• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
52
கானல் - 50

அம்சவேணி தனது அத்யாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்று விட, இது தான் சமயம் என்று வித்யாவும் அவளது அறையில் சோதனையிட்டாள்.

ஆனால் எத்தனை முறை தேடியும், சந்தேகப்படும் படியாக எந்த தடயமும் கிடைக்காமல் அலுத்துப் போய் இருந்தாள் வித்யா.

அம்சவேணியை பற்றி விவரம் கேட்டு கார்த்திக் அணுகி இருந்த தனியார் டிடெக்டிவ், அவசரமாக அழைத்ததால் அவரை காண வெளியே சென்றிருந்தான்.

பவிஷ்யா தனது விளையாட்டு பொருட்களை விளையாடுகிறேன் என்ற பேரில் பரப்பி வைத்திருக்க, அதில் கையால் சுழற்றும் காத்தாடியை சுற்றி விட முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு அதை சுழற்ற வராததால் வித்யாவிடம் சென்றவள், தாய் சொல்லி தந்ததை கவனமாக கற்றுக் கொண்டு வந்து, மீண்டும் மீண்டும் சுழற்ற முயற்சித்தாள்.

விளையாட்டு கவனத்தில் அதை சுழற்றி விட்டுக் கொண்டே ராஜேஸ்வரியின் அறையில் நுழைந்தும் விட்டாள்.

அவள் இதுவரை முயற்சித்ததில் அந்த காத்தாடி சிறிது மட்டுமே மேலெம்பி இருக்க, இம்முறை வேகமாக சுழற்றியதில் அது பறந்து சென்று ராஜேஸ்வரியின் படுக்கை அருகே இருந்த ஜன்னலில் சென்று விழுந்தது.

அந்த அறையில் எப்போதும் போல டிவியில் ஓடிக் கொண்டிருந்த அவளது வீடியோவின் சத்தத்தில் சற்று பயம் தெளிந்த சின்ன குட்டி, அதை எடுக்க எண்ணினாள்.

குழந்தை மும்மரமாக விளையாடிக் கொண்டிருந்ததால், வித்யா குளியலறைக்கு சென்றிருக்க, இங்கே சின்னவளோ அதை எப்படி எடுக்க என்ற சிந்தனையில் இருந்தாள்.

பின்பு சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. மெதுவாக அவரை கூர்ந்து பார்த்தவள், அவர் தூங்குவதாக நினைத்துக் கொண்டு சத்தமில்லாமல் அவரை நெருங்கினாள்.

சில நொடிகள் அவரிடம் அசைவின்றி இருப்பதை உணர்ந்தவள், பூனை போல அவரது கட்டிலில் மெதுவாக ஏறி தன் பிஞ்சுக் கையை கொண்டு எம்பி எம்பி அதை எடுக்க முயற்சித்தாள்..

அவ்வப்போது அவர் விழித்துக் கொள்வாரோ என்று அவரையும் கவனமாக பார்த்துக் கொண்டாள் அந்த சில்வண்டு..

சில பல முயற்சிகளுக்கு பிறகு, அந்த காத்தாடி அவளது கையில் அகப்பட, மகிழ்ச்சியில் வேகமாக இறங்க முயன்றதில், அவரது சுவாசத்திற்காக பொருத்தி இருந்த குழாயில் அவளது பிஞ்சுப் பாதம் சிக்கி இழுத்து விட,...

அதனால் திடீரென கேட்ட அந்த உபகரணங்களின் சத்தத்தில் பயந்த குழந்தை கட்டிலை விட்டு வேகமாக இறங்க, நிலை தடுமாறி கீழே விழுந்ததும்,

"அம்மாஆஆ!!.." என்ற அலறலுடன் கத்தி அழத் தொடங்கினாள்.. அதே நேரம் டிவியில் ஓடிய வீடியோவில் கைக்குழந்தையான அவளது அழும் காணொளியும் ஓட..

அன்று கார்த்திக் வேதனையுடன் பேசியதில் இருந்தே சுற்றி நடப்பதை உணரத் தொடங்கி இருந்த ராஜேஸ்வரியின் மனம்.

எப்போதும் எங்கோ தொலைவில் கேட்கும் குழந்தையின் அதே அழுகுரல் இன்று தனக்கு மிக அருகே கேட்டதில், அவரது உணர்வுகள் உயிர் பெற்றது.

அழும் குழந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு அவரது மனம், 'அழாதேடா செல்லம்!!.. என் தங்கமே!' என்று அரற்றிக் கொண்டிருக்க,

அதே வேளையில் குளியலறையில் இருந்து வெளியே வந்த வித்யா, பிள்ளையின் அழுகுரல் கேட்டு அங்கு விரைந்து வந்தவள், "குட்டிமா! பவிஷ்யா செல்லம்!" என்றழைக்க..

அதே நொடியில், "தாரா குட்டி!" என்ற சத்தத்துடன் உணர்வுகள் மீண்டு உயிர் பெற்று கண் விழித்தார் ராஜேஸ்வரி.

அவர் கண் விழித்ததை பார்த்து நம்ப முடியாத வியப்பில் ஸ்தம்பித்துப் போய் நின்ற வித்யா, அழும் குழந்தையை மறந்து சிலையென சமைந்தாள்.

பிள்ளையின் அழுகையை சமாதானம் செய்ய ராஜேஸ்வரி எழ முயன்ற போது தான் சுற்றி நடப்பதை உணர்ந்த வித்யா,

குழந்தையை வேகமாக தூக்கி "என்னாச்சுடா செல்லம்? அழாதே கண்ணம்மா." என்று அவளை அள்ளி அணைத்து அழுகையை நிறுத்த முயன்றாள்.

புதிதாக பார்த்த அவர்களை ராஜேஸ்வரி யாரென தெரியாமல் தன் நினைவடுக்குகளில் தேட, மீண்டும் அவரது விழிகள் மூட விழையும் போது,

"அம்மா! எழுந்திருங்க. அம்மா! இதோ உங்க பேத்தி." என்று பிள்ளையை அவர் முன் காட்டி அவரை விழித்திருக்க வைக்க முயற்சித்தாள்.

'பேத்தி!' என்ற ஓர் சொல்லில் மீண்டும் உயிர் வர பெற்று கண் விழித்தவர் எண்ணங்களில், இரு வருடங்களுக்கு முன் கார்த்திக் சொன்ன ஒவ்வொரு விசயமும் நினைவில் வந்தன.

அதில் மகள் மற்றும் மருமகனின் இறப்பும் அவரது நினைவில் வர, விழிகள் தானாக கண்ணீர் சிந்தின.

பின்னர் வித்யா கூறிய பேத்தி என்ற சொல்லில் டிவியில் ஓடிய வீடியோவை விரல் நீட்டி அவளிடம் காண்பித்து, பவிஷ்யாவையும் காட்டி 'அவளா இவள்!?' என்ற சமிக்ஞையில் கேட்டார்.

அதற்கு கண்களில் பெருகிய நீருடன், 'ஆம்' என்று பரவசத்துடன் தலையசைத்து வித்யா ஆமோதிக்க, ராஜேஸ்வரியின் விழிகளில் ஆனந்த கண்ணீர் பெருகியது.

தனது பேத்தி திரும்பவும் வந்ததில் நிம்மதியான அவரது மனம் மீண்டும் விழிகளை மூடிக் கொள்ள,

பதறிய வித்யா, "அம்மா! அம்மா!" என்று அழைத்தும் எழாமல் போக, அழுகையை நிறுத்தி தேம்பிக் கொண்டிருந்த குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தன் அலைபேசியைத் தேடி ஓடினாள்.

விரைந்து சென்று அதை எடுத்தவள், கார்த்திக்கிற்கு உடனே அழைக்க அவன் அதை ஏற்றதும், "கார்த்திப்பா! கார்த்திப்பா!!" என்று மட்டுமே கேட்ட வித்யாவின் அழுகுரலில்.

"என்னாச்சுடா விதுமா!!?ஏன் அழுகுறம்மா?"அவனது பதட்டத்திற்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.. "இதோ நான் உடனே வர்றேன்." என்று அவன் அழைப்பை வைக்க போகவும்,

"கார்த்திப்பா! அம்மா கண் விழிச்சாங்க. நீங்க உடனே டாக்டரை அழைச்சிண்டு வாங்களேன்." என்று வேகமாக சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.

"என்ன!!" என்று ஆனந்த அதிர்ச்சி அடைந்தவன் கூவிட," ஆனா மறுபடியும் கண் மூடிட்டாங்க. நீங்க சீக்கிரமே டாக்டரோட வாங்களேன். எனக்கு பயமா இருக்கு." தன் மனநிலையை உரைத்தாள் வித்யா.

வித்யா சொன்னதை கேட்ட கார்த்திக்கிற்கு ஒன்றும் ஓடவில்லை. சில நொடிகள் மகிழ்ச்சியில் பரவசமாக கண்ணீர் விட்டவன், மீண்டும் அவர் கண் மூடியதாக சொன்னதில் பதறி மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

அவர்களது குடும்ப மருத்துவரோடு பரபரப்பாக கார்த்திக் வீட்டில் நுழைய, வாசலிலேயே பிள்ளையை இடுப்பிலேயே வைத்துக் கொண்டு வித்யா அவனை எதிர்கொண்டாள்.

பரவசத்துடன் அவளை நெருங்கியவன், "என்னாச்சுடா? எப்படி?!" என்ன கேட்கவென்றே அவனுக்கு தோன்றவில்லை. "கார்த்திப்பா!" என்று வித்யா சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே,

அடி எதுவும் பலமாக இல்லை எனினும், பயத்தில் மிரண்டு அழுத குழந்தை, தன் தந்தையை கண்டதும் அவனிடம் ஆவலாதி சொல்வதற்கு, "காத்திப்பா!" என்று கண்ணீரோடு அவனிடம் தாவினாள் சின்ன குட்டி.

"என்னடா குட்டிமா?!.." என்று அவன் கேட்டது தான் தாமதம் உடனே, "பாப்பா வீந்துத்தேன். பாத்தி கத்தில் மேய இந்து கீய தொபால்னு வீந்துத்தேன்!.." என்று கண்ணை கசக்கி கூற,

அவள் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும், அவன் வித்யாவை பார்க்க, அவள் வந்து பார்த்ததில் இருந்து நடந்ததை பரவசத்துடன் கூறினாள்.

மகளிடம் சமாதானம் சொன்னவன், வித்யா சொன்னதை கேட்ட மருத்துவரோடு, தாயின் அறைக்கு விரைந்துச் சென்றான்.

அவரை பரிசோதித்த மருத்துவர் அவரது கருவிழி அசைவை வைத்து, "பயப்பட ஒன்னுமில்ல. அவங்களுக்கு நினைவு திரும்பிடுச்சு. இது வெறும் ஓய்வுக்கான தூக்கம் தான்."

"இவ்ளோ நாள் வெஜிடேடிவ்ஆ இருந்தாங்க அதனால டக்குனு அவங்க ப்ரைன் நியூரான்ஸ் வேலை செய்யவும், ஓய்வுக்காக உறக்கத்துக்கு உந்தி இருக்கும்." என்றவரை அவர்கள் புரியாமல் பார்க்க,

"உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன். நீங்க ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்தே இருக்கீங்கனு வைச்சுக்குவோம். ஸடனா எழுந்தீங்கனா முடியாம திரும்ப உட்கார்ந்துடுவீங்க இல்லையா?"

"உங்க ப்ரைன் நீங்க எழுந்துக்க போறீங்கனு பாடியை தயார் பண்ணினா தான் எழுந்திரிக்க முடியும். இதெல்லாம் ஃப்ராக்ஷன் ஆஃப் செகன்டுல நடந்துடும்."

"ஆனா இவங்க கேஸ் அப்படி இல்ல. கிட்டத்தட்ட ரெண்டு வருசமா அசைவில்லாம இருந்து இருக்காங்க.ஸோ அவங்க பாடிக்கு தயாராக கொஞ்சம் டைம் தேவைப்படுது. அவ்ளோ தான்.சீக்கிரமே எழுந்துடுவாங்க."

நீண்ட விளக்கம் அளித்த மருத்துவர், அவர் கண் விழித்ததும் செய்ய வேண்டியதையும், சில மருத்துவ ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கிவிட்டு, அதன்பின்னான மருந்து மாத்திரைகள் பற்றியும் கூறினார்.

அனைத்தையும் கர்ம சிரத்தையுடன் கேட்ட இருவருக்கும், ராஜேஸ்வரி திரும்ப கண் விழிக்கும் வரை பதட்டமாக தான் இருந்தது.

மருத்துவர் வந்து சென்ற பின், "இந்த அம்சவேணி எங்க போனாள்டா விதுமா?இன்னுமா வரலை?" என்று அவளை பற்றி வித்யாவிடம் விசாரித்தான்.

அழுதழுது சோர்வான பவிஷ்யா தூங்கி விட, அவளை அறையில் படுக்க வைத்து விட்டு வந்த வித்யா, கார்த்திக் கேட்டதும், "எங்க போனாள்னு தெரியல பா!!.."என்றாள்.

அவள் சென்ற பின்னர், அவளது அறையில் வித்யா சோதனை செய்து எதுவும் கிடைக்கவில்லை என்றும் சொல்ல,

"அவளைப் பற்றி தான் ஏதோ தகவல் கிடைச்சதா அந்த டிடெக்டிவ் சொன்னார். அங்க தான் போயிட்டு இருந்தேன்!.. அதுக்குள்ள நீ ஃபோன் பண்ணவும் ஓடி வந்துட்டேன்!.." என்றான் அவன்..

குழந்தையும் உறங்கி விட, ராஜேஸ்வரி மீண்டும் கண் விழிக்கும் வரை வித்யா, பூஜை அறையில் கடவுளை வேண்டிக் கொண்டே ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருக்க,

கார்த்திக் தன் தாயின் அருகிலேயே அமர்ந்து, அவர் எப்போது கண் விழிப்பார் என்று தவம் இருந்தான்.

அவர்களின் வேண்டுதல் பலனாய் சில மணிநேரத்தில் கண் விழித்த ராஜேஸ்வரி, முதலில் கண்டது தன்னருகே கண் மூடி அவரது கரத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகனைத் தான்!.

"கார்த்தி!" என்று அவர் மெதுவாக அழைத்ததும், பரவசத்துடன் நிமிர்ந்தவன் கண்கள் ஆனந்தமாய் நனைந்தன.

"என்னம்மா நீங்க? இவ்ளோ நாள் என்னை தவிக்க விட்டீங்கள்ல, உங்களுக்கு என்மேல பாசமே இல்ல." என்று கண்ணீரோடு பொய்கோபம் காட்டினான் கார்த்திக்.

அவனது செயலில் லேசாக சிரித்தவர்,"அதான் வந்துட்டேனே!. எங்கே என் பேத்தி?" என்றவர் பின்னர் வித்யாவை நினைவிற்கு கொண்டு வந்தார்.

"ஆமா, யாருடா அந்த பொண்ணு? புதுசா இருக்கா? பாப்பா அவளை அம்மா சொல்றா?" என்று சோர்வாக விசாரித்தார்.

அவரது கேள்வியில் அவன் திருதிருவென விழிக்க, "எனக்கு தெரியாம என்னடா பண்ணுன?" என்று அவனை ஆராய்ச்சியுடன் கேட்டார்.

"அடங்கப்பா!! சொல்லிட்டா மட்டும் அப்படியே எழுந்து வந்து 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க'னு வாழ்த்தறாப்ல தான். அட போங்க ராஜி மாதா." பழைய கார்த்திக் வெளியே வந்தான்.

"அப்படினா!!!? " என்றவரிடம், வித்யாவிற்கு நேர்ந்த அவலத்தை மட்டும் தவிர்த்து, அவளை சகோதரியின் கிளினிக்கில் பார்த்து அவள் மீது காதல் கொண்டது முதல், பவிஷ்யா அவளிடம் சென்றது வரை சுருக்கமாகச் சொல்லி.

அவர்களை மீண்டும் சேலத்தில் சந்தித்ததும், மணம் முடித்தது வரையும் சொல்ல,அனைத்தையும் ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி, கதவருகே நின்ற வித்யாவை எட்டிப் பார்த்து கை நீட்டி அழைத்தார் அவர்.

அவரது கையசைவில் ஓடி வந்து அவர் பாதங்களில் பணிந்து, ஆசிர்வாதம் வாங்கிய வித்யாவை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.

தன்னை சுற்றி பார்த்து இருக்குமிடம் அறிந்தவர், "அப்படினா இத்தனை நாளா இங்க என்னை யார் பார்த்துக்கிட்டா?" என்று கேட்ட கேள்விக்கு, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top