• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 7

அன்று கல்லூரிக்கு முதல்நாள் முதல் செமஸ்டருக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு எங்கள் துறைத்தலைவர் கைநீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டு விட்டு சென்றார் அப்பா.

வகுப்பிற்குள் நுழையும் போதே ஒரு வாசனை. அந்த வாசனை தூரத்தில் கேட்கும் இளையராஜா பாடலின் அடுத்த வரி என்ன என்கிற ஆர்வத்தின் மறு உருவமாக இருந்தது. வாசனை வரவேற்ததிற்கு ஏற்ப வகுப்பில் நுழைந்து, இடம் வலம் என்று திரும்பாமல் கடைசி பென்ச்சின் நுனியில் சென்று அமர்ந்துகொண்டேன். எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களின் தலை எல்லாம் என்னை நோக்கித் திரும்ப தலைகால் புரியாத தயக்கத்தில் இருந்தேன்.

அனைவரும் வெறிக்க வெறிக்கப் பார்த்தார்களே தவிர ஒருவரும் முன்வந்து பேசவில்லை. இரண்டு மூன்று வகுப்புகள் இப்படியே கழிந்தது. முதல்நாள் என்பதால் வகுப்பிற்கு ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. அப்படி யாராவது வந்திருந்தால் கண்டிப்பாக அனைவரையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டிருப்பார். எங்களின் நட்பு பயணமும் இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாகவே தொடங்கியிருக்கும்.

எனக்கிருக்கும் அதே தயக்கம்தான் என்னைப் பார்த்துவிட்டு பேசாமல் தலையைத் திருப்பிக் கொள்பவர்களுக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, அந்தத் தயக்கத்தைக் களைய தானே முன்வந்தேன்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருத்தருக்கும் மெல்லிய சிரிப்பினால் என்னை அறிமுகம் செய்தேன். அந்த எதார்த்த சிரிப்பு அவர்களை என்னிடம் வந்து பேச வைத்தது. கடைசி இருக்கையில் என்னுடன் அமர்ந்திருந்த முகம் தெரியாத முதலாமாண்டு மாணவர்கள் எல்லாம் எனக்கு “வா மச்சான், போ மச்சான் “ நண்பர்கள் ஆனார்கள். எங்களுக்கு முன்னிருக்கும் வரிசைகள் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் “வாடா போடா “ நண்பர்கள் ஆனார்கள். எங்களுக்கு வலப்புறம் அமர்ந்திருந்த மகளிர் அணியில் ஒரு சில உறுப்பினர்கள் முரண்டுபிடியாக இருந்தாலும் ஒரு சிலர் “வாப்பா போப்பா “ தோழிகளாக உருமாறினார்கள்.

இரண்டே நாட்களில் கல்லூரியும் வகுப்பும் சகஜமாகிவிட்டாலும் முதல் நாள் நான் உணர்ந்த வாசனை சகஜமாகவில்லை. அது வெறும் வாசனையாக மட்டுமே இருந்திருந்தால் பெரிதாகத் தோன்றியிருக்காது. அதையும் தாண்டி என் கவனத்தைக் கட்டியிழுத்து வைத்திருந்த மந்திரமாகவே இருந்தது. அந்த மந்திரத்தை அவிழ்த்துவிட வசானைக்கு உரிமமான நபரால் மட்டுமே முடியும் என்று என் தேடுதல் தொடர்ந்தது.

என் அருகில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டேன் உனக்கும் அந்த வாசனை வருகிறதா? என்று “அட யாராவது பொண்ணுங்க சென்ட் அடிச்சிட்டு வந்திருக்கும். நல்ல வேள எனக்கு எந்த வாடையும் வரல” என்றான்.
“டேய் அது சென்ட் வாசனைனு எனக்குத் தெரியாதா? அது யாரு யூஸ் பண்றானு கேட்டு சொல்லு “ என்று அவனிடம் விஷயத்தைச் சொல்ல, அவனும் அவன் பழகும் பெண் பிள்ளைகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து என் காதில் போட்டான்.

அது யார் என்பதை அறிந்துகொண்டால் ஆர்வம் அடங்கிவிடும் என்கிற என் ஐடியாவைத் தவிடுபுடி ஆக்கும் அளவிற்கு இருந்தது அவள் சாயல்.

முதலில் இருந்து மூன்றாவது பென்ச்சின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளைக் கடைசி பென்ச்சில் அமர்ந்திருந்த என் நண்பன் காட்டிக்கொண்டிருந்தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாகத் தெரியவில்லை. அந்த ஓரத்தில் அமர்ந்திருந்ததால் வாசலில் இருந்து வந்த வெளிச்சம் அவளைச் சூழ்ந்திருந்தது. அந்த வெளிச்சம் கண்ணைக் கூச, ஒரு நிழல் போலத்தான் தெரிந்தாள். அன்று கல்லூரி முடியும் வரை அவளை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்று முயன்றேன் ஆனால் முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் வகுப்பிற்குள் நுழையும் முன்பு இன்று எப்படியாது அவளைப் பார்த்துவிட வேண்டும் என்று சபதம் செய்து நுழைவேன். நான் அவளைப் பார்க்கத் தலை திருப்பினால் அவள் தலைமுடி மட்டும்தான் தெரியும் நான் அவளைக் கடக்கும் அந்த ஒரு நொடிக்குள் வேறு எதையும் என்னால் பார்க்க முடியாது. கடைசியாக அந்த வாசனையின் போதையிலேயே அந்த நாள் முடிந்துவிடும்.

இப்படியே ஒரு வாரம் கழிந்துவிட்டது.
ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைக்குச் சென்று திரும்பி வீட்டிற்குள் நுழையும் போது என் வீட்டிலும் அந்த வாசனை வீசுவது போலத் தெரிந்தது. அவள் மீதிருந்த ஆர்வம்தான் பித்தாக மாறிவிட்டதோ என்று என் பின்மண்டையை நானே தட்டிக்கொண்டு நானமுற்றேன்.

சோஃபாவில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த சிபி என்னை எட்டி உதைத்து சேட்டையை ஆரம்பித்தான். அப்படி நானும் அவனும் அடித்துக்கொண்டு உருளும்போதுதான் தெரிந்தது அந்த வாசனை அவனிடம் இருந்துதான் வருகிறது என்று.

“டேய் சிபி சென்ட் அடிச்சிருக்க, நல்லா இருக்குடா ஸ்மெல்லு “

“டேய் நீ பேச்ச மாத்தாதடா நீ என் முதுகுல குத்துனதுக்கு உன்னைய உதைக்காம விடமாட்டேன் “

“டேய் நீ அடிக்கவும்தானடா நான் அடிச்சேன். சரி அத விடு. சென்ட் எங்க வாங்குனீங்க? “

“நான் எங்க வாங்குனே? உன் ஃபேக்ல இருந்துதான் எடுத்தேன். என்னடா தெரியாத மாதிரியே கேக்குற?”

“என் பேக்ல இருந்துச்சா!!!. சரி எப்போ எடுத்த? “

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் பென்சில் எடுக்கலாம்னு உன் பேக்க தெறந்தேன். அப்போதான் பாட்டில பாத்தேன் சூப்பரா இருந்துச்சு எடுத்து அடிச்சுப் பார்த்தேன் வாசனையும் நல்லா இருந்துச்சு. அதான் உடனே போய் குளிச்சிட்டு வந்து அடிச்சுகிட்டேன். இந்த நீயும் அடிச்சுக்கோ “ என்று சொல்லி சென்ட்டு பாட்டிலை எடுத்து என் முகத்திற்கு நேராக வைத்து அழுத்தினான்.

புள்ளி புள்ளியாய் அந்த நீர் என் மீது பட்டு வாசனையைப் பரப்பும்போது அவளே என் மீது பரவுவதுபோல ஒரு உணர்வு. அந்த உணர்விற்கு இதுவரை யாரும் பெயரே வைக்கவில்லை.

அடித்துப் பிடித்து அவனிடமிருந்த அந்த பாட்டிலைக் கைப்பற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிட்டது. அந்த நாள் முழுக்க அதை யார் என் பையில் வைத்தது? ஏன் வைக்க வேண்டும்? ஒரு வேளை அவளே வைத்திருப்பாளோ என்கிற யோசனைதான். அன்று மதியம் அம்மா வைத்த ஆட்டுக்கறி குழம்பில்கூட அந்த வாசனைதான். இதுவரை பழக்கப்படாத ஒரு உணர்வு. அது கேள்வியா? பதிலா? சந்தேகமாக? சந்தோஷமா? இல்லை நான்கும் கலந்ததா? என்கிற குழப்பம்.
என் இதயத்தில் குடிகொண்ட அவளைப் பற்றிய நினைவுகளைத் தீவிரமாக்க இயற்கையும் முடிவு செய்தது. பயங்கரக் காற்றுடன் கூடய நல்ல மழை அன்று இரவு.

போர்வைக்கு வெளியில் என் மீது ஏறி சருக்கி விளையாடும் தம்பியும் அம்மா அப்பாவின் செல்லச் சண்டையின் சத்தமும் இருந்தது. போர்வைக்குள் நானும் தலையணையாய் உருமாறிய அவள் நினைவும் இருந்தோம். எத்தனை எத்தனை ஆசைகள் அவளோடு?. அதுதான் காதல் என்று தெரியாமலே அவளை நினைத்துக்கொண்டு இரவெல்லாம் தூக்கம் தொலைத்தேன்.

மறுநாள் என்னுடைய பிறந்தநாள். எனக்குப் பிடித்த அத்தனையும் சமைத்து அசத்தியிருந்தாள் அம்மா. கூடவே இரண்டு பெரிய தூக்கு சட்டியில் கேசரியும் பாயசமும் அடைத்து வைத்திருந்தாள்.

“என்னமா இது? பக்கத்து வீட்டுக்கா? “

“இல்லடா உன் ஃபிரண்ட்ஸ்கு “

“போமா இதையெல்லாம் என்னால தூக்கிட்டு போக முடியாது “

“உன்னைய யாரு தூக்கிட்டு போகச் சொன்னா? அப்பா பைக்ல கயிற வச்சு இறுக்கமா கட்டி விட்றுவாரு அப்படியே கொண்டு போயிரு, மறக்கமா திரும்ப கொண்டு வந்துருடா எதையாவது மறந்துட்டு வந்த மகனே உன் ஆத்தா பத்ரகாளியா மாறிடுவா “

“ஆஆஆ இல்லனா மட்டும் “

“வாய் பேசாதடா “

“சரி காசு கொடு “

“அப்பா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கு அவரே கொடுப்பாரு “

“போமா நான் இன்னும் பொடியனா? இதெல்லாம் பண்ண “

“எது எப்படியோ எவ்வளோ வளந்தாலும் நீ எங்களுக்கு குழந்ததான்டா “

“சரி சரி சென்டிமென்ட போட்டுத் தாக்காத. டாடி எங்க? “

“ஹால்ல “

அம்மா பேச்சைக் கேட்டு அப்பா காலில் விழுந்ததற்கு என் கல்லாவில் ஆயிரம் ரூபாய் விழுந்தது. விழுந்த பணத்தைப் பின்னாடியே வந்து பறித்து விட்டு வெறும் நூறு ரூபாய் பாக்கெட்டில் திணித்துவிட்டு குடுகுடுவென உள்ளே சென்று மறைந்துகொண்டாள் அம்மா.

கல்லூரிக்குச் செல்ல நேரம் ஆகிவிட்டதால் சாயங்காலம் வந்து உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சிரித்தபடியே மிரட்டிவிட்டு கல்லூரி வந்து சேர்ந்தேன்.
வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே தூக்குச் சட்டியில் கொண்டு சென்ற பண்டங்களை எல்லாம் துடைத்து எடுத்து விட்டார்கள் என் கூட்டாளிகள். “என்னடா எனக்கு இல்லையா? “ என்று கேட்ட மற்றவர்களை எல்லாம் ஐம்பது பைசா மிட்டாய் ஒன்றைக் கையில் கொடுத்து அமைதிபடுத்தினேன்.

நான் எதிர்பாராத நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்த்து பாடிய தருணம் அம்மா செய்த கேசரியைவிட இனிப்பாக இருந்தது. அந்த கூச்சலில் அவள் குரலும் கலந்திருக்கும் அந்தக் கூட்டத்தில் அவளும் வெட்கத்தோடு உறைந்து நிற்கும் என் முகத்தைப் பார்த்திருப்பாள் என்கிற குழைந்தைத்தனமான சந்தோஷமும் அந்த நாளை அழகாகச் செதுக்கியது.

கல்லூரி முடிந்து அனைவரும் வீட்டிற்குக் கிளம்பும்போது இரவு விட்ட மழை மீண்டும் தொடர்ந்தது. வகுப்பில் இருந்த அனைவரும் பேருந்தில் இடம் பிடித்து பெருமழை வருவதற்குள் வீடு சேர வேண்டுமென்று தெறித்து ஓடினார்கள். மழை சற்று குறையட்டும் கிளம்பலாம் என்று நான் மட்டும்தான் காத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு “காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்… உடலில் வந்த சொந்தம்… கூடலில் வந்த இன்பம்… மயக்கம் என்ன? “ என்று இழுத்தபடியே திரும்பினேன் எனக்குப் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு, தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டு, குருஞ்சிரிப்பு சிரித்தபடியே அவள் நின்றிருந்தாள். பார்த்ததும் அதிர்ந்து போனேன். அன்றுதான் அவள் முகத்தைத் தெளிவாகப் பார்த்தேன்.

“ஏன் பாட்ட நிறுத்திட்ட? பாடலாம்ல “ என்று அவள் சொல்ல, “அதான் நீ இப்போ பாடுறியேடி” என்று என் மனதிற்குள்ளே பேசிக்கொண்டேன். அவள் பார்வை என் மீது பட்டுக்கொண்டிருந்தது சென்ட்டு பாட்டிலை அழுத்தும்போது வெளிவரும் நீர்துளிகள் காற்றில் கரைவதைப் போலவே நானும் கரைந்து கொண்டிருந்தேன். என்னால் நிற்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டேன். என் எதிரில் நின்றிருந்தவள் ஜன்னலில் சாய்ந்து நின்றாள்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top