• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 27

Member
Joined
Dec 1, 2024
Messages
31
சுந்தரி - 27


“என்னாச்சி சார்? சீக்கிட்டீங்களா?” எனக் கேட்டான் ஹரிஹரன்.

“ம்ம்ம் டா” என்றான் அப்பாவியாய்.

“அடப்பாவி வேலை செய்திட்டு அப்பாவி லுக் விடுறதிலயே, எனக்கென்னவோ தானா சிக்கின மாதிரி தெரியலை. ப்ளான் பண்ணி சிக்கின மாதிரி இருக்கே” என்றான் யோசனையாக.

“நீ வக்கீல்னு நிரூபிக்கிறடா” என்று புன்னகைத்தான் ஈஸ்வர்..

“சர்தான் சாரே. இதைக் கூட கெஸ் பண்ணலன்னா நான் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்?”

“நாளைக்கு மாட்டுப் பொங்கல் அதுவுமா நம்ம வீட்டுப் பஞ்சாயத்து தான், எல்லார் வாயிலும் மாடு சுவைக்கிற பொங்கலா அரைபடப் போகுது. வருடம் ஒருமுறை நடக்கிற விளையாட்டுப் போட்டி இருக்குமா, கேன்சல் பன்னிருவானுவலா தெரியலையே” என்று கவலையாகச் சொன்னாள் ரஞ்சிதா.

“அதுக்கு முன்ன நம்ம நிலையை பாருடி. உன் அண்ணன் தப்பு செய்ததா நியூஸ் சுத்துது. பஞ்சாயத்துல கேட்கிற முதல் கேள்வியே நம்மளை நோக்கி தான். அதை எப்படி சமாளிக்கிறது யோசிப்பியா? போட்டி நடக்குமா, பொங்கல் கிடைக்குமானு கேக்குறா பாரு கேள்வி” என்று மனைவியைக் கடிந்தான்.

“அதெல்லாம் அண்ணன் பாத்துப்பார். நீங்க ஏன் பயப்படுறிய. கூல்” என்றாள் அவள் சாதாரணமாய்.

பதில் சொல்ல வந்த சுகுமாரை நிறுத்தி, “அதான் தங்கச்சி தெளிவா சொல்லியாச்சே. இன்னும் என்ன பயம்? பார்த்துக்கலாம் விடுங்க மாப்பிள்ளை” என்றான் ஈஸ்வர்.

“என்னது மாப்பிள்ளையா?” என அரண்டவன், “எ..என்ன சார் திடீர்னு?” என்றான் திணறலாய்.

“தங்கச்சி புருஷன் மாப்பிள்ளை தானே. மச்சான் துணை இருந்தா கயிறு கட்டி மலையையும் இழுக்கலாம். தெரிஞ்சிக்கோங்க மாப்பிள்ள” என்றான் ஈஸ்வர்.

அவன் குறும்பு புரிந்து மற்றவர்கள் சிரிக்க, “எப்பவும் பக் பக்னு பீதியில வச்சிருக்க முடிவு பண்ணிட்டீங்க மட்டும் புரியுது. நீங்க நடத்துங்க” என்றான் சுகுமார்.

இங்கோ தன் அத்தையின் அலும்பு தாங்காது படுக்கையறையை அளந்து கொண்டிருந்தாள் செல்வ சுந்தரி.

“உள்ள போயி ஒழிஞ்சிட்டா நடந்ததை இல்லை சொல்ல முடியுமா. எவ்வளவு இது இருந்தா ஊர் பார்க்க யாரோ ஒருத்தனோட குடும்பம் நடத்துவ. அவ்வளவு திண்ணக்கம் ஆகிடுச்சில்ல” என்க,

சட்டென கதவு திறந்து வெளியே வந்தவள், “என்ன சொன்னிய அத்தை? ஊர் பார்க்க குடும்பம் நடத்துனேனா. என்ன ரோட்டுல அவுத்துப்போட்டு ரெண்டு பேரும் கிடந்ததை நேருல பாத்தியளா? வார்த்தை அளவு மீறிச்சி அப்புறம் நடக்குறதே வேற. நான் ஒன்னும் யாரோ ஒருத்தனோட குடும்பம் நடத்தலை. என் மாமனுக்கு மட்டும் தான் இந்த வீட்டிலும், இந்த மனசிலும் இடம்” என்று தன் நெஞ்சில் அடித்துச் சொன்னவள், “யாரோ வீட்டுக்குள்ள வந்தா திருடன்னு பிடிச்சி தண்டனை குடுக்குறத விட்டுட்டு, என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க? கனகு மாமாவுக்கு நீங்க பேசினது தெரிஞ்சிருக்கனும் அப்ப தெரியும்” என்றாள் அவரை முறைத்தபடி.

“செல்விமா நான் கேள்விப்பட்டது பொய் தான?” என்று வந்தார் கனகா.

‘அடுத்த ஆளா’ என நினைத்தாலும் தாய் மனத் தவிப்பு புரிய, “நல்லவேளை பொய்யான்னு கேட்டீங்க. இவங்கள மாதிரி...”

“நானும் அதை தான் கேட்டுட்டு இருந்தேன் மயினி. நம்ம புள்ள மேல பழி விழுந்திருக்கே. எப்படி அத தொடைக்கிறதுனு மனசு படபடன்னு அடிச்சிக்கிது” என்று பல்டி அடித்தார் அவளின் அத்தை.

தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில் மதனின் சித்தி. அவனுக்கு செல்வ சுந்தரியை பெண் கேட்கச் சொன்னது இவர் தான். அவனின் குணம் சில கனகவேலுக்கு பிடிக்காததால், தன் வீட்டிற்குள் விடமாட்டார். மனைவியின் எண்ணம் உணர்ந்து அக்காவிடம் மறுக்க சொல்லிவிட்டார். அதை அவர் பெண்ணே செய்யவும் மருமகளின் மீது இவருக்கு கோபம். அதை இந்நேரம் காட்டி தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்.

அத்தையை முறைத்த செல்வ சுந்தரி, “பச்சோந்தி” என்றாள் சத்தமம் இல்லாது.

தம்பி மனைவியை தெரியாதவரா என்ன. “நீ தொடைச்சது போதும். வீட்டுக்கு போ” என்றார் கனகா.

“ம்க்கும்...” என்று தாடையை தோள்பட்டையில் இடித்துச் சென்றார் அவர்.

அடுத்து கனகாவின் அம்மாவும் வந்து சேர, “முன்ன மாதிரி ஆரம்பிக்காதீக. அப்புறம் நான் இந்த ஊரை விட்டே போக வேண்டி இருக்கும்” என்றாள் எச்சரிக்கை செய்தாள்.

“நாங்க வாயே திறக்கலை ஆத்தா. உனக்கு தொணையா இருக்க வந்தோம். அப்படியே ஓரமா இருக்கோம்.” என்றார்.

“நீங்க விட்டாலும் உங்க ரெண்டு பேரோட புருசங்களும் விடணுமே. சும்மாவே ஆடுவாக. இப்ப என்னன்ன ஆட போறாங்களோ” என்று பெருமூச்சி விட்டாள்.

“ராத்திரி ஆனா பின்னாடி கதவை பூட்டி வைக்கிறது இல்லையா? இப்படியா அசட்டுத்தனமா இருப்ப. இப்ப எவன் எவனோடவோ உன்னை சேர்த்து வச்சி பேசுறானுக. வயசுப் பொண்ணு தனியா இருந்தா கண்ட கழிசடை வரும்னு தான் கூடவே இருக்கச் சொன்னது. உன் அப்பனையும், தாத்தனையும் பாத்து இங்க வந்து உக்காந்துட்ட” என்றார் கனகா மூக்கை உறிஞ்சியபடி.

“ப்ச்.. அம்மாவும் பொண்ணும் அழுகையை கொஞ்சம் நிறுத்துறீங்களா? நானே காலையில் பஞ்சாயத்து என்ற பெயர்ல உங்க ரெண்டு பேரோட புருசங்களும் என்ன கூத்தடிக்கப் போறாங்களோன்னு இருக்கேன். இதுல அந்த லூசுப்பய வேற என்னன்னவோ உளறிட்டு போறான். தலை வலிக்குது” என்றாள் செல்வ சுந்தரி.

‘யார் அந்த லூசுப்பய? தம்பி சொன்னவனோ?’ தாய் மகள் இருவர் பார்வையும் சத்தம் இல்லாது சுந்தரியை அளவிட்டது.

“எம்மா எனக்கு என்னமோ நம்ம புள்ளைக்கு நல்ல நேரம் வந்திருச்சி நெனைக்கேன். நீங்க என்ன நினைக்கிய?” கனகா தாயிடம் இரகசியமாகக் கேட்க,

“நானும் அப்படித்தாம்ல நானும் நெனைக்கேன்” என்றார் அவரும்.

மறுநாள் காலை மாட்டுப்பொங்கல் முடிந்து, பத்து மணியளவில் பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது.

செல்வ சுந்தரியின் அருகில் அவளின் தாயும், பாட்டியும் நின்று இருந்தாலும், சற்று இடைவெளி விட்டே நின்று இருந்தனர். கனகவேல் மற்றும் பால்ராஜ் குடும்பம் மட்டும் அவள் அருகில் நின்றிருந்தனர்.

சற்று நேரத்தில் வந்த சுந்தரேஸ்வரனோ ஒரு கூட்டத்தின் தலைவன் தோரணையில் குதூகலமாக புன்னகையுடன் வந்து நின்றான். என்ன ஒன்று அவனின் சிரிப்பு வெளியில் தெரியாது. எப்பவும் போல் முகமூடிக்காரனாக வந்து நின்றான். அவன் பின்னே சுகுமார் குடும்பம் நிற்க, அதைத் தாண்டி அவனின் இளைஞர் பட்டாளம் மற்றவர்கள் அறியாது ஆதரவாக நின்றது.

“என்ன தம்பி கொரானா போயி வருஷம் ஆகுது. இன்னும் மாஸ்கோட அலையுறிய. முகத்தை இப்படி மறைச்சிகிட்டா எப்படி?” என்றார் ஒருவர்.

“திரும்பவும் கொரானா வருது பிரதர். உங்களுக்கு இல்லாம இருக்கலாம். ஒருவேளை எனக்கு இருந்து உங்களுக்கு பரவிட்டா. அது பாவம் இல்லீங்களா. அதான் இந்த கெட்டப்” என்று அசராது பதிலளித்தான்.

“அந்த கண்ணாடியையாவது கழட்டுறது. அப்புறம் உங்களை அடையாளம் தெரிஞ்சிக்கிறது எப்படி?” என்றார் திரும்பவும்.

“அதனால் என்ன இதோ என்று கண்ணாடியைக் கழட்டி சட்டைப் பையில் தொங்கவிட்டு, இப்ப ஓகேவா” என்றான்.

செல்வ சுந்தரியுமே யாருமறியாது அவன் கண் காண, நீல நிறக் கண்கள் அவனை வித்தியாசமாகக் காட்டியது. அத்துடன் அந்த வேட்டி சட்டையும் மாறாது இருந்தது அவனிடம். குழப்பம் கூடியதே தவிர குறையவில்லை அவளிடம். அவன் கண் சிமிட்டலில் முறைத்துத் தள்ளினாள் பெண். அவனின் சிரிப்பு அவன் கண்களில் தெரிய, “போடா” என்ற வார்த்தை அவளறியாது அவள் இதழில்.

அவன் கண் கண்ட பால்ராஜ் மட்டும் சற்று யோசித்தார்.

“என்ன மாப்பிள்ளை சார் உங்க பஞ்சாயத்து பன்னியை இன்னும் காணோம். லேட்டா வந்தால் தான் மதிப்புனு நேர விரயம் செய்யுதோ” என்றதும் ரஞ்சிதா, ஹரிஹரனுடன் இளைஞர் அணியும் சட்டென சிரித்துவிட்டனர்.

“சார் அமைதியா இருங்க. நீங்க பார்க்கணும் நினைச்சதும் அவரை தான். வயசானவர்ல அதனால நேரம் ஆகலாம்” என்று சுகுமார் பயந்து சுற்றிப் பார்த்தான்.

“இவர் அப்படிதான் அண்ணே. ஊருக்குள்ள கெட்ட பெயர் எடுத்துட கூடாதுனு பாத்துப் பாத்து பேசுவார்” என்று கணவன் கால்வாரினாள் ரஞ்சிதா.

“இரு ரஞ்சிமா. இன்னும் இவரை அலற விடலாம்” என்றவன், “ஏனுங்க பஞ்சாயத்துக்காரவுகளே உங்க தலை வரலன்னா விடுங்க. நாம போலீஸ் போகலாம். ஊருக்கு ஊர் போலீஸ் ஸ்டேசனை வச்சிருக்கிற காலத்தில், பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க. போலீஸ் போயிருந்தா இந்நேரம் நியாயம் கிடைச்சிருக்கும். இங்க இருந்து ஒரு ஓல்ட் மேனுக்காக காத்திருக்க வேண்டிருக்கு” என்று நக்கலாகச் சொன்னான் ஈஸ்வர்.

“யேய் என்னப்பா நீ. ரஞ்சிதா இந்த ஊருக்கு வாழ வந்த புள்ள. அந்தப் புள்ளயோட தம்பி என்ற காரணத்துக்காக எல்லாரும் அமைதியா நிக்குறோம். உங்கள் கேலி கிண்டலை எல்லாம் உங்களோட வச்சிட்டு அமைதியா நில்லுங்க” என்றார் ஒரு பெரியவர்.

“இல்லன்னா என்ன செய்வீக அங்கிள்? தலைய சீவிருவீகளாக்கும். நீங்க சீவுவத நானும்தேன் பாக்குதேன்” என்றான் அவர்களின் வட்டார பாசையில்.

“தம்பி கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க விளையாட்டுக்கு பேசுறியனு எனக்கு தெரியுது. மத்தவுகளுக்கு தெரியாது. விளையாட்ட வினையமா எடுத்து ஏதாவது பண்ணிட்டா, என்ன செய்யுறது. இதுபோல இந்த சுத்து வட்டாரத்துல நடந்தும் இருக்கு” என்றார் பால்ராஜ்.

“அதாவது போலீஸ் போச்சா? இல்ல இங்கயே பஞ்சாயத்து பேசி மூடி மறைச்சிட்டீங்களா?” என்றவன் குரலில் ஒரு கடினத்தன்மை.

“கொலை கேஸ்லாம் போலீஸ் தான் தம்பி பாத்துக்கும்” என்றார் அவர்.

“ஓ... சரி. ஹோய் சித்துமா என்ன நீ மாமனை பார்த்தும் பக்கத்துல வராம நிற்குற? உன் அக்காவ யாரும் தூக்கிட்டுப் போக மாட்டாங்க. நீ இங்க மாமாவுக்குத் துணையா நில்லு” என்று கூட்டத்தின் நடுவே சித்ராவை உரிமையாக அழைத்தான்.

‘ஆண்டவா! இந்த மாமாவுக்கு ரொம்ப தைரியம் தான்’ என்று பக்கென அதிர்ந்து, “அ...அது மாமா... அப்பா...” என்று தகப்பனைப் பார்த்தாள்.

“அங்கிள் ஒன்னும் சொல்லமாட்டார். நீ வா. அது யாரு உன் அண்ணன் சரவணனா? டேய் மருமகனே நீயும் இங்க வா. பாரு என்னை சுத்தி இளைஞர் படை இருக்கு. நீ மட்டும் ஏன் மிஸ் ஆகணும். கம் மை பாய்” என்று அட்டகாசம் செய்தான் ஈஸ்வர்.

பால்ராஜ் தன்னைப் பார்த்து நின்ற மகளைக் கண்டு போகச் சொல்லி கண்ணசைத்தார்.

“அப்பா அக்கா?” எனத் தயங்கி நிற்க,

“பரவாயில்ல நான் பாத்துக்கறேன்” என்றார் பால்ராஜ்.

“அண்ணா நீயும் வா” என்று சரவணனின் கை பிடித்து இழுத்துச் சென்றாள் சித்ரா.

அவர்களை வித்தியாசமாக பார்த்திருந்தாள் செல்வ சுந்தரி. ‘ரஞ்சிதா அக்கா அண்ணன் இவங்களுக்கு மாமாவா? எப்படி? இவன் எல்லாரையும் என்ன செய்யுறான். எதுக்கும் நாம ஸ்ட்ராங்கா இருக்கனும்’ என்றெண்ணிக் கொண்டாள்.

அந்நேரம் இரத்தினசாமி வர இடமே கப்சிப்பானது.

அவரைக் கண்டு ஒரு நொடி அதிரத்தான் செய்தான் சுந்தரேஸ்வரன்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top