Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 43
- Thread Author
- #1
சுந்தரி - 39
ரியாவைக் கண்ட ரவீந்திரன் “நினைச்சேன் எப்படிடா?” என வியந்து கேட்டார்.
“ம்ம்ம் நீங்க சொன்னது உங்க பையன் காதுல பாஞ்சிருக்கும். அதான் அழைச்சிட்டு வந்துட்டான்” என நக்கலடித்தார் தேவகி.
“அம்மா மயினி எப்படி இருக்காங்க? அண்ணனுக்கு பொருத்தமா? இல்ல சுமாரா?”
“என் பேத்தி எப்படி சுமாரா இருப்பா சொல்லலாம்” என்று ரவீந்திரன் கொதிக்க,
“அதான்ப்பா சுமாரா கேட்டேன். இதுவே அம்மா வழின்னா, கேட்காமலே தெரியும் அழகுன்னு. ஏன்னா என் அம்மா அவ்வளவு அழகு” என்றான் தாயைப் பார்த்து.
“வச்சிட்டான் ஐஸ். இனி இவளை உருக வைக்கனும்” என்று வருத்தமாக மனைவியை பார்த்தார்.
“நீங்க சாப்பிடுங்க. நான் போயி மயிலை பார்த்துட்டு வந்துடறேன்” என்று எழுந்தான் சர்வேஸ்வரன்.
“மயிலா? மயில் இங்க எங்கடா இருக்கு? தோட்டத்துக்கு போனா இருக்கும். உனக்குத்தான் இங்க எதுவும் தெரியாதே.” புரியாது கேட்டார் தேவகி.
“அவன் மயினி வார்த்தை மறந்து, மயில், மயிலி சொல்லுறான் அம்மா.” என்று தேவகியிடம் சொல்லி, சர்வேஸ்வரனை பார்த்து, “வெளில வாசல்ல நின்னு பார். உன் மயினி வீடு தெரியும். அப்படி தெரியலைன்னா, இங்க இருக்கிற ஒருத்தர் கண் எந்த வீட்டில் பதியம் போட்டிருக்கோ, அதுதான் அவளோட வீடு. நீ ரொம்ப மெனக்கெட வேண்டாம் தம்பி.” ஈஸ்வரைப் பார்த்தபடி கிண்டலாகவே சொன்னாள் ரஞ்சிதா.
“ரியா ரெடியாகிட்டா வா போகலாம்.”
“இதோ வந்துட்டேன் சர்வா” என்று அவள் வர, ரஞ்சிதா சொன்னது போல் அண்ணனின் பார்வையை தொடர்ந்து வீட்டை கண்டுகொண்டான் சர்வேஸ்வரன்.
கதவு தட்டும் ஓசையில் வெளியே வந்த செல்வ சுந்தரி, தன் எதிரே நின்ற இருவரையும் கண்டு குழம்பி, பின் சர்வேஸ்வரனை மட்டும் நன்றாகப் பார்த்ததும் தெரிந்தது யாரென. சட்டென ஒரு அறிமுகப் புன்னகை அவளிடத்தில்.
“என்னை அடையாளம் தெரியுதா?” எனக் கேட்டான்.
“நல்லாவே தெரியுது. உங்க அப்பா பாதி, அம்மா மீதியா நிற்குறீங்க. தெரியாமலா போகும்.”
“சூப்பர் மயிலி.”
“என்னது மயிலி?” என்றாள் புரியாது.
“அண்ணியை இங்க அப்படித்தான கூப்பிடுவாங்க” என்றான் அப்பாவியாய்.
“ஹ..ஹா.. அது மயினி. மயிலி இல்ல.”
“ஒஹ் ரஞ்சிக்கா சொன்னாங்க. நான் மறந்துட்டேன். இந்த மயிலி ஒகேவா இருக்கு. இப்படியே கூப்பிடவா?”
“உங்க இஷ்டம். வாங்க உள்ள வாங்க.” அவர்கள் இருவரும் உள்ளே வந்து அமர்ந்ததும் “இவங்க?” என்று ரியாவைக் காட்டி கேட்டாள்.
“என்னோட வருங்கால மனைவி. இந்நாள் காதலி ரியா.”
“நல்லது. இருங்க காப்பி எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே செல்லப் போக,
“அதெல்லாம் தேவையில்லை மயிலி. இப்பதான் சாப்பிட்டுட்டு வரோம். மீன், நண்டு, இறால்னு சாப்பிட வச்சி கொடுமைபடுத்திட்டாங்க. என் வக்கீல் நண்பன் மூலமா அவங்க மேல கேஸ் போடப்போறேன்” என்றான் சர்வேஸ்வரன்.
“உங்களுக்கு சோறு போட்ட பாவத்துக்கு இது வேறையா. நான் வெறும் தண்ணி மட்டும் தரேன். அதுக்கும் கேஸ் போட்டுடாதீக” என்று கிண்டலடித்து சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“உங்க மேல நான் கேஸ் போட்டா, என் அண்ணன் என்னை குண்டர் சட்டத்துல தூக்கி உள்ள போட்டுடுவான். எனக்கு இருக்குறதே ஒரே ஒரு காதலி. அவளை விட்டுட்டு என்னால முடியாதுப்பா” என்றான் ஷோல்டரை ஏற்றி இறக்கி.
“அப்ப அம்மா, அப்பா, அண்ணனை விட்டு இருந்துருவிய? இருங்க ரவி தாத்தாவிடம் சொல்லித்தரேன்” என்று மிரட்டினாள்..
“உங்களை ரொம்ப நல்லவங்க நினைச்சது என் தப்பு தான்.”
“ஒத்துக்கிட்டா சரி. என்ன சாப்பிடுறீங்க?”
“நிஜமாவே வயித்துல இடம் இல்லை மயிலி. நீங்க சாப்பிட்டீங்களா?”
“ம்ம்ம் ஆச்சுது” என்றாள்.
“பார்த்தா தெரியலையே” என்று சமையலறை சென்று அங்கு பார்த்தான். சமையல் செய்த அறிகுறி இல்லை என்றதும் அங்கிருந்த பொருளைப் பார்த்தவன், “டார்லிங் என்னோட சமையல் நீ சாப்பிட்டது இல்லைல்ல. உனக்கும் சேர்த்து செய்யுறேன்” என்று அவன் காதலியிடம் கூறினான்.
“எனக்கு வயிறு ஃபுல் சர்வா. நீங்க உங்க மயிலிக்கு மட்டும் செய்து குடுங்க. கல்யாணத்துக்கு அப்புறம் உங்க சமையல் மட்டும் தான் நம்ம வீட்டுல” என்று எஸ்கேப்பானாள் அவள்.
“என்னை நம்பி சாப்பிட பயம் உனக்கு. இரு என்னோட மயிலி சாப்பிட்டு அருமைனு சொல்லுவாங்க” என்று எதையோ செய்து கொடுத்து “எப்படி இருக்கு?” என்றான்.
“சூப்பர்” என்று விரல் வைத்து சொல்ல,
“என் மனசு நோகக்கூடாது சொல்றீங்க. உண்மையை சொல்லுங்க மயிலி. நான் பீல் பண்ணமாட்டேன்.”
“நிஜமாவே நல்லா இருக்குங்க சர்வா. சர்வா சொல்லலாம்ல?” என்று கைகழுவ செல்ல,
“தாராளமா. அந்த ங்க எடுத்துட்டு கூப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும்” என்றான் சத்தமாக..
கை கழுவிவிட்டு வந்து அமர்ந்தவள், “அது ரவி தாத்தா பையன் நீங்க. இளையவர் ஆனாலும் மாமா கூப்பிடனும். பெயர் சொல்லுறதே தப்பு” என்று தயங்கி பேசினாள்.
“அப்புறம் உங்க இஷ்டம். மாமா மட்டும் கூப்பிட்டுராதீங்க. என் ஹார்ட் ஹர்ட் ஆகிடும்” என்றான்.
“சரி” என்றாள் புன்னகையுடன்.
“என்னை மட்டும் மாமா கூப்பிடு” என்று அவள் தோளில் கைபோட்டு அமர்ந்தான் அவளின் சுந்தரன்.
குரலை வைத்தே யாரென கண்டு கொண்டவள், “கையை எடுக்குறீங்களா?” என்று கையைக் தட்டிவிட,
“என் பொண்டாட்டி நான் கை போடுவேன். தட்டி விட்ட, தட்டித் தூக்கிடுவேன் பாத்துக்கோ” என்று பஞ்ச டயலாக் பேசி திரும்பவும் கை போட்டான்.
“டார்லிங், புருஷன் பொண்டாட்டி சண்டை நடுவில் நாம வேணாம். வா போகலாம். மயிலி நாங்க கிளம்புறோம். நீங்க உங்க அவரை என்ன செய்யணுமோ செய்துக்கோங்க” என்று ரியாவை அழைத்துச் சென்றான் சர்வேஸ்வரன்.
“ப்ச் எடு கையை. மரியாதையா சொன்னா புரியாது. வீடு தேடி வந்தவங்களை போக வச்சிட்ட” என்று அவன் முகம் பார்க்காது சொன்னாள்.
“என் முகம் பார்த்து பேசு. அதென்ன சுவரையும், தரையையும் பார்த்துப் பேசுறது. அந்தளவுக்கு மோசம் இல்லை என்னோட முகம்”
“உன் முகம் பாக்குற மாதிரி இல்ல.” என்று முகம் சுளித்தாள்.
“அது நேத்து காலைல முகத்தைப் பார்த்து ரசித்தபடி பொங்கல் ஊட்டி விடுறப்ப தெரியலையா? இப்ப என்ன?”
“என் மாமானு நினைச்சி...” வார்த்தையை பாதியில் நிறுத்த,
“மாமா தான். இதில் நினைக்க என்ன இருக்கு. உன் தாய்மாமன் எல்லை இந்த வீட்டு வாசல் வரை மட்டும். உன் பெட்ரூம் வரும் தகுதி எனக்கு மட்டுமே இருக்கு. இந்நேரம் அது உனக்கும் தெரிஞ்சிருக்கும். அவன் உனக்கு காவலன் மட்டுமே. நான் உன் கணவன் பிளஸ் காதலன். எனக்குத் தெரிஞ்சி, நீ என் கனவுல வர ஆரம்பித்த நாளில் இருந்து தான், உன் வீட்டில், உன் கனவில் நான் வந்திருப்பேன்” என்று தேதியுடன் சொன்னான்.
‘உண்மை தானே’ என்பதாய் அவளின் அமைதி தொடர்ந்தது. பத்து வருடமாக வாசலில் நின்றிருந்தவன், சில காலமாக வீட்டினுள் வந்து தன்னிடம் அத்துமீறியது ஆச்சரியம் தான். அதன் காரணம் இவன் தான் என்று புரிகிறது. ஏற்றுக்கொள்ளும் மனது இல்லை அவளிடம்.
“உனக்கு எல்லாம் தெரியும். பட் ஏத்துக்க மனசு வரலை. நானும் உடனே ஏத்துக்க சொல்லல. சின்ன வயசில் இருந்து இவன் மனைவி நீ அப்படின்னு சொல்லி விதை போட்டு வளர்த்திருக்காங்க. அதை உடனே அழிக்க முடியாது. அதில் இருந்து விடுபட முயற்சிக்கலாம் நீ. உனக்கு எல்லாமா இருக்க நான் இருக்கேன்” என்று அவள் முகம் நிமிர்த்தி கண் பார்த்து, “இந்த கண்ணுக்குள்ள, அதில் வரும் கனவுக்குள்ள நான் மட்டும் இருக்கனும். இது பேராசை தான். என் நியாயமான ஆசையும் கூட” என்றான் அவன்.
அவன் கையை விலக்கி, “உங்களுக்கு மனசாட்சி இருக்கா? நேத்துல இருந்து என்னை யோசிக்கக்கூட விடாம தொடர்ந்து அடிச்சிட்டு இருக்கீங்க. என்னை கொஞ்சம் மனுசியா மதிச்சா, இங்க இருந்து போங்க” என்றாள் அவள்.
“சுந்தரி” என்றான் அவளின் சுந்தரன்.
“ப்ச்... ஒரே நாள்ல என்னால எதையும் மாத்த முடியாது. மாத்துற நிலையிலும் நான் இல்லை. உங்களை என்னால கணவனா ஏத்துக்க நினைக்கிறது கூட கஷ்டம். என்னைப் புரிஞ்சி கொஞ்சம் போங்க” என்றாள் கெஞ்சலாய்.
“ம்ம்... சரி இப்ப போறேன். இந்த ஊர்ல ஒரு பஞ்சாயத்து முடிக்க வேண்டி இருக்கு. அதை முடிச்சதும் நாம தென்காசி போயிடலாம். இந்த மாவட்டமே வேண்டாம்னு போகலாம் தான். இப்ப தான் ட்ரேன்ஸ்பர் வாங்கி வந்திருக்கேன். உடனே மாறி போக முடியாது. எல்லாத்துக்கும் தயாரா இருக்கிற மாதிரி தயாராகு” என்று சென்றுவிட்டான்.
தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டாள் அவள். எந்த இடத்தில் இவன் தன் வாழ்வில் வந்தான் என்பதற்கு விடையாய் நின்றது, சுந்தர்ராஜனின் ‘செல்வி’ என்ற அழைப்பு மாறி ‘சுந்தரி’ என்று வந்தது.
“செல்வி என்னைக்கு சுந்தரியா மாறிச்சோ, அன்னைக்கு யோசிச்சிருக்கனும். அந்த இடத்தில் தவறிட்டேன். இப்ப என்ன முடிவெடுக்க போறேன் நான்” என்று கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தவள் நிமிர்ந்து எதிரே இருந்த தன் தாய்மாமன் படத்தை பார்த்தாள்.
“என் விதியை மாத்தி அமைக்க, அவன் கனவில் போனீங்களா மாமா. என் மனசு கழட்டி மாட்டுற சட்டைனு நினைச்சிடீங்கல. மனதார உங்களோட வாழ்ந்த நான் எப்படி அவனோடனு யோசிக்கலைல. அதுவும் உங்க உருவத்தில் இருக்கிற ஒருத்தனை, என்னால எப்படி மாமா கணவன் இடத்தில் வச்சிப் பார்க்க முடியும். தப்பு பண்ணிட்டீங்க மாமா” என்று அழுதாள்.
“நான் போனது உனக்காக, உன்னைத் தாண்டி சில உண்மை வெளில கொண்டு வர போனேன். நீ ஏன் போன செல்விமா?” என்று கேட்டான் ராஜன்.
“எ..எனக்குத் தெரியலையே மாமா. எதுவும் புரியாம இருக்கேன். அவன் கனவுல நான் ஏன் போகனும்? என் நிஜமா அவன் ஏன் வரணும்? யோசித்தாலே தலை வெடிக்குது மாமா.” என்று தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டாள்.
“கடவுள் போட்ட முடிச்சு செல்விமா. அவிழ்க்க முடியாது. அதுக்கு முயற்சிக்காத. அவன் இங்க வந்தது உனக்காக. அவன் நல்லவன் செல்விமா. எந்த நிலையிலும் உன் பலகீனத்தை பயன்படுத்திக்க நினைக்கலை. தன்னைப் பற்றிய உண்மை தெரிஞ்சும், உன் தாத்தா தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லியும் உன்னை கைவிடவும் நினைக்கலை. அவனுக்கு நீ மட்டும் போதும். போயி வாழு செல்விமா. இதுதான் இந்த மாமனோட கடைசி ஆசை. என்மேல் உனக்கு உள்ள காதல் கானல் நீர். அவன் உன்மேல் வச்ச காதல் நிஜம். ஒரே நிமிடத்தில் தூக்கிப்போட முடியாது தான். யோசிச்சி சரியான முடிவு எடு. என்னைக்கு அவனோட நீ மனமொத்து வாழுறியோ, அன்னைக்கு தான் என் ஆத்மா சாந்தியடையும். எனக்கு சீக்கிரமே மோட்சம் குடு செல்விமா” என்றான் கெஞ்சலாக.
“என்னால எதையும் யோசிக்க முடியல மாமா. உங்களையும் நான் கஷ்டப்படுத்தறேன்” என்று கதறி அழுபவளை வேடிக்கை மட்டுமே பார்த்திருக்க முடிந்தது சுந்தர்ராஜனால்.
வருவார்கள்...