New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 11
- Thread Author
- #1
சுந்தரி - 7
“இப்ப அந்த ஜாலிய பாப்பீங்க. அதோ அங்க பாருங்க” என்று காண்பித்த இடத்தில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று, ஒன்பது பேர் கொண்ட குழுவை முறைத்து நின்றனர்.
“வாவ் சிங்கங்கள் சீறிட்டு இருக்கு. செம மொமன்ட் சுகுமார்” என்றான் அந்த இளசுகளின் முறைப்பை ரசித்தபடி.
“சார் நீங்க வேற. சூழ்நிலை புரியாம பேசாதீங்க. இவனுங்க சிங்கமா? பன்னிகுட்டிக சார். ரெண்டு க்ரூப்பும் ஒண்ணா நின்னு எதுக்கு முறைக்குது நினைக்கறீங்க?”
“எதுக்கு முறைப்பாங்க? முதல்ல கறி வாங்க வந்தவங்க முதல்ல வாங்கனும். ரெண்டாவது வந்தவங்க பின்னாடி வாங்கனும்னு சண்டையா இருக்கும். இதுல என்ன இருக்கு. எல்லா இடத்திலும் நடக்கும் சின்னப் பசங்க சண்டை தானே?” என்றான் சாதாரணமாக.
“அது தான் கிடையாது. கொஞ்சம் அவங்க பக்கத்துல போய் நின்னு கேளுங்க. அவனுவ பவுசு தெரியும்” என்றான்.
“எதுக்கு?” என்று புரியாது கேட்டான்.
“போயி கேளுங்க சார் தெரியும்” என்று ஈஸ்வரை அவர்கள் பக்கம் நகர்த்தி விட, அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவில் நின்று கொண்டான் ஈஸ்வர்.
“டேய், இன்னைக்கு காலையில் எதுக்குடா எங்க தெருவுக்கு வந்தீங்க? வயசு பிள்ளைங்க கோலம் போடுறப்ப, அங்க என்ன சோலி உங்களுக்கு?” என்றான் ஒருவன்.
“அதையே தான்டா நாங்களும் கேக்குதோம். எதுக்குடா விடிய காத்தால எங்க தெருவுக்கு வந்தீங்க? பொண்ணுங்க தண்ணி தெளிக்கிறத, கோலம் போடுறத ஏன்லே பாக்குதீய? அப்படியே கன்னாம்பட்டையில் ஒன்னு போட்டேன்னு வச்சிக்கோங்க. சோலி முடிஞ்சது” என்றான் எதிரில் இருந்தவன்.
“ஆமா எங்க கை நீங்க கன்னாம்பட்டையில் வைக்குற வர, மரம் ஏறி புளியங்கா பறிக்கும் பாருங்க. மண்டையில் போட்டேனா பாரு” என்று மற்றொரு கோஷ்டி எகிறியது.
“ப்பா... செமல்ல” என்ற ஈஸ்வரின் பாராட்டில் என்னவென சுகுமார் பார்க்க, அதை உணர்ந்து, “இல்ல ஏரியா பிள்ளைகளை எப்படிலாம் சேப் பன்னுராங்க. இந்த ஊரு பொண்ணுங்க ரொம்ப குடுத்து வச்சவங்க. இப்படி ஒரு பாதுகாப்புக் கவசம் வாவ் சொல்ல வைக்குது. உடம்பெல்லாம் புல்லரிக்குது சுகுமார்” என்றான் அவர்களின் செயலை எண்ணி சிலாகித்து.
அவனை கேவலமாய் பார்வையிட்ட சுகுமார், “சார் கோவிச்சிக்காதீக. நீங்க எப்படி போலீஸா ஆனீங்க?” என்றான் அவன்.
“புரியல சுகுமார்? எதுக்கு இந்தக் கேள்வி?” என்றான் நிஜமாகவே புரியாது.
“அவனுகளா எழுந்து இங்க வரல சார். அவனுக அம்மாங்க தூங்கிட்டு இருந்தவனுங்க மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்பின பிறகு, பல்லு கூட தேய்க்காம இங்க வந்து நிக்கானுவ. மார்கழி மாசம் என்பதால் எங்க ஊரு பிள்ளைக நாலு மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சி கோலம் போட்டுறுவாங்க. இவனுங்க எங்க அதை எல்லாம் பார்க்க. சும்மா வாய்ச் சவடால்ல காலத்த ஒட்டுரவனுங்க.”
“ஓ... அப்ப எப்படி ரெண்டு டீமும் ஆமாம் என்பது போல நிற்கிறாங்க?” கிராமச் சண்டைகள் ரொம்பவே வித்தியாசமாகத் தெரிந்தது ஈஸ்வருக்கு. அதே சமயம் ஆர்வமும் அதிகரித்தது.
“அதுதான் சார் அவனுங்க திறமை. அவனுங்க எல்லாருக்கும் அப்படி ஒன்னு நடக்க வாய்ப்பே இல்லன்னு தெரியும். இருந்தும் பாருங்க. அகராதி பிடிச்சவனுக சார். வாங்க நாம வந்த வேலைய பார்க்கலாம்” என்றான் சுகுமார்.
“இருந்தாலும் சுகுமார். எனக்கு இந்த டீம் பிடிச்சிருக்கு” என்று சிலாகித்துச் சொன்னான் ஈஸ்வர்.
காலை பத்து மணி பேருந்தில் மாமியாருடன் பிள்ளைகள் வந்தது இறங்க, அவர்களை அழைத்து வீட்டில் விட்டவன், “ரஞ்சி அத்தைக்கு வேலை இருக்குனு பிள்ளைகள என்னிடம் விட்டதும் கிளம்பிட்டாங்க. எவ்வளவு கூப்பிட்டும் வரல. அடுத்த வாரம் வரேன்னு சொல்லிட்டாங்க” என்று மாமியார் சொன்னதை மனைவியிடம் சொன்னான் சுகுமார்.
“எனக்கும் போன் செய்து சொன்னாங்க. பரவாயில்ல விடுங்க. அடுத்த முறை அம்மா இங்க வரதா சொல்லிட்டாங்க” என்றாள் ரஞ்சிதா.
பிள்ளைகளை வீட்டில் விட்டு, திரும்ப ஈஸ்வருக்கு உதவி செய்ய கேட்டிருந்த ஆளிடம் அழைத்துச் சென்றான்.
“சார் நான் சொன்ன ஆள் இவங்க தான். பெயர் சித்ரா. ராஜனோட சித்தப்பா பேத்தி. முறைக்கு அவனுக்கு அக்கா பொண்ணு.” என்று அறிமுகப்படுத்தினான் சுகுமார்.
“யாரு அண்ணே இவரு? எதுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைக்கீக?” என்று சித்ரா கேட்டாள்.
“சார். கண்ணாடிய கழட்டி மாஸ்க் எடுங்க. அப்ப தான் அடையாளம் தெரியும்” என்றதும் அவனையே பார்த்திருந்தவள், அவன் மாஸ்க் எடுத்ததும் அவனை ஊன்றிப் பாத்தவள், “மாமா” என்று கத்தினாள்.
கண்ணில் நீர் கொட்ட, “மாமா நீங்க உயிரோட... நம்ப முடியல மாமா. தாத்தா, அம்மம்மா பாத்தா எவ்வளவு சந்தோசப்படுவாங்க தெரியுமா? அதிலும் என் அ...”
“சித்ராமா அமைதியா இரு. சார் நீ நினைக்கிற மாதிரி உன்னோட மாமா கிடையாது. அவர் போ...”
போலீஸ் என்று சொல்லும் முன் சட்டென சுகுமாரின் கையைப் பிடித்த ஈஸ்வர், “இப்ப சொல்ல வேண்டாம். நான் யாருன்னு இங்க யாருக்கும் தெரிய வேண்டாம். இந்த ஊர்ல ஒருத்தனா பழகுறேன் முதல்ல. அப்புறம் வேணும்னா சொல்லிக்கலாம். இல்ல அவங்களுக்கே தெரிஞ்சாலும் ஓகே தான்” என்றான்.
“என்ன அண்ணே சொல்லுறீங்க. இவங்க எங்க மாமா இல்லையா? எப்படி? எங்க குடும்பத்து முகம் அப்படியே இருக்கிறப்ப, எப்படி அண்ணே இல்லை சொல்லுறீங்க?” என்றாள் குழப்பமாய்.
“நீ கொஞ்சம் நிதானமாகு சித்ரா. அப்புறம் யோசிச்சி பாரு. உனக்கே புரியும். இது உன் மாமா கிடையாது. ரஞ்சியோட அண்ணன். அதாவது பெரியப்பா பையன். சென்னைல இருந்து வந்திருக்கார். ரஞ்சிக்கு உன் மாமா பத்தி தெரியும். அவன் முகம் தெரியாது. ஒரு வேலை பார்த்திருந்தா முன்னவே சொல்லி இருக்க வாய்ப்பு உண்டு. நானே நேத்து பார்த்ததும் ராஜன்னு நினைச்சி கட்டிபிடிச்சி... பெரிய நோஸ்கட் வாங்கிட்டேன். அப்புறம் தான் இது நம்ம ராஜன் இல்லை என்ற நிதர்சனம் முகத்தில் அடிச்சது. அடுத்து விசாரிச்சப்ப இவர் ரஞ்சியோட அண்ணன்னு தெரிஞ்சது.” என்று விளக்கி சொன்னான்.
ஈஸ்வரை நிதானமாக பார்த்தவள், “நீங்க நிஜமாவே எங்க மாமா போல இருக்கீங்க சார். மாமா உங்களோட கொஞ்சம் வளர்த்தி கம்மி. ஒருவேளை இப்ப இருந்திருந்தா உங்க அளவு வளர்ந்திருக்கலாம். உங்க அம்மாவுக்கு நீங்க சொந்த மகனா?” என்று சந்தேகம் கேட்டாள்.
“ஆமாம் மா. நான் வயித்துல இருந்தப்ப எடுத்த ஸ்கேன் முதல் இன்னும் எங்க வீட்டுல இருக்கு. ரெண்டு பேரோட பிளட் குரூப் ஒண்ணு தான். நிறைய மேனரிசம் எனக்கும் என் அம்மாவுக்கும் ஒத்து போகும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.” என்றான் புன்னகையுடன்.
“அப்படிங்களா சார்” என்றவள் குரல் சிறிது பிசிறடித்தது.
“சார் சொல்ல வேண்டாம். மாமாவே சொல்லுமா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றான் அவளின் வருத்தம் தாளாது.
“தேங்க்யூ யூ மாமா” என்றாள் அவன் கைபிடித்து.
“மாமாவுக்கு நன்றி சொல்லுவாங்களா” என்றான் உரிமையாக.
“சித்ரா, சார் சில டீடைல்ஸ் கேட்கிறார். உனக்கு தெரிஞ்சதை சொல்லு. யாரையாவது பார்க்கனும் சொன்னா கூட்டிட்டு போ.” என்று சொன்னான் சுகுமார்.
“சரிங்க அண்ணே. நான் பார்த்துக்கறேன்” என்றாள் சித்ரா.
தோட்டத்திற்கு சென்று மதியம் வரை அவனை கண்ணில் காணவில்லை அவள். கத்தரி, வெண்டைக்கு தண்ணீர் மடைமாற்றி, இளநீர் பறிக்க வந்த ஆட்களிடம் மரங்களைக் காண்பித்து, அப்படியே மட்டையையும் கழித்து விடச் சொல்லி, மரத்திற்கு இவ்வளவு என்று கூலி பேசி, வேலை முடித்து அனுப்பவே மதியம் ஆகியது அவளுக்கு.
மதியம் அங்கு இருந்த குடிசையில் அமர்ந்து அவன் வரவிற்காக காத்திருந்தவள் காதில், ‘இந்த மாமனோட மனசு மல்லிகைபூ போலே பொன்னானது’ என்ற பாடல் தன்னவன் குரலில் விழ, பளிச்சென்று ஒரு புன்னகை அவளிடம். இருந்தும் தாமதமாக வந்தவனிடம் முகத்தை தூக்கி உர்ரென்று அமர்ந்திருந்தாள்.
தாமரை பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல.
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
என்று அவளை எழுப்பி தன்னுடன் சேர்ந்து ஆட வைத்தான் அவன்.
“மாமா என்ன பண்ணுறீக. விழுந்துட போறேன் நான். விடுங்க” என்று அதட்டியவளின் கோபத்தை கணக்கில் எடுக்காது, தொடர்ந்து அவளுடன் ஆடிக் களைத்து தொப்பென்று அங்கு இருந்த சின்ன கட்டிலில் படுத்து, அவளையும் இழுத்து மேலே போட்டுக் கொண்டான்.
இருவருக்கும் மூச்சிரைக்க, அவர்களின் நெருக்கம் உணர்ந்து விலகப் பார்த்தவளின் கழுத்தைப் பிடித்து தன்னருகே இழுத்து,
சொந்தக்காரன் நான்தானே..
தொட்டு பார்க்க கூடாதா!
இந்த நாட்டில் தீண்டாமைதான்
இன்னும் உள்ளதா?
கிள்ளவா அள்ளவா ஓஹோ
சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஓஹோ
பட்டிமன்றம் வைக்கலாம்
என்று பாடி அவளை தொட்டு சிவக்க வைக்க, சில நிமிடங்களில் அவனை வலுக்கட்டாயமாக விலக்கித் தள்ளி, “நேரம் ஆகுது பாருங்க. இந்த விளையாட்டு இங்க இருக்ககூடாதுனு சொல்லி இருக்கேன்ல. திடீரென்று யாராவது வந்தா என்ன செய்யுறது? வாங்க சாப்பிடலாம்” என்று மதிய உணவை எடுத்து வைத்தாள்.
கைகழுவி வந்து கட்டிலில் அமரவும், “பத்து வருசமாகியும் நமக்குன்னு குழந்தை இல்லையே மாமா. ஆஸ்பத்திரி போயி பார்ப்போமா? யாரும் கேக்கலனாலும், அவங்க பார்வை என் மேல வித்தியாசமா படியுறது புரியுது. நமக்குனு ஒரு குழந்தை இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்” என்று கனவில் மிதக்க,
“நல்லா இருக்கும் தான். ஒரு வேளை குழந்தை இருந்தா நம்ம அன்பை பங்கு போடனும் என்று கடவுள் இன்னும் தரலையோ என்னவோ. நமக்கு என்ன குறை? நிறைவா வாழுறோம். கடவுள் தரும்போது வரட்டும்டா. அதுவரை நாம் இருவர், நாம் மட்டுமே இருவர்னு இருப்போம்” என்று மனைவியின் நெற்றியில் முத்தமிட, நிறைவான புன்னகை அவள் இதழ்களில்.
“ப்பா என்ன குளிரு. ஏன் சுகுமார் இவ்வளவு காலையில் எப்படி எழுந்துக்கறீங்க? மார்கழி மாத குளிர் வாட்டி எடுக்குது.” என்றான் கைகைளைத் தேய்த்து முகத்தில் வைத்தபடி.
“அது பழகி போச்சி சார். இதெல்லாம் குளிரே இல்ல. முன்ன மார்கழியில் மழை வந்து பாத்துருக்கிங்களா? இப்ப ஐப்பசி கார்த்திகைல பெய்யாம மார்கழில பெய்யுது. இயற்கை கூட மனுசங்கள வஞ்சிக்குது சார்.”
“மனுஷன் இயற்கைய பந்தாடுனா, அது என்ன பண்ணும் சுகுமார்? தன்னோட வெறிய தீர்த்துக்க இப்படி தன்னோட கோபத்தை காட்டுது. எத்தனை இயற்கை அழிவு வந்தாலும், நாம அடங்குரோமா என்ன? உயிருக்கும், உணர்வுக்குமே மதிப்பில்லை சுகுமார். அப்புறம் தான இயற்கையை புரிய.”
“நீங்க சொல்லுவது சரிதான் சார். நாமளே இயற்கையை சீரழிச்சிட்டு, இயற்கை நம்மள வஞ்சிக்குது சொன்னா எல்லாம் சரியாகிடுமா? நாம மாறினா இயற்கையும் மாறும் நினைக்கிறேன்.” என்றான் சுகுமார்.
வருவார்கள்...