Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
சுந்தரி - 41
சப் இன்ஸ்பெக்டர் அழைப்பை ஏற்று ஹலோ சொல்ல, “எஸ்ஐ நான் எஸ்பி சுந்தரேஸ்வரன் பேசுறேன். இங்க ஒரு டெத்” என்று நடந்ததை விவரித்து, “நேர்ல அந்த சம்பவத்தைப் பார்த்தது அவரோட மனைவி. அவங்களை சாட்சியா போட்டு கேஸை மூவ் பண்ணுங்க. சீக்கிரம் முடிச்சி பாடியை அனுப்புங்க எஸ்ஐ. பாவம் புருஷனை கண் முன்ன இழந்ததுல அழுதழுது மயக்கம் போட்டுட்டாங்க” என்றான்.
“இன்னைக்கு நைட் போஸ்ட்மார்ட்டம் முடிச்சி அவங்க கையில் கிடைக்கிற மாதிரி செய்யுறேன் சார்” என்று போனை வைத்தார் அவர்.
“அவ்வளவுதான் கேஸ் ஓவர். ஹரி மற்றதை நீ பார்த்துக்கோ. எப்படியும் அந்தாளுக்கு சந்தேகம் வந்து போலீஸ்ட எதையாவது உளறுவான். அதுக்கு இடம் குடுக்காத. இவங்களிடம் நடந்ததை மட்டும் கேட்க சொல்லு போதும். இன்னும் இரண்டு நாள்ல இந்த கேஸ் முடிஞ்சிடணும்” என்றான்.
“நான் பார்த்துக்கறேன் சார். நடந்தது இங்க உள்ளவங்க தாண்டி எங்கேயும் போகாது. கேஸா பதியாம ஆக்சிடென்ட்னு முடிச்சிடுறேன்” என்றான் ஹரிஹரன்.
மறுநாள் காலை அவரின் உடல் சிதையூட்டப்பட, பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும், ரவீந்திரன் கனகாவை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டார். செல்வ சுந்தரியையும் அழைக்க, அவர் மகன் விடுவானா என்ன?
“உங்க பொண்ணை கூட்டிட்டுப் போக உங்களுக்கு உரிமை இருக்கு. என் பொண்டாட்டியை கூட்டிட்டு போற உரிமை உங்களுக்கு இல்லை. மீறி அவள் உங்களோட வந்தா...”
“வந்தா என்னடா பண்ணுவ?”
“விஆர்எஸ் வாங்கிட்டு நானும் அங்க வந்திடுவேன்” என்று அலட்சியமாக தோள்குலுக்கினான்.
“அப்ப வேலை?”
“அதான் சொன்னேனேப்பா. விஆர்எஸ் வாங்கி அந்த பணத்த ஷேர் மார்கெட்ல போட்டு லாபம் பார்ப்பேன்” என்றான் சாதாரணமாய்.
“சர்தான். நான் உன் பொண்டாட்டிய கூப்பிடவே இல்ல. நீயாச்சி அவளாச்சி” என்று பதினாறு காரியம் முடிய கனகாவை உடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
அவர்கள் செல்லும் வரை சுந்தரியுடன் இருந்ததால் எதையும் யோசித்து இருக்காதவள், அவர்கள் சென்றதும் ஒருவித தனிமையை உணர்ந்தாள். ஈஸ்வரனும் அதுவரை மனைவிக்கு சங்கடம் தராது ரஞ்சிதா வீட்டில் இருந்தான்.
இனி...?
“டேய் ஹரி! ஊருக்கு போகாம இங்கயே சுத்துறியே என்ன?” என்று மனைவியின் தோட்டத்தில் உள்ள பம்ப் செட்டில் குளித்தபடி ஈஸ்வர் கேட்டான்.
மனைவியின் தனிமையை தீர்க்க, தங்களுடன் சித்ரா, ஹரிஹரனையும் உடன் அழைத்து வந்திருக்கிறான். குளுகுளு என்றிருந்த இடத்தைப் பார்த்ததும் மனதில் ஒருவித பரவசம். அங்கிருந்த பம்ப் செட்டை பார்த்ததும் குளிக்க ஆசை. ஆடை எடுத்து வராததை மறந்து, மேலாடையை கழட்டி இதோ குதித்து விட்டனர் ஆண்கள். பெண்கள் இருவரும் பத்தடி தள்ளி இருந்த திண்டில் அமர்ந்து, அங்கு இருந்த மரங்களைப் பார்த்திருந்தனர்.
“எனக்கு செய்யுறத செய்தா நான் ஏன் இங்க இருக்கப் போறேன். உங்க டாடி எனக்கு அவர் நண்பனோட பொண்ணை பேசிட்டு, அடுத்து எதுவும் சொல்லாம போயிட்டார். எங்க டாடிட்ட கேட்டா, இருடா சுக்கிரன் உச்சிக்கு வரட்டும். வியாழன் வடக்கே போகட்டும்னு சொல்லுறார். நான் என்ன செய்யட்டும் சார்?” என்றான் வருத்தமாக.
“அப்படியே சந்நியாசம் போடா. சரியா இருக்கும். என்னோட அட்வைஸ் கேட்டுட்டு சீரும் சிறப்புமா இரு” என்று சிரிக்காது சொன்னான் சுந்தரேஸ்வரன்.
“சார் இதெல்லாம் அநியாயம். நான் ஒரு பொண்ண கட்டி கூட பிடிச்சது இல்ல தெரியுமா? என் சித்துவையே எட்டி நின்னு ஏக்கமா பார்க்கிறதோட சரி. லவ் மேக்கிங் பண்ண வருசக்கணக்கா எனக்கு வரப்போறவளுக்காக காத்திட்டு இருக்கேன். என்னை கடைசிவரை பிரம்மச்சாரியா ஆக்கிடுவீங்க போல. நீங்களாவது அப்படி இப்படினு சிலது பார்த்துட்டீங்க. நான் என்ன அப்படியா” என்றான் சோகமாக.
“ஐயய்ய என்னடி உன்ன கட்டிக்கப் போறவர் இப்படி அலையுறார்?” என்று முகம் சுளித்தாள் சுந்தரி.
“வருசக்கணக்கா எனக்காக காத்திருக்கிறதா சொன்னாவளே. உனக்கு அது தெரியலையா அக்கா.” என்று பதில் சொன்னாள் சித்ரா.
“ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. அது உனக்காக இல்லை.”
“அவர் கட்டிக்கபோற பொண்ணுக்காக காத்திருந்தார். அவர் கட்டிக்கப்போற பொண்ணு நான் என்கிறப்ப, எனக்காக தான காத்திருக்கார். அதில் தப்பு ஒன்னும் இல்லையே. அதை சொல்லுறதில் அவரோட நேர்மை தெரியுது. நிறைய ஆண்கள் சின்ன வயசுலயே, எதோ ஒரு வகையில் அந்த சுகத்தை அனுபவிச்சிடுறாங்க. நேரடியா இல்லன்னாலும், வேற வழியில் அந்த ஆசையை தீர்த்துக்குற ஆண்களும் இருக்காங்க. அதுக்கான வாய்ப்பு இவருக்கு அதிகம் இருக்கு. அதையும் மீறி காத்திருக்கார்னா, அவர் ஏக்கத்தில் என்ன தப்பு. கல்யாணம் முடிந்த அன்னைக்கு நைட் அவர் கேட்பதை திகட்டத் திகட்ட குடுக்க நான் ரெடி” என்றாள் சித்ரா.
“யேய் அசிங்கமா பேசாதடி.”
“இதில் அசிங்கம் எங்க இருக்கு. என்னோட புருசனுக்கு என்னை குடுக்குறேன் சொல்லுறேன். குடுக்காம ஏமாத்தினால் அதுதான் தப்பு. அவர் போல, மாமாவும் உனக்கான ஏக்கத்தில் இருக்கிறார். அவர் இருக்கிற போஸ்டிங்குக்கே ஏகப்பட்ட பொண்ணுங்க வருவாங்க. இதில் அவர் ஹேண்ட்சம் வேற. இருந்தும் கனவில் வந்த பெண்ணுக்காக யாராவது வாழ்க்கையை தொலைப்பாங்களா. மாமா பாரு கனவில் காதல் செய்து உன்னை தேடி வந்திருக்கார். யாருக்கு இந்த மனசு வரும். உன்னோட எல்லாம் தெரிஞ்சும் உனக்காக காத்திருக்கிற மனுசன நீ கொண்டாடலாம் அக்கா. தப்பில்லை” என்றாள் அவள்.
செல்வ சுந்தரிக்கு தங்கை சொல்லுவதில் உள்ள உண்மை புரிந்தாலும் அதை ஏற்க மனமில்லாது முறைக்க,
“என்ன முறைப்பு? அங்க பார்... நீ பார்க்காத நேரத்தில் பார்வையிலேயே உன்னோட பலமுறை குடும்பம் நடத்துறார். அத்தனை ஏக்கம் அந்தக் கண்களில். வக்கீலாவது வாயை திறந்து சொல்லுறார். மாமா கேட்டு உன்னை கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு பார்க்கிறார். இது போதாதா ஒரு பொண்ணுக்கு. இறந்த ஒருத்தருக்காக உனக்காக இருக்கிற ஒருத்தரை சாகடிக்காதக்கா. முதல் காதல் தோல்வி நல்லது அனுபவம் உள்ளதுன்னு சைன்ஸ் சொல்லுது” என்றதும் சுந்தரி அவளை மேலும் முறைக்க, “சரி நம்ம கமல் சார் சொன்னார். அது சரி என்ற மாதிரி நம்ம ஊர்லயே சிலரைப் பார்த்திருக்கேன்.”
“அது அவங்க அவங்க மனநிலை பொறுத்தது சித்ரா. அதை நாம குறை சொல்ல முடியாது. அதுக்காக நானும்...”
“ப்ச்... எல்லாருமே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது இல்ல அக்கா. காதலிக்கிறவர்கள் எல்லோருடைய வாழ்க்கையும் கல்யாணத்துல முடிகிறதும் கிடையாது. இந்த நிகழ்காலம் தான் நிஜம். இந்த நிஜத்தை பிடித்து முன்னேறி வா. என்னடா சின்னவ அட்வைஸ் பண்றாளேனு நினைக்காத. இங்க எல்லாருமே உன்னை மனசுல வச்சி, உனக்காக மட்டும் தான் யோசிக்கிறாங்க. உன் வாழ்க்கை நல்லா இருந்தா எல்லாமே நல்லா இருக்கும். ஈஸ்வர் மாமா ரொம்ப நல்லவர். அவர விட்டுடாதக்கா” என்றாள் அவளுக்குப் புரியும் விதமாக.
“அவர் ராஜன் மாமா போல இருக்கார்டி. என்னால அந்த முகத்தை தாண்டி எதையுமே யோசிக்க முடியல. இத்தனை வருஷமா அவர நினைச்சு இருந்துட்ட என்னால, அதை தாண்டி போக முடியலடி. பயமா இருக்கு” என்றாள் செல்வ சுந்தரி.
“அவர் வேற இவர் வேறன்னு பாருக்கா. உன் கண்ணோட்டம் மாறினா எல்லாம் மாறும். அதைவிட மாமாவ லவ் பண்ணுக்கா. அந்தக் காதல் எல்லாத்தையும் மாத்தும்.”
“சினிமாவுக்கும் கதைக்கும் ரெண்டாவது காதல் நல்லா இருக்கலாம். நிஜத்துல அது சாத்தியப்படாதுமா. எதோ ஒரு வகையில் முதல் காதல் முள்ளாய் குத்திட்டு இருக்கும். என்னால உன் புது மாமாவும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டாம்னு எவ்வளவோ தடுத்தேன். எங்க கேட்டார். வான்டடா வந்து வண்டியில் ஏறிட்டார்.”
“விட்டா இந்த வண்டியைப் பிடிக்க முடியாது நினைச்சிருக்கலாம். தெரிஞ்சி கட்டிக்கிற யாரும் அதை சொல்லிக்காட்ட மாட்டாங்க அக்கா. அதையும் மீறி இருக்கிறாங்கனா அவங்க சைக்கோவா இருப்பாங்க. பொண்ணுங்களை பொறுத்தவரை மாமா பாதுகாப்பு கவசம் மாதிரி. உனக்கு ஒன்னு தெரியுமா, மாமாவுக்கு இளைஞர் பாசறை க்ரூப் ஒன்னு நம்ம ஊர்ல இருக்கு. மாமா அவங்க நல்வாழ்வுக்காக நிறைய செய்யுறார்.”
“அதுக்கு, நானும் அதில் போய் சேரணுமா?” என்று அதட்டலிட,
“சொல்றது என்னோட கடமை சொல்லிட்டேன். நீ புரிஞ்சு நடந்துக்கோ அதுதான் உனக்கும் நல்லது. உனக்காகவே வாழ்கிற மாமாவுக்கு நல்லது.” என்றாள் சித்ரா.
சிறு பெருமூச்சுடன், “இது அவனா இழுத்துக்கிட்டது. இதுக்கு நான் ஒன்னுமே செய்ய முடியாது” என்றாள் வருத்தமாக.
“சார் ரெண்டு பேரும் இப்படி நனைஞ்சிட்டோமே. போட்டுட்டு போக டிரஸ் எடுத்துட்டு வரலை. போட்டிருக்கிற டிரஸ் காயும் வரை இங்க தான் இருக்க போறோமா?” என்று நன்றாக நீராடிவிட்டு இப்பொழுது கேட்டான் ஹரிஹரன்.
“இரண்டு பேருக்கும் வண்டில டவல் இருக்குடா ஹரி. அதை கட்டிட்டு இதை காய போட்டு, காஞ்சதும் எடுத்துப் போட்டுட்டு போலாம்.”
“நம்மளோட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க சார். அவங்க முன்னாடி எப்படி டவலோட நிக்கறது. அதுவும் இல்லாம நான் ஜட்டி போடல சார்.” என்றான் மெல்லிய குரலில்.
“குளிக்கையில் ஜட்டி போடாத வாலிபர் கைது. ட்ரெண்டிங் போஸ்ட் போட்டு விட்டுடலாம். சும்மா லைக் வியூஸ் பிச்சிக்கும்.” என்று கேலி பேசினான் ஈஸ்வர்.
“என்னோட மானமும் பிச்சிட்டு போயிடும் சார். என்னோட மானம் என் பொண்டாட்டியிடம் மட்டும் போனா போதும். அடுத்தவன் பொண்டாட்டி எல்லாம் என்னோட மானத்தை பார்க்க தேவையில்லை.”
“நீ உன் பொண்டாட்டியவே பாரு. சித்துமா காருக்குள்ள இருந்து ரெண்டு டவல் எடுத்து போடு” என்றான் சத்தமாக.
“இதோ மாமா” என்று சற்று தள்ளி நிறுத்தி இருந்த காருக்குச் சென்று எடுத்து வந்து, “சட்டைக்கு பக்கத்துல வைக்குறேன் மாமா. எடுத்துக்கறீங்களா?” எனக் கேட்டாள்.
“வை வை நான் எடுத்துக்கறேன். நீங்க ரெண்டு பேரும் அந்த பக்கம் திரும்பி நில்லுங்க. இல்லை இல்ல கொஞ்சம் தூரம் போங்க. நாங்க வரோம்” என்றான் ஹரிஹரன்.
“டிரஸ் போட்டு தான குளிக்கிறீங்க. அப்படியே வர்றதுக்கு நாங்க ஏன் எங்கயோ போகனும்? உங்களை யாரும் பார்க்கப் போறதில்ல. பயப்படாம வாங்க” என்றாள் சித்ரா.
“உன் ஆளு ஜட்டி போடல சித்துமா. அதனாலதான் உன்னை இப்பயே திரும்பி நிக்க சொல்றான். என்னடா ஹரி நான் சொன்னது சரிதான? உன் பொண்டாட்டியிடம் மட்டும், உன் மானம் போனா பரவாயில்ல சொன்னல்ல. அதனால உன் பொண்டாட்டியிடம் மட்டும் சொல்லிட்டேன். ஓகேவா?” என்றான் ஈஸ்வர் வந்த புன்னகையை அடக்கி.
“ரொம்பவே ஓகே சார். வச்சி செய்யுறீங்க” எனவும் சட்டென பெண்கள் இருவரும் சிரித்தனர்.
“என் பொண்டாட்டி முன்ன போனா போதும் சொன்னா, உங்க பொண்டாட்டி முன்னாடி ஏன் சார் சொன்னீங்க?” என்றான் சிணுங்கலாய்.
“நான் வேற என் பொண்டாட்டி வேற இல்லன்னு அர்த்தம்டா” என்றதும் சிரித்துக் கொண்டிருந்த சுந்தரி அமைதியாகி, அங்கு இருந்து நகர்ந்து பெரிய மாமரம் அருகே சென்று நின்றாள்.
வருவார்கள்...