• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 30

Member
Joined
Dec 1, 2024
Messages
34
சுந்தரி - 30


“திட்டமா? என்ன பேசுறிய. இத்தனை வருசமா இந்த ஊர்ல தான் இருக்கேன். என்ன திட்டம் போட்டு எத்தனை குடும்பத்தைக் கெடுத்ததை பாத்தீங்க. இது என் அண்ணன் கல்யாணத்துக்கு செய்தது. கழுத்துல போட்டு இருந்த ஜெயின் அருந்திடுச்சின்னு மாத்த போனப்ப, நகை விலை ஒரு லட்சத்தை தொடப்போறதா தங்க ஆசாரி சொன்னார். எழுபது ஆயிரம் சொச்சம் இருக்கிறப்பவே வாங்கி வச்சிட்டா நல்லதுன்னு, கையில் இருந்த காசுக்கு ஒரு பவுன் காயின் வாங்கி, எப்படியும் அண்ணனுக்கு சீக்கிரம் பொண்ணு பார்த்திடுவாங்கன்னு, ஆசாரியிடம் குடுத்து தாலி செய்ய சொன்னேன். நேத்து தரேன்னு சொன்னவர் பொங்கல்னால தரலை. வரும்போது பாதியில் மறிச்சி எடுத்துக் குடுத்தார். இதோ இங்க தான் நிற்கிறார் அவரிடமே கேட்டுக்கோங்க” என்றாள் ரஞ்சிதா.

“என்ன ஆசாரி அந்த புள்ள சொல்லுறது நிஜமா?” என இரத்தினசாமி கேட்க,

“ஆமாங்க ஐயா. நகையை எடுத்துட்டு அவங்க வீட்டுக்கு போற வழியில் தான் பாத்து குடுத்தேன். அப்புறம் தான் பஞ்சாயத்து விஷயம் சொன்னாக. அதான் நானும் என்ன பஞ்சாயத்துன்னு பாத்துட்டுப் போக வந்தேன்” என்றார் அவர்.

“என் மருமகளுக்கு ஒரு நல்லது நடந்தா உனக்கு பொறுக்காதே. உன் அக்கா பையனுக்கு இன்னும் பொண்ணு கிடைக்கலன்னு, என் அக்கா மகளை அவனுக்கு கட்ட வழி பாக்குறியா? அது எப்பவும் நடக்காது. அந்த போட்டோ அவனுக்கு எப்படி கிடைச்சதுன்னு தனியா விசாரணை வச்சிக்கறேன். இப்ப வாயை மூடிட்டு நிக்கலை, தோலை உரிச்சி உப்புகண்டம் போட்டுபுடுவேன்” என்று மனைவியின் வாயடைத்தார் கனகவேல்.

பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு பின்னால் இருந்த அம்மன் கோயிலில் வைத்து திருமணத்திற்கான ஏற்பாடு நடந்தது.

கோயிலுக்கு வர மறுத்தவளை, கனகவேல், பால்ராஜ் ஆணைக்கு இணங்க சித்ரா, சரவணன் பிடித்து வர, “தப்பு பண்ணுறீங்க ரெண்டு பேரும். யார் எவர்னு தெரியாத ஒருத்தனிடம் சொந்த அக்காவை கொடுக்குறது அராஜகமா தெரியலையா? இது நம்ம உறவுக்கு நல்லது இல்லை. விடுங்க என்னை.” என்று அவர்களிடம் இருந்து விடுபட முயற்சித்தாள் செல்வ சுந்தரி.

“நம்ம மாமா... அக்கா அவர். உன்னை நல்லா பாத்துப்பார். அந்த நம்பிக்கையில் தான் இந்த கல்யாணம் நடக்குது.” என்றாள் சித்ரா.

“தாலி கழுத்துல ஏறுறத்துக்கு முன்ன என்ன வேணும்னா நடக்கலாம். அதை நீங்க தடுக்கவும் முடியாது” என்று மிரட்டினாள் செல்வ சுந்தரி.

“அப்படி நடக்காம பாத்துக்க நாங்க இருக்கோம். பின்னால ஒரு இளைஞர் கூட்டமே இருக்கு. வம்பு செய்யாம கல்யாணம் செய்துக்கோ அக்கா. வாழ்க்கை வசந்தமா இருக்கும். அடம் பிடிச்சாலும் உன்னை விடுறதா இல்லை” என்றாள் அவள்.

மேளதாளம் என்று அந்த இடமே அரைமணி நேரத்தில் கல்யாணக்களை சொட்ட நிற்க, சுந்தரேஸ்வரன் மட்டும் குற்றவுணர்ச்சியுடன் நின்றிருந்தான்.

“என்னண்ணே கல்யாணம் ஆகுற சந்தோசம் கொஞ்சம் கூட இல்லை. அப்பா, அம்மா நினைச்சி கஷ்டமா இருக்கா?” என்று கேட்டாள் ரஞ்சிதா.

“ஆமா ரஞ்சிமா. அவங்க ரொம்ப வருட கனவு என் கல்யாணம். அதுக்காக எவ்வளவு அலைஞ்சிருக்காங்க தெரியுமா? எத்தனை பொண்ணுங்க போட்டோ காண்பிச்சி, அத்தனையும் தட்டிப் போறப்ப அவங்க மனசு கலங்குறத பார்க்கவே முடியாது. இப்பவும் தினம் ஒரு போட்டோ வரத்தான் செய்யுது. எதையும் பார்க்கிறது கூட கிடையாது. நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தையில் முடிச்சிடுறேன்.” என்றவன் குரல் கரகரக்க அதை சரி செய்து,

“முதிர்கன்னியா பொண்ணு இருந்தா, ஒரு தாய்க்கு எந்த அளவு மனசு கஷ்டப்படுமோ, அதுக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்ல பையனைப் பெத்தவங்களுக்கும். முப்பத்தைந்து வயது வரை கண்முன்ன பையன் கல்யாணம் ஆகாம நடமாடினா, அவங்க மனசு சந்தோசமா படும். பையன் வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு பயம் தான் வரும். இப்ப அவங்க இல்லாம கல்யாணம் ஆகப்போறத நினைச்சா, சந்தோசம் முழுசா வரலை. அவங்க கூடவே இருந்து, சடங்கு சம்பிரதாயம் ஒவ்வொன்றிலும் கலந்து, முழுமனசோட சந்தோசத்தை அனுபவிக்கணும். இப்ப எல்லாம் மாறிப்போச்சி.” என்றான் வருத்தமாக.

“செல்விய சேர்த்துக்குவாங்க தான?” என்றாள் புதிதாய் முளைத்த பயத்துடன்.

“அதெல்லாம் சேர்த்துப்பாங்க ரஞ்சிமா. ஆனாலும் இந்த வருத்தம் காலத்துக்கும் மாறாதே. ரொம்ப கில்டா ஃபீல் பண்ணுறேன். ஐ மிஸ் மை மாம் அண்ட் டாட். ப்ளஸ் மை செல்ல தம்பி.” என்றான் ஈஸ்வரன்.

“அது நிஜம் தான் அண்ணே. உங்க செல்ல தம்பி பத்தி ஹரி எதுவும் சொல்லலையே. அவர் என்ன பண்ணுறார்?” என்று கேட்டாள் ரஞ்சிதா.

“அவனா டாக்டரா இருக்கான். நேர்ல வரும்போது பாரு. ஹரிக்கு ஐந்து மடங்கு சேட்டை.” என்றான் புன்னகையுடன்.

“சரிதான். நீங்கனாப்ல குறைந்த ஆளா என்ன? வேணும்னா ஒண்ணு பண்ணலாம் அண்ணே... இந்தக் கல்யாணத்தை ஈடுகட்ட, நீங்க ஊர்ல ஒரு ரிசப்சன் வைங்க. மூன்றாவது மாசம் தாலி மாத்துறத கோயில்ல வச்சி பெருசா பண்ணிடுங்க. அதுக்குள்ளே உங்க பொண்டாட்டி மனசு மாறனும். இங்க தமிழ் மாசம் தான் கணக்கு. அப்படி பார்த்தா இன்னும் இரண்டு மாசம் முழுசா இருக்கு. அதுக்குள்ளே எல்லாத்தையும் சரிபண்ணி வாழப்பாருங்க. அப்ப தான் ஒரு வருஷ கணக்குல குழந்தை பெத்துக்க முடியும்” என்று கணக்கு போட்டு சொன்னாள் ரஞ்சிதா.

“ஈசியா சொல்லிடலாம் ரஞ்சிமா. நடைமுறை எப்படி இருக்கோ தெரியலையே. உங்க செல்வியை நினைச்சா இப்பவே வயித்தைக் கலக்குது” என்றான் வயிற்றில் கை வைத்து.

“ஹ...ஹா... பெரிய போலீஸ் ஆபிஸர் இப்படி பயப்படலாமா?” என்று சத்தமாக சிரித்தாள்.

“எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் பொண்டாட்டிக்கு புருசன் தான் தங்கச்சிமா. அவளின்றி அணுவும் அசையாது. என் தந்தை எவ்வழியோ அவ்வழி அவர் பிள்ளை நான்” என்றான்.

“வர வர மீனாட்சி ஆட்சி எல்லா வீட்டிலும் வந்துவிடும் போல” என்று சிரித்தாள்.

“எங்க பாடுதான் திண்டாட்டம். பேசினது போதும். பொண்ணு மாப்பிள்ளைய அழைச்சிட்டு வாங்கோன்னு யாரும் கூப்பிடலை” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“இது ஒன்னும் உங்க சென்னை கிடையாது. ஊர்கள்ல பெரியவுக தான் கல்யாணத்தை முடிச்சி வைப்பாங்க. அதோ கனகு சித்தப்பா உங்கள கூப்பிட வரார். தயாரா இருங்க” என்றாள் சத்தம் இல்லாது.

“வரீங்களா தம்பி. உங்களுக்கான சடங்கு முடிச்சி பொண்ணுக்கு செய்யணும்” என்றவர், “ஆமா கல்யாணம் பண்ணுற அளவு வந்த பிறகும் ஏன் இந்த முகமூடி? இதை பார்த்தா தானாவே சந்தேகம் வரும். முதல்ல அதை கழட்டி எறிங்க” என்று நடக்க,

“சார் தாடி சேவ் பண்ணுறப்ப கன்னத்துல பெருசா கோடு விழுந்திடுச்சி. அதோட வெளிய போனா பார்க்க அசிங்கமா இருக்கும். காயம் ஆறும் வரை இருக்கட்டும்னு வச்சிருந்தேன்” என்று விளக்கமளித்து அவரை தொடர்ந்தான்.

ஊர் சடங்கு முடிந்து, தாலி கட்டும் நேரம் வர, அங்கிருந்து நழுவ பார்த்த செல்வ சுந்தரியை அசைய விடாது செய்து சன்னிதானம் முன் நிறுத்த, “இதுக்கு ரொம்ப வருத்தப்படுவ சித்ரா. தினமும் என்னை பாதுகாக்க முடியும்னு நினைக்கிறியா?” என்று பல்லைக் கடித்தாள்.

“முடியாது தான். மாமா இருக்கிறப்ப நான் பயப்பட அவசியம் இல்லை. மாமா முகம் பார்த்தா நீயாவே மனசு மாறிட போற. போயி மாமா கையால தாலி வாங்கிக்கோ அக்கா” என்றாள் சித்ரா.

“என்னடி வளவளனு இவளிடம் அளந்துட்டு இருக்க. நீ வா பாப்பா. வந்து மாப்பிள்ளை பக்கத்துல நில்லு” என்று கனகா மகளை அழைத்து வந்து சுந்தரேஸ்வரன் அருகில் நிறுத்த, அவனை முறைப்பதற்காக கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.

சில நிமிடம் தன் தாய் தந்தையை மனதினில் நிறுத்தி மன்னிப்பு கேட்டு, எதிரில் வீற்றிருக்கும் அம்மனை பார்த்து தங்கள் வாழ்க்கை நன்முறையில் சிறப்பாக இருக்க வேண்டி, பூசாரி குடுத்த தாலியை சுந்தரியின் கழுத்தில் கட்டும் சமயம், நிமிர்ந்தவள் கண்கள் அக்னியை வெளியேற்றியது.

“எதுவும் அபசகுனமா பேசிடாத சுந்தரி. இப்ப உனக்கு வெறுப்பா தான் இருக்கும். ஒரு நாள் இதுவும் மாறும்” என்று அவள் பேசும் முன் அவளை அணைத்தவாக்கில் தாலியை கட்ட, கோவில் மேள சத்தம் சுத்தி உள்ள இடங்களில் கேட்டது.

இருவர் கையையும் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பால்ராஜ் சேர்த்து வைத்து, “கோயிலை மூன்று முறை சுத்திட்டு வாங்க. வீட்டுக்குப் போகலாம்” என்றவர் வேகமாக வெளியே சென்றார்.

கையை அவனிடம் இருந்து உருவப் போனவள் கையை, ஈஸ்வர் அழுத்தமாகப் பிடித்து கொஞ்சம் இழுத்துக்கொண்டே கோயிலைச் சுற்றினான்.

“எங்க அக்கா போல முரட்டு குதிரைக்கு மாமா தான் சரி. இவ்வளவு நேரம் என்ன அட்டகாசம். இப்ப வேற வழியில்லாது கூட போறா” என்றாள் சித்ரா.

“சித்ரா முரட்டுக் குதிரையா, இல்ல அமைதிப் புறாவா?” எனக் கேட்டான் ஹரிஹரன்.

“ஏன் கேக்குறீங்க?” என்றாள் புரியாது.

“முரட்டுக் குதிரைனா அடக்க நான் வரலாம்னு ஒரு ஐடியா.” அவளின் முறைப்பில், “உங்க முறைப்பு சொல்லுது நானும் எங்க அக்கா மாதிரினு நீங்க சொல்லுறது” என்றான்.

“டேய் தம்பி! நீ இவளிடம் ப்ரொபோஸ் பண்ணுறியா?” எனக் கேட்டாள் ரஞ்சிதா.

“அவளுக்கு புரிஞ்சதால முறைக்கிறா. நீ லேட் பிக்கப் ரஞ்சிக்கா. சார் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யனும்” என்றான் அவன்.

“அது சரி. அவரை ரிலாக்சாக செல்வி விடனுமே. சுந்தரன் நீயும் சுந்தரி நானும்னு பாடப் போறாளா. இல்ல கோவை சரளா போல பறந்து பறந்து அடிக்கப் போறாளா தெரியலை. இதுல நீ வேற ஏன்டா.” என்று தம்பியைத் திட்ட, சித்ரா அக்கா தம்பியின் திருமணப் பேச்சில் இருவரையும் முறைத்தாள்.

“ஏ புள்ள சித்ரா. புடிச்சிருந்தா உடனே சரி சொல்லிறு. சாருக்கு டிமாண்ட் அதிகம். எங்கம்மா பொண்ணு பார்த்துட்டு இருக்காக. அவிய பிக்ஸ் பண்ணுறதுக்குள்ள நாம சொல்லிடனும். பிக்ஸ் பண்ணிட்டா யார் நினைச்சாலும் எங்க அம்மா மாற மாட்டாவ. பெண் பாவம் பொல்லாது சொல்லிடுவாங்க. யோசிச்சி ரெண்டு நாள்ல பதிலை சொல்லு” என்று தம்பியையும் இழுத்து அங்கிருந்து நகர்ந்தாள்.

“எனக்கு ஓகே சித்துமா. வக்கீல் வாதம் உன்னிடம் செல்லாம போகப்போகுது. நல்லவரா இருக்கார். நீ சம்மதிச்சா, அவர் கேட்டதை யாரிடமும் சொல்லாம வீட்டுல நான் பேசுறேன்” என்று தங்கையிடம் சொன்னான் சரவணன்.

“எனக்கு சம்மதம். ரெண்டு நாள் வேண்டாம் அண்ணா. இன்னைக்கே அவர் அம்மா பொண்ணு பார்த்துட்டா என்ன செய்யுறது? நீ உடனே பேசிடு அண்ணா” என்றாள் மென்குரலில்.

“வீட்டுக்கு போனதும் எங்க அம்மாவுக்கு போன் செய்து, பொண்ணு பார்க்க வேண்டாம் சொல்லிடுறேன்” என்று பின்னால் இருந்து கேட்ட குரலில் இருவரும் திரும்ப, புன்னகையுடன் நின்றிருந்தான் ஹரிஹரன்.

அவளோ வெட்கத்தில் அங்கிருந்து ஓடிவிட்டாள்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top