க கேட்டதும், தான் அறிந்ததை அவர் சொல்ல, தலை குனிந்து கொண்டாள்..

"உன்னை கல்யாணம் பண்ண நான் சம்மதம் சொன்னதே என்ற தங்கச்சி எங்களோட தான் இருப்பா ன்றதுக்கு நீ மனப்பூர்வமா சரி னு சொன்னதால தான்!.." என்ற அவரது பதிலில் காவேரிக்கு இன்னும வன்மம் கூடியது..

அவர் சொல்ல நினைத்தது, 'அப்போதே யாரென்று தெரியாத அவளை ஏற்றுக்கொள்ள முடிந்த உன்னால் இத்தனை வருடங்கள் அவளுடன் பழகிய பின்னும் அவளை புரிந்து கொள்ளவில்லையே' என்ற ஆதங்கத்தில்..

ஆனால் அவர் சொன்ன விதம், தனது தங்கையால் தான் அவர் அவளை திருமணம் செய்ததாக காவேரி புரிந்து கொள்ள, சரஸ்வதியின் மீது இன்னும் வெறுப்பு அதிகமானது..

"இனிமேக் கொண்டு உன்னால இந்த குடும்பத்துல பிரச்சனை வந்தது.. நான் மனுசா இருக்க மாட்டேன்!.. தேவையில்லாத முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு என்னை தள்ளாதே!..சொல்லிபுட்டேன்!.." என்று கோபமாக கூறிவிட்டு அவர் உறங்கச் செல்ல..

இனிமேல் தன்னால் எதுவும் பிரச்சனை வராது என காவேரி கண்ணீருடன் கூறிவிட்டு கொதிக்கும் மனதுடன் படுத்துக் கொண்டாள்..

ஏதோ பேச்சின் மூலமாக தனது பொறுமலை அப்போதைக்கு அப்போது வெளியிட்டு விடும் காவேரியின் மனது, கணவனது கண்டிப்பிற்கு பிறகு தனக்குள் அடக்கி வைக்க பழகியது..

வெளிப்பட்டு விடும் உணர்வுகளை விட.. அடக்கி வைக்கும் ஆவேசமான எந்த உணர்வுகளும் வெளிவரும் போது அழிவையே உண்டாக்கும்.. என்பதை அறியாமல் போனார் சண்முகம்..

நாட்களும், மாதங்களும் வேகமாக நகர, காவேரியின் எந்த குத்தல் பேச்சுகளும் இல்லாமல் இருந்ததில் கோதாவரி சற்று நிம்மதியானார்..

ஆனால் காவேரி தன்னிடம் காட்டும் அந்நியத்தன்மையை உணர்ந்த சரஸ்வதி, ஏனென்று கேட்க, ஒன்றுமில்லை என கூறிவிட்டாள் அவள்..

நாட்கள் அதன் போக்கில் செல்ல, வழக்கமாக தனது பாட்டியுடன் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தனர் சிந்துவும் நதியாவும்..

பப்பரப்பே என்று அந்த முழு கட்டிலுக்கும் கைகால்களை விரித்து அசந்து உறங்கிய நதியா, காலையில் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து பார்க்க, அருகில் யாரும் இல்லாததை கண்டு குழம்பினாள்..

'எங்க போனாங்க?!..' என்ற யோசனையில், தூக்கக் கலக்கத்துடனே எழுந்து குளியலறை சென்று தன் காலைக் கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தாள்..

"அம்மா பசிக்குது!.. குடிக்க எதாவது கொடுங்க!.." எனக் கேட்டுக் கொண்டே சமையலறைக்கு வந்தவள், அங்கும் யாருமில்லாததை கண்டு முழித்தாள்..

"எங்க போனாங்க எல்லாரும்!.. ஒருவேளை படத்துல வர்ற மாதிரி எல்லாரும் மாயமா மறைஞ்சு போயி நான் மட்டும் தான் இருக்கேனா?!!!.." என தனக்குள் சொன்னவள்,

"அச்சச்சோ!!!.. அப்படினா நான் இனிமே சாப்பாட்டுக்கு என்ன பண்றது!!!?.."என்று அதிர்ந்து வீட்டின் ஒவ்வொரு இடமாக தேடி பரபரப்புடன் அலைய..

இறுதியில் ஓரிடத்தில் அனைவரும் கூடி இருந்ததை கண்ட நதியா குழம்பினாள்..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top