• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
77
கானல் - 71

"உனக்காக தானே பேசிட்டு இருக்கேன் மா!.. நீயும் அதிகமாக வெளியே போனதே இல்லயே அதனால தான் நீயும் போயிட்டு வா னு சொல்றேன்!.." என்று லீலாவதி கூறிட, யோசனையானாள் நித்யா..

"விளையாடாதீங்க ம்மா!.. நான் வேலையா வெளியே போயிட்டா இவங்கள எப்படி பார்த்துக்கறது?!.. அதுவும் தெரியாத ஊர்ல.." என தன் தாயை அடக்கினான் ராஜீவ்..

அதற்குள்,"அங்க ஏதோ 1008 சிவலிங்கங்கள் இருக்கற கோவில் இருக்காமே!.. எனக்கும் பார்க்கனும்னு ஆசை தான்ம்மா!.. ஆனா ப்ரதீப்க்கு நாங்க வர்றதுல இஷ்டம் இல்லாம வேணாம் ம்மா!.." என்று லீலாவதியிடம் கூறியவள்,

"நீங்க போயிட்டு வாங்க ப்ரதீப்!.. நான் இவனை சமாதானம் செய்துக்கறேன்!.." என்று ராஜீவ்விடம் பதில் அளித்தாள் நித்யா..

அவளது ஆசை என்று கூறிய பின்னர், எப்படி மறுப்பது என எண்ணியவன், "என்னோட இஷ்டம் னு ஒன்னும் இல்ல நித்திமா!.. குட்டியான் க்கு இப்ப தான் காய்ச்சல் சரி ஆகி இருக்கு!.. இப்ப போய் ஊர், க்ளைமேட் எல்லாம் மாறுனா பிரச்சனை ஆகாதா!?.."

"அதனால தான் நான் யோசிச்சேன்!.. இதுல என்னோட விருப்பம் னு என்ன இருக்கு!.. எப்பவும் தனியா போயிட்டு வர்ற எனக்கு நீங்க கூட இருந்தா சந்தோஷம் தான்!.." என்று அவன் மறுத்ததற்கான காரணத்தை நீளமாக சொல்லி முடித்தவன்..

"நீங்க வர்றதுனா தாராளமா வரலாம் மா!.. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.. நாலு நாளைக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் எடுத்துக்கோங்க!.."

"அப்றம் பையனுக்கு தேவையான மெடிசன், அவனோட மெடிக்கல் ஃபைல் எல்லாம் பேக் பண்ணிக்கோங்க!.." என நித்யாவிடம் சொல்ல, அவளுக்கும் சந்தோஷமாகி போனது..

"டேய் ஜீவா!..எப்படியோ நீ நினைச்சதை சாதிச்சிட்ட டா!.. இன்னிக்கு நைட் நாம கிளம்பலாம்!.. இப்ப ஹேப்பி தானே!!.." என்று சின்னவனிடமும் கேட்க,

அவன் ராஜீவ்வை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட, அதில் மனம் நெகிழ்ந்தவன், அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, "உனக்கு ஊருக்கு போக அவ்ளோ ஆசையா டா கண்ணா!.." என வினவினான்..

அதற்கு பெரிதாய் தலையசைத்து அவன் ஆமோதிக்க," உனக்கு இவ்ளோ ஆசையா இருக்கும் னு தெரியல டா ஜீவா!.. இனிமே அப்பப்ப இந்த மாதிரி ட்ரிப் போகலாம் சரியா!?.." என்று ராஜீவ் கேட்க, சின்னவனுக்கு ஏக குஷி!..

"நீங்களும் வரலாம் தானே ம்மா!!.. அங்க நிறைய பேமஸ் ஆன கோவில்கள் எல்லாம் இருக்கு!.." என்று நித்யா, லீலாவதியையும் தங்களுடன் வருமாறு அழைக்க.. ராஜீவ் சிரிப்பை அடக்க முயன்றான்..

"இல்ல டா நீங்களே போயிட்டு வாங்க!.. இப்ப எல்லாம் எனக்கு அலைச்சல் ஒத்துக்கறது இல்ல..வயசாகுதுல.."

"ஊரு, தண்ணி எல்லாம் மாறுனா உடம்புக்கு எதாவது வந்தது னா சின்னவனையும் வச்சுட்டு எங்கூடவும் உங்களுக்குத்தான் கஷ்டம் ஆகிவிடும்!.." என்று தவிர்த்தவர், அவனைப் பார்த்து முறைத்தார்..

விஹானை இறக்கி விட்டு, விளையாடும்படி கூறி அனுப்பியவன், "எனக்கு ஒரு டவுட்டு நித்திமா!..என்ன தெரியுமா இப்போ நான் பிசினஸ் ட்ரிப் போறேனா!?.. இல்ல ஏதாவது விசேஷத்துக்கு போறோமா!?..இப்படி பேமிலியா போய் நிக்கிறதுக்கு!?.." என்று சிரிப்புடன் ராஜுவ் கேட்க,

அவனை முறைத்த நித்யா, "அதான் எந்த ஃபேமிலி விசேஷம் வந்தாலும் நீங்க மட்டும் தானே போயிட்டு வரீங்க!.. அம்மா எங்கேயுமே வெளிய வர்றதில்லை.. "

"இப்படி எதாவது வந்தா தானே அவங்களும் நாலு இடம் பார்த்த மாதிரி இருக்கும்ல.. அதுக்கு தான் கூப்பிடுறேன்!.." என அவனுக்கு பதில் அளித்தாள்..

"அது சரி!!.. அவங்க வர தயாரா இருந்தா நீயே கூட்டிட்டு வா மா!.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல!.." என ஜகா வாங்கினான் ராஜுவ்..

"அது அப்படி இல்லடா கண்ணு!.. நான்தான் எந்த விசேஷத்துக்கும் வரமாட்டேன்னு சொல்லிட்டேன்!.. அதனாலதான் அவன் கூட்டிட்டு போறது இல்ல!.." என்று நித்யாவிடம் கூறிய லீலாவதி,

"எங்க போனாலும் இவனோட கல்யாணத்த பத்தி தான் கேக்குறாங்க!.. எனக்கு மனசே சங்கடம் ஆகிடுது.. அதனால் தான் எங்கேயும் போறதில்லை.." என

அவர் தன் மன வருத்தத்தை வெளிப்படுத்த, 'இதற்கு தான் என்ன சொல்வது?! 'என தெரியாமல் அவள் ராஜீவ்வை திரும்பிப் பார்த்தாள்..

ராஜிவ் அவரை கடுப்புடன் முறைத்துக் கொண்டே,"வர வர உங்களுக்கு எப்பவுமே இதே பேச்சு தான்!..இப்ப நான் ஒருத்தன் கல்யாணம் பண்ணலனா உலகம் அழிஞ்சுடுமா என்ன!?.." எனக் கோபமாக கேட்டான்..

"உலகம் எல்லாம் அழியாது டா!.. நம்ம வம்சம் தான் உன்னோட முடிஞ்சுடும்!.. நீ இப்படி ஓடி ஓடி உழைக்கிறியே யாருக்காக!?..எல்லாத்தையும் யாருக்கு இப்படி சேர்த்து வச்சுட்டு இருக்க!?.."

"இதை ஆண்டு அனுபவிக்க உனக்குனு ஒரு குடும்பம் குழந்தை னுட்டு வேண்டாமா!?.." என சற்று கொந்தளிப்புடன் லீலாவதி கேட்க, "அம்மா!!!!.." என்று அதட்டி அவரை அடக்கினான் ராஜுவ்..

"போதும் இத்தோட நிறுத்திக்கோங்க!.." என்று தன் தாயிடம் கத்தியவன், "திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணு நித்யா!..எனக்கு வெளிய வேலை இருக்கு, போயிட்டு வர்றேன்.. வந்ததும் இன்னைக்கு நைட்டு கிளம்பனும்!.." என்று விட்டு கோபமாக வெளியேறினான்..

அவன் சென்ற பின்னர், "போடா போக்கத்தவனே!.. மனசுக்குள்ள ஆசைய வச்சுக்கிட்டு, பெருசா பூட்டி வச்சிருக்கான்!.." என லீலாவதி கடுப்புடன் கூறவும், நித்யா புரியாமல் பார்க்க,

"நீ பிரதீப்ன்னு கூப்பிடுறதை பார்த்து, விஹான் ரதீப்பானு கூப்பிடுறான்!.. அவனுக்கு அது ரொம்ப சந்தோஷமா இருக்கு!..அதை வெளிய காட்டிக்கறது இல்ல.."

"ஆனா நீயோ நானோ விஹானை அப்படி கூப்பிடாதே னு கண்டிச்சா மட்டும் கோவம் வருது சாருக்கு!!." என்று ஒரு வேகத்தில் பேசிக் கொண்டிருக்க,

அவர் சொன்ன விஷயத்தில் திகைத்த நித்யா அப்படியே நின்று இருக்க, அவர் பாட்டுக்கு தொடர்ந்து கொண்டிருந்தார்..

"எந்த ஆம்பளைக்கு தான் குழந்தை தன்னை அப்பான்னு கூப்பிடுறது பிடிக்காது!!?.. இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கான்!..பைத்தியக்காரன்!!.." என தொடர்ந்து திட்டிக் கொண்டிருந்தார் லீலாவதி..

அவர் பேச்சுவாக்கில் பேசிக் கொண்டிருக்கிறாரா!? இல்லை ஏதும் உள்நோக்கம் உள்ளதா!? என புரியாமல் லீலாவதியையே பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா..

அவரோ எதையும் கவனிக்காமல், "எனக்காக ஒரு உதவி செய்வியா நித்யாமா!?.. அவன்கிட்ட பேசி எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வையேன்!.."

"இந்த தாயோட கோரிக்கையை எப்படியாவது நடத்தி கொடு டா!.. உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்!.." என்று மன்றாடலாக கேட்கவும்,

பதறிய நித்யா என்ன சொல்ல என தெரியாமல், "ஏம்மா இப்படி எல்லாம் சொல்றீங்க!?..நான் அவர்கிட்ட பேசி பார்க்கறேன்!.." என்று உறுதியளித்து விட்டு குழப்பமாக உள்ளே சென்றாள்..

மாலை கடந்த பின் வீட்டிற்கு வந்த ராஜீவ், தன் தாயிடம் பேசுவதை தவிர்த்து நித்யாவிடம், "எல்லாம் எடுத்து வைச்சுட்டீங்களா!?.. ஜீவா எங்கே?!..நாம கிளம்பலாமா?!.." என்று கேட்டான்

"உள்ளே ரைம்ஸ் பார்த்துட்டு இருக்கான்.. நீங்க இன்னும் சாப்பிடவே இல்லையே!?.." என்று நித்யா கேட்கவும்,

"எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு!.. அதனால பசிக்கல!.. சாப்பாடு வேணாம்!..உங்க திங்க்ஸ் எல்லாம் எடுங்க.. கிளம்புவோம்!.." என்று மட்டும் இயந்திரத்தனமாக கூறினான்..

"இப்படி வேண்டா வெறுப்பா கூட்டிட்டு போறது னா நாங்க வரவே இல்ல.. நீங்க மட்டும் போயிட்டு வாங்க.. ஆள விடுங்க சாமி!.." என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு அவள் அங்கிருந்து செல்ல முனைய,

"ம்ப்ச்!!.. இப்ப என்ன பிரச்சனை உனக்கு!?..ஏன் திடீர்னு இப்போ இப்படி பேசுற!?.." என கோபமாக கேட்டான் ராஜீவ்..

"பின்னே நீங்க மதியமும் சாப்பிடல.. இப்பவும் சாப்பிடல னா.. கோவத்துல வண்டியை எங்கேயாவது கொண்டு போய் விட்டுடீங்க னா!?.. அதுக்கு நாங்க பத்திரமா வீட்டிலேயே இருந்துக்கறோம்.."

"நீங்களே உங்க கோபத்தை மட்டும் வண்டில தூக்கி வச்சுக்கிட்டு போயிட்டு வாங்க!.." என அவள் சொன்னதும், அவளை முறைத்தவன், உடனே சாப்பிட அமர்ந்தான்..

உதட்டில் அடக்கிய புன்னகையுடன், அவள் அவனுக்கு உணவை எடுத்து வைக்க, வேகமாக அதை உண்டு முடித்தவன்,"சாப்டாச்சு!!..போதுமா?!.. இப்ப கிளம்புறீங்களா?!.." என உர்ரென்று என்று முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்..

"இப்படி கடனே னுட்டு ஒன்னும் எங்கள கூட்டிட்டு போக வேணாம்பா!.. நான் விஹான் கிட்ட பேசி சமாளிச்சுக்கிறேன்!.. நீங்க போயிட்டு வாங்க!.." என்று மறுபடியும் அவள் தொடங்க,

ஆழ மூச்சை இழுத்து விட்ட ராஜீவ், தன்னை சமன் செய்து கொண்டு, "இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை நித்திமா?!..வரீங்களா?..இல்லையா?!" என நிதானமாக கேட்டான்..

அவள் சிறு சிரிப்புடன் தங்களது உடைமைகளை எடுக்கச் செல்ல, நடந்தது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த லீலாவதிக்கு மனம் நிறைந்தது..

என்னதான் மகனிடம் கோபமாக பேசினாலும் அவன் உண்ணாமல் சென்றது அவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது.. அவனை சாப்பிட வைத்த நித்யாவை எண்ணி அவர் மனம் அமைதி அடைந்தது..

லீலாவதியிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவன் விடை பெறவும், நித்யா அவரிடம் கவனமாக இருக்க சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினர்..

கார் கிளம்பியது முதல் குஷியாக இருந்த விஹான் கொஞ்ச நேரத்திலேயே தூங்கி விட, பயணம் தொடங்கியது முதல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்த ராஜீவை கவனித்த நித்யா,

"நீங்க வேணும்னா எங்களை வீட்டிலேயே விட்டுட்டு, உங்க பிரண்ட்ஸோட போயிட்டு வரீங்களா பிரதீப்!?.." என அவனை வம்பு இழுப்பது போல் பேச்சை தொடங்கினாள்..

"மறுபடியும் என்னடா நித்திமா பிரச்சனை உனக்கு!!?.. ஏன் இப்படியே சொல்லிட்டு இருக்க?!. உனக்கு என் கூட வர பிடிக்கலையா?!..அப்படினா இப்பவே சொல்லிடு!.." என அவன் கடுப்புடன் கேட்கவும்,

"இல்ல.. நானும் கிளம்புனதுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன் ஏதோ ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஆ வர்றீங்க.. உங்க பிரண்ட்ஸோட வந்தீங்க னா அட்லீஸ்ட் கொஞ்சம் பேசிட்டாவது வருவீங்களே!.. அதனால தான் சொன்னேன்!.." என்றாள் அவள்..

"ஏற்கனவே அம்மா வேற கடுப்பேத்திட்டாங்க!.. நீயும் என்னை டார்ச்சர் பண்ணாத நித்திமா ப்ளீஸ்!.." என்று அவன் மனதில் அழுத்தும் விசயத்தை கூறவும்,

"அம்மான்னா அப்படித்தான் இருப்பாங்க ப்ரதீப்!.. நீங்கதான் அவங்க சொல்றபடி ஒரு பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா தான் என்ன!?.." என நித்யா கேள்வி எழுப்பினாள்..

"அவங்க சொல்ற பொண்ணா!!!??.. சரிதான்!.." என ஒருவிதமாக சிரித்தவன், "அதுக்கு அந்த பொண்ணு ஒத்துக்கனுமே!?.." என ராஜீவ் கேலியுடன் கூறியதும் அதனை புரியாமல் பார்த்த நித்யா,

"அப்படின்னா அம்மா பொண்ணு எல்லாம் பார்த்து வச்சிட்டாங்களா!?.. சொல்லவே இல்ல!!.." என்று ஆச்சரியப்பட்டவள்,

"ஏனாம்!!?..உங்களுக்கு என்ன குறை!?..ஏன் அந்த பொண்ணு ஒத்துக்க மாட்டா!?..யாருன்னு சொல்லுங்க..அவங்ககிட்ட நான் பேசுறேன்!.." என்று நித்யா கேட்கவும்,

வந்த சிரிப்பை அடக்கியவன், "அப்போ உன்னையே நீ கேட்டுக்க வேண்டியது தான்!!.." என்று மட்டும் கூறினான்..

அவன் சொன்னதன் பொருள் புரியாமல் விழித்தவள், சில நொடிகளுக்கு பிறகு அதை உணர்ந்து பெரிதாக அதிர்ந்தாள் நித்யா..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top