• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 45

Member
Joined
Dec 1, 2024
Messages
49
சுந்தரி - 45

அவர்கள் சென்றதும் ஊர் மக்களின் பக்கம் திரும்பி, “இந்த ஆள் செய்த சதியால், அந்த அப்பாவி மனுசனும், அதை நம்பி உயிருக்கு உயிரா காதலிச்சி ஆசையா கட்டிக்க இருந்த பொண்ண, யாருக்கோ தாரை வார்க்க ரெடியாகிட்டார். விளைவு அவங்கள தப்பா பேசி அவங்க வாழ்க்கையில் இருந்து விலகிட்டார்.”

முத்து கணேஷ் அப்பாவிடம் திரும்பியவன், “உங்க நல்ல நேரம். அதே சமயம் இந்த நாட்டு ஆமை எங்கயோ போயி விழுந்து எழுந்து, கொஞ்ச நாள் நடக்க முடியாம இருந்தார். இல்லன்னா உங்க தங்கையை நாசமாக்கி இருப்பான் இவன்” என்றதும் அவர் மேல் கொலைவெறியில் பாய இருந்தவர்களை தடுத்து நிறுத்தி பேசினான்.

“நீங்களும் இவர் தம்பி மேல உள்ள கோபத்தில், அவசர அவசரமா மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சி வெளியூர் அனுப்பிட்டீங்க. அவங்களும் காதலன் மேல உள்ள கோவத்தில், இந்த ஊர் பக்கமே எட்டிப் பார்க்கலை. அது இவருக்கான தோல்வி.”

“அப்ப என் தம்பிக்கு நோய் இல்லன்னா, எப்படி சார் இறந்தான்?”

“அதுவும் இவரின் வேலை தான். புரியலை இல்ல இருங்க சொல்லுறேன். உங்க தம்பி தன் உடம்பை பராமரிக்காததால் வேலை செய்த இடத்தில் மயங்கி விழுந்துட்டார். உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க. அங்க செக் பண்ணும் முன்ன கேன்சர் பத்தி சொல்ல, அதுக்கும் சேர்த்து செக்கப் பண்ணதில், அப்படி ஒரு நோயே இல்லை சொல்லிருக்காங்க.”

“மனுஷன் மனநிலை அந்த சமயத்தில் எப்படி இருந்திருக்கும் யோசிச்சிப் பாருங்க. நோய் என்று நினைத்து உயிரா காதலிச்ச பொண்ணை தியாகம் பண்ணிருக்கார். அப்ப தான் அதைப் பற்றிய தேடலை ஆரம்பிச்சிருக்கார். நேரே ஊருக்கு வந்து ரிப்போர்ட் தந்த அந்த டாக்டரை கேட்டுருக்கார். முதலில் மறுத்தவர் போலீஸ் போவேன் சொன்னதில், முழு உண்மையையும் சொல்லிட்டார். விளைவு நாட்டாமைய பார்க்க போன இடத்தில் கைகலப்பாகி, அதில் அவரை உங்க பஞ்சாயத்து போட்டுத் தள்ளிட்டார்.”

“ஐயோ கடவுளே” என்று உறவுகள் அழ,

“இங்க அவர் கிடைச்சா சிக்கல்னு, கார்ல போட்டு அவர் வேலை செய்த இடத்துக்கு கொண்டு போயி போட்டுட்டு வந்துட்டார். அங்க உள்ளவங்க மாடியில் இருந்து தவறி விழுந்துட்டதா நினைச்சிட்டாங்க. அவர் உறவுகளோ நோய் முத்தி இறந்துட்டதா நினைச்சிட்டாங்க. ஆக மொத்தம் ஒருத்தனின் பெண்ணாசைக்கு ஒரு உயிர் பலி ஆகிடுச்சி. எங்க... ரெண்டு தெருக்காரனும் ராசியா இருந்தா, ஒருநாள் இல்ல ஒருநாள் உண்மை தெரிஞ்சிடுமோனு, அப்படியே அடிச்சிக்கட்டும்னு விட்டுட்டார்.” என்றான்.

“அவனை கொல்லுங்க சார். இப்படி ஒருத்தன் உயிரோட இருக்கக் கூடாது. அது இந்த ஊருக்கே அசிங்கம்” என்று தொடர்ந்த கண்டனக் குரல்களை அடக்கி,

“அதுக்குள்ளே என்ன அவசரம்? அடுத்த கதை இருக்கு கேளுங்க” என்றவன், “இவரோட கடைசி தம்பி தான் என்னோட அப்பா ரவீந்திரன். உருவ ஒற்றுமை வச்சி ஓரளவு இந்த நாட்டாமையோட சொந்தம் நான் என்று கணிச்சிருப்பீங்க. உண்மை தானுங்க.”

“எங்க அப்பாவோட முதல் மனைவி வளர்மதி. அவங்க மேலயும் இவருக்கு ஒரு கண். தம்பி பொண்டாட்டியை, தங்கையா, பொண்ணா பார்க்க இவரோட சபல புத்தி விடலை. எங்க அப்பாவை தப்பா காண்பிச்சா அவங்கள அடைய முடியும்னு, குழந்தை பிறக்காமல் இருக்க மருந்து குடுத்திருக்கார். அந்த லேடிக்கு இவரோட எண்ணம் தெரியலை. எங்க அப்பாவை தப்பா பேச ஆரம்பிச்சிடுச்சி. இதனால் அவங்களுக்குள்ள எப்பொழுதும் சண்டை. சண்டை முத்தி எங்க அப்பாவ வேண்டாம்னு முடிவா அந்த லேடி சொல்லிட்டாங்க. இவர் வாழ்க்கை வெறுத்து வீட்டை விட்டு வெளியில் வந்துட்டார். வந்த இடத்தில் என்னோட அம்மா பார்த்து பிடிச்சி கல்யாணம் செய்து, ஒரு வருசத்துல நான் பிறந்துட்டேன். எனக்கு ஒரு தம்பி இருக்கான். இப்ப டாக்டரா சென்னையில் வேலை பார்க்கிறான்.” என்று தன் தகப்பன் மேல் உள்ள கறையை அழகாக அனைவரும் மறுக்க முடியாத அளவு துடைத்துவிட்டான்.

“இல்ல இவன் பொய் சொல்லுறான். இந்திரன் பொண்டாட்டி தப்பானவள். என் தம்பி சரியா உடல் சுகம் தரலன்னு சொல்லி அழுதா. அவங்க கல்யாணம் முடிஞ்ச சில மாதத்தில் இருந்தே எங்களுக்கு நடுவில் தவறான உறவு இருக்கு. அது என் தம்பிக்கும் தெரியும். அதனால தான் ஊரை விட்டு ஓடிப் போனான். அவளை நல்லவள் சொன்னா நாடே தாங்காது” என்று அவர் வாயாலே வாக்குமூலம் கொடுத்தார்.

“இவர் பொய் சொல்லுறார்” என்று அங்கு வந்த வளர்மதியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்க நல்லா தான் வாழ்ந்துட்டு இருந்தோம். இவர் ஊருக்குப் பெரிய மனுஷன். பஞ்சாயத்து பண்ணினா அதில் நியாயம் இருக்கும்னு எல்லாரும் சொல்லுவாங்க. அதனால இவர் மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தேன். முதல்ல தம்பி பொண்டாட்டி என்ற மரியாதையோட நல்லா தான் பேசினார். அப்பப்ப என் புருஷன பத்தி தப்பு தப்பா சொல்ல ஆரம்பிச்சார். என் புருஷன் எப்பவும் தோட்டமே கதின்னு இருக்கிறதால, வீட்டை விட்டு வெளிய போயி நல்லது கெட்டது தெரியாம வளர்ந்த நான் அதை நம்பி, என் புருசனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சேன்.”

“பெரியவர் நம்ம நல்லதுக்கு சொல்லுறார்னு, உண்மை எதுவும் புரியாம இவர் இழுத்த இழுப்புக்கு போயி, அவரை தப்பா பேசி ரொம்ப நோகடிச்சிட்டேன். ஊரும் அவரை தப்பா பேசிச்சி. அப்பவாவது அவரை புரிஞ்சி அவரோட வாழ்ந்து இருக்கனும். இல்லன்னா ஊர் வாயை மூடியிருக்கணும். நான் எதையும் செய்யாம விட்டுட்டேன். என்னோட கொடுமையை தாங்கி கூடவே இருந்த மனுசனை, ஒருநாள்... என்னை விட்டு போனா நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லி... நோகடிச்சி வெளிய அனுப்பிட்டேன்.” என்று கண்ணீர் விட்டு அழுது பின் கண்ணீர் துடைத்து,

“அவர் போனதுக்கு பின்ன தான் இவரோட கெட்ட எண்ணம் தெரிஞ்சது. தள்ளி நின்னு பேசிட்டு இருந்தவர் ஒட்டி உரச ஆரம்பிச்சார். அப்பவும் இவரை தப்பா நினைக்கலை. தெரியாம நடந்திருக்கும் நினைச்சேன். முதல்முறை என்னிடம் தப்பா நடந்துக்க முயற்சி செய்தப்ப தான் இவர் எவ்வளவு மோசம்னு தெரிஞ்சது. இனிமேல் இங்க இருந்தா என் கற்புக்கு ஆபத்துன்னு தப்பிச்சி இந்த ஊரை விட்டே ஓடிட்டேன். இவரை நம்பாதீங்க. ரொம்ப மோசமானவர். சொந்த தம்பி பொண்டாட்டி கிட்டயே இப்படி நடந்துக்கறார்னா, மற்ற பெண்களை யோசிச்சிப் பாருங்க. ” என்று வாக்குமூலம் கொடுத்தாள் வளர்மதி.

விவரம் தெரிந்தவர்கள், ‘வளர்மதி வந்து வாக்குமூலம் தந்தது எப்படி?’ என்பதாய் பார்த்திருந்தனர். ஏனனில் ரவீந்திரனுக்கு உள்ள கெட்ட பெயரை சரி செய்திருந்தான் சர்வேஸ்வரன். ரவீந்திரன் பெத்த மகன் நான் என்பதையும் ஊருக்கு விளக்கி இருந்தான். அவரின் முன்னால் மனைவி அசிங்கம் பிடித்தவள் என்பதை சொன்னால், அதுவும் ஒருவகையில் தன் தகப்பனுக்கு அசிங்கம் என்பதால் அதையும் மாற்றி, தன் தாயை அந்த இடத்தில் எங்கும் வராத அளவு பார்த்துப் பார்த்து காயை நகர்த்தி, மொத்த குற்றமும் இரத்தினசாமி மேல் விழ வைத்திருப்பது, அனைவருக்கும் ஆச்சரியம் என்றாலும் திருப்தியும் தான்.

“ராஜன் மாமா உன் அண்ணன் கலக்குறான். சத்தம் இல்லாமல் அடிக்க இவனால் மட்டும் தான் முடியும். முதல் முறை இப்படி ஒரு வித்தியாசமான பஞ்சாயத்த நம்ம ஊர் பார்க்குது. ம்ம்ம்... புத்திசாலி தான்” என்றாள் மெச்சுதலாய்.

“நீங்க போகலாம்” என்று வளர்மதியிடம் சொன்னவன் மனதில் மர்மப் புன்னகை. வளர்மதியை எங்கு இருக்கிறாள் என்று தேடிப் பிடித்து, தன் தகுதிக்கு அவளை அடிப்பது அசிங்கம் என்று, பெண் காவலரை விட்டு அடித்து இடுப்பை ஒடித்து, பஞ்சாயத்தில் சொல்ல வேண்டியதை சொல்லிக் கொடுத்து இழுத்து வந்தது வேறு கதை.

“இது மட்டும் இல்லை. இந்த ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் நிறைய பொண்ணுங்க வாழ்க்கையை இந்த இரத்தினசாமி கெடுத்திருக்கார். இத்தனை வயசாகியும் தான் ஆம்பளதான்னு காண்பிக்க, போன மாதம் வாய் பேசாத ஒரு பதினைந்து வயசு குழந்தையை நாசம் பண்ண முயற்சித்திருக்கார். அந்தப் பொண்ணு பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து அடித்ததில் வந்த காயம் தான் இது” என்று அவரின் சட்டையை தூக்கி காண்பிக்க, வயிற்றில் கட்டு போடப்பட்டு இருந்தது.

“இந்தளவு மோசமானவனா நீ. பண்ணுறது எல்லாம் நீ பண்ணிட்ட. நாங்க ஒரு அப்பாவி மனுசன் மேல பழி பேசிட்டோமே. அந்த மனுசன் எவ்வளவு துடிச்சிருப்பார். அழகான பொண்ணுங்கன்னா ஆசைப்படுவியா? எங்க உன் மகளும், பேத்தியும் அழகா தான் இருக்காங்க. அவங்க மேலயும் ஆசை பட்டுருப்பியா?” என்று கனகாவையும், சுந்தரியையும் காண்பித்த அப்பெண், “தூ அசிங்கம் பிடிச்ச காமகோட்டிப் பயலே. நீயெல்லாம் உயிரோட இருக்கிறதுக்கு செத்து தொலையலாம்” என்று முகத்தில் துப்பிச் சென்றாள் ஊர் பெண் ஒருவர்.

“கோட்டி பிடிச்சவன ஏர்வாடி இல்ல ஏரல்ல விடலாம். பைத்தியமாவது தெளியும். காம கோட்டி பிடிச்ச உன்னை எங்க போயி சேர்க்கிறது? ஆம்பளைன்னு நிரூபிக்கனுமா உனக்கு. வா அதை அறுத்து காக்காக்கு போடுறேன். அது சொல்லும் நீ ஆம்பளையா இல்லையா என்று.” ஐம்பது வயது பெண்மணி ஒருவர் செருப்பால் அடிக்காத குறையாக திட்டிச் சென்றார்.

“பொண்ணு அழகா இருந்தா ஆசை வருமா? அந்த நரம்பை கட் பண்ணி எடுத்துட்டா, எந்த ஆசையும் வராது இல்ல. போலீஸ் இருக்கிறதால விட்டுட்டுப் போறேன். இல்ல கண்டந்துண்டமா வெட்டி கக்கூஸ் தொட்டியில் போட்டுடுவேன்” என்று சென்றார் இரத்தினசாமியின் நண்பனாய் சற்று முன்வரை இருந்தவர்.

“என் தம்பி என்ன தப்பு செய்தான்னு இப்படி செய்த? உன்னோட உறவு தான நாங்க. எங்க குடும்பத்தையே அழிச்சிட்டியேடா. அவன் காதலிச்சது தவிர என்ன தப்பு செய்தான்? பொண்ணு பார்க்க போறதா பேசினப்ப அந்தப் பிள்ளையோட எப்படில்லாம் வாழணும்னு ஆசைப்பட்டான் தெரியுமா? நினைச்ச பொண்ணோட வாழவிடாம, இந்த உலகத்துலயே இல்லாம பண்ணிட்டியேடா. அவன் உயிருக்கு என்ன பதில் சொல்லப் போற? சொல்லுடா? இப்ப சொல்லலை...” என்று இரு வீட்டினரும் ரத்தினசாமியை நெருக்க, இவரால் பாதிக்கப்பட்ட, வெளியே சொல்லாது உள்ளுக்குள் வைத்து மருகிக் கொண்டு இருந்தவர்களும் அவரை அடிக்க ஆரம்பித்தனர். அவர்களின் ஆத்திரம் தீர சிறிது நேரம் அடிக்க விட்டு வேடிக்கை பார்த்தான் சுந்தரேஸ்வரன்.

பின்னர், பாதி உயிரோடு அவர்களிடம் இருந்து விடுவித்து, “இவனை தூக்கிட்டு போய் மருத்துவ உதவி முடிச்சி, எப்ஐஆர் போட்டு உள்ள தள்ளுங்க” என்று லோக்கல் சப் இன்ஸ்பெக்டரிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.

“இந்த ஊர்க்காரங்களுக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லுறேன். எப்பவும் ஒன்று நடந்தா கண்மூடித்தனமா எதையும் செய்யாம, ஏன் எதனாலனு கேள்வி கேளுங்க. அதுக்குப் பிறகு தீர விசாரிச்சி தீர்வு காணுங்க. தெரு பிரச்னையை தூக்கி போட்டுட்டு எல்லாரும், நட்பாவும் உறவாவும் மாறுங்க” என்றவன் இளைஞர்களை நோக்கி, “இன்னைக்கு தான்டா உங்களுக்கு நிஜ பொங்கல். என்ஜாய்” என்றான்.

அவர்களோ ஓடி வந்து தங்கள் ஊர் கதாநாயகன் சுந்தரேஸ்வரனை தூக்கிச் சுற்றி, அரச ஊர்வலம் போல் ஊரை உலா வந்தனர்.

ஈஸ்வர் என்ன சொல்லியும் யாரும் அடங்கவில்லை என்றதும் அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டான்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top