• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 16

New member
Joined
Dec 1, 2024
Messages
23
சுந்தரி - 19


குனிந்து கால் விரலின் நுனியில் மெல்லிய முத்தம் வைக்க, தேகம் சிலிர்க்க, மெல்ல கண் திறந்தாள். நிமிர்ந்து அவள் கண் பார்த்தவன் மயக்கும் புன்னகையைச் சிந்தி மேல் பாதத்தில் இதழ் பதித்தான்.

பாதத்தில் இருந்து உச்சிக்கு ஏறிய உணர்ச்சித் தாக்குதலில், சிறு நடுக்கம் அவளுள் எழ, நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டாள்.

சற்று மேலேறி அடுத்த முத்தம் பதிக்க சட்டென்று உணர்வுக்கு வந்தவள், அவனைத் தள்ளிவிடப் போக, அதற்குள் எழுந்து எதிரில் அமர்ந்தவன், “நம்ம மேல அன்பா இருக்கிறவங்க முத்தம் குடுத்தா, காயம் உடனே சரியாகிடும்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க” என்றான் புன்னகையுடன்.

“எங்க அம்மம்மா என்னிடம் அப்படி சொல்லலையே மாமா” என்றவளுக்குத் தெரியாதே இவளின் அம்மம்மாவும், அவனின் தாயும் வேறு வேறு என்று.

“நான்தான் சொல்லிட்டேன்ல விடு. உடம்பை பார்த்துக்கோ. எதிலும் அலட்சியமா இருக்காத. பார்த்து பத்திரம். வந்து கதவை பூட்டிக்கோ” என்று வெளியே வர, அவள் கதவு பூட்ட நெருங்க பட்டென அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “என்னை நினைச்சிட்டே படுத்துத் தூங்கு. இப்ப கதவை லாக் பண்ணு” என்றான்.

கதவை பூட்டி தன் அறைக்குள் வந்தவளுக்கு எல்லாம் கனவுபோல் தெரிகிறது. கன்னத்தை தொட்டு பார்த்தாள். இம்சையாய் அவனின் மீசை உரசிய ஈர முத்தம். இப்பொழுது இனிமையாய்.

வெளியே வந்த சுந்தரேஸ்வரனிடம், “என்ன பண்ணுற நீ? இப்படி அவள் ஆசையை வளர்க்காத. சூழ்நிலையால நடக்காம போனா, இத்தனை வருடம் பட்ட கஷ்டத்தோட பெரிய அடியா இருக்கும் அவளுக்கு. காலத்துக்கும் இப்படியே இருக்கனும்னு ஆசைப்படுறியா?” எனக் கேட்டான் சுந்தர்ராஜன்.

“என் ஆசை என்னன்னு உனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒன்ஸ் வாக்கு குடுத்துட்டா அதை மீறமாட்டேன். இதுக்கு மேல சந்தேகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது” என்று செல்ல,

அவன் அவ்வளவு சொல்லியும் ராஜனுக்கு உள்ளூர ஒரு பயம். அதை வெளிப்படுத்த முடியாது துணிந்து ஒரு காரியம் செய்தான்.

ராஜன் பயம் நன்மை பயக்குமா? இல்லை கெடுதலில் முடியுமா?

“ஈஸ்வரா எங்க இருக்க? முதல்ல ஊருக்கு வா” என்று அவன் தந்தை ரவீந்திரன் அழைத்தார்.

“என்னப்பா விஷயம்?”

“இல்லடா. எனக்கு மனசுக்கு என்னவோ சரியில்ல தோணுது. திருச்சியில் தான இருக்க? இரு நாங்க அங்க வரோம்” என்றார்.

‘காரியம் கெட்டது’ என்று எண்ணி, “ப்பா... நான் ஒரு இடத்தில் இல்லப்பா. போஸ்டிங் வந்ததும் தான் வீடு கொடுப்பாங்க. இப்ப நான் ஹரியோட நண்பன் வீட்டில் இருக்கேன். இங்க வந்து என்ன செய்யப் போறீங்க. பொங்கல் முடிஞ்சதும் வாங்க” என்றான்.

“நீ எங்களிடம் பொய் சொல்லலையே?” என சந்தேகமாகக் கேட்டார் தேவகி.

“அம்மா... வேலை விசயமா வெளிய வந்திருக்கேன். முடிச்சதும் கால் பண்ணுறேன். நீங்க பயப்பட ஒன்னும் இல்லை. ஒரு எஸ்.பிய இப்படி உங்க கண்ட்ரோல்ல வச்சிருக்கக் கூடாது. நாளைக்குப் பேசுறேன் பை” என்றான்.

“எங்க வீட்டுல எதோ சந்தேகம் வந்திருக்கு ரஞ்சிமா. அவங்க கன்பார்ம் பண்ணி வரதுக்குள்ள, நான் சுந்தரி மனசில் இடம் பிடிக்கனும்” என்றான் அவன்.

“அப்ப ரத்தினம் ஐயா பார்க்கணும் சொன்னது? அவருக்காக வந்தேன்னு சொன்னது?” தன் கேள்வியை முன் வைத்தான் சுகுமார்.

“இன்னுமாங்க ஈஸ்வர் அண்ணே முதல்ல சொன்னத நம்புறீக” என்றாள் ரஞ்சிதா கேலியாக.

“அவர் எங்க போயிடப் போறாரு. பார்த்துக்கலாம் சுகுமார்” என்று அலட்சியமாக பதில் கொடுத்தான்.

“நீங்க பாக்குறதுக்குள்ள என் உசுரு பாதி போயிடும் போல சாமி. இந்த ரஞ்சியும் உங்களுக்கு புல் சப்போர்ட். என்னவோ நல்லது நடந்தா சரி” என்றான் அவன்.

மறுநாள் வந்த ரஞ்சிதாவிற்கு வந்த அழைப்பில், “ரஞ்சிக்கா போகி அன்னைக்கு நைட் உன் வீட்டுல இருப்பேன்” என்றான் ஹரிஹரன்.

“என்னடா? எப்பவும் அம்மாவை விட்டு வரமாட்டேன் சொல்லுவ. இப்ப என்னவாம் தம்பியாருக்கு?”

“சார் என்னை அங்க வரச் சொல்லுறார். என்னன்னு கேட்டா, கேள்வி கேட்காம நேர்ல வா சொல்லுறார். அதான் இருக்கிற வேலையை எல்லாம் முடிச்சிட்டு இருக்கேன்” என்றான் ஹரிஹரன்.

“அவர் அழைத்தா எதாவது காரணம் இருக்கும். வந்து என்னன்னு தெரிஞ்சிக்க” என்று அழைப்பைத் துண்டித்தாள் ரஞ்சிதா.

இதோ ஈஸ்வர் வேலைக்குச் சேரும் நாளும் வந்தது. மறுநாள் போகி என்றிருக்க, காலையில் தென்காசி சென்று தன் பொறுப்பை எடுத்துக் கொண்டவன், அந்த மாவட்டத்தின் முக்கியப் பிரச்சனைகள் என்னென்ன? எதை தன்னால் மாற்ற முடியும்? என்று சிலவற்றை அட்டவணைப் படுத்தி, அதற்கான கட்டளைகளை தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளிடம் ஒரு சந்திப்பின் மூலம் எடுத்துரைத்தான். அதன்பின் அங்கு உள்ள நிறை குறைகளைக் கேட்டு முடிந்த வரை சரி செய்வதாகச் சொன்னான் எஸ்.பி சுந்தரேஸ்வரன்.

அன்றைய வேலை முடிந்ததும், ஊருக்கு பணி உடையுடன் வரக்கூடாது என்பதற்காக, அலுவலகத்திலேயே தன் காவலர் சீருடையை கழட்டி வேறு உடைக்கு மாறி, ஒரு பையில் வைத்து எடுத்து வைத்தான்.

ஊரின் எல்லையில் இரு கோஷ்டிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து, “அட நம்ம பசங்க மாதிரி இருக்கு. இவனுங்க முட்டினா அது சண்டை மாதிரி இருக்காதே. காமெடி பீசஸ் எதுக்காக அலப்பறையைக் கூட்டுரானுங்க. போயி கேட்போம்” என்று வந்தவன், அவர்கள் நிஜமாகவே சண்டை இடுவது புரிய வலிய சென்று விலக்கி விட்டான்.

“என்ன பசங்களா நிஜமாவே சண்டை போடுறீங்க? எதோ விளையாடுறீங்க நினைச்சேன்.” என்று தன் இருபுறமும் அவர்களை நிற்க வைத்தான்.

“இவனுகளோட நாங்க ஏன் சார் விளையாடனும்? எப்பப் பாரு வம்பு பண்ணிட்டுத் திறியுரானுவ. நாங்களும் எத்தனை நாள் தான் சார் பொறுத்துக்குறது? போனா போகுதுனு விட்டா தலை மேல ஏறுவானுவ போல.”

“அப்படி என்ன ஏறிட்டோமாம்? கேட்டு சொல்லுங்க சார்?” என்றான் ஒருவன்.

“வெளில சொல்லுற விசயம் இல்ல சார்” என்று எதிரணியில் ஒருவன் சொன்னான்.

“ஏன் சொல்ல வேண்டியது தான, உன் தங்கச்சி இவன் பின்னாடி சுத்துறதை” என்ற வினாடி அவனை அடிக்கப் பாய்ந்திருந்தான் பெண்ணின் அண்ணன்.

அவனைத் தடுத்த ஈஸ்வர், “டேய் தம்பி! ஒரு பெண்ணை பேசுறதுக்கு முன்னாடி, நம்ம வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்காங்கன்னு நினைவுல வச்சிட்டுப் பேசனும். வாய்க்கு வந்ததை பேசினா, அதனால வரப்போற பிரச்சனைகளை சந்திக்க உன்னிடம் தெம்பு இருக்குமா? என்ன நடந்ததுன்னு என்னிடம் தெளிவா சொல்லுங்க?” என்றான் மிரட்டலாக.

“சார் இவன் என் தங்கச்சி பின்னாடி ரொம்ப நாளா சுத்திட்டு இருந்திருக்கான். ஆரம்பத்துல கவனிக்கலனாலும் இவன் எண்ணம் தெரிஞ்சதும், என் தங்கச்சிட்ட கவனமா இருக்க சொல்லிட்டேன். அவளும் இவனை பெருசா கண்டுக்குறது இல்ல. இப்ப என்னடான்னா இவனைத்தான் கட்டிப்பேன்னு நிக்குறா. வீட்டுக்கு இன்னும் தெரியாது. தெரிய விடாம பார்த்துட்டிருக்கேன். இவன் என்னடானா வா ஓடிப்போகலாம்னு சொல்லிருக்கான்.” என்று கோபத்தில் கத்தினான் பெண்ணின் அண்ணன்.

“என்ன தம்பி இதெல்லாம்? விருப்பம் இல்லாத பொண்ணு பின்னாடி சுத்தி சுத்தி காதலிக்க வைக்குறது தப்புன்னு புரியுறது இல்லையா?” என ஈஸ்வர் கேட்க,

“பிடிச்சிருந்தது சார். இவன் சொல்லுற மாதிரி சுத்தி சுத்தில்லாம் வரலை. எனக்கும் அக்கா இருக்காங்க. அப்புறம் எப்படி அந்தத் தப்பைப் பண்ணுவேன்.”

“எனக்கு ஒன்னு சொல்லுங்க. இங்க இருக்கிற யாருமே ஆப்போசிட்ல இருக்கிற பிள்ளைகள்ல, ஒருத்தரை கூட நாங்க லவ் பண்ணியது இல்லைன்னு சொல்லுங்க? லவ் கூட வேண்டாம். அந்த தெரு பொண்ணுகளை கண்ணெடுத்தும் பார்த்தது இல்லைன்னு சொல்லுங்க பார்க்கலாம்?” என்று அழுத்தமாகக் கேட்டு நின்றான் ஈஸ்வர்.

ஐந்து நிமிடங்கள் ஆகியும் பதில் இல்லாமல் போக, “என்ன பதிலையே காணோம்? யாரிடமும் பதில் இல்லை தான. அப்புறம் என்னடா வீம்பு. இல்ல ஜாதிப் பிரச்சனையா? இல்லையே உங்களுக்குள்ள தெருப் பிரச்சனைன்னு தான கேள்விப்பட்டேன். வேற என்னடா உங்களுக்கு?”

“அ...அது நிஜம்தான் சார். எங்களுக்கு முன்ன உள்ள தலைமுறையில் ஒரு சிலர் பண்ணின செயலுக்கு, இப்படி தெருவை பங்கு பிரிச்சிட்டானுக. அந்த தெரு போகக்கூடாது. அவங்க நமக்கு ஆகாதவகனு சொல்லி சொல்லி வளத்துட்டானுவ. ஒரே ஸ்கூல்ல படிச்சாலும் இதுதான் எங்க நிலை. அதையும் மீறி வீட்டுக்குத் தெரியாம நட்பா இருக்கிறவங்க இருக்கத்தான் செய்யுறாங்க. என்ன நண்பர்களிடம் கூட சொல்ல மாட்டாங்க” என்றான் ஒருவன்.

பிரச்சனைக்குரிய இருவரையும் தன்னருகே அழைத்து, “உங்க பெயர் என்ன?” எனக் கேட்டான் ஈஸ்வர்.

“முத்து கணேஷ்” என்றான் ஒருவன்.

“கணேஷ் மூர்த்தி” என்றான் இன்னொருவன்.

“பாரு பெயர்ல கூட பொருத்தம் இருக்குற ரெண்டு பேருக்கும், மத்த பொருத்தம் இல்லையே. சரி இவன் நல்லவனா? கெட்டவனா? உன் கணிப்பு இவனிடம் என்ன?” என்று முத்து கணேஷிடம் கேட்டான்.

“ரொம்ப நல்லவன் சார். எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. படிச்சி முடிச்சதும் ஊரைச் சுத்தாம, அரசாங்க வேலைக்கு படிச்சிட்டே வேலை பார்க்கிறான்.”

“அவனை விட உனக்கு அவனை நல்லா தெரியும் போல? அப்புறம் என்ன பிரச்சனை? எது உன்னை அவனிடம் சண்டை போடா வைக்குது? வயசு பிரச்சனைனா ஒரு நாலு வருடம் கழித்து கூட கல்யாணம் பண்ணிக்குடு” என்றான் ஈஸ்வர்.

“அது சரி வராது சார்.”

“ஏன் சரிவராது? நல்ல படிப்பு. கொஞ்ச மாசமோ, வருசமோ அரசாங்க வேலை கிடைச்சிடும். நல்ல பையன்னு நீயே சொல்லுற. தென் வாட்?”

“அது சார்” என்று அவன் தயங்க அவனை தனியே அழைத்துச் சென்று, “இப்ப சொல்லு?” என்றான் அவன்.

“சார் அப்ப நான் பிறக்கக் கூட இல்லை. எங்க அத்தையும், அவனோட சித்தப்பாவும் லவ் பண்ணி இருக்காங்க. வீட்டுக்கு தெரிஞ்சி கல்யாணம்னு பேச வரப்ப, எங்க அத்தையை கட்டிக்க மாட்டேன்னு சொல்லி இருக்கார் அவனோட சித்தப்பா. காரணமா கல்யாணத்துக்கு முன்ன காதலிச்சவ நல்லவளா எப்படி இருப்பா சொல்லிட்டார். அது முதல்ல சொந்தக்காரங்க சண்டையா இருந்தது. பின்ன தெருப் பிரச்சனையா உருவாகிருச்சி. அத்தையை கட்டாயப்படுத்தி வேற ஒருத்தருக்கு கல்யாணம் செய்து கொடுத்ததா அம்மா சொல்லுவாங்க. நீங்க சொல்லுங்க சார். அவங்க வீட்டுப் பையன்னு சொன்னா எப்படி எங்க வீட்டுல ஒத்துக்குவாங்க?” என்று கேட்டான்.

“அதுவும் சரிதான். கணேஷ் மூர்த்தி சித்தப்பாக்கு கல்யாணம் ஆகிருச்சா? எங்க இருக்கார்?”

“கல்யாணம் ஆகலையாம் சார். மிலிட்டரிக்கு வேலைக்குப் போறேன்னு போனவர், ஒரு வருசத்துல இறந்துட்டதா சொன்னாங்க” என்றான் அவன்.

“எங்கயோ இடிக்குதே. மிலிட்டரில இறந்தா சொந்த ஊருக்குக் கொண்டு வந்து, மரியாதை செலுத்தி அடக்கம் செய்திருப்பாங்களே. அப்படி எதுவும் நடந்ததா கேள்விப்பட்டியா?”

“இல்ல சார். இவங்க அங்கயே போயி காரியம் செய்துட்டு வந்ததா அம்மா சொன்னாங்க.”

“ஓ...” என்றவன் போலீஸ் மூளையைப் பயன்படுத்தி யோசிக்கலானான்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top