New member
- Joined
- Nov 22, 2024
- Messages
- 8
- Thread Author
- #1
அவரவர் நியாயம்"
"ஏய் ஜாஸ்மின்… அங்க பாத்தியா? இல்லையாடி? கிட்டத்தட்ட ஆறு மாசமா நீ வர நேரம் பார்த்து வராரு… அவருக்கு ஒரு பதில் சொல்லலாம்ல…"
"எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்லடி. அதை நான் என் செயல் மூலியமாவே அவருக்குச் சொல்லிட்டேன்.என் கவனம் இப்ப படிப்புல மட்டும்தான். காதல் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகுதான்னு நான் ரொம்ப தெளிவா இருக்கேன். எங்க அப்பா அம்மா பார்த்துக் கொடுக்கிற பையன தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவு செய்திருக்கேன் .உங்க அண்ணா பிரண்டு தானே அவரு? நீ சொல்லிப் புரிய வை." என்று கூறியபடியே வகுப்பறைக்குச் சென்ற ஜாஸ்மினை பார்த்தவளுக்கு வியப்பாக இருந்தது.
'இந்தக் காலத்தில் இப்படியொரு லூசு.' என நினைத்துக் கொண்டாள்.
வேகமான கால ஓட்டத்தில். முதுநிலை கல்வியில் இரண்டாம் வருடத்தில் இருந்தாள் ஜாஸ்மின்.
அன்று ஒரு வகுப்பாசிரியர் வராததால் தங்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.
"அப்புறம் யார் யாருக்கு எத்தனை பிரேக்கப்னு சொல்லுங்கடி.?" என ஒருத்தி ஆரம்பிக்க. மூன்று, நான்கு, ஐந்து, என எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது சிரிப்பலைகளுடன். இவளின் முறை வந்தவுடன் ஒன்று கூட இல்லையெனக் கூற. அனைவருமே "ஆ.." வென அதிர்ந்து பார்த்தார்கள் அவளை. இந்தக் காலத்தில் இப்படியும் ஒருத்தியா என்று. அவளோடு பள்ளி படிப்பில் மட்டுமல்லாமல் இளநிலை கல்லூரியிலும் கூடவே படித்து முதுநிலையிலும் அவளோடு இருக்கும் கோகிலாவிற்கு மட்டுமே அவளின் குண நலன் தெரியும்.
'ஹ்ம்ம்க்கும்... இவ யாரையும் லவ் பண்ணிட்டாலும்.' என்று சலித்துக் கொண்டவள்.
"ஏய் அவள் ஒரு துறவி மாதிரி. அப்பா அம்மா பேச்சை மீறமாட்டாள். யாரையும் தப்பா பேச மாட்டா. யாருக்கும் துரோகம் நினைக்கக் கூடாது என்று சொல்லுவா. இந்தக் காலத்துக்குத் தப்பா பொறந்த ஒருத்தி. ஆனா ரொம்ப நல்லவ." என்று அவளை அணைத்து கொண்டு கூறியவளின் கூற்றை ஆமோதித்தார்கள் மற்றவர்களும்.
இரவு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்த ராபர்ட்,
"என்னம்மா படிப்பு முடிய போகுது மாப்பிள பாக்கலாமா.?" என்றவரின் கேள்விக்கு
"உங்க விருப்பம் பா." என்றாள் புன்னகையுடன்.
ஒரு வாரத்திலேயே மாப்பிள்ளை புகைப்படம் என ஒன்றைக் காட்ட, "அப்போதும் உங்கள் விருப்பம் தான் பா." என்றாள் ஜாஸ்மின்.
அதன்பின் வேக வேகமாகப் பெண் பார்க்கும் படலம் நடந்தது. பெண்பார்க்கும் போதே இடது காலை லேசாகச் சாய்த்து வந்தான் பெஞ்சமின். என்னவாயிற்று எனக் கேட்டவர்களுக்கு பைக்கில் செல்லும்போது அடிப்பட்டு முட்டியில் காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூற அவர்களும் அமைதியானார்கள்.
நிச்சயதார்த்த நாளில் இவளைப் பார்த்துச் சிரித்தவனிடம்,
"கால் இப்ப எப்படி இருக்கு.?" எனக் கேட்டாள் தன் வெட்கத்தையும் தயக்கத்தையும் ஒதுக்கி. "லைட்டா வலி இருக்கு." என்றான் அவனும் சிரித்துக் கொண்டே.
அதன் பின் ஒரு மாதத்தில் திருமணம் என முடிவானது. அவ்வப்போது பேசிக் கொண்டார்கள் இருவரும். பெற்றோர்களின் சம்மதத்தோடு பேசினாள் ஜாஸ்மின். புதிதாக ஒருவரிடம் பழகப் பெரும் தயக்கமாக இருந்தது அவளுக்கு. சரியாகத் திருமணத்திற்கு பத்து நாட்கள் இருக்கும்போது வண்டியில் சென்று விழுந்து வாரி வந்திருந்தான் பெஞ்சமின். அதில் அவன் காலில் திரும்பவும் அடிப்பட பயந்து விட்டார்கள் ஜாஸ்மின் பெற்றோர். ஆனால் பயப்படும்படி எதுவும் இல்லை ஒரு வாரம் ஓய்வெடுத்தால் சரியாகும் என டாக்டர்களின் பரிந்துரையில் தொடர்ந்தார்கள் தங்கள் மகளின் கல்யாண வேலையை.
தங்களின் ஒரே செல்ல மகளின் திருமணம் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள் ராபர்ட்டும் அல்போன்சாவும். மகளின் மீது அதீத பாசம் இருவருக்கும். வாழ்வில் அனைத்து சிறந்தவைகள் மட்டுமே மகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நினைவு ராபர்ட்டை விட அல்போன்சாவிற்கு சற்று அதிகமாகவே இருந்தது. அது மகளின் மீது அவர் வைத்திருந்த அதீத பாசத்தின் விளைவுகளால் உண்டானது.
அதோ இதோ இன்று திருமண நாளும் நெருங்கி வந்து சாந்தோம் சர்ச்சில் திருமணம் முடிந்து அருகில் இருக்கும் மண்டபத்தில் கோலாகலமாக ரிசப்ஷனும் நடந்தது. வீட்டில் வசதி வாய்ப்பு நிறைந்திருந்தாலும் மகளை இளவரசியாக நினைக்க வைக்க, ஐடிசி சோலாவில் அவர்களுக்கு முதலிரவுக்கான அறை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள் அவளின் பெற்றோர். மாப்பிள்ளை பெஞ்சமினுக்கும் அவன் குடும்பத்திற்கும் இவை அனைத்தும் பெரும் ஆச்சரியமாக இருந்தது. பெண் வீட்டின் அளவுக்கு வசதி இல்லை அவர்களுக்கு.
புதுமண தம்பதிகளை ஹோட்டலில் விட்டு விட்டு மறுநாள் அவர்கள் வீடு வருவதற்கான ஏற்பட்டையும் செய்துவிட்டு கிளம்பிச் சென்றார்கள் இரு வீட்டு பெற்றோரும். ஜாஸ்மினுடன் இருந்த கோகிலா அவளிடம்,
"சொன்ன மாதிரியே அப்பா அம்மா சொன்ன பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையை தொடங்க ஆரம்பிச்சிருக்க. ஆல் த பெஸ்ட் உன் மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்." என்று கூறியபடி நண்பியை அணைத்து விடுவித்தவள்.
"நாளைக்கு உன்னை வீட்டில் வந்து பார்க்கிறேன். நிறைய சொல்லணும் என்னிடம்." என்று கண்ணடித்து சென்றாள். இவளுக்கு இரண்டு மாதங்கள் முன்பு, தன் மாமனையே திருமணம் முடித்திருந்த கோகிலா.
தோழி கூறியதில் வெட்கம் வர லேசாக அவள் முதுகில் அடித்து விட்டு அனைவருக்கும் விடை கொடுத்தாள் ஜாஸ்மின்.மறுநாள் புதுமணத் தம்பதிகள் வீடு வர ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவர்களுக்கு. சாயந்திரம் இவளைப் பார்த்துச் செல்ல வீடு வந்த கோகிலா அவள் முகத்தில் பெரிதான வெட்கத்தையோ பூரிப்பையோ காணாமல் மெதுவாக அவளிடம் "என்னடி எல்லாம் ஓகே வா.?" எனக் கேட்க அதற்குச் சிரித்து மழுப்பியவளிடம்
"என்னன்னு சொல்லு.?" என அழுத்திக் கேட்க."இல்லடி பெருசா ஒன்னும் நடக்கல. கிஸ் பண்ணாங்க அப்புறம் கால் வலிக்குதுன்னு தூங்கிட்டாங்க. நானும் தூங்கிட்டேன்." என்றாள் மென் குரலில்.
"அடிப்பாவி! தூங்குறதுக்கு ஐடிசி ல ரூம்." என்றவளின் கூற்றில் சிரிப்பு வர "சும்மா இருடி." என்றாள் மெதுவாக.
இப்படியே இவர்கள் வாழ்வு பட்டும் படாமல் சென்று கொண்டிருந்தது.திருமணத்திற்கு இரண்டு மாதம் முன்புதான் புது வேளையில் சேர்ந்து இருந்த பெஞ்சமினுக்கு அதிகமான விடுமுறை கிடைக்கவில்லை. கம்பெனியின் சட்டப்படி ஆறு மாதங்களுக்குப் பின்பே அவனால் விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும். திருமணத்திற்கு என அவர்கள் கொடுத்த மூன்று நாள் விடுமுறை முடிந்து அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்த பெஞ்சமினுக்கும் மனைவியிடம் அதிகமாகப் பேச வாய்ப்பு அமையவில்லை.
எப்பொழுதும் எட்டு மணிக்கு வேலையிலிருந்து வந்துவிடும் பெஞ்சமின் அன்று பத்து மணி ஆகியும் வராமல் இருக்க பயத்தோடு காத்திருந்தார்கள் அவனின் பெற்றோரும் ஜாஸ்மினும். தொலைபேசி அழைப்பும் அவனுக்குச் செல்லவில்லை.
நள்ளிரவு நெருங்கும்போது அவனுக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வர அடித்துப் பிடித்து ஓடினார்கள் அனைவரும் மருத்துவமனைக்கு.
தூக்க கலக்கத்தில் ஓட்டினானோ? என்னவோ? சாலையில் இருந்த டிவைடரில் மோதி அவன் காலில் பெரும் காயம் ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே அந்தக் காலில் தான் அடிபட்டுக் கொண்டிருந்தது அவனுக்குத் தொடர்ச்சியாக...
அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் காலில் ராட் குத்தி கிளித்திருப்பதால் செப்டிக் ஆகி இருக்கிறது அதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனக் கூறிச் செல்ல.அவனின் நிலை அறிய பதை பதைப்புடன் காத்துக்கொண்டிருந்தார்கள் இவர்களும் வெளியில்.
காலைப் பத்து மணிபோல் வந்த பெரிய மருத்துவர் அவன் காலைப் பரிசோதித்து விட்டு நன்றாகச் செப்டிக் ஆகியிருப்பதாகக் கூறிவிட்டு அது வேகமாகப் பரவுவதாகவும் கணுக்கால் வரை காலை அகற்ற வேண்டும் என்று பெரிய குண்டைத் தலையில் போட்டுவிட்டு சென்றார். கேட்டிருந்தவர்களுக்கு தான் பூமி நழுவும் நிலை.
ஜாஸ்மினின் பெற்றோரும் தகவல் அறிந்து வர… காலை அகற்ற வேண்டும் என்ற செய்தி அறிந்து திக்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்து விட்டார்கள். இனி மகளின் வாழ்வு எப்படி இருக்குமோ? என்ற பெரும் கலக்கம் அல்போன்சாவிற்கு.
பெஞ்சமினின் தந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவரைக் காணச் சென்ற ராபர்ட் காலை அகற்றாமல் அதற்கான மருத்துவம் பார்க்கக் கேட்டுக் கொண்டவர் பின்பு அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளட்டுமா எனக் கேட்க, அதற்கு மருத்துவர்களும் சம்மதித்து அனுமதியளிக்க வேகமாக அவனை மாற்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவன் காலை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற வேண்டுதலுடன். அங்கும் அவனுக்கு ஆரம்ப கட்ட மருத்துவம் ஆரம்பமானது. ஒரு நாள் முழுவதும் முடிந்து அடுத்த நாள் ஆரம்பமாக இருந்தது. எந்த முன்னேற்றமும் அவனுக்குக் கிடைக்காமல் இறுதியில் மருத்துவர்கள் இவர்களை அழைத்துப் பேச இன்ஃபெக்க்ஷன் வேகமாகப் பரவி வருவதால் அவன் முட்டிக்கால் வரை அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றுவதை தவிர வேறு வழியில்லையெனக் கூற என்ன சொல்வது எனத் தெரியாமல் அதிர்ந்து அமர்ந்து இருந்தார்கள் அனைவரும்.
ஏற்கனவே அவன் காலில் அடிபட்டதில் சரியான மருத்துவம் பார்க்காததால் அப்பொழுதே அவனின் காலில் வைத்திருந்த சீல் சரியாக ஆகாமல் இவ்வளவு தூரம் இழுத்து வைத்திருக்கிறது என மருத்துவர்கள் கூற, பெரும் அதிர்வாக இருந்தது அது ஜாஸ்மின் மற்றும் அவளின் பெற்றோருக்கு.
இதற்கு மேல் தாமதித்தால் அவனின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற மருத்துவர்களின் கூற்றிற்கு, ஆக வேண்டியதை பாருங்கள் என இரு பெற்றோர்களும் மருத்துவர்களிடம் கூறிவிட்டு வெளியில் வர வேகமாக நடந்தது பெஞ்சமினுக்கு ஆபரேஷன்.
ஆப்ரேஷன் முடிந்து அவனைத் தூரத்திலிருந்து ஒரு ஒருவராகப் பார்க்கலாமெனக் கூற அவனைப் பார்த்த ஜாஸ்மினுக்கு தலைச்சுற்றி கொண்டு வந்தது. முட்டிக்காலின் கீழ் வரையெனக் கூறியிருந்தவர்கள் தற்போது முட்டிக்காலின் மேல் தொடையின் பாதி பாகம்வரை நீக்கியிருந்தார்கள். ஏன் என்ற கேள்வி கேட்டதற்கு, மேல் பாகம்வரை கால் அழுகத் தொடங்கிவிட்டது தொடையின் பாதி வரை எடுப்பதே நல்லது எனக் கூறிச் சென்றார்கள்.
Last edited: