• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 2

New member
Joined
Dec 1, 2024
Messages
6
சுந்தரியின் சுந்தரன் - 2


“அன்புள்ள அப்பா” என்று ஆரம்பித்தான் ஈஸ்வர்.

“என்னப்பா?” என்று பதிலுக்கு பாடினார் ரவீந்திரன்.

“உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா”

“அப்பப்பா பொல்லாத பிள்ளை தானப்பா” என அப்பாவும் மகனும் எதுகை மோனையில், சினிமா பாடலை உடன் சேர்ந்து பாடி சிரித்து இருந்தனர்.

“நேரம் போகுது. அவனை தூங்க விடுங்க. எப்ப வேனும்னா எங்க இருந்தும் வாடானு போன் வரும். கிடைக்கிற நேரத்தில் தூங்குடா” என்று இருவரையும் விரட்டினார் தேவகி.

“ஒகேப்பா. குட் நைட்” என்று ஈஸ்வர் படியேறி சென்றான்.

“அடி கள்ளி. என்னோட டூயட் பாடணும்னு தான, அவனை அனுப்பின” என்ற ரவீந்திரன், “முதல் ராத்திரி தூக்கம் ஏது ஹோ” என்று பாடினார்.

“தூக்கம் ஏதா? தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்கோங்க. முதல் ராத்திரியாம். நம்ம முதல் ராத்திரி எந்த லட்சணத்துல இருந்ததுனு உங்களுக்குத் தெரியாது” என்றவர் குரல் திடீரென கரகரப்பாகியது.

“ஹே தேவி என்னமா? அச்சோ, அதுக்கும் சேர்த்து தான் இப்ப முதல் ராத்திரி கொண்டாடலாம் சொல்லுறேன். நீதான் விலகி விலகிப் போற” என்றார் கிண்டலாய்.

“ஹலோ மிஸ்டர். நமக்கு பிள்ளைங்க இருக்குறது நியாபகம் இருக்கட்டும். நீங்க கொண்டாடின முதலிரவு லிஸ்ட் பெருசா இருக்கு. பையன்களுக்கு வயசாகுறது தெரியலை” என்று நொடிக்க,

“அதனால என்ன. எனக்கு இப்ப முதல் இரவு வச்சே ஆகணும். ஹான்” என்றார் எஸ்கே போல.

“பையனுக்கு முப்பத்தஞ்சி வயசு ஆகுதேன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா. சின்னவன் பிரச்சனை இல்லை. வயசு கம்மி. ஆனா, நீங்க என்னவோ புதுசா கல்யாணமான பையன் மாதிரி பேசுறீங்க. கம்முனு போங்க ரவி” என்றார் செல்ல முறைப்புடன்.

“ஆஹஹா இந்த பெயரை கேட்க எவ்வளவு மெனக்கட வேண்டிருக்கு. இதுக்காகவே உன்னிடம் ஆயிரம் திட்டு வாங்கலாம்” என்றவர் மனைவியின் முறைப்பில், “சரி பொண்ணு பாக்குறது பத்தி பேசலையா அவனிடம்?” என்றார்.

“நைட் பத்து மணிக்கு வர பிள்ளைய எப்படிங்க கேள்வி கேட்டு மனச சங்கடப்படுத்த? எனக்கே ஒரு மாதிரி இருக்கு. அதான் எதுவும் கேட்கலை” என்று சொன்னார் தேவகி.

“அதுக்கு அப்படியே விடலாம் சொல்லுறியா? விட்டா அவனைப் பிடிக்க முடியுமா? என்னமா நீ?” என்றார் சடைப்பாக.

“அப்பனும் மகனும் இவ்வளவு நேரம் அன்புள்ள அப்பானு பாடி ஆடுனிங்கலே. அப்ப கேட்க வழியக் காணோம். என்னிடம் வந்து வாய்ச் சவடால் அடிக்கிறார்” என்று திட்ட,

“ஹிஹி மறந்துட்டேன்.” என்று அவர் அசடுவழிய,

“நானும் அதுதான் மறந்துட்டேன். சரி காலையில் எழுந்ததும் முடிவா பேசி என்னன்னு கேட்டு சொல்றேன்.” என்றார் தேவகி.

“ஓய் மாமா! என்னோட சுந்தரா! சுந்தர புருஷா! என்ன நீ இங்க இருக்க? நான் உனக்காக காத்திருக்கேனு தெரியுதா இல்லையா? பாக்க வருவ பாத்தா, இப்படி பப்பரப்பான்னு படுத்துத் தூங்குற?” என்று அவன் காதில் செல்லமாக கடிக்க, அவனோ எறும்பு கடித்ததோ என்று எண்ணி காதை தேய்த்து விட்டான்.

“செல்லமா கடிச்சா காதை தேய்க்குரியா. இரு உன்னை” என்று அவன் கன்னத்தில் கடிக்க, உள்ளுக்குள் குளுமையாக இருந்தாலும் வெளியே, “ப்ச்.. தினமும் இவளுக்கு இதே வேலையா போச்சி” என்று உச்சிக் கொட்டினான்.

“உனக்கு எம்மேல லவ்வே இல்ல. போ மாமா” என்று அவன் மேலே அமர்ந்திருந்தவள், எழுந்து இறங்கி வாசல் நோக்கி செல்ல,

தன்னில் இருந்து எதோ பிரிவதைப் போல் வலியாக நினைத்தவன், “யேய் போகாத நில்லு” என்றான். அவளோ நிற்காது நடக்க, “ஆமா யார் நீ? உனக்கு நான் எப்படி மாமா ஆவேன்? உரிமையா மேல ஏறி இருந்தியே எப்படி?” கேள்வி கேட்டான் அவன்.

“ஹ்ம்... நான் எவ்வளவு லவ்வோட கூப்பிடுறேன். நீ என்னனா மிரட்டி கேள்வி கேட்கிற. போ மாமா. உன்னை எனக்குப் பிடிக்கலை. நீ நல்ல காதலன் இல்ல” என்றாள் முகம் சுருக்கி.

“அடியேய் யாரடி நீ? நான் இதுவரை உன்ன பார்த்ததே இல்லையே” என்றான் சத்தமாக.

“பாத்தது இல்லனு சொல்லாத மாமா. பாக்க வரலனு சொல்லு.” என்று கோபம் கொள்ள,

“பார்க்க எங்க வரணும்?”

“இங்க இருந்து கேட்டா பதில் வராது மாமா. என்னைப் பாக்க, யாருன்னு தெரிஞ்சிக்க, என்னோட இடத்துக்கு வா. இல்ல நஷ்டம் உனக்கு தான்” என்றாள் தோள்குலுக்கி.

“வரேன்டி” என்று கட்டிலில் இருந்து இறங்கி வேகமாக வந்து அவளை வழி மறித்து நின்றவன், “ஒரு பிரம்மச்சாரி மேல ஏறி உட்கார்ந்து அவன் இளமையை சோதிச்சதுக்கு முதல்ல பதில் சொல்லு?” என்றான்.

“உன் பொண்டாட்டிக்கு அந்த உரிமை இல்லனு உன்னால சொல்ல முடியாது மாமா. ஏன்னா நீ எனது உயிர்! நான் உனது உயிர்! நமக்கொரு உயிர் வேணும்னா தேடி வா மாமா.” என்றாள் மயக்கும் குரலில்.

“என்னடி? வார்த்தைக்கு வார்த்தை மாமா சொல்லுற? நான் உன் மாமனாடி?” என்று பல்லைக் கடித்தான் அவன்.

“நீ கூடதான் டி சொல்லுற. நான் கேட்டனா. நேரம் ஆகுது நான் போறேன். காலம் போகுது மாமா. சீக்கிரம் வந்து சேரு” என்றாள் அவன் முகம் வருடி.

அவளின் வருடலில் மெய் மறந்தவன், “தேடி வரேன்டி” என்று கண்விழித்துப் பார்க்க அவளைக் காணவில்லை. சட்டென எழுந்து அமர்ந்து அவளை தேட, அனைத்தும் கனவாகிப் போனது.

“யார் அவள்? அவளை ஏன் நான் பார்க்கணும்? என்னை ஏன் வர சொல்லுறா? எங்க வரணுமாம் அவளுக்கு? என்னோட பொண்டாட்டியா அவ? எனக்குத் தெரியாம எப்படி பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்க முடியும்? சுந்தரா! சுந்தர புருஷானு என்னமா உருகுறா. என்ன ஒரு காதல் அவள் கண்ணில். ம்ம்ம்.. அழகா தான்யா இருக்கா” என்று மனம் கடைசியாக ஜொள்ளுவிட்டது.

‘கனவுக்கு எல்லாம் முக்கியத்துவம் குடுக்க எப்ப பழகின ஈஸ்வர்? முதல்ல பிழைப்பை பாரு. இன்னொரு முறை இந்த கனவு வந்தா பார்க்கலாம். இல்லனா இப்படியே விட்டுடலாம்’ என்று கனவைக் கலைத்து கட்டிலை விட்டு இறங்கி மணி பார்க்க, அது மூன்றைக் காட்டியது. பாத்ரூம் சென்று வந்தவன் திரும்பவும் படுத்துத் தூங்கி விட்டான்.

காலை எழுந்தவனுக்கு எண்ணம் எல்லாம் வண்ணமாய் அவள் நினைவுகள். நின்றால், நடந்தால் என்று எங்கு பார்த்தாலும் அவள் நினைவுகள். முகம் மட்டும் சிறிது மங்கலாய் தெரிகிறது. நேரில் கண்டால் கண்டுகொள்வானோ அவனவளை!

காலையில் வேலைக்கு கிளம்பி வந்த மகன் உண்டு முடித்ததும், “ஈஸ்வர் கொஞ்சம் பேசனும். நான் சொல்ல வரதை தப்பா...”

“என்ன சொல்லனும்மா? பொண்ணு பார்த்திருக்கேன். கல்யாணம் பண்ணிக்கோ தான. நான் மாட்டேன் சொல்லலயே. பொண்ணு பாருங்க தான் சொல்லுறேன். நீங்க தான் இதுவரை பார்த்துச் சொல்லலை” என்றான் ஈஸ்வர்.

“சம்மதம் சொல்லிட்டு பொண்ணு பார்க்க வரலனா எப்படிடா? பார்க்கிற இடத்தில் எல்லாம் முதல்ல போலீஸ் என்றதும் யோசிக்கிறாங்க. மீறி உன் பதவி வைத்து வர்றவங்க, உனக்கு வயசு அதிகம் சொல்லி மறுக்கிறாங்க. அதையும் மீறி வந்தா, ஜாதகம் மொத்தமா முடிச்சிடுது. எல்லாத்தையும் தட்டிட்டு ஒரு ஜாதகம் வந்தா, நீ வராம இருந்து விரட்டிடுற. என்னை என்ன தான் செய்ய சொல்லுற?” என்றார் வருத்தமாக.

“எல்லாம் தட்டி போனா இதை விட சிறப்பா எதோ கிடைக்க போகுது அர்த்தம் தாயே” எனும்போது இரவில் கனவில் வந்த பெண் கண்முன் சிரித்துப் போனாள்.

“வயசு முப்பத்து அஞ்சிடா. இருபத்து அஞ்சி வயசு நினைப்பா உனக்கு.” என்று அங்கலாய்த்தார் தேவகி.

“அம்மா... நான் எப்பவும் யங் அண்ட் ஸ்ட்ராங் மேன். உங்களுக்கான மருமகள் கண்டிப்பா வருவா. தேடுங்க. தேடிக் கண்டுபிடிங்க” என்றவன் மனதில் ‘நமக்கொரு உயிர் வேணும்னா தேடி வா மாமா’ என்ற குரல் ஒலிக்க, தலையை உலுக்கி அந்த நினைவை ஒதுக்கியவன், “நீங்க தேடுங்கம்மா. நானும் தேடனும்” என்றான் தன்னை அறியாது.

“நீ யாரை தேடப் போற?” என்று மகனை ஆராய்ச்சியாய் பார்த்தார்.

தாயின் வார்த்தையில் தடுமாறியவன், “போலீஸ்காரனுக்கு கிரிமினல்ஸ் தேடுறது தான் வேலையே. அப்ப தேடித் தான ஆகணும். போயி பொழப்பப் பாருங்க” என்று வெளியே சென்று விட்டான்.

“ஏங்க இவன் என்ன சொல்லிட்டு போறான்?” எனக் கேட்டார் கணவரிடம்.

“உங்களுக்கான மருமகள் வருவானு சொன்னான். வருவாளா? இல்ல கூட்டிட்டு வரப்போறானா தெரியலையே தேவிமா.” அவரும் குழப்பமாக சொல்ல,


“என்ன இப்படி சொல்லுறீங்க? நம்ம பையன் அப்படி செய்ய மாட்டான். அப்படிச் செய்யனும்னா எப்பவோ முடிச்சிருக்கனுமே. இப்ப எப்படி?” எனக் கேட்டார்.

“யூசுவலா எல்லா தாயும் சொல்லுற டைலாக். நீ கொஞ்சமும் மாத்தாம சொல்லுற. அப்படி செய்தா வேணாம்னு சொல்லுவியா?”

“அதெப்படி சொல்லுவேன். என் பையனுக்கு பிடிச்சா போதாதா. அவன் சந்தோசம் தான் என்னோட சந்தோசமும்.”

பக்கென்று சிரித்த ரவீந்திரன், “இதுவும் யூசுவல் டைலாக்” என்றார்.

“உங்கள... கேலி பண்ணுறீங்களா?” என்று அவர் முதுகில் செல்லமாய் ஓன்று வைத்தார்.

மனைவியை அணைத்துப் பிடித்தவர், “ஈஸ்வர் சொல்லுறது போல, அவன் காத்திருப்புக்கு அருமையான பொண்ணா அமையும். கணவன், மனைவியா காலத்துக்கும் சந்தோசமா இருக்கப் போறாங்க. நீ கண்டதையும் யோசிக்காத தேவி” என்றதும், “ம்ம்.. சரிங்க” என்று தலையசைக்க, நெற்றியில் முத்தமிட்டு இன்னும் அணைத்துக் கொண்டார்.



அவரின் இருண்டு கிடந்த வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் அவர் மனைவி. அதேபோல் தான் தேவகிக்கும் அவரின் கணவன். இருவர் வாழ்விற்கும் இனிமை சேர்க்க வந்தவன் தான் அவர்களின் மகன்.

இந்த இனிமை கடைசி வரை மாறாது இருக்குமா? இல்லை கனவில் வரும் பெண் அவளால் எல்லாம் மாறிப் போகுமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top