• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 47

Member
Joined
Dec 1, 2024
Messages
51
சுந்தரி - 47


குளித்துத் தயாராகி வந்தவளின் முகம் பார்க்காது, “சாரி. அம்மா, வளர்ப்பு அப்படி இப்படின்னு பக்கம் பக்கமா வசனம் பேசிட்டு, உணர்ச்சி வேகத்தில் உன்னிடம் தப்பா நடந்துட்டேன். வெளிய கார்ல பத்து நிமிடம் உனக்காக காத்திருப்பேன். உனக்கு விருப்பம் இருந்தா வா. இல்லன்னா என்னோட விதி இதுதான்னு தனியாவே இருந்துக்கறேன்” என்று காரில் சென்று அமர்ந்து கண்மூடினான்.

காரை எடுக்கும் நேரம் கார் கதவை விரலின் பின்பக்கம் கொண்டு தட்ட, சட்டென திரும்பியவன் அவளை நம்பமுடியாது பார்த்தான்.

“என்ன வரவா? இல்ல இருந்துக்கவா?” என்று கேட்டாள்.

“இதோ” என்று கார் கதவை எட்டி திறந்துவிட்டவன் இதழில் சிறு புன்னகை.

“என்ன சிரிப்பு? கூப்பிட்டதும் வந்துட்டதால என்ன வேணும்னா செய்யணும் நினைச்சா கொன்னுடுவேன்” என்று மிரட்டினாள்.

“நீ வந்ததே போதும் சுந்தரி. உன்னோட அனுமதி இல்லாம உன்னை தொடமாட்டேன்” என்றான் மனதார.

‘அச்சோ, ஐயோ பாவம். இவ்வளவு நல்லவனா இருந்ததால தான் இப்ப வரை பேச்சுலரா இருக்கான். அடேய் என் சுந்தரா! சுந்தர புருசா! பொண்டாட்டி மனசு மாறினது தெரியாம, சோகத்தைப் பிழியுறியே. என் அனுமதி இல்லாம என்னை தொடமாட்டியா? பார்க்கலாம் உன் விரதம் எந்த எல்லை வரைன்னு.’ மனதுக்குள் கொஞ்சி அவனிடம் கோப முகத்தைக் காட்டினாள்.

“இதுதான் நம்ம வீடு” என்று தென்காசி நகரத்தில் உள்ள வீட்டில் காரை நிறுத்தினான் சுந்தரேஸ்வரன்.

ஒரு கிரவுண்ட் இடத்தில் சற்று பெரியதாக கட்டப்பட்டு இருந்தது வீடு. மீதி இருந்த இடங்களில் இப்பொழுது தான் மரக்கன்றுகளும், பூ செடிகளும் நடப்பட்டு இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் அம்சமாக இருந்தது வீடு.

வீட்டின் அமைப்பை ரசித்தபடி வந்தவள், “வீடு நல்லா இருக்கு” என்றாள்.

“உனக்கு பிடிச்சிருக்கா? நல்லவேளை உனக்குப் பிடிக்குற மாதிரி இருக்கனும் நினைச்சேன். அதிகம் இந்த வீட்டில் இருக்கப்போறது நீதான். உனக்குப் பிடிச்ச விதத்தில் இருந்தது மகிழ்ச்சி” என்றான் சந்தோசமாகவே.

இருவரும் வாசல் வர அவர்களை தடுத்து நிறுத்தினார் தேவகி. என்ன இது என்பது போல் பார்த்தவள், சில நிமிடங்களில் ஏன் என்று புரிய அமைதியாக நின்றுவிட்டாள்.

தேவகி ஆரத்தி எடுத்து உள்ளே வரவழைக்க, “பால் காய்ச்சிரதுக்கு முன்ன ஆரத்தி எடுக்கலாமா?” எனத் தன் சந்தேகத்தை கணவனிடம் கேட்டாள்.

“நீ இங்க வர்ற நேரம் தான் நல்ல நேரம். மத்ததெல்லாம் சும்மா பார்மாலிடீஸ். வந்து உன் கையால பால் காய்ச்சிடு போதும்” என்க,

‘தன்னை எதற்கு இத்தனை உயரத்தில் வைக்கிறான். என்ன செய்தேன் இவனுக்கு’ என்றெண்ணி சின்னதாக பெருமூச்செறிந்து ‘சரி’ என்பதாய் தலையசைத்தாள்.

புது மணமக்களை வரவேற்ற பின் செல்வ சுந்தரி தன் கையால் பால் காய்ச்சி எல்லோருக்கும் கொடுத்தாள். காலை உணவை பெரிய உணவகத்தில் இருந்து வரவழைத்து, உண்டு அமர காலை பத்துமணி ஆகிவிட்டது.

மகனின் இருபுறமும் ரவீந்திரனும் தேவகியும் அமர, “உன்னை நினைச்சி எத்தனையோ நாள் பெருமைபட்டிருக்கேன். நேத்து நீ செய்தது அந்தக் கடவுளே உன் உருவத்தில் வந்து எங்களுக்கான களங்கத்தை துடைச்ச மாதிரி இருந்தது. பையனா போயிட்ட. இல்லன்னா கால்ல விழுந்து வணங்கி இருப்பேன்” என்றார் ரவீந்திரன்.

“அப்பா நான் உங்க பையன். உங்க ரெண்டு பேரோட களங்கத்தை துடைக்கிறது என்னோட கடமை. கடவுள் அளவு உயர்த்தி பேசி என்னை மூன்றாவது மனுசனா பிரிச்சிடாதீங்க. இதை செய்ய வச்சது உங்க அன்பும், உங்க மேல நான் வச்ச அன்பும். அந்த அன்பு போதும் எனக்கு. நம்ம குடும்பத்துக்காக எதுவும் செய்வேன்” எனவும், மகனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் தேவகி.

அதே சமயம் தம்பியவன் வீடியோ காலில் அழைக்க எடுத்து ஸ்பீக்கரில் போட்டு, “என்ன மிஸ்டர். தம்பிப்பயலே ஹாஸ்பிடல்ல இருக்கிற நேரம் கால் பண்ணிருக்க?” என்றான் கிண்டலாக.

“அண்ணா நேத்து மதியம் தான் அப்பா, அம்மா என்னை உட்கார வச்சி அவங்க வாழ்க்கையில் நடந்ததை சொன்னாங்க. நீ அவங்களுக்கு நியாயம் கிடைக்க செய்ததையும் சொன்னாங்க. நீ எங்களுக்கு கடவுள் குடுத்த கிப்ட் அண்ணா. லவ் யூ” என்றான்.

“டேய் அம்மா தான்டா என்னை குடுத்தாங்க. நீ கடவுள் குடுத்ததா சொல்லுற.” என்று கிண்டலாக சொன்னவன், பின், “ஜோக்ஸ் அபார்ட் சர்வேஸ். இது நம்ம குடும்பம் தாண்டி உன் ரியாவுக்கு கூட தெரியக்கூடாது. யார் பார்வையிலும் நம்ம அப்பா, அம்மா சில நொடினாலும் தப்பா பார்க்கப்படுவதை நான் விரும்பலை. உனக்குப் புரியும் நினைக்கிறேன்” என்றான் கண்டிப்புடன்.

“என் கடைசி காலம் வரை யாருக்கும் தெரியாது அண்ணா. நீ மயிலியோட வாழ்க்கையை என்ஜாய் பண்ணு. சீக்கிரமே குட்டி ஈஸ்வரையோ, குட்டி செல்வியையோ பார்க்கணும்.” என்றான் நிறைந்த மனதுடன்.

“ஆங் பார்க்கலாம் பார்க்கலாம். இப்ப போன வச்சிட்டு வேலையை பாரு” என்று அழைப்பை துண்டித்து மனைவியைக் காண, அவளோ அதுவரை அவன் கண்களை மட்டுமே பார்த்திருந்தவள், தன்புறம் திரும்புகிறான் என்றதும் வேறு பக்கம் வேடிக்கை பார்ப்பதுபோல் திரும்பினாள்.

‘இவ இவ்வளவு நேரம் என்னை பார்த்துட்டு இருந்தா மாதிரி இருந்தது. இப்ப பார்த்தா இல்லையோ. சே நான்தான் அவள் நினைவில் இருந்து குழம்புறேன் போல’ என்றெண்ணி தாயிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.

“என்னடா மகனே! உன் பொண்டாட்டி உன்னை தேட ஆரம்பிச்சிட்டா போல” என்றார் தேவகி.

“கடுப்பை கிளப்பாம போம்மா. அவ என்னை எட்ட தள்ளியே வச்சிருக்கா. இப்பவும் அவள் மாமன் போட்டோ வச்சி பேசிட்டிருக்கா” என்றான் சோகமாக.

“பார்த்தா அப்படி தெரியலையேடா. உனக்காக அவள் மாறின மாதிரி இருக்கு. இல்லன்னா தோட்டம் துரவு விட்டு இங்க ஏன் உன்னோட வரப்போறா.”

“அது தான் எனக்கும் புரியலை” என்றவனுக்கு, ‘நேத்து நைட் நடந்ததுக்கு இந்நேரம் இவள் ரிவன்ஜ்ல எடுத்திருக்கனும். இங்க எப்படி என்னோட வந்தா’ என்ற குழப்பம் அவனிடமும்.

“நீ உன் பொண்டாட்டியை டீப்பா வாட்ச் பண்ணு. அவளோட மாற்றம் தெரியும். நீங்க வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று கணவனை அறைக்குள் அழைத்துச் சென்றார் தேவகி.

“அவளை டீப்பா வாட்ச் பண்ணினா நான் கிளீன் போல்டாகிடுவேன். அப்புறம் தப்புதான் நடக்கும். இன்னொரு முறை அந்த நிலையில் அவளை பார்த்தால் கண்டிப்பா பாஞ்சிடுவேன். கொஞ்சம் விலகியே இருடா ஈஸ்வரா” என்றான் தனக்குத்தானே.

“எஸ்பி சார் மனசுக்குள்ள பேசுறதா நினைச்சி நிஜத்துல பேசுறீங்க” என்று பொய் சொல்லி அவனை சுந்தரி கலாட்டா செய்ய,

“என்னது? இங்க பாரு சுந்தரி... இன்னொரு முறை உன்னை அப்படி அரைகுறையா பார்த்தா பாஞ்சிடுவேன்னு சும்மாதான் நினைச்சேன். நீ அதை பெருசா எடுக்காத. உன் அனுமதி இல்லாம உன்னை தொடமாட்டேன் சொன்னது நிஜம்” என்றான் வேகமாக.

‘அடப்பாவி!’ என முகம் சிவந்தவள், “ம்ம்ம்” என்று அமைதியாகிவிட்டாள்.

மதிய நேரம் வந்த இரு தங்கைகளையும் கண்ட தேவகிக்கு முதலில் அடையாளம் தெரியாது போக, பின்பே அடையாளம் கண்டவர், “சுகுணா, அமுதா நீங்களா? நீங்க என்னை பார்க்க வந்திருக்கீங்களா?” என்று தன் தங்கைகளை அணைத்துக் கொண்டார்.

“உனக்காக தான் அக்கா வந்தோம். எத்தனையோ வருசமா உன்னை தேடிட்டு இருக்கோம். நீ இருக்கிற இடமே தெரியலை. உன் பையன் தான் எங்க போன் நம்பர் கண்டுபிடிச்சி பேசி இங்க வரச்சொன்னான். அதுவும் இன்னைக்கே வரணும்னு ஆர்டர் வேற.” என்றார்கள் சந்தோசமாக.

“அவன் அப்படித்தான். ஒன்ன நினைச்சிட்டான்னா அதை முடிச்சிட்டு தான் உக்காருவான். உங்க வீட்ல உள்ளவங்க வரலையா? அப்புறம் அப்பா, அம்மா எப்படி இருக்காங்க? இன்னும் இந்த மகள் வேண்டாம்னு இருக்காங்களா? முதல்ல வந்து உக்காருங்க” என்று கேள்விமேல் கேள்வி கேட்டு, அவர்களை இருக்கையில் அமர வைத்து குடிக்க பழச்சாறு கொடுத்தார்.

“அவங்க இருந்தா தானக்கா. ரெண்டு பேரும் ஒரு வருஷம் முன்ன பின்னன்னு பத்து வருஷம் முன்ன போயி சேர்ந்துட்டாங்க.” என்றதும் பெற்றவர்கள் ஆகிற்றே. கண்கள் கலங்கியது.

“உன்னை வீட்டை விட்டு அனுப்பினதுக்கு நாங்க சண்டை போட்டோம். உனக்காக வீட்டை விட்டு போக நாங்க பையனா பிறக்கலை அக்கா. அங்க தான் இருந்தாகனும். கல்யாணம் முடிச்ச பின்ன அம்மா வீட்டுக்கு போறதே இல்ல. ஒரு பொண்ண நோகடிச்சி அனுப்பினதுக்கு அனுபவிக்க வேண்டாமா.” சகோதரியை நிற்கதியாக விட்டதற்கான பழிவாங்கல் என்றும் சொல்லலாம்.

“அவங்க உங்களுக்காக தான் பார்த்தாங்க. அவங்கள ஏன்மா?” என்றார் வருத்தமாய்.

“உன்னை காரணம் காட்டி எங்களை யாரும் கட்டிக்கலன்னா, அப்படியே இருந்துட்டு போறோமே அக்கா. நீ யாரையாவது காதலிச்சி போனா கூட மனசு ஆறும். ஆனா, அவங்க உன் நிலை தெரிஞ்சும் எங்களை காரணம் காட்டி விரட்டினாங்க பாரு. அதை எத்தனை காலம் ஆனாலும் மன்னிக்க முடியாதுக்கா. அப்ப எதோ ஒரு நிலையில் எங்களுக்கு அப்படி ஆகி இருந்தா எங்களையும் விரட்டி விட்டுட்டு கவுரவம் காப்பாங்களா?” என்று கோபத்தில் இறந்த பெற்றோரை திட்டினார் சுகுணா.

“யேய் சுகுணா. தவறியும் அப்படி பேசாத. அந்த அசிங்கம் எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. அது மறந்த கதை. இப்ப இது நிஜம். உங்களை பார்த்ததில் ரொம்பவே சந்தோசமா இருக்கு. உங்க வீட்ல வரலையா? எத்தனை பிள்ளைங்க? எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“சுகுணா அக்கா வீட்டுக்காரர் மதுரையில் தாலுகா ஆபீஸ்ல வேலை பார்க்கிறார். ரெண்டு பொண்ணு. ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி ரெண்டு ரெண்டு குழந்தைங்க இருக்கு. என்னோட வீட்டுல சொந்தமா மரக்கடை வச்சிருக்கார். ஒரே பையன். கல்யாணமாகி அவனுக்கு ஒரு அஞ்சி வயசில் பையன் இருக்கான். இவ்வளவு தான் நாங்க” என்றார் அமுதா.

தன் கணவன், மருமகளுக்கு அறிமுகப்படுத்தி மகனிடம் வந்தவர், “உன் அன்பால என்னை தெளியவிடாம அடிக்கிரடா. நன்றி சொன்னா சங்கடப்படுவ. நீ நல்லா இருக்கனும் ஈஸ்வரா” என்று வாழ்த்தினார் தேவகி.

இதோ இன்று ஹரிஹரன் சித்ரா திருமணம் கோலாகலமாய் நடந்து முடிந்திருந்திருந்தது. திருமண சம்பிரதாயங்கள் முடித்து, மாலை கோயில் சென்று ரஞ்சிதாவின் வீடு வந்து அமர்ந்தவர்களை சுற்றினார்கள் இளையவர்கள்.

“ஹரி, சித்து இது உங்களுக்கான ஹனிமூன் டிக்கட். மாலத்தீவுல ஒரு மாசம் உங்களுக்கு ஸ்டே. இன்னும் ஒன் வீக் கழிச்சி கிளம்பனும். அதுக்குள்ளே வேலையை எல்லாம் முடிச்சி ஓரம் கட்டிட்டு தயாராகு” என்று கையில் டிக்கட்டை கொடுத்தான் ஈஸ்வர்.

“நாங்க போறது இருக்கட்டும். எங்களோட சீனியர் நீங்க எப்ப போறீங்க? உங்களுக்கும் சேர்த்தே போடுங்க போகலாம்.” என்று ஹரிஹரன் சொன்னான்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top