• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
67
வள்ளி தனது தந்தையின் வீட்டிற்கு வந்து இரண்டு நாள்கள் கடந்திருந்தன.

அங்கே விருந்தினர் அறையில் தங்கியிருந்தவள் கணவனை நினைத்தவாறு படுத்திருந்தாள்.

ஒரே ஊரில் சில தெருக்கள் தள்ளியிருக்கும் வீட்டில் தன்னைத் தனித்து இருக்க விட்டு அவன் தங்கியிருப்பது அவளின் மனத்தை வெகுவாய் வருத்தியது. இந்த ஊருக்கு வந்து அவனில்லாது அவள் தனித்து உறங்கும் மூன்றாம் நாள் இது.

அன்று அவளை இங்கே விட்டு விட்டு முத்துப்பேச்சுவின் வீட்டிற்குச் சென்ற கார்த்திகேயனின் கண்கள் கலங்கிப் போயின. சென்னையில் தாய் தந்தையிடம் அவளை விட்டு விட்டு பெங்களூருக்குச் சென்ற போது கூட இப்படி அவனின் மனம் கவலைக் கொள்ளவில்லை. அப்பொழுது அவளின் மீதான கோபம் அதிகமாக இருந்ததால் இதனை உணரவில்லையா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது, 'விட்டுட்டு போய்டுவியா' அவள் தன்னைப் பார்த்த பார்வை அவனை வதைத்தது.

'எல்லாம் உன் நல்லதுக்குத் தான் வள்ளி' மனத்தோடு கூறிக் கொண்டவன், வள்ளியின் பெட்டியையும் கணினிப்பையையும் முத்துப்பேச்சு வீட்டு வேலையாள் மூலம் கொடுத்து அனுப்பினான்.

'இதைக் கொடுக்கக் கூட வர முடியாதா அவருக்கு. அவரைக் கல்யாணம் செஞ்சது தப்புனு நான் சொன்னதை அவர் மறக்கலையா இன்னும்! என் மேல இருக்கும் கோபம் போகலையா அவருக்கு. என்னை மன்னிக்கவே மாட்டாரா?' என்று நினைத்தவாறு வள்ளி கண்ணீர் சிந்திய நேரம் அவளது கைப்பேசியில் புலனச் செய்தி வந்ததற்கான ஓசை வரவும் எடுத்துப் பார்த்தாள்.

"நான் உன்கிட்ட சொன்ன மாதிரியே உன்னை உன்னோட அப்பா அம்மாகிட்ட சேர்த்துட்டேன். என்கிட்ட வரனும்னு உனக்கு எப்ப தோணினாலும் வரலாம். உனக்காக நான் காத்திருப்பேன்" என்று கார்த்திகேயன் அனுப்பியிருந்த செய்தியை கண்ணீர் கண்களுடன் பார்த்தவளுக்கு உடனே அவனிடம் செல்ல வேண்டுமென மனம் பரபரத்தது.

கார்த்திகேயனுக்கு இதனைத் தட்டச்சு செய்யும் போதே மனம் வெகுவாய் வலித்தது. தன்னிடம் வராமல் போய்விடுவாளோ என்று லேசாய் மனம் நடுக்கம் கொண்டது. ஆனால் இனி ஒரு தடவை தன்னிடம் வந்த பிறகு தவறான முடிவை எடுத்து விட்டதாய் அவள் நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இதைச் செய்திருந்தான்.

அவனது புலனச் செய்தியை கண்ணீருடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், 'அவரை இங்கே வந்து என் கூடத் தங்கச் சொல்லலாமா?' என்று யோசித்தவள் உடனே, 'இல்ல வேண்டாம் அப்பா அம்மாவோ இல்ல உதயாவோ அவரை ஏதாவது அவமரியாதையா பேசிட்டா சங்கடமா போய்டும். நானே ரெண்டு மூனு நாள் இருந்துட்டு போய்டுறேன்' என்று மனத்தைத் தேற்றியவளாய் தங்கிக் கொண்டாள்.

அவளின் தாயும் தந்தையும் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். உதயன் இயல்பாய் வரவேற்றுப் பேசியிருந்தான் அவளிடம்.

"ஏன்ப்பா சென்னையை விட்டுட்டு வந்துட்டீங்க?" என்று வள்ளி கேட்டதற்கு,

"எனக்குக் கடைசிக் காலத்துல நம்ம ஊருல இந்த வீட்டுல வந்து இருக்கனும்னு தான்மா ஆசை. எங்க ஒரே பொண்ணு நீயும் எங்களை விட்டு போய்ட்ட பிறகு யாருக்காக நாங்க சம்பாதிக்கனும்னு ஒரு விரக்தி. இங்கே வந்தாலாவது மனசுக்கு நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு. உதயாகிட்ட கேட்டேன். 'வாங்க மாமா, எனக்கும் ஒத்தாசையா இருக்கும்னு' சொன்னான். அதான் வந்துட்டோம்" என்றவர் பெருமூச்சுடன்,

"என்ன, நீ உதயாவைக் கட்டியிருந்தா இந்த வீட்டோட முழு அதிகாரமும் நம்மக்கிட்ட வந்திருக்கும். அக்காக்கும் எனக்கும் அப்பா இந்த வீட்டை பங்கு போட்டு உயில் எழுதி வச்சனால எங்களுக்குப் பிறகு இந்த வீடு உனக்கும் உதயாக்கும் தான் சொந்தமாகும். நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செஞ்சிருந்தா, நான் என் கடைசிக் காலத்தை இந்த வீட்டுல நிம்மதியா கழிச்சிருப்பேன்! இப்ப உதயாவை கட்டிக்கிறவ வந்து எங்களை எப்டி நடத்துவாளோ என்ன செய்வாளோனு யோசனையாவே இருக்கு" என்றார்.

வள்ளிக்கு தந்தையின் மன உணர்வுகள் புரிந்தாலும், அவளின் படிப்புக்கும் வேலைக்கும் உதயன் சுத்தமாகப் பொருந்தாத போதும், சொத்துக்காக உதயனைத் தனக்குக் கட்டி வைக்க நினைத்த தந்தையின் எண்ணத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மீதெழுந்த கோபமும் நம்பிக்கையின்மையும் தான் அவளை உடனே கார்த்திகேயனை மணம் புரிய வைத்திருந்தது.

இன்னுமே தந்தை இவ்வாறு பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரின் பேச்சுக்கு எவ்வித கருத்தும் உரைக்காது அமைதியாகவே இருந்தாள்.

"கார்த்தி ஏன்மா உன்னை விட்டுட்டு போய்ட்டாரு? அவரும் இங்கேயே தங்கி இருக்கலாமே! அவருக்கும் உனக்கும் இடையில எதுவும் பிரச்சினையாமா?" என்று செல்வகுமார் கேட்டதும் பதறியவளாய், "அய்யோ அப்படிலாம் இல்லப்பா. அவருக்கு வேற முக்கியமான ஆபிஸ் வேலை இருக்குனு அவரோட ஆபிஸ் ஃப்ரண்ட் வீட்டுல தான் தங்கியிருக்காருப்பா" என்று கூறி சமாளித்து வைத்தாள்.

வள்ளியின் அன்னை முத்துலட்சுமி முதலில் பேசாது முறுக்கிக் கொண்டாலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மகளிடம் இயல்பாய் பேசிக் கொண்டார்.

"அங்கே எல்லாரும் உன்கிட்ட நல்லா பழகுறாங்களா வள்ளி? உன்னை நல்லா பார்த்துக்கிறாங்க தானே" என்று அவளின் புகுந்த வீட்டினரைப் பற்றிக் கேட்டவரின் குரலில் மகள் நன்றாக வாழ வேண்டுமே என்ற பரிதவிப்பு இருந்தது.

அன்னையின் இந்த அக்கறையான பேச்சில், தன்னுடைய தாய் தனக்கு முழுவதுமாகத் திரும்பிக் கிடைத்த திருப்தி உண்டாக, "நீ இப்படிக் கேட்டது எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா? எங்கே என்னை முழுசா வெறுத்துட்டியோனு நினைச்சு எவ்ளோ வருத்தப்பட்டேன் தெரியுமாமா?" கண்ணீருடன் தாயின் கரங்களைப் பற்றியவாறு அவள் உரைக்கவும்,

"பெத்த வயிறும் மனசும் என்னிக்கும் கல்லாகிடாது வள்ளி" என்று மகளின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.

உதயன் ஏற்கனவே வீட்டு வேலையைச் செய்ய ஆள்களை வைத்திருந்தான். வீட்டின் சமையலை மல்லிகா என்ற பெண் கவனித்துக் கொண்டிருந்தாள். காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வருபவள் இரவு வரை இருந்து அனைவரும் உண்டு முடித்த பின்பே செல்வாள்.

முத்துலட்சுமி மல்லிகாவிடம் மகளுக்குப் பிடித்த உணவுகளைப் பட்டியலிட்டுச் சமைக்கக் கூறினார்.

கிராமத்தில் வளர்ந்த பெண் போலல்லாது பட்டணத்தில் வளர்ந்த பெண் போன்ற உடுப்பும் நாசுக்கும் அழகும் கொண்ட மல்லிகாவைக் கண்டதும், 'என்னை இந்த வீட்டு சமையல்காரினு சொன்னா கூட நம்புவாங்க போல இந்தப் பொண்ணைச் சொன்னா நம்ப முடியலையே' என்று எண்ணிக் கொண்டவளாய்,

"நீங்க படிச்சிருக்கீங்களா மல்லிகா?" எனக் கேட்டாள் வள்ளி.

"இல்ல வள்ளி. பத்தாவது படிக்கும் போதே கட்டிக் கொடுத்துட்டாங்க. என் புருஷன் வெளிநாடுல மேஸ்திரி வேலை செய்றாரு. என் மவன் இப்ப எட்டாவது படிச்சிட்டு இருக்கான்" என்றார்.

"என்னது கல்யாணம் முடிஞ்சி அவ்ளோ பெரிய பையன் இருக்கானா? உங்களைப் பார்த்தா அப்படித் தெரியவே இல்லைக்கா" ஆச்சரியப் பாவனையில் வள்ளி கூறவும்,

"நம்மளை நாமளே பேணிப் பார்த்துக்கிட்டா எந்த வயசுலயும் இளமையா இருக்கலாம் வள்ளி. எனக்கு ஒன்னும் ஐம்பது வயசு இல்லயே. முப்பது வயசு தானே ஆகுது" என்று கூறிச் சிரித்தாள் மல்லிகா.

மல்லிகாவுக்கும் வள்ளிக்கும் இடையே நல்ல தோழமை உருவாகியிருந்தது.

வள்ளிக்குப் பிடித்தவற்றைச் சமைத்துக் கொடுத்து அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார் மல்லிகா.

ஞாயிறன்று வள்ளி உதயா மற்றும் தனது பெற்றோருடன் குலத்தெய்வக் கோவிலுக்குச் சென்று வந்தாள். கார்த்திகேயனை அழைக்க மனம் துடித்த போதும், அவன் அந்தக் குறுஞ்செய்திக்குப் பிறகு இது வரை தன்னை அழைத்துப் பேசாததினால், அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாது அமைதிக் காத்தாள்.

இங்கே பெற்றோருடன் நேரத்தைச் செலவிட்டப்போதும், மனமெங்கிலும் அவனே வாசம் செய்திருந்தான்.

'இன்னிக்கு என்ன செஞ்சிருப்பாரோ? என்ன சாப்பிட்டிருப்பாரோ? எங்கே போயிருப்பாரோ? என் நினைப்பே இல்லயா அவருக்கு' என்று அவனைப் பற்றி நினைத்தவாறே தான் இவர்களுடன் இருந்தாள்.

அன்றிரவே கணவனிடம் செல்ல துடித்த மகளை மேலும் இரண்டு நாள்கள் இருந்து விட்டுச் செல்லுமாறு செல்வகுமார் பாசமாய்க் கேட்கவும், வேறு வழியில்லாமல் சம்மதித்தாள் வள்ளி.

திங்கட்கிழமை அவளுக்கு வீட்டிலிருந்தே பார்க்க வேண்டிய அலுவலக வேலைகள் வரிசைக்கட்டி நிற்க அதனுடனேயே மல்லுக்கட்டி இருந்தாள்.

வேலை எல்லாம் முடித்து இரவுணவை உண்டு விட்டுப் படுக்கையில் படுத்தவளுக்கு மூன்று நாள்களாகியும் கணவன் தன்னிடம் ஏதும் பேசாது இருப்பது நெஞ்சை வருத்தியது.

'என் ஞாபகமே இல்லயா அவருக்கு. எப்படி என்கிட்ட பேசாம இருக்காரு? என்னால முடியலையே' தலையணையை நனைத்தது அவளது கண்ணீர்.

'நீயே போன் செஞ்சி பேச வேண்டியது தானே. அவர் பண்ண வேண்டாம்னு சொன்னாரா என்ன?' அவளின் மனசாட்சி கேள்வி கேட்க,

'என்னை விட்டுட்டு போன பிறகு அந்த மெசேஜ் அனுப்பினதோட சரி. இது வரைக்கும் அவரா வந்து ஒரு போன் பண்ணலை அப்புறம் நான் ஏன் பண்ணனும்' என்று கோபத்துடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,

மனத்தை மடைமாற்ற நெடுநாள்களுக்குப் பிறகு இன்ஸ்டா பக்கத்தைத் திறந்தாள்.

அதில் கார்த்திகேயன் தனது பக்கத்தில் பதிவிட்டிருந்ததைப் பார்த்து அவளின் கண்கள் வியப்பில் விரிந்தன.

வார்த்தை தந்த
வலியில் தான்
விலகி இருந்தேன்
வெறுத்து அல்ல!

விரும்பி தான்
வாழ்க்கைத் துணையாக
உன் வலக்கரம் பிடித்தேன்
விட்டுச் செல்ல அல்ல!

விரும்பிய ஒன்றை உன்
விரலுக்குள் சேர்த்துவிட்டேன்
விடை தெரியாத வினாவாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக

வரமாக வந்த வள்ளியே
வருவேன் என்றும்
வழித்துணையாக
வாழ்நாள் முழுவதும்
இவன் என்றும்
வள்ளி மணவாளன்.

'வள்ளி மணவாளன்' அவளின் உதடுகள் பரவசத்துடன் உச்சரிக்க, மனத்திலிருந்த அத்தனை கவலைகளும் பறந்தோட, தித்திப்பாய் உணர்ந்தாள்.

'இவருக்குக் கவிதை எல்லாம் எழுத தெரியுமா? எப்ப எழுதியிருக்காரு இந்தக் கவிதையை?' என்று மனத்திலே நினைத்தவாறு பார்த்தாள்.

சனிக்கிழமை இவளை இங்கே விட்டுச் சென்ற அன்று தனது மனத்தை உணர்த்தவென எழுதியிருக்கிறான் என்று தேதியைப் பார்த்ததும் புரிந்து கொண்டாள்.

விரும்பிய ஒன்றை உன்
விரலுக்குள் சேர்த்துவிட்டேன்

'என் உணர்வுக்கும் பேச்சுக்கும் எந்தளவுக்கு மதிப்புக் கொடுத்திருக்காரு' நினைக்கும் போதே நெஞ்சம் பூரித்துப் போக,

விடை தெரியாத வினாவாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக

அதை மீண்டும் வாசித்தவளாய், 'நாளைக்கே இங்கிருந்து கிளம்பிடனும்' என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
 
Joined
May 20, 2025
Messages
67
மறுநாள் காலை யாரோ சத்தமாய்க் கத்தும் சத்தத்தில் தான் கண் விழித்தாள் வள்ளி.

கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்தவள் ஜன்னல் வழியாகச் சத்தம் வருவதை உணர்ந்து ஜன்னலினருகே சென்று பார்த்தாள்.

அந்த வீட்டின் பின்கட்டில் இருந்த தோட்டத்தில் நின்று மல்லிகாவும் உதயாவும் ஏதோ கோபமாய்ப் பேசிக் கொள்வதைப் பார்த்தாள். அவர்களின் குரல்கள் இப்பொழுது தணிந்திருந்ததினால் இவளுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கவில்லை.

'ஹ்ம்ம் என்னமோ சண்டை போல! உதயாவும் மல்லிகாவும் ஏதோ தூரத்து சொந்தம்னு சொன்னாங்களே! இப்படிப் பேசி சண்டை போடுற அளவுக்கு ஃப்ரண்ட்ஸ்ஸா இவங்க இருப்பாங்கனு நினைக்கலை' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டவள் தனது வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

அன்று காலை குளித்து முடித்துத் தாய் தந்தையுடன் பேசியவாறு உணவை உண்டவள், "இன்னிக்கே நான் ஊருக்குக் கிளம்பியாகனும்ப்பா. ஆபிஸ்ல வேலை இருக்கு" வேறு எந்தக் காரணம் கூறினாலும் மேலும் சில நாள்கள் இருக்கக் கூறுவார்கள் என்று நினைத்தவளாய் இவ்வாறு உரைத்தாள்.

"ஓ" என்று ஏதோ சிந்தித்தவராய், "எத்தனை மணிக்கு கிளம்புவமா?" எனக் கேட்டார்.

"நாலு மணிக்கு கிளம்பலாம்னு இருக்கேன்ப்பா. இங்கே பக்கத்துல தானேப்பா வீடு. அதனால நானே போய்டுவேன்" என்றாள்.

கார்த்திகேயனுக்கு இன்ப அதிர்ச்சி (சர்ப்ரைஸ்) அளிக்க நினைத்திருந்தாள்.

"அப்படியா.. இன்னிக்கு எனக்குப் பக்கத்து ஊருல கொஞ்சம் வேலை இருக்கே! இல்லனா நானே கொண்டு போய் விட்டுருவேன்" என்று யோசித்தவர், "பக்கத்துல இருக்க ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ சொல்லி வைக்கிறேன். அதுல போமா" என்றார்.

"சரிப்பா" என்றவள் சொன்னதும்,

"பார்த்து போய்ட்டு வா. இந்த வீடும் நாங்களும் எப்பவும் உனக்காக இருக்கோம்னு மறந்துடாதமா" என்றார்.

தந்தையின் அன்பில் மனம் நெகிழ்ந்த போதும், "அடுத்தத் தடவை கார்த்தியும் நானும் சேர்ந்து இருக்க மாதிரி தான்ப்பா வருவோம். அவர்கிட்டயும் பேசுங்கப்பா" என்றாள்.

"சரிமா" என்றவராய் அவர் கிளம்பிவிட,

"வள்ளி, அம்மா உன் நல்லதுக்குத் தான் சொல்றேன். ஏற்கனவே உனக்கு வயசு அதிகம், இதுக்கு மேலேயும் குழந்தைப் பெத்துக்கிறதை தள்ளிப் போடாதமா. அடுத்த முறை நீ இங்கே வரும் போது நல்ல செய்தியோட தான் வரனும்" என்று அறிவுரைக் கூறி விட்டுச் சென்றார்.

வெட்கத்துடன் சரியெனத் தலையசைத்தவாறு தனது அறைக்குள் சென்றவளோ, 'அதுக்கு அவர் என் பக்கத்துல வரனுமே' என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.

'நான் அன்னிக்கு ஹனிமூனுல வேண்டாம்னு சொன்னதுனால தான் என்கிட்டயே வர மாட்டேங்கிறாரா?' என்று எண்ணிக் கவலைக் கொண்டது அவளுள்ளம்.

அதன் பிறகு தனது அலுவலக வேலையில் அவள் மூழ்கிப் போக, சிறிது நேரம் கழித்துக் காபி கொடுக்க வந்த மல்லிகா, "உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் வள்ளி" தாழ்ந்த குரலில் உரைத்தாள்.

மல்லிகாவின் முகத்தில் இருந்த வாட்டத்தையும் குரலில் இருந்த கலக்கத்தையும் கண்ட வள்ளி, "சொல்லுங்கக்கா" என்றாள்.

"உன்னை எச்சரிக்கத் தான் இதைச் சொல்லுதேன் வள்ளி. அப்புறம் உன் விஷயத்துல நான் தலையிடுதேன்னு நீ நினைச்சிக்கிடக் கூடாது பாரு" என்று தயங்கி அவள் நிறுத்த,

'எச்சரிக்கையா' என்று வள்ளிக்குள் திக்கென்ற போதும்,

"எதுனாலும் சொல்லுங்கக்கா" என்று ஊக்கினாள்.

"உங்கப்பாவுக்கு உன்னை உதயாவுக்குக் கட்டிக் கொடுக்கிற ஆசை இருந்துச்சுலா?" என்றவள் நிறுத்தவும்,

"ஆமா அதுக்கென்ன இப்ப?" எனக் கேட்டாள் வள்ளி

"அவிங்களுக்கு இன்னும் அந்த ஆசை போவலை வள்ளி. உன் ஜாதகத்தைப் பார்த்த சோசியரு, நீயும் உன் புருஷனும் எப்பனாலும் பிரிஞ்சிடுவீயனு சொன்னாவளாம். அதான் இப்ப நீ வந்தது கூடப் புருசன் கூட இருக்கப் பிடிக்காம தான் இருக்கும்னு நம்புறாவ. நீ எந்நேரம் உன் புருஷன் கூடச் சண்டை பிடிச்சிக்கிட்டு பிரிஞ்சி வந்தாலும் உதயாக்கு உன்னைக் கட்டிக் கொடுத்திடனும்னு பேசிக்கிட்டாவ" என்று மல்லிகா கூறியதைக் கேட்ட வள்ளிக்குப் பேரதிர்ச்சி.

அவளால் நம்பவே முடியவில்லை.

"யாரு? யாருக்கிட்டப் பேசிக்கிட்டதை நீங்க பார்த்தீங்க?" எனக் கேட்டாள்.

"பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்து உங்கப்பா அம்மாகிட்ட பேசிக்கிட்டதைக் கேட்டேன் வள்ளி. உங்கம்மாக்கு இதுல சம்மதம் இல்லாத மாதிரி தான் அமைதியா இருந்தாவ. ஆனா உங்கப்பாக்கு இந்த வீட்டை மொத்தமா அவருக்குச் சொந்தமாக்கிடனும்னு எண்ணம் இருக்கும் போல. அதுக்காகவே உன்னைப் புருஷனை விட்டுப் பிரிச்சி உதயாக்கு கட்டி வைக்க நினைக்கிறாரு" என்றவள் சொன்னதைக் கேட்டு திகைத்து விழித்து அதிர்வுடன் அமர்ந்திருந்தாள் வள்ளி.

"உன் நல்லதுக்காகத் தான் சொல்லுதேன் வள்ளி. இனி இந்த ஊருக்கு வாரனும்லாம் நினைக்காத! வந்தீனா உன்னையும் உன் புருஷனையும் பிரிச்சிப்புடுவாங்க. சரி நாம பேசிக்கிட்டு இருக்கிறதை உன் அம்மா பார்த்தா என் வேலைக்கு உலை வச்சிடுவாங்க. நான் வாரேன்" என்று விறுவிறுவென அவள் வெளியே சென்றுவிட, இவளுக்கு உள்ளம் நடுங்க மண்டையே வெடிக்கும் போல் இருந்தது.

இந்த மல்லிகாவை எந்தளவிற்கு நம்புவது என்றும் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் தன்னிடம் அவள் இவ்வாறு பொய் கூறுவதால் அவளுக்கு என்ன லாபம் இருக்கிறது என்று யோசித்தவளுக்கு அதற்கான விடையும் கிடைக்கவில்லை.

ஏற்கனவே மணமாகி வாழ்ந்து கொண்டிருக்கும் மகளைப் பிரித்து வேறொருடன் மணம் செய்து வைக்குமளவுக்குத் தனது தந்தை கேடு கெட்டவராக இருப்பார் என்றும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனால் மறுமனமோ அவள் இங்கு வந்த அன்றே உதயா மணக்கும் போகும் பெண் தங்களை எவ்வாறு நடத்துவாளோ என்று கூறி தந்தை வருத்தப்பட்டதையும் இந்த வீட்டைப் பற்றியும் அவர் பேசியதை நினைவுப்படுத்தி உன் தந்தை இப்படி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக் கொடுக்க, இவளின் உள்ளமும் உடலும் பதற, மனம் கணவனைத் தேடியது.

இதற்கு மேல் தான் இங்கிருந்தால் தனக்குப் பைத்தியம் பிடித்து விடும் என்று எண்ணியவள் உடனே அங்கிருந்து கிளம்ப முனைந்தாள்.

தாயை அழைத்துக் கார்த்திகேயன் தன்னைச் சீக்கிரமே வரச் சொன்னதாக உரைத்தவள் உடனே கிளம்புவதாகக் கூறி ஆட்டோவை வரவழைத்து அடுத்த அரை மணி நேரத்தில் அந்த வீட்டிலிருந்து கிளம்பியிருந்தாள் வள்ளி.

முத்துப்பேச்சுவின் இல்லத்தில் இறங்கியவளின் முகம் வெளிறிப் போய் இருந்தது.

வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு வந்த காமாட்சி, ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்து திரும்பிய வள்ளியை நெருங்கியவாறு, "வா வள்ளி! சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற! உன் புருஷனும் என் புருஷனும் இப்ப தான் வெளியே போனாங்க" என்றவாறு அவளது கையில் இருந்து பெட்டியை வாங்கி இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

ஒரு மாதிரி திகைத்த நிலையில் கலங்கிய முகத்துடன் வந்தவளை முகப்பறையில் அமரச் சொன்ன காமாட்சி, அவள் குடிக்க நீர் அளித்தார்.

வாங்கிய நீரை குடித்து முடித்து அமைதியாக அமர்ந்திருந்தவளிடம், "என்னாச்சு வள்ளி? அம்மா அப்பா கூட எதுவும் பிரச்சினையா? இன்னும் உங்களை அவங்க ஏத்துக்கலையா?" எனக் கேட்டார்.

"இல்லக்கா! அப்பா அம்மா என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க" என்று கூறிய வள்ளியின் மூளையில் மின்னலென அன்று காமாட்சி, 'ஊருக்குத் தெரியாம ஒரு பொண்ணுக் கூட வாழுறது தப்பில்லையா?' என்று கூறியது நினைவிற்கு வர, "அக்கா நீங்க அன்னிக்கு ஊருக்குத் தெரியாம ஒரு பொண்ணோட யாரோ வாழுறாங்கனு சொன்னீங்களே! யாருக்கா அது?" எனக் கேட்டாள்.

"ஏன் திடீர்னு அதைக் கேட்குற?" என்று அவர் தடுமாற,

"அக்கா ப்ளீஸ்! நான் செம்ம குழப்பத்துல இருக்கேன். எங்க வீட்டை பத்தி உங்களுக்கு என்ன விஷயம்லாம் தெரியுமோ அது எல்லாத்தையும் எனக்குச் சொல்லுங்களேன்" என்று கெஞ்சும் குரலில் கலங்கிய பார்வையுடன் கேட்டாள்.

அவளின் இந்தக் கெஞ்சலில் மனம் இரங்கியவராய் மெலிதான குரலில், "உதயனுக்கும் உங்க வீட்டு வேலைக்காரி மல்லிகாக்கும் தப்பான தொடர்பு இருக்கு வள்ளி! அது உங்க அப்பா அம்மாவுக்கும் தெரியும். ஏன் இந்த ஊருக்கே தெரியும். அதான் உதயனுக்கு யாரும் பொண்ணு கொடுக்க முன் வரலை. இப்படிப்பட்டவனுக்குப் போய் உங்கப்பா உன்னைக் கட்டிக்கொடுக்க நினைச்சிருக்காரேனு ஆதங்கத்துல தான் அன்னிக்கு அப்படிச் சொல்லிப்புட்டேன்"

நெஞ்சில் இடி விழுந்த உணர்வுடன் இதனைக் கேட்டிருந்தாள் வள்ளி.
 
Member
Joined
May 9, 2025
Messages
55
Valli u married against your parents wish,it’s better to live with your husband good or bad.why do u want him to call or message,hope your phone has incoming and outgoing call facilities
 
Joined
May 20, 2025
Messages
67
Valli u married against your parents wish,it’s better to live with your husband good or bad.why do u want him to call or message,hope your phone has incoming and outgoing call facilities
ஆமா தான். ஆனா அவ வாயைத் திறக்கனுமே.. அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன் மா. மிக்க நன்றி மா ❤️
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top