• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 31

Member
Joined
Dec 1, 2024
Messages
35
சுந்தரி - 31


புதுமணத் தம்பதிகள் கோயிலை சுற்றி முடித்து வெளியே வர, அப்பொழுது அங்கு வந்த ஆடி காரின் பின்னால் இருந்து பால்ராஜ் இறங்கினார்.

சுந்தரேஸ்வரன் கண்கள் இடுங்க காரையும், அவரையும் யோசனையாய் பார்க்க, ஓட்டுநர் பக்கத்து இருக்கையில் இருந்து இறங்கி வந்த தாயைக் கண்டவன் கண்களும், முகமும் புன்னகையில் விரிந்தது.

தாயின் அருகில் சென்று ‘அம்மா’ என்று அழைக்க வாய் திறக்க, அவர் விட்ட அரையில் கன்னத்தைப் பிடித்தான் ஈஸ்வர்.

“அம்மா!” என்றவனுக்கு அதிர்ச்சியுடன் ஆச்சரியமும். ஏனெனில் விவரம் தெரிந்து இதுவரை அவனை அடித்தது இல்லை அவர்.

“இங்க... அதிலும் இந்த ஊர்ல என்னடா பண்ணுற? திருச்சில தான வேலைன்னு சொன்ன. திருச்சி எப்ப புளியங்குளமா மாறிச்சி? கண்ணுல என்னடா? லென்ஸ் மாட்டிருக்கியா?” என அதட்டலாகக் கேட்டார் தேவகி.

‘ம்ம்ம்...’ என்று தலையசைத்தான்.

“எதுக்காக? ஹேர் ஸ்டைல்ல இருந்து ஆளே மாறியிருக்க. யாருக்காகடா? வேட்டி சட்டைனு கல்யாண மாப்பிள்ளை மாதிரி இருக்க. என்ன நடக்குது இங்க?” என்றதில் ‘இவர் சொல்லவில்லையா’ என்று பால்ராஜை பார்க்க, ‘இல்லை’ என்று தலையசைத்தார் அவர்.

“எதுக்கு இந்த ஊருக்கு வந்தன்னு சொல்லு? யார் இங்க உன்னை வரச்சொன்னது? எங்க அந்த ஹரி?” என்று அவர் போட்ட அதட்டலில் ஓடி வந்து நின்றான் ஹரிஹரன்.

“என்னடா இதெல்லாம்? எத்தனை தடவை கேட்டேன், போஸ்டிங் போடாம எதுக்கு முன்னாடியே போனான்னு. நீயும் சேர்ந்து மறைச்சிருக்கல்ல” என்றார் கோபமாக.

“அம்மா அது” என்று இழுத்தான்.

“இங்க இவனுக்கு என்ன வேலைனு சொல்லு?” என்று அடமாக நின்றார் தேவகி.

அதிர்ந்து கூட பேசாத தாயின் இந்த பரிணாமம் ஈஸ்வருக்குப் புதிது. ‘ராஜன் மறைமுகமாக தனக்கு உணர்த்த வந்ததற்கும், தன் தாய்க்கும் சம்பந்தம் இருக்குமோ’ என்று நினைக்கத் தோன்றியது அந்த நிமிடத்தில்.

“அதுங்க அம்மா சார் தான்... இல்ல இல்ல. நான்தான் செல்வி அக்கா பத்தி சொல்லி, சார் கனவுல அவங்க வந்து...” என்று இதுவரை பாய்ன்ட் பாய்ண்டாக விடாது பேசிய வக்கீலின் வார்த்தைகள் அனைத்தும் உளறலாக வந்தது.

அனைவரும் அவர்களை வித்தியாசமாக பார்த்திருந்தார்கள். ரஞ்சிதாவின் தாயை தெரிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியே. அதிலும் ஹரிஹரனின் சார் நிறைய சந்தேகங்களைக் கொடுத்தது. இதற்கு முன் சொல்லி இருந்தாலும் யாரும் அதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது உண்மை.

செல்வ சுந்தரி தனக்குக் கணவனாக மாறியவன் அவன் தாயின் கையால் அடி வாங்குவதை வேடிக்கை பார்த்தாலும், ‘ரஞ்சிதா அக்காவின் அம்மா இவங்க இல்லையே. நிஜமாவே இவன் பிராடா. சொன்னா இந்த ஊரு ஜனங்க எங்க கேட்டுச்சி. இந்த தாலி தான் மானத்தை காப்பாத்தும்னு பஞ்ச் டயலாக் பேசினானுவ. இங்க எல்லாம் பஞ்சா பறந்து போகுது. பேசி முடிவு பண்ணி வந்ததும் பேசிக்கலாம்’ என்று அவர்களைப் பார்த்திருந்தாள். அவளுக்கு அவனின் பின்புறம் மட்டும் தெரிந்திருந்தது. முகம் பார்க்கவில்லை. அவளுக்கு அது தேவை இல்லை என்ற எண்ணத்தில் பெரிதாக எடுக்கவில்லையோ!

இதுவரை யாருக்கும் அவனின் முன் பக்கம் தெரியவில்லை. தேவகி மட்டும் அனைவரும் பார்க்க நின்றார்.

“ஹரி உளராம தெளிவா பேசுறியா. இல்ல தொலைச்சிக் கட்டிருவேன் ராஸ்கல்” என ஹரிஹரனை திட்டிய தேவகி மகனிடம் திரும்பி, “என்ன கன்றாவிடா இது” என்று அவன் மாஸ்கை அவரே கழட்டி, “லென்ஸ எடு” என்றார்.

அவன் எடுத்து அவர் கையில் தந்ததும், தூரம் வீசியவர், அவன் தலை முடியை தன்னைப்போல் சரி செய்து, முகத்தை புடவை கொண்டு துடைத்து, “ஒரு போலீஸ்காரன் மாதிரியா இருக்கிற. கிராமத்தான் வேசம் போட ரொம்ப மெனக்கெட்டு இருக்க தெரியுது. யாரு இவனோட ஐடியாவா?” என்றார் தாழ்ந்த குரலில்.

“ஆமாம்” என்று அவன் தலையசைக்க,

“சார்...” என அலறி, “என்னை காலி பண்ண முடிவு பண்ணிட்டீங்க” என்றான்.

“ஏம்மா நீ ரஞ்சிதா அம்மா இல்லையே. எங்க வீட்டு மாப்பிள்ளையை அடிக்க வேற செய்யுற? யாருமா நீ?” என்று கேட்டார் ஹேமாவதி.

“என்ன மாப்பிள்ளை? யாரை சொல்லுறீங்க? என் பையனையா?” என்று குழப்பத்துடன் கேட்டு மகனைப் பார்த்தார்.

“என்ன சொல்லுறிய? உங்க மவனா? அப்ப ரஞ்சிதா?” என்று அவளைப் பார்க்க, அவளோ கணவனோடு எதோ விவாதிப்பது போல் நின்று கொண்டாள்.

“ரஞ்சிதாவா... அவள் இந்த ஹரி பையனோட அக்கா. அதை விடுங்க. அதென்ன என் பையனை மாப்பிள்ளை சொல்லுறீங்க? என் பையனுக்கு இங்க சொந்தம்னு யாரும் கிடையாது. இன்னும் கல்யாணமும் நடக்கலை. இனிமேல் மாப்பிள்ளை சொல்லாதீங்க” என்று கண்டிப்புடன் சொன்னார் தேவகி.

“அது எப்படிமா சொல்லாம இருக்க முடியும். இப்ப கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா உங்க பையனையும், மருமகளையும் வாழ்த்தி இருக்கலாம். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. செல்விமா அத்தையிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்றார் பேத்தியிடம் திரும்பி.

‘என்னடா ஈஸ்வரா இதெல்லாம்’ எனப் பார்த்த தாயிடம், “பிப்டீன் மினிட்ஸ் முன்ன எனக்கு கல்யாணம் ஆகிடுச்சிம்மா” என்றான் ஒப்புதலாய்.

“இல்ல நான் நம்பமாட்டேன். நாங்க இல்லாம கல்யாணம் செய்தியா? எல்லாம் பொய் தான? என்னங்க கேட்டீங்களா உங்க பையன் பேசுறத” என்றார் கைபேசியில் இருந்த கணவனிடம்.

“அம்மா சூழ்நிலை கொஞ்சம் சரியில்லம்மா. அதான் உடனே முடிக்க வேண்டியதாகிடுச்சி” என்று நேற்று நடந்தது முதல் பஞ்சாயத்து முடிவு வரை சொன்னான்.

“உனக்கு பஞ்சாயத்து வைக்கிற அளவுக்கு இங்க எவன்டா பெரியவன்? நீ யாருன்னு தெரிஞ்சா வச்ச பஞ்சாயத்த வாபஸ் வாங்கிடுவானா? யாருக்கு யார் பஞ்சாயத்து வைக்கிறது? வரச்சொல்லு அவனை” என்றார் ஒருமையில்.

அந்நேரம் கூட்டத்தை நெருங்கிய இரத்தினசாமி தேவகி பேசியதை கேட்டுவிட்டார்.

“அம்மா என்ன இது. நீ இப்படி பேச மாட்டீயேம்மா. இப்பவாவது கல்யாணம் செய்தியே சொல்லுவ நினைச்சேன். டிஸ்ஸப்பாயன்ட் பன்னுரம்மா நீ” என்றான்.

“உன்னை விடவாடா” என்றார் பட்டென்று.

“அம்மா” என்றான் தவிப்புடன்.

“என்ன மாப்பிள்ள தம்பி. யார் இவங்க? என்னோட தீர்ப்புல என்ன தப்பு?” என்று அவன் அருகில் நின்றவரும் அவன் முகம் காணாது தேவகியை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“என்னோட அம்மா” என்று சொன்னதும் அவர் அவனைக் காண மின்சாரத்தில் கால் வைத்தது போல் அதிர்ந்து நின்றுவிட்டார்.

“யேய்... நீ...” என்றவருக்கு வார்த்தை தடுமாற அதன் பின்னே எதிரில் நின்றிருந்த பெண்மணியை ஆராய்ந்தார்.

“நீ என் பையனுக்கு தீர்ப்பு சொன்னியா? அதுக்கான தகுதி முதல்ல உனக்கு இருக்கா?” என்று அவரிடம் கேட்டு மகனிடம் திரும்பி, “இவன் என்ன நீதி சொல்வான்னு நினைச்சி, இந்த பஞ்சாயத்துல நின்ன ஈஸ்வர்?” என்று அனைவரும் கேட்க சத்தமாக பேசினார்.

ஈஸ்வருக்கு அதிர்ச்சி தான். ராஜன் அவன் அருகில் வந்து, “மனதை திடப்படுத்திக்கோ. இதைவிட ஆயிரம் மடங்கு அதிர்ச்சி உனக்கு கிடைக்கும்” என்றான்.

“எங்க அம்மா எப்படி இங்க? உன் வேலையா? இப்படி பேசுற ஆள் இல்லையே அவங்க. அப்ப என்னோட அப்பா, அம்மா உன் தாத்தனால பாதிக்கப்பட்டிருக்காங்க. ரைட்” என்று கேட்டான்.

“எல்லாத்துக்கும் பதில் எதிரில்” என்று ஈஸ்வரின் தாயை காட்டினான்.

“யேய் என்னம்மா நீ இப்படி பேசுறா. என் புருஷன் பண்ணாத பஞ்சாயத்தா. நேர்மையானவர்னு பெயர் வாங்கியவர். அப்படிப்பட்ட மனுசனை மட்டு மரியாதி இல்லாம பேசுற” என்று கணவனுக்காக வந்தார் ஹேமாவதி.

“ப்ச்...” என அதை தட்டிவிட்டு, “பஞ்சாயத்துக்கு அடங்குர ஆளா நீ. என்ன கூத்துடா இதெல்லாம்?” என்று மகனிடம் பாய்ந்தார்.

“நீ எப்படிம்மா இங்க வந்த? நான் இங்க இருக்கிறதை யார் சொன்னது?”

“நீ ஒரு போலீஸ்காரன் என்பதை மறந்துட்டியா?” என்றதில் அனைவரும் அதிர, அடுத்து அவர் சொன்ன வார்த்தைகளில் ஆச்சரியப்பட்டனர்.

“நீ ஒன்னும் சாதாரண எஸ்.ஐயோ, இன்ஸ்பெக்டரோ கிடையாது, போஸ்டிங் போட்டா தெரியாமல் போக. நீ எஸ்பி. ஒரு மாவட்ட கண்காணிப்பாளர். நீ குடுத்த பேட்டி சென்னையில் உள்ள டிவியிலும் தெரியும்” என்றார் கோபத்தில்.

“அம்மா!” என்றவனை கைநீட்டி தடுத்தவர், “இந்த ஊருக்கு வரப் போறன்னு தெரிஞ்சிருந்தா இந்த வேலையே வேண்டாம்னு சொல்லி இருப்பேன் ஈஸ்வர். அது தெரிந்து தான் சொல்லாம வந்துட்டியா? அப்படி வரவேண்டிய அவசியம் என்ன?” சற்று அதட்டலாகவே கேட்டார் தேவகி.

“நான் வந்தது சுந்தரிக்காக” என்று அவன் சொல்லவும். செல்வ சுந்தரி புரியாது விழித்தாள். இதோ இப்பொழுது வரை தேவகியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். எதற்கும் பயபடாது பேசும் அவரின் தைரியம் பிடித்தது. அவன் போலீஸ் என்று சொன்னதும் பழைய நினைவுகள் வந்து போக மனதிற்கு சங்கடமான நிமிடங்கள் அவை.

“உங்களிடம் சொல்லாம வந்தது தப்பு தான். ஒரு முறை தெற்கே போஸ்டிங் வந்தாலும் வரும்னு சொன்னப்ப, இப்படி தான் கோபப்பட்டு வேண்டாம்னு அப்பாவும், நீயும் சொன்னீங்க. காரணம் தெரியாததால நான் உங்க பேச்சை மீறி வந்துட்டேன். நீ இப்ப பேசுறது மனசை என்னவோ செய்யுதும்மா. இந்த ஊருக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கா?” எனக் கேட்டான் ராஜன் வார்த்தை உண்மையாகிடுமோ என பயந்து.

“நீயோ நானோ கால் வைக்க தகுதி இல்லாதது இந்த ஊர். நீ வா போகலாம்” என்றார் தேவகி.

“அதுக்கு முன்ன நீ யார். எங்க ஊரையும் என்னையும் மட்டமா பேசுற? உன்னை இங்க பார்த்ததா நினைவில் இல்லயே? இவன் எப்படி என்...”

“மனிதனுக்கு தான் நினைவு இருக்கும். வேட்டையாடுற மிருகம் உனக்கு எப்படி இருக்கும்” என்று அவரை பேச விடாது ஒருமையில் பேசி அனல் கக்கினார் தேவகி.

“யேய்...” என்று கை ஓங்கி வந்தவரை, தேவகி அசையாது பார்த்திருக்க, வேட்டியை ஏற்றி கட்டி அவரை மிதிக்க வந்தவனுக்கு, முன் ரத்தினசாமியின் கை முறுக்கப்பட்டது ரவீந்திரனால்.

“யார் மேல கையை வைக்க வர? என் பொண்டாட்டி முன்னால பேசக் கூட தகுதி இல்லாதவன் நீ. எவ்வளவு தைரியம் இருந்தா கை ஓங்குவ. இந்த கையை முப்பத்து ஆறு வருடம் முன்ன உடைச்சிருந்தா, இன்னும் நானும் மனிதன்னு முறுக்கிட்டு, பஞ்சாயத்து பண்ணிட்டு இருப்பியா? தொலைச்சிடுவேன் ராஸ்கல்” என்றார் ஆங்காரமாய்.

பால்ராஜ் அங்கு இருந்த இளைஞர் படையுடன் ஹரிஹரன், சரவணன் மூலம், “இது அவங்க குடும்ப பிரச்சனை. சண்டை முடியாம பஞ்சாயத்து வந்தா உங்களை அழைக்கிறோம்” என்று அனைவரையும் அனுப்பினார்.

அனைவருக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், அதை விட முப்பத்து ஆறு வருடம் முன் வீட்டை விட்டு சொல்லாமல் சென்றுவிட்ட, இரத்தினசாமியின் உடன் பிறந்த கடைசி தம்பி ரவீந்திரன், இன்று இன்னொரு பெண்மணியின் கணவனாக, தகப்பனாக வந்து, தன் அண்ணன் கையை பிடித்து திருகுவது கூடுதல் அதிர்ச்சி கொடுத்தது.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top