• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
118
கனவு - 12

வாகனங்களின் காதை கிழிக்கும் சத்தங்கள் ஏதுமின்றி, அமைதியாக இருக்கும் சாலைகள்!..எப்போதாவது ஓரிரு வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்க,காற்று மாசுபாடு எதுவும் இன்றி..

நகரத்தில் மூச்சு முட்டிப்போன இயற்கையே, சற்று இயல்பாக மூச்சு விடும் அழகான அந்த கிராமத்தில் நூறு முதல் நூற்றைம்பது வீடுகளே இருக்கும்..

தெருக்களின் இரு மருங்கிலும் வீடுகள் இருக்க, ஒரு வீட்டின் முன்னால் மட்டும் சற்று விசாலமான இடமும், அதை வெயிலின் தடம் பதியாமல் வேப்ப மரமும், புங்கை மரமும் இருமங்கிலும் காத்து நின்றன..

அதன் முடிவில் காணப்பட்ட அந்த பெரிய விஸ்தாரமான வீட்டின் தாழ்வாரத்தில் காலை நீட்டி அமர்ந்து, கீரை ஆய்ந்து கொண்டிருந்த கோதாவரி, "ஏ புள்ள!!!..தேனே!!.." என வழியில் சென்ற ஒரு பெண்ணை அழைத்தார்..

"என்னங் ஆத்தா!!!.." எனக் கேட்ட அந்த தேனாகப்பட்டவள் மனதிற்குள், 'இந்த கிழவி கிட்ட சிக்கினா கடைசில நம்ப குடும்பத்தையே கழுவி ஊத்துமே!' என்ற பீதி ஓடியது..

"எங்க வூட்டு மொசக்குட்டியை பார்த்தியா?!!!.." எனக் கேட்டவர், "இந்த சின்ன கழுதயும் காணோம்!.. காலங்காத்தால பழய சோத்தை தின்னுட்டு வெளிய போனாளுக.. இன்னும் வரக் காணோம்.. அப்படி எங்க தா போனாளுக னே தெரியல..போ!.." என புலம்பினார்..

"பொழுது விடிஞ்சு பொழுது போறதுக்குள்ள இவளுகளோட ஒரே ரவுசா போச்சு!.." என்று ஆவலாதி கூறவும், வாய் இருக்க மாட்டாமல் அந்த தேனு,

"ஏன் ஆத்தோவ்?!.. என்னமோ 'என்ற பேத்தி என்னய மாதிரி' னு பெரும பீத்திக்குவீங்!.. நீங் சின்ன புள்ள ல இப்படி தான் சல்லை பண்ணிட்டு இருந்தீங்களாக்கு!.." என கேலிச் சிரிப்புடன் கேட்டு விட்டாள்..

"வியாக்காலம் பேசுறயாடி நீ!.. நீ என்னமோ ஒழுக்கமாட்டோ ரொம்ப த்தே வாய் நீளுது!.. உன்ற ஆத்தாளோட நீ பண்ற ஓரியாட்டம் எல்லாம் எனக்கு தெரியாது னு நினைச்சிட்டியாக்கு!.." என இழுத்து,

"பெருசா நொன்னாட்டயம் பேச வந்துட்டா!..பெரிய இவளாட்டம்!.." என அவளை பிடித்து அர்ச்சனை செய்ய தொடங்க.."எனக்கு பொறக்காணி ல வேல இருக்கு ஆத்தோவ்!.." என கத்திக்கொண்டே ஓடியே விட்டாள் அவள்..

"அவஅவோ வூட்ல ஒருபாடு வேலத்தனம் பண்ணிக்கிட்டு.. வந்துட்டாளுங்க பெருசா.., அடுத்த வூட்டு நாயம் பேசறதுக்கு.. " என்ற கோதாவரி பாட்டி,"இவளுக எங்க போனாளுக னு தெரியலையே!?.. போய் எத்தன நேரமாச்சு!.." என தன் புலம்பலை தொடர..

"ஏனுங் அத்த!?.. என்னத்துக்கு இத்தன விசனப்படுறீங்!.. உங்க சின்ன கழுத கூட புள்ளபூச்சி தான்!.. வெவரம் பத்தாது.. ஆனா உங்க மொசக்குட்டி இருக்காளே.. " என ஒரு விதமாக இழுத்து,

"வித்தாரக்கள்ளி!!.. விட்டா இந்த ஊரையே வித்து தின்னுறுவா!.. " என ஒருமாதிரி சொல்லிக்கொண்டே வந்தாள் காவேரி.. அவரது ஒரே மருமகள்..

கோதாவரி - சீனிவாசன் தம்பதிக்கு
சண்முகம், சரஸ்வதி என இரு பிள்ளைகள்.. சீனிவாசனுக்கு ராணுவத்தில் சேர்வதில் அவ்வளவு ஆர்வம்..

ஆனால் அவரது பெற்றோர் அவர் ஏதோ கொலை குற்றம் செய்ய போவதை போல அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில், கடுப்பாகி அதனை கைவிட்டுவிட..

அந்த ஆசை மட்டும் அவரது மனதை விட்டு நீங்காமல் இருந்ததில், தனது பெண்ணிற்கு ராணுவத்தில் சேவை செய்பவன் தான் வேண்டுமென்று தேடி பிடித்த மாப்பிள்ளை தான் சுதர்சனம்!..

சுதர்சனத்தின் தந்தை அவரது சிறு வயதிலேயே இறந்து விட, அவரது தாய், மகனுக்கு திருமணம் முடித்த கையோடு தன் கடமை முடிந்தது என வைகுண்ட பதவி எய்தினார்..

இதனால் சுதர்சனம் திருமணம் முடித்து ராணுவத்திற்கு சென்ற போது, இளம் மனைவியை தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல் அவளது தாய் வீட்டில் இருக்கச் செய்தார்..

மணம் முடித்த பின்னரும் மகள் தங்களோடே இருந்தால் எந்த பெற்றோருக்கு தான் பிடிக்காது.. அதனால மனம் நிறைந்த ஆசையோடு மகளை வரவேற்று தங்களுடனே இருக்கச் செய்தனர்..

இதில் சரஸ்வதியின் அண்ணனான சண்முகத்திற்கும் மகிழ்ச்சி தான்.. இதன் காரணமாக சரஸ்வதியின் ஜாகை தாய் வீடு என்றானது..

கோதாவரி-சீனிவாசன் தம்பதியரின் முதல் பேரப்பிள்ளையான அரவிந்தனை, அவரது மகள் சரஸ்வதி பெற்றெடுத்த போது, மகன் சண்முகத்திற்கு திருமண யோகம் கூடிவந்தது..

தாய் பெண் பார்க்க வேண்டும் என்று சொல்லும் போதே, வருங்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்று 'தங்கையும் பிள்ளையும் தங்களுடன் தான் இருப்பார்கள் அதற்கு சம்மதம் சொல்லும் பெண் மட்டுமே வேண்டும்' என சண்முகம் கட்டளையிட,

இவர்களை விட வசதியில் சற்று குறைவு என்றாலும் காவேரியை பார்த்ததும் சண்முகத்திற்கும் அவரது பெற்றோருக்கும் பிடித்து விட,

அதைவிட முக்கியமானது அவளுக்கு சரஸ்வதி உடனிருப்பு பற்றி எந்த பிரச்சினையும் இல்லை என்று அவளது வாய் வார்த்தையாகவே கேட்டதில் மேலும் மகிழ்ச்சி..

அதனால் அடுத்து வந்த ஒரு சுபயோக சுபதினத்தில் சண்முகம் காவேரியின் கழுத்தில் மங்கலநாணை பூட்டி.. அன்று முதல் காவேரி அந்த குடும்பத்தின் ஒரு அங்கமானாள்...

புதிதாக வந்த மருமகள் என்ன தான் வாய் வார்த்தையாக சொன்னாலும் சீனிவாசனுக்கு மட்டும் மனதில் சிறு கவலை இருக்கத்தான் செய்தது..

ஆனால் சரஸ்வதியுடனும் அரவிந்தனோடும் அவள் பழகிய விதத்திலும், மருமகன் ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வந்த போது அளித்த உபசரிப்பிலும் அந்த கவலையும் மறைந்தது..

அரவிந்தனை அனைவரும் கொண்டாடி மகிழ, அடுத்த மூன்றாம் வருடத்தில் மருமகன் விடுமுறைக்கு வந்து சென்றதில், சுட்டி பேத்தியான நதியாவும் பிறந்தாள்..

தன் இரு பிள்ளைகளின் திருமணம் சிறப்புடன் முடிந்ததோடு..பேரன், பேத்தியும் பார்த்தாயிற்று என்ற திருப்தியில் சீனிவாசனும் இயற்கை எய்துவிட,

அந்த குடும்பத்தின் ஆண்களில் ஒருவரான சுதர்சனமும் ராணுவத்தில் இருக்க, தோப்பு, துரவு என்று சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு மொத்தமும் சண்முகத்தின் மீது வந்தது..

அதுவரை தன் குடும்பம் என்றும், நாத்தனாரின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவும் எண்ணி, எந்த பாரபட்சமும் இல்லாமல் இருந்த காவேரி,

நதியா பிறந்து ஆறு மாத குழந்தையாக இருந்த போது வளைகாப்பு முடிந்து தாய் வீடு போன காவேரிக்கு, "நீ இப்படியே நாத்தனார் புள்ளைகள கொஞ்சிட்டு இளிச்சவாயா இருந்தா.. நாளபின்ன உனக்கு னு ஒன்னுமே இருக்காது.." என்று துர்போதனை செய்ததுடன்,

"உனக்கு னு ஒரு புள்ள வரப் போகுது.. இன்னமும் நீ இப்படியே இருந்தா, இருக்கற சொத்து மொத்தமும் உன் நாத்திகாரியே அள்ளிட்டு போயிடுவா!.. பார்த்து சூதானமா இருந்துக்க!.." என அவளது தாய் எச்சரிக்க..

அங்கேயே சில மாதங்கள் தங்கி இருந்த காவேரியின் மனதில் அந்த விஷ விதை பதிந்து போக, காவேரி பிள்ளை பெற்று திரும்பிய பின்னர், இந்த குடும்பத்தினர் அறியாமல் அது வேர்விட்டு வளர்ந்தது..

அதனால் சரஸ்வதியின் மீதும் அவளது பிள்ளைகள் மீதும் சிறு கசப்பு தோன்றத் தொடங்க, அதை உள்ளேயே அழுத்தி வைத்துக் கொண்டாள்..

தங்கையிடமும் அவளது பிள்ளைகளிடமும் பாரபட்சம் காட்டினால் எகிறிடும் கணவனது கோபத்திற்கு பயந்து வெளியே பெரிதாய் காட்டிக் கொள்வதில்லை காவேரி..

தனது மாமியார், நதியாவை 'மொசக்குட்டி' என்று பாசமாக அழைப்பதாகவும், தனது மகளை 'சின்ன கழுத' என்று திட்டுவது போல் அழைப்பதாகவும் நினைத்து அவளுக்கு எப்போதும் கடுப்பாகும்..

அதை நாசூக்காக இவ்வாறு பேசி வெளிப்படுத்தி விடுவாள்..வாய் விட்டு வார்த்தைகள் வந்த பின்னர், மாமியாரின் கூர்பார்வையை கண்டவள், உடனே

"இந்த ஊர்ல இருக்கறதே பத்து பதினைஞ்சு தெரு தானே அத்த!.. இதுல எங்கயாச்சும் வெளாடிட்டு இருப்பாளுக!.. பசிச்சா வர போறாளுக!.." என சமாளிப்பாக பேசியவள்,

"நீங்க சாப்ட வாங் அத்த!.." என சிரிப்புடன் அன்பொழுக அழைக்கவும், "சம்முகமும், பேரனும் வரட்டும் காவேரி!.. அப்றமா சாப்பிடறேன்!.." என்றார் அவர்..

"இன்னிக்கு தேங்கா இறக்கற சோலி இருக்கு னு அவருக்கு சாப்பாடு தோப்புக்கு கொடுத்து விட சொல்லிட்டாரு.. உங்க பேராண்டி பக்கத்து ஊருக்கு போய் ஊ..." என

'ஊர்மேய' என்று சொல்ல வந்தவள் டக்கென்று சுதாரித்து, "ஊர்பசங்களோட கிரிக்கெட்டு வெளாட போயிருக்கான்!.. நீங்க சாப்பிட வாங்!.." என ஒவ்வொருவரை பற்றியும் விளக்கிட,

கோதாவரி அவளை ஒரு தினுசாக பார்த்தவர்,"இன்னிக்கி என்னமோ உன்னோட பேச்சுவழக்கே வெவகாரமா இருக்கு காவேரி!.. பார்த்து சூதானமா இரு!!.." என சிறு கண்டிப்புடன்

"மாப்ள வேற சீக்ரமே வர போறதா சேதி சொல்லி இருக்காரு.. அதனால வார்த்தைகள கொஞ்ச சூதானமா பேசு!.. கூறுகெட்டதனமா பேசி கூட்டைக் கலைக்க நினைக்காத!.." என்று ஆழமான பார்வையோடு எச்சரிக்கவும் செய்தார்..

பிரசவத்திற்கு சென்று திரும்பிய பின்னர் காவேரியின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு கொண்டார் கோதாவரி.. அதனால் இந்த பத்து வருடங்களாக அவ்வப்போது இப்படி தட்டி எச்சரிக்கவும் செய்வார்..

அவளது மனதை மாமியார் கண்டு கொண்டதில் சற்று பயப்பட்ட காவேரி, 'இந்த கிழவி மண்டையை போட்ற வரை நம்மால ஒன்னும் பண்ண முடியாது!' என அலுத்துக் கொண்டவள்,

'ஒருவேளை அவரு கிட்ட எதுவும் போட்டு கொடுத்துடுமோ!?..'என்று பயந்து பின்னர், 'என்ன செய்துட போறாங்க?!' என அலட்சியமாக நாக்கை சுழட்டிவிட்டு சென்றாள்..

"பள்ளிக்கோடம் லீவு விட்டதுலேர்ந்து இந்த புள்ளங்க எல்லாம் வூடு தங்கறதே இல்ல!.. என்னவோ போ!.." என தனக்குள் புலம்பிக் கொண்டு சாப்பிட சென்ற கோதாவரிக்கு,

' உன்னைய வரைய போறேன் அம்மாச்சி!.. ஆடாம அசையாம ஒழுங்கா உட்காரு!..' என அதட்டி உருட்டும் நதியாவையும்,

'இந்த ஜடைய ஒழுங்கா கட்டி விடு அப்பத்தா!..ரவி மாமா இழுத்து விட்டுடுச்சு!..' என பாவம் போல வந்து நிற்கும் சிந்துவையும் காணாமல் பொழுதே போகவில்லை..

என்ன செய்தாலும் எகிறி அடிக்கும் தன் தங்கையை விட, அழுது சிணுங்கும் தனது மாமன் மகளை வம்பிழுப்பது அரவிந்தனுக்கு ஒரு பொழுதுபோக்கு!..

அதனால் அவளை கண்டாலே எதாவது வம்பிழுத்துக் கொண்டு இருப்பான்..மூவரும் ஒரே பள்ளியில் தான் படித்துக் கொண்டு இருந்தனர்..

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த குஷியில் ஐயா பேட் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருந்த பொட்டல்வெளியில் கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறான்..

அவனுடன் சேர்ந்து தானும் விளையாட போவதாக அடம்பிடித்த தங்கையை தனது பாட்டியிடம் போட்டுக் கொடுத்து, போதுமான அர்ச்சனை வாங்க செய்துவிட்டே சென்றான் அவள் உடன்பிறப்பு..

என்ன தான் பேத்தியின் அடாவடி பாட்டிக்கு பிடிக்கும் என்றாலும் சரஸ்வதியை சரிகட்ட முடிந்த நதியாவால், தனது பாட்டியை மட்டும் ஏமாற்ற முடியாது.

எப்போது செல்லம் கொடுக்க வேண்டும், எப்போது இறுக்கி பிடிக்க வேண்டும் என எல்லாம் தெரிந்த பாட்டியிடம் அவளது தாஜா செல்லுபடியாகாது.

அவளது செயல்கள் அனைத்திற்கும் சிந்துவையும் கூட்டிச் செல்வது காவேரிக்கு பிடிக்கவில்லை என்றாலும் பிள்ளைகளை பிரிப்பதாக கணவனிடம் சொல்லி விட்டால் என்ன செய்ய என்ற இயலாமையில் அவள் எதுவும் சொல்வதில்லை.

விடிந்தது முதல் அவனுடன் விளையாட போவதற்கு ஆரம்பித்த அவளது அனத்தலுக்கு, காலை உணவு முடிந்த பின் தான் ஏதோ அங்கே மட்டும் வெளியே விளையாட பாட்டியிடம் இருந்து அனுமதி கிடைத்தது.

போனவர்களை காணாமல் தான் கோதாவரி புலம்பிக் கொண்டு இருக்கிறார்.. சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தவர், கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த கோதாவரி திகைத்தார்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top