• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
68
கானல் - 64

"ஆத்தா சிகப்பி!!..யே.. ஆத்தா சிகப்பி!.. இங்கன வாயேன் தாயி!.." என்று அடுப்படியில் இருமலுடன் ஊதுகுழலில் ஊதிக் கொண்டிருந்த ராமாயி அழைத்தார்..

"என்ன ஆயா!!.. எதுக்கு இப்படி கத்துற?!.. நான் தான் வந்து சோறாக்கறேன் னு சொன்னேனே!.. அதுக்குள்ள நீ ஏன் போய் கஷ்டப்படுத!!?.. தள்ளு அந்தாண்ட!.." என்று வேகமாக வந்தவள், அவரை நகரச் சொல்ல,

"கோச்சுக்காத ஆத்தா!.. நீ அந்த ஆடு கூட கொஞ்சிட்டு இருந்த.. உன்னை தொல்லை பண்ண வேண்டாம் னுட்டு சரி நாமளே செய்வோம் னு வந்துட்டேன்!.." என்று அந்த வயது முதிர்ந்த குழந்தை தனது செயலுக்கு விளக்கம் அளித்தார்..

"எத்தனை தடவை சொல்றது!.. அவளை ஆடு சொல்லாதே னு.. அவ பேரு தும்பா!.. ஒழுங்கா பேரை சொல்லனும் பார்த்துக்க!.." என்று சண்டையிட்டவள், சமைக்கத் தொடங்கினாள்..

"ஆத்தா சிகப்பி!.. நான் உன்னை இதை செய்ய கூப்பிடலை கண்ணு!.. கொஞ்சம் இந்த பழங்களை கொண்டு போய் நம்ம செங்கையன் கடைல கொடுத்து காசு வாங்கிட்டு வர்றியா?!.."

"ஆத்தாளுக்கு நடக்க முடியல தாயி!.. இன்னிக்கு என்னமோ மேலு ரொம்ப நோகுது ராசாத்தி!.." என்று ராமாயி கெஞ்சலுடன் கேட்க,

"அந்தாளு கடைக்கா!!?.. போ ஆயா!..அவன் பார்க்கற பார்வையே சரியில்ல!.. ஏதோ கடிச்சு திங்கற மாதிரி பாக்கான்!!..இன்னிக்கு ஒருநாள் போகாட்டா என்ன!?.." என்று அவள் அந்த செங்கையனை நினைத்து வெறுப்புடன் கூறினாள்..

"அதுக்கில்ல கண்ணு!.. இதை கொடுத்தா தான் காசு கிடைக்கும்!.. இன்னிக்கு சாமியார் வருவாரு ல.. அவருக்கு எதாவது கொடுக்கனும்ல தாயி!..அதுக்கு தான் போக சொல்லுதேன்!.." என்றார் ராமாயி..

"ஆமா நானும் ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கேன்!..யார் அது!?..அதுக்காக எதுக்கு நீ செலவு செய்யுத!?.. நம்ம பாடே இங்க திண்டாட்டமா இருக்கு!.. இதுல இதெல்லாம் தேவையா?!.." என அவர் கூறியதில் ஒப்புதல் இல்லாமல் பேச,

"அப்படி எல்லாம் பேசாத தாயி!.. பாவம் ல நம்மால ஆன ஒதவியை ஒருத்தருக்கு செய்யறதுல தப்பில்ல ஆத்தா!.. என் தேனம்மா ல.. கடைக்கு போய் இதை மட்டும் கொடுத்து காசு வாங்கிட்டு வா கண்ணு!.." என்று அவர் கெஞ்சலில் இறங்கினார்..

" இன்னிக்கி ஒரு நா தான் போவேன்!.. மறுக்கா போக சொல்லாதே!.. அந்த பரதேசி ஒரு மாதிரி பாக்கான் ஆயா!.. புரிஞ்சுக்கோ!.." என தன் நிலையையும் அவள் கூறி போவதற்கு சம்மதிக்க,

"என் தங்கம்!.. நீ போயிட்டு வா தாயி!.. நான் அந்த பைய கிட்ட பேசி வையுதேன்!.. பத்திரமா போயிட்டு வா கண்ணு!.." என்று அவர் அவளுக்கு சமாதானம் கூறி அனுப்பினார்..

"நீ சொன்னா மட்டும் அப்படியே நடுங்கிட்டு போயிடுவான் பாரு!!.. நீயே கை கால் நடுங்கிட்டு இருக்க.. இதுல அந்த கடோத்கஜனை மிரட்ட போறியாக்கும்!..ஆகற கதையை பேசு!.." என்று அவரை கிண்டல் செய்தவள்,

அவர் கொடுத்த பழங்களை எடுத்துக் கொண்டு, "இன்னும் எத்தனை நாளைக்கு தான் அந்தாளையே காபந்து பண்ணிட்டு இருக்க போறியோ!?.." என்று திட்டி விட்டே கிளம்பினாள் அவள்..

தங்கள் குடிசையில் இருந்து கிளம்பியவள், ஒற்றையடிப் பாதையில் இறங்கி, இயற்கையை ரசித்துக் கொண்டே கூடையை சுமந்து வந்து நெடுஞ்சாலையை அடைந்தாள்..

சாலையை கடந்து கடையை வந்தடைந்தவள்," யண்ணே!!.. இந்தாங்க!.. ஆயா இதை கொடுத்துட்டு காசு வாங்கிட்டு வர சொல்லுச்சு!.." என அங்கிருந்த கணக்கர் போன்றவரிடம் அவள் நீட்ட,

"ஏ புள்ள சிகப்பி!.. நானா இங்க இந்த பழங்களை அடுக்கி யாவாரம் பார்க்கறேன்!.. போய் கட்டையன் கிட்ட கொடு மா!.." என்று கடை பையனிடம் அனுப்பினார்..

அப்போது அங்கே இருந்த செங்கையன்,"பழம் எல்லாம் நல்லா பழுத்து இருக்கா சிகப்பி?!.." என்று காம பார்வை கொண்டு கேட்க, அவனை முறைத்தவள்,

"நல்லா கன்னம் பழுக்கற அளவுக்கு கையால கொடுத்தா தெரியும் பழுத்துறுச்சா இல்லயா னு!.." என்று கண்களில் அனல் பறக்க பொரிய,

அவன் சற்று அமைதியாகி விட, அவள் கணக்கரிடம் காசை பெற்று விட்டு அவனை முறைத்துக் கொண்டே வெளியேறும் நேரம், எதிரில் வந்தவர் மீது இடித்து விட்டாள்..

"மன்னிச்சுடுங்க!.." என்று இவள் மன்னிப்பைக் கேட்க, அதேசமயம் "பரவால்லங்க!.." என்று எதிரில் வந்தவள் சொல்ல, சிகப்பி யை பார்த்து யோசனையான அவள்,

அவளது முகத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கும் வேகத்தில், "ஒரு நிமிஷ்ம்ங்க!!.." என்று சற்று சத்தமாக அழைக்க, அதற்குள் சாலையில் இறங்கிய அவள் திரும்பிப் பார்த்தாள்..

அதேசமயம் சாலையில் வேகமாக வந்த வேன் அவளை இடிப்பது போல் வரவும், தன் கண் முன்னே மீண்டும் நேரவிருந்த விபத்தை உணர்ந்து மயங்கினாள் அவளை அழைத்த வித்யா..

அவளது அழைப்பில் திரும்பியவளோ, விரல் தொடும் தொலைவில் வந்து ப்ரேக் அடித்து நின்ற வேனை கண்டு, அவளது கண் முன்னே ஒரு விபத்து காட்சி விரிய, அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்..

**************

மாணவர்கள் மதிய உணவை உண்டு கொண்டு இருந்தனர்.. வரும் போதே வெளியே பார்த்த பழக்கடையில் பிரத்யேக பழங்களை கண்ட வித்யா, அதை வாங்க ஆசை கொண்டு சக ஆசிரியையுடன் சென்றாள்..

பழங்களை பார்த்துக் கொண்டே கடைக்குள் நுழைந்தவள் எதிரே வந்தவள் மீது மோத, அவளிடம் மன்னிப்பைக் கேட்க நிமிர்ந்தவள், அவளைக் கண்டு திகைத்தாள்..

'ஒருவேளை நமது கற்பனையோ?!' என்று குழம்பிய வித்யா, மீண்டும் அவளது முகத்தைக் காண எண்ணி அவளை அழைக்க, அதேவேளை அந்த வேனும் நெருங்கி விட, அதைக் கண்டு தான் மயங்கி சரிந்தாள்..

மயங்கிய வித்யாவை அருகில் இருந்த ஹேமலதா டீச்சர் தாங்கி பிடித்து,"ரூபிணி!...ரூபிணி!.." என்று அழைத்துக் கொண்டே முகத்தில் தண்ணீர் தெளிக்க, மெல்ல விழி மலர்ந்தவள், இருக்கும் இடமும், நடந்த நிகழ்வும் உணர்ந்து வேகமாக எழுந்தாள்..

எழுந்த வித்யா உடனே அங்கே இருந்த கூட்டத்தை விலக்கி அவளிடம் விரைய, மயங்கிக் கிடந்த அவளை கண்டு அதிர்ந்து பதறியவள், வேகமாக அவளருகே சென்றாள்..

அதற்குள் கடையிலிருந்த ஆட்களும் அங்கிருந்தவர்களும் சேர்ந்து அவளுக்கு முதலுதவி செய்தும் எழும்பாததால், மருத்துவமனை அழைத்துச் செல்ல விழைந்தனர்..

"ஹேமா டீச்சர்!.. ஒரு எமர்ஜென்சி!.. ப்ளீஸ் மத்த டீச்சர்ஸ்ஸோட பசங்கள கூட்டிட்டு கிளம்பிடுறீங்களா?!.. நான் இவங்க கூட போயாகனும்!.." என்று பதட்டமாக வித்யா பேசவும்,

அவளது பதட்டத்தை உள்வாங்கிய அவர், "உனக்கு ரொம்ப தெரிஞ்சவங்களா ரூபிணி!?.. நீயே நர்வஸ்ஆ இருக்க..உன்னை எப்படி!!?...." 'தனியா விட்டுப் போவது?!' என்று தயங்கிய அவர்,

"நானும் வரலாம்னு பார்த்தா அந்த ரெண்டு டீச்சர்ஸ்னால பசங்கள பார்த்துக்க முடியாது.. இவங்க உனக்கு எதாவது ரொம்ப வேண்டியவங்களா?.." என்று தயக்கமாக வினவினார்..

"ஆமா டீச்சர்!!..ப்ளீஸ் எனக்காக இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க!.." என்று அவள் கெஞ்சுவது போல் கேட்கவும்,

"சரி நான் பார்த்துக்கறேன்!.. ஆனா கார்த்திக்கிற்கு முதல்ல ஃபோன் பண்ணி சொல்லு மா!.. ஏன்னா உன்னை தனியா விட்டுட்டுப் போகவும் மனசு வர மாட்டீங்குது!.." என்று அவளது நலனில் அக்கறையுடன் கூறினார்..

"ஓகே டீச்சர்!.. நான் அவரை கூப்பிட்டு பேசறேன்!.. வண்டி கிளம்பப் போகுது.. நான் அவங்களோட போறேன்!.. ஸாரி டீச்சர்!!.. என்ன னு நான் அப்றம் சொல்றேன்!..பசங்கள கவனமா பார்த்துக்கங்க டீச்சர்!..பை!!.." என்றவள்,

அவளை மருத்துவமனை அழைத்துச் செல்லும் வாகனம் எங்கு செல்கிறது எனக் கேட்டு அதன் பின்னோடே விரைந்து சென்றாள் வித்யா..

மருத்துவமனை வந்ததோடு அவளை அழைத்து வந்தவர்கள் கடமை முடிந்தது என்று கிளம்பி விட, அந்த கடையின் கணக்கரும் அவளது பாட்டிக்கு தெரிவிப்பதாக சொல்லி கிளம்பினார்..

வித்யா மட்டும் அவளுடன் இருந்தாள்..வெகுநேரம் ஆகியும் அவள் கண் விழிக்காமல் இருக்கவும், வித்யாவிற்கு அழுகை அழுகையாக வந்தது..இருப்பினும் தன்னை கட்டுப்படுத்த முயன்றாள்..

அப்போது தான் கார்த்திக்கிற்கு அழைக்கச் சொல்லி ஹேமலதா டீச்சர் சொன்னது அவளது நினைவிற்கு வரவும், அவனது எண்ணிற்கு அழைத்தாள்..

'எப்போதுமே நமக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் கோபமோ, சந்தோஷமோ, கண்ணீரோ, எதுவாயினும் நம் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது..' இவள் மட்டும் விதிவிலக்கா என்ன!!!?..

அதுவரை தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த வித்யா, கார்த்திக்கிற்கு அழைத்ததும் அவளை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது..

கண்ணீரை தவிர வேறு வார்த்தைகள் வெளிவர சண்டித்தனம் செய்ய, அவள் வெகுவாக முயன்று அவனை விரைந்து வருமாறு மட்டும் சொல்லி வைத்து விட்டாள்..

அவளை பரிசோதித்த மருத்துவரும் 'அதிர்ச்சி மயக்கம் தான் சீக்கிரமே எழுந்து விடுவார்' எனக் கூறிவிட்டு சென்றுவிட, அதன் பிறகு தன் மனதிற்குள் தனக்கு தெரிந்த அனைத்து ஸ்லோங்களையும் கண் மூடி சொல்லத் தொடங்கினாள்..

சில மணிநேரங்கள் கழித்து கண் விழித்த அவள், அந்த இடத்தையே சுற்றும் முற்றும் பார்க்க, அது மருத்துவமனை என்பதை உணர்ந்து யோசனையில் ஆழ்ந்தாள்..

பிறகு தன் அருகே கண் மூடி அமர்ந்து
இருந்த வித்யாவை கண்டவள், அவள் முகம் பரிச்சயமானதாக தெரிய, தன் நினைவடுக்குகளில் யாரவள் என்று தேடிக் கொண்டிருக்க..,

சரியாக அதேசமயம் கண் விழித்த வித்யா, அவளை கண்டு ஆனந்த கண்ணீர் வழிய,

"சண்முகம்!!!!!!.." என்ற தனது பெயரின் பிரத்யேக அழைப்பை உணர்ந்து அறைவாயிலை அவள் பார்க்க, அதேவேளை வித்யாவும் திரும்பிப் பார்த்தவள் அங்கே கார்த்திக்கை கண்டு அவனருகே விரைந்தாள்..

அவனிடம் வேகமாக வந்தவள், அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டு பேச இயலாமல் கண்ணீருடன் நிற்க, தன் கண்களையே நம்ப முடியாமல் ஸ்தம்பித்து இருந்தான் கார்த்திக்!..

"டேய் கார்த்தி!!.நீ எப்படி இங்க!!!?.. நான் ஏன் இங்க இருக்கேன்!!?.." என்று தன்னை ஆராய்ந்து கொண்டே, 'என்ன கேட்க!?' என்று புரியாமல் குழம்பியவள், அவனது கரத்தைப் பற்றியிருந்த வித்யாவை கண்டு யோசனையானாள்..

"இவ்ளோ நாளா எங்கே இருந்த நீ!!?.. உனக்கு ஆக்சிடென்ட் ஆகி!..." 'நீ இறந்ததாக நினைத்திருந்தேன்' என வார்த்தையாகக் கூட சொல்ல இயலாமல் கண்ணீருடன் அவன் தடுமாற,அவள் குழம்பினாள்..

தன் நினைவுகளை அலசியதில், அன்று நடந்த நிகழ்வுகள் நினைவிற்கு வர மறுக்க, அதீத சிந்தனையால் மீண்டும் கண்ணயர்ந்தாள் சண்முகதீபிகா!..

அவள் கண் மூடியதை கண்டவன், வேகமாக அவளருகே வந்து, "எழுந்திருக்கா! கண்ணை திறந்து பாரு தீபு!! என்னைப் பாரு!.." என்று

அவள் கன்னங்களை தட்ட, அவளிடம் மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்க, வித்யா மருத்துவரை அழைக்க ஓடி இருந்தாள்..

மருத்துவர் வந்து, அவர்களை யாரென்று விசாரிக்க, இப்போது நடந்ததும், முன்னர் நடந்ததும் என அனைத்தையும் கார்த்திக்கும் வித்யாவும் விளக்கினர்..

"ஒன்னுமில்ல கொஞ்சம் அதிகமாக ஸ்ட்ரெய்ன் பண்ணுனதால அவங்க யோசிக்க முடியாம தூங்கிட்டாங்க!.. கொஞ்ச நேரத்துல கண் விழிச்சுடுவாங்க!.." என்று விட்டு சென்றார்..

அதற்குள், "ஆத்தா!.. என் தாயி சிகப்பி!!.. என்ன ஆச்சு ராசாத்தி உனக்கு!!?..தெய்வமே!!..யாரு கண்ணு பட்டுச்சோ என் பொண்ணு இப்படி கிடக்காளே!!.." என்று அரற்றலுடன் நுழைந்தார் ராமாயி பாட்டி.

அறைக்குள் நுழைந்த அந்த வயதான மூதாட்டியை கண்டு குழம்பிய இருவரும், யாரென பார்க்க, "நீங்க தான் என் பொண்ணை காப்பாத்துனீங்களா கண்ணுகளா?!.." என பரவசமாகக் கேட்டார் அவர்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top