• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
67
ஒரு மாதத்திற்குப் பிறகு...

இருவரும் கட்டிலில் ஈர் ஓரங்களில் படுத்திருந்தனர்.

காலைச் சூரியனின் ஒளி ஜன்னலின் வழியாக முகத்தில் விழவும் கண் விழித்த வள்ளி, திரும்பி கார்த்திகேயனைப் பார்த்து பெருமூச்சு விட்டவளாய் கழிவறைக்குச் சென்று விட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள்.

பார்வதி அடுப்பில் பாலை வைத்துவிட்டு காய்கறிகளை நறுக்கத் துவங்கவும் இவள் வந்துவிட, "அரிசி கழுவி வச்சிடுறியா மா?" என்றார் பார்வதி.

"சரிங்க அத்தை" என்றவள் வேலையில் இறங்கினாள்.

இந்த வீட்டிற்கு வந்த பிறகு முதல் வாரம் புதுமணத் தம்பதியரெனத் தேனிலவுக்குச் சென்று வந்த பிறகு மறுவாரத்தில் இருந்தே இந்த வீட்டின் மருமகளாய் அவளே தன்னைச் சமையலில் ஈடுபடுத்திக் கொண்டாள் வள்ளி. அதன் மூலம் தனது மாமியாருடன் நல்ல நட்பினை வளர்த்திருந்தாள் வள்ளி.

"நேத்து எதுவும் பேசினானாமா உன்கிட்ட?" எனக் கேட்டார் பார்வதி.

இல்லையென அவள் தலையசைக்கவும், "இரண்டு பேரும் இப்படி இருந்தா என்னமா அர்த்தம்? யாராவது இறங்கி வந்து பேசினா தானே பிரச்சினை சரி ஆகும்" ஆதங்கமாய் உரைத்தவர்,

"யாரோட குடும்பத்துக்குள்ளயும் யாரும் கருத்துச் சொல்ல முடியாது வள்ளி. ஆனா மனசு கேட்க மாட்டேங்குதே" என்று புலம்பியவராய் தேநீர் தயாரித்து அவளிடம் கொடுத்தார்.

கார்த்திகேயனும் வள்ளியும் அன்று சண்டையிட்டப் பிறகு, இன்று வரை தேவைக்கு மட்டுமே ஓரிரு வார்த்தைகள் இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த ஆதங்கத்தில் தான் பார்வதி இவ்வாறு புலம்பியிருந்தார்.

வள்ளியின் பெற்றோரைக் கண்டுபிடிக்க, வள்ளியிடமிருந்து உதயாவின் எண்ணை கேட்டு வாங்கிப் பேசினான் கார்த்திகேயன். வள்ளியின் பெற்றோர் அங்கே வரவில்லை என்று உரைத்து விட்டான் உதயா. வள்ளியின் பெற்றோர்களது அலைபேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்க, வள்ளியின் சொந்தக்காரர்களின் தொடர்பு எண்கள் எதுவுமே வள்ளியிடம் இல்லாது இருக்க, கார்த்திகேயன் தனது அலுவலக நண்பருக்குத் தெரிந்த காவல்துறையினர் மூலம் அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்தான்.

அடுத்த இரு நாள்களிலேயே வள்ளியின் தாய் தந்தையரின் அலைபேசி எண்கள் கடைசியாகத் தூத்துக்குடியில் பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கண்டுபிடித்திருந்தனர். அவர்கள் நிச்சயமாக ஏதேனும் உறவினர்கள் இல்லத்திற்குத் தான் சென்றிருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு தான் கார்த்திகேயனின் வீட்டில் அனைவருக்கும் ஆசுவாசமானது.

அடுத்தச் சில நாட்களில், வள்ளியின் தந்தை நடத்திக் கொண்டிருந்த கடையையும் அவர்களின் வீட்டையும் யாருக்கோ வாடகைக்கு விட்டிருப்பதைப் பார்த்த கார்த்திகேயன், அவர்களிடம் சென்று விசாரித்தான்.

வாடகைக்கு வந்திருப்பவர்கள் தூத்துக்குடியில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்றும், இந்த ஊருக்குப் புதியவர்கள் என்றும் சொன்னவர்கள், ஓனரின் அலைபேசி எண்ணை எவரிடமும் பகிரக் கூடாதெனக் கூறிவிட்டார் என்றும் கூறியிருந்தனர்.

வள்ளிக்குத் தன்னால் தனது பெற்றோர் இந்த ஊரை விட்டே சென்று விட்ட குற்றயுணர்வு அப்படியே இருக்க, கார்த்திகேயனுக்கோ தனது மனைவியே தன்னையும் தனது காதலையும் புரிந்து கொள்ளாது பேசியது மனத்தை விட்டு அகலாது இருந்தது. இருவரும் இரு வேறு மனநிலையில் தள்ளியே இருக்க, அருகில் இருந்தும் தூரமாய் வாழும் இந்நிலையை வெறுத்த கார்த்திகேயன் அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்க, அவனது பிராஜக்ட்டில் பெங்களூர் கிளைண்ட் இடத்திற்குத் தானே செல்வதாகக் கேட்டு வாங்கிக் கொண்டு வள்ளியை தனித்து விட்டுச் சென்றிருந்தான்.

அங்குச் சென்ற பிறகும் வள்ளிக்கென தனியாக குறுஞ்செய்தியோ அழைப்போ செய்யாமல் தான் இருந்தான். அவனின் இந்தப் புறக்கணிப்பில் வெகுவாக காயப்பட்டுப் போனாள் வள்ளி. தனது தாயிடம் அன்றாடம் வள்ளியைப்‌ பற்றிக் கேட்டுக் கொள்வான். வள்ளியும் பார்வதியிடம் அவனைப் பற்றிக் கேட்டுக் கொள்வாள்.

மகனும் மருமகளும் இப்படித் தனித்து வாழும் வாழ்வைக் கண்டு கலங்கிய பார்வதியும் தாமோதரனும் இருவரிடமும் பேசிப் பார்த்து ஓய்ந்து போயினர்.

இப்படியே இருவரும் பிரிந்தே வாழ்ந்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் முந்தைய நாள் இரவு தான் பெங்களூரில் இருந்து வந்திருந்தான் கார்த்திகேயன்.

சிறிது நேரத்தில் கண் விழித்த கார்த்திகேயன், அருகில் வள்ளி இல்லாததைப் பார்த்து விட்டு தனது கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான்.


அவனின் விரல்கள் தானாக இன்ஸ்டாவிற்குச் சென்று ஒரு வாரத்திற்கு முன்பு வள்ளி பதிவிட்டிருந்த அந்தக் கவிதைக்குச் சென்றிருந்தன.
 
Last edited:
Joined
May 20, 2025
Messages
67
நான் நானாகவே இல்லை,
பல நாட்களாக!
நாம் நாமாகவே இல்லை,
சில நாட்களாக!

சொல்லித் தெரிவதில்லை
சொல்லாமலும் புரிவதில்லை
சொல்லிய காதலும்
சொல்லாத தனிமையும்!

வீசும் காற்றில்
விசும்பும் ஒலி!
என்னிலா?
உன்னிலா?
வீணாய் போகட்டும், நம்
வீண் பிடிவாதம்!
வந்துவிடு என்னிடமே
தஞ்சமாய் நான் உன்னிடமே!

உன்னைக் கடிந்து கொண்ட
நான் என்னையே
கடிந்து கொள்கிறேன்.
இரண்டுக்கும்
மருந்து இல்லை
மருந்தாக உன்னையே தேடுகிறேன்

கனியாதோ உன் இதயமென
காதலுடன் காத்திருக்கிறேன்

பூவின் துயரம்
காம்பிற்குப் பாரமாகுமா?
பூவைத் தாங்கும் காம்பாய்
தாங்கிக்கொள்ள
வாராயோ
கண்ணாளனே

மன்னிக்கும், என்
மருந்தே, எனை
மன்னித்து மீட்பாயா?

--- வள்ளி கார்த்திகேயன்

அந்த வள்ளி கார்த்திகேயன் எனும் பெயரை ஆசையாய் வருடியது அவன் விரல்.

எத்தனை முறை இக்கவிதையை வாசித்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது. அவளின் அண்மையை மனம் நாடும் சமயங்களில் எல்லாம் வாசித்திருந்தான்.

பெருமூச்சு விட்டவனாய் எழுந்தவன் குளித்து முடித்து அலுவலகத்திற்குக் கிளம்பியவனாய் வெளியே வர, இவள் உள்ளே சென்றாள்.

பார்வதி இவனுக்கு உணவு பரிமாற, குளித்து உடை மாற்றிவிட்டு வந்தவளாய் இவளும் அமர்ந்து உண்டாள்.

"அம்மா நான் வெளில கார்ல வெயிட் செஞ்சிட்டு இருக்கேன். உன் மருமகளைக் கிளம்பி வரச் சொல்லு" அவள் அங்கிருக்கும் பொழுதே தாயிடம் உரைத்தவனாய் அவன் எழும்ப,

"ஏன் அதை உன் வாயாலயே உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்ல வேண்டியது தானே" என்றார் பார்வதி.

அதைக் கண்டு கொள்ளாதவனாய் அலுவலகப் பையை எடுத்துக் கொண்டு மகிழுந்திற்குச் சென்றிருந்தான்.

மகிழுந்திற்குச் சென்று அரை மணி நேரம் ஆனப் பின்பும் அவள் வராமல் இருக்க, மகிழுந்தின் ஒலிப்பானை அழுத்திக் கொண்டேயிருந்தான்.

இவள் அவசரம் அவசரமாகப் பையைத் தூக்கிக் கொண்டு வந்து மகிழுந்தின் முன்னிருக்கையில் வந்து அமர்ந்தாள்.

இவன் அமைதியாக வண்டியை ஓட்ட,

மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகைச் சூடிக் கொண்டேன்

அவளின் அலைபேசி அலறவும், சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான் கார்த்திகேயன்.

இருவரின் பார்வைகளும் மோதிக் கொண்டன.

மன்னிக்க மாட்டாயா என்று அவளின் பார்வை இறைஞ்சி நிற்க, அலைபேசி ஒலித்து அடங்கியிருந்தது.

அவளின் பார்வைக்கான பொருள் புரிந்த போதும் இறுகிய பார்வை பார்த்தவனாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான் கார்த்திகேயன்.

"பிரியங்கா பாடின இந்தப் பாட்டு ஹிட் ஆன நாள்லருந்து என்னோட ரிங் டோனா இதைத் தான் வச்சிருக்கேன். ஆனா நீங்க என்கிட்ட பிரபோஸ் செஞ்ச அன்னிக்கு இந்தப் பாட்டைக் கேட்டதும் உங்க ஞாபகம் தான் வந்துச்சு. என் மன்னவனா உங்களை ஏத்துக்கலாமா வேண்டாமானு மனசுக்குள்ள ஒருவித போராட்டம் நடந்துச்சு. அதுக்குப் பிறகு இந்தப் பாட்டை எப்ப கேட்டாலும் என் மனசு உங்களைத் தான் தேடும்" என்று திருமணமான மறுநாள் இதைக் குறித்து அவள் கூறியது அவனது நினைவினில் ஆட, இவளுமே அதைச் சிந்தித்தவாறு அமர்ந்திருக்க, மீண்டுமாய் இவளின் அலைபேசி ஒலித்து இருவரது சிந்தையையும் கலைத்திருந்தது.

அவளது அலுவலக விஷயமாக வந்த அழைப்பையேற்று அவள் பேசியவாறு இருக்க, அலுவலகம் வந்திருந்தது.

மகிழுந்தில் இருந்து இறங்கியவனாய் அவள் கையில் உணவுப்பையும் கணினிப்பையும் வைத்துக் கொண்டு கைப்பேசியைக் காதினுள் வைத்தவாறு பேசிக் கொண்டு இறங்கத் தடுமாறுவதைப் பார்த்து அவளருகில் வந்து கணினிப்பையைத் தனது கையினில் எடுத்துக் கொண்டான் கார்த்திகேயன்.

அவனது இந்தச் சிறிய செயலில் மனம் குளிர்ந்தவளாய் சின்னச் சிரிப்புடன் அவனைப் பார்த்தவாறு இவள் இறங்க, அவனோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அவள் அலைபேசியில் பேசி முடிக்கவும், பையை அவளிடம் கொடுத்து விட்டு முன்னே நடந்தான்.

வழமைப்போல் வழியில் பார்க்கும் அனைவரும் இவனிடம் சிரித்தவாறு முகமென் உரைத்துக் கொண்டே கடந்து செல்ல, இவனின் முகத்திலும் முன்பிருந்த இறுக்கம் முற்றிலுமாய் மறைந்து புன்சிரிப்புச் சூழ்ந்திருந்தது.

'இந்தச் சிரிப்பை என்கிட்ட காண்பிக்காம ஒளிச்சி வைக்கிறதுல அப்படி என்ன தான் சந்தோஷமோ இவருக்கு' என்று மனத்தோடு புலம்பியவாறே அவனுடன் நடந்து வந்தவள், தனது இடத்திற்குச் சென்று விட்டாள்.

மதிய உணவு இடைவேளையின் போது, சத்யாவுடன் இருவரும் அமர்ந்து அமைதியாக உண்டு கொண்டிருக்க, 'இன்னும் இவங்க இரண்டு பேரும் சரியாகலையா?' அவர்கள் இருவரையும் இடுங்கிய பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

திருமணம் ஆன சில நாளிலேயே கார்த்திகேயன் பெங்களூருக்கு சென்றதில் தான் இருவருக்குள்ளும் ஏதோ சரியில்லை என்று கண்டுபிடித்தாள் சத்யா. மேலும் இருவரும் பேசிக் கொள்ளாமல் ஒதுக்கத்துடன் இருப்பதையும் கவனித்தவாறு தான் இருந்தாள். கணவன் மனைவிக்குள் இவை சகஜமென கடந்திருந்தவளுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக இன்றும் இது தொடர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு கவலையாகிப் போனது.

கார்த்திகேயன் தன்னுடைய பெங்களூர் பயணத்தைப் பற்றிச் சத்யாவிடம் உரைத்தவாறு உண்டு கொண்டிருந்தான். உண்மையில் சத்யாவிடம் உரைக்கும் சாக்கில் வள்ளியும் கேட்பாள் என்று தான் உரைத்திருந்தான். ஆனால் வள்ளியோ, 'என்கிட்ட இதெல்லாம் சொல்லனும்னு அவருக்குத் தோணலைல' என்று எண்ணியவாறு அவனது முகத்தைப் பார்த்தவாறே உண்டு கொண்டிருந்தாள்.

"உன் புருஷனை சைட் அடிச்சது போதும்டி" என்று சத்யா சிரிப்புடன் கூறுவதைக் கேட்டு சங்கோஜத்துடன் பார்வையைத் திருப்பிய வள்ளி, சத்யாவை முறைத்து வைத்தாள். கார்த்திகேயன் இதழுக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

வள்ளி உண்டு முடித்து விட்டு தனக்கு முக்கிய வேலை இருப்பதாகக் கூறி விட்டுச் சென்றிருக்க, கைப்பேசியில் யாரிடமோ பேசிய சத்யா அழைப்பைத் துண்டித்தவளாய், "உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு ஒரு கவுன்சிலிங்க்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். போய்ட்டு வாங்க" என்றாள்.

"என்னது கவுன்சிலிங்கா? யாருக்கு? எதுக்கு?" என்று கார்த்திகேயன் கேட்க,

"உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் தான்" என்றாள் சத்யா.

"நாங்க கேட்டோமா உன்கிட்ட எங்களுக்குக் கவுன்சிலிங் தேவைப்படுதுனு" என்று முறைத்தவாறு அவன் கேட்க,

"அதான் மூஞ்சை பார்த்தாலே தெரியுதேடா! இதை நீ வாயைத் திறந்து வேற கேட்கனுமாக்கும்" என்ற சத்யா,

"நம்ம கம்பெனில தான் எம்பிளாயிஸ்க்கு ஃப்ரீ சைக்காலஜிக்கல் கவுன்சிலர் ஏற்பாடு செஞ்சி வச்சிருக்காங்கலடா கார்த்தி. அவங்ககிட்ட தான் இப்ப பேசினேன். நானே ஒரு முறை என்னுடைய ஃபேமிலி பிராப்ளத்துக்காக அவங்களைக் கன்சல்ட் செஞ்சிருக்கேன். ரொம்ப நல்லா கவுன்சிலிங் கொடுப்பாங்க. அவங்ககிட்ட பேசின பிறகு நமக்கே ஒரு பாசிட்டிவ் ஃபீல் வரும். ஒரு தெளிவு கிடைக்கும்" என்றாள்.

கார்த்திகேயனுக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. ஆனாலும் தோழியாகத் தங்களின் நலனைக் கருதி அவள் எடுத்திருக்கும் இந்த முயற்சியை உதாசீனப்படுத்தவும் முடியாமல் அமைதியாக இருந்தான்.

"இரண்டு பேருக்கும் தனித் தனி டைமிங் தான் கொடுத்திருக்காங்க. அதனால ரொம்ப யோசிக்காம போய்ப் பேசு. ஆன்லைன்லயே கன்சல்ட் செய்வாங்க. ஆபிஸ்லருந்தே நீ அட்டெண்ட் செஞ்சிடலாம்" என்று பேசி கார்த்திகேயனை அனுப்பி வைத்தவள், வள்ளியிடமும் இது குறித்துப் பேசி வைத்தாள்.

அன்று மாலை வள்ளியும் கார்த்திகேயனும் தனித்தனியாக வெவ்வேறு நேரங்களில் இணையத்திலேயே அந்த உளவியல் ஆலோசகரிடம் பேசினர். இருவரிடமும் அவர்களுக்கு ஏற்றவாறு பேசி அவர்களது மனத்தில் உள்ளதை எல்லாம் அவர்கள் வாய் மூலமாகவே கூற வைத்திருந்தார் அவர். நெடுநாள்களாக மனத்தினுள் அழுத்தியிருந்த பாரம் குறைந்ததைப் போன்று உணர்ந்தனர் இருவரும்.

இருவரிடமும் மறுநாள் அதே நேரம் பேசுவதாக உரைத்து விட்டு விடைபெற்றிருந்தார் அவர்.

அன்று மாலை ஒரே மகிழுந்தில் வீட்டிற்குச் சென்று இரவுணவை உண்டு விட்டு படுக்கும் வரையில் இருவருக்குள்ளும் எவ்வித பேச்சுமே இருக்கவில்லை.

படுக்கையில் இருவரும் இரு ஓரத்தில் வெவ்வேறு சிந்தையில் உழன்றவர்களாய்ப் படுத்திருக்க, பாதி இரவு கழிந்த பிறகும் உறக்கம் அவர்களின் கண்களை எட்டவேயில்லை.

எப்பொழுதும் கலகலப்பாக உலவும் இவனுக்குள் இப்படி அழுத்தமான ஒருவன் இருப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனுக்கு முதுகு காண்பித்தவாறு படுத்திருந்தவள் மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவளின் முதுகை வெறித்தவாறே படுத்திருந்தவன் அவள் திரும்பிப் படுக்கவும் கண்களை மூடிக் கொண்டான்.

மெல்ல அவன் புறம் நகர்ந்து சென்றவளாய் அவனை உற்று நோக்கினாள். அவன் முழுமையான உறக்கத்திற்குள் இல்லை என்பதை அவனது கருமணிகளின் அசைவினில் கண்டுகொண்ட போதும், அவனது இடையைச் சுற்றி கையைப் போட்டு அணைத்தவள், அவனை ஒண்டியவாறு படுத்துக் கொண்டாள்.

நீண்ட நாள்களுக்குப்‌ பிறகான அவளின் அணைப்பில் உள்ளம் சிலிர்க்க மெல்லிய நீர்க்கசிவு அவன் கண்களில்.

உன்னைக் கடிந்து கொண்ட
நான் என்னையே
கடிந்து கொள்கிறேன்.
மருந்தாக உன்னையே தேடுகிறேன்.

அவளின் வரிகள் நினைவிற்கு வர, 'திட்டுறதுக்கும் நான் தான் வேணும். கொஞ்சுறதுக்கும் நான் தான் வேணும்னு எப்படி எழுதி வச்சிருக்கா பாரு' நினைத்தவனின் இதழ்கள் முறுவலித்தன.

அவனின் கை தானாக அவளை வளைக்க, அவன் கை மீது தனது கையை வைத்தவளாய் இறுக்கியவள் சில நிமிடங்களிலேயே உறங்கிப் போனாள்.


அவள் உறங்குவதை உறுதிச் செய்திக் கொண்டவனாய் மெல்ல அவளின் தலையைக் கோதி விட்டவாறு உச்சியில் முத்தமிட்டவன் நெடுநாள்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கியிருந்தான்.
 
Last edited:
Member
Joined
May 9, 2025
Messages
55
Wonderful and meaningful kavidhai.( both of them). I like the second one ,only with husband or wife only you can show your real face.👏👏👏
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top