• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 1

ஈஸ்வர உவாச
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே.

என்று சத்தமாய் ஒலித்துக் கொண்டு இருந்த விஷ்ணு சகஸ்ரநாம பாடல் கூட அவளை அசைக்கவில்லை.

அந்த பாடலும் முடிந்து அலமேலுவின் தினசரி சுப்ரபாதம் தொடங்கியது.

"டி வித்யா! ஏழ்ந்துருடி. காலம்பர இப்படி தூங்கிண்டு இருந்தா எப்படி தான் ஸ்கூலுக்கு கிளம்புவ? நாழியாறது."

"இப்போ வந்தேன் னு வையேன். உனக்கு ஜல அபிஷேகம் தான் சொல்லிட்டேன்!" என்று சாம்பார் தாளித்து விட்டு, இட்லியை எடுத்துக் கொண்டே அடுப்படியில் இருந்து அவளது தாய் அலமேலு சத்தமிட்டார்.

இடதுபுறமாக படுத்துக் கொண்டு, ஒரு காலை நீட்டி, ஒரு காலை மடக்கி படுத்திருந்த வித்யா, அவரது ஜலம் என்ற வார்த்தையில் திரும்பி படுத்தாள்.

முகில் மறைத்த மதி, வெளி வந்து ஒளி வீசியது போல, மாசு மருவற்ற அந்த குழந்தை முகத்தை பார்த்தால், கோபம் கூட கோபம் கொண்டு ஓடி விடும்.

"இன்னுமாடி நீ எழுந்துக்கல?" என்று அவளை விரட்டிக் கொண்டே வந்த அலமேலு மகளது தூங்கும் அழகில் சற்று தடுமாறி,

"எழ்ந்துருடா அம்மு! நாழியாறது. அப்றம் லேட் ஆகிடுத்து னு நீ தான் பறந்துண்டு கிளம்புவ!" பொறுமையாய் கூறினார்.

"இன்னும் டூ மினிட்ஸ் ம்மா! ப்ளீஸ்... ப்ளீஸ்!" என்று அவளது கொஞ்சலில் சரி நீயே எழுந்து கொள் என்று கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறினார்.

அடுப்படிக்கு சென்ற அலமேலு சிறிது நேரம் பொறுத்திருந்தும் மகள் எழுந்த அரவம் கேட்காததால் மீண்டும் கத்த துவங்கினார்.

"ரெண்டு நிமிஷம் தானடி சொன்ன? எவ்வளவு நாழி ஆறது. இன்னும் நீ எழுந்துக்காம இருக்க. ரொம்ப செல்லம் ஆயிடுத்து நோக்கு!" என்று அலமேலு விடாமல் திட்டிக்கொண்டு இருக்க.

அப்போது தனது நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டில் நுழைந்த அவளது தந்தை சீனிவாசன், "டி அலமு! ஒரு காபி தாயேன். ஆமா யாரை திட்டிண்டு இருக்க?" என்று கேட்கவும்.

"வந்துட்டேளா! இந்த வித்யா பொண்ணை தான். அவளை பாருங்கோ ணா! நானும் அப்போதிலிருந்து எழுப்பிண்டே இருக்கேன். எழாம அலுச்சாட்டியம் பண்ணின்டு இருக்கா." என்று அவரிடம் புகார் வாசித்தார்.

"நோக்கு அவளை கரிச்சு கொட்டல னா பொழுது விடியாதாடி அலமு? அவ எழுந்து குளிச்சுண்டு இருக்கா போல."

"பாத்ரூம்ல இருந்து தண்ணி விழற சத்தம் வருதே." என்று சீனிவாசன் அவளுக்கு வக்காலத்து வாங்கினார்.

"என்னணா அதிசயமா இருக்கு! நான் இத்தன நாழி எழுப்பும் போது அவ எழுந்துக்கவே இல்லையே." என்று குழம்பி விட்டு,

"எப்படியோ ஸ்கூலுக்கு கிளம்பினா சரிதான். தினமும் இவளோட இதே ரோதனை! என்ன பொண்ணோ?" புலம்பிக் கொண்டு சென்றார் அலமேலு.

இத்தனை பேச்சைக் கொண்டுக் கொண்டே தனது விட்ட குறை தூக்கத்துடனே காலை கடன் முடித்து, பள்ளி செல்ல தயாரான வித்யா, பனிரெண்டாம் வகுப்பு மாணவி!

அவளது தாய் அலமேலு, அக்மார்க் இல்லத்தரசி. தந்தை சீனிவாசன், சுந்தராபுரம் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

அந்த அக்ரஹாரத்தில் மதிக்கத்தக்க ஓரிரு மனிதர்களில் இவரும் ஒருவர். பண பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களையும் சொல்லி தரும் நபர் ஆயிற்றே!

"அம்மா! டிபன் ரெடியா? நேக்கு டைம் ஆயிடுத்து. ரெடி இல்ல னா நான் கிளம்பறேன்." என்று எச்சரிக்கை ஒலியுடன் அடுப்படியில் நுழைந்தாள் வித்யா.

"அதெல்லாம் தயாரா தான் இருக்கு. சோம்பேறி கழுதை. நீ லேட்டா எழுந்துண்டு என்னை விரட்டுறியா?" அவளது ஒரு கையில் டிபன் பாக்ஸை திணித்து விட்டு, இன்னொரு கையில் சாப்பிடவும் தந்தார் தாய்.

அதற்கு அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, "ஜாரி மம்மி! அது ஒரு கனவுல மாட்டின்டேனா. அதுல இருந்து வெளிய வர்றதுக்கு மனசே வரல. அதான் லேட் ஆகிடுத்து." பதிலளித்தாள் அவள்.

" அப்படி என்னடி கனவு கண்ட?" என தாய் ஆச்சர்யமாக கேட்கவும், "அது வந்து..." என்று அவள் தொடங்கிய நொடி,

"நாழியாறதுனு நாலு தெருவுக்கு கேட்கறாப்ல கத்திண்டு இருந்தடா செல்லம்! இப்போ மட்டும் கதை பேசிண்டு இருக்க?" கேட்டுக்கொண்டு சீனிவாசன் அங்கே வந்தார்.

"அச்சச்சோ! நாழியாயிடுத்துப்பா. நான் கிளம்பறேன்ம்மா. வந்து சொல்றேன் சரியா?" கூறிவிட்டு ஓடும் மகளை வாஞ்சையுடன் பார்த்தார் அலமேலு.

"என்னடி புள்ளையைவே பார்த்துண்டு இருக்க?" கேட்ட கணவரிடம், "நம்ம பொண்ணு நல்லா வளர்ந்துட்டா. என்னணா." என்றார் அலமேலு.

"பின்ன வருசம் ஓடுதோ இல்லையோ, வளர தான் செய்வா." என்ற அவரது பதிலுக்கு,

"அதுக்கில்ல ணா. அவ சீக்கிரமே படிச்சு முடிச்சதும் விவாஹம் பண்ணிடனும். இப்படி விக்ரஹம் மாதிரி அழகான வயசு புள்ளைய வைச்சுண்டு, வயித்துல நெருப்பை கட்டிண்ட மாதிரி இருக்கு" அலமேலு சிறு கலக்கத்துடன் கூறவும்.

"என்னடி அலமு பேசுற? இந்த வயசுலேயே விவாஹமா? அவ ஒரு டிகிரியாவது முடிச்சு கவர்மெண்டு உத்யோகம் பார்க்க வேண்டாமா?" என்ற சீனிவாசனின் கண்டனத்திற்கு,

"தாராளமா படிக்கட்டும். விவாஹம் பண்ணின்டு படிக்கட்டும்.. நாளுக்கு நாள் செழிப்பா வளர்ந்துண்டு இருக்க அவளை பார்க்கறச்சே எல்லாம் பயம் தான் வருது."

"இவளை ஒரு நல்ல குணவான் கையில பிடிச்சு குடுக்கற வரை இந்த பயம் தெளியாது." என்று சற்று கலவரத்துடன் கூறிய அலமேலுவை தேற்றும் விதமாக,

"அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடி அலமு. வீணா மனசை போட்டு குழப்பிக்காத!.. சரி எனக்கு ஒரு காபி மட்டும் தாயேன்." எனக் கேட்டார் சீனிவாசன்.

அவரது முதல் பேச்சை காற்றில் பறக்க விட்டுவிட்டு, இரண்டாவது கேட்டதற்கு கொதித்து விட்டார் அலமேலு.

"என்னது! மறுபடியும் காபியா? இப்ப தானே குடிச்சேள்? அதெல்லாம் ஒன்னும் கிடையாது. டிபன் சாப்பிடுங்கோ."

"சாப்பிட்டு கிளம்புங்கோ. உங்களுக்கு பேங்குக்கு நாழி ஆகலையோன்னோ?" விரட்டினார் அலமேலு. மனைவியின் அரட்டலில் ஓடியே விட்டார் சீனிவாசன்.

மகள் மீதான அவரது பயம் விரைவில் நிஜமாக போவது தெரிந்திருந்தால் அப்போதே சுதாரித்து இருப்பார்களோ என்னவோ. விதி யாரை விட்டது.
மகளது பால் வண்ண மேனியும், மாசு மருவற்ற அழகிய வதனமும், அவளை கடந்து செல்வோரை ஒரு நொடியேனும் திரும்பிப் பார்த்து வியக்க வைக்கும் பேரழகும்,

அவளை பொக்கிஷமாக பாதுகாக்க முடியுமா என்ற அச்சத்தை உண்டு பண்ணிய அலமேலுவுக்கு, வரும் இன்னல்களை சமாளிக்கும் தைரியத்தை அவளுக்கு தர வேண்டும் என்பதை உரைக்காமல்,

தங்களது கடமையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கியது.

***************

வேகமாக ஓடி வந்த வித்யாவை பார்த்த ஈஸ்வரி, அவளது பால்ய தோழி. "என்னடி இன்னிக்கும் லேட்டா எழுந்திரிச்சியா? பி.டி. உஷா மாதிரி ஓடி வர்ற?" என்று சன்ன சிரிப்புடன் கேட்டாள் அவள்.

ஈஸ்வரி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, "அதோ பஸ் வந்துடுச்சு. இன்னிக்கு பஸ்ஸும் லேட்டா வந்ததால தப்பிச்சுட்ட நீ." என்று புன்னகையுடன் கூறிவிட்டு,

இருவரும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்த பின் அவளுக்கு பதிலளித்தாள் வித்யா.

"ஆமாடி ஈஷ்! ஒரு நல்ல கனவுடி. அதுல அப்படியே ஜாலியா விளையாடிண்டு இருந்தேனா, விடிஞ்சதே தெரியல." என்று அப்பாவியாக வித்யா கூறினாள்.

"அதுசரி. அலோ... மாமி! நீங்க மாமினு எனக்கு தெரியும். உங்கவாள் பாஷையை வீட்டோட நிறுத்திக்கங்க." சிறு கேலியுடன் சொல்லவும் தான் அவள் வீட்டில் பேசுவது போலவே பேசியது நினைவிற்கு வந்தது..

"அச்சச்சோ! ஸாரிடி ஈஷ். அம்மா கிட்டே பேசிட்டே வந்ததுல அப்படியே இங்க பேசிட்டேன்." என்று வித்யா உடனே மன்னிப்பை கேட்கவும்,

"ஹேய்!.. இதுக்கெல்லாமா ஸாரி சொல்லுவாங்க. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா. எனக்கு ப்ராப்ளம் இல்ல."

"ஆனா க்ளாஸ்ல இதுபோல பேசினா யாராவது அதே மாதிரி கிண்டல் பண்ண போறாங்க னு தான் உனக்கு ரிமைன்ட் பண்ணினேன்." என்று,

அவர்கள் வகுப்பில் வித்யா இல்லாத நேரத்தில், கேலி பேசிய சிலரை மனதில் கொண்டு ஈஸ்வரி சொன்னாள்.

"இதெல்லாமா கிண்டல் பண்ணுவாங்க ஈஷ். அவா அவாளுக்கு எப்படி பேச வருதோ, அப்படி தானே பேச முடியும்." என்ற,

வித்யாவின் குழப்பமான பேச்சில் மீண்டும் அவளது பாஷை வெளிப்பட்டதில், அவளை செல்லமாக முறைத்தாள் ஈஸ்வரி.

அவளது முறைப்பை கண்டதும், தான் பேசியதை உணர்ந்த வித்யா மெல்லமாய் நாக்கை கடித்துக் கொண்டு, கண்களை சுருக்கி மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.

இருவரும் ஒருசேர நகைத்து விட்டு பின்னர் அட்டை அரங்கம் ஆரம்பம் ஆனது. வித்யா ஏதோ ஒன்றை பற்றி சுவாரசியமாக பேசி சிரிக்கும் போது ஆடும் அவளது காதணியோடு கண்களும் நர்த்தனம் ஆட,

செப்பு இதழ்களின் சுழிப்பையும், ஆச்சரியமாக விரியும் கண்களையும் ரசனையுடன் கண்டு கொண்டு இருந்தன இரு கண்கள்.

அது அழகிய பூவை ரசிக்கும் ரசனை பார்வை. மழலை பேசிடும் மொழியை ஆர்வமாக கேட்கும் ரசனை. சில மாதங்களாக இது தான் நடக்கிறது.

அந்த பார்வையில் விரசமோ, விவகாரமோ இல்லாததால் அவளும் அதை கவனிக்கவில்லை. அந்த கண்களும் ரசனையை தொடர தவறுவதில்லை.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

அந்த அரசு பள்ளியில், வகுப்புகள் முடிந்து அனைவரும் அவசரமாக வீட்டிற்கு விரைய, இன்னும் ஓரிரு நோட்டுகளே திருத்துவதற்கு இருப்பதால் அதை முடித்து விட்டு கிளம்பலாம் என்றெண்ணி இருந்தாள் அவள்.

"ஹேய்! ரூபிணி! இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கேட்ட சக ஆசிரியர் அமுதாவிற்கு,

"இன்னும் ரெண்டு நோட் தான் இருக்கு அமுதா டீச்சர், அதான் முடிச்சுடலாமேனு..." என்று இழுத்துக் கொண்டே வேலையும் தொடர்ந்தாள் ரூபிணி.

"நாளைக்கு வந்து பார்த்துக்கலாம் வா. உனக்கென்ன எக்ஸ்ட்ரா சம்பளமா கொடுக்க போறாங்க. கிளம்பு." என்று அமுதா விரட்டும் போது வேலை முடித்தே விட்டாள் அவள்.

இருவரும் வண்டி நிறுத்தம் வந்து அவரவர் வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிய பின், வேகமாக ஓடி வந்தான் அவன்.

அவள் சென்ற வழியை பின்பற்றி சென்ற அவன், அவள் ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்தவும், இவன் அருகே வரவும் சரியாக இருந்தது.

" மிஸ். ரூபிணி!" என்ற அவனது அழைப்பிற்கு திரும்பிய அவள், "கார்த்திக் சார்! நீங்க என்ன இந்த பக்கம்?" என்று குழப்பமாக கேட்டாள்.

"இல்ல ரூபிணி. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசலாம் னு தான் வந்தேன். ரொம்ப நாளாவே சொல்லணும்னு இருந்தேன்." என்று அவன் தொடங்கவும், என்னவென்று பார்த்து இருந்தாள் ரூபிணி.

"அது வந்து, உங்கள முதல் முதல்ல இந்த ஸ்கூல்ல பார்த்ததுமே..." என்று அவன் கூறும்போதே, அந்த வீட்டின் கதவை திறந்து வந்த ஒரு குழந்தை, "அம்மா!" என்று அவளை கட்டிக் கொண்டது..

அக்குழந்தையின் பின்னாலே வந்த நடுத்தர வயது பெண்மணி, "எப்படி தான் உங்க வண்டி சத்தத்தை மட்டும் கண்டுபிடிக்கிறாளோ? ஓடி வந்துட்டா." என்று சன்ன சிரிப்புடன் சொல்லி குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு சென்றார்.

"லட்டு குட்டி! அம்மா வரலை னு நீங்களே வந்துட்டீங்களா? அப்படி எல்லா ஓடி வர கூடாது. சரியா?" என்று குழந்தையுடன் அவள் பேச்சுவார்த்தை நடத்த, பேச மறந்து ஒரு ஜீவன் அதிர்ச்சியில் நின்றிருந்தது.


அவன் பேசிக் கொண்டிருந்தது நினைவு வர, அவனிடம் திரும்பிய ரூபிணி, பேச வருவதற்குள், "இந்த பாப்பா! உங்க குழந்தையா?" என்று அவன் கேட்க, அவளும் 'ஆம்' என்று உரைக்க, அவனுக்கு வார்த்தைகள் உறைந்தன.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top