• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 4, 2024
Messages
4
காலம் மாறும்...

"என் அம்மா வாழ்க்கையை அழிச்சது போதாதா? அடுத்து என் வாழ்க்கையையும் அழிக்கணுமா?"

குரலை உயர்த்திப் பேசக் கூடத் தயங்குபவள், இன்று ஒட்டு மொத்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தாள். கல்லூரி இறுதி வருட மாணவி அவள்.

எப்போதும் கம்பீரம் சுமக்கும் அறுபது வயது நரைத்த தேகம், தான் கேட்ட கேள்வியில் தளர்வது புரிந்தாலும், கொந்தளித்த உணர்வுகள் அடங்க மறுத்தது அவளுக்கு.

"சொல்லுங்க தாத்தா. இப்ப எதுக்கு இவளோ அவசரமா எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து அனுப்ப நினைக்கிறீங்க. என் அம்மாவைத் தான் ஒன்னும் புரியாத 16 வயசுல கட்டிக்குடுத்து, இப்போ அல்லோலப்பட்டுட்டு இருக்காங்க. கூடச் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். நானாவது படிச்சு என் அம்மாவையும் தம்பியையும் பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். நீங்க என்னன்னா இன்னும் காலேஜ் கூட முடிக்காம என்னைக் கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்ல அடிமையாக்கப் பாக்குறீங்களே..." என்றவளுக்கு தானாகக் கேவலும் வந்தது.

சுருங்கிய கண்ணிமைகள் கலங்கியது கிருஷ்ணனுக்கு.

"ஏய் அவ்ளோ பெரிய மனுஷனை நிக்க வச்சு கேள்வி கேட்குற... ஒழுங்கா உள்ள போ" பாட்டி கல்பனா அவளைக் கண்டிக்க, அதற்கு மேலும் அங்கு நின்றால் வெடித்து அழுது விடுவாளெனப் புரிந்து அறைக்குள் புகுந்து கொண்டாள்.

வாழ்க்கையின் சில கடினமான பக்கங்களை வெகு சிரமத்துடன் கடக்க வேண்டிய கட்டாயத்திற்கு விதி தானாகத் தள்ளி விட்டுவிடும்.

அந்த ரணம் மிகுந்த பக்கங்களுக்கு எதிர்காலமென்ன என்றும் புரியாது, நிகழ்காலம் அவர்கள் வசத்திலும் இருக்காது. மற்றவர்களது அசைவிற்கு ஏற்ப ஆடும் காற்றாடியாய், அவளும் தலையாட்டியே தீர வேண்டுமென்ற நிலைக்கு அவளை நிறுத்தி இருப்பது யார்?

குடியில் வெந்து, சந்தேகம் என்னும் பேய் பிடித்து ஆட்டும் தந்தையா?

வாய் இருந்தும் ஊமையாகி, கணவனைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வர இயலாமல், பணமும் ஈட்ட வழியின்றி காலம் சொல்லும் பாதையில் செல்லும் தாயா?

அல்லது, 16 வயதில் செல்லமாக வளர்த்த மகளுக்குக் கண் குளிர திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட தாத்தாவா?

மாமன்மார்கள் என்ற பெயரில் மூன்று பேர் இருந்தும் கூட, தனக்கு ஆதரவாக, தனது தாய்க்கு ஆதரவாக, "நீ விட்டுட்டு வா... நாங்க பாத்துக்குறோம்" என்ற வார்த்தையை உதிர்க்க பயந்து, சமூகத்தை எண்ணி அமைதி காக்கும் குடும்பத்தினரா?

படிப்பாவது தனக்கு கைக்கொடுக்குமெனப் பார்த்தால், அதற்கும் அல்லவா வேட்டு வைக்கிறார்கள். அதிலும், இத்தனை இடர்பாடுகளுக்கு இடையிலும் தன்னை சிறு வயது முதல் சீராட்டி வளர்த்த தாத்தாவே இதனைச் செய்யும்போது மனது வலிப்பது நியதி தானே.

அவள் எப்போதும் கிருஷ்ணின் வீட்டிலேயே இருப்பாள் தான். ஆனால், இப்போதெல்லாம் அவளது வீட்டு நிலவரம் சுத்தமாக சரி இல்லை. தாயிடம் சண்டையிடும் தந்தையை எதிர்த்துப் பேசினாள். விளைவு! 'நீ வீட்டிற்கே வந்து விடாதே. உன் தாத்தா வீட்டில் இருந்தே கல்லூரிக்குச் சென்று கொள்' என்று தந்தையே இங்கு கொண்டு வந்து விட்டு விட்டார்.

தாத்தா வீட்டில் உரிமையாக இருப்பதென்பது வேறு! வழி இல்லாமல் இருப்பது அத்தனை பேரின் முன்பும் அவளைக் குறுக வைத்தது.

அப்படியும் கல்பனாவின் அரவணைப்பில் அவள் மற்றவை மறந்து கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்க, இடையில் கிருஷ்ணனும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்.

அவரை எதிர்க்கும் அளவும் அவளுக்குத் தைரியம் என்றும் இருந்ததில்லை. அதனால் அமைதியே காத்தாள்.

பெண் பார்க்கும் நிகழ்வுகளும் அவ்வப்பொழுது அரங்கேறிக் கொண்டிருந்தது. அவர்களது முறைப்படி, மாப்பிள்ளையை அழைத்து வரமாட்டார்கள். பெண் வீட்டார் தான் சென்று பார்க்க வேண்டும்.

முதலில் பள்ளி ஆசிரியையின் மகனுக்குப் பெண் கேட்டு வந்தனர், அந்த ஆசிரியையும் அவரது இளைய மகளும்.

வந்தவர்கள், பள்ளிக்கு ஆசிரியர் பணியில் சேர்ப்பதற்காகக் கேட்கும் கேள்விகள் முதற்கொண்டு அவளிடம் கேட்டு விட்டனர். அவளுக்கோ சினம் தலைக்கு ஏறியது.

"ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்க? சரியா சாப்பிட மாட்டியா?"

"எந்திரிச்சு நில்லு. உன் ஹைட்டு என்ன?"

"லேசா கறுத்த மாதிரி இருக்க என் பையன் கொஞ்சம் நல்ல நிறம்."

"எவ்ளோ மார்க் வாங்குவ?"

"சொல்லிக்கிற அளவுக்கு வாங்குவேன்" அவள் மென்மையாக உரைக்க,

"எங்க வீட்ல என் ரெண்டு பசங்களும் நல்லா படிப்பாங்க." அந்தத் தாயாரிடம் ஒரு வித பெருமை.

'அப்போ எதுக்கு கல்யாணம். காலம் முழுக்க படிக்க வச்சுக்கிட்டே இருக்க வேண்டியது தான' மனத்தினுள்ளேயே கடுப்படித்தவளிடம், துருவித் துருவிக் கேள்வி கேட்டு விட்டே கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியபிறகே நிம்மதியாக இருந்தது. இவர்களுடன் வாழ்க்கை முழுக்க எப்படி வாழப் போகிறோமோ என்ற பயம் வேறு முளைக்க, இவள் வீட்டினரும் ஆசிரியை வீட்டிற்கு மாப்பிள்ளை பார்க்கச் சென்றனர்.

ஆனால், மாப்பிள்ளைப் பையனின் முக அமைப்பே வேறு மாதிரியாக இருந்தது. ஏதோ ஒரு விபத்தின் விளைவில் தாடை விலகித் தொங்கி கொண்டிருந்தது. பேசும்போது சற்று கூர்மையாய் கேட்டாலே அவர் பேசுவது புரியும். மற்றபடி வசதி படைத்தவர்கள். மாதம் கை நிறைய சம்பளம் வாங்குபவன்.

பெண்ணின் தாய் மஞ்சுளாவுக்குத் தான் மெல்லவும் இயலவில்லை விழுங்கவும் இயலவில்லை. மஞ்சுளாவின் உடன் பிறந்தவர்களோ அதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

"பையன் எப்படி இருந்தா என்ன? நல்ல வசதியா இருக்காங்க. நாளைப் பின்ன உனக்கு மாதிரிப் பிரச்சனை வராது. கெட்ட பழக்கமும் இல்லைன்னு தான் சொல்றாங்க. அந்த அம்மாவும் சீர்ன்னு எதுவும் வேணாம்னு சொல்லிடுச்சு. இதைவிட உனக்கு நல்ல சம்பந்தம் கிடைக்குமா?"

இந்த வாதங்களை அவரால் ஏற்றுக்கொள்ள இயலாமல் மகளிடமும் கூறி விட, அவள் ஒன்றும் கூறவில்லை.

"முகத்துல என்ன இருக்குமா. நல்ல கேரக்டரா இருந்தா போதும்" என்று விட்டாலும், அந்த டீச்சர் அம்மா தன்னை உருவக்கேலி செய்யாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றாமல் இருக்கவில்லை. மாப்பிள்ளையின் தாயார் இரு நாட்களில் கிருஷ்ணனுக்கே அழைத்தார்.

"இங்க பாருங்க சார். எங்களுக்குப் பொண்ணை பிடிச்சு இருக்கு. நான் நகையெல்லாம் இவ்ளோ தான் போடணும்னு சொல்லமாட்டேன். என் பொண்ணுக்கு நாப்பது சவரன் போட்டோம். நீங்க போட முடிஞ்சதை போடுங்க.

ப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் சீர் எல்லாம் வேணாம். ஆனா என் பொண்ண புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது ஏசி வாங்கி கொடுத்தோம்.

பணம் எல்லாம் வச்சுக்குடுக்க வேணாம். என் பொண்ணுக்கு அம்பதாயிரம் வச்சுக் கொடுத்தோம்..." என்று இலைமறை காயாகப் பேசிட, கிருஷ்ணனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை தான். இவையெல்லாம் தன்னால் செய்ய இயலாது எனக் கிருஷ்ணன் கூறியதில் அந்தச் சம்பந்தம் கைவிட்டுப் போனது
 
New member
Joined
Dec 4, 2024
Messages
4
இரு நாட்களுக்கு முன்பு, மற்றொரு மாப்பிள்ளை வீடும் பார்த்து வந்தாகிற்று. வசதி படைத்தவர்கள் தானாம்... மகளை பார்க்கக் கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்த மஞ்சுளாக் கூறினார்.

அதற்கு அவளிடம் பதில் ஏதும் இல்லை. திடீரென மஞ்சுளா கண்ணீர் சிந்தியதில், "என்னமா ஆச்சு?" எனக் கேட்க,

"உன் பெரிய மாமா சேகர்கிட்ட மாப்பிள்ளையைப் பத்தி விசாரிச்சேன். பணக்காரங்க தான். ஆனா கெட்ட பழக்கம் எதுவும் இருக்குமான்னு. ஏன்னா, நானே அவனுங்க தண்ணியை போட்டுட்டு சுத்துறதை பார்த்து இருக்கேன். அதுக்கு உன் மாமா என்ன சொல்லுச்சு தெரியுமா?" என்றார் மூக்கை உறிஞ்சி.

அவள் வெறுமையுடன் பார்க்க, "அவனுங்க எப்படி இருந்தா என்ன? காசு வச்சுருக்கானுங்க. நம்மப் பிள்ளைக்கு லைஃப் செட்டில் ஆகிடும். எந்தப் பிரச்சனையும் வராது. நீ கண்டதை யோசிக்காம, போய் கல்யாணத்துக்காவது உன் புருஷன் காசு செலவு பண்ணுவாரான்னு பாருன்னு சொல்லுச்சு. எனக்கு மனசே கேட்கலடி." என்னும் போதே தேம்பினார்.

சுருக்கென முள் தைத்தது அவளுக்கு.

"காசு இருந்தா லைஃப் செட்டிலா, எந்தப் பிரச்சனையும் வராதா? அப்போ உனக்கும் அப்பாவுக்கும் காசு இருந்தா, உங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை எல்லாம் சரி ஆகிடுமா? அவரு குடிக்கிறதை நிறுத்திடுவாரா? காசுக்கும் சந்தோஷத்துக்கும் என்னம்மா சம்பந்தம்" என்றவள், பின் விரக்தியுடன்,

"ஓஹோ... நாளைக்கு கல்யாணம் ஆகி, உன்னை மாதிரிக் காசு இல்ல, பணம் இல்லைன்னு இங்க வந்து நிற்கக் கூடாதுன்னு பரந்த மனசோட மாப்பிள்ளைப் பார்க்குறாங்க போல. விடு! நாளைக்கு எல்லாருக்கும் ஒரு காலம் வரும்" என்றதோடு முடித்துக் கொண்டாள்.

ஆகினும் அவளது சொற்களில் அத்தனை வேதனை மண்டிக்கிடந்தது. சாபமிட மட்டும் மனதில்லை.

அவள் செய்த நல்வினைகளின் பலனோ என்னவோ அந்தச் சம்பந்தமும் கைவிட்டுப் போக, சற்றே ஆசுவாசமடைந்தாலும் கீறல் ஆறவில்லை.

அதன் எதிர்வினையை இன்று கிருஷ்ணனிடம் காட்டி விட்டாள்.

பேத்தியின் கேள்வியில் நிலைகுலைந்து போனார் கிருஷ்ணன். 35 வயதில் ஏற்பட்ட இரண்டாவது ஹார்ட் அட்டாக்கிற்கு பிறகு, அவர் எழுந்து நடக்கக் கூடக் கூடாதென்ற மருத்துவரின் அறிவுரையையும் மீறி, உழைத்து முன்னேறினார்.

தனது ஒற்றைப் பெண் பிள்ளையின் எதிர்காலம் கருதி, சிறு வயதிலேயே மணம் முடித்து வைக்க, அந்த மணத்தில் இரு மனங்கள் ஒன்றாமல் போனதில் அவரது பிழையொன்றும் இல்லையே!

நள்ளிரவு நேரம். உறக்கம் வரவே இல்லையென்றாலும் உருண்டு பிரண்டு படுத்தவளுக்கு, தாத்தாவிடம் பேசிய முறை தவறென்று உள்ளம் உறுத்தியது.

அதன் பிறகு, அவர் அவளிடம் பேசவே இல்லாதது அவளை மேலும் குற்ற உணர்ச்சியில் தள்ளியது.

தண்ணீர் அருந்தவென அடுக்களைக்கு செல்ல இருந்தவள், கிருஷ்ணனின் அறையில் விளக்கு எரிவது கண்டு நின்று விட்டாள். அவர்கள் அறையைத் தாண்டித் தான் செல்ல இயலும்.

கூடவே, கல்பனாவின் குரலும் மெல்லமாகக் கேட்டது.

"உங்க பேத்தி தான் படிக்கணும்னு நினைக்கிறாளே. படிச்சு முடிச்சுட்டுக் கூடக் கல்யாணம் பேசலாம்ல" எனத் தயங்கி ஆரம்பித்தார்.

தொண்டையை செருமிய கிருஷ்ணன், "எல்லாம் தெரிஞ்சும் ஏன் புரியாம பேசுற கல்பனா. எனக்கும் என் பேத்தி படிச்சு சொந்தக்கால்ல நிக்கணும்னு ஆசை தான். ஆனா நிலைமை அப்படியா இருக்கு?

இப்பவே மாப்பிள்ளைப் பார்த்தா, அவ அப்பா குடிகாரனா இருக்காரு, சம்பாதிக்கல, என்ன சீர் செனத்தி செய்வாங்கன்னு கேள்வியா கேட்குறாங்க.

நம்ம புள்ளைங்க, 'உங்க மகளுக்கே எவ்ளோ தான் செய்வீங்க. அவளுக்கு செஞ்சது போதாதுன்னு இப்போ பேத்தி கல்யாணத்தையும் தலைல போட்டுட்டு இருக்கீங்க. நீங்க இப்படி இருக்கறதுனால தான், உங்க மருமகன் இன்னும் திருந்தாம இருக்காரு'ன்னு சண்டைக்கு வர்றாங்க.


பசங்களைக் கல்யாணம் பண்ண சம்பந்திகளும் 'நீங்க இந்த வயசுல ஏன் இவ்ளோ பெரிய பொறுப்பை எடுத்துக்குறீங்கன்னு அறிவுரை சொல்றாங்க" பேச இயலாமல் தொண்டையை அடைத்தது பெரியவருக்கு.

"நான் இருக்கும் போதே இவ்ளோ பேச்சா இருக்கே. நாளைக்கு நான் இல்லாம போய்ட்டா நம்ம பேத்தியோட நிலைமை என்னன்னு யோசிச்சுப் பாரு." வார்த்தைகள் பிசிறடிக்க மனையாளைப் பார்க்க, கல்பனாவும் வேதனையுடன் கணவரின் முகம் பார்த்தார்.

"அவள் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் அவள் கல்யாணத்தை அவளே பார்த்துப்பான்னே வச்சுப்போமே. உன் மருமகன் அதுக்கு எல்லாம் ஒத்துழைக்குற ஆளா? இல்ல, அப்ப அவளுக்கு நல்ல வரன் வந்தாலும் அவரால அதை எடுத்து நடத்த முடியுமா? நம்ம பிள்ளைங்க தான் பணம் குடுத்து முன்னாடி நின்னு நடத்துவாங்களா? சரி... முதல்ல நான் போனதுக்கு அப்பறம் அவளை இன்னும் கொஞ்சம் போட்டுப் படுத்தாம இருக்கணுமே. இங்க படுறதே போதும்னு தான் நான் மாப்பிள்ளையே பார்த்தேன். எனக்கு மனசுக்கு நிறைவா எதுவும் அமையல. வந்த ரெண்டு சம்பந்தமும் அதுவா போகலைன்னாலும், நானே வேணாம்னு சொல்லிருப்பேன் கல்பனா.

வேணும்னே பிள்ளைங்க வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவோமா? நல்லா இருப்பாங்கன்னு நினைச்சு தான கல்யாணம் பண்ணி வைக்கிறோம். என் பேத்திக்காவது நல்ல வாழ்க்கை நான் இருக்கும் போதே அமைஞ்சுடனும் கல்பனா. அதை நான் கண் குளிரப் பார்க்கணும். ஆனா, நான் மாப்பிள்ளைப் பார்த்தா, என் பொண்ணு வாழ்க்கையை அழிச்ச மாதிரி அவள் வாழ்க்கையையும் அழிச்சுடுவேன்னு சொல்லிட்டாளே..." என்னும் போதே அழுகையில் அவர் உடல் குலுங்கியது.

"என்னங்க இது. அவள் சின்னப் பொண்ணு. அவள் பேசுனதைப் போய் பெருசா எடுத்துக்கிட்டு" என்று கல்பனா கணவரைச் சமன்செய்ய முற்பட,

"என் பேத்தி வாழ்க்கையையாவது நான் நல்லபடியா அமைச்சுக் குடுக்கணும் கல்பனா. அதுவரை நான் உயிரோட இருக்கணும்னு தான் தினம் கடவுள்கிட்ட கேட்குற ஒரே ஆசை. அவள் நல்லா இருப்பா. நல்லா இருக்கணும்..." துன்பப்பட்ட நெஞ்சத்தின் அடியாழத்திலிருந்து வந்த வார்த்தைகள், அவளது செவி மடலை நிறைக்க, வந்த தடம் தெரியாமல் மீண்டும் தன்னறைக்குள் புகுந்தாள்.

"காலம் எல்லாத்தையும் எல்லாரையும் மாத்தும் தாத்தா... எனக்கும் மாற்றம் வரும். வரணும்!" மௌனமானக் கண்ணீர் அவள் கண்களிலிருந்து நிற்காமல் வழி
ந்து கொண்டிருந்தது. அவள் மௌனிகா.

முற்றும்
மேகா!
 
Last edited:
New member
Joined
Nov 23, 2024
Messages
2
தாயோட தந்தையோ சரியில்லாத போது பிள்ளைகளின் வாழ்வும் கேள்விக்குறியாகிறது.
பேத்திக்காக யோசிக்கும் அந்த தாத்தாவின் மனம், தன் மகளையும் பேத்தியையும் நினைத்து எவ்வளவு வருந்தும்?
அவள் விடயத்தில் தனக்கு யாருமே ஆதரவாக இல்லை என்றாலும் தன் காலத்துக்குப் பின் பேத்தியின் வாழ்வு பிசிறிடக் கூடாதென்று யோசிக்கும் மனதில் எத்தனை கவலையும் கனமும் இருக்கும்?
காலம் மாறட்டும் மௌனிகாவின் வாழ்வும் மலரட்டும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!
💐💐💐
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
வீட்டுத் தலைவன் சரியில்லைன்னா, அந்தக் குடும்ப நிலை சொல்வதற்கில்லை. அதில் சிக்கும் மனைவி பிள்ளைகள் நிலை அந்தோ பரிதாபம்தான். மௌனிகா வாழ்க்கையில் மாற்றம் வருமென்று நம்புவோம்.
தேங்க்ஸ் மேகவாணி💐💐💐
 
New member
Joined
Dec 4, 2024
Messages
4
தாயோட தந்தையோ சரியில்லாத போது பிள்ளைகளின் வாழ்வும் கேள்விக்குறியாகிறது.
பேத்திக்காக யோசிக்கும் அந்த தாத்தாவின் மனம், தன் மகளையும் பேத்தியையும் நினைத்து எவ்வளவு வருந்தும்?
அவள் விடயத்தில் தனக்கு யாருமே ஆதரவாக இல்லை என்றாலும் தன் காலத்துக்குப் பின் பேத்தியின் வாழ்வு பிசிறிடக் கூடாதென்று யோசிக்கும் மனதில் எத்தனை கவலையும் கனமும் இருக்கும்?
காலம் மாறட்டும் மௌனிகாவின் வாழ்வும் மலரட்டும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே!
💐💐💐
Thank you soooo much ka 😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️
 
New member
Joined
Dec 4, 2024
Messages
4
வீட்டுத் தலைவன் சரியில்லைன்னா, அந்தக் குடும்ப நிலை சொல்வதற்கில்லை. அதில் சிக்கும் மனைவி பிள்ளைகள் நிலை அந்தோ பரிதாபம்தான். மௌனிகா வாழ்க்கையில் மாற்றம் வருமென்று நம்புவோம்.
தேங்க்ஸ் மேகவாணி💐💐💐
Thank you soooo much sis ❤️❤️❤️🥰🥰😍😍
 
Top