• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 9

அலமேலுவும்,சீனிவாசனும் உணவை உண்டு விட்டு உறங்கச் சென்றிட, உணவிற்கு பின் தனது அறைக்கு வந்த வித்யாவிற்கு குமட்டிக் கொண்டு வர,

வயிற்றில் இருந்து குடலே வெளிவரும் அளவிற்கு உண்ட உணவு முழுவதையும் வாந்தி எடுத்து விட்டு அசதியில் உறங்கச் சென்றாள்..

காலையில் பங்கஜம் மாமி மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட வித்யாவிற்கு விஷத்தின் வீரியம் குழந்தையை பாதித்து கருவை அழித்திருக்க..

ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் மருத்துவமனை படுக்கையில் கிடந்த வித்யாவிற்கு, அந்த அரை மயக்கத்திலும், சுற்றியுள்ளோரின் பேச்சைக் கேட்டு கண்ணீர் வடிந்தது..

பங்கஜம் மாமியையும் அவரது கணவர், "இந்த மாதிரி பொண்ணு கூட நீ இருந்தா நம்மவா நம்மையும் ஒதுக்கி வைச்சுடுவா.. வா.. போகலாம்!.." என்று கூறி அழைத்துச் சென்றிட,

கண் திறக்க மனமில்லாமல், 'இப்படியே உயிர் போய்விடாதா?' என்று எண்ணி கண்மூடி கிடந்த வித்யாவின் செவிகளில்,

சில வருடங்களுக்கு பிறகு கேட்ட, அந்த பிரத்யேக அழைப்பு உயிர்வரை சென்று தட்டி எழுப்பியது..

"பொம்மு குட்டி!!.. எழ்ந்துரு டா!.. கண்ணை திறந்து பாரு டி செல்லம்!.." என்று அவளை உலுக்கினாள் அவளது சகோதரி!..

வித்யாவின் பத்து வயது மூத்த சகோதரி நித்யா!.. வித்யா பிறந்த போது பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த நித்யாவிற்கு,

அழகான பொம்மை போல ரோஜா நிறத்தில், மொட்டு கண்களோடு, தங்கையை கண்டு அத்தனை ஆனந்தம்!..

அவளை கைகளில் ஏந்தியது முதல் அவளது அழைப்பு, கொஞ்சல் எல்லாம் 'பொம்முகுட்டி' தான்!..

அவளை இன்னொரு தாயைப் போல பேணினாள்.. அவளது அரவணைப்பில் அன்னையை கூட தேடவில்லை வித்யா.. வருடங்கள் உருண்டோட, நித்யா கல்லூரி படிப்பையும் முடித்து விட்டாள்..

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசுத் தேர்வுகளுக்காக தினந்தோறும் பயிற்சிக்கு சென்ற இடத்தில் காதல் வயப்பட்டாள் நித்யா..

அதை அறிந்த பெற்றோர், மகளிடம் கேட்க, அவளும் ஆமோதித்து அவனை தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்றுரைக்க..

உடனடியாக அவர்கள் ஆட்களில் ஒரு வரனை பார்த்து, அனைத்தும் பேசி நான்கு நாட்களுக்குள் நிச்சயம் என்ற நிலையில்,

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த வித்யா பள்ளி சென்றிருக்க, அன்றைய தினம் அந்த பிற்பகல் வேளையில் மாலையும் கழுத்துமாய் அவனுடன் வந்த மகளை கண்டு அதிர்ந்தார்..

"என்ன டி நித்யா இது!!?.." என்று கேட்க, "நான் சொன்னேன்ல அவர் இவர் தான்.. பேர் ஷக்தி!..என்னை மன்னிச்சுடுங்கோ ம்மா!.. நாங்க கல்யாணம் பண்ணின்டோம்!.." என்ற அவளது பதிலில் "பெருமாளே!!!.." இடிந்து போனார்..

"வணக்கம் ஆன்ட்டி!.. உங்கள பேனிக் ஆக்க நினைச்சு நாங்க இங்க வரல!.. என்னோட சிச்சுவேஷன் அப்படி!.." என்று தனது நிலையை அவன் உரைக்க துவங்கினான்..

"போதும் நிறுத்துங்கோ!!.." என்ற அலமேலுவின் கோபமான வார்த்தைகளில், சொல்ல வந்ததை நிறுத்திட..

அன்று சீக்கிரமே வேலை முடிந்து வீடு திரும்பிய சீனிவாசன், வீட்டிற்குள் வர மணக்கோலத்தில் நின்ற மகளை கண்டு பேச்சற்று நின்றார்..

தந்தையை கண்டதும், அவரிடம் ஓடிவந்த நித்யா," அப்பா!.. நீங்களாவது நாங்க சொல்றத கேளுங்கோ!.." என்று அவரது கையை பிடிக்க வர..

"என்ன டி அலமு பார்த்துண்டு இருக்காய்!!?..போய் ஜலம் கொண்டு வா!.. தலை முழுகனும்!.. நமக்கு இனிமே ஒரு குழந்தை தான்!.." கூறிவிட்டு உள்ளே செல்ல முனைய..

"அப்பா!!.. ப்ளீஸ்!.. நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்!!.." கெஞ்சிய மகளிடம், "எதுவும் சொல்ல வேண்டாம்!.. எனக்கு ஒரு மகள் தான்!.. நீங்க போகலாம்!.." என்று விட்டு சென்று விட்டார்..

"பெத்தவா மனசு குளிர்ற அளவுக்கு பண்ணிட்டே டி யம்மா!.. நல்லா இருப்ப!.." என்று கண்ணீருடன் மனம் நொந்து கூறிய அலமேலு கணவனை பின்தொடர்ந்து சென்று கதவடைத்து விட்டார்..

பெற்றவர்கள் விட்டு சென்ற பின், சிறிது நேரம் நின்றுவிட்டு பின்பு கோவிலில் சென்று அமர்ந்து அடுத்து என்னவென்று யோசனையாகினர்..

அப்போது கோவிலுக்கு வந்த பங்கஜம் மாமி, "என்னடி நித்தி குட்டி இப்படி பண்ணிட்ட!!?.." என்று ஆதங்கமாய் வினவ..

"எனக்கு வேற வழி தெரியல மாமி!!.. இவா நிச்சயம் பண்ணின அந்த சுதர்சன் ஒரு வுமனைசர்!..நானே அவனை சில பொண்ணுங்க கூட உரசிண்டு சுத்தறதை பார்த்து இருக்கேன்.."

"அதை நான் சொன்னா, இவா நான் இவரை லவ் பண்றதுனால தான் அப்படி சொல்றேன்னு நம்ப மாட்டேங்கிறாங்க.." என்று தனது மனதை உரைத்தாள் நித்யா..

"வணக்கம் மாமி!.. நாங்க வேணும்னே இப்படி பண்ணல.. எனக்கு ஐ.ஆர்.டி.எஸ் ட்ரைனிங் இருக்கு..அதுக்கு போனா திரும்ப நான் வர்றதுக்கு ஒன்றரை வருசம் ஆகிடும்.."

"நான் திரும்பி வந்து அவங்க கிட்ட பேசி கன்வின்ஸ் பண்றதுக்குள்ள இவளுக்கு அவங்க கல்யாணமே செய்து வச்சுடுவாங்க னு ரொம்ப பயப்படுறா!.."

"நானும் எவ்வளவோ எடுத்து செல்லிட்டேன்.. ஆனா கடைசில இவ பயத்தை போக்க இப்படி பண்ண வேண்டியது ஆகிடுச்சு.." என்று தனது சூழ்நிலையை ஷக்தி உரைக்கவும்..

"சரி விடுங்கோ!.. ஆனது ஆயிடுத்து!.. இப்ப என்ன பண்ண போறேள்?!.. எங்க போகப் போறேள்?!.." பங்கஜம் மாமி கேட்டதும்,

"அதான் மாமி யோசிச்சுட்டு இருக்கோம்!!!.." என்ற ஷக்தியை புரியாமல் பார்த்தார் பங்கஜம் மாமி..

"எனக்கு தாய், தந்தை இல்ல.. சித்தி மட்டும் தான்!.. அவங்க ஒரு மாதிரி!.. நானும் இன்னும் ரெண்டு நாள்ல ட்ரைனிங் போயிடுவேன்..இவளை அங்க தனியாவும் விட முடியாது.."

"இப்ப போய் இவளை கூட்டிட்டு அவங்க முன்னாடி இந்த மாதிரி நின்னா எப்படி எடுத்துக்குவாங்க னு தெரியல.." குழப்பமாக ஷக்தி சொல்லவும், சற்று யோசித்த மாமி..

"சென்னைல என் பொண்ணு இருக்கா, நோக்கு தெரியுமோன்னோ!!?.." என்று நித்யாவை பார்க்க, அவளும் தெரியும் என்று பதிலளிக்க..

"இவர் ட்ரைனிங் முடிக்கற வரை நீ அவளோட வீட்ல தங்கி இரு!.. தம்பி ட்ரைனிங் முடிச்சு போஸ்டிங் கிடைச்சதும் அப்றம் ரெண்டு பேரும் அங்கேயே போய்க்கோங்கோ!.." என்ற மாமியின் திட்டத்திற்கு இருவரும் சற்று யோசித்து விட்டு பின் சம்மதித்தனர்..

அவர்கள் சம்மதம் தெரிவித்த பின்னர், துரிதமாக தன் மகளிடம் பேசி அனைத்தையும் தயார் செய்த மாமி, இவர்களை அங்கு அனுப்பியும் வைத்தார்..

தன் வீட்டில் என்ன நடந்தாலும் தனக்கு தெரிவிக்குமாறும் தனது பெற்றோரையும் பொம்முகுட்டியையும் பார்த்துக் கொள்ளுமாறும் நித்யா கண்ணீர் மல்க கூறிவிட்டு சென்றாள்..

அதன் பின் இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அவளுக்கு மாமி தெரியப்படுத்தி கொண்டிருந்தார்..

ஷக்தி ட்ரைனிங் சென்றதும் நித்யா மாமியின் மகள் தாரிணியுடன் தங்கிக் கொண்டு, வேலைக்கும் சென்று கொண்டிருந்தாள்..

ட்ரைனிங் முடித்து வந்த ஷக்திக்கு கொடைக்கானலில் போஸ்டிங் கிடைக்கவும், அங்கே சென்று தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்..

பள்ளி முடிந்து வீடு வந்த வித்யா வெகுநேரமாகியும் தனது அக்கா வராததை உணர்ந்து தாயிடம் கேட்க இனிமேல் அவளை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று உறுதியாக உரைத்திட,

என்னவென்று புரியாமல் முழித்த வித்யாவிடம், பங்கஜம் மாமி நடந்ததை கூறியதும், இதுநாள் வரை தன்னை தாயாக பேணிய தமக்கை, தன்னை மறந்து திடுமென போனதில் மிகவும் மனமுடைந்தாள்..

நாட்கள் மெதுவாக நகர, பெரியவள் ஏற்படுத்திய அவமானத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த அவர்களுக்கு ,

சின்னவளும் அது போல ஏதும் செய்து விடுவாளோ என்ற பயமே அலமேலுவை வித்யாவிடம் அவ்வாறு நடக்க உந்தியது..

இங்கு நடக்கும் அனைத்தையும் மாமி நித்யாவிற்கு தெரியப்படுத்தி கொண்டிருக்க, வித்யாவின் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு வருவதை உரைத்து இருந்தார்..

அவரிடம் இருந்து தங்கையின் மதிப்பெண் பற்றிய மகிழ்ச்சியான செய்தி வரும் என்று காத்திருந்த நித்யாவிற்கு அவர் அளித்த செய்தி, இடியாய் இறங்க, வேகமாக அங்கிருந்து கிளம்பி தங்கையை காண வந்துவிட்டாள்..

✨✨✨✨✨✨✨✨✨✨✨

"எதேஏஏ!!.. கார்த்திப்பா வா!!!??.." என்று அதிர்ச்சியான அமுதா, "என்ன சார் நினைச்சுட்டு இருக்கீங்க?.. சின்ன குழந்தை கிட்ட என்ன சொல்லி வைச்சீங்க?.. என்ன விளையாடுறீங்களா?.." என்று

அமுதா, 'என்ன? என்ன?' என்று அடுக்கிக் கொண்டே போக..அவன் மிகவும் உன்னிப்பாக கவனித்து கேட்டுக் கொண்டிருந்தான்..

"இங்க என்ன க்ளாஸா எடுக்கிறாங்க?!.. இவ்ளோஓஓ கவனமா கேட்டுட்டு இருக்கீங்க?.." என்று விட்டு அவள் சற்று மூச்சு வாங்க..

"அப்பாடா!!.. ஒரு கேப் கிடைச்சது!.. ஏன்ங்க நீங்க பாட்டுக்கு 'என்ன என்ன' னு கேள்விகளை அடுக்கிட்டே போனா,நான் என்னங்க பண்றது!?.."

"அதான் எப்ப கேப் வரும், நாம எப்ப பதில் சொல்றது? னு உன்னிப்பா கவனிச்சுட்டு இருந்தேன் ங்க!.." என்று அவன் சிரியாமல் சொன்ன அவனது பாவனையில் பவிஷ்யா சிரித்து விட்டாள்..

சிரிக்கும் குழந்தையை ஒரு பார்வை பார்த்த அமுதா,"உங்க வியாக்கியானம் எல்லாம் போதும்.. ஆனா இன்னும் பதில் வரல!.." என்று நினைவூட்டினாள் அமுதா..

"ஏன்ங்க குழந்தையோட அம்மா அவங்களே அமைதியா இருக்காங்க?!.. நீங்க ஏன்ங்க இப்படி ஓவரா பொங்கி பொங்கல் வைக்கிறீங்க?!.." என்ற

அவனது கேள்வியில் எரிச்சலடைந்த அமுதா, "அவளே காய்ச்சல் ல நிக்க முடியாம இருக்கா!.. இதுல உங்க கிட்ட போராடி பதிலை வாங்க முடியுமா?!.." என்றிட..

"என்னது காய்ச்சலா!!?.." என்று அதிர்ந்த கார்த்திக், "என்னாச்சு ரூபிணி?!.. மாத்திரை எதாவது சாப்பிட்டீங்களா?!.." பதறி கேட்டிட.. அதே நொடிகளில்..

"அம்மா காச்சலா?!.. மாத்ர சாப்பீங்கா??!.." என்று அக்கறையாக கேட்டு இருந்தாள் பவிஷ்யா!..

இருவரையும் ஒருசேர ஒரு பார்வை பார்த்த ரூபிணி, குழந்தையை அமுதாவிடம் இருந்து வாங்கிக் கொண்டு,"வண்டியை எடு அமுதா!.. போகலாம்!.." என்றாள்..

அதுவரை 'ஆ' வென்று வாய் திறந்து நின்றிருந்த அமுதா, ரூபிணியின் வார்த்தைகளில் சுயநினைவிற்கு வந்து குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு வண்டியை உசுப்பி தயாரானாள்..

தாயின் கைகளில் வந்ததும், அவளது உடற்சூட்டை உணர்ந்த குட்டிப்பெண், "அம்மா!.. ஒம்பு தொம்ப துடுது!.." என்று கவலையாக கூறினாள்..

மகளது கரிசனை, கண்களின் சுரப்பிக்கு வேலை கொடுக்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, "மாத்திரை போட்டா சரி ஆகிடும் டா!.." என்று கூறி சிறு மலரை முத்தமிட்டாள்..

வண்டி அந்த இடத்தில் இருந்து நகரவும், அவர்களையே பார்த்திருந்த கார்த்திக்கை அப்போது தான் நினைவு வந்து பார்த்த சின்ன மொட்டு, "பாய்!..காத்திப்பா!.." என்று கூறி கையசைத்தாள்..

மகளது அழைப்பு ரூபிணியை குழப்பினாலும், இப்போது அதை கேட்கும் நிலையிலோ, அல்லது அவனுடன் வாதாடும் நிலையிலோ அவள் இல்லை என்பதால் அமைதியாக அமுதாவின் தோள் மீது கண் மூடி சாய்ந்து கொண்டாள்..

அமுதாவிற்கு தான் ஏக கடுப்பு!.. 'அத்தனை கேள்வி கேட்டும், எதுக்கும் பதில் சொல்லாம அப்படியே மழுப்பிட்டான் அந்த வாத்தி!..'

'இருக்கட்டும் சிக்காமலா போயிடுவான்!..' என்று மனதில் அவனை பொரிந்து தள்ளி கருவினாள் அவள்..

வீட்டிற்கு வரும் முன்னரே அவளது உடற்சூடு அதிகரிப்பை உணர்ந்து மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஊசியை போட்டு, மருந்துகளும் வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் அமுதா..


இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் தனியாக குழந்தையை சமாளித்து, அவளும் ஓய்வெடுக்க முடியாது என்றெண்ணியே அவ்வாறு செய்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top