New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 13
- Thread Author
- #1
சுந்தரி - 9
“சார் ரஞ்சி அக்கா வீட்டுக்குப் போனப்ப ஒரு வித்தியாசமான கேரக்டர் சந்திச்சேன். அவங்க லவ் வாவ் சொல்ல வச்சது. உடனே அவங்களைப் பற்றிய தேடல்ல இறங்கி, அப்படியே டாக்குமென்ட்ரியா தயாரிச்சேன். அதனோட தொகுப்பு இதோ. இதில் அந்த கேரக்டர் போட்டோஸ் இருக்கு. பார்த்தா அசந்துருவீங்க” என்றான் அவன்.
“என்னடா பெரிய லெவல்ல பில்டப் குடுக்கிற” என்றான்.
“பாத்துட்டு சொல்லுங்க சார்” என்று மடிக்கணிணியில் எஸ்.எஸ் என்ற போல்டரை திறந்தவாறு, “அக்காவிடம் வீட்டுல இருக்க போரடிக்குது சொன்னேன் சார். அவ்வளவுதான். என் அக்கா என்னடானா தோட்டத்து வேலைக்கு அனுப்பிட்டா. தோட்டம் வச்சிருக்கிற அக்கா தான் இவங்க. இவங்க கதையைக் கேட்டதில் மனசெல்லாம் பாரமாகிப் போச்சி. அதிலும் அவங்க மாமா பார்த்தா உங்க ரியாக்சன் எப்படி இருக்கும் தெரியலை” என்று அவனின் டாக்குமெண்டரியை ஓடவிட்டான். அதில்,
“என்ன செல்வி தோட்டத்துக்கா?” என்று தன் வீடு தாண்டிச் செல்லும் பெண்ணை நிறுத்திக் கேட்டாள் ரஞ்சிதா.
“ஆமா ரஞ்சிக்கா. இன்னைக்கு இளநி வெட்ட வராக. அப்படியே மட்டையை கழிச்சி விடனும். வேலை முடிய எப்படியும் சாயங்காலம் ஆகிடும்.” என்றாள் அவள் புன்னகை முகமாக.
“ஆள் வேணும்னா சொல்லுமா. ஊரில் வேலை இல்லனு தம்பி ஒரு வாரமா இங்க வந்திருக்கான். வீட்டுக்குள்ளயே இருந்து சலிப்பு வருதாம். அவனை வரச் சொல்லுறேன்.” என்று சொன்னாள்.
“நம்ம தம்பி தான. அவனுக்குப் பிரச்சனை இல்லனா வரச்சொல்லுங்க அக்கா. மதியத்துக்கு மேல நீங்களும் வேனும்னா வாங்க. தம்பிக்கு தோட்டம் தெரியுமா? இல்லைனா நான் வந்து கூட்டிட்டுப் போகவா?” எனக் கேட்டாள் கேள்வியாய்.
“நீ வர வேண்டாம். நான் என் பையனை துணைக்கு அனுப்புறேன்மா. பையங்க ரெண்டு பெரும் செகண்ட் சாடர்டே லீவுன்னு வீட்டுல தான் இருக்கானுங்க.”
“அப்ப சரி. நான் வரேன்” என்று புன்னகையுடன் சென்றாள்.
மாலை வேளையில் வேலை முடிந்து வருகையில், “என்ன தம்பி? அக்கா வீட்டுக்கு ஓய்வெடுக்க வந்த புள்ளைய ரொம்ப வேலை வாங்கிட்டனா? உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையே?” செல்வி ரஞ்சிதாவின் தம்பி ஹரிஹரனிடம் கேட்க,
“குடுக்கிற பணத்துக்கு வேலை வாங்கலைனா, குடுக்கிற இடத்தில் இருக்கிற தகுதி அவங்களுக்கு இல்லைங்க சிஸ்டர்” என்றான் தெளிவாக.
‘ம்ம்...’ என அவனை மெச்சிக்கொண்டவள், “சிஸ்டர் வேணாம். அக்கானே கூப்பிடு தம்பி” எனவும் அவன் சம்மதமாய் தலையசைக்க, “தம்பி ரொம்ப தெளிவு அக்கா” என்று ரஞ்சிதாவிடம் சொன்னாள்.
“பார்க்கிற வேலைக்கு இந்த தெளிவு இல்லனா எப்படி செல்வி.” என்றாள் ரஞ்சிதாவும்.
“ஆமா. படிச்சிட்டு இருக்கிறதா முன்ன சொன்னீங்க. அப்புறம் நான் கேட்டுக்கலை? என்ன வேலை அக்கா?” என்று கேட்க,
“சென்னையில் வக்கீலா இருக்கான். கொஞ்சம் பிசியான ஆள் தான். ஏதாவது கேஸ் மண்டை குடைச்சல் குடுத்தா, இப்படி யார் வீட்டிலாவது ஒரு வாரம் தங்கி டென்சன குறைச்சிப்பான்.”
“என்ன அக்கா சொல்லுதிய? வக்கீலை வாழை மட்டை தூக்க வச்சிப்புட்டேனே. படிச்ச புள்ளைய இப்படியா காட்டு வேலைக்கு அனுப்புவிய?” என்று ரஞ்சிதாவை கடிந்து கொண்டாள்.
“களவும் கற்று மற. தமிழ் சொல்லும் மந்திரம். காட்டுக்கு வேலைக்குப் போறது மனச ரிலாக்ஸ் பண்ணும். அதான் போறியா கேட்டேன். சரின்னு சொன்னதால அனுப்பினேன். இதில் என்ன தப்பு?” என்றாள் ரஞ்சிதா.
“ஆமா அக்கா. எனக்கு போரடிச்சதால நான் தான் கேட்டேன். கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தான்” என்றான் ஹரிஹரன்.
“ஓ... அப்ப சரி” என்றாள் அவள்.
“செல்வி நேரமாகுதே. வீட்டுக்குப் போகலாமா?” என்ற ரஞ்சிதாவிடம்,
“இதோ மாமா பார்த்துட்டு வரேன்கா. நீங்க முன்ன போங்க” என்று தன் மாமனை தேடி சென்றாள்.
“மாமாவா? இந்த அக்காக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா? பார்த்தா அப்படித் தெரியலையே ரஞ்சிக்கா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“இருவத்து ஒன்பது வயசுடா செல்விக்கு. கல்யாணம் முடிஞ்சது. ஆனா, இல்ல” என்றாள் தம்பியிடம்.
“புரியலையே ரஞ்சிக்கா?” என்று குழப்பத்துடன் கேட்டான்.
“இரு அவளோட மாமாவிடம் கூட்டிப் போறேன்” என்று செல்வி சென்ற வழி தம்பியுடன் நடக்க, “அவர் பெயர் என்ன ரஞ்சிக்கா?” என கேட்டான்.
“அதோ” என்று ரஞ்சிதா காட்டிய இடத்தில் பார்த்தவன் அதிர்ந்து சகோதரியை பார்த்தான்.
அதே சமயம் தன் எதிரில் இருந்த சமாதியில், “சுந்தர்ராஜன்! தோற்றம் 1991. மறைவு 2015” என்று இருக்க, “என்ன மாமா இங்க வந்து படுத்திருக்கீங்க? இருட்ட போகுது வாங்க போகலாம்” என்று அந்த சமாதியில் தலை வைத்து சாய்ந்து உட்கார்ந்தாள் செல்வி.
அவளின் கேசம் வருடிய சுந்தர்ராஜன், “எனக்கு இங்க இருக்க பிடிக்குது செல்வி. தோட்டம்... ஜிலுஜிலுனு காத்து. என்னை மயக்குற நீ. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு.” என்றான் அவன்.
அதாவது அவள் கற்பனையில் இருந்த அவன் உருவம் பேசியது.
“சுள்ளுன்னு அடிக்கிற வெயிலை ஏன் விட்டுட்டீங்க?” என்றாள் கோபமாக.
“வெயில் என்மேல படக்கூடாதுன்னு தான மேற்கூரை போட்டிருக்க. அப்புறம் என்ன? ஐயாவுக்கு ஜாலி தான்” என்றான் அவள் நெற்றியில் முட்டி.
“வீட்டுக்குப் போகலாம் மாமா. அப்புறம் சமைக்க லேட்டாகிடும். நீ எப்ப வருவ, எப்ப போவனு தெரியாது. வா மாமா போகலாம்” என்று அடம் பிடித்து அவனை அழைத்துச் சென்றாள் அவள்.
சுந்தரராஜன் சமாதியில் அமைதியாகப் படுத்திருந்த செல்வ சுந்தரி எழுந்து செல்வதைப் பார்த்த ஹரிஹரன், “என்னக்கா இதெல்லாம்? அவர் உயிரோட இல்லையா?” என்றவன் கண்கள் கலங்க குரலில் தடுமாற்றம்.
முதல் முறையாக பார்த்த போதிலும், மனதார தன்னைத் தம்பி எனறு அழைத்தவளின் நிலை அவனை கலங்கச் செய்திருந்தது.
“இல்லடா.ராஜன் அண்ணா இறந்து பத்து வருஷம் ஆகுது. அதோட செல்விக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அவள் அம்மாவோட தம்பி தான் ராஜன் அண்ணா. அவளோட அம்மாவுக்கும் அவனுக்கும் பதிமூனு வயசு வித்தியாசம். இவ அம்மாவுக்கு பதினேழு வயசில் கல்யாணம் முடிச்சி, பதினெட்டில் இவ பிறந்துட்டா. ராஜன் அண்ணா, செல்வி ரெண்டு பேருக்கும் அஞ்சு வயசு தான் வித்தியாசம். பெருசுங்க இவங்களுக்கு முடிச்சி போட நினைக்க, இதுங்களும் மனசுல ஆசைய வளர்த்திருச்சிங்க.”
“மாமா இன்னொரு அண்ணா தான ரஞ்சிக்கா?” கொஞ்சம் குழப்பத்துடன் கேட்டான் ஹரிஹரன்.
“எல்லாருக்கும் அப்படி இல்லடா. சின்ன வயசில் இருந்து நாம சொல்லி வளர்க்கிறதை வச்சி தான் அதெல்லாம். அவங்களோட காதலைப் பத்தி எப்படிச் சொல்லுறது, ம்ம்ம்.. நெருங்கி பேசி, கட்டி பிடிச்சினு இல்லாத நேர்மையான, ஒழுக்கமான, சுத்தமான காதல். எல்லாருக்கும் எடுத்துக்காட்டா, காதலிச்சா இப்படி இருக்கனும் என்று இருந்த உதாரணக் காதல். அதுக்கு ஆயுள் தான் இல்லாமல் போயிடுச்சி.” என்றாள் வருத்தமாக.
“ஓ... எப்படி இறந்தார்?”
“அந்தக் கொடுமையை என்னனு சொல்லுறது? இவங்க கல்யாண பேச்சி எடுத்தப்ப ஜாதகம் பார்த்த இடத்தில் இவங்களுக்கு கல்யாணம் முடியாது. நடந்தா பையன் உசுருக்கு உத்திரவாதம் இல்ல சொல்லிட்டாங்க...” என்ற நொடி இங்கு காட்சிகளாய்.
மகன் பேத்தியின் ஜாதகத்துடன் ஹேமாவதி ஜோதிடர் முன் அமர்ந்திருந்தார்.
சில பல நிமிடங்கள் கட்டத்தினை கணித்து, பஞ்சாங்கத்தை புரட்டிப் பார்த்து, கையில் இருந்த பேனா கொண்டு வெள்ளைத் தாளில் ஏதேதோ கணக்குகள் போட்டவர் மனம் அதிர்ந்து தான் போனது. அதை வெளியில் காட்டாது வெளியில் சொல்லவும் முடியாது நேரத்தைக் கடத்தினார்.
“என்ன ஐயரே? புள்ளைங்க ஜாதகம் நமக்கு சாதகமா தான இருக்கு. எதுவும் பிரச்சனை இல்லையே? எதுவா இருந்தாலும் சொல்லிடுங்க.” என்று சொன்னார் ஹேமாவதி.
“அ..அது கொஞ்சம் பிரச்சனை தான். இந்த இரண்டுல ஒரு ஜாதகக்காரர் நேரம் சரியில்லை.”
“நேரம் சரியில்லைனா? என்ன சொல்ல வர்றீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஐயரே?” என்றார் தவிப்புடன்.
“அது வந்துங்க அக்கா... இந்த ஜாதகருக்கு கண்டம் இருக்கு” என்று உண்மையைப் பட்டென்று போட்டு உடைத்தார்.
“எ...என்ன சொல்லுறீங்க? நல்லா பார்த்து சொல்லுங்க ஐயரே. வாழ வேண்டிய புள்ளைங்க அது. என் பையனும், பேத்தியும் ஒருத்தர ஒருத்தர் விருப்பப்பட்டு, கல்யாண வாழ்வு வாழ ஆசையா காத்து இருக்காங்க. இப்பப் போயி இப்படி சொல்லுறீங்களே?” என்று அழுதார் ஹேமாவதி.
“கட்டம் அதை தான் சொல்லுது. விதியை மாத்தி எழுதும் வல்லமை சாதாரண மனுஷனுக்கு இல்லையே. இந்த கல்யாணத்தை நிறுத்துங்க.” என்றார் ஜோதிடர்.
“நிறுத்தவா? ஒருத்தருக்கு ஒருத்தர் இல்லை என்றால் ரெண்டும் உசுர விட்டுருங்களே ஐயரே. நான் என்ன செய்து இதை நிறுத்துவேன். எதைக் கொண்டு சரி செய்வேன். சின்ன வயசுலயே இவனுக்கு இவள் தான்னு சொல்லி வளர்த்தது தப்பா போச்சே. ரெண்டுக்கும் ஆசையை வளர்த்துட்டு இப்ப வெட்டினா எப்படி தாங்குவாங்க. அதுல ஒண்ணு உலகத்துலயே இருக்காதுன்னா... என்னால கொஞ்சமும் தாங்கிக்க முடியலை.” என்று கண்ணீர் வடித்தார்.
“வேற வழி இல்லங்க அக்கா. பெரியவங்க நீங்க நல்லது கெட்டது தெரிஞ்சவங்க. அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கை. அதில் பல வருடமா பிள்ளைக மனசுல ஆசைய வளக்கலாமா? இப்ப ஒன்னோட ஆயுள் கம்மியா இருக்கே. என்ன செய்யப் போறீங்க. பரவாயில்ல ஒரு நாள் வாழ்ந்தாலும் ரெண்டும் சேர்ந்து வாழட்டும்னு சேர்த்து வச்சிட்டு, ஒண்ணு மட்டும் தனியா இருக்கிறதை வேடிக்கை பார்க்கப் போறீங்களா?” என்று தெரிந்து பழகியவர் என்பதால் கேட்டுவிட்டார் ஜோதிடர்.
“இல்ல. இரண்டு பேருமே நல்லா இருக்கனும். ஏதாவது பரிகாரம் இருக்குதா? அதை செய்தாவது புள்ளைய வாழ வைக்குறேன்.” என்று கேட்டார் ஹேமாவதி.
“அதுக்கு சித்தம் இல்ல அக்கா. முடிஞ்ச அளவு புள்ளைய தனியா அனுப்பாதீக. காடு கரை போனாலும் கூட ஒரு ஆள் இருக்கனும். இது ஒருத்தருக்குன்னு இல்லை. ரெண்டு புள்ளையளுக்கும் தான். நான் பார்த்து அவங்களை தெரிந்த வரை சொல்லுறேன். ஏன்னா ஒண்ணு போச்சின்னா இன்னொன்னு தப்பான முடிவு எடுக்கும். ஒரே நேரத்தில் ரெண்டும் போனா நீங்க தாங்க மாட்டிய.” என்றார் தெளிவாக.
“நீங்க ஒண்ணு தான சொன்னீங்க ஐயரே! ரெண்டும் எப்படி?” என்றார் கண்ணீர் துடைத்து.
“ஜாதகத்துல இல்லை தான். கட்டம் எப்ப வேனும்னா மாறலாம். எல்லாம் கடவுள் கையில் இருக்கு. நாம ஒன்னும் கடவுள் இல்லையே அக்கா. இதுதான் நடக்கும் என்று சொல்லுவதற்கு. புள்ளைகள பார்த்துக்கோங்க” என்று ஜாதகத்தை அவர் கையில் கொடுத்தார் ஜோதிடர்.
“ஐயரே! இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். எதை எப்படி செய்யணுமோ அப்படி நான் செய்துக்குறேன். எனக்காக இந்த உதவி மட்டும் செய்யுங்க” என்றார்.
“நீங்க சொல்லாம யாருக்கும் இது பத்தி தெரியாதுங்க அக்கா. நீங்க தைரியமா போயிட்டு வாங்க” என்று அனுப்பினார்.
வருவார்கள்...