New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 10
- Thread Author
- #1
சுந்தரி - 6
“ம்ம்... மாமா பகல்ல என்ன விளையாட்டு? இப்பலாம் நீங்க என்னை கண்ட இடத்திலும் தொடுறீங்க. காதலிக்கிறப்ப நல்ல பிள்ளையா இருந்தீங்க. அவ்வளவு கண்ணியம் இருக்கும் உங்க பேச்சிலும், பார்வையிலும். இப்ப கொஞ்ச நாளா கண்ணியமா அப்படினா என்ன விலை கேப்பீங்க போல. வரவர ரொம்ப மோசமா நடக்குறீங்க. இப்ப நேரமாகுது கிளம்புங்க” என்றாள் கிசுகிசுப்பாய்.
“வார்த்தையிலேயே போதையை ஏத்தினா எப்படி போறது? இப்படியே இங்கேயே...” என்றவன் வாயை தன் கையால் மூட, “கேடிப் பொண்ணே! வாயால் மூடினா கசமுசா நடக்கும்னு தான கையாள மூடின. இரு வந்து கவனிச்சிக்கறேன்” என்று வெளியே செல்ல போனவன், அவளை தன்னிடம் திருப்பி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு ஓடினான்.
முகமெங்கும் புன்னகையுடன் குளித்துத் தயாராகி காலை உணவை உண்கையில், “இவர் கொஞ்சம் ஊட்டி விட்டால் தான் என்னவாம். சீக்கிரமே தோட்டத்துக்குப் போக வேண்டும்னு கால்ல வெந்நீரை ஊத்திட்டு நிக்கிறது. வந்து கவனிக்கிறேன் உங்களை” என்று திட்டினாலும் மறக்காது தோட்டத்திற்குச் செல்ல என்று இருவருக்குமான மதிய உணவை கூடையில் எடுத்து, கதவை பூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
“அண்ணே சூரிய தரிசனம் பார்க்கலையா?” என்று ரஞ்சிதா ஈஸ்வரிடம் கேட்டாள்.
“அதுக்கு தானம்மா காலையில் இருந்து காவல் காத்துட்டு இருக்கேன்.” என்று அவளைப் பாராது சொன்னான்.
“இப்பதான் அண்ணே வெளில வருது. கண்குளிர பாருங்க. முடிஞ்சா சன் கிளாஸ் போட்டுக்கோங்க” என்றாள் கேலியாக.
அவளின் கேலியைக் கண்டுகொள்ளாது, “வந்திருச்சா? இதோ வரேன்” என்று அவளின் பின்னால் நின்று எட்டி பார்த்தான்.
“சூரிய ஒளி மாற்றான் தோட்டத்துல இருக்குதே அண்ணே! உங்களுக்கு சரியா வருமா?” என்றாள் கவலையாக.
“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசம் அதிகமாமே ரஞ்சிமா. சோதிச்சிப் பார்த்திடுவோமா?” என்றான் கள்ளப் புன்னகையுடன்.
“பாவம் அண்ணே!”
“அதெல்லாம் பார்த்தா நமக்கு வாசமல்லி கிடைக்காது தங்கச்சி. கொஞ்சம் நசுக்கி முகர்ந்தால் வாசம் தெரியும். அதுக்கும் நான் தயாரா தான் இருக்கேன்.” என்று ஆர்வமாய் வெளியே பார்த்தான்.
“ஆன்டி ஹீரோ மாடுலேஷன்ல பேசுறீங்க அண்ணே. என் புருசருக்கு மட்டும் தெரிஞ்சது, நான் காலி. மொத்தமா காலி” என்று பாடியே விட்டாள்.
“ஹா ஹா ஹா அந்தளவு என்னை எக்ஸ்பெக்ட் பண்ணாத ரஞ்சிமா. நான் பாசக்கார தாய், தகப்பன் வளர்த்த புள்ள. சோ சாப்ட் யூ க்நொவ். சூரியனை சந்திரனா மாறி குளிர்விச்சிடுவேன்.” என்றான்.
“ஆமாமா. போலீஸ்னாலே சாப்ட்னு சொல்லி இருக்காங்க. சந்திரனா மாறுவீங்களா, சூரியன் உங்கள சுட்டெரிக்கிறப்ப இந்த டைலாக் சொல்லுங்க. அப்ப ஒத்துக்கறேன்.” என்றாள் அவள்.
“ஒஹ்ஹோ... சூரியன் சுட்டெரிக்குமா?”
“ம்ம்ம்.. ரொம்ம்ம்ப...” என்று இழுத்தாள்.
ரஞ்சிதாவின் இழுவையில் சத்தமாக சிரித்துவிட்டான் ஈஸ்வர்.
சிரிப்பு சத்தம் கேட்டு சட்டென இவர்கள் வீட்டை பார்த்து, புருவம் சுருக்கி யோசித்தாலும், அங்கு நின்றிருந்த ரஞ்சிதாவைக் கண்டு சிறு புன்னகை அளித்துக் கடந்து சென்றது சூரியன்.
“என்ன ரஞ்சிமா சூரியன் சுட்டெரிக்கும் சொன்ன. இங்க சிரிச்சிட்டு போகுது.” என்றான் யோசனையாக.
“அது கண்ணுல சந்திரன் சிக்கல. அதான் மார்கழி மாசத்து சூரியனா சாந்தமா போகுது. இப்ப என்ன சுட்டெரிக்கனுமா? முன்னாடி போய் நில்லுங்க” என்றாள் சாதாரணமாக.
“அம்மாடியோவ்!” என்ற அலறலில்,
“என்ன சார்? என்னாச்சி?” என்று வந்தான் சுகுமார்.
“அ... அது ஒன்னும் இல்ல சுகுமார். வாசமல்லி சுட்டு.. இல்ல இல்ல சூரியன் சுட்டுரிச்சி. ஆங்.. சூரியன் தான் சுட்டுரிச்சி” என்றான் வேகமாக.
சுகுமார், ‘என்னாச்சி இவருக்கு’ என்பதாய் ஒரு பார்வை பார்த்து மனைவியிடம், “பிள்ளைங்க எப்ப வராங்க? நாளைக்கு பள்ளிக்கூடம் ஆரம்பிக்குது. இன்னும் வரக் காணோம்?” எனக் கேட்டான்.
“பத்து மணிக்கெல்லாம் வந்திடுவாங்க. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆட்டுக்கறி இருக்கும். வாங்கிட்டு வரீங்களா? மதியம் ரெடி பண்ணி வச்சிடுறேன்.” என்றாள் ரஞ்சிதா.
“இப்ப போனா தான் சரியா இருக்கும். பணமும், பையும் எடுத்துட்டு வா” என்று மனைவியை அனுப்பி ஈஸ்வரிடம், “சார் நான் சொன்னவுங்க பதினோரு மணிபோல வர சொல்லி இருக்காங்க. பாத்ததும் ஷாக் ஆவாங்க. அதுக்கு ப்ரிபேர் ஆகிக்கோங்க” என்றான் அவன்.
“தேங்க்ஸ் சுகுமார். என்னனு தெரியல இந்த ஊருக்கும் எனக்கும் எதோ ஒரு லிங்க் இருக்கிற மாதிரி பீலாகுது. மனசுல எதோ ஒரு பாரம் அழுத்துது.”
“ஒரு வேளை நீங்க ரெட்டை பிள்ளையா? பிறந்தப்ப பிரிச்சிட்டாங்களா?” என்று தன் சந்தேகத்தை வெளியிட்டான்.
“ஹஹா சுகுமார். சினிமா நிறைய பார்க்காதீங்க. அப்படில்லாம் எதுவும் கிடையாது” என்றான் ஈஸ்வர்.
“சினிமாவும் எதோ ஒரு வகையில் நிஜத்தைத் தழுவிய ஒன்று தானே சார். அப்படி இருக்கவும் வாய்ப்பு இருக்குல்ல” என்றான் சுகுமார்.
“நீங்க அப்படி வர்றீங்களா? சரி உங்க நண்பன் வயசு என்ன? சரியான வயசைச் சொல்லனும் சுகுமார்” என்று கேட்டான்.
“என்னோட ரெண்டு மாசம் பெரியவன்.” என்று தன் பிறந்த வருடம் மாதம் சொல்லியவன், “இப்ப இருந்தா முப்பத்து நாலு இருக்கும் சார்.” என்றான்.
ஈஸ்வரும் தன் தேதி மாதம் சொல்லி, “இப்ப எனக்கு முப்பத்தி அஞ்சி வயசு. அதனால அந்த சந்தேகம் தேவை இல்லாதது.” என்று அவன் சந்தேகத்தை தீர்க்க,
“ஓ... அப்ப பெரியப்பா சித்தப்பா பசங்க... அப்படி ஏதாவது உறவு?”
“அதுக்கு வாய்ப்பே இல்லை. எங்க அப்பாவுக்கு அறுபத்து இரண்டு வயசு. நீங்க சொல்றவர் அப்பா வயசு செவன்டி பைவ் ஓகே. வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை. அவரோட அம்மா வழி சொந்தம்னு சொல்ல வாய்ப்பு இல்ல. ஏன்னா உங்க நண்பர் அவங்க அப்பா மாதிரியாம். சம்பந்தமே இல்லாததால தான் ஒரு கியூரியாசிட்டில வந்தேன். இல்லன்னா என் அப்பா அம்மாட்டவே கேட்டுருப்பேனே” என்றான் அவன்.
“அப்ப உலகத்துல ஏழு பேர் ஒரே போல இருப்பாங்களாமே. அப்படியா சார்?” என்று கேட்டான்.
“ம்ம்ம் இருக்கலாம். என்ன ஒருத்தர ஒருத்தர் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்காது. எனக்கு கிடைச்சும் நோ யூஸ். அதனால அவங்க அப்பாவ பார்த்துக்கறேன். இப்ப உங்களோட வரவா?”
“இப்படியா வரப் போறீங்க? அது ரிஸ்க் சார். தேவை இல்லாத பிரச்சனை வரும்.” என்றான் சுகுமார்.
“நோ நோ நான் மாஸ்க் போட்டுட்டு வருவேன். அப்படியே இந்த ஊரை சுத்தி பார்த்த மாதிரியும் இருக்கும். ஊர் ரொம்ப அழகா இருக்கும்னு ஹரி சொல்லி வீடியோசும் காட்டினான். அதை நான் பார்த்து என்ஜாய் பண்ணனும்” என்று கைகள் இரண்டையும் தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
“ரஞ்சி உன் அண்ணனையும் கூட்டிட்டு போறேன்” என்ற நிமிடம்,
வேகமாக அவர்களிடம் வந்தவள், “ஆளுங்க நடமாடுற இடத்தில் எப்படிங்க அண்ணனைக் கூட்டிட்டுப் போவீங்க? யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடாதா?” என்று பதறினாள்.
“அவர் மாஸ்க் போட்டுக்குவார். மீறி எதாவது நடந்தா பாத்துக்கலாம் விடு.” என்று ஈஸ்வரையும் அழைத்துச் சென்றான்.
“குமார் அண்ணே. யாருண்ணே அது?” என்று வழியில் கேட்டவர்களிடம்,
“என் சம்சாரத்தோட அண்ணன்” என்றான் சுகுமார்.
இன்னொரு கும்பலோ, “அது சரி. பாக்க வாட்டசாட்டமா தெரியுறார். முகத்தை மட்டும் ஏன் மறைச்சிருக்கார்? கொரானா முடிஞ்சி வருசமாகுதே. இன்னுமே அதில் இருந்து மீண்டு வரலையா என்ன?” என்று கேலி செய்து சிரித்தனர்.
“சளி புடிச்சிருக்காம். தூசி மூக்குல ஏறிட கூடாதுனு பயந்து போயிதேன் முகத்தை மூடியிருக்கார். இன்னொன்னு நீங்க அவர் அழகுல மயங்கிட கூடாதுல்ல. மயங்கி அவரை தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் காலில் நின்னா, உங்களைப் பெத்தவுகளுக்கு யார் பதில் சொல்லுறது? உங்க நல்லதுக்காக தான் பிள்ளைகளா இப்படி இருக்கார்.” அவர்களின் கேலிக்கு இணையாகப பதில் கேலி பேசினான் சுகுமார்.
“க்கும்.. பெரிய மன்மத தேசத்து அரசன் இவரு. அப்படியே மயங்கிட்டாலும்...”
“சொன்னாலும் சொல்லாட்டியும் அதுதாம்லே இவரு. நீங்க பாக்கக் கூடாதுன்னு தேன் முகத்தை மூடிக் கூட்டியாறேன்” என்று சுகுமார் சொன்னதும்,
“க்கும்... இந்த அழகு சுந்தரன நீங்களே வச்சிக்கோங்க” என்று முகத்தை கழுத்தில் இடித்து சென்றனர் அந்த வம்பு பிடித்த தோழிகள்.
“ப்பா என்னமா வாய் பேசுறாங்க. எப்படி சுகுமார் பதிலுக்கு பதில் பேசி வாயடைசீங்க? என்னால அவங்க கேள்வியை புரிஞ்சிக்கவே டைம் எடுத்துச்சி. பதில் சொல்லச் சொல்லியிருந்தா ரொம்பவே திணறி இருப்பேன்” என்றான் நெஞ்சில் கைவைத்து.
“வயசு பிள்ளைகளுக்கே உள்ள குறும்பு சார். மனசுல ஒன்னும் இருக்காது. இதோ இப்ப போல எல்லாத்தையும் நேர்லயே கொட்டியிரும்க. கொஞ்சம் வயசானதுங்க தான் வில்லங்கம் பிடிச்சதுங்க. நம்ம வீட்டு விசயத்த நம்ம வாயில் இருந்தே விஷமமா வாங்கி, ஊரு முழுக்க தண்டோரா போட்டுருவாங்க. அவங்களிடம் ரொம்பவே உஷாரா இருக்கனும்” என்றான்.
“இண்ட்ரெஸ்டிங். இங்க இருந்தா பொழுது சூப்பரா போகும் போல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமா இருக்காங்க. யாரு என்னான்னு தெரியாம, வயசு வித்தியாசம் இல்லாத விகல்பம் இல்லாத கேள்வி. ஐ லைக் இட் சுகுமார்” என்றான் ஈஸ்வர்.
“பொழுது போறதுக்கு வாய்ப்பு கம்மி சார். இன்னைக்கு ஞாயிறு என்பதால ஆள் நடமாட்டம் இருக்கு. இல்ல எட்டு மணிக்கு மேல எல்லாரும் காட்டு வேலைக்கு போயிடுவாங்க. இருட்டும் வேளை தான் வருவாங்க. வந்து சோறாக்கி சாப்பிட்டு தூங்க தான் நேரம் இருக்கும். இவ்வளவு சொல்லுறீகளே, உங்க போலிஸ் வேலையில் இல்லாத ஆச்சர்யமா இங்கன இருக்கு. அதில் தான் தினம் தினம் அட்வெஞ்சர் பண்ணலாம். கிரைம், த்ரில்லர் கதை மாதிரி இன்டரஸ்டிங்கா போகும் நாட்கள். அதில் பெரிய சுவாரசியம் இருக்குமே? இதென்ன சார்?”
“அது ஆச்சர்யமா? நீங்க வேற சுகுமார் எல்லாம் கிரிமினல்ஸ். தினமும் அவங்க முகமா பார்த்து பார்த்து போரடிச்சிடுச்சி. இங்க நல்லா இருக்கு. அதோட இங்க கிரைம்க்கு வாய்ப்பு ரொம்ப கம்மியா இருக்கும் நினைக்கிறேன்.” என்று தன் மனதில் உள்ளதைச் சொன்னான்.
“ம்ஹூம் அதுக்கும் ஒரு கோஷ்டி ஊருக்கு ஊரு இருக்கும் சார். ரெண்டு தெருக்காரனுங்க சேர்ந்து நாங்க தான் பெருசு. எங்க தெரு தான் பெருசு... நாங்க தான் டான் சொல்லி ஒருத்தன ஒருத்தன் முறைச்சிட்டு கம்பு சுத்துவானுங்க.”
“ஏன் அப்படி?” என்றான் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்.
“கொழுப்பு தான் வேற என்ன. அவனுங்க என்ன ஊரை முன்னேத்த பாடுபடுரானுங்களா என்ன. வெத்து வேட்டுங்க சேர்ந்தா இப்படித்தான் ஆடும். இதுல ஒரு தெருக்காரன் பொண்ண, இன்னொரு தெருக்காரன் பார்த்திடக் கூடாது. அது தான் சாக்குனு சண்டைய ஆரம்பிச்சி ஊரையே ரெண்டு பண்ணிருவானுங்க.”
“ஹாஹா சுவாரசியமா இருக்கே. எங்க அந்த கோஷ்டி? நான் பார்க்கணுமே அவங்களை” என்றான் அவன்.
“கறிக்கடை போறோம்ல சார். அந்தக் கோஷ்டி அங்கன நின்னு அலம்பல குடுத்துட்டு இருக்கும். சும்மா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறதுக்கு, கறிக்கடையில் கறி காலி ஆகுறதுக்குள்ள போய் வாங்கிட்டு வான்னு, பெத்தவங்க மூஞ்சில தண்ணிய ஊத்தி எழுப்பி அனுப்புவாங்க. வரலன்னா வீட்டுல சோறு கிடைக்காதே. அதனால வருவானுங்க.” என்றான் சுகுமார்.
“அதுவும் ஒரு ஜாலி தான்ல.” என்று அவர்களை ஆர்வமாகப் பார்த்திருந்தான் ஈஸ்வர்.
வருவார்கள்...