Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 37
- Thread Author
- #1
சுந்தரி - 33
“இது கோயில்னு தெரிஞ்சும், நீங்க அடிக்கிற லூட்டி தாங்க முடியலடா சாமி” என்று தாய் தகப்பனைக் கலாய்த்தபடி வந்தான் சுந்தரேஸ்வரன்.
“என் புருஷன். நான் தோள் சாய்வேன். யாரும் கிண்டல் அடிக்க தேவையில்லை. அவனை போகச் சொல்லுங்க” என்று இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டார்.
“அம்மா நான் சொல்லுறதை கேளுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினான்..
ஒருவர் தொடர்ந்து மற்றவர்கள் அவர்கள் அருகில் பேசுவது கேட்கும் தூரத்தில் இருக்க, சுந்தரி மட்டும் தாயிடம் வந்து, “மன்னிச்சிடுங்க அம்மா” என்றாள்.
“உன்னை மன்னிக்க நான் யாரு மக்களே. குடும்பம் என்ற கூட்டுக்குள் இருக்கும் கூட்டுபுழு நான். யாரோ ஒருத்தரை சார்ந்து வாழுற ஜீவன். ஒட்டுண்ணிக்கு பேச தகுதி இருக்குதா என்ன?” என்றார் மனம் நொந்து.
“என்னம்மா இப்படி பேசுறிய? நான் பண்ணியதுக்கு உங்களை நீங்களே ஏன் தாழ்த்துறீங்க.”
“வேற என்ன சொல்ல சொல்லுறா. நான் சொல்லுறதை நீயாவது கேப்ப நினைச்சா, உன் அப்பனுக்கு அஞ்சி மடங்கா பிடிவாதத்துல வந்துட்ட. நானும் இல்லனா நீ அனாதையா இருப்பியேனு தான், இன்னும் உயிரோட இருக்கேன். இல்லன்னா நான் எப்பவோ...” என்றவர் வாயை வேகமாய் மூடினாள்.
“நான் பண்ணின மொத்தமும் தப்பு தான். நான் என்ற அகங்காரம் எனக்கு. அதான் யாரையோ பழிவாங்க உங்கள கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க அம்மா” என்று அவர் காலில் விழ, மற்றவர்கள் அதிர்ந்து பார்த்திருந்தனர்.
“யேய்...! என்ன பண்ணுறா? எழுந்திரு மக்களே” என்று மகளைத் தூக்கி அணைத்துக் கொண்டார் கனகா. தோளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த மகளின் கேசம் வருடி, “அம்மாவ இப்படி ஆவிச்சேத்து கட்டிப்பிடிச்சி எத்தனை வருஷம் ஆயிருச்சி. நீ இல்லாம தனியா ரொம்ப தவிச்சிட்டேன்மா. நீ தான் என்னோட ஆதாரம். நீ என்னை விட்டு போயிட்டா, என் நிலை பூஜ்ஜியம்” என்றார் கலங்கிய கண்களுடன்.
“நீங்க என்னோட வந்திடுங்கம்மா. எனக்கு அங்க வேண்டாம். அது அசிங்கம் பிடிச்ச வீடு” என்றாள் அவள்.
“ஏன்லே இப்படி பேசுறா? உன் அப்பனைத் தாண்டி உனக்கு அங்க என்ன கஷ்டம்? சொன்னா தான தெரியும்” என்றார் மகளின் விலகல் எதனால் என்று புரியாது.
“சொன்னா உங்களுக்கு புரியாது. புரிய வைக்குற விசயமும் அது இல்லை.”
“சரி விடு. கண்ணீரை துடை. எல்லாரும் நம்மள பார்த்துட்டு இருக்காங்க” என்று தன் புடவை முந்தானை கொண்டு மகளின் கண்ணீரை துடைத்து, “ப்பா... அழுதழுது மூஞ்சி செவந்து போச்சி உனக்கு. இனி அழக்கூடாது. என் தம்பி உன்னை நல்லா பாத்துப்பான்” என்றார்.
அங்கு ஒருவித அமைதி சூழ, “எந்த ஊர் பற்றி உனக்கு தெரியக்கூடாது நினைச்சமோ அங்கயே வந்திருக்க. நீ ஏன்டா அந்த ஆளு பேத்தியை கல்யாணம் செய்த?” என்ற தேவகி குரலில் அனைவரும் அவரைப் பார்க்க, “சொல்லுடா. ஊர் உலகத்தில் லட்சம் பெண்கள் இருக்கிறப்ப, ஏன் இங்க, இவளுக்காக வந்த?” என்றார் இரத்தினசாமி குடும்பத்துப் பெண்ணை மகன் திருமணம் செய்ததை ஏற்க முடியாது.
“யாரும் என் கனவுல வந்து, காலம் போகுது. வந்து கல்யாணம் செய்து குடும்பம் நடத்துனு கேட்கலையே அம்மா. இவதான் வந்து கேட்டா. அதுவும் என்மேல ஏறி உட்கார்ந்து, சட்டம் பேசுறவனிடம் சட்டமா கேட்டா” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
“நம்புறதுக்கு இங்க யாரும் கேனைங்க இல்...” இல்லை என்று முடிக்கும் முன்,
“அப்படியா ராசா. என் பேத்தி உங்க கனவுல வந்தாளா?” என்றார் ஹேமாவதி.
“இந்தக் கிழவிய” என்று கோபத்தில் சுந்தரி பல்லைகடித்தாள்.
அவளின் சுந்தரனோ, “ஆமாங்க. வந்தது மட்டும் இல்ல. என்ன என்னவோ தூண்டி விடுற மாதிரி பேசினா. அப்படி பேசினா ஒரு கல்யாணம் ஆகாத பையன் என்ன செய்வேன்?” என்றான் அப்பாவியாய்.
“அப்படி என்ன பேசினா?” என்றார் கனகா.
“அம்மா” என்று செல்வ சுந்தரி அதட்டினாள்.
“இரு மக்களே. தம்பி கனவுல போயி வரச் சொல்லி இருக்க. அப்படி என்ன சொன்ன தெரிய வேணாவா” என்றார் அவர்.
“முதல் நாள் வந்தப்ப, ஓய் மாமா! என்னோட சுந்தரா! சுந்தர புருஷா! என்ன நீ இங்க இருக்க? நான் உனக்காக காத்திருக்கேனு தெரியுதா, இல்லையா? பாக்க வருவ பாத்தா, இப்படி பப்பரப்பான்னு படுத்துத் தூங்குற? அப்படின்னு என்மேல விழுந்து காதை கடிச்சா. ஸ்ஸ் ப்பா” என்று இப்பொழுது நடந்தது போல் காதை தேய்த்தவன், “எதுக்கு என் காதை கடிக்கிற அப்படினு அதட்டி கேட்டா, உனக்கு எம்மேல லவ்வே இல்ல. நான் எவ்வளவு லவ்வோட கூப்பிடுறேன். நீ என்னனா மிரட்டி கேள்வி கேட்கிற. போ மாமா. உன்னை எனக்குப் பிடிக்கலை. நீ நல்ல காதலன் இல்ல சொல்லுறா.”
“ஒஹ் ஏனாம்?” என்றார் கனகவேல்.
“அடியேய் யாரடி நீ? நான் இதுவரை உன்ன பார்த்ததே இல்லையே கேட்டேன். அதுக்கு இவ, பாத்ததில்லனு சொல்லாத மாமா. பாக்க வரலனு சொல்லுனு என்னிடமே கேள்வியை திருப்பிட்டா. சரி பார்க்க எங்க வரணும் கேட்டா, இங்க இருந்து கேட்டா பதில் வராது மாமா. என்னைப் பாக்க, யாருன்னு தெரிஞ்சிக்க என்னோட இடத்துக்கு வா. இல்ல நஷ்டம் உனக்குத்தான்னு தோள்குலுக்கி போறா. ஒரு கட்ட பிரம்மச்சாரிட்ட இப்படி பேசுறது தப்புத் தான?” என்று நியாயம் கேட்டான் அவன்.
“தப்பு தான் ராசா. நீ காரணம் கேட்டியா?” என்றார் ஹேமாவதி.
“அதை கேட்டதுக்கு, உன் பொண்டாட்டிக்கு அந்த உரிமை இல்லனு உன்னால சொல்ல முடியாது மாமா. ஏன்னா நீ எனது உயிர்! நான் உனது உயிர்! நமக்கொரு உயிர் வேணும்னா தேடி வா மாமா அப்படினு சீண்டி விட்டா, என்னடி! வார்த்தைக்கு வார்த்தை மாமா சொல்லுற கேட்டா, நீ கூடத்தான் டி சொல்லுற. நான் கேட்டனா. நேரம் ஆகுது நான் போறேன். காலம் போகுது மாமா. சீக்கிரம் வந்து சேரு சொல்லிட்டுப் போயிட்டா.” என்றான் கோர்வையாக.
“ஓஹ்ஹோ...”
“மறுநாள் கனவில் வந்தவ, என்ன என்னைப் பார்க்க வரதா எண்ணமே இல்லையா? நான் கூப்பிடுறது வெறும் கனவுன்னு நினைக்கற தான? வயசு போகுது மாமா. காலாகாலத்துல கல்யாணம் கட்டிட்டு, புள்ளகுட்டி பெத்துக்க வேணாவா. காத்திருந்த காலமெல்லாம் போதும் கண்ணா. என் உயிரோடு மெய் கலக்க வா அப்படினு கூப்பிட்டா.”
“அதே சமயம், இவள் மாமன் ஒரு புறம் என்னை தேடி வா உனக்கு தெரிய வேண்டிய விஷயம் இருக்கு. உனக்கு சொந்தமானவளும் இங்க இருக்கா. நீ வந்தே ஆகணும்னு நிற்கிறான். இவங்க ரெண்டு பேரோட டார்ச்சர் தாங்காம, யார் என்ற தேடல்ல இறங்கினப்ப தான் ஹரி ஒரு டாக்குமெண்டரி கொண்டு வந்தான். அதில் இவளைப் பற்றியும், இவள் மாமன் பற்றியும் இருந்தது. இவங்க கதை என்னை ஆச்சர்யபடுத்திச்சி. இவளை பார்க்கிற ஆவலும் சேர்ந்து என்னோட அம்மா, அப்பாவிடம் பொய் சொல்லி இங்க வந்துட்டேன்.” என்றான் சோகமாக.
“தம்பியை நீதான மக்களே கூட்டிட்டு வந்திருக்க. அப்புறம் தம்பி மேல குறை சொல்ல என்ன இருக்கு” என்றார் கனகா. கனவை நனவாக நினைத்து.
“ம்மா அவன்தான் எதோ உருட்டுறான்னா, நீங்களும் நம்பிட்டு இருக்கீங்க” என்று தாயை திட்ட,
“யேய் செல்விமா, என்ன நீ தம்பிய அவன் இவன் சொல்லுற? அவன் உன் மாமன். எப்பவும் மனசுல வச்சிக்கோ” என்றவர், “ராஜன் உன் கனவுல வந்தது நிஜமா தம்பி? எங்க கண்ணுக்கு தெரியவே இல்லை அவன்” என்றார் வருத்தமாக.
“நிஜம் தான். இல்லன்னா எங்கயோ தமிழ்நாட்டின் வடகோடியில் இருக்கும் எனக்கு, தென்கோடியில் இருக்கும் உங்க குடும்பக்கதை தெரிய வருமா? நானும் இங்க வந்திருப்பேனா?” என்று சொன்னான்.
“நீ என்ன காரணம் சொல்லி சமாளித்தாலும், தப்பு பண்ணிட்ட ஈஸ்வரா. இந்தக் கல்யாணம் நடந்திருக்கக் கூடாது” என்ற தாயை விசித்திரமாக காண, செல்வ சுந்தரியோ தேவகியின் பிடிவாதத்தையே பார்த்திருந்தாள். அவரை பிடிக்கும் போல் இருந்தது அவளுக்கு.
“இன்னும் என் மனம் புரியலையா அம்மா? எனக்கு இவள் தான் வேணும். வேண்டாம்னு சொல்ல சரியான காரணம் சொல்லுங்க” என்றான்.
“இவளோட தாத்தா” என்று இரத்தினசாமி நோக்கி கை நீட்டிட,
“இதோ பாருமா. உன்னை இப்ப தான் முதல் முறை பாக்கிறேன். என்ன நீ, வந்ததில் இருந்து என்னை குறை சொல்லிட்டு இருக்கா. அதுவும் புருசனோட அண்ணன் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லையே. இந்திரா இதெல்லாம் பாக்க மாட்டியா?” என்றார் தம்பியிடம்.
“அவள் எது செய்தாலும் அது சரியாய் இருக்கும். உன்னை தப்பு சொல்லுறானா நீ தப்பானவனா இருப்ப” என்றார் அவர்.
தாயின் கோபத்திலேயே பெரிதாக எதோ இருப்பது புரிந்தாலும் உண்மை தெரிய, “இப்படி மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? அவர் என்ன செய்தார்னு சொல்லுங்க. அவரை இந்த ஊர்ல உள்ளவங்க ஆஹா ஓஹோ சொல்லுறாங்க. ஒரு உத்தமனை இப்படி குற்றவாளியாய் நிற்க வைக்கிறது ரொம்பவே தப்பும்மா. பஞ்சாயத்து பண்ணுற அளவு பெரிய ஆள் அவர். உங்க குற்றச்சாட்டுல கலங்கி நிக்கிறார்” எனறு அவரைத் தூண்டி விட்டான் ஈஸ்வர்.
“இந்த உத்தமருக்கு ஊருக்கு நாலு வப்பாட்டி இருக்கு தெரியுமா? இந்த உத்தமருக்கு பெண்களை வேட்டையாடுறது பிடிக்கும் தெரியுமா? இந்த உத்தமருக்கு சொந்த தம்பி பொண்டாட்டியை, தன் பொண்டாட்டியா மாத்திக்கிற திறமை இருக்கு தெரியுமா? இந்த...”
“போதும் நிறுத்துமா?” என்று கத்தியதில் தேவகி ஹேமாவதியை பார்க்க, “நானும் பாத்துட்டு இருக்கேன். வந்ததில் இருந்து எம் புருஷனை மட்டமா பேசுற. அதுவும் பொண்ணுங்களை நாசம் பண்ணுற ஆள் சொல்லுற. தம்பி பொண்டாட்டியை தன் பொண்டாட்டியா வச்சிருக்காரா? கேக்கவே அசிங்கமா இருக்கு. தம்பி பொண்டாட்டி பொண்ணு மாதிரி இல்லையா. எப்படி நீ இப்படிப் பேசலாம்? இவங்களும் எதுவும் பேசாம இருக்காங்க. ஏட்டி கனகா, உன் அப்பனை இப்படி பேசுறா பாத்துட்டு இருக்க?” என்று மகளையும் திட்டினார்.
இரத்தினசாமி தொண்டையில் எதோ அடைக்க மலங்க விழித்து நின்றிருந்தார்.
கனகாவோ தன் சித்தப்பனை பார்த்து அதிர்ந்து அப்படியே நிற்க, கனகவேல் தான், “எதை வச்சி பெரியப்பாவ தப்பு சொல்லுறீங்க?” எனக் கேட்டார். அரசல்புரசலாக அவரைப் பற்றித் தெரிந்தே இருந்தாலும், இதுவரை நேரில் எதுவும் கண்டதில்லை அவர்.
“அவளையும், என்னையும் வச்சிதான் சொல்லுறா” என்று சொன்னார் ரவீந்திரன்.
வருவார்கள்...