Member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 32
- Thread Author
- #1
சுந்தரி - 20
“அப்ப கன்பார்ம். கணேஷ் சித்தப்பாவுக்கு உடல்ல எதோ பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சி தான், உங்க அத்தையை வேண்டாம் சொல்லி இருக்கனும். உண்மைக் காரணம் சொன்னா, உங்க அத்தை வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டங்கன்னு, அவங்களை தப்பா பேசி விலக்கி விட்டுருக்கனும். இது இல்லாத வேற காரணம் கூட இருக்கலாம்.”
சில நிமிடங்கள் யோசித்தவன், “அவங்க வீட்டுக்கு முதல்ல காரணம் தெரியலனாலும், தெரிஞ்ச பின்ன பொண்ணு விஷயம் என்பதால, அவன் சித்தப்பாக்கு ஆதரவா அவங்க இருந்திருக்கலாம். ம்ம்ம்... இந்த ஜெனெரேசன் பசங்க ஒரு தெரு பிரச்னையை சரிபண்ண முடியாதா? உன் அத்தைக்காக பிரிஞ்ச தெரு, உன் தங்கையால சேரட்டும்டா. நல்லது நடக்க நீங்களும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து இருக்கலாம்.” என்றான் சுந்தரேஸ்வரன்.
“நீங்க சொல்லுறது சரியா தெரியுது சார். சரிசெய்ய முடியுமா சார்?” என்றான் முத்து கணேஷ் ஆர்வமாக.
“நான் இருக்க உனக்கு என்னடா பயம்? கணேஷ் மூர்த்திக்கு இப்ப என்ன வயசு?”
“இருபத்து நாலு சார்.”
“ஓ... அப்ப இரண்டு வருடம் கழிசசி முடிக்கலாம். ரொம்ப அவசரம் வேண்டாம். சத்தம் இல்லாம சாதிச்சிட்டு போங்கடா. இந்த வருட பொங்கல், தெருப் பொங்கல் இல்ல. பொதுப் பொங்கல்” என்றவன், இரு அணியினரையும் அருகில் அமர வைத்து, புரியும் விதத்தில் சொல்லி அதை செயல்படுத்தவும் அறிவுரை சொன்னான்.
அனைவரையும் கொஞ்சம் சகஜமாக்கும் பொருட்டு, “டேய் பசங்களா! உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சண்டை என்ற பெயர் சொல்லி ரெண்டு டீமும் மீட்டிங் போடுவீங்க பாருங்க. அவ்வளவு என்ஜாய் பன்னுவேன்” என்றான் ஈஸ்வர்.
“சார்!” என ஆச்சர்யமாய் பார்த்து, “எப்படி சார்? இந்த ஊரே எங்க சண்டையை பார்த்து கரிச்சி கொட்டுது. இவனுவ திருந்தாத கேஸ்னு திட்டிட்டுப் போவாங்க. வீட்டுல ஏன்டா தேவை இல்லாத வேலை பாக்குறீங்கனு தொடர் திட்டு. உங்களால எப்படி சார் கண்டுபிடிக்க முடிஞ்சது?” என்று ஒருசேர கேட்டனர்.
“போலீஸ்காரன்டா நானு. ரேசர் பார்வை. என்னிடம் இருந்து ஏதாவது தப்ப முடியுமா? இல்ல தப்பதான் விட்டுடுவேனா?” என்றான் கம்பீரமாக.
“சார்” என்று அனைவரும் பதறி எழுந்து, அவன் முன் மரியாதையாய் கொஞ்சம் பயத்துடன் நிற்க,
“போலீஸ்காரன் சொன்னதும் பயம் தன்னால வருது போல. இவ்வளவு நேரம் என்னோட எப்படி உக்கார்ந்திருந்தீங்களோ, அது மாதிரி உக்காறீங்க. இல்ல” என்று விரல் நீட்டி மிரட்ட, கண்சிமிட்டும் நேரத்தில் ஈஸ்வரின் அருகில் அமர்ந்தனர்.
ஹா..ஹா..ஹா.. என சத்தமாகச் சிரித்தவன், “என்னடா பசங்களா ஓவரா பயந்துடீங்க போல? நான் வந்ததும் எப்படி பிரெண்ட்லியா பார்த்தீங்களோ, அப்படிப் பாருங்க. நான் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அது தான். அதுக்காக தான் உங்களிடம் வான்டடா வந்து பேசிட்டிருக்கேன்” என்றான் தன் விளக்கமாக.
“சார் நாங்க சின்னப் பசங்க. நீங்க எங்களோட எப்படி?” என்று கணேஷ் மூர்த்தி கேட்டான்.
“சின்னச் செடிதான் தம்பிகளா மரமா வளருது. நீங்க யாரும் தறிகெட்டுப் போன பசங்க கிடையாது. ஓய்வு நேரத்துல உங்களுக்குள்ள வம்பிழுத்து நேரத்தை ஓட்டுறீங்க. மறைமுகமா ரெண்டு தெருக்காரனும் ஒற்றுமையா இருக்கோம்னு புரிய வைக்கப் பார்க்குறீங்க. ஆனா, உங்க உழைப்பெல்லாம் வேஸ்டா போகுது. வாட் டூ டூ? இந்த போலீஸ்காரன் கண்டுபிடிக்கலன்னா காலத்துக்கும் உங்க உழைப்பு வேஸ்ட் தான். அப்புறம் எப்படி அந்தத் தெரு பொண்ணை இங்க உள்ளவனும், அங்க உள்ள ஆணை இங்க உள்ள பெண்ணும், கல்யாணம் செய்து சம்பந்தி ஆகுறது?” என்று சிரித்தான்.
“நீங்க சொல்லுறது சரிதான் சார். நீங்க எது சொன்னாலும் செய்யுறோம் சார். எங்க தெரு உறவா மாறனும். அதுக்கான வழி சொல்லுங்க. அதே போல உங்களை மாதிரி போலீசா வர நாங்க என்ன செய்யணும்?” என்று ஆர்வமாகக் கேட்டார்கள்.
“அதுக்கு நீங்க யூபிஎஸ்சி எக்ஸாம் எழுதி டாப் பைவ்குள்ள வரனும்.”
“யூபிஎஸ்சினா ஐ ஏ எஸ், ஐ பி எஸ் தான சார்? அப்ப நீங்க என்ன போஸ்டிங்ல இருக்கீங்க?” என்றவர்களுக்கு சென்ற பயம் திரும்புவது போல் தோன்றியது. எதோ சின்ன போஸ்டில் இருப்பான் என்று நினைத்தவர்களுக்கு அவன் சொல்லுவதைப் பார்த்தால் பெரிய வேலை என்று தெரிந்தது.
“எஸ்.பி. சூப்ரிடென்ட் ஆப் போலீஸ்.”
“அப்படி என்றால்? அதை கொஞ்சம் விரிவா சொல்லுங்க சார்” என்றான் ஒருவன் தைரியம் வந்து.
“காவல்துறை கண்காணிப்பாளர். சூப்பரிடன்ட் ஆப் போலீஸ்கான மாவட்ட அளவிலான பதவியை, மாநில அரசு நியமிக்கிறது. இவர் அதான்பா அந்த எஸ்பி கேரக்டர், மாவட்டத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். அப்புறம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன், காவல்துறையில் இருப்பவர்கள் அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார்” என்றான் சுந்தரேஸ்வரன்.
“சார் சூப்பர் சார். சரியான பவர்புல் போஸ்ட். நீங்க எங்களோட பேசுறீங்க என்பதே பெருமையா இருக்கு சார். எனெர்ஜிடிக் பவர் சார் நீங்க” என்றனர் சந்தோஷத்தில்.
“இதே பவர் உங்களுக்கு வேனும்னா படிங்க. படிச்சி சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை” என்றான் ஈஸ்வர்.
“எஸ் சார். ஆமா சார்” என்ற குரல்கள் அங்கு.
“அப்புறம் பசங்களா, நான் போலீஸ் என்பது உங்களைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது. எப்படினாலும் கொஞ்ச நாளுக்குள்ள தெரிய தான் போகுது. அது தானா தெரியட்டும். ஓகேவா? நான் போறேன்” என்றான்.
“ஓகே சார். பை சார்” என்று விடைகொடுத்தனர்.
“ஈஸ்வர் சார் ரத்தினசாமி ஐயா வந்தாச்சி. அவரை எப்ப பாக்கப் போகலாம்?” என்று சுகுமார் கேட்க,
“பால்ராஜ் சார் என்ன சொல்லுறார்?” பதில் கேள்வி கேட்டான் ஈஸ்வர்.
“அவர் இன்னும் உங்களை ஊருக்கு அனுப்பலையா கேட்கிறார். உங்க பிடிவாதத்தைச் சொன்னாலும், இங்க இருந்து அனுப்புன்னு நிக்கிறார். என்னால் முடியலன்னு சொன்னதும், வில்லங்கத்தை விலை குடுத்து வாங்க முயற்சி பண்ணுறீங்க. அதனால வரப்போற பாதிப்பு யாருக்கெல்லாம் தெரியலனு சொல்லிட்டுப் போயிட்டார்.”
“ஓ... அப்ப அவரிடமும் ஒரு மீட்டிங்கை போட்டுடலாம். நாளைக்கு சித்ராவுக்கு போன் பண்ணி சொல்றேன்” என்றான் அவன்.
“அண்ணே விடிஞ்சா பொங்கல். நாளைக்கு எல்லாரும் அவங்கவங்க வீட்டுல பொங்கல் வைப்பாங்க. சாயங்காலம் எல்லாரையும் கோயில்ல பாக்கலாம். அடுத்த நாள் விளையாட்டு போட்டிகள் ஊர் பிள்ளைகளுக்கு, பெரியவங்களுக்குனு நடக்கும். அப்ப எல்லாரும் அங்கன தான் இருப்பாக.” என்று ரஞ்சிதா சொல்ல,
“நாளைக்கு ஈவ்னிங் எல்லாரும் கோவிலுக்கு வருவாங்கல்ல. அப்பவே பார்த்துக்கறேன்” என்றான் ஈஸ்வர்.
“என்ன நடக்குமோனு பயம் இருந்தாலும், அதையும் மீறி ஆர்வம் அதிகமா இருக்குண்ணே.”
“விடு ரஞ்சிமா ஆர்வத்தை இன்னும் சுவாரசியமா மாத்திடுவோம். அதுக்கு முன்ன உன் அண்ணிக்கு பொங்கல் பரிசு குடுத்துட்டு வரேன்.”
“செல்விய பாக்கவா? நேரம் நைட் பதினொன்னு ஆகிடுச்சி.”
“இதுதான் சரியான நேரம்” என்று எழுந்தவன் ஒரு ஜவுளிக்கடை பையை எடுத்து, அவன் சுந்தரியின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
“என்னடா செராக்ஸ் எனக்காக காத்திருக்க போல. உன்னோட ஏக்கத்தை தீர்க்க தான் நான் வந்துட்டேன்.” என்று வாசலில் காவலுக்கு இருந்த சுந்தர்ராஜனை வம்புக்கு இழுத்தான் ஈஸ்வர்.
“நீ ரொம்பப் பேசுற ஈஸ்வரா. இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வரக்கூடாதுனு சொல்லி இருக்கேன். நீ கேட்கிற மாதிரி இல்லை.” கொஞ்சம் கண்டிப்புடனே சொன்னான்.
“என் பொண்டாட்டிய பார்க்க நேரங்காலம் ஏது? நினைச்சா போய் பார்த்திடுவான் இந்த ஈஸ்வர். என்னை எவன் கேட்கிறது?” என்று திமிராய் கேட்க,
“ம்க்கும் இங்க வரதை யாராவது பாத்து பஞ்சாயத்தைக் கூட்டிட்டாங்கனா? அப்ப சார் என்ன செய்வீகளாம்?”
“ரொம்ப வசதியா போச்சி. உங்க ஊர்காரங்களே அவளை எனக்கு உரிமையோட தரட்டும். நோகாம தேன் கிடைச்சா வேண்டாம்னு யாராவது சொல்லுவாங்களா? அதுவும் என் சுந்தரியை வேண்டாம்னு சொல்லுவேனா?” என்றான் கண்சிமிட்டி.
அப்பொழுது திடீரென கதவு திறக்கப்பட, “என்ன சத்தம்? யாரோட மாமா பேசிட்டு இருந்தீய?” என சுற்றிலும் பார்த்தபடி கேட்டாள் அவனின் சுந்தரி.
“இங்க எதிர்ல” என்று கை நீட்டினான்.
“யார் இருக்கா இங்க? தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க வெளில பேசுற சத்தம் எனக்கு கேக்குது.”
“அப்ப நிஜமா தெரியலையா? என்னை எப்ப படுக்க அனுப்பின?” என்று சுந்தர்ராஜனை ஒரு பார்வை பார்த்தான்.
“நான் எங்க அனுப்பினேன். நீங்க இப்பலாம் தோட்டத்துக்கோ வீட்டுக்கோ வருவது இல்லை. நைட் எப்பவாவது இப்படி வந்து நிக்குறீங்க.” என்று சடைப்பாக சொன்னாள்.
“நாம கல்யாணம் செய்துப்போமா?” என்றான் பட்டென்று.
“செய்துக்கலாம். நமக்கு யார் செய்து வைப்பாங்க?”
“உன் மாமன் எதுக்கு இருக்கான். அவன் செய்து வைப்பான்” என்று எதிரில் கை நீட்ட, அவனோ மர்மமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
“என்ன மாமா உளருறிய? மாமான்னு எதிர்ல கை நீட்டுறீய? அங்க யாரு இருக்கா? எதையாவது பாத்து பயந்துட்டீகளா?” என்று அவன் முகத்தை ஆராய்ந்தபடி கேட்க,
பட்டென தன்னை நோக்கி கைநீட்டி, “கையில் சுளுக்கு. அதான் கை டைரக்சன் மாறிடுச்சி” என்றான் அவன்.
“என்ன சுளுக்கு? எங்கயாவது விழுந்துட்டீங்களா?” என்று பதறி அவன் கைபிடித்து சுளுக்கு பிடித்த இடம் தேடினாள்.
“ஓய் சுந்தரி. உன் விரல்பட்ட நிமிடம், என் வலியும் வசமிழந்து போனதடி!” என்று கவிதை பேச,
“ப்ச் எப்போதும் விளையாட்டு தானா?”
“சீரியஸ்லி. நான் எல்லாத்தையும் சரி செய்யுறேன்மா.”
“எப்படி செய்ய முடியும்? நீங்க தான் யாருக்கும் தெரிய மாட்டீங்களே?” என்றாள் கேள்வியாய்.
“யார் சொன்னா?”
“நீங்க தான்” என்று அவன் உலகத்தில் இல்லாததைச் சொல்லத் தடுமாற,
“அப்ப உனக்கு எதார்த்தம் தெரியுது. தெரிஞ்சும் ஏன் இல்லாத ஒன்னை இருக்கிறதா கற்பனையில் வாழற?” என்று கேட்டான்.
“இது நிஜம் மாமா. நீங்க என் கண்ணுக்குத் தெரியிறீங்க. முன்ன உங்க ஸ்பரிசம் உணர முடியாது. இப்ப என்னால உணர முடியுது. அப்ப அது நிஜம் தான?”
“இந்த நிஜம்தான் நிரந்தரம்னு உனக்கு சீக்கிரமே புரிய வைக்கிறேன். நாளைக்கு உன் தாத்தாவை பார்த்து நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்.” என்றான்.
“அவரிடம் எதுக்கு?” என்று புரியாது கேட்டாள்.
“அதுவும் சரிதான். அவர் சம்மதம் நமக்கு எதுக்கு. உன்னோட அப்பா அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கி, அடுத்த முஹுர்த்தத்தில் நம்ம கல்யாணம்” என்றான்.
“ம்ம்ம்...” என முனகலாய் அவள் பதிலளித்தாள்.
வருவார்கள்...
Last edited: