New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 29
- Thread Author
- #1
சுந்தரி - 25
“ஏலேய் யார்லே அங்கன நிக்கிறது? அங்கன என்னலே பண்ணுறா” என்று ஒருவர் குரல் கொடுத்தார்.
“சஞ்சய் யாரோ வராங்க. நான் அவளிடம் பேசிட்டு வந்து சொல்லுறேன். இப்ப இந்த சுவர் ஏறிக் குதிக்கனும். மறந்தும் யாரிடமும் சொல்லிடாதடா. ஏதாவது பிரச்சனைனா என்ன வந்து காப்பாத்திரு.” என்றான் மெல்லிய குரலில்.
“நீ சிக்கப்போறது பத்தாதுன்னு என்னை சிக்கி வைக்க பாக்குறியா. முடியாது போ மச்சான். நான் வீட்டுக்கு போக போறேன். குட் பய்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
“டேய் நீ சஞ்சய் தானே. இங்க என்ன பண்றா? ஆமா. யாருகிட்ட பேசிட்டு இருந்த? செல்வி அக்கா பெயர் அடிபடுது.” என்று கேட்டவன் எதோ நினைவு வந்தவனாய், “டேய்! இன்னைக்கு காலையில செல்வி அக்கா வீட்டில் அடிச்சதுக்கு, எதுவும் பழி வாங்கறதுக்கு முடிவு பண்ணிட்டியா? எதுவா இருந்தாலும் சொல்லிடு. பழி வாங்குறேன்னு சும்மா நீ ஏதாவது பண்ணிட்டு, அதைத் தொடர்ந்து ஊருக்குள்ள சண்டை வரவச்சிடாத. ஏற்கனவே ரெண்டு தெருவும் தனித்தனியா பிரிஞ்சு போய் கிடக்குது. இதுல மூணாவதா நீயும் சேர்ந்துடாதே” என்று அதட்டினான் கணேஷ் மூர்த்தி.
“யேய்! என்ன சொல்லிட்டு இருக்க? நான் செல்வி அக்கா பத்தி பேசவே இல்ல. நீ பாட்டுக்கு ஏதாவது வந்து உளறாதே. பொழுது போறதுக்காக எங்க மச்சானிடம் பேசிட்டு இருந்தேன். அவர் எங்கேயோ வெளியூர் போறதா சொல்லிட்டு போறாரு.”
“என்னிடம் பொய் சொல்லாத சஞ்சய். நீ பேசினது எல்லாம் கேட்டேன். உன் மச்சான்னா அந்த மதனா? கொஞ்ச நாளா அவரோட உன்னை பாக்குறேன். எதுனாலும் சொல்லிருடா. எதோ கல்யாணம் அது இதுன்னு பேசிட்டிருந்த. அவர் இப்ப செல்வி அக்கா வீட்டுக்குப் போயிருக்காரா? என்ன பிளான்டா உங்களோடது. அந்த அக்காவை அசிங்கப்படுத்த இவ்வளவு கேவலமாவா நடந்துப்ப. அவங்க நம்ம சொந்தமடா. அதை யோசிக்கலை இல்ல.“ என்றான் கோபத்துடன்.
“யேய் அப்படில்லாம் இல்லடா. நாங்க எதோ சும்மா....”
“இப்ப நீ சொல்லல. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. தெரிஞ்ச போலீஸ் அண்ணா ஒருத்தர் இருக்காரு. அவரிடம் நேர கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன். அவர் மாவட்ட அளவில் உள்ள ஹயர் ஆபிசர். அவரை வச்சு உன்னை டீல் பண்ணிடுவேன். ஒழுங்கா என்ன நடந்தது சொல்லு?” என்று மிரட்டினான்.
அவன் மிரட்டலுக்கு உள்ளூர எழுந்த பயத்தை மறைத்து, “நீ சொல்லுற மாதிரி எல்லாம் ஒன்னும் கிடையாது. சு...சும்மா தான்...”
“என்ன தடுமாறுற? போலீஸ் போறேன்னு பொய் சொல்லுறேன் நினைசிட்டியா. நீ சொல்லுற அந்த சும்மாதான்ல உள்ள உண்மை மட்டும் சொல்லு. இப்ப என்ன ஏதுன்னு சொல்லல. அவருக்கு கால் பண்ணி இங்க வர வச்சுடுவேன். தேவையில்லாம பொய் சொல்லி சிக்கி சீரழியாத. என்ன பிரச்சனை? யார் எங்க போறாங்க? செல்வி அக்காவ என்ன செய்யுறதா இருக்கீங்க?” என்று அதட்டலாகவே கேட்டான் கணேஷ்.
“அ...அது எங்க மதன் மச்சான், நான் எவ்வளவு சொல்லியும் கேக்காம, செல்வி அக்காவை பார்த்துப் பேசிட்டு வரேன்னு அங்கன அவிய வீட்டு முன்ன நிக்குறார். நானும் அவரை தடுத்து பார்த்தேன். கேக்குற நிலையில் அவர் இல்லை போல. எச்சரித்தும் பார்த்துட்டேன். பிரயோஜனம் இல்ல.”
“இந்த நேரத்துல போயி பேச என்ன இருக்கு? அதுவும் தனியா இருக்கிற பெண்ணிடம்.”
“அவரு பேச போறேன்னு தான் சொன்னாரு. மத்தபடி தப்பா ஏதும்...”
“ஏய் ச்சீய் வாய மூடுடா. தனியா இருக்கிற பொண்ணு வீட்டுக்கு மிட்நைட்ல ஒருத்தன் போறான்னா, அவன் நல்ல எண்ணத்தோடவா போவான். ஏன் உன்னோட தங்கச்சிக்கும் அவன் மச்சான் தான. அவ தனியா இருக்கிறப்ப, உன் வீட்டுக்கு அந்த மதனை அனுப்புவியா என்ன? சொல்லுடா? உள்ளூர்ல இருந்துட்டு அவங்களுக்கு எதிரா ஆள் அனுப்பிருக்க. போடா மூளை செத்தவனே. உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்” என்று திட்டியபடி வேகமாக சுகுமாரின் வீடு நோக்கி நடந்தான்.
“அண்ணே அண்ணே” என்று கதவை வேகமாகத் தட்ட,
“யார்ரா இந்த நேரத்துல?” என்று சுகுமார் நேரத்தைக் கவனிக்க அது இரவு பதினொன்றைக் காட்டியது. “இந்நேரத்துல யார் வந்து டிஸ்டர்ப் பண்றது” என புலம்பியபடி தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த சுகுமார், தன் முன் நின்றவனை கண்டு, “என்னடா இந்த நேரத்துல வந்திருக்க. வீட்டுல யாருக்காவது எதாவதா?” என்று விசாரித்தான்.
“அண்ணே சார் பாக்கணும். அவரைக் கொஞ்சம் வெளிய வர சொல்லுறீயளா?”
“சாரா? யாரைலே சொல்லுறா? இங்க ரெண்டு பேர் இருக்காங்க. எந்த சார், எதுக்கு வேணும் கேக்குற.”
“அண்ணே போலீஸ்கார் இருக்காருல. அவரை வரச்சொல்லுங்க. ஒரு பிரச்சனை அண்ணே.” என்றான் தவிப்புடன்.
“அவர் போலீஸ்காரர்னு உனக்கு எப்படித் தெரியும்?”
“அச்சோ அதெல்லாம் பேசுறக்கு இப்ப நேரம் இல்லண்ணே. முதல்ல அவர் அனுப்பி விடுங்க” என்றான் பிடிவாதமாக.
“எதுக்குடா இந்த அவசரம்?”
“அவர் வந்தால் தான் சில பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்” என்றான் அவன்.
அதே சமயம் சத்தம் கேட்டு உள்ளிருந்து எழுந்து வந்தனர் ஈஸ்வரும், ஹரிஹரனும்.
“என்ன கணேஷ், இந்த நேரத்துல இங்கே என்ன பண்ணுற? இப்படி எல்லாம் வந்து நிக்க மாட்டியே. என்ன விஷயம்பா? ஏதாவது உதவி வேணுமா?” எனக் கேட்டான்.
“சார் தெரிஞ்ச அக்கா ஒருத்தவங்களுக்கு ஆபத்து. நீங்க வந்தா நல்லா இருக்கும்” என்றான் கணேஷ் மூர்த்தி.
“ஆபத்தா? யாருக்கு என்னாச்சு? விவரமா சொல்லு” என்று கேட்டான் ஈஸ்வர்.
“சார் இன்னைக்குக் காலையில் இருந்து உங்களையும், செல்வி அக்காவையும் சேர்த்து வச்சு பேசிட்டு இருந்தாங்க. அந்த செல்வி அக்காவுக்கு தான் சார் ஆபத்து.”
“சுந்தரிக்கா? என்ன சொல்ற? தெளிவா சீக்கிரம் சொல்லு” என்று படபடத்தான்.
“காலையில நீங்க அவங்க வீட்ல இருக்கிறதா பொய் சொல்லி, அடி வாங்குனான் இல்ல சார் சஞ்சய். அவன் மச்சானிடம் என்ன சொன்னான் தெரியல. அவர் செல்வி அக்கா வீட்டுக்கு போறேன்னு சொல்லி, அவங்க வீட்டு பக்கத்துல இருந்து போன் பண்ணிருக்கார். இவன் வேண்டாம்னு தடுத்தும் அவர் கேக்கலை. ஏற்கனவே செல்வி அக்காவை பெண் கேட்டு அக்கா முடியாது சொல்லி இருக்காங்க. சொந்தக்காரன் தான் இருந்தாலும், இன்னைக்கு சஞ்சய் அடிபட்டதால பழிவாங்க போறாரா? இல்லை முதல்ல அவங்களை மறுத்த காரணத்துக்காகவா தெரியலை. ஆனா, அவங்களுக்கு ஆபத்து மட்டும் தெரியுது. சீக்கிரம் வாங்க சார்” என்றான்.
“நான் வேணும்னா போய் பாக்கவா சார்” என்று முன்னால் வந்தான் ஹரிஹரன்.
“இல்ல யாரும் வேணாம். நானே பாத்துக்கிறேன். அவளை வெளிய யாரும் தப்பா பேசக்கூடாது. அப்படிப் பேசுறதா இருந்தாலும், என்னோட மட்டும் தான் பேசனும்” என்று மறக்காமல் முகக் கவசம் எடுத்து வெளியே வந்தான்.
தன் பைக் மேல் ஏறி பின்பக்கம் எகிறிக் குறித்து உள்ளே வந்த மதன், கொல்லைப்புறக் கதவைத் தள்ளிப் பார்க்க, அது திறக்கவில்லை என்றதும், இன்னும் அழுத்தம் கொடுத்து திறக்க அது பளாரென திறந்தது. உள்ளே நுழைந்தவனுக்கு ஒரு வித பயம் மனதில் அனத்திக்கொண்டு இருந்தாலும், அதையும் மீறி அவளிடம் செல்லும் வேகம் எழுந்தது.
செல்வ சுந்தரியின் படுக்கை அறையை எட்டிப் பார்த்தவன் கண்களில் ஆசைத் தீ பற்றிக்கொள்ள, தொண்டைக்குள் எச்சில் முழுங்க அவளின் அழகைப் பருகி, எட்டி அவளை நோக்கி மெல்ல மெல்ல நடந்தான் மதன்.
அதே சமயம் சுகுமார் வீட்டில் இருந்து வேகமாக வெளியே வந்த ஈஸ்வர், முன்வாசல் கதவைத் தட்டினால் எங்கு ஆட்கள் யாரும் பார்த்து, அவளை தவறாக நினைப்பார்களோ என்று பின்பக்கம் வந்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில் மதன் நிறுத்தியிருந்த பைக் மேலே ஏறி உள்ளே குதித்து வீட்டுக்குள் நுழைந்தான். வேக வேகமாக உள்ளே நுழைந்தவனுக்கு, அங்கு பார்த்த காட்சி அவ்வளவு உவப்பானதாக இல்லை.
மதன் சுந்தரியை நெருங்கி கட்டிப் பிடிக்கும் நேரம், அவன் சட்டையைப் பிடித்துப் பின்னால் இழுத்து, “டேய் அவளை விட்டு விலகி நில்லு. தொட்ட தொலைச்சு கட்டிருவேன். எவ்வளவு தைரியம் இருந்தா, என் பொண்டாட்டி மேலே கை வைக்கப் பார்ப்ப” என்று அவனை அடித்து நொறுக்கினான் ஈஸ்வர்.
“யாருடா நீ? நீதான் அந்த ரஞ்சிதாவின் அண்ணனா? நீ மட்டும் தினமும் வந்து இவளோட இருந்துட்டு போவ. சொந்தகாரன் நான் வந்தா தடுக்குறியா. நீ தள்ளிப்போடா. எங்க ஊர்ல வந்து இருந்து என் மேலே கை வைப்பியா? உன்ன கொல்றேனா இல்லையா பாருடா” என்று ஈஸ்வர் மேல் மதன் பாய்ந்தான்.
“என்ன தைரியம் இருந்தா, என் பொண்டாட்டி மேல கை வைக்க வந்ததும் இல்லாம, என்னையும் அடிக்க வருவ. அவ்ளோ தைரியமா போச்சா உனக்கு. சொந்த ஊர்ல ஒரு பொண்ணால தனியா இருக்க முடியலன்னா, என்னடா பாதுகாப்பு கொடுக்குறீங்க. இப்படியே யாருக்கும் தெரியாம ஓடி போயிடு. இல்ல” என்று விரல் நீட்டி மிரட்டினான்.
அங்கு நடப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தவளோ, என்ன செய்வது என்று புரியாது நின்றிருந்தாள். அவளுக்கு இப்பொழுதும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒன்று தன்னைச் சுற்றி நடக்கிறது என்பதை காண முடிகிறது. ஆனால் எதுவும் கேட்க இயலவில்லை. அதற்கு ஈஸ்வர் இடம் கொடுக்கவில்லை என்றால் சரியாக இருக்கும்.
இரவு தன் மாமனை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு அவன் வரவில்லை என்றதும் படுக்க ஆயத்தமானாள். கிட்டத்தட்ட ஆழ்ந்த நித்திரைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, ஏதோ ஒரு அரவம் கேட்கத்தான் செய்தது. ஆனால் அதை கனவு என்று ஒதுக்கிவிட்டாள்.. தன்னையும் மீறி ஏதோ ஒரு சக்தி எழுப்ப, கண்விழித்து பார்த்தவள் முகம் அருகில் மதன் நின்றிருந்தான்.
அவள் கத்துவதற்கு தயாரான நேரம், மதன் பின்னால் வந்த ஈஸ்வர் அவனைப் பிடித்து இழுத்திருந்தான். அதோட ஏதேதோ பேசி அவனை அடிக்க வேறு செய்ய, அந்தக் குரல் அவளுக்கு தன் மாமனையும் ஞாபகப்படுத்தினாலும், அதையும் மீறி, அவனின் முகக் கவசமும், கண்ணாடியும் அவன் ரஞ்சிதாவின் அண்ணன் என்ற உண்மை முகத்தில் அடித்தது. ஆனால், தான் வாங்கி கொடுத்த வேட்டி சட்டையில் அவன் இருந்ததை கண்டவள் இன்னும் குழம்பிப் போனாள்.
நேற்று யோசிக்காத அனைத்தும் இப்பொழுது வரிசையாக அவள் நினைவில் வந்தது. ‘எது சரி? எது தப்பு? இவன் தன் மாமன் தானா? இல்லை வேறு யாருமா?’ என்ற குழப்பம் அவளை இன்னும் ஆழ் யோசனைக்குள் தள்ளியது. அதிலும் அவனின் ‘என் பொண்டாட்டி’ என்ற சொல் இன்னுமே அவளை உலுக்கி எடுத்தது.
அதே சமயம் திடீரென வாசற்கதவு தட்டப்படும் ஓசை கேட்க, அச்சத்தத்தை கேட்ட மூவரும் அதிர்ந்து அப்படியே நின்றனர்.
வருவார்கள்...