• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 44

Member
Joined
Dec 1, 2024
Messages
48
சுந்தரி - 44


“ஆமா செல்விமா. முதல் நாள் நைட் பார்த்திருக்கா. மனசுக்குள்ள நெருடல் இருந்தாலும் கண்டுக்காம விட்டுட்டா. அடுத்த நாள் வரவும் உஷாராகி மதன் கிட்ட இதான்னு காரணம் சொல்லாம, நைட்ல ஒரு பூனை வருது அது அழகா இருக்கு. அதை போட்டோ எடுக்கணும் கேமரா கேட்டு வாங்கி, எப்படி எடுக்கணும் கேட்டு தினமும் எடுத்திருக்கா.”

“மாமா நான் தப்பா எதுவும்...” என்றவள் தலை குனிந்தது. அவளிடம் தவறு இல்லை என்றாலும் தினமும் ஒருவன் தனியாக இருக்கும் பெண்ணின் வீட்டிற்கு வந்தால், ஊரும் உறவும் என்ன பேசும் என்று தெரியாதா? ஏன் தான் அந்த இடத்தில் இருந்தாலும் சந்தேகம் வருவது இயல்புதானே.

“நீ தப்புன்னு யார் சொன்னா?” என்றதும் தலை நிமிர்ந்து பார்க்க, “என் அக்கா பொண்ணு எப்படின்னு எனக்கு தெரியும். அன்னைக்கு பேசினது சூழ்நிலை சரியில்லாததால. உன்னை நான் பேசலாம். ஊர் பேசினா தாங்க முடியுமா உன்னால்? அதான் நான் முந்திக்கிட்டேன். தப்பு செய்தது மாதிரி தலையை குனியக்கூடாது செல்விமா.” என்றார்.

கண்கள் கலங்க அவள் நன்றி சொல்ல, அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, “உன் அத்தைக்கு அசிங்கப்படுத்திட்டதா நினைப்பு. முதல் நாளே சொல்லி இருந்தா பெருசா வெடி வெடிக்காதாம். அதனால சரியான நேரத்துக்கு காத்திருக்க, உன் வீட்டில் இருந்து குதிச்சி வெளிய போனதை பார்த்திருக்கா. அதான் சரியான நேரம் பார்த்து அவனை போட்டோவோட வரவச்சிட்டா. எவ்வளவு கெட்ட எண்ணம். அதான் நாலு மிதி நச்சின்னு போட்டேன்” என்று கூறினார்.

“ஆனாலும் அடிச்சது தப்பு தான் மாமா.”

“தப்பு தான்மா. அதனால உனக்கு ஒரு நல்லது நடந்திருக்கே. அதுக்காக தான் நாளோட விட்டேன். இல்ல நிரந்தரமா ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி இருந்திருக்கும். இப்ப நான் சந்தோசமா இருக்கேன் செல்விமா. எங்க உன் வாழ்க்கை பாலைநிலமா போயிருமோ நினைச்சேன். அதை சோலையாக்க என் தம்பி உன்னைத் தேடி வந்திருக்கார்” என்றார் மகிழ்ச்சியுடன்.

“கடுப்பேத்தாதீங்க மாமா. எனக்கு இந்தக் கல்யாணம்...”

“உன் ராஜன் மாமன் செய்து வச்சது. அதை அபசகுனமா பேசாத செல்விமா. அப்புறம் மாமாவுக்கு கெட்ட கோபம் வரும்.” என்றவர் தன் கடைசி நிமிடங்களில் சுந்தர்ராஜன் பேசியதை சொல்லி முடிக்க, விழிகள் கலங்க ஆரம்பித்தது அவளுக்கு.

“நான் கூட்டிட்டு வருவேன் சொன்னதை செய்து காட்டிட்டான் என் தம்பி. இப்ப அவன் ஆத்மா சாந்தி அடைஞ்சிருக்கும். நிம்மதியா இருடா தம்பி” என்று அவன் புகைப்படத்தைப் பார்த்து சொன்னார்.

பல்லி அந்நேரம் சத்தமிட, “என் தம்பி ஆமாம் சொல்லுறான் செல்விமா. அவனோட கடைசி ஆசை இது. பழசு எதையும் யோசிக்காம, ஈஸ்வரோட சேர்ந்து வாழப்பாரு. மாமா போயிட்டு வரேன்” என்று அவர் எழுந்ததும் தான்,

அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பது புரிய, “சாப்பிடுங்க மாமா.” என்றாள்.

“சாப்பிட்டாச்சி செல்விமா. தண்ணீர் குடிச்சது வயிறு நிறைஞ்சி இருக்கு. அதோட உன்னை இப்படி மங்களகரமா பார்த்ததில் மனசு நிறைஞ்சி இருக்கு” என்று மனதார சொல்லிச் சென்றார்.

தன் மாமனின் ஆசையும் ஈஸ்வருடன் வாழ்வது தான் என்று புரிகிறது. இருந்தும் மனம் முழுதாக ஏற்க மறுக்கிறது.

அந்த ஞாயிறு அன்று, “செல்விக்கா உங்க போலீஸ் புருஷன் பஞ்சாயத்து அலுவலகத்துல பஞ்சாயத்தை கூட்டிருக்கார்” என்று வந்தான் ஒரு இளைஞன்.

“என்னவாம்டா?”

“பஞ்சாயத்து தலைவர் தேர்ந்தெடுக்க எலெக்சன் வைக்கணுமாம். அடுத்து எதோ தெரு பிரச்சனைன்னு பேசிக்கிறாங்க. அங்க இருந்தா தான் தெரியும்.”

“சரி நீ போ,” அவனை அனுப்பி உள்ளே வந்தவள், “ஏன் அந்த கிழவனுக்கு என்னாச்சி? அவர்தான பஞ்சாயத்து தலைவர். என்ன மாமா உன் அண்ணன் எதாவது செக் வச்சிட்டானா? அவன் அன்னைக்கு இருந்த நிலைக்கு அடுத்த நாளே தூக்கிடுவான் நினைச்சேன். போலீஸ்காரன் இவ்வளவு நாள் பொறுமையா இருந்திருக்கான். பெருசா எதோ செய்யப்போறான் நினைக்கிறேன். என்ன செய்யப் போறான்?” என்றவளுக்கும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழ, போகலாமா, வேண்டாமா என ஒற்றையா, ரெட்டையா போட்டு இதோ கிளம்பிவிட்டாள்.

அங்கு அவள் செல்லுகையில் ஊரே கூடி இருந்தது. நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் அமர்ந்து சிலரும், நின்று பலரும் என இருந்தனர். அந்த சமயம் அவளின் தாத்தா வர, அவரின் வரவு அவரின் விருப்பத்திற்கு மாறானது என்று அவர் பின்னால் வந்த இளைஞர்களை பார்த்து தெரிந்தது.

‘பஞ்சாயத்தை கூட்டினவன் எங்க?’ என்ற தேடலில் அவள் இறங்க,

“இதோ ஈஸ்வர் சார் வரார். சாருக்கு வழி விட்டு நகர்ந்து நில்லுங்க” என்ற இளைஞர்களின் கோரஸ் குரலில்,

“ப்பா எல்லாரையும் மயக்கி வச்சிருக்கான். விட்டா கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திருவானுவ போல” என் சலித்து திரும்ப, இதுவரை பார்த்திராத தோற்றத்தில் எதிரில் வந்தவனைப் பார்த்து அசையாது நின்றுவிட்டாள்.

முதல் முறையாக அவனை காவலர் உடையில் பார்க்கிறாள். அந்த உடையை அணிவதற்காகவே பிறந்தவன் போலிருந்தான் சுந்தரேஸ்வரன். அத்தனை கம்பீரம். அத்தனை வசீகரம். நேர்கொண்ட பார்வை என எதிரில் நின்று பேசவே யோசிக்கும் அளவுக்கு இருந்தாலும், முகத்தில் ஒருவித ஸ்னேக பாவத்துடன் அசத்தினான் அனைவரையும்.

நடந்து வருபவனின் முகத்தில் பார்வையை பதிக்காது அந்த கண்களை மட்டுமே பார்த்திருக்க, மனையாளை அங்கு கண்டுகொண்டவனோ யாருமறியாது கண்ணடிக்க சட்டென தலையை திருப்பினாள்.

அதில் புன்னகை எழ இடம் கருதி அதை அடக்கி, அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவன், “முதல்ல உங்க தெரு பிரச்னையை முடிச்சிடலாம். மேலத்தெரு, கீழத்தெரு மக்கள் எல்லாரும் இருக்கீங்களா? பேசிடலாமா?” எனக் கேட்டான்.

“பேசி முடிச்சிடுங்க சார். எத்தனை வருஷம் காரணமே தெரியாம சண்டை போடுறது. தெரிஞ்சி பிரிஞ்சா மனசாவது இது தான்னு ஏத்துக்கும். எதுவுமே சொல்லாம பெருசுங்க டார்ச்சர் பன்னுதுக சார்” என்று இரு பக்கமும் உள்ள சிறியவர்கள் சத்தம் கொடுத்தனர்.

“இரண்டு குடும்பங்களோட பிரச்னையை உங்களுக்குள்ள தீர்த்துக்காம, அதை தெரு பிரச்சனையா மாத்தி வச்சிருக்கீங்க. இதுக்குக் காரணமான இரண்டு குடும்பங்களும் முன்னால வாங்க” என்றவன் அவர்கள் வந்ததும், “உங்களுக்கு இது சரின்னு படுதா? எதோ ஒருத்தர் செய்த செயலுக்கு இந்த பிரிவினை தேவையா? இத்தனை வருசத்துல இந்த இரண்டு தெருவுக்கும் நடுவில் நிறைய சம்பந்தம் நடந்திருக்கும். நிறைய நட்புகள் தொடர்ந்திருக்கும். நிறைய அண்ணன் தம்பி, அக்கா தங்கை உறவுகள் கிடைத்திருக்கும். நிறைய காதல்கள் இணைந்திருக்கும். இது எதையும் நடக்க விடாம எதுக்கு இந்த ஈகோ.” என்று பொதுவாகக் கேட்டான்.

“சார் அவங்க தம்பி பண்ணின வேலை அப்படி.” என்றார் ஒருவர்.

“அப்படி அந்த மனுஷன் என்னங்க பண்ணிட்டார்? தான் காதலிச்ச பொண்ணு நல்லா இருக்கனும். தனக்கு வந்திருக்கும் நோய் அவளை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தன்னை கெட்டவனாக்கி, அவங்களை வாழ வச்சிட்டு அவர் போய் சேர்ந்துட்டார். வேற என்ன வேலை பண்ணினார்னு சொல்லுங்க?” என்றான் சத்தமாக.

“சார் என்ன சொல்லுறீங்க?” என்றனர் விவரம் தெரியாத மக்கள்.

“நிஜம் பேசுறேன். தான் காதலிச்ச பொண்ணோட சந்தோசமா வாழணும்னு எத்தனை கனவோட இருந்திருப்பார் அவர். ஒருநாள் வாழ்ந்தாலும் அவளோட தான் வாழ்வேன்னு, தனக்கு வந்த நோயை வெளிய சொல்லாம, உங்க வீட்டுப் பொண்ணை கல்யாணம் செய்திருந்தா அவர் நல்லவர் ஆகிருப்பார் இல்ல. அவங்க வாழ்க்கையை கெடுக்காம தன் ஆசையை அடக்கிட்டு, நல்லது செய்துட்டுப் போன மனுசன கொண்டாடுங்கய்யா. அதை விட்டுட்டு தெரு பிரச்சனை, ஊர் பிரச்சனைன்னு அலையுறீங்க” என்று அதட்டினான் அனைவரையும்.

“இதை ஏன் எங்களிடம் சொல்லலை?” என்று கணேஷ் மூர்த்தி குடும்பத்திடம் கேட்டார் முத்து கணேஷ் அப்பா.

“முதல்ல அவன் செய்ததுக்கு கோபம் இருந்தது உண்மை தான். நாங்களும் அவனை விலக்கித்தான் வச்சிருந்தோம். ரொம்ப நாள் கழிச்சி தான் நடந்த உண்மையை சொன்னான். எண்ணி ஒரு வருஷம் கூட ஆகலை அதுக்குள்ள...” என்றவர் முடிக்க முடியாமல் தம்பியின் நினைவில் அழுதுவிட்டார்.

அங்கு இருந்தவர்களுக்குமே கண் கலங்கியது.

“இது தெரு பிரச்சனையா மாறும்போதே எதாவது செய்து தடுத்திருக்கலாமே. ஏன் செய்யலை?” எனக் கேட்டான் ஈஸ்வர்.

“தம்பி இறந்ததுமே இதை இரத்தினசாமி மாமாவிடம் சொல்லி பிரச்னையை தடுக்க சொல்லிட்டேன். அவர் நான் பாத்துக்கறேன் சொன்னதோட கண்டுக்கலை. ரெண்டு மூன்று முறை சொல்லியும் கேட்காததால காரணம் கேட்டேன். மறந்துட்டேன் அப்படி இப்படினு மழுப்பினார். அதுக்கும் மேல விட்டுட்டேன்” என்றார் அவர்.

“நீங்க சொல்லுங்க நாட்டாம?” கேள்வியை அவரிடம் திருப்ப,

“மறந்துட்டேன். வேற என்ன சொல்ல.” என்று அலட்சியமாக பதிலளித்தார்.

“நான் சொல்லட்டா உண்மையை” என்றவன் எழுந்து நின்று, “இவருக்கு முத்துகணேஷ் அத்தை மேல ஒரு கண்ணு” என்றான்.

அங்கே சில நிமிட அதிர்வுக்குப் பின் சலசலப்புகளும், கூச்சல்களும் எழ, அவர்களை அமைதிப்படுத்தி, “நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் இதுதான் நிஜம். அவங்க அழகு இவரை சலனப்படுத்திச்சி. அந்த சமயம் அவங்க காதல் தெரியவும், பொண்ணை விட முடியாம உங்க தம்பிட்ட பேசி, அவங்க காதல் எந்த தூரம் போயிருக்கு கேட்டிருக்கார். அதாவது உடல் ரீதியான காதலான்னு தெரிஞ்சிக்க. ஏன்னா இந்த நாட்டு ஆமைக்கு கன்னிப்பொண்ணு தான் வேணுமாம்.”

“கடவுளே!” என்று அனைவரும் வாயில் கை வைத்தனர்.

“உங்க தம்பிக்கு அவரோட எண்ணம் தெரியாம, பெரிய மனுஷன் என்ற எண்ணத்துல தன்னோடது உண்மைக் காதல்னு சொல்ல, அடுத்து இவங்கள எப்படி பிரிக்கலாம்னு அவர் யோசிக்க ஆரம்பிச்சிட்டார். அதன் விளைவு சின்னதா அடிபட்டு ஹாஸ்பிடல் போற மாதிரி செய்து, அங்க இருந்த டாக்டர் மூலம் இவருக்கு கேன்சர் இருக்கிறதாகவும், சீக்கிரமே இறந்துவிடுவார் என்றும் சொல்ல வச்சிட்டார். சந்தேகம்னா அவரையே கூப்பிடுறேன்” என்று வலது பக்கம் பார்த்து, “ஹரி அவரை இழுத்துட்டு வா” என்றான்.

அந்த மருத்துவர் வந்து, “சார் சொன்னது அத்தனையும் உண்மைங்க. நான் தான் இவர் குடுத்த பணத்துக்கு ஆசைப்பட்டு அப்படி சொல்லிட்டேன்.” இரத்தினசாமிக்கு எதிராக சாட்சி சொன்னார்.

“ஒண்ணு கிளியர் ஆகிடுச்சி. எஸ்.ஐ இவர லாக்கப்ல போட்டு. அப்படியே எஃப்ஐஆர் ஃபைல் பண்ணுங்க. இதே மாதிரி எத்தனை பேரிடம் பணம் வாங்கி பொய்யா சர்டிபிகேட் குடுத்திருக்கார். அதில் பாதிக்கப்பட்டது யார் யார் என்று இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்தில் என் கைக்கு வரணும். கான்ஸ்டபிளோட இவரை அனுப்பி வச்சிட்டு நீங்க நில்லுங்க. அடுத்த ஆடு ரெடியா இருக்கு” என்றான்.

“எஸ் சார்” என்று சல்யூட் அடித்து அந்த மருத்துவரை இரண்டு காவலர்களுடன் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top