• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
47
கானல் - 45

கார்த்திக் ஊருக்கு செல்வது பற்றி சொன்னதும், வித்யா அதை தன் தோழியிடம் கூற, ஈஸ்வரியும் ஒரு நாள் வந்து கார்த்திக்கின் அம்மாவை பார்ப்பதாக கூறினாள்.

தம்பதியினர் குழந்தையுடன் ட்ரெயினில் பயணப்பட, வெகு நாட்களுக்குப் பிறகு பயணிப்பதில் குட்டிக்கு தான் ஏக குஷி.

"ஐஐஐ!! மதம் எல்லா பின்னால போகுதும்மா. அதோ பாதுங்க மாத்து குத்தி அங்க நிக்குது. காத்திப்பா! இந்த புல் எல்லா எப்பி க்கீனா இக்கு!? சூப்பதா இக்கு." என்று ட்ரெயினில் ஏறியது முதல் குதூகளித்துக் கொண்டே வந்தாள்.

குழந்தையின் மகிழ்ச்சியில் இருவரும் அவளையே ரசித்துக் கொண்டு அவளிலேயே மூழ்கி இருந்தனர்.

தன்னுடன் பயணிக்கும் சம வயது பிள்ளைகளுடம் பேச்சும் ஆட்டமுமாக பவிக்குட்டி, சுற்றி சுற்றி வர, அவளை கண்காணிப்பதே இருவரின் பெரும் வேலையாக ஆனது.

ஒரு கட்டத்தில் ட்ரெயினில் ஓடியாடி களைத்த குழந்தை உறங்கி விட, கார்த்திக் அவளை தன் மடியில் தலை வைத்த வண்ணம் இருக்கையில் படுக்க வைத்துக் கொண்டான்.

குழந்தை உறங்கிய பின், வெளியே வெறித்துக் கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள் வித்யா.

வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவள் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத பயம் கவ்விக் கொள்ள, அமைதியாய் சன்னல் வழி தெரிந்த காட்சிகளை வெறித்திருந்தாள்.

"இன்னும் மாமியாரையே பார்க்கல, அதுக்குள்ள இவ்ளோஓஓ பயமா?" என்று கேலியுடன் அவளது சிந்தனையை கலைத்தான் கார்த்திக்.

அவனது கேலியில் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவள் அவனை திரும்பிப் பார்க்க, அவளது கண்களில் கண்ட தவிப்பில், "என்னடா என்னாச்சு விதுமா?" என தன் கேலியை கைவிட்டு வேகமாக கேட்டான் அவன்.

"ஒன்னுமில்ல." என்றவளையே அவன் பார்த்திருக்க, சில நொடிகள் கழித்து, "என்னை விட்டு போயிட மாட்டீங்க இல்ல கார்த்திப்பா!?" என அவள் கண்களில் பரிதவிப்போடு கேட்க,

மனதில் சூழும் ஏதோ ஒரு பயத்தில், அவ்வப்போது தவிப்போடு வெளி வரும் அவளது, 'கார்த்திப்பா!' என்ற அழைப்பிலேயே அவளது மனநிலையை உணர்ந்து கொள்வான் கார்த்திக்.

சில வேளைகளில் இது போல நடப்பது தான் என்றாலும், இன்னும் அவள் தன்னை நம்பவில்லையே என்ற வலி அவனது மனதின் ஓரத்தில் தோன்றியது.

இருப்பினும் அவள் கடந்து வந்த இன்னலின் கனம் அவளை அவ்வாறு யோசிக்க செய்கிறது என்பதை அறிந்தே இருந்தான் அவன்.

"உன்னை விட்டு எங்கடா போக போறேன்.உனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது!?" என்று அவளை தேற்ற முயன்றான்.

"தெரியலையே! மனசுல ஏதோ ஒரு பயம் அழுத்துது. என்னனு சொல்ல தெரியல. ஆனா," என சொல்ல முடியாமல் திணறியவள், மீண்டும் அதே கேள்வியையே திரும்ப கேட்டாள் வித்யா.

"நீ இவ்ளோ பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்லடா விதுமா. என்ன நடந்தாலும் இனி ஒருமுறை உன்னை விட்டு பிரிய மாட்டேன். இது சத்தியம்!" என்று அவன் கொடுத்த உறுதியில் சற்று அமைதியானவள்.

அவளாகவே கார்த்திக்கின் கையை இறுகப் பற்றிக் கொண்டு, அவனது தோளில் சாய, அவளது தலையில் தடவி விட்டு அவளை பாதுகாப்பாக உணர வைத்தான் அவன்.

சில நிமிடங்களில் அந்த ஸ்பரிசம் தந்த இதத்தில் கண்ணயர்ந்தவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டான் கார்த்திக்.

கார்த்திக்கின் மடியினில் ஒரு புறம் சிறு குழந்தை அவள் படுத்திருக்க, மறுபுறம் குழந்தையானவள் தலை சாய்த்திருந்தாள்.

கோவை வந்திறங்கியதும், சிறிது நேரமே எனினும் அந்த குட்டித் தூக்கம் அவளை சற்று இயல்புக்கு கொண்டு வந்திருக்க, அவளது தெளிவான முகத்தை கண்டு அவனது மனமும் நிம்மதி அடைந்தது.

அதன் பின் கார்த்திக்கின் வீட்டிற்கு கால் டாக்சி புக் செய்து அடுத்த பயணம் தொடங்கியது.

அது ஒரு வளர்ந்து வரும் பகுதி ஆதலால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருக்க, அனைத்தையும் சுற்றி தன் பார்வையை அலைய விட்டுக் கொண்டிருந்தாள் வித்யா.

அந்த மாலை வேளையில் வீட்டிற்கு வந்து இறங்கிய கார்த்திக், வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருக்க, அதற்குள் எதிர் வீட்டில் குடியிருக்கும் சுமதி அக்கா, "நல்லா இருக்கியா கார்த்தி? " எனக் கேட்டார்.

"நல்லா இருக்கேன் அக்கா. " என்றவன், அவரது பார்வை வித்யாவையும், குழந்தையையும் பார்க்க, "என்னோட மனைவியும், குழந்தையும்." பதிலளித்தான் அவன்.

"அப்படியா கார்த்தி! இத்தனை நாளா பார்க்கலையா அதான் தெரியல." என்ற அவரது விளக்கத்தில், அவள் வெளியூரில் பணியில் இருந்ததாக கூறினான்.

அவர் அப்பகுதியில் புதிதாக குடி வந்தவர் என்பதால் கார்த்திக் தாயின் நிலையை தவிர, அவன் குடும்பம் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது.

அழைப்பு மணி அழுத்திய பிறகு சில மணித்துளிகளில் கதவை திறந்து கொண்டு வந்த ஒரு இளம்பெண்,

"என்ன அத்தான்! இந்த நேரத்துல வந்து இருக்கீங்க!? நல்லா இருக்கீங்களா?" என ஆனந்த அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டு வேகமாக அவனருகே நெருங்கினாள் அவள்.

"எதேஏஏ அத்தான்ஆஆ!!!!?" என்று பின்னால் குழந்தையுடன் நின்ற வித்யா, அதிர்ச்சியில் வாயை பிளந்து நின்றாள்.

"இவங்க அம்சவேணி! அம்மாவை பார்த்துக்க ஒரு நம்பிக்கையான ஆள் இருக்காங்கனு சொன்னேன்ல, அவங்க தான்." என்று கார்த்திக், அவளை வித்யாவிற்கு அறிமுகப்படுத்தினான்.

வித்யா, கார்த்திக்கை முறைத்துக் கொண்டு இருக்க, அவளது அனல் பார்வையில் இருந்து தப்பிக்க அம்சவேணியை நோக்கி திரும்பிய கார்த்திக்,

"இவங்க வித்யரூபிணி. என்னோட வைஃப். கொஞ்சம் சீக்கிரம் போய் ஆலம் கரைச்சு எடுத்துட்டு வாம்மா. கல்யாணம் முடிஞ்சு முதல்முறையா வீட்டுக்கு வர்றாங்க." என்று நீளமாக பேசி அவளை உள்ளே அனுப்பினான்.

அவனது மனைவி என்று வார்த்தையிலேயே அதிர்ச்சியில் உறைந்த அம்சவேணி, அப்படியே நிற்க, அவன் மீண்டும் அழைத்த பின் தான் நிகழ் காலத்திற்கு வந்தாள்.

"என்ன அத்தான் சொல்றீங்க? இது எப்போ நடந்தது? எங்கிட்ட சொல்லவே இல்லையே?" ஏதோ அவளுக்கு உரிமையானவன் வேறு ஒருத்தியை மணந்ததை போல உரிமையுடன் கேட்க,

வித்யாவின் ரத்தக்கொதிப்பு எகிறியது. அந்த கொதிப்பின் வெப்பம், அனல் பார்வையாக கார்த்திக்கின் மீது வீசியது.

"அதெல்லாம் அப்றம் சொல்றேன்மா. கொஞ்சம் நான் சொன்னதை சீக்கிரமே செய்துட்டு வர்றியா?" என அவளை விரட்ட, அவர்களை திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் அவள்.

இன்னும் வித்யா தன் பார்வை வீச்சை மாற்றாமல் இருக்க, பையன் பொறியில் வசமாக சிக்கிய எலி போல,

எங்குட்டு செல்ல எனத் தெரியாமல் பார்வையை அலைய விட்டவன், உடனே குழந்தையை அவளிடம் இருந்து தன் கைக்கு மாற்றிக் கொண்டான்.

அம்சவேணி கடனே என்று ஆலம் கரைத்து வந்து இருவருக்கும் சுற்றி விட்டு, வித்யாவை நோக்கி ஒரு முறைப்பான பார்வையுடனும், குழந்தையை கேள்வி பார்வையுடனும் பார்த்துக் கொண்டு வெளியே அதை ஊற்றச் சென்றாள்.

அதன்பின் கவனமாக வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்த வித்யா, எங்கு செல்ல என தெரியாமல் நடு வீட்டில் நின்றாள்.

பின்னால் வந்த கார்த்திக் தனது அறையை அவளுக்கு காட்ட, அவனிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்டு அந்த அறைக்குள் சென்றாள் வித்யா.

'சும்மாவே நம்மை எப்ப பாரு முறைச்சுட்டு தான் இருப்பா, இப்போ இந்த பொண்ணு வேற எரியற தீயில எண்ணெய் ஊத்துற மாதிரி 'அத்தான்!அத்தான்!' னு கூப்பிடறாளே!' என

தனக்குள் நொந்து கொண்ட கார்த்திக், நடு வீட்டினுள் அப்படியே நின்று சிந்தனையில் இருந்தான்.

வெளியே சென்ற அம்சவேணி, உள்ளே வந்தவள், "என்ன அத்தான் அப்படியே நிற்குறீங்க? சாப்பிட்டீங்களா? இல்லையா?" என்று கேட்டாள்.

"அதெல்லாம் வர்ற வழியிலேயே நம்ம அன்னம் மெஸ்ல சாப்பிட்டுட்டு தான் வந்தோம்மா. நீ சாப்பிட்டியா?" என அவன் அக்கறை சர்க்கரையாக கேட்கும் போதா வித்யா வெளியே வர வேண்டும்?.

அவன் காட்டிய அறைக்கு சென்று குழந்தையை படுக்க வைத்துவிட்டு, பயணக் களைப்பு தீர தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த வித்யா, அவன் பேசியதை கேட்டு,

மீண்டும் அதே அக்மார்க் அனல் பார்வையை அவன் மீது வீச, 'இன்னிக்கு நீ செத்த டா கார்த்தி!' என அவனது மனசாட்சி அபாய சங்கு ஊதியதில் அரண்டான் பையன்.

"சரிம்மா நீ போய் தூங்கு. நாங்க அம்மாவை பார்த்துட்டு தூங்கப் போறோம். குட் நைட்!" கார்த்திக், அம்சாவை அந்த இடத்தை விட்டு விரட்ட பார்க்க, அவளா அசருவாள்.

"இல்ல அத்தான்! நானும் வர்றேன். அத்தைக்கு எல்லாம் செக் பண்ணனும்." என்று கூறி விட்டு, வித்யாவை மிதப்பான ஒரு பார்வை பார்த்தவள், உரிமையுடன் ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைகிறாளாம்.

கார்த்திக், வித்யாவை அழைத்துச் சென்று தன் தாயின் அறைக்குள் நுழைய, அங்கு அவரது இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு என சோதித்துக் கொண்டு இருந்த அம்சவேணி இவர்களை திரும்பிப் பார்த்தாள்.

உள்ளே வந்த கார்த்திக், தன் தாயிடம்,"ராஜி மாதா! இதோ பாருங்க உங்க மருமக வந்து இருக்கா. குட்டிமாவும் வந்து இருக்கா."

"நீங்க கண் முழிச்சு எங்கடா னு கேட்டா தான் பாப்பாவை கூட்டிட்டு வருவேன். ஆமா!" என சிறு மிரட்டலுடன் இயல்பாக பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு முறை வரும் போதும் தாயிடம் இப்படி தான் என்றும் போல தன் ஒவ்வொரு செயலையும் இயல்பாக பேசிக் கொண்டே இருப்பான். 'என்றாவது அவர் பதில் அளிக்க மாட்டாரா!?' என்ற நப்பாசையில்..ய

தாயின் அசைவில்லாத நிலையில் மனம் வாடி அனைத்தையும் மறந்து கனத்த மனதுடன் அவரையே பார்த்திருந்தான்.

அவனது மனநிலையை அறிந்து, அவனருகே சென்ற வித்யா ஆதரவாக அவனது கையை பற்றி நின்றவள், ராஜேஸ்வரியின் கரத்தை தனது மறு கரத்தால் பற்றினாள்.

"அம்மா! என்னை மன்னிச்சுடுங்கம்மா." என செய்யாத செயலுக்காக மன்னிப்பைக் கோரி விட்டு, அமைதியாக நின்றிருந்தாள்.

வித்யா அவரது நிலையை எண்ணி மனம் வருந்திய கார்த்திக்கின் அருகில் நிற்க, "கவலைப்படாதீங்க அத்தான்!" என்று கார்த்திக்கின் அருகே வந்த அம்சவேணி,

"அத்தை சீக்கிரமே எழுந்து நம்ம கிட்ட பேசுவாங்க. உங்கள இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு அத்தான்." என்றவளின் பேச்சில் ஒவ்வாமையை உணர்ந்த வித்யா, "நான் ரூமுக்கு போறேன் கார்த்திக்." என்று விட்டு வெளியேறினாள்.

அம்சவேணி பேசியது, வித்யா வெளியேறியது என எதையும் உணராமல், சில நொடிகள் தாயை பார்த்திருந்தவன்,

"எல்லாம் செக் பண்ணிட்டியாம்மா?அம்மாவோட அசைவு எதாவது தெரிஞ்சதா?" என்றும் எப்போதும் கேட்கும் அதே கேள்வியை கேட்டான்.

"அப்படி எதாவது இருந்தா நான் உடனே உங்களுக்கு கால் பண்ணி இருக்க மாட்டேனா அத்தான்?" என்ற அவளது எதிர்கேள்வியில் அதிருப்தியானவன், அப்போது தான் வித்யா அங்கு இல்லாததை உணர்ந்தான்.

"என்னை அத்தான்னு சொல்லாத. பேரை சொல்லியே கூப்பிடுனு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் அம்சவேணி." என்றான் சிறு கண்டிப்புடன்.

"என்ன அத்தான் இது! நான் உங்க மாமா பொண்ணு தானே? அத்தை பையனை கூப்பிட்ற அந்த உரிமை எனக்கு இருக்கறப்ப நான் ஏன் யாரோ மாதிரி பேர் சொல்லி கூப்பிடனும்?" என்ற

அவளது வாதத்தில் எரிச்சலடைந்த கார்த்திக் வேகமாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top