Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 41
- Thread Author
- #1
சுந்தரி - 37
“என்னோட பாதுகாப்பு அரணா நீங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சும், நான் ஏன் சார் விடுதியில் தங்கணும்? இனிமேல் போறேன் என்ற வார்த்தை உங்க வாயில் இருந்து வரக்கூடாது.”
“புரியல தேவி.”
“நீங்க என்பதால எனக்கு நம்ம கல்யாணத்துக்கு சம்மதம். என்னோட பாதுகாப்பு எப்படி உங்களுக்கு முக்கியமோ, அதே போல உங்க அமைதியான வாழ்க்கை எனக்கு முக்கியம். நீங்க சொன்னது தான். உங்களுக்கும் யாரையாவது பிடிச்சிருந்தா அந்த சமயம் நான் அமைதியா விலகிப் போயிடுவேன்.” என்க,
சிரிப்பு தான் வந்தது ரவீந்திரனுக்கு. “ஆம்பளையே இல்லைன்னு சொல்லப்படுறவன், எப்படி இன்னொரு பொண்ணோட உடலால வாழ முடியும்? அதுக்கு வாய்ப்பே இல்லை தேவி. எனக்கு கடைசி வரை நீதான்.” என்று சொல்ல,
அதற்கு தேவகி சொன்ன பதில் ரவீந்திரனை புருவம் உயர்த்திப் பார்க்க வைத்தது.
அதையே தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம், “அதுக்கு இந்த மேடம் என்ன சொன்னாங்க தெரியுமா?” என்றதும் ஆர்வமாக அவர்களை மாற்றி மாற்றிப் பார்த்தார்கள்.
“ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னா அது உண்மை ஆகிடாதுங்க. நீங்க ஒரு பொண்ணோட வாழவே இல்லைனா வேற. ஆனா, வாழ்ந்திருக்கீங்க. அதை இல்லைன்னு நீங்க எப்படி சொல்ல முடியும். உங்களோட வாழ அவளுக்கு தகுதியில்லை. அது தான் நிஜம். அதை மனசுல வச்சிக்கோங்க. அவ உங்களால் முடியாதுன்னு தொடர்ந்து சொல்லி, உங்களை நம்ப வச்சிருக்கா. அதனால வந்த எண்ணம் இது. உங்களால ஒரு பொண்ணோட வாழ முடியும். குழந்தை பெத்துக்க முடியும். நீங்க உங்களை நம்புங்க. கண்டிப்பா நல்லது நடக்கும் பாருங்க.”
“இவ அப்படி சொன்னப்ப தெய்வ வாக்காவே இருந்தது. எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை விதை. அது காமத்துக்கானது அல்ல. இவள் மேல் வந்த காதலுக்கானதுனு பின்னர் தான் தெரிஞ்சிக்கிட்டேன். ரெண்டு பேரும் அங்க இருந்த சின்ன கோவில்ல கல்யாணம் செய்துகிட்டோம். எதை பற்றியும் யாரை பற்றியும் யோசிக்கலை. நான் அவளையும், அவள் என்னையும் மட்டுமே நினைத்து கல்யாணம் செய்தோம்.”
“சென்னை வந்த புதுசில் கொஞ்சம் கஷ்டம் இருந்தது. கிடைச்ச வேலையை செய்தேன். வேலைக்கு போறேன் கிளம்பிய தேவியிடம், வேண்டாம் நான் குடும்பத்தைப் பார்த்துக்கறேன் சொன்னேன். அவள் கேட்கலை என்றதும் அவள் விருப்பத்துக்கே விட்டுட்டேன். நாலு மாசம் எந்த பிரச்சனையும் இல்லாம போச்சி. ஒரு நாள் தேவி வயிறு பெருசாகிட்டே போகுதுங்க. சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா? இல்ல வாயு பிரச்சனையா தெரியலை. என்ன பண்ணுறதுன்னு தெரியாம, நான் டாக்டரிடம் கூட்டிட்டு போயி காண்பித்தேன். அங்க தான் அவள் மாசமா இருக்கிறது தெரிஞ்சது” என்றதும் அனைவரும் அதிர்ந்து அவரைப் பார்க்க, ஈஸ்வரோ முன்னரே கணித்து விட்டான்.
மருத்துவர் சொன்னதும் இருவருக்குமே அதிர்ச்சி.
“டாக்டர் ந...நல்லா பார்த்து சொல்லுங்க?” என்று பயத்தில் அழுகையை அடக்கி தேவகி கேட்க,
“எத்தனை முறை பார்த்தாலும் நீங்க கர்ப்பமா இருக்கீங்க. இது பதினெட்டாவது வாரம்.” என்றார் மருத்துவர்.
“குழந்தை எப்படி இருக்கு டாக்டர்? என்னன்ன குடுக்கணும்” என்று ரவீந்திரன் கேட்க,
“நல்லா ஹெல்தியா இருக்கு. இப்போதைக்கு நல்ல சத்தான உணவு சாப்பிட சொல்லுங்க. பழங்கள் நிறைய வாங்கிக் குடுங்க. அடுத்த மாதம் பனிரெண்டாம் தேதி ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு வாங்க.” என்று அனுப்பினார்.
வீட்டுக்கு வந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தேவகி வயிற்றில் குழந்தை என்பது, ‘தங்களுக்கு ஒரு குழந்தை’ என்ற எண்ணம் மட்டுமே ரவீந்திரனுக்கு வந்தது. அது தாண்டி எதையும் யோசிக்கவில்லை.
“எங்களுக்கு குழந்தையை கலைக்கனும் என்ற எண்ணம் ஒரு நொடி கூட வரவே இல்லை. யாரோட குழந்தைக்கு அப்பனாக முடியாதுனு சாகத் துணிந்தேனோ, அவன் குழந்தைக்கு நான் அப்பா.” என்று சொல்லிச் சிரித்த ரவீந்திரனைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியமே! ‘என்ன மாதிரி மனிதன் இவனர்!’ என்று வியந்து பார்க்கத் தோன்றியது.
“முதல்ல வளர்மதி சொன்னப்ப அசிங்கமா, அருவருப்பா தெரிஞ்ச அப்பா என்ற வார்த்தை, தேவி வயிற்றில் இருந்த குழந்தைக்கு அப்பான்னு நினைச்சப்ப, மனதில் சந்தோசம் தான் வந்தது. அதை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. அவன் உருவானது தெரிந்த நாளில் இருந்து, அவனுக்கு நிஜ அப்பாவா மாறிட்டேன். என் பையன் சுந்தரேஸ்வரன். சன் ஆப் ரவீந்திரன்.” என்று பெருமையாகச் சொல்லும்போது சுந்தரேஸ்வர் கண்களில் கண்ணீர்.
‘என்ன தவம் செய்தனை’ என்று அவர் காலில் விழத் தோன்றியது. யாரும் அறியாது கண்ணீர் துடைக்க, செல்வ சுந்தரியோ அவனைக் கண்டு கொண்டாள்.
'பாவம் இல்ல இவன்' என்று அவனைக் கண்டு சிறு பரிதாபம் எழுந்தது.
“பத்தாவது மாசம் டாக்டர் சொன்ன நாளில் பிறந்துட்டான். எங்க உலகம் உயிர் எல்லாம் இவன் தான். இவனால எதிர் எதிரா இருந்த நாங்க நெருங்க ஆரம்பிச்சோம். இவன் வளர வளர எங்களிடம் இருந்த நட்பு என்ற உணர்வு மாறி, நேசம் என்ற புள்ளியில் வந்து நின்னது.” என்று மனைவியை காதலோடு பார்த்தவர், மனைவியைத் தோளோடு அணைத்து, “என்னோட நிஜம் இவள். இது போதும் நீங்க எங்க அன்பை புரிஞ்சிக்க. உயிர் உலகம்னு சொன்னா சினிமாட்டிக்கா இருக்கும். இருந்தாலும் அதுதான் நிஜம்” என்று சொல்ல, தேவகி செல்லமாய் அடி ஒன்று கொடுத்தார்.
“என் மகனோட ஐந்தாவது வயசுல எங்களோட நேசம் பகிரப்பட்டது. கணவன் மனைவியா சேர்ந்து வாழ ஆசை ஒரு பக்கம்னா, ஏற்கனவே நடந்த அனுபவத்தில் பயம் மற்றொரு பக்கம். நெருங்க ஆசை இருந்தும் உறவில் தவறு நடந்தா, என்னாலயே அதைத் தாங்கிக்க முடியாது. அந்த தண்டனையை இவளுக்கும் குடுக்க விரும்பல. என் பயம் புரிந்து, அதைப் போக்க இவளும் எவ்வளவோ முயற்சி எடுத்தா. முழுக்க முழுக்க இவளோட முயற்சியில் ஈஸ்வரின் ஏழாவது வயசுல தான் எங்க வாழ்க்கையை ஆரம்பிச்சோம். இவனின் எட்டாவது வயசில் ஜூனியர் ஈஸ்வர் பிறந்தான்.” என்றார் சந்தோசமாக.
அவர்கள் வாழ்க்கையை சாதாரணமாக சொல்லிவிட்டார் ரவீந்திரன். அதில் உள்ள கரடுமுரடுகளை, வலிகளை, வேதனைகளை, கணவன் மனைவியாக வாழ ஆசை இருந்தும், வாழ முடியாத தவிப்புகளை, அதன் ஆழமான வலிகளை அழகாக மறைத்துவிட்டார்.
“அவன் வரலையா ரவிப்பா?” கனகா கேட்க,
“வந்துட்டே இருக்கான் பாப்பா. சென்னையில் இருதய சிகிச்சை நிபுணனா இருக்கான். கொஞ்சம் வாலு அவன். அண்ணனுக்கு முன்னாடி கல்யாணம் செய்ய பொண்ணு எல்லாம் பார்த்துட்டான். நாங்க தடுத்து வச்சிட்டிருக்கோம். இல்லன்னா இப்ப ஒரு பிள்ளையோட நின்னுருப்பான். இதுதான் விசயம்னு தெரிஞ்சது தாலிய கட்டி இங்க கூட்டிட்டு வந்திடுவான். பயபுள்ள அவ்வளவு வேகம்” என்றார் மகிழ்ச்சியுடன்.
“அம்மா இப்ப நீ சொல்லு. அப்பாவ எப்ப பிடிச்சது?”
“எப்பப் பிடிச்சதுன்னே எனக்குத் தெரியாதுடா. நல்ல நிலையில் நாங்க சந்திச்சிருந்தா பார்த்ததுமே யோசிக்காம சொல்லி இருப்பேன், இவரைக் காதலிக்கிறதா. ரெண்டு பேருக்கும் அப்படிப்பட்ட சூழ்நிலை அமையலை. என்னை அந்த மாதிரி ஒரு நிலையில் பார்த்தும், சிறு சலனமும் இல்லாம, என்னை பாதுகாக்க முயற்சி செய்தப்ப பிடிச்சிருக்கலாம். சாகனும்னு போனவர் என் குரல் கேட்டு, எனக்காக வந்ததா சொன்னப்ப பிடிச்சிருக்கலாம். யாரோட குழந்தைக்கு அப்பாவா ஆகிடக் கூடாதுன்னு சாவைத் தேர்ந்தெடுத்தாரோ, தவறுதலா வந்தாலும், குழந்தை வந்தது தெரிந்ததும், அதுக்கு அப்பாவா மாறி நின்னப்ப ரொம்பப் பிடிச்சிருக்கலாம். உன் வாழ்க்கையை அழிச்ச பாவியோட தம்பி தான் நான்னு உண்மையைச் சொல்லி, தன்னோட வாழ்க்கையை அவர் அண்ணன் அழிச்சதை சொன்னப்ப பிடிச்சிருக்கலாம். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தும், நான் நெருங்கி நெருங்கி போனப்ப, விலகி விலகிப் போன அவரின் அந்த பயம் பிடிச்சிருக்கலாம். அந்த பயத்தைப் போக்க நான் வெட்கம் விட்டது இப்ப நினைச்சாலும்...”
“கவிதை தான் உங்க காதல்” என்று முடித்தாள் சுந்தரி.
அவளை வியப்பாய் பார்த்து, “நாமும் சேர்ந்து கவிதை வாசிப்போமா? எனக்கு எந்த பயமும் கிடையாது” என்று அவளிடம் காதலாக சொன்னான் ஈஸ்வர்.
“அம்மா நான் வீட்டுக்கு போறேன். இந்த டிரஸ் கசகசன்னு இருக்கு. போய் மாத்தனும்” என்று எழுந்தாள்.
“நான் எடுத்துக் கொடுத்த டிரஸ் போட்டிருந்தா சாஃப்டா இருந்திருக்கும். வேணும்னு வேற புடவை கட்டினா இப்படி தான் கசகசன்னு இருக்கும்.” என்று தன்னுடைய ஆதங்கத்தை சொன்னான்.
“அம்மா இவன் பேசாம இருந்தா நல்லது. இல்ல நான் என்ன செய்வேன் தெரியாது” என்று திட்டி வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
“அவள் பறந்து போனாளே. எனை மறந்து போனாளே. நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை கவர்ந்து போனாளே!” என்று அவளுக்குக் கேட்க வேண்டுமென சத்தமாக பாட, அவனின் பாட்டுச் சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்காது அவள் செல்ல, சுத்தி இருந்த அனைவரும் காதை மூடிக்கொண்டனர்.
“டேய் மகனே நிறுத்து. கழுதை கூட உன் அளவு கத்தாது. இப்படி பாடினா என் பேத்தி ரன்னிங் ரேஸ் வச்ச மாதிரி ஓடிருவா” என்றார் ரவீந்திரன்.
“ம்க்கும் ஓட விட்டால் தான ஓட. மாமா மாமான்னு என் பின்னாலயே சுத்த வைக்கலை. நான் ஈஸ்வர் இல்லை” என்றான் சபதம் போல்.
“அதை செய் தம்பி. அந்த மாதிரி ஒரு காட்சியை என் கண்ணாரக் கண்டுட்டா, அந்த நிமிஷம் உயிர் போனாலும் சந்தோசமா போவேன்” என்று கண்கலங்கினார் கனகா.
“ஏன் பாப்பா இப்படிப் பேசுற? வரும்போது தான் பால்ராஜ் உன் பொண்ணு பத்தி மேலோட்டமா சொன்னான். எதோ உன் தம்பி மேல உள்ள காதல்ல இதுவரை கல்யாணம் செய்துக்காம இருந்ததா. என்ன நடந்தது?” எனக் கேட்டார் ரவீந்திரன்.
“என்னத்த சொல்ல ரவிப்பா. சின்ன வயசுலயே இவனுக்கு இவள்தானு பேசி வச்சதுக்கான கொடுமையை இப்ப அனுபவிக்கிறோம். வயசு வித்தியாசம் அதிகம் இல்லை என்பது ஒரு காரணம். அதோட எனக்கும் ஒரே பொண்ணு. அவளை வெளிய அனுப்பி கஷ்டப்படுத்தக் கூடாது என்பதும் ஒரு காரணம். அம்மாவுக்கு வயசானதால, சீக்கிரம் பையன் பேத்தி கல்யாணத்தைப் பார்த்திட ஆசை. அதான் ஜாதகம் பார்த்து தேதி குறிச்சிட்டு வர்றேன்னு போனாங்க. ஜாதகம் பார்த்து வந்தவங்க என்னை தனியா அழைச்சிட்டு போயி, ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சா செல்வி செத்துருவான்னு சொன்னாங்க. பெத்த பொண்ணு சாகனும்னு யாராவது விரும்புவாங்களா ரவிப்பா?”
“அது எப்படிமா தெரிந்தே சாக விடுவோம்.” என்றார் ரவீந்திரன்.
“அதான் அம்மா வந்து செல்வியை காப்பாத்தணும்னா, தம்பிக்கு வேற இடத்துல பொண்ணு பாக்குறேன் சொன்னாங்க. என் பொண்ணு ரொம்ப உடைஞ்சிருவா சொல்லி முதல்ல மறுத்தாலும், பொண்ணோட உயிர்னு வரப்ப சம்மதிச்சேன். கல்யாண விஷயம் தெரிஞ்சி செல்வி விஷம் குடிக்க போயி பிழைச்சிட்டா. ஆனா அவன்... இவள் செத்துட்டதா தப்பா நினைச்சி அவசரப்பட்டுட்டான் ரவிப்பா. கல்யாண மாலை கல்லறைக்கு போச்சு” என்று அழுதார் கனகா.
வருவார்கள்...