New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 16
- Thread Author
- #1
சுந்தரி - 11
தாய் மேல் கோபத்தில் சென்றவன், மேலும் ஐந்து நாட்கள் என, ஒரு வாரம் கழித்து ஊருக்கு வந்து இறங்கிய சுந்தரராஜனுக்கு, மனதெல்லாம் எதோ படபடப்பு. மூன்று நாட்களாக இந்த உணர்வு இருக்கிறது தான். இன்று ஏனோ இதயம் அளவிற்கு அதிகமாகத் துடிக்கிறது. தன்னை நெருங்கிய யாருக்கோ ஆபத்து என்பதை அவன் உள்ளுணர்வு சொல்லுகிறது. ஊரில் ஏனோ ஒரு மயான அமைதி. எப்பவும் அப்படி அமைதியாக தான் இருக்கும் என்றாலும், அவன் மனதில் உள்ள உறுத்தலால் அது வேறு மாதிரி தோன்றுகிறது.
வந்தவன் செல்வ சுந்தரிக்காக வாங்கி வந்த திரட்டுப் பால் கட்டியைக் கொடுக்க என்று முதலில் அக்கா வீட்டிற்கு நடை போட்டான். திடீரென என்ன நினைத்தானோ தன் வீட்டிற்குச் சென்று குளித்து ஆடை மாற்றி வரலாம் என்று வீடு சென்றான்.
அங்கு சென்றவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் வாழை மரம், மாந்தோரணம், ஒலிப்பெருக்கியில் பாட்டு என்று இருக்க, ‘நம்ம வீட்டில் யாருக்கு என்ன விசேஷம்? ஆகா நம்மளுக்கு கல்யாணமா செல்வி? அதுவும் இவ்வளவு சஸ்பென்சா நினைக்கவே இல்லை. ஆனந்த அதிர்ச்சி தான். இரு உன்னை நேர்ல பார்த்து முத்தம்...’ முத்தம் என்று நினைக்கையில் முதல் முறையாக வெட்கம் வந்தது அவனுள்.
சிறு வயதில் அக்கா மகளுக்கு முத்தமிட்டது. அவனுக்கு பத்து வயது இருக்கும் போதில் இருந்து, குழந்தைகள் என்றாலும் முத்தமிடத் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணங்களும் தப்பாகத் தோன்றாததால் அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
தேர்வு முடிவு வந்து, எஸ்.ஐ ட்ரைனிங் ஒரு வருடம் முடிந்து, போஸ்டிங் வந்த பின்பே திருமணம் முடிக்க எண்ணி இருந்தான். அவனின் தாய் தான் தனக்கு வயதாவதைக் காரணம் காண்பித்து உடனே முடித்திட, முடிவு செய்து மகனை சம்மதிக்க வைத்திருந்தார். இருந்தாலும் ஊருக்குச் செல்வதற்கு சில நாட்கள் முன் இருந்து ஹெமாவதியின் கெடுபிடிகளும், கண்டிப்புகளும் அதிகமாக இருந்தது. ஏன் என்று கேட்டாலும் பதில் இல்லை. திருமணம் செய்ய வற்புறுத்தியவர் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.
சுந்தர்ராஜனுக்கு சின்னதாக மனதில் நெருடல் இருந்தபோதிலும், வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். இன்று மாவிலைத் தோரணங்கள் பார்த்து மனம் சந்தோஷத்தில் பாட்டுப் பாடியது. அங்கே ஒலிப்பெருக்கியிலும்...
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ... பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்.
ராசாவே... ராசாவே... ராசாவே...
‘என்ன சொல்லு பழைய பாட்டு பழைய பாட்டு தான். செல்வி அப்படியே என்னை நினைச்சி உருகிப் பாடினா இப்படி தான் இருக்கும்.’
‘என்ன ராஜா தப்புத் தப்பா யோசிக்கிற? இதுவரை அவளை நீ அப்படிப் பார்க்கலையே. இதென்ன புதுசா?” என்றது மனசாட்சி.
‘கல்யாணம்னு வந்த பின்ன இதை யோசிக்கலைனா எப்படி? எப்படியும் கல்யாணம் முடிச்சி தப்புகள் எல்லாம் சரியா நடக்கதான் போகுது. அப்பவும் நீ அங்கே நான் இங்கே என்றா இருக்க முடியும். பார்த்துக்கலாம் விடுடா.’ என்றது மனம்.
சுந்தர்ராஜனுக்கு சின்னதாக மனதில் நெருடல் இருந்தபோதிலும், வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். இன்று மாவிலைத் தோரணங்கள் பார்த்து மனம் சந்தோஷத்தில் பாட்டுப் பாடியது. அங்கே ஒலிப்பெருக்கியிலும்...
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ... பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்.
ராசாவே... ராசாவே... ராசாவே...
‘என்ன சொல்லு, பழைய பாட்டு பழைய பாட்டு தான். செல்வி அப்படியே என்னை நினைச்சி உருகிப் பாடினா இப்படி தான் இருக்கும்.’
‘என்ன ராஜா தப்புத் தப்பா யோசிக்கிற? இதுவரை அவளை நீ அப்படிப் பார்க்கலையே. இதென்ன புதுசா?” என்றது மனசாட்சி.
‘கல்யாணம்னு வந்த பின்ன இதை யோசிக்கலைனா எப்படி? எப்படியும் கல்யாணம் முடிச்சி தப்புகள் எல்லாம் சரியா நடக்கதான் போகுது. அப்பவும் நீ அங்கே நான் இங்கே என்றா இருக்க முடியும். பார்த்துக்கலாம் விடுடா.’ என்றது மனம்.
‘சரிதான் சாருக்கு கல்யாணக் கலை வந்துருச்சு. என்ஜாய்டா நல்லவனே’ என்றது மனசாட்சி.
“தேங்க்யூ தேங்க்யூ’ என்ற மனம் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, குதித்த உடலை அடக்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவன், அதன்பின் தான் கண்டான் அங்கே வீட்டின் முன் வைத்திருந்த பேனரில் மணமக்கள் பெயரை. சுந்தரராஜன் என்ற பெயர் மேலே இருக்க, வெண்மதி என்ற பெயர் கீழே இருந்தது. முதலில் தவறாக பார்த்து விட்டோமோ என்று கண்ணை கசக்கி கொண்டு திரும்பவும் அதைப் பார்க்க, அப்பொழுதும் அதே பெயர். அதிர்ந்து உரைந்து விட்டான் அந்நிமிடம்.
கற்பனைகள் யாவும் கரைந்து கனவாய் போக, மூளை வேலை நிறுத்தம் செய்தது. பின் எதை எதையோ யோசித்து வீட்டிற்குள் செல்ல நினைத்து உள்ளே போகாது, பயந்து பாய்ந்து வேகமாக ஓடியவன் தன் அக்கா வீட்டின் முன் நின்றான். அங்கு பரவலாக கூட்டம் நின்று இருக்க இன்னும் பயம் கூடியதுதான் மிச்சம்.
‘என்ன இங்கே என்ன கூட்டம்? அங்க எப்படி பொண்ணு மாறிச்சு? யாரோட வேலை அது? செல்விக்கும் எனக்கும் தான கல்யாணம் நடக்கணும்? அவள் பிறந்ததில் இருந்து சொல்லிதான வளர்த்தாங்க. விவரம் தெரிஞ்சி மறுத்த பொழுதும், அம்மா இவள் மட்டும் தான் உன் மனைவியா வருவான்னு சொன்னாவ. இப்ப என் வாழ்க்கையில் வர இருக்கும் அந்தப் பொண்ணு யாரு? எதனால் இந்த மாற்றம். அம்மாவின் அந்த அமைதி இந்த புயலைக் கிளப்பவா?’ எண்ணங்கள் பலவகையில் சுழன்று அடித்தது. கிட்டத்தட்ட யோசிக்கும் திறனை இழந்து இருந்தான் சுந்தர்ராஜன்.
அதே மனநிலையில் மெல்ல நடந்து அக்காவின் வீட்டின் அருகே செல்ல, அங்கிருந்த சின்னவர்கள் ஓடி வந்து, “மாமா... அக்கா...” என்று கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள்.
“என்ன சித்ரா? என்னாச்சு? ஏன் அழுற? சரவணா யாருக்கு என்ன? ஏன் எல்லாரும் கூட்டமா இருக்காங்க? அக்காவுக்கு எதுவும் உடம்பு சரியில்லையா? நல்லாதானே இருக்கா?” என்று பதறியபடி கேட்டான்.
இளையவர்களோ, “பெரியம்மா இல்ல மாமா. செல்வி அக்கா தான்...” என்று ஆரம்பித்தாள் சித்ரா.
“செல்விக்கு என்ன? ஏன் நல்லா தானே இருந்தா? என்ன பிரச்சனை? ஏன் நம்ம வீட்ல கல்யாணப் பந்தல் போட்டு இருக்கு? பொண்ணு எப்படி மாறுச்சு?” என்று கேள்வியை இளையவர்களிடம் கேட்டான்.
சரவணனோ “தெரியல மாமா. ஆனா அம்மம்மா தான், திடீர்னு ஐந்து நாள் முன்ன பெரியம்மா வீட்டுக்கு வந்து என் பையனுக்கு கல்யாணம் முடிக்க போறேன். அப்படின்னு பெரியம்மாகிட்ட சொல்லிட்டாங்க. அது தெரிஞ்சதுல இருந்து அக்கா அழுதுகிட்டே இருந்தா. வீட்ல அம்மம்மாகிட்ட எல்லாரும் சண்டை போட்டும் பாத்துட்டாங்க. யாரு சொல்லியும் கேட்கவே இல்லை அவங்க. உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சே தீருவேன்னு முடிவா சொல்லி, பந்தக்கால் நட்டுட்டாங்க. நாளைக்கு காலைல உங்களுக்கு கல்யாணமாம் மாமா. நீங்க எங்க அக்காவ கல்யாணம் செய்துக்க மாட்டீங்களா? அக்கா அழுதுட்டே இருந்தாங்க. இப்ப...” என்று அழுதபடி நிறுத்தி விட்டான்.
“இப்ப என்னாச்சி? இப்ப என்ன ஆச்சுன்னு சொல்லப் போறியா இல்லையா? அக்கா வீட்டைச் சுத்தி ஏன் கூட்டமா இருக்கு? எனக்கு பயமா இருக்குடா. என்ன நடந்துச்சுன்னு சொல்லு சரவணா” என்று தொண்டை அடைக்க கண்கள் கலங்க கேட்டான்.
“மாமா... அது... அக்கா...”
“செல்விக்கு என்னடா?” என்று திரும்பவும் அழுத்தமாக கேட்டான்.
“அக்கா விஷம் சாப்பிட்டா மாமா” சொன்ன நொடி பூமி சுழல்வது போன்று அவன் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. அவன் சொன்ன வார்த்தைகளை கிரகிக்கவே சுந்தரராஜனுக்கு நேரங்கள் தேவைப்பட்டது.
‘விஷம் சாப்பிட்டாளா? ஏன்? அப்படியா நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்காமல் போவேன். எப்படி என்னை விட்டு போகலாம்?” என்ற எண்ணம் மூளையை மழுங்கடிக்க செய்ய, அதே நேரம் அங்கு வந்த சிலரும், “என்னப்பா இது உன் அக்கா பொண்ணு இப்படி பண்ணிருச்சு. வாழ வேண்டிய பொண்ணுக்கு இந்த அவசரம் இருக்கக் கூடாதுப்பா” என்று சொல்லிச் சென்றனர்.
வீட்டிற்கு உள்ளே நுழைந்தவன் அங்கே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த செல்வ சுந்தரியை பார்க்க, கண்மூடிய நிலையில் அவள் படுத்திருந்த கோலம், சுற்றி உள்ளவர்கள் அவளைக் கண்டு கண்ணீர் வடித்த கோலம் அனைத்தையும் உள்வாங்கியவன், எதையும் யோசியாது, யாரிடமும் விசாரிக்காது அங்கிருந்து வெளியே வந்தவன், என்ன நினைத்தானோ தலை தெறிக்க ஓடிவிட்டான்.
ஒரு சிலர் அவனைக் கண்டாலும், தாய் மேல் கோபத்தில் செல்கிறான் என்று எண்ணி, அதை பெரிதாக எண்ணாது விட்டனர்.
அங்கு இருந்து ஓடி வந்தவனோ செல்வ சுந்தரியின் தோட்டத்திற்கு வந்திருந்தான். தலையை அழுத்திய பெரும் பாரம் தாங்காது, அங்கு இருந்த பெரிய கிணற்றின் மேல் ஏறி குதிக்க போனவன், அதில் விழுந்தால் உயிர் தப்பி விடுவோம் என்று எண்ணி, மோட்டார் அறைக்குள் சென்று, அங்கு இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை வெறும் வயிற்றில் குடித்தான்.
அப்படியே தோட்டத்தைச் சுற்றி பைத்தியக்காரன் போல் ஓட ஆரம்பித்தான். ஏனெனில் மருந்து சாப்பிட்டு அப்படியே இருந்தால் கூட வாய்ப்பு இருந்தால் அவனைக் காப்பாற்றி விடலாம். ஆனால் மருந்தை உடல் முழுக்க கலக்க செய்தால் விஷம் உச்சி முதல் பாதம் வரை ஏறிவிடும். அப்படி யாரும் தன்னைக் காப்பாற்றி விடக்கூடாது என்று அந்த ஓட்டம் ஓடினான்.
சுந்தரியின் விஷயம் கேள்விப்பட்டு தோட்டம் வழியாக அக்கா வீடு செல்ல வந்த கனகவேல் தற்செயலாக தோட்டத்தில் அவன் கிறுக்குத்தனமாக எதோ செய்வதைக் கண்டு என்னவென்று பதறி ஓடி வந்தார்.
அந்நேரம் தான் அவன் வாயில் நுரை தள்ளி கீழே விழுந்தான். விழுந்த நிமிடம் உடல் வெட்டி இழுக்க, “ராஜா... என்னலே பண்ணிட்டா. நான் என்ன செய்யுவேன்” என்று அவர் கண்கலங்க,
“எனக்கு யாரோ ஒரு பொண்ணோட கல்யாணமாம் அண்ணே. என்னிடம் சொல்லவே இல்ல. இத்தனை வருஷம் செல்வி மனசுலயும் அதை விதைச்சிட்டு இது தப்புண்ணே” என்றான் திக்கித் திணறி.
“தெரியும்டா. அதுக்கு தான் ஊருக்குப் போயிருந்தவன் கல்யாணத்தை நிறுத்த அவசரமா வந்தேன். அண்ணன் இருக்கிறப்ப நீ ஏன்டா அவசரப்பட்ட? கல்யாணம் பிடிக்கலன்னா அம்மையிடம் சண்டை போட்டுருக்கலாமே. இப்படிப் பண்ணிட்டியே. வாயா ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்று அவனைத் தூக்க முயற்சித்தார்.
தனி ஆளாக அவரால் முடியவில்லை. அதற்குள் அவன் மயக்க நிலைக்குச் செல்ல, அவன் முகத்தில் தட்டி, “ஏலேய் அண்ணனைப் பாரு. கண்ண மூடிடாதையா. யாருக்கும் என்னால பதில் சொல்ல முடியாது. செல்வி கேள்வி கேட்டா என்னய்யா பதில் சொல்லுவேன். ஐயோ!” என்று கதறி அழுதார்.
வருவார்கள்...