• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
68
மறுநாள் காலை எழும் போதே மனம் இறகில்லாமல் பறப்பதைப் போன்ற உணர்வில் தான் எழுந்தாள் வள்ளி.

அவனை விட்டு விலகி இவள் படுத்திருக்க, இவளைப் பின்னிருந்து அணைத்தவனாய் உறங்கியிருந்தான் அவன்.

'ஹப்பாடா கோபம் போயிடுச்சு போல' என்று நினைத்தவளாய் எழுந்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு கொஞ்சியவளாய் தனது அன்றாடப் பணிகளைச் செய்யச் சென்றாள்.

அவளின் முத்தமளித்த இதத்துடனேயே அரை உறக்கத்தில் முழித்தவன் மீண்டுமாய் உறக்கத்திற்குள் ஆழ்ந்து போனான்.

அவள் அத்தையுடன் சேர்ந்து சமையல் வேலைகளை முடித்து விட்டு அறைக்குள் வந்தவளாய் புன்னகையுடன் அவனைப் பார்க்க, அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றான்.

இத்தனை நேரமாய்த் துள்ளலான மனநிலையில் உலவி இருந்தவளுக்கு அவனின் இந்த ஒதுக்கம், அவளின் உற்சாகத்தையும் மகிழ்வையும் துடைத்தெடுத்திருக்க, அப்படியே பட்டெனக் கட்டிலில் அமர்ந்து விட்டாள் வள்ளி.

'நான் இவ்வளோ இறங்கி வந்த பிறகும் இவருக்கு என்னவாம்?' என்று கோபம் கோபமாய் வந்தது வள்ளிக்கு.

'இனி அவரா வந்து பேசாம அவர் பக்கமே போக மாட்டேன்' கண்ணீர் கண்களுடன் மனத்தோடு சூளுரைத்துக் கொண்டவளாய் அவனை முறைத்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளின் முக உணர்வுகளை எல்லாம் பார்த்தவாறே கிளம்பியிருந்தவன் அவளின் கோப முகம் கண்டு மனத்திற்குள் சிரித்துக் கொண்டான்.

அன்று மாலை இருவரும் தனித்தனியே அந்த உளவியல் ஆலோசகரை இணையத்தில் சந்தித்தனர்.

முதலில் வள்ளியிடம் பேசிய மனநல ஆலோசகர் தியா பிறகு கார்த்திகேயனிடம் பேசினார்.

"நீங்க ரெண்டு பேருமே ஆப்போசிட் போல்ஸ் (opposite poles) கார்த்தி. Opposite Poles attracts each other. அதான் அட்ராக்ட் ஆகிட்டீங்க போல" என்று சொல்லிச் சிரித்தார் தியா.

அவர் கூறியதில் புன்னகைத்தவனாய், "அவ இன்ட்ரோவெர்ட், நான் எக்ஸ்ட்ரோவெர்ட். அதனால அப்படிச் சொல்றீங்களா மேடம்" எனக் கேட்டான்.

(Introvert— அக சிந்தனையாளர், உள்முகச் சிந்தனையாளர் எனக் கூறலாம்.
இவர்கள் அமைதியுடனும், கூச்சச் சுபாவத்துடனும், எப்பொழுதும் தனிமையை விரும்புபவர்களாகவும் இருப்பர். யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருப்பர். இவர்களுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறிவதில் நாட்டமின்றி, தன் சிந்தனைகளுக்குள்ளேயே மூழ்கியிருப்பர்.
Extrovert— புறமுக நோக்காளர்.
தனித்திருப்பதை விடப் பிறருடன் சேர்ந்து பேசுவதையும், ஆட்டம், பாட்டம் என்று கூடி மகிழ்ந்து இருப்பதை விரும்புதல், தன்னம்பிக்கையும், ஊக்கமும் கொண்ட நபர். தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் தம்பால் ஈர்க்கும் திறன் பெற்றவர்களாக இருப்பர்)

"ஆமா கார்த்தி. இரண்டு பேரும் இரண்டு விதமான குடும்பப் பிண்ணனியில் இருந்து வேற சேர்ந்திருக்கீங்க. நீங்க எல்லார்கிட்டயும் ஃப்ரீயா பேச விட்டு வளர்க்கப்பட்டிருப்பீங்க. ஆனா வள்ளி வீட்டுக்குள்ளேயே வளர்ந்த பொண்ணு. ஒரு கட்டத்துக்குள்ளேயே தான் வளர்க்கப்பட்டிருக்காங்க. அதுலருந்து வெளியே வந்து அன்றாட வாழ்க்கையை ஃபேஸ் செய்றதே அவங்களுக்குப் பெரிய மனப்போராட்டமா இருந்திருக்கு" என்ற தியா,

"வள்ளிக்கு ஆங்சைட்டி இஸ்யூ (anxiety issue) இருக்கு கார்த்தி" என்றார்.

'அப்படினா' என்பது போல் கார்த்திகேயன் தியாவைப் பார்க்க,

"ஒருத்தங்க நெருக்கடிக்கு உள்ளாகும் போது இல்லனா ஏதாவது சங்கடமான சூழ்நிலையைக் கையாளும் போது ஏற்படும் பயம், பதட்டம், கவலை இதெல்லாம் கலந்த உணர்வை தான் ஆங்சைட்டினு (anxiety) சொல்வோம். தமிழ்ல பதகளிப்புனு சொல்லுவாங்க‌. இது எல்லாருக்கும் ஏற்படுற சாதாரண மன உணர்வு தான். ஆனா இதுவே பேனிக் அட்டாக (Panic attack) மாறும் போது தான் அது பிரச்சினையாகுது. பேனிக் அட்டாக்ன்றது இந்த உணர்வுகள்லாம் உச்சத்தைத் தொடுறப்ப நரம்புகள்ல ஏற்படுற பாதிப்பும் ஹார்மோன் மாறுதல்கள் தான்" என்று தியா கூறியதும்,

"அப்ப வள்ளி என்கிட்ட அன்னிக்கு அப்படிப் பேசினது இந்தப் பேனிக் அட்டாக்னாலனு சொல்றீங்களா மேடம்?" எனக் கேட்டான்.

"ஆமா கார்த்தி. வள்ளிக்கு ஏற்கனவே இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் இருந்திருக்கு. தன்னோட அப்பியரென்ஸ் வச்சி இந்த வேலைக்குத் தான் தகுதியில்லங்கிற எண்ணம் இருந்திருக்கு. இதுல இன்ட்ரோவெர்ட் வேறயா, அதனால தினமும் ஆபிஸ்க்கு போகும் போது தன்னோட வேலை எல்லாத்தையும் சரியா செய்யனுமேங்கிற பதட்டத்தோடவே ஆபிஸ்க்கு போய்ட்டு வந்துட்டு இருந்திருக்காங்க. எப்பவாவது ஒரு நாள் இப்ப பயம் பதட்டம் கவலை எல்லாம் இருந்தா அது நார்மல். தினமும் இந்தப் பயம் பதட்டம் உணர்வுலேயே சுத்தும் போது அது உடம்புல ஹார்மோன்ஸ்ஸை இம்பேலன்ஸ் ஆக்கும்ல. இதுக்கிடைல அவங்களுக்கு மாப்பிள்ளை சரியா அமையாத கவலை வேற இருந்திருக்கு. தன்னைப் போல எல்லாத்துக்கும் பயந்துட்டு இல்லாம உங்களை மாதிரி கலகலப்பா பேசுற தைரியமான பையன் தான் வேணும்னு நினைச்சிருக்காங்க. அவங்க எதிர்பார்த்த மாதிரியே நீங்க அவங்க லைஃப்ல சந்தோஷத்தை கொடுக்கிற தேவதையா நுழைஞ்சிருக்கீங்க. ஆனா வீட்டை எதிர்த்து செஞ்ச கல்யாணம் அவங்களுக்குக் குற்றவுணர்வை கொடுத்திருக்கு. இந்தக் கல்யாணத்துனால அவங்களால முழுசா சந்தோஷப்பட முடியலை. அதுக்குப் பிறகு அவங்களோட அப்பா அம்மா ஊரை விட்டே போனது அவங்களை மேலும் குற்றவுணர்வுல தள்ளி ஆங்சைட்டியை வர வச்சி பேனிக் அட்டாக்ல கொண்டு போய் விட்டிருக்கு. அதான் அன்னிக்கு அவங்க அப்படிக் கோபமா கத்தியிருக்காங்க" என்று விளக்கினார் தியா.

"ஓ.. இதை சரி செய்ய நான் என்ன பண்ணனும் மேடம்?" எனக் கேட்டான்.

வள்ளியை இந்தப் பிரச்சினையிலிருந்து வெளிக் கொண்டு வர கார்த்திகேயன் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென எடுத்துரைத்தார் தியா.

தியாவின் ஆலோசனையினால் தெளிவடைந்தவனாய், "தேங்க் யூ சோ மச் மேடம். நீங்க சொன்ன மாதிரியே அவளை இயல்புக்குக் கொண்டு வர முயற்சி செய்றேன்" என்றவனாய் விடைப்பெற்றான் கார்த்திகேயன்.

அன்று மாலை மகிழுந்தில் வீட்டை நோக்கிச் சென்றிருந்த போது ஒரு கடையில் வண்டியை நிறுத்தினான் கார்த்திகேயன்.

அவனருகில் அமர்ந்திருந்த வள்ளி, 'ஏன் இங்க நிறுத்தியிருக்காங்க' என்பது போல் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

"இறங்கு வள்ளி" என்றான் கார்த்திகேயன்.

காலையிலிருந்து தன்னிடம் பேசாது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்த கணவன் இப்போது பேசியதில் இன்ப ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியவனாய் இறங்கு என்று சைகை செய்தவனாய் இறங்கினான்.

அது ஒரு ஐஸ்க்ரீம் கடை!

உள்ளே சென்றதும், "உனக்கு என்ன ஃப்ளேவர் பிடிக்கும் வள்ளி?" எனக் கேட்டான்.

"உங்களுக்கு எது பிடிக்குமோ அதையே வாங்குங்க" என்று விட்டாள்.

தனக்கும் அவளுக்குமாய் இரண்டு கோப்பையில் கலவையான சுவை கொண்ட ஐஸ்க்ரீம்களை வாங்கி வந்து மேஜையில் வைத்தவன் அவளெதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவனது முகத்தைப் பார்த்தவாறே ஐஸ்க்ரீம் உண்டு கொண்டிருந்தவளைப் பெருத்த சிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன்,

"வள்ளி இப்ப நாம வீட்டுக்குப் போனதும் துணியெல்லாம் பேக் பண்ணிடு! நாம வெளியூருக்கு போறோம்" என்றான்.

'வெளியூருக்கா?' இன்ப அதிர்வுடன் அவனைப் பார்த்தவள், 'செகண்ட் ஹனிமூனா?' என்று மனத்தோடு நினைத்தவளாய் பூரித்த மனத்துடன்,

"எந்த ஊருக்கு? எத்தனை நாளைக்குப் பிளான்?" எனக் கேட்டாள்.

"நெக்ஸ்ட் டூ டேஸ் சனி ஞாயிறு தானே. அதுவும் சேர்த்து எப்படியும் ஒன் வீக் ஆகும்னு நினைக்கிறேன். உன்கிட்ட இருக்க எல்லா டிரஸ்ஸையும் எடுத்து வச்சிக்கோ! லீவ் சொல்ல வேண்டாம். வர்க் ஃப்ரம் ஹோம் சொல்லிடு ஆபிஸ்ல" என்றவன் அங்கிருந்து எழுந்து கைக் கழுவ சென்றுவிட, இவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்திருந்தாள்.

'சரி எங்கே போனா என்ன? இவர் கூட ஊர் சுத்துறதே சந்தோஷம் தானே' என்று மனத்தோடு பேசிக் கொண்டவளாய் அவனுடன் மகிழுந்தில் பயணித்தவள், வீட்டை அடைந்ததும் அவன் கூறியது போல் துணிகளை எடுத்துப் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள்.

அந்த நேரம் தனது தாயிடம் தங்களின் பயண விபரங்களை உரைத்தவன், தந்தை அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு உரைத்து விடுமாறு கூறினான்.

தனது உடுப்புகளைத் தனிப் பையில் எடுத்து வைத்தவனைக் கேள்வியுடன் பார்த்தவள், "ஏன் என் பெட்டியிலேயே எடுத்து வைக்க வேண்டியது தானே! ஒரே பெட்டியைத் தூக்கிட்டு போக வசதியா இருக்கும்ல" எனக் கேட்டாள்.

"இல்ல அது பத்தாது" என்று உரைத்தவன் தனித் தோள்பையில் தனது துணிகளை எடுத்து வைத்துக் கொண்டான்.

அன்றிரவு வீட்டிலேயே உண்டு விட்டு வாடகை மகிழுந்தை ஏற்பாடு செய்தவர்களாய் பேருந்து நிலையம் சென்றிருந்தனர்.

குளிரூட்டப்பட்ட பேருந்தில் சாய்வாய் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் இருக்கும் பேருந்தை ஏற்பாடு செய்திருந்தான் கார்த்திகேயன்.

பேருந்து எந்த ஊருக்குச் செல்கிறது என்றெல்லாம் பார்க்காமல் அவன் அழைத்துச் சென்று அமரச் சொன்னதில் அமர்ந்து கொண்டாள் வள்ளி.

இரவு ஒன்பது மணிக்கு மேல் விளக்குகள் அணைக்கப்பட்டுப் பேருந்து நகரத் தொடங்கவும், தனது கைப்பேசியில் பாட்டை வைத்தவளாய் காதொலிப்பானை தன்னுடைய ஒரு காதில் வைத்துக் கொண்டே மற்றொன்றை அவனது காதில் சொருகினாள்.

நெடுநாள்களுக்குப் பிறகு கணவனுடனான பயணத்தில் வள்ளியின் மனம் மகிழ்வின் உச்சத்தில் இருந்தது.

வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன்தான்.

காதினுள் இப்பாடல் ஒலிக்கவும் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான் கார்த்திகேயன்.

புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புதுக் கோலம்தான்

கண்களைச் சிமிட்டி சிரித்தவளாய் புருவத்தை உயர்த்திப் பாட்டு எப்படி என்று கேட்டவளைப் பார்த்திருந்தவனுக்கு அவளை அள்ளிக் கொள்ள வேண்டுமென நெஞ்சம் பரபரக்க, புன்னகையுடன் அவளின் நெற்றியில் இதழை ஒற்றி எடுத்தான்.

சொல்லித்தரச் சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று
தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்

"எனக்கும் முல்லைப்பூ பிடிக்கும்" அவன் காதோடு உரைத்தவள் அவனது தோளில் முகம் சாய்த்தவளாய் தன்னவனின் அண்மை தந்த இதத்தில் கண் மூடினாள்.

பெருமூச்சுடன் இருக்கையில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடியவனின் எண்ணங்கள் சுற்றிச் சுழன்றிருந்தன.

சிறிது நேரம் கழித்து அவளின் முதுகோடு கைக்கொடுத்து தன்னோடு அணைத்தவாறு ஷாலை போர்த்தி விட்டு உறங்கியவன் காலை இறங்கும் இடம் நெருங்கும் போது தான் கண் விழித்தான்.

இருவரும் இணையரின் அண்மை தந்த இதமான மனநிலையில் தங்களை மறந்து அயர்ந்து உறங்கியிருந்தனர்.

தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கியதும், தாங்கள் நின்றிருந்த ஊரின் பெயர்ப் பலகையைக் கண்டு அதிர்ந்தவளாய் கார்த்திகேயனைப் பார்த்தாள் வள்ளி.

'உன் அப்பா அம்மா கூடவே இருனு என்னை இங்கேயே

விட்டுட்டுப் போகக் கூட்டிட்டு வந்திருக்காரா?' நினைத்த பொழுதில் கண்கள் கலங்கிட அவனைக் கலக்கத்துடன் பார்த்திருந்தாள் வள்ளி.
 
Last edited by a moderator:

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top