• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 29

Member
Joined
Dec 1, 2024
Messages
33
சுந்தரி - 29


சுந்தரியின் முறைப்பில் சுந்தரேஸ்வரன் சிரிக்க, “போடா பிராட்” என்று உதடசைத்தாள் அவள். அதற்கும் சிரிப்பையே கொடுக்க, “கையில கிடைச்ச சாகடிச்சிடுவேன்டா” என்றாள் அக்னியாய் மாறி.

“ஆல்வேஸ் வெய்டிங்டா பட்டு” என்றான் சத்தமாக.

“இருடா. உன்ன கொன்னு என் மாமன் பக்கத்துலயே புதைச்சி சமாதி கட்டுறேன்” என்று பல்லைக் கடித்தாள்.

“அவ்வளவு பிடிக்குமாடா என்னை. உன் மாமன் அளவு என்னை நேசிக்கிறியா. ஐ ஆம் சோ லக்கிடாமா. லவ் யூ” என்று காற்றில் முத்தத் தூது அனுப்பினான்.

“டேய்” என்று அவனை அடிக்க வர,

“நாங்க சொன்னப்ப நம்பலை இல்ல. இப்ப கண்ணார பாருங்க ஐயா. பாக்க சண்டை போடுற மாதிரி இருக்கும். ஆனா அத்தனையும் லவ்வு. கேட்டா இல்லைன்னு சொல்லுறாவ இந்த அக்கா” என்றான் அவர்கள் செயலில் காண்டான ஒருவன்.

“லூசாலே நீ? நான் அவனை திட்டுறேன். அதை திறிச்சி லவ்வுனு சொல்லுத. உடம்புல தோள் இருக்காது பாத்துக்க” என்று அவனைத் திட்டினாள்.

“எனக்கு ஒரு சந்தேகம்?” என்று பஞ்சாயத்தைப் பார்த்து கேட்டு, “முன்னப் பின்ன பார்த்திடாத, யாருனே தெரியாத ஒருத்தனிடம், இப்படி உரிமையா சண்டை போடா முடியுங்களா நாட்டாம” என்று கொளுத்திப் போட்டான் ஹரிஹரன்.

‘அதானே’ என்பதாய் அனைவரின் பார்வை இருக்க,

“அந்த பையன் சொல்லுறதும் சரி தானே. இப்ப வரை யாருன்னே தெரியாது, முகம் பார்த்தது இல்லை சொன்ன. இப்ப நீ செய்யுறத பாத்தா அப்படி தெரியலையேமா? எதோ உரிமைப்பட்ட மாமனிடம் சண்டை போடுறது போல இருக்கு. இதுக்கு மேல உங்களுக்குள்ள எதுவும் இல்லன்னு எப்படி நம்புறது? ரெண்டு பேருமே எங்க கேள்விக்கு ஒழுங்கான பதிலும் சொல்லலை. எதை வச்சி உன்னை நம்புறது?” எனக் கேட்டார் இரத்தினசாமி.

“நீங்க என்னை நம்பணும்னு நான் எதிர்பார்க்கலை. நம்பவும் வேண்டாம். என் மனசுக்குள்ளயும், என் வீட்டுக்குள்ளயும் வர உரிமை என் மாமாக்கு மட்டும் தான் இருக்கு. வேற எந்த சாயம் என்மேல பூசினாலும் எனக்கு கவலை இல்லை. இவ்வளவு பேசுற இந்த ஊருக்கு நடுவில், என்னை பெத்த என் தாயும் நிக்காவ. எனக்காக ஒரு வார்த்தை பேசட்டுமே. ம்ஹூம்... ஆளில்லாத அனாதைக்கு என்ன பட்டம்னாலும் சுமத்துங்க. வாங்கிக்க தான் நான் இருக்கனே” என்றாள் விட்டேற்றியாய்.

“என்ன செல்விமா இப்படிப் பேசுறா? உன்னை நம்பாம யாரும் இல்லை. எங்க பேச்சிக்கு இங்க மதிப்பு இருக்காது மக்களே. அதான் வாய மூடிட்டு இருக்கேன்” எனறு பதறியபடி சொன்னார் கனகா.

அவரின் நிலை புரிந்தாலும், “ஏன் உங்க புருஷர் வரல. வந்திருந்தா அவர் பங்குக்கு சிறப்பா செய்திருப்பாரே” என்றாள் நக்கலாக.

“அவருக்கு உடம்பு சரியில்ல மக்களே” என்றவருக்கு தெரியும் கணவன் வந்தால் மகள் நிலை பரிதாபமாகிவிடும் என்று. அதனாலயே அவர் குடித்த டீயில் தூக்க மாத்திரை கலந்து குடுத்துவிட்டார்.

“விதண்டாவாதம் பேசாம கேள்விக்கு பதில் வரணும். இல்லன்னா பஞ்சாயத்து தன்னோட முடிவை சொல்லும்” என்றார் நாட்டாமை இரத்தினசாமி.

“எத்தனை கேட்டாலும் என்னோட வார்த்தை நிஜம். இவர் ரஞ்சிதா அக்கா அண்ணன் என்பதை தவிர எதுவும் தெரியாது. இன்னைக்கு தான் முதல் முறை என் வீட்டுக்கு வந்தது. இதுக்கு மீறின உங்க கற்பனைக்கு நான் பொறுப்பு இல்லை” என்று திடமாக நின்றாள்.

“நீ சொல்லுப்பா? இன்னைக்கு தான் முதல் முறையா இவள் இருக்கிற வீட்டுக்கு போனியா? இந்த போட்டோல் இருக்கிறதுக்கு என்ன அர்த்தம்? உனக்கும், இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு உன் அம்மா மேல சத்தியம் செய்து சொல்லு.” அவர் அவனை உணர்வுப்பூர்வமாக தாக்க,

தாய் மேல் சத்தியம் கேட்டதும் தடுமாறியவன், “அ..அது... சாரி சுந்தரி” என்றவன், “அது நான் தான். ஆனா இதுக்கும், அவளுக்கும் சம்பந்தம் இல்லை” என்றான் வேகமாக.

“நேத்து உன்னை உள்ள விட்டு பூட்டி வச்சதா சொன்னது, நிஜமா? பொய்யா?”

“நிஜம் தான். ஆனா, இந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாது” என்று உண்மையை ஒத்துக்கொண்டான்.

“யேய் ஏன்டா பொய் சொல்லுற? நேத்து வந்தது என் மாமா. நீ இல்லை. எதுக்கு பொய் சொல்லுற?” என்று அவள் எகிற,

“அமைதியா இரு செல்வி. நீ கத்தினா உண்மை பொய்யாகிறாது. அதான் அத்தனை போட்டோ இருக்கே உண்மையை எடுத்துக்காட்ட. அந்த தம்பியும் ஒத்துகிட்டு. அப்புறமும் நீ கத்தினா சரினு ஆகிடுமா. அமைதியா இரு” என்றார் நாட்டாமை.

“நாட்டாம சார். அவங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை சொன்னதா நியாபகம்” என்று அழுத்திச் சொன்னான் ஈஸ்வர்.

“முழு பூசணிக்காய சோத்துல மறைச்சா, மறஞ்சிடுமா தம்பி? நீங்க செய்யுறது அப்படிதான் தெரியுது.”

“ப்ச் இப்ப என்னதான் சொல்ல வரீங்க? அதை சொல்லுங்க. சும்மா எரிச்சல்படுத்திட்டு“ என்றான் கோபத்தை அடக்கி.

“இப்ப எரிச்சல் பட்டு ஒன்னும் பிரயோஜனம் இல்ல. சொல்ல வரதை சொல்லிடுறேன்” என்றவர் அங்கிருந்த சிலரிடம் கலந்து ஆலோசித்து, “எங்க ஊரு பொண்ணு மானப் பிரச்சனை இது. இதுக்கு தீர்வா இவளை நீதான் கல்யாணம் செய்துக்கணும். அதுவும் இந்த பஞ்சாயத்துலயே. இதுதான் ஊர் முடிவு” என்றார் முடிவாக.

“என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது. இது நடந்தா நான் தப்புன்னு அர்த்தம். எந்த தப்பும் செய்யாத எனக்கு ஏன் எப்பவும் தண்டனை தரீங்க? நான், என் வீடு, தோட்டம்னு இருக்கேன். சும்மா சீண்டுனீங்க அவ்வளவுதான்” என்று விரல் நீட்டி மிரட்டினாள் சுந்தரி.

“உன்னோட முடிவை நீ சொல்லுப்பா?” என்றார் பேத்தியின் மிரட்டலை கண்டுகொள்ளாது.

“உங்க தீர்ப்பு தப்புன்னு தெரியுது” என்றதும் செல்வ சுந்தரி அவனை புருவம் சுருக்கி பார்க்க, “என்னால ஒரு பொண்ணு பெயர் கேட்டுப் போயிடுச்சி நினைக்கிறப்ப, மனசுக்கு கஷ்டமா இருக்கு. எனக்குனு ஒரு குடும்பம் இருக்கு. அதை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது” என்றான்.

“அதை தப்பு செய்யுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கனும். இப்ப சொல்லி என்ன ஆவப்போவுது?” என்றனர் பஞ்சாயத்தார்.

“தப்பு செய்தத நீங்க பார்த்தீங்களா? தீர விசாரிக்காம கொஞ்சமும் யோசிக்காம பழி போடுறீங்க. இதெல்லாம் சரிவராது. நான் இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கறேன். அதுக்கான ஏற்பாடு பண்ணுங்க” என்றான்.

“யேய் லூசு! என்னடா நினைச்சிட்டு இருக்கா? என்னை பாத்தா எப்படி தோணுது? ஏலேய் கிறுக்கா, அவனுவ ஆயிரம் சொல்லுவானுவ. உனக்கு எங்க போச்சி புத்தி. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சி” என்று கோபத்தில் தாறுமாறாக திட்ட ஆரம்பித்தாள்.

“தெரியும். அவர் இப்ப உயிரோட இல்லன்னும் தெரியும். அதனால அந்த கல்யாணம் அர்த்தம் இல்லாததா ஆகிடுச்சி. சோ நாம கல்யாணம் செய்துக்கலாம்.”

“பைத்தியம்! நான் அவரோட வாழ்ந்துட்டு இருக்கேன்டா.” என்றாள் எல்லார் முன்னிலையில்.

“பரவாயில்ல. என்னோடவும் சேர்ந்து வாழு.” பட்டென்று பதில் சொன்னான் ஈஸ்வர்.

“லூசாலே நீ. என்னை கல்யாணம் செய்தா உன்னை கொன்னுட்டு, நானும் எதாவது பண்ணிக்குவேன்டா” என்றாள் மிரட்டலாக.

“அவ்வளவு தான, கல்யாணம் செய்ததும் அந்த சந்தோசத்தோட சேர்ந்தே செத்துப் போகலாம். நீ என்னை கொல்ல ஈசியான வழியை நான் சொல்லித் தரேன்” என்றான் பதிலுக்கு.

“உன்னிடம் பேசுறதுக்கு நான் சும்மா இருக்கலாம்” என்றவள் அவள் தாத்தாவிடம் திரும்பி, “இந்த பஞ்சாயத்துக்கு கட்டுப்படலன்னா என்ன செய்வீக?” எனக் கேட்டாள்.

“மொட்டை அடிச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல உக்காந்து ஊரையே சுத்தி வரணும். அதோட பத்து வருஷம் இந்த ஊரை விட்டு விலக்கி வைப்போம்” என்றார் அவர்.

“நாட்டாம ஊரை விட்டு விலக்குறது சட்டப்படி தப்பு. எந்த காலத்துல இருக்கீங்க. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க” என்று இடையிட்டான் ஈஸ்வர்.

“எங்க ஊர் வழக்கம் இதான் தம்பி. ஒண்ணு கல்யாணம் செய்துக்கணும். இல்லையா தண்டனை அனுபவிக்கனும்” என்றார் இரத்தினசாமி.

“நான் அந்த தண்டனையை ஏத்துக்கறேன்” என்றாள் செல்வ சுந்தரி.

“ஆனா, நான் ஏத்துக்க முடியாது” என்று நின்றான் சுந்தரேஸ்வரன்.

“சபையில் வச்சி எப்ப உன்னோட பெயர், என்னோட சேர்ந்ததோ, அப்பவே நீ இந்த சுந்தரனின் சுந்தரி. கல்யாணம் பேசின பெண்ணை கழுதை மேல ஏத்த நான் தயாரா இல்ல. நாட்டாம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க. இல்லன்னா நாங்க கோயில்ல போயி முடிச்சிக்கிறோம்” என்றான் முடிவாக.

“ஏன்டா என் உயிரை வாங்குறா?” என்று கடுப்பானாள் செல்வ சுந்தரி.

“இதை, நீ எனது உயிர்! நான் உனது உயிர்! நமக்கொரு உயிர் வேணும்னா, என்னைத் தேடி வா மாமானு என் கனவுல வந்து வசனம் பேசும் முன்ன யோசிச்சிருக்கனும். இப்ப எல்லாம் என்ட்கு இடம் மாறிடுச்சி. இன்னும் இதை ஜவ்வா இழுத்துட்டுப் போகனுமா சொல்லு?” என்று வருவதை ஒரு கை பார்த்துவிடும் எண்ணத்தில் சொன்னான்.

“கடவுளே! முடிவா என்ன தான் சொல்லுற?”

“வா கல்யாணம் செய்து வாழ்ந்து பார்க்கலாம்” என்றான் நிதானமாக.

“என்னை கல்யாணம் செய்தா, நீ வாழவே முடியாதுடா” என எச்சரித்தாள்.

“அதை நான் பார்த்துக்கறேன். இன்னும் ஒரு வருசத்துல என் மருமகன்களுக்கு முறைப்பெண் பெத்துக் குடுக்கிறதா ரஞ்சிமாவிடம் சொல்லி வச்சிருக்கேன். அதை நிறைவேற்றாம நான் ஓய மாட்டேன்” என்று இவனும் எதிர்வாதம் புரிந்தான்.

அவனை எதுவும் செய்ய முடியா கையறு நிலையில், “நீயாவது ஏதாவது சொல்லேன் அமமா” என்றாள் தாயிடம்.

“என் பொண்ணுக்கு நல்லது நடந்தா, சந்தோசப்படுற முதல் ஆள் நானாதான் இருப்பேன். உன்மேல் களங்கம் வந்தது மனசுக்கு கஷ்டமா இருந்தாலும், அதன் மூலமா உனக்கு ஒரு வாழ்க்கை அமையுறது எனக்கு திருப்தி தான்” என்றார் மனதார.

“என் களங்கம் உனக்கு சந்தோசமா?” என்று தாயைக் கண்டு பல்லைக் கடித்தாள்.

“அந்த தம்பி எந்த இடத்திலும் நீ தப்புன்னு சொல்லலையே மக்களே. உனக்கு எதுவும் தெரியாதுனு தான் இவ்வளவு நேரமும் சொல்லுறார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க நினைச்சிருந்தா, நீ தான் கூப்பிட்டதா சொல்லி உன்மேல் அவர் பழி போட்டு இருக்கலாமே. ஏன் செய்யலை? கட்டிக்கப் போறவளை விட்டுக்கொடுக்காத அந்த குணம் போதும். திருமண வாழ்க்கை சிறக்க. இதுக்கு மேல பொண்ண பெத்த தாய்க்கு என்ன வேண்டும். நீ கல்யாணம் செய்துக்கோ செல்விமா. உன் கல்யாணம் என் ரொம்ப காலக் கனவு. அந்தக் கனவு நனவாகுற நிமிடம், சொல்லில் அடங்காத ஆனந்தம். அதோட அந்தக் குரல் என் தம்பியை கொண்டு இருக்கு. இது போதுமே” என்றார் கனகா.

“இல்ல என்னால முடியாது. முடியவே முடியாது” என்று மறுத்தாள்.

“ஐயா இது எங்க அண்ணனுக்காக செய்த தாலி. தாலி மட்டும் தான் இருக்கு. இதில் மஞ்சள் கயிறு கோர்த்தா சந்தோசபடுவேன்” என்று கையில் இருந்த தாலியை பஞ்சாயத்தில் நீட்டினாள் ரஞ்சிதா.

“அதெப்படி முன்னகூட்டியே சரியா தாலி வாங்கி வச்சிருக்கீங்க? நடக்கிற எல்லாம் திட்டமிட்டு நடக்குதா?” என்று கனகவேல் மனைவி கேட்க, மற்றவர்களுக்கும் சிறிது சந்தேகம் எட்டிப் பார்த்தது.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top