• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 12

New member
Joined
Dec 1, 2024
Messages
16
சுந்தரி - 12


“செ...செல்வி எ...னக்கு முன்...னாடி போயிட்டா அண்...அண்ணே. நா...நானே நேர்ல பாத்...தேன். அதான் அவளோட நானும் போக... போறேன். அங்கன போயி அவளை கல்யாணம் செய்து, குடுத்த வாக்கை காப்பாத்திக்கறேன்” என்று ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தான்.

“ஐயோ! அவசரப்பட்டுட்டியேடா தம்பி...” என்று அவர் சத்தம் போட்டு அழுகையில் அவன் புருவம் வலியில் சுருங்க, “சாகப் போனவளை காப்பாத்தி படுக்க வச்சிருக்காங்கடா. அது தெரிஞ்சி பார்க்க தான்டா குறுக்கு வழியா இந்தப் பக்கமா வந்தேன். கொஞ்சம் முன்ன வந்திருந்தாலும் தடுத்திருப்பேனே. அண்ணன் தோளை பிடிச்சி எழுந்து நடடா. ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்றார்.

செல்வி சாகவில்லை என்பதை உணர்ந்தவன் முகத்தில் சிறு மலர்ச்சி எழ, “ஆனா, நான் விஷம் குடிச்சி, பிழைக்கக் கூடாதுன்னு ஓடிட்டேன் அண்ணே. கடவுளே நினைச்சாலும் இனி என்னைக் காப்பாத்த முடியாது” என்றவன் குரல் தெளிந்திருந்தது.

அந்தத் தெளிவு கனகவேலுக்கு பயத்தைக் கொடுத்தது. பொதுவான ஒரு விஷயம் தான் இது. அதிக நோயில் கிடந்தவர்களோ, அல்லது சாவின் விளிம்பில் இருப்பவர்களோ, இறுதிக் கட்டத்தில் தெளிவாகப் பேசுவார்கள். இது நிறைய இடங்களில் கேட்ட, பார்த்த உண்மை. அந்த உண்மை உணர்ந்த கனகவேல் பயத்தில் வியர்த்துப் போனார்.

“ராஜா... என்னய்யா இப்படிப் பண்ணிட்ட? எங்களை நினைச்சிருக்கலாமே. உங்க அம்மை செய்தா ஏதாவது காரணம் இருக்குமே தம்பி. அதை என்னன்னு கேட்டு இருக்கலாமே. உன்னை வளர்த்த உன் அக்கா கனகாவ நினைச்சியா? படிச்ச புள்ள தான நீ. உன் விஷயம் தெரிஞ்சா செல்வி நிலைமை என்ன? உனக்கு கல்யாணம் சொன்னதுக்கே உயிரை விடப் போச்சி. நீ இல்லவே இல்லைன்னா எப்படியா உயிர் வாழும்?” என்று கலங்கினார்.

“செல்வியை நினைச்சா எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. இனி எதையும் மாத்த முடியாது அண்ணே. அவள் எந்த தப்பான முடிவும் எடுத்திடாம அவளோடவே இருங்க. சீக்கிரமே நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து வைங்க. என் செல்விக்காக... தப்புல்ல அண்ணே. இனி வேற ஒருத்தருக்கு சொந்தமாகப் போற பொண்ண என் செல்வி சொல்லக்கூடாது. என் அக்கா பொண்ணை நல்லவன் கையில் ஒப்படைங்க.”

“சம்மதிப்பா நினைச்சியா?”

“கொஞ்சம் காலம் எடுத்து என்றாலும் சம்மதிக்க வைங்க. அவளோட சந்தோசம் பார்க்காம இந்தத் தாய்மாமன் ஆத்மா அமைதி அடையாது அண்ணே! அவளுக்கு நீங்க பார்க்கலன்னா, அவளுக்கான ஒருத்தன நான் அனுப்பி வைப்பேன். அவள் குடும்பம், குழந்தைன்னு நல்லா இ...ருப்...பா....” என்ற நொடி அவன் தலை தொங்கியது.

அது கூட தெரியாது, “சரி தம்பி. அண்ணன் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நீ வா” என்று அவன் பக்கம் திரும்ப, புன்னகை முகத்துடன் பார்த்திருந்தது அவன் விழிகள். அவரோ அழுது கதறிவிட்டார்.

சுந்தர்ராஜன் முழுமையாக விசாரிக்காது செய்த செயல் அவன் உயிரைப் பறித்து இருந்தது.

விஷயம் கேள்விப்பட்டு அனைவரும் அங்கு வந்து சேர ஊரே அன்று அழுதது என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்பொழுது தான் குடித்த விசம் முறிக்கப்பட்டு எழுந்த செல்வ சுந்தரிக்கு, விஷயம் பகிரப்பட சொல்லவும் வேண்டுமா அவள் நிலையை? அழுது ஓடியவள் அங்கு சென்ற நிமிடம், அவளின் அம்மம்மா மடியில் தலை வைத்து படுத்திருந்தான் சுந்தர்ராஜன்.

சிரித்த முகத்துடன் படுத்திருந்தவனைக் கண்டவள் அவன் இறந்ததாகவே நம்பவில்லை. அருகில் அமர்ந்து, “மாமா எழுந்திருங்க. மாமா நீங்க என்ன குழந்தையா, அம்மம்மா மடியில் படுத்திருக்கீங்க? எழுந்து வாங்க மாமா நாம வீட்டுக்குப் போகலாம். உங்க அம்மா, என் அம்மா யார் வீடும் வேண்டாம். இவங்க நம்மளை பிரிக்க பார்க்கிறாங்க. இவங்க யாரும் வேண்டாம் மாமா. நாம தனியா போயிடலாம். வா மாமா” என்றாள்.

எதிரில் சத்தமில்லை என்றதும், “யாருக்கும் பயப்படாதீங்க மாமா. இவங்களே நம்மளை சேர்த்து வச்சி முடிச்சி போடுவாங்களாம். இவங்களே அந்த முடிச்சை அவுத்துட்டு போன்னு விரட்டுவாங்கலாம். நாம என்ன மூக்காணாங்கயிறு போட்ட மாடுகளா? நினைச்சா கட்டிப்போட. நினைச்சா அவிழ்க்க. வாங்க மாமா போகலாம்” என்றாள்.

“ஐயோ நான் பெத்த மகளே! அவன் நம்மளை ஏமாத்திட்டு போயிட்டான்டி. இனி வரமுடியாத இடத்துக்குப் போயிட்டான். தப்புப் பண்ணிட்டேனே. உனக்கு அவன்னு சொல்லி சொல்லி வளர்த்து பெரிய தப்பு செய்துட்டேனே. நான் என்ன செய்வேன். உன்னைய நான் இதில் இருந்து எப்படி மீட்டெடுப்பேன்” என்று கதறித் தவித்தார் கனகா.

“என்ன பேசுறிய? மாமா தூங்குறாவ. அழாதீய” என்று சத்தம் போட்டாள்.

“நல்லா பாருடி அவன் இல்ல.” என்று பார்க்க வைத்தார்.

அதன் பின்னே கொஞ்சம் விழித்துப் பார்த்தாள். இமை மூடாது பல நிமிடங்கள் அவனையே பார்த்திருக்க, அவன் முகத்தில் உள்ள வித்தியாசம் தெரிந்தது. மருந்தின் வீரியத்தில் உடல் எல்லாம் நீலம் படிந்திருந்தது.

சிறிது சிறிதாக நிதர்சனம் புரிய, சுற்றி உள்ளவர்கள் பேசுவது புரிய ஆரம்பித்தது. ‘நான் இல்லை என்று நினைத்து தன் உயிரை மாய்ச்சிக்கிட்டாரா?’ “கடவுளே! என்னோட முட்டாள்தனத்தால உங்களை இந்த நிலைக்குத் தள்ளிட்டேனா. மாமா... மாமா எழுந்திருங்க. தப்புப் பண்ணிட்டேன் மாமா. உங்களிடம் பேசிருக்கணும். பேசாததால இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தீங்களா? நான் பாவி மாமா. எல்லாம் என்னால் தான் மாமா. என்னை மன்னிச்சிடுங்க மாமா. நானும் உங்களோட வரேன்” என்று கத்தி எழ ஆரம்பித்தவளை, கனகவேல் உத்தரவின் பேரில் எழ விடாது செய்தது ஒரு கூட்டம்.

அவனின் தகப்பன் முதல் சித்தப்பா குடும்பம் என்று இன்னும் அனைவரும் வந்து சேர, அந்த இடமே நிறமிழந்து போனது.

அழுது புரண்டு என்ன செய்தாலும் மாண்டார் மீள்வதில்லை என்பதற்கு ஏற்ப, வீட்டிற்கு எடுத்துச் சென்று அடுத்தடுத்த சடங்குகள் நடத்தப்பட்டு, எரியூட்ட எடுத்துச் செல்லப் போக, அதை மறுத்துத் தடுத்தாள் செல்வ சுந்தரி.

“இறந்தவங்கள அப்படியே வச்சிட்டிருக்க கூடாதும்மா. போலீஸ்ல யாராவது சொன்னா கேஸ் ஆகிடும். அப்புறம் புள்ளைய பொட்டலம் கட்டி தான் தருவானுங்க. சீக்கிரம் எடுக்கிறது நல்லது” என்று உறவினர்கள் சொல்ல,

“என் மாமாவ அவர் இறந்த இடத்திலயே வச்சி சடங்கு செய்யுங்க.” என்று சொன்னதும், நிறைய பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, இளையவர்கள் அவளுக்கு ஆதரவாக நின்றனர்.

பெரியவர்கள் அனைவரும் மறுத்து எதிர்க்க, “அதை செய்யவில்லை எனில் தன் உயிர் போய்விடும்” என்று மிரட்டினாள். அவளுக்காக அவளின் அந்தப் பிடிவாதத்திற்காக, அவன் உடல் அந்தத் தோட்டத்தில் எரியூட்டப்பட்டது.

சில நாட்கள் சாப்பிடாது கொள்ளாது பைத்தியம் பிடித்தாற்போல் அமர்ந்திருந்தவள், என்ன நினைத்தாளோ, ஒரு நாள் அவன் இறந்த இடம் வந்து சமாதி கட்ட யோசித்து, ஆட்களை வர வைத்து அதை செய்து விட்டாள். அப்படிச் செய்தால் கடைசி வரை திருமண பந்தத்தில் நுழைய மாட்டாள். அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை வாழ மாட்டாள் என்றெண்ணிய பெரியவர்கள் எவ்வளவு தடுத்தும், அவள் கேட்கவே இல்லை.

இதையும் தாண்டி இன்னொரு விஷயமும் அவளுக்கு பிறந்த வீட்டில் தடையாய் இருக்க, தனியாக வீடு எடுத்து தங்கப்போக, அவளைத் தடுத்து தங்களின் இன்னொரு வீட்டில் இருக்கச் சொன்னார் கனகா. அச்சம்பவத்துக்குப் பின் யாரிடமும் பேசுவது கிடையாது. கனவில் வந்த மாமனின் ஆணைக்கிணங்க, அவனுக்கென இருந்த வீட்டில் குடி புகுந்தாள். தடுக்க நினைத்தவர்களை ஹேமாவதி தடுத்துவிட்டார்.

அவளின் வாழ்க்கை மாமனின் நினைவுகளுடன் அவ்வீட்டில் சென்றது. சில மாதங்கள் கழித்து தான் அவன் ஏன் அந்த அவசர முடிவெடுத்தான் என்ற உண்மை வெளிப்பட்டது. சின்னவர்கள் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு அவன் செய்த செயலை யாராலும் நியாயப்படுத்த முடியவில்லை. அதே நேரம் அவனின் அன்றைய மனநிலையும் புரிய, பரிதாபப்பட மட்டுமே முடிந்தது.

இவர்களுக்கு இப்படி என்றால் ஹேமாவதிக்கு சொல்ல வேண்டுமா! தன் மகன் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமே என்று அழுது புரண்டார். என்ன செய்து, என்ன புண்ணியம்?

“அவர் கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் இல்ல ரஞ்சிக்கா.” என்று ஹரிஹரன் அவனின் அவசர புத்தியை எண்ணி சொல்ல,

“புத்தி மழுங்கிருச்சுடா. அவர் ஊரில் இருந்து வந்ததே அவங்க வீட்ல யாருக்குமே தெரியாது. ஒரு வேலை தெரிஞ்சிருந்தா அவரிடம் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கவாவது, முயற்சி பண்ணி இருப்பாங்க. ஆனால், அவர் வந்தது தெரியாது. அவங்க வீட்ல வந்து வாழை தோரணத்தை பார்த்தது தெரியாது. அவர் வந்ததை பார்த்தவர் கூட, அவங்க வீட்டுப் பையன் என்பதால் கண்டுக்காம போயிட்டார். அவன் இறந்ததுக்கு அப்புறம் தான், தான் பார்த்ததை வீட்டுக்கு வந்ததே சொல்லி இருக்கார்.”

“ஜாதகம் சரியில்லன்னா மொத்தக் குடும்பத்தையும் கூட்டி உக்கார வச்சி, ஜாதகம் பார்த்ததைச் சொல்லி, என்னன்னு பேசி முடிவு செய்திருக்கலாம். ராஜன் அண்ணனோட அம்மா எதையுமே சொல்லாம அவசர அவசரமா எடுத்த முடிவு, அவரை செல்வி இறந்துவிட்டதா நினைக்க வைத்து விட்டது. இவரும் அவசரப்பட்டுட்டார். அதுக்கப்புறம் செல்வி ஒரு நாலஞ்சு முறை தற்கொலைக்கு முயற்சி பண்ணினா. எல்லாத்தையும் தடுத்து நிப்பாட்டுனாங்க. கடைசியா ஒருநாள் அவளை அவளே தேத்திக்கிட்டு தெளிஞ்சு வெளியே வந்தா.”

“எங்க எல்லார்கிட்டயுமே அவள் மாமன் உயிரோட இருக்கிற மாதிரி பேசினா. அப்படியாவது எழுந்து நடமாடட்டும் என்று அவள் விருப்பத்திற்கு விட்டுட்டோம். தினமும் அவ வேலையில கரெக்டா இருப்பா. தோட்டத்துக்கு வருவா, வேலை செய்வா, சமாதிக்கு வந்து சாயங்காலம் இதோ இப்ப இருந்தாளே, அதே மாதிரி தலை சாய்ந்து ஒக்காந்துருவா. யாரும் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம். கொஞ்ச நேரம் கழித்து அவளே எழுந்து வீட்டுக்குப் போயிடுவா.”

“ஆனா தனியா நடந்து போற ஃபீல் நமக்கே வராது. அந்த அளவுக்கு இருக்கும் அவளுடைய நடவடிக்கைகள். அதிலிருந்து மாற்றுவதற்கு எவ்வளவு முயற்சி பண்ணாங்க. எதுக்கும் அவ கட்டுப்படல. அவங்க அம்மா, அம்மம்மான்னு யார்கிட்டயும் அவ பேசுறதுமே கிடையாது. சின்ன பிள்ளைங்க எப்பவாவது வந்தா பேசுவதோட சரி. இன்னும் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு தான் இருக்காங்க. இவ தான் பிடிவாதமா, வைராக்கியமா இங்கே உக்காந்துட்டா” என்று ரஞ்சிதா சொன்னாள்.

இதில் கனகவேலிடம் பேசியது வெளி ஆட்கள் யாருக்கும் தெரியாது. ஏன் அவர் மனைவிக்கே சொல்லவில்லை. சம்பந்தப்பட்டவளிடம் சொல்லலாம் என்றால், அவள் அதற்கான வாய்ப்பு கொடுப்பதில்லை. ஹேமாவதி, கனகாவிடம் சொல்லலாம். அதை வைத்து மருமகளை பணிய வைப்பதில் விருப்பமில்லை. இன்னொன்று அதை நம்பும் நிலைக்கு இன்னும் அவள் வரவில்லை.

“செல்வி அக்கா பாவம் இல்ல ரஞ்சிக்கா” என்று வருத்தப்பட்டான் ஹரிஹரன்.


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top