• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 22

New member
Joined
Dec 1, 2024
Messages
26
சுந்தரி - 22


“நாளைக்கு கட்டனும்னா ஜாக்கெட் தைக்கனுமே மாமா. இதோ வரேன்” என்று அங்கிருந்த தையல் மிஷினில் இருந்த கத்திரியும் அளவு டேப்பையும் எடுத்து வந்து தன் அளவு தெரியும் என்பதால், வெட்டி தைக்க ஆரம்பித்தாள். இரண்டையும் தைத்து முடிக்க ஒரு மணிக்கு மேல் ஆனது. தைத்து முடித்து நெட்டி முறிக்க உடலை வளைத்தவள், அப்பொழுது தான் கவனித்தாள், அவள் மாமன் இன்னும் செல்லாமல் அமர்ந்த வாக்கில் இன்னொரு சேரில் காலைப் போட்டு தூங்கிக் கொண்டிருப்பதை.

“மாமா” என எழுப்ப பதறி எழப்போனவன் சுதாரித்து, “ஓ... தூங்கிட்டேனா? வேலை முடிஞ்சிதாமா?” எனக் கேட்டான்.

“என்ன மாமா தூங்கப் போகலையா? நானும் வேலை செய்யும் வேகத்தில் உங்களைக் கவனிக்கலை. தூங்க போங்க மாமா, இப்படி படுத்தா கழுத்து சுளுக்கு பிடிச்சிக்கும்.”

“அப்ப உள்ள போறேன்” என்று அவள் அறைக்கு செல்ல எழுந்தவன் தடுமாற, அவனைப் பிடிக்க வந்து அவன் மேலேயே விழுந்தாள்.

“இது நல்லா இருக்கு. இப்படியே தூங்கலாம்” என்றவன் தலைக்குக் கீழ் ஒரு கை இருக்க அவளைத் தன் மீது சாய்த்து கண்மூடினான்.

“மாமா என்ன பண்ணுறிய? விடுங்க என்னைய. திண்ணையில் போயி தூங்குங்க” என்று திமிறி எழ, அவளை எழ விடாது பிடித்து சத்தமாக சிரித்தவன் வாயை கைகொண்டு மூடி, “ஏன் சிரிக்கிறீங்க? கனகு மாமா வந்து கதவை தட்டப் போறாக” என்றாள் பயத்துடன்.

“சரி சரி ரொம்ப பயப்படுற. அதனால கிளம்புறேன்” என்று அவளை தன் பிடியில் இருந்து விடுவித்து முதலில் எழுந்து அவளையும் எழுப்பி, “வந்து கதவை பூட்டிக்கோ” என்று கதவின் அருகே சென்றவன், “மறந்திடாத சுந்தரி. நாளைக்கு நான் எடுத்த புடவையை தான் கட்டிக்கனும்” என்றான்.

“கட்டிக்கிறேன் மாமா. நீங்க போங்க” என்றாள்.

“போ போனு விரட்டுற என்னை” என்று கதவைத் திறக்க அதுவோ திறக்கவில்லை. ‘என்னாச்சு?’ என மனதில் நினைத்து திரும்பவும் இழுக்க வரவில்லை என்றதும் தான் தெரிந்தது, வெளியே யாரோ பூட்டி இருக்கிறார்கள் என்று.

இதை சொன்னால் அவள் பயந்து விடுவாள் என்பதால், என்ன செய்வது என்று புரியாது அவன் நிற்க, நடப்பதை பார்த்தவளுக்கு உணர முடியாதா என்ன?

“யார் மாமா இதை செய்தது? நாம உறவுன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். அப்புறம் ஏன் பூட்டனும்?”

‘அடேய் மிஸ்டர் சுந்தர்ராஜன் உன் வேலையா? என்னவோ ப்ளான் பண்ணி நடத்துற. நடத்து உன் நாடகத்தின் முடிவு என்னன்னு நானும் பார்க்கிறேன்’ என்றவன் அவளிடம் திரும்பி, “அமைதியா இருமா. பொங்கல் அன்று நமக்குக் கல்யாணம்னு ஆண்டவன் நாள் குறிச்சிட்டான் போல. நீ தூங்கு. மற்றதை நாளைக்கு பார்க்கலாம்” என்றான் வெகு நிதானமாக.

“மாமா” என்றாள் பயம் குறையாது.

“விடுடா மாமா இருக்கேன்ல. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” என்றவன் வார்த்தையில் அவளுக்கு அத்தனை நிம்மதி,

காலை ஐந்து மணிக்கு எழுந்த செல்வ சுந்தரி அறையின் வெளிப்புறம் இருந்த பாத்ரூமில் குளித்து முடித்து வெளியே அறைக்கு வந்து தன் மாமன் வாங்கிக் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாள்.

ஹாலில் தரையில் பாய் விரித்து போர்வையால் மூடிப் படுத்திருந்த மாமனைக் கண்டு இதழ்கள் மெல்ல விரிய, “என்னை யோசிக்கவே விடுறதில்லை மாமா நீ. சமீப காலமா என்னவோ பண்ணுற?” அருகில் சென்று குனிந்து, “மாமா எழுந்திரிங்க விடியப்போகுது. சீக்கிரம் குளிச்சிட்டு வந்தா பொங்கல் வைக்கலாம்” என்றாள்.

“ம்மா... டூ மினிட்ஸ் கழிச்சி எழுப்பு. அதுக்கு முன்னாடி அப்பாவ எழுப்பு. அவர் தான் அடிச்சாலும் எழுந்துக்க மாட்டார். நாலு குடம் தண்ணிய ஊத்தி எழுப்பிட்டு என்னை வந்து எழுப்பு. நான் குட் பாயா எழுந்துக்குவேன்” என்றான் உளறலாய்.

“அம்மம்மா அடிச்சும் தாத்தா எழுந்துக்க மாட்டாரா? அம்மம்மா என்னைக்கு தாத்தா முன்ன நின்னு பேசிருக்காவ. அவர் கெழக்க வந்தா இவிய மேற்கால தான போயி பழக்கம். எல்லாம் கனவு செய்யும் மாயம்” என்றவள் இன்னும் உணரவில்லை. இது மாயமல்ல, மந்திரமும் அல்ல. வாழ்க்கையின் நிஜ பக்கங்கள் என்று. உணரும் சமயம் அவளின் நிலை என்ன?

“என்னங்க இந்த அண்ணனை இன்னும் காணோம். கொஞ்சம் செல்வி வீடு வரை தேடிப்பாத்துட்டு வாரீகளா?” என்று கணவனை எழுப்பினாள் ரஞ்சிதா.

“என்னலே சொல்லுறா? அவர் ஏன் அங்க போனார்?” என்று யோசனையானான்.

“செல்விக்கு பொங்கல் பரிசா புடவை குடுக்க போறேன். சீக்கிரம் வந்திடுவேன் சொன்னார். இப்ப வரை வரல. எனக்கு பயமா இருக்கு.”

“வெளிய நின்னு பாத்தா தெரிஞ்சிருக்குமே. எதுக்கு இவ்வளவு பதட்டம்?”

“இன்னும் பார்க்காமல்
இருப்பேனா. நாலரைக்கு எழுந்ததும் அண்ணே இல்லன்னதுமே வெளிய எட்டிப் பாத்தேன். அமாவாசை இருட்டா இருக்கு. அங்க உள்ள போஸ்ட் லைட்டும் எரியல. எதுவும் தெரிய மாட்டிக்கி. பக்கத்துல போயி பாத்துட்டு வாங்க. எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

“மேடம் போலீஸ்காரன் தங்கச்சின்னு சொல்லிட்டு இப்ப இப்படி பயந்தா எப்படிங்க?” என்றான் சுகுமார் கிண்டலாக.

“கிண்டல் பண்ணாம கெளம்புறீகளா?” என்று வெளியே கை நீட்டினாள்.

வாசல் சென்றவன், “ரஞ்சி இங்க வந்து பாரு” என்று சத்தமாக அழைக்க, என்னவென்று புரியாது வந்தவள், அங்கு நின்றிருந்த தம்பியைக் கண்டு சந்தோசம் எழ, “ஹரி வா. என்னங்க நீங்க இவன் வந்ததுக்கா இந்த கத்து கத்துனீங்க? நீ வாடா” என்று உள்ளே அழைத்து வந்தாள்.

“நான் வரது இருக்கட்டும். சார் எங்க? செல்வி அக்காவுக்கும் சாருக்கும் எந்த அளவு ரிலேசன் வொர்க்கௌட் ஆச்சு” என ஆர்வமாக கேட்டான்.

“ப்ச் முதல்ல போயி குளிச்சிட்டு வாடா. அப்புறம் பேசலாம். அதுக்குள்ள உனக்கு காப்பி போட்டு, பொங்கல் வைக்க அடுப்பு கூட்டனும்” என்று அவனை அனுப்பி, கணவனிடம் திரும்பி, “நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? சொன்ன வேலைய பாருங்க” என்று உள்ளே சென்றாள்.

சில நிமிடங்கள் கழித்து வந்தவனோ, “அங்க யாரும் இல்ல ரஞ்சி. வெளிய பூட்டு போட்டிருக்கு. காலையில எழுந்து அந்தப் பொண்ணு தோட்டத்துக்கு போயிட்டா போல.” என்றான்.

“இவ்வளவு காலையிலயா? அப்ப ஈஸ்வர் அண்ணே எங்க? என்னவோ தப்பா தெரியுதுங்க” என்றாள் ரஞ்சிதா.

“அப்படில்லாம் இருக்காது ரஞ்சி. நீ பொங்கல் வைக்க தயாராகு. நான் குளிச்சிட்டு ஊருக்குள்ள பாத்துட்டு வரேன்” என்றான்.

“சரிங்க” என்று கவலையுடன் சொன்னாள் ரஞ்சிதா.

“என்னட்டி பொங்கல் அதுவுமா காலங்காத்தால எழுந்து புலம்பிட்டிருக்கா? வாய் பேசாம வேல சோலிய பாரு. எழுந்ததில் இருந்து மூக்கை உறிஞ்சிட்டு இருக்கா” என்று மனைவியைத் திட்டினார் ரத்தினசாமி.

“ஆங்... நான் சொன்னா யார் காதுல விழும். எம் பேத்தி அங்கன தனியா இருக்கா. பத்து வருசமாச்சி புள்ள நம்மளிடம் பேசி. அதுக்கு ஏதாவது வழி செய்யாம இப்படி ஊர் ஊரா சுத்திட்டு திரிஞ்சா ஆச்சா. நம்ம மருமவன் எல்லாத்துக்கும் மிச்சமா இருக்கார். பெத்த புள்ளைய இப்படி அனாத மாதிரி விட்டுட்டு, பந்த பாசம் இல்லாம திரியுறார். நானும் எம்பொண்ணும் மட்டும் என்ன செய்ய முடியும். வீட்டு ஆம்பளைக நெனச்சா செல்விய கூட்டிட்டு வரலாம்” என்றார்.

“அதுக்கு நீ உம் மவனுக்கு வெளிய பொண்ணு பாத்திருக்க கூடாது. உன்னோட அவசரந்தேன் இந்த நிலையில் இருக்கு. கொஞ்சம் நிதானிச்சி இருந்தா எந்த இழப்பும் இருந்திருக்காது” என்று மனைவியைத் திட்டினார். இன்று அவள் தனியாக ஒரு வீட்டில் இருப்பதற்கு தான்தான் காரணம் என்பதை சொல்லாது.

“உயிர் இழப்பு வரும்னு சொல்லியும் எப்படி அந்த கல்யாணத்தை நடத்த சொல்லுறிய? நடந்ததை விடுங்க. நம்ம பேத்தி நம்மளோட இருக்க என்ன செய்யணுமோ அதை செய்யுங்க” என்றார்.

மனைவியின் நச்சரிப்பு தாங்காது, “இந்த பொங்கல் முடியட்டும். பேசி சரி பண்ண பாக்கலாம். போயி பொங்கல் வைக்கிற வேலைய பாரு. நான் குளிச்சிட்டு வாரேன்” என்றார் ரத்தினசாமி.

“மாமா இந்தாங்க வேஷ்டி சட்டை” என்று அவள் கொடுத்த புது ஆடையை கண்டு முகம் சுருக்கினான். அது யாருக்கு எடுத்திருபபாள் என்று தெரியாதவனா அவன்.

“என்ன மாமா பாக்குறிய இது உங்களுக்கு தான். நேத்து காலையில ஜவுளி அண்ணாச்சி வந்தார். அவரிடம் துணி வேணும் கேட்டேன். அளவு கேட்டார். என்ன செய்ய தெரியல. மன்னிச்சிகோங்க மாமா. ரஞ்சிதா அக்கா அண்ணே தூரத்துல போயிட்டிருந்தாங்க. அவங்க சைஸ் சொல்லி வாங்கினேன். உங்களுக்கு அவங்க அளவு சரியா இருக்கும்” என்றாள்.

“கண்டிப்பா அவர் அளவு சரியா இருக்கும். குடு போட்டுக்குறேன்” என்று வாங்கியவனுக்கு உள்ளுக்குள் அவ்வளவு சந்தோசம்.

சந்தோசம் இருந்து என்ன பிரயோஜனம், வேஷ்டி கட்ட வரவில்லையே அந்த எஸ்பிக்கு.

“சுந்தரி இங்க வா” என்று அறைக்கு அழைக்க, அழைத்த குரலுக்கு வேகமாக உள்ளே வந்தவள், அவன் நிற்கும் கோலத்தைக் கண்டு விக்கித்து நின்றாள்.

அவள் நிலை அறியாது, “எனக்கு வேஷ்டி கட்டி பழக்கம் இல்லை சுந்தரி. உனக்கு தெரியுமா? யூட்யூப் பார்த்து கத்துக்கலாம்னா போன் வச்சிட்டு வந்துட்டேன்” என்றான் அவன். “என்ன சத்தத்தையே காணோம்? ஓய் என்ன பிரீசாகி நிக்குற?” என்று அவளை உலுக்க, சட்டென தெளிந்தவள் சுவற்றின் புறம் திரும்பி நின்றாள்.

“என்னாச்சுமா?” என்று அவளை தன் முகம் பார்க்க திருப்ப, தன் கைகொண்டு கண்களை மூடிக்கொண்டாள். இன்னும் புரியாது தன்னைப் பார்த்தவன் கண்கள் நிலைகுத்தி போக அவசரமாக அங்கிருந்த வேட்டியை எடுத்து சுத்திக் கொண்டான்.

‘மானம் போன பின்னாடி மூடி மறைச்சி என்ன செய்ய’ என்று மனம் காறித் துப்பினாலும், “இப்ப பாரு சுண்டெலி” என்று அவள் கையை அகற்ற, பார்த்தவள் மனம் ‘அப்பாடா’ என சமாதானம் ஆனது.

“எதுக்கு கூப்பிட்டீக? கல்யாணம் ஆகாத பொண்ண கூப்பிடும் போது எப்படி நிக்கனும் தெரியாதா உங்களுக்கு? அப்படி அவுத்...” சட்டென நாக்கை கடித்து வார்த்தையை நிறுத்தினாள்.

“யேய் என்னடி, என்னவோ முழுசா அவுத்து அம்மணமா நின்ன மாதிரி சொல்லுற. ஜட்டி போட்டுருந்தேன்” என்றான் குறும்பாக.

“அசிங்கமா பேசாத மாமா.”

“நீதானடி பேச வைக்கிற. சந்தேகம்னா பார்த்துக்கோ” என்று வேட்டியை அவிழ்க்க போக, “ஐயோ வேண்டாம். எதுக்கு கூப்பிட்டீயனு மட்டும் சொல்லுங்க” என்றாள் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு.

“அந்த பயம் இருக்கட்டும். எனக்கு வேட்டி கட்ட தெரியாது. என்ன செய்யட்டும்?” என்றான் அப்பாவியாய்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top