• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 24

New member
Joined
Dec 1, 2024
Messages
28
சுந்தரி - 24


காலை பத்து மணி அளவில், “மாமா எழுந்திருங்க. வெளிய வந்து பாருங்க” என்று ரஞ்சிதாவின் பிள்ளைகள் ஈஸ்வரை எழுப்பினார்கள்.

“டேய் பசங்களா அங்கன என்ன பண்ணுறிய? மாமா ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க சாப்பிட்டு விளையாடுங்க. பொங்கல் முடிஞ்ச பின்ன நினைச்சாலும் விளையாட அனுப்பமாட்டேன். படிப்பு மட்டும் தான் உங்களுக்கு” என்று எச்சரிக்கை விடுத்தாள்.

“ம்மா... மாமாக்கு ஒன்னு காண்பிக்கணும். அப்புறம் ஒரு தேங்க்ஸ் சொல்லணும்.” என்றார்கள் சிறுவர்கள்.

“என்ன சொல்லனும்?” என்று ஈஸ்வர் வர,

“வாங்க மாமா” என இழுத்துச் சென்று வாசலில் நின்றிருந்த ஐஸ் வண்டியைக் காண்பித்தனர்.

“ஓ... வந்தாச்சா? பசங்களா நீங்க கேட்ட ஐஸ். இவர் இன்னிக்கும் நாளைக்கும் இங்க தான் இருப்பார். உங்க பிரண்ட்ஸ் கேட்டாலும் கொடுங்க. பணம் மொத்தமும் மாமா குடுத்துட்டேன். நீங்க கேட்கிற எல்லாமே இருக்கும். இருக்குல்ல தம்பி” என்றான் ஐஸ் வியாபாரியிடம்.

பையன்களின் ஆசை என்று தெரிந்ததோ அன்றே விசாரித்து சொல்லி வைத்துவிட்டான். இன்று மருமகன்களின் சந்தோசத்தை பார்க்கையில் அத்தனை மகிழ்ச்சி இப்பொழுது.

“இருக்கு சார். வேணும்னா ஐஸ் ப்ளான்ட்ல இருந்து எடுத்துட்டு வரலாம்” என்றான் வியாபாரி.

“இல்ல இது போதும். அளவுக்கு அதிகமாவும் குடுக்காத. அப்புறம் ஹெல்த் ஸ்பாயில் ஆகும். ராம், ராஜ் நீங்களும் கிடைச்சதுனு நிறைய சாப்பிட கூடாது. அதிகமா சாப்பிட்டதா கேள்விப்பட்டா, மாமா நாளைக்கு ஐஸ் வண்டி வேண்டாம் சொல்லிடுவேன்.” என்று அவர்களை எச்சரிக்கவும் செய்தான்.

“இல்ல மாமா. நாங்க நிறைய கேக்க மாட்டோம். தேங்க்ஸ் மாமா” என்றனர்.

அவர்களின் தலையை வருடிவிட்டு. “மாமாவுக்கு தேங்க்ஸா. முதல்ல சாப்பிட போங்க. இல்ல ரஞ்சிமா என்னை கஞ்சி காச்சிருவா.” அவர்களை அனுப்பிவிட்டு, “தம்பி நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும். ரெண்டு நாள் நீங்க இங்க தான் இருக்கனும்.” என்று சொன்னான்.

“இதெல்லாம் எதுக்கு அண்ணே தேவையில்லாத செலவு என்று சொன்னா, என் மருமகனுகளுக்கு நான் செய்யக் கூடாதா கேப்பீங்க. உள்ள வந்து சாப்பிடுங்க” என்று காலை உணவை பரிமாறினாள் ரஞ்சிதா.

“சார் என்னை எதுக்கு வரவச்சீங்க?” என்றவன் செல்வ சுந்தரி வீட்டிற்கு ஏன் போனாய் என்று கேட்கவில்லை.

“உன்னை வரச்சொல்ல காரணம் வேணுமா? வேணும்னா சொல்லு” என்று முகபாவனை மாற்ற,

“வேண்டாம் தான். ஆனா, நீங்க காரணம் இல்லாம அழைக்க மாட்டீங்களே.” என்று தன் புரிதலைச் சொன்னான் ஹரிஹரன்.

“இதுவரை காரணம் இல்லடா. இனிமேல் வரலாம்” என்றான் ஈஸ்வர் யோசனையாக.

“எதுவும் பிரச்சனையா சார்?”

“ம்ம்ம்...” என கண்மூடி யோசனையுடன், “வர வாய்ப்பு இருக்குனு தோணுது. என்ன மாதிரி பிரச்சனை தெரியலை. என்ன நடந்தாலும் சுந்தரி என்னோட மனைவியா வரணும்” என்றான் தீவிரமாக.

“நேரடியா பொண்ணு கேட்டுடலாமே சார்.”

“அதுக்கு சுந்தரி சம்மதிக்கனும். அவளை சம்மதிக்க வைக்குறது பாறையில் முட்டிக்கிறதுக்கு சமம். முக்கியமா என்னோட அம்மா, அப்பா சம்மதிக்கனும். அவங்க பிரச்சனை இல்லை தான். இருந்தாலும் எதோ ஒரு நெருடல் வந்துட்டே இருக்கு. என்ன நடக்குது பார்க்கலாம்” என்றான் அவன்.

“என்ன அண்ணே வேஷ்டி சட்டை புதுசா இருக்கு. உங்க சூரியனுக்கு சட்டை அளவு எப்படி தெரியுமாம்?” என்றாள் ரஞ்சிதா கேலியாய்.

“இதுக்கே இப்படி சொல்லுற” என்று தன்னுடைய அளவு சொல்லி, அதாவது ரஞ்சிதா அண்ணனின் அளவு சொல்லி எடுத்ததாகச் சொன்னவன், “இதை விட ஹைலைட் ஒன்னு இருக்கு” என்று நிறுத்தினான்.

“விட்டா கட்டி விட்டதே அந்த அக்கானு சொல்லுவீங்க போல சார்” என்றான் ஹரிஹரன் விளையாட்டாய்.

“அதுதான்டா நிஜம். நான் வேட்டி கட்டி நீ பார்த்திருக்கியா? இது அவளே கட்டிவிட்டது. அதான் இன்னைக்கு முழுக்க அழுக்குபடாமல், கழட்டாமல் போட்டுப்பேன்.” என்று சிரித்தான்.

“நிஜமாவா” என அனைவரும் வாய் பிளக்க,

கண்சிமிட்டி “நிஜம்” என்றான் சுந்தரேஸ்வரன்.

அன்று முழுக்க காஸிப் செல்வ சுந்தரியும், ஈஸ்வரும் மட்டுமே. கிராமம் என்பதால் பலர் அவளுக்கு ஆதரவாக பேசினாலும், சிலர் அவள் திருமணம் ஆகாதவள் என்பதால் வந்த ஆசை என்று சொல்லி எதிராகப் பேசினர்.

மாலை கோயிலில் இதே பேச்சு தான் பெண்களுக்கு இடையில். தாயாய் கனகா மனம் பதறி, ஊர் வாயை மூட, தாயை அழைத்துக் கொண்டு மகள் இருக்கும் வீட்டுக்கு சென்றவர், அவளைத் தன்னுடன் வர எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்துவிட்டார்.

அவளோ, “ஊர் பேசுறதுக்காக நான் எதுவும் பண்ண முடியாது. நீங்க இங்க இருந்து போங்க” என்று விரட்டப் பார்த்தாள்.

என்ன சொல்லியும் யார் வார்த்தைக்கும் மதிப்பளிக்கவில்லை. அதே சமயம் கனகா ஒன்றைக் கவனித்தார். அதை அவளிடமும் கேட்க, “இது மாமா ட்ரெஸ். நான் வாங்கிக் கொடுத்த பொங்கல் ட்ரெஸ் போட்டுட்டு, அவர் போட்டிருந்த டிரஸ்ஸ விட்டுட்டு போயிருக்கார்” என்றாள் சாதாரணமாக.

“செல்விமா உனக்குப் புரியுதா. உன் மாமன் உயிரோட இல்லை. அப்புறம் எப்படி இங்க வருவான். அதுவும் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் போட்டுட்டு போயிருக்கான் சொல்லுற. எனக்கு பயமா இருக்கு மக்களே. ஏதாவது சிக்கல்ல மாட்டிட்டியா? அந்த ரஞ்சிதா பொண்ணோட அண்ணனை உனக்குப் பிடிச்சிருக்கா? பிடிச்சிருந்தா நாங்களே பேசி முடிச்சிடுதோம். இப்படி கெட்ட பெயர் வாங்கி உன்னோட தரத்தைக் குறைச்சிக்காத. இப்ப என்னோட வீட்டுக்கு வா மக்களே” என்றார் கனகா.

“சும்மா எதாவது பேசாதிய. மாமா இங்க என்னோட தான் இருக்கார். என்னவோ இன்னைக்கு தான் தெரியும் மாதிரி பேசுறீங்க. வீட்டைப் பாத்து போறீங்களா” என்றாள் எரிச்சலாக.

பேத்திக்கு நிஜம் உணர்த்த நினைத்தாலும் அவள் தன்னை எடுத்தெறிந்து பேசுவாள் என்பதால், மகளை பேச விட்டு அமைதியாக இருந்தார் ஹேமாவதி.

“புரியாம பேசாத மக்களே. வதந்தி பெருந் தொற்றுநோய் மாதிரி. நம்மள பாத்தாலே மரியாதை குடுத்தவலாம், இப்ப நாக்குல பல்லைபோட்டு பேசுறா. நம்ம குடும்பத்துக்கு தேவையா இதெல்லாம். அம்மாவோட வந்திடு மக்களே. இந்த வதந்தி எல்லாம் இல்லாமல் போயிறும்” என்று கெஞ்சவே செய்தார்.

“எனக்கு யாரும் வேண்டாம்னு தனியா இருக்கேன். யாரோ சொல்லுற புரளிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இங்க இருந்து போங்க” என்றாள் கோபமாக.

அன்று எதிர் கிரகங்கள் யாவும் அவளிடம் ஆட்சி புரிந்திருக்கும் போல. தாய் அழைத்தவுடன் சென்றிருக்கலாம். செல்லாமல் விட்டதும் ஒருவகையில் நல்லது தான். அவளுக்கு அல்ல?

“என்னக்கா இங்கன நிக்கா? உன் புருசங்காரன் பாத்தா உன்னையும் அடிச்சி துரத்திடுவார்” என்று வந்தார் கனகவேல்.

“இவளை ஊர்ல உள்ள எல்லாரும் தப்பா பேசுறாங்க தம்பி. இப்பவாவது வீட்டுக்கு வா சொன்னா வரமாட்டேன் சொல்லுறா. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போற மாதிரி உள்ளூர தோனுது. இந்த புள்ள சொல்றதை கேக்க மாட்டேன்னுறா. செத்தவனை நினைச்சி இருக்கிறவங்கள சாவடிக்கிறா” என்று தம்பியிடம் புலம்பினார்.

“அக்கா ஊர்ல ஆயிரம் பேசுவாங்க. அதை காது குடுத்தா நம்ம நிலை என்னாகிறது?”

“அவங்க பேசுறது இருக்கட்டும்டா தம்பி. வயசுப் பையன் போடுற டிரெஸ் இங்க இருக்கு. எப்படி என்ன ஏதுனு கேட்டா, மாமனோடது சொல்லுறா? நடக்கவே நடக்காத ஒன்னை எப்படிடா நம்புறது?” மகளின் நிலையை எண்ணி குரல் கரகரத்து வந்தது கனகாவுக்கு.

“அது மாமாவோடது தான். இப்ப எதுக்கு தேவையில்லாத பஞ்சாயத்து வச்சிட்டிருக்கிய” என்று மகள் எகிற,

அந்த ஆடையைப் பார்த்த கனகவேலுக்கு எதோ புரிய, அக்காவை தனியாக அழைத்துச் சென்று, “அக்கா ஊர் பேசுறது உண்மை ஆகிருமோன்னு பயமா இருக்குக்கா” என்றார்.

“என்னடா சொல்லுற?”

“ஆமாக்கா. அவன்... அந்தப் பையன்... அதான் அந்த ரஞ்சிதா பொண்ணோட அண்ணன். அவன் போட்டிருந்த டிரஸ் அக்கா இது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவன் பேசினப்ப நம்ம தம்பி சுந்தர்ராஜன் குரல் மாதிரியே இருக்குது. அத வச்சு ஒருவேளை நம்ம செல்வி பொண்ணு, நம்ம தம்பின்னு நினைச்சி...” முடிக்காது வார்த்தைகளை நிறுத்தினார் கனகவேல்.

“ம்ஹூம் அப்படிலாம் இருக்காதுடா தம்பி. நம்ம பொண்ணு அந்த மாதிரி எல்லாரையும் நம்பற ஆளு கிடையாது. அவ விவரம் தெரிஞ்சவடா. புத்திசாலி இதுக்கெல்லாம் மயங்கற ஆள் கிடையாது. வேற எதோ இருக்கு.” என்றார் கனகா.

“ஆனா, அக்கா டிரஸ் இருக்கே?” என்றார் கேள்வியாய்.

“அதை விடு. இவ வேற என்னோட வரமாட்டேன் சொல்லுறாடா. எதுக்கும் அவள நீ கொஞ்சம் கவனமா பாத்துக்கோ. இந்த மாதிரி தெரிஞ்சா எல்லா காவாலி பயலுகளும் சுத்தி வட்டம் போடுவாங்கடா. என் பிள்ளையை விட்டுடாதடா தம்பி. நீ இருக்கிறதால தான் நான் நிம்மதியா வீட்டில் இருக்கேன். பார்த்துக்கடா தம்பி.” என்றவர் கண்களில் கண்ணீர்.

“அழாதக்கா. என் மருமகளை நான் பாத்துக்குறேன். நீ தைரியமா வீட்டுக்கு போ. மச்சானிடம் எதுவும் சொல்லிராத. அவருக்கு இங்க நடந்த எதுவும் தெரிய வேணாம். தெரிஞ்சா அவரும் தன் பங்குக்கு வந்து செல்வியிடம் பிரச்சனை பண்ணி அவள் மனச நோகடிப்பாரு” என்று கனகாவை வீட்டிற்கு அனுப்பினார்.

இரவு ஒரு பதினோரு மணி அளவில், செல்வ சுந்தரி வீட்டின் பின்புறம் ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவன் வேகமாக போனை எடுத்து அழைத்து அவனிடம் பேசினான்.

“டேய் நான் அந்த செல்வி வீட்டுக்கு பின்னாடி நிக்கிறேன். எனக்கு இப்ப அவளைப் பாக்கணும் போல இருக்கு. நான் அவளை பார்த்து கொஞ்சம் பேசிட்டு வரேன்” என்றான் அவன்.

எதிரில் பதறிப் போனவன், “மச்சான் தப்பு பண்ணாதீக. அங்க எதுக்கு இப்ப தேவை இல்லாம போயிருக்கிய? அவங்க நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. நான் கூட ஏதாவது தவறாக பார்த்து இருக்கலாம். இல்ல தவறா யோசிச்சு இருக்கலாம். வந்திடுங்க மச்சான். எதையாவது இழுத்து வச்சிராதிய” என்று எச்சரிக்கை செய்தான்.

“இல்லடா. எனக்கு அவளை இப்பப் பார்த்தே ஆகணும். என்னை கல்யாணம் முடிக்க மாட்டேன் சொல்லிட்டு, இன்னொருத்தனோட இருக்காள்னா, நாக்கைப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி நான் கேக்கணும்” என்றான் ஆத்திரமாக.

“நீங்க கேட்டு ஒன்னும் ஆகப்போறது இல்ல. அப்படி ஒருத்தர் இல்லவே இல்லன்னா சிக்கலாகிடும் மச்சான். வந்துருங்க” என்றான் சஞ்சய்.

“என்னடா சிக்கலாகும்னு கத்துற. அப்படி ஒருத்தன் இல்லன்னா இவளை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். அந்த வகையிலும் எனக்கு லாபம் தான். சும்மானாலும் பார்த்து பேசிட்டு வரேன்டா.”

“தப்பு மேல தப்புப் பண்றீங்க. அப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க. எல்லாரும் செல்வி அக்கா சொல்லுவதை தான் நம்புவாங்க. சிக்கிட்டீங்கன்னா உங்களை என்ன பண்ணுவாங்கனே தெரியாது. தயவுசெய்து வந்துருங்க மச்சான். இதெல்லாம் வேணாம் நமக்கு. தேவையில்லாத வேலை பாக்காதீக” என்றான் புரியவைக்க நினைத்து.

“ஏய் துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தைடா.”

“ரொம்ப பஞ்ச் டயலாக் பேசாதீங்க. செல்வி அக்கா வீட்டுக்குப் போயி மாட்டி, பஞ்ச் டயலாக் அடிச்சீங்கன்னா, அங்க நெஞ்சுல ஏறி மிதி மிதின்னு மிதிப்பாங்க. வாங்க தெம்பு இருந்தா அங்கன நில்லுங்க. இல்லனா இங்க வந்துருங்க. அவ்வளவுதான் சொல்லுவேன்.” என்று திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுத்தான்.

வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top