• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 32

கார்த்திக் கூறியதற்காக பாலாவும் அவளது பெற்றோரை பின் தொடர்ந்து சென்று அவர்கள் இருப்பிடத்தை அறிந்து கொண்டான்.

அதன்பின் அந்த பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் சிறு சிறு வேலைகளுக்காக சென்று, சிறிது நேரம் இயல்பு போல் பேசி விட்டு விசயம் அறிந்து வருவான்.

இடையில் ஓர் முறை வார இறுதியில் வந்த கார்த்திக்கிடம், பாலா தான் அறிந்த விசயத்தை பகிர்ந்தான்.

பொதுத் தேர்வு முடிவுகள் வரப் போவதாக அறிவிப்பு வந்ததும், அவளது தேர்ச்சி பற்றியும் தெரிவிக்குமாறு பாலாவிடம் வலியுறுத்தி விட்டு சென்றான்.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த அன்று வித்யா பள்ளியின் முதல் மதிப்பெண் மாணவி என அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான் கார்த்திக்.

இதற்கிடையே கார்த்திக் அவளை விரும்புவதாக சொன்னதால், ரூபேஷிற்கு எதுவும் அவள் மேல் நாட்டம் உள்ளதா என்பதை தெளிவாக அறிந்து கொண்டு அதையும் கார்த்திக்கிடம் பகிர்ந்தான்.

அவள் எப்படியும் தனது மதிப்பெண் சான்றிதழ் வாங்க வெளியே வருவாள் என்றெண்ணி அங்கு வந்த பாலா,

அவள் பள்ளி சென்றுவிட்டு திரும்பிய பின்னர் அந்த ஏரியாவிற்கு வந்ததால், அன்று அவளை காணாது திரும்பி விட்டான்.

அவளை காணாததால் ஒருவேளை மறுநாள் வருவாளோ என்று நினைத்து மறுநாள் அங்கே வர,

திடீரென அவளது வீட்டின் முன் கூட்டம் இருந்ததை கண்டு என்னவென்று அறிய அவன் அருகில் வர, மூவரையும் தூக்கிச் செல்வதை கண்டு திகைத்தான்.

அவர்கள் விஷம் உண்டதால் மருத்துவமனையில் அனுமதித்ததும், அவளது பெற்றோர் இறந்ததும்,

அதற்கு காரணம் அவளது கர்ப்பம் தான் என்று சுற்றி இருந்தவர்கள் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் பாலா.

விரைவாக அவ்விடத்தை விட்டு வெளியே வந்து கார்த்திக்கிற்கு அழைத்து விசயத்தை கூற, அவனோ இடி விழுந்தது போலானான்.

"என்னடா சொல்லுற!? நான் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு வர முடியாத சூழ்நிலைல இருக்கேன் டா பாலா!.. இந்த வீக் எண்ட் கண்டிப்பா வந்திடுவேன்."

"அதுவரை அங்க என்ன நடந்தாலும் எனக்கு அப்பப்போ சொல்லிட்டே இருடா. ப்ளீஸ்டா." என தான் இப்போது வர இயலாத சூழலை கலங்கிய மனதோடு, தவிப்புடன் கூறினான் கார்த்திக்.

"நீங்க கவலைப்படாதீங்க அண்ணா. நான் இங்க என்ன நடக்குதுனு உங்களுக்கு சொல்றேன்." என்று உறுதியளித்தான் பாலா. அதை செய்யப் போவதில்லை என்பதை அறியாமலே.

அடுத்த நாள் அவனது தந்தை திடீரென நோய்வாய்பட, அவரது சிகிக்கையில் பாலா அவளை கண்காணிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

கார்த்திக் கேட்ட போது தன் தந்தையின் உடல் நிலையை பற்றி உரைக்க, அவனும் பாலாவை பின்னர் அணுகவில்லை.

தந்தைக்கு சற்று சீரான பின் வித்யாவின் வீட்டை காண வந்த பாலாவை பூட்டிய வீடே வரவேற்றது.

அவன் வாடிக்கையாக செல்லும் அந்த மெக்கானிக்கிடம் விசாரித்த போது, "அந்த பொண்ணோட சொந்தக்காரங்க யாரோ கூட்டிட்டு போய்ட்டாங்கப்பா." என்றார்.

யாரென தெரியுமா என இவன் விசாரித்தற்கு அவனை சந்தேகப் பார்வை பார்த்து விட்டு, "அந்த பொண்ணு கர்ப்பமா இருந்துச்சு னு எல்லாரும் பேசிக்கிறாங்க."

"அதனால யாரும் அந்த புள்ளையை பற்றி கண்டுக்கல. ஆமா இதெல்லாம் நீ ஏன் கேட்குற?" அவர் அவன்மீது சந்தேகிப்பதை உணர்ந்து ஏதோ மழுப்பலாக கூறிவிட்டு வந்து விட்டான்.

தனக்கு தெரிந்த விசயங்கள் அனைத்தையும் அந்த வார இறுதியில் வந்த கார்த்திக்கிடம் பாலா தெரிவிக்க,

அவளை தொலைத்து விட்டதை எண்ணி மனம் சோர்ந்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நிலைகுலைந்தான் கார்த்திக்.

இனி!..

"இதான்ங்க நடந்தது. எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையுமே நான் சொல்லிட்டேன்." என்று அவளிடம் கூறிவிட்டு,

கார்த்திக்கை பார்த்த பாலா, "ஸாரிண்ணா!" உண்மையை அவளிடம் உரைத்ததற்காக அவனிடம் மன்னிப்பை வேண்டினான்.

பாலா கூறிய அனைத்தையும் கேட்ட வித்யாவின் எதிர்வினையை கண்ட கார்த்திக்கால், 'அவள் என்ன நினைக்கிறாள்?' என்றே அனுமானிக்க முடியவில்லை.

ஒரு வித ஸ்தம்பித்த மனநிலையில் நின்ற வித்யா, எதுவும் சொல்லாது தனக்குள் சிந்தித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

அவள் செல்வதை கண்டு, பாலாவை பார்த்து பெருமூச்செறிந்து, இயலாமையின் தலையசைப்போடு அவள் பின்னோடே சென்றான் கார்த்திக்.

அவளை நெருங்கியவன் அவளது கையை பற்றி நிறுத்தி, "ப்ளீஸ்டா கண்ணம்மா! எதாவது பேசு. நீ என்ன நினைக்கிற னு எனக்கு சத்தியமா புரியல."

"நீயே மறக்க வேண்டிய விசயத்தை திரும்ப நினைவுபடுத்த வேண்டாம்னு தான் நான் எதுவுமே உங்கிட்ட சொல்லலைடா. ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ!" அவளது அமைதி கண்டு பரிதவிப்புடன் கூறினான் கார்த்திக்.

அவனை பொருள் விளங்காத பார்வை பார்த்த வித்யா, அமைதியாக அவனது கையை விலக்கி விட்டு சென்றாள்.

மாலை ஈஸ்வரி - ரூபேஷ் வரவேற்பில் கூட களையிழந்து அமைதியாக இருந்த அவளை கண்டு, "என்னாச்சுடா ரூபி குட்டி? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று தாரிணி வினவியதற்கு,

சற்று உடல்நிலை சரியில்லை என்று உரைக்க, "என்னாச்சு திடீர்னு? காலைல நல்லா தானே இருந்த?" குழப்பமாக தாரிணி கேட்க,

"ப்ளீஸ்க்கா! கொஞ்சம் தனியா இருக்க விடுங்க." என்று விட்டு சென்றாள். அவளை கண்டு குழம்பிய தாரிணி, கார்த்திக்கிடம் விசாரிக்க எண்ணினாள்.

"என்னாச்சு கார்த்திக்? வித்யா ஏன் ஒரு மாதிரி இருக்கா? எதாவது பிரச்சனையா?" என்று வினவிட, பாலாவினால் அவளுக்கு தெரிவிக்கப்பட்ட உண்மையை பற்றி கார்த்திக் உரைத்ததும்,

"இதானா? நான் கூட வேற ஏதோ விசயம்னு பயந்துட்டேன். இதுல உங்க மேல தப்பு எதுவும் இல்லையே? அப்றம் எதுக்கு உங்களுக்கு ஏதோ திவாலான கம்பேனி ஓனர் மாதிரி பீலிங்கு."

"விடுங்க. அவளுக்குள் யோசிச்சு அவளே ஒரு தெளிவுக்கு வருவா. நீங்க ரெண்டு பேரும் இப்படி இயல்பா இல்லாம இருந்தா குழந்தை என்ன நினைப்பா?" என்று அவனை தேற்றினாள் தாரிணி.

சோகத்தில் பெரிதாக மூழ்காத இயல்புடைய கார்த்திக், தாரிணியின் பேச்சில் ஓரளவு தனது இயல்பிற்கு திரும்பி இருந்தான்.

அனைவருடனும் தன் இயல்பு போல் பேசிய கார்த்திக்கின் மனதின் ஓர் மூலையில் அவள் என்ன நினைக்கிறாள் என்ற கேள்வி வண்டாக குடைந்தது.

கல்யாண களேபரங்கள் அனைத்தும் முடிந்த பின்னர் தங்களது வீட்டிற்கு திரும்பினர் வித்யாவும், கார்த்திக்கும்.

குழந்தையுடன் தனது அறைக்குள் வித்யா தஞ்சம் புகுந்திட, அவளிடம் பேச வேண்டும் என நினைத்திருந்த கார்த்திக், செய்வதறியாது விழித்தான்.

அவளது மனநிலை என்னவென்பதை அறியாமல் உறக்கமின்றி தவித்தவன், சிறிது நேரம் கழித்து அவளது அறை கதவை மெதுவாக தட்டினான்.

சத்தமின்றி இருக்கவும் 'அவளும் உறங்கி விட்டாளோ!?' என்றெண்ணி தனது இடத்திற்கு திரும்ப முனைய, கதவு திறக்கும் ஓசை கேட்டு, கார்த்திக் திரும்பிப் பார்க்க, அவள் அவனை பார்த்திருந்தாள்.

"இல்ல, உங்கிட்ட கொஞ்சம் பேசனும். அதான் நீயும் தூங்கலைனா பேசலாம்னு தட்டுனேன்."என்று அவனது செயலுக்கு விளக்கமளிக்க,

அந்நொடி வரை அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள் அப்போது தான் வாய் திறந்து, "சொல்லுங்க." என்றாள் வித்யா.

"ஹப்பா! நான் கூட அதிர்ச்சில பேச்சு எதுவும் போயிடுச்சோ னு நினைச்சு பயந்துட்டேன்." அவளை இயல்பாக்க முனைந்தான் அவன்.

வழக்கமான முறைப்பை அவள் பதிலாக கொடுக்க, "ஹான்! இது, இது தான் மிஸ்ஸிங். இப்ப ஓகே. போய் தூங்குடா செல்லம்." என்று விட்டு அவன் சென்றிட, அவள் 'ஙே' என்று விழித்தாள்.

அவனது ஆஸ்தான இடத்தில் சென்று அவன் படுத்ததும், எரிச்சலுடன் அவன் அருகில் வந்தவள்,

"இப்ப இதை கன்பார்ம் பண்ண தான் கதவை தட்டுனீங்களா?" என்றிட, வெகு நேரம் கழித்து நீளமாக அவளை பேச வைத்து விட்டான் பையன்.

அவளது கேள்வியில் புன்னகை பிறந்தாலும் மறைத்துக் கொண்டு எழுந்தவன், "ஆமா பின்னே, நல்லா பாடம் சொல்லி தர்ற டீச்சர் என்னால பேசாம போயிட்டாங்க னா எனக்கு வருத்தம் இருக்காதா?" என

அவள் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்க முயன்றான் அவன். அதற்கு பலனாக அவனை மீண்டும் முறைத்த அவள்,

"கமுக்கமாக செய்றதெல்லாம் செய்துட்டு வாயைப் பாரு. திருவாழத்தான்!" என்று அவனை முணுமுணுவென்று வாய்க்குள்ளேயே வறுத்து எடுத்தாள் வித்யா.

"நீங்க என்னமோ சொல்றீங்க? என்னை திட்டுறீங்கனு தெளிவா புரியுது. ஆனா வாட்(என்ன)ன்னு தான் தெரியல?"என அவன் மேலும் வம்பிழுக்க, அதற்கும் அவள் முறைத்தாள்.

"ஓகே! இப்ப ஃபார்ம்க்கு வந்தாச்சா?" கேட்டவன் பின் தீவிரமாக,

"ப்ளீஸ்! நீ என்ன யோசிக்கிறனு சொல்லுமா. எதுவானாலும் வாய் விட்டு சொன்னா தானே தெரியும். என் மேல கோபம் இருந்தா ரெண்டு அடி கூட அடிச்சுடு."

"ஆனா இப்படி பிதாமகன் விக்ரம் மாதிரி சுத்திட்டு இருந்தா எனக்கு பீதி ஆகுதில்ல." என்று விளையாட்டு போலவே அவளின் எண்ணத்தை கேட்டான்.

அவனை நெருங்கியவளை கண்டு, 'சும்மா ஒரு பேச்சுக்கு அடிச்சுக்கோ னு சொன்னா உடனே அடிக்க வந்துட்டாளே? உன் வாய் தான் டா கார்த்தி உனக்கு சத்ரு.' மனசாட்சி கூறிட,

உள்ளுக்குள் அவன் பீதியானாலும், வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் கெத்தாக நின்றிருந்தான்.

அவனருகே வந்தவள் அவனே எதிர்பாராமல் திடுமென, அவனை அணைத்துக் கொண்டதில், அவன் அசைவற்று உறைந்திட.

அவனது நிலையை உணராமல் அதே நிலையிலேயே இருந்து, அன்று முழுவதும் தன் மனதில் ஓடிய எண்ணங்களை அவனிடம் பகிர்ந்தாள் அவள்.

"இதுநாள் வரை 'எனக்குனு இந்த உலகத்துல யாரையுமே விட்டு வைக்க மாட்டியா பெருமாளே!' னு அந்த கடவுளை நான் நிந்திக்காத நாள் இல்ல."

"ஆனா யாருன்னே தெரியாத என்மேல நீங்க காட்டுன அன்பும், அக்கறையும், இத்தனை வருசம் கழிச்சும் மாறாம இருக்கற உங்க காதலும் என்னை கட்டி போட்டுடுச்சு." என்று அவள் கூறிட, அவனும் அவளை லேசாக அணைத்தான்.

"இது தெரியாம இத்தனை நாளும் நான் மட்டும் ஏதோ தனியா பாலைவனத்துல தண்ணீருக்கு தவிக்கிற மாதிரி மனம் வெம்பிட்டு இருந்தேன்.

அங்க நான் கண்ட கானல் நீர் மாதிரி தான் நீங்களும் னு இத்தனை நாளா நினைச்சு இருந்தேன். ஆனா என்னோட தனிமை தாகம் தீர்த்தது அந்த கானலான நீங்க தான்." என்று கூறிவிட்டு,

அவனது கண்களை ஆழமாக கண்டவள், "என்னை விட்டு எங்கேயும் போக மாட்டீங்க ல?" என்று தவிப்புடன் வினவிட,

மகிழ்ச்சியில் மனம் கனத்து கண்களில் மழைநீர் சுரக்க 'இல்லை' என வேகமாக தலையாட்டினான் அவன்.

பின்பு அவளே மீண்டும் தொடர்ந்தாள், "ஆனா எனக்கு ரொம்ப நாளா ஒரு வருத்தம் இருக்கு." என்றதும் என்னவென்று அவன் அவளை கேள்வியாக பார்க்க,

"என்ன தான் அந்த சம்பவத்தை நான் மறக்க முயற்சித்தாலும் என்னை இப்படி ஒன்னுமில்லாம ஆக்குன அந்த மிருகங்கள் மட்டும் நல்லா வாழ்ந்துட்டு இருப்பானுங்க தானே. "

"ஒரு தப்பும் பண்ணாத நான் எத்தனை பாடுபட்டேன். ஆனா அவனுங்கள எதுவுமே செய்ய முடியலையே ங்கற கோபம் எனக்குள்ள ஒரு ஓரமா எப்பவும் இருக்கும்." என்று வருத்தத்துடன் கூறினாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top